இன்றைக்கும் வழமை போல நடக்கப் போனேன். ஐந்தாறு நிமிடங்கள் நடந்த பின் கதவைத் திறப்புக் கொண்டு பூட்டினேனா என்ற சந்தேகம் முளைத்தது. அதுவும் வழமைதான், அதற்காகவே கதவைப் பூட்டும் போது முழுக் கவனத்தையும் அதில் வைப்பேன். இன்றைக்கு எப்படிக் கவனம் கலைந்தது என்று தெரியவில்லை. பூட்டியிருப்பேன் என்று தெரிந்தாலும், சரி போய்ப் பார்த்து வரலாம் என்று திரும்பினேன்.
எனது பக்கத்து வீட்டின் புல் முற்றத்தில் தாயுடன் நின்றான் அவன். பின்னேரங்களில் நடக்கப் போகும் போது காண்பேன்.. தாயுடன் தங்கள் வாசலில்/முன்முற்றத்தில் நிற்பான். இரண்டோ மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டின் ஒன்றரை வயது இளவரசன். நாங்கள்பேசிக்கொள்வதில்லை .. கையசைத்தல் மட்டுமே. இன்றைக்கு என்னைக் கண்டதும் ஓடி வந்தான். பேச இன்னும் வராது. ஆனாலும் பேசிக் கொண்டோம். அடுத்த வீட்டின் முற்றத்தில் செங்கல் பாவியிருந்தது. அதில் இரண்டு மூன்று கற்கள் சம நிலையில் இல்லாமல் நடனமாடின. அதை அசைத்துக் காட்டினேன். எனது கையைப் பிடித்திழுத்தான். தான் கீழே அமர்ந்து என்னையும் இழுத்தான். தாயும் அருகிலேயே அமர்ந்து கொண்டார். இன்னொருவர் முற்றத்தில் அமர்வது ஏதோ போலிருந்தது. அவனுக்கோ தாய்க்கோ அது பொருட்டாயிருக்கவில்லை. கைகளை ஆட்டி ஏதேதோ சொன்னான். பாதையின் மறுபுறம் என் வண்டி நின்றது. அதைக் காட்டியும் பேசினான், ஆம் அது என்னுடையது என்றேன்.. ஓ விளங்கிக் கொண்டாயா என்பது போல அழகாய்ப் புன்னகைத்தான். பரஸ்பரம் பெயர்கள் அறிந்துகொண்டோம்.
நடக்கப் போகலாம் என்று எழுந்து அவனிடம் விடைபெற முனைந்தேன். கையைப் பிடித்து இழுத்து மீண்டும் அமர்த்தினான். அவன் அம்மா சிரித்துக் கொண்டார். நானும் அவரும் இருக்க, செங்கல் மீது நின்றாடினான். எறும்புகளைக் குந்தியிருந்து பார்த்தான். கரைந்தபடி பறந்த காகத்தையும் விர் விர்ரென்று சென்ற வண்டிகளையும்.
மனமில்லாது விடை பெற்றுக் கொண்டேன்.
எப்போதுமே, திரும்பி நடந்து வரும் நேரத்தில் மனம் கொஞ்சம் அடங்கி அமைதியான நிலையில் இருக்கும். வீட்டிலிருந்து 500மீ இருந்திருக்கும்.. அவன் ஞாபகம் வந்தது. புன்னகைத்தேன்.. அழுகையும் வந்தது. அந்தக் குழந்தை சொரிந்த அன்பு எனக்கு மிகவும் தேவைப்பட்டிருந்தது.
கதவைப் பூட்டியது பற்றியது போன்றான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்குத் திரும்பிப் போகலாம்.. அன்பு காத்திருக்கும்.
0 படகுகள் :
Post a Comment