தேவையா?

ஆங்காங்கே தொட்டுத்தொட்டு கருத்துப் பரிமாறல் பெறும் நிகழ்வுதான். இன்றைக்கு என் பங்குக்கு:

போனமாதம் பருவமெய்திய(!?) பெண்ணுக்கு நீராட்டு விழா கடந்த வார இறுதியில் நடந்தது. கொண்டாட்டத்துக்குரிய ஆயத்தங்கள் 2 - 3 கிழ்மைகளுக்கு முதலே ஆரம்பித்து விட்டன. மணவறைக்குச் சொன்னதும், உணவுக்கும் பலகாரங்களுக்கும், வந்தோருக்குக் கொடுக்க பலகாரம் போடப் பையும் என்று தடல்புடல். போன கிழமை போய் சில பலகாரம் செய்ய உதவவும், வீட்டில் செய்த படியால் விளக்குகள் மினுக்குவது போன்ற உதவிகளுக்கும் சென்றிருந்தோம். முதலில் கவனித்தது, பருவமடைந்த பெண்ணுக்கு (ப.பெ என்று குறிப்பிடாமல் கற்பனையாய் "சுமதி" என்று பெயர் வைப்போமா) நடக்கவிருக்கும் விழாவில் இருந்த ஆர்வம். "I wanted to give out invitation, but amma & appa didn't agree" - உலக மகா கவலை 12 வயது சுமதிக்கு.

பலகாரஞ் சுட்டு, அதைப் பைகளில் போட்டுக் கொண்டிருந்த வேளையில் சுமதியின் இரு மச்சாள்மாருடன் (ஒரு 23 & 30 இருக்கும்) இருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். "வழ்மையாக எப்படி இதற்கு வாழ்த்துச் சொல்வது" என்று ஆரம்பித்தார்கள்.. "வாழ்த்துக்கள் / கெங்க்ராஜுலேஷன்ஸ் என்று சொல்வார்கள்" - இது சுமதியின் மாமி. எதற்கு பீரியட்ஸ் தொடங்கினதுக்கா? கொல் சிரிப்பு. ஆனாலும் அவர்கள் கேள்வி சிந்திக்க வைத்தது. இதற்குப் போயுமா வாழ்த்துச் சொல்வார்கள்? உண்மை..பெண்ணின் வாழ்வில் புதிய அத்தியாயம் தான் ..இனவிருத்திக்கு இன்றியமையாத உடல் மாற்றம்தான்..ஆனால் அதற்கு வாழ்த்துவானேன்? இப்படிக் கேள்வி கேட்பவர்களைக் கண்டால் எனக்குச் சந்தோசம்..ஏனா? நான் கேட்க வேண்டுமென்று நினைத்து கேட்க வேண்டிய நேரத்தில், கேட்க வேண்டியவர்களிடம் கேட்காமல் விட்டதையெல்லாம் இவர்கள் தயக்கமின்றிக் கேட்பது தான். இவர்களிடம் பாசாங்கில்லை. இதுவே மிகவும் பிடித்தமானதாயிருக்கிறது.

விழாவாக ஏன் கொண்டாட வேண்டும் என்பது பற்றியும் பேச்சு வந்தது. இந்தக்காலத்துக்குப் பொருத்தமில்லையே "என் பெண் வயதுக்கு வந்து விட்டாள் = திருமணத்துக்குத் தயார்" என்று அறிவிப்பது. அதற்கும் மாமி ஒருவர் தயாராகப் பதில் வைத்திருந்தா.(எப்படித்தான் 5 - 10 செக்கன் தாடுமாற்றத்துக்குள்ளானாலும் பதில்களைத் தயார்ப்படுத்துகிறார்களோ!!)

"முதல்தான் அதற்குச் செய்வது, இப்ப இயந்திரகதியாகிவிட்ட வாழ்க்கையில் உற்றார் உறவினரோடு சேர்ந்து களிக்க இது ஒரு சாட்டு..அவ்வளவே".

பதில் கேள்வி வந்தது: "அப்பிடி குடும்பத்தாரோடு கூடி மகிழ்வது தான் காரணமென்றால் இந்த மணவறை எதற்கு, வெளிக்கிடுத்தல்கள் எதுக்கு? சும்மா பிள்ளைக்கு comfortable ஆன உடுப்பைப் போட்டு சாப்பாட்டுக்கு மட்டும் கூப்பிடலாமே?"

மாமியிடம் பதிலில்லை.


- அக்கா.. what's the use of this "thingie" you are having?

- நிஷா..எனக்கு நிறைய ப்ரசன்ட்ஸ் வரப்போகுது. I hope I get a lot of make up stuff and money.

- wow..will you share with me..if you don't like the presents can I have them?

- No way. you'll have your own ceremony, then get your own stuff.

- (ஏமாற்றக் குரலில்)..ok..I am going to tell ப்ரியா மச்சாள் that I want makeup and I will ask .... from --- aunty and...

அடுத்த அறையிலிருந்த சுமதியும் தங்கையும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. இதுதான் பதிலா?

25 படகுகள் :

துளசி கோபால் August 23, 2005 3:41 pm  

ஷ்ரேயா,

இந்தக் காலத்துலே இது தேவையில்லைதான். ச்சும்மா சம்பிரதாயத்தை விடமுடியாம
வீட்டுவரைக்கும் செஞ்சுக்கலாம்தானே?

எங்க வீட்டுலே எப்பவுமே ஊரைக்கூட்டாம வீட்டுவரைக்கும் செய்யற பழக்கம்தான்.
இங்கே வேற நாட்டுக்கு வந்தபிறகு இதெல்லாம் வேணுமான்னுகூட ஆகிருச்சு.
என் மகள் பெரியவளானபோது ஏழாம் நாள் தலைக்குவார்த்து, ஊரிலிருந்து என் தமயன்
அனுப்பியிருந்த உடைகளை அணிவித்து, கொஞ்சம் அலங்காரமும் செய்து,
வீட்டின் பூஜையறையில் சாமி கும்பிடவைத்தோம்.

இதில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் மூன்றுபேர்கள். நான், கோபால் & பருவம் அடைந்தபெண்.

ஒரு ஈ காக்காய்(!)க்குக்கூட அழைப்பில்லை. இது எப்படி இருக்கு?

என்றும் அன்புடன்,
துளசி.

பி.கு: நான் இதுவரைக் கவனித்ததில் இலங்கைத் தமிழர்களிடம்தான் இது
அதிகமாக இருக்கின்றது. காரணம் என்னவோ?

`மழை` ஷ்ரேயா(Shreya) August 23, 2005 3:47 pm  

//இலங்கைத் தமிழர்களிடம்தான் இது
அதிகமாக இருக்கின்றது. காரணம் என்னவோ? //

என்ன காரணம் என்று தெரிந்தவர்கள் சொல்லலுங்க.

நான் கவனித்த ஒன்று: புலம் பெய்ர்ந்த இலங்கைத்தமிழரிடம் இந்த நிகழ்வை ஆடம்பரமாக, சக்திக்கு மீறினதாகச் செய்யத் தலைப்படும் குணம் இருக்கிறது. இதன் வெளிப்பாடே அழைப்பிதழ்களும் மணடபங்களில் விழாவும்.

என்னைப் பொறுத்தவரை (எனக்கு இந்த விழா செய்ததுதான்) இது காலத்துக்குப் பொருந்தாதாத தேவையற்ற ஒரு சடங்கு. .

`மழை` ஷ்ரேயா(Shreya) August 23, 2005 3:55 pm  

கேட்கிறேனென்று பிழையாக விளங்காதீர்கள் துளசி <-- disclaimer :O)

தேவையில்லாத ஒன்றுதான் என்று சொல்றீங்க..பிறகு ஏன் அதை சம்பிரதாயம் என்கிற பெயரில் இன்னும் பிடித்துக் கொள்ள?

தேவையற்றது என்றால் ஒட்டுமொத்தமாகவே நீக்கிவிடலாமே?

Chandravathanaa August 23, 2005 4:19 pm  
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa August 23, 2005 4:23 pm  

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச் சடங்கு அவசியந்தானா..?

`மழை` ஷ்ரேயா(Shreya) August 23, 2005 4:41 pm  

சுட்டிக்கு நன்றி சந்திரவதனா. இதை நான் வாசித்திருக்கிறேன்.(கருத்துகள் சொல்லாது விட்டிருப்பினும் கூட)

உடலில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிய அறிதல் "சுமதி"யிடம் இருக்கிறதா என்று அடுத்த முறை காணும் போது கதைத்துப் பார்க்க வேண்டும்.

*lollu* August 23, 2005 8:43 pm  

mmm some thing I have to thing yes its really a BIG issue about this function! any way I don't think we have to be too concern about a natral thing enna naan solvathu sariya!

வசந்தன்(Vasanthan) August 23, 2005 8:54 pm  

இது ஒருதொடர்ச்சிதான். சுமதியிடம் கதைத்த சிறுமி, நாளைக்கு தன் சடங்கில் இதையே இன்னொரு சிறுமிக்குச்சொல்வாள். அவள் இன்னொருத்திக்கு.
அதேநேரம், அந்தச் சுமதி உங்களைப்போலவே இதை விமர்சித்து நாளை ஒரு பதிவுபோடுவா. பிறகு சுமதியிடம் தற்போது "ஞானோபதேசம்" பெற்றவ இதே மாதிரி எழுதுவா. இந்தச்சடங்கால சகோதரிகளிடையேகூட சண்டைகள். ஆருக்கு அதிகம் செய்ததெண்ட கோபங்கள்.
இது ஒரு தொடர்ச்சி. (கனக்க தத்துவங்கள் எல்லாம் வாயில வருது, இதோட முடிக்கிறன்)

கலை August 24, 2005 6:09 am  

இது தேவையே இல்லை என்பதுதான் எனது கருத்தும். http://kaddurai.blogspot.com/ இங்கே நமது பண்பு என்ற தலைப்பில் இதுபற்ரி எழுதி இருக்கிறேன். அங்கேயும் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 24, 2005 8:53 am  

வசந்தன் - தத்துவம் வருதோ? ;O)

ஆனா நீங்க சொல்லுறது சரிதான் - யாருக்குக் அதிகமாகச் செய்தது என்று பார்த்து (திருமணங்களில் போல) குறை சொல்லப்படுதாம்.(உண்மையாப் பாத்தா குறையச் செய்பட்டவ சந்தோசப்படவேணும்)

லொள்ளு - இயற்கையாய் நடப்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தேவையில்லாத ஆடம்பரங் காட்டும் சடங்கு என்பதே எனது கருத்து.

கலை - கட்டாயம் வாசிக்கிறன்.

துளசி கோபால் August 24, 2005 11:47 am  

ஷ்ரேயா,

இது தேவையில்லைன்னு 'இப்ப' என் மனசு சொல்லுது. ஆனா ஒரு பொண்
பருவமடையறது அந்தப் பொண்ணைப் பொறுத்தவரை பெரிய காரியம் இல்லையா?
ஒரு பெரிய வாழ்க்கை மாற்றம்தானே? மனசளவில் பயந்துபோயும், உடல்ரீதியான
மாற்றங்களைப் பார்த்துப் பயந்து போயிருக்கற குழந்தையை இது எல்லோர் வாழ்க்கையிலும்
நடக்கற சகஜமான விஷயம்தான்னு சொல்லி அதுக்குத் தைரியம் கொடுக்கவேணும்தானே?

அதைச் சின்னதா குடும்ப அளவுலே கொண்டாடுறதுலே தப்பு ஏதும் இருக்கறதா எனக்குத் தோணலை.
அப்புறம் சம்பிரதாயங்களை விட்டுடறது அவ்வளவு சுலபமில்லை ஷ்ரேயா. ஏதோ ஒரு அளவுலே
நம்ம முன்னோர்கள் சொல்லித்தந்த விஷயங்கள் எல்லாம் மனசோட ஒரு மூலையில் இருக்கத்தான் செய்யுது.

இப்பப் பகுத்தறிவு கூடினதாலேயும், சொந்த நாட்டைவிட்டு வெளியே வந்து உலகத்தை வேற கண்ணொட்டத்துலே
பாக்கறதாலேயும் இதெல்லாம் வேணுமா இல்லை வேணாமான்னு சர்ச்சை செஞ்சுக்கிட்டு இருக்கோம்.

மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாத்தான் வரும். இப்பப் பாருங்க, உதாரணத்துக்கு என் மகளையே எடுத்துக்கறேன்.
நான் எதுவும் அவளுக்கு சாஸ்த்திரம், சம்பிரதாயத்தையும் சொல்லி வளர்க்காததாலே அவளோட கண்ணொட்டம்,
சிந்தனை எல்லாம் வேற மாதிரி இருக்குல்லெ. அவளோட குழந்தைக்கு இதெல்லாம் செய்யமாட்டாள்தானே?

இதுக்குமேலே விளக்கம் கொடுக்கத்தெரியலை ஷ்ரேயா.

மு. மயூரன் August 24, 2005 12:35 pm  

கொண்டாடப்போவதால்தான் பிள்ளைகளுக்கு பயம், கலவர உணர்வு அதிகம் ஏற்படுகிறது என்று கருதுகிறேன் துளசி அக்கா.

கனடாவிலிருக்குஞ் என்னுடைய சித்தியின் மகள், இங்கே வந்தபோது தனது முதல் மாதவிடாயை எதிர்கொண்டாள்.

ஏற்கனவே தன் கைப்பையினுள் முதல் மாதவிடாயை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களோடுதான் இருந்தாள் (11 வயது).

அவள் அதை எவ்வளவோ இயல்பாக எடுத்துக்கொண்டது எனக்கு அப்போது அதிசயமாக இருந்தது. இரத்தப்போக்கு அதிக்மாயிருப்பதாகவும், சமாளிப்பேன் என்றும் எனக்கு வந்து ஆறுதல் சொன்னாள்.
எங்கள் அம்மா தான் அதை இதை சொல்லி அவளை ட்டென்ஷன் ஆக்கிக்கொண்டிருந்தா.

பிறகு கனடாவுக்குப்போய் சின்னதா கொண்டாடினாங்க.

இதில் கொண்டாட எருவுமே இல்லை.

முஸ்லிம்கள், இதனை தாய்- மகள் மட்டுமே அறிந்த விடயமாக வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கும் இதனை கொண்டாடுவதுஇ கஒரவம் சார்ந்த விடயமாக போய்விட்டது.

கொண்டாட விருப்பம் என்றால் அந்த பிள்ளையின் பிறந்த நாளை ஆசை தீர கொண்டாடுங்களேன்.
இனப்பெருக்கத்துக்கு தயாராகிவிட்டாள் என்பதையா கொண்டாட வேண்டும்?

ஆழத்துக்கு போகவில்லை. இந்த சடங்கு ஆபாசமானது. இதை ஒழித்தாகவேண்டும்.

அது சரிங்க, நாங்களும்தான் வயசுக்கு வாறம், இனப்பெருக்கத்துக்கு தயாராகிறோம், ஒரு நாய் கொண்டாடுகிறதில்லையே.
முதல் "வெளியேற்றத்துக்கு" பிறகு ஒரு முட்டை அவித்து தரக்கூட ஆளில்லை..!! :-))

எம்.கே.குமார் August 24, 2005 2:08 pm  

இந்த வேண்டுமா வேண்டாமா என்பதையெல்லாம் பெண்களே பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

ஆனால் அன்றைக்கு 'ஒளியிலே தெரியும் அந்த தேவதைகளின்' முக மெருகூட்டலைப்போல அதே பெண்ணை அதற்குபின் நான் பார்த்தது கிடையாது. அவ்வளவு அழகு!

இனி உங்கள் பாடு! :-)

எம்.கே.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 24, 2005 3:13 pm  

மயூரன் - நல்லாக் கேட்டிங்க! அதுவும் ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் ஆண் பருவமடைவது பெரிய விஷயமாகக் கருதப்பட்டு கொண்டாடப்படுவதில்லை என்பது கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கு. ஏனோ?

`மழை` ஷ்ரேயா(Shreya) August 24, 2005 3:13 pm  

குமார் - இப்பிடியேல்லாம் பின்னூட்டம் போட்டுட்டு உங்க பாட்டுக்கு நீங்க போயிடலாம் என்டு நினைக்காதீங்க

அப்பிடி யாரை பாத்தீங்க? அதுக்குப் பிறகு பாக்காம இருக்க? :O)

`மழை` ஷ்ரேயா(Shreya) August 24, 2005 3:39 pm  

மாற்றம் தேவை துளசி. ஆனாலும் ஓரிரண்டு நாட்களிலோ மாதங்களிலோ ஏற்படக்கூடிய மாற்றமில்லை. கொஞ்சக் காலம் எடுக்கும். ஆனாலும் தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களை விட வேண்டும் என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல உங்கள் மகளது பிள்ளைகளுக்கு உங்களுக்கு இருக்குமளவு இந்திய பண்பாடு/சம்பிரதாயங்களின் அறிவோ அதில் ஈடுபாடோ இராது. ஆனால் இது கூட ஒரு விதத்தில் நன்மைதான்.. ஏனென்றால் காலத்துக்குப் பொருந்தாதாவற்றை நாங்கள் இன்னும் பின்பற்றுவது போல அவர்கள் செய்ய மட்டார்கள். சிந்தனையிலும், செயலிலும் மாற்றம் இருக்கும். பொருந்தாதது அங்கே நிலைபெறாது.

விழா எடுத்து இந்தக் கூத்துகள் காட்டுவதன் மூலம் சாதிப்பது ஒன்றுமில்லை..இன்னின்ன பரிசுப்பொருட்கள் கிடைக்கும் என்கிற சுமதியினது போன்ற ஒரு சிந்தனை தவிர இவ்விழாக்கள் வேறொன்றுக்கும் வழி செய்வதில்லை.. இதற்குப் பதிலாக அவளுடன் நேரம் செலவழித்து இயற்கையாய் நடக்கும் பெண்ணின் வாழ்வில் முக்கியமான (உடல்/உள) மாற்றங்கள் பற்றிய அறிவைக் கொடுக்கலாம்.

மிக இயல்பாய் ஆண் என்கிற தயக்கமின்றி (பால் வேறுபாடு உணர்தல் அந்த வயதுக்கு இல்லைத்தான் என்றாலும்) உடல் மாற்றம் பற்றிக்கதைத்த மயூரனின் தங்கை பற்றி எனக்குப் பெருமையாக இருக்கிறது. பெணகள் சங்கதி / ஆண்களுக்கு இதுகள் தெரியப்படாது என்று சொல்லிச்சொல்லியே வளர்க்கப்பட்ட பெரியவர்கள் தான் தேங்கிப் போய் நிற்கிறோம் போல.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 24, 2005 3:41 pm  

இன்னொரு சின்னச் சந்தேகம் >> மாதவிடாயை (இதுவே ஒரு வேடிக்கையான வார்த்தைப் பிரயோகம்) ஏன் "சுகமில்லை" என்கிறார்கள்? இயல்பான ஒரு கழிவுதானே இதுவும்?

மிகவும் நேரிடையாக கேட்டு/எழுதி சங்கடப்படுத்துகிறேனோ? அப்படி நினைத்தால் சொல்லுங்கள்..இந்தப் பின்னூட்டத்தை நீக்கி விடுகிறேன்.

Ramya Nageswaran August 24, 2005 5:14 pm  

ஷ்ரேயா, நல்ல வேளை என்னுடைய அம்மா இதை ஒரு பெரிய விஷயமாக ஆக்காமல் என் மானத்தை காப்பாற்றிவிட்டார்!! :-)

Anonymous August 24, 2005 7:38 pm  

//முதல் "வெளியேற்றத்துக்கு" பிறகு ஒரு முட்டை அவித்து தரக்கூட ஆளில்லை..!! :-))//

மயூரன்! அதை நீர் அம்மாவிடமோ இல்லாட்டி அம்மம்மாவிடமோ சொன்னாத்தானே அவையும் முட்டையை கிட்டையை அவிச்சு தர ஏலும்

கயல்விழி August 24, 2005 9:05 pm  

மயூரனின் கேள்வி நியாயமானது தான். :))
மயூரன் உங்க மகனுக்காவது செய்து கொடுங்க.

ஷ்ரேயா நல்ல ஒருபதிவு. இதை விழாவாய்(அப்படித்தாங்க இங்க செய்யிறாங்க)
கொண்டாடுறதுக்கு இன்னொரு காரணம். கொடுத்த கடன்களை திருப்பிப்பெறுவதற்காய் இருக்கலாம்.
இப்படி நகைச்சுவையான காரணங்கள் தான்.

சுகமில்லை என்ற சொல் நாகரீகமாய் பாவிப்பதற்கு ஒரு வாரத்தையாய் பிரயோகிச்சிருக்கலாம்
எங்க ஊரில எல்லாம் இந்த நாட்களில் கிணற்றில் தண்ணி அள்ளவிடமாட்டார்கள். (சின்னனுகளாய் பலருக்கு தண்ணி அள்ளி ஊற்றிய அனுபவம் உண்டு)
சமையல் அறைக்குள் விட மாட்டார்கள். இப்படி பல கன்றாவிகள் இருந்தது இப்ப எப்படியோ தெரியாது.

கிவியன் August 25, 2005 12:39 pm  

//- (ஏமாற்றக் குரலில்)..ok..I am going to tell ப்ரியா மச்சாள் that I want makeup and I will ask .... from --- aunty and//
இந்த பதிலில் தெரிவது ஒரு பத்து பதினொன்று வயது குழந்தையே. தன்ககு பரிசுகள் வேண்டும் என்று எந்த குழந்தைதான் விரும்பாது? ஆனால் அதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக பெரியவர்களே ஏற்படுத்துவதை நிறுத்த இன்னும் எத்தனை யுகங்கள் போகவேண்டுமோ?

சம்பிரதாயம் என பலவற்றை நாம் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறோம். பருவமெய்தருதுல இழக்கிற சுதந்திரம் போகப் போக இதுக்கு அப்புறம் நிகழும் திருமணம் என்ற சம்பிரரதாயத்துல வந்து பாதிய இழந்துர வேண்டிதுதான். மாற்றங்கள் இன்னும் பலவற்றில் தேவை. அது இந்த நீராட்டத்த விட்டொழிக்கறதுலருந்து ஆரம்பிச்சா நல்லதுதான்.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 25, 2005 1:10 pm  

கயல்விழி - முதலேல்லாம் "அந்த" நாட்களில் வீட்டுக்குள்ளேயே விடமாட்டாங்களாம். என்ன கொடுமை.

எனது தோழியின் திருமனத்தின் போது அங்கெ அவளது அம்மம்மா சொன்னா: "பிள்ளை.. சுகமில்லாத நாட்களில ஒரே கட்டில்ல படுக்காதை. அவருக்கு லட்சுமீகரம் குறைஞ்சுவிடும்!!" :O(

`மழை` ஷ்ரேயா(Shreya) August 25, 2005 1:10 pm  

//மாற்றங்கள் இன்னும் பலவற்றில் தேவை. அது இந்த நீராட்டத்த விட்டொழிக்கறதுலருந்து ஆரம்பிச்சா நல்லதுதான். //

வழிமொழிகிறேன் சுரேஷ்.

வீ. எம் August 26, 2005 11:31 pm  

//கயல்விழி - முதலேல்லாம் "அந்த" நாட்களில் வீட்டுக்குள்ளேயே விடமாட்டாங்களாம். என்ன கொடுமை //

கொடுமையல்ல ஷ்ரேயா, கொடுமையாக்கப்படுவிட்டது என்றே நினைக்கிறேன்..
இந்த மாதிரியான நேரத்தில் உடலளவில் பெண்கள் சற்று தளர்ந்து போயிருப்பார்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் எந்த வேலையும் செய்து கஷ்டபட வேண்டாம் என்ற என்னத்தில் இப்படியாக சொல்லியிருக்கலாம்..
அவர்கள் சமயலறை , பூஜையறை போன்ற இடங்களுக்கு வர கூடாது .. ஒரே இடத்தில் இருக்கவேண்டும் என்று..

ஒரு காலகட்டத்தில் (யாரால் , என்ன காரணம் என்பது வேறு விஷயம்) இது தீட்டு , தெய்வ குத்தம் என்றாகிவிட்டது... (என்றாக்கபட்டுவிட்டது)..

கொஞ்சம் கொஞ்சமாக இப்போது நிலமை மாறி வருவது சற்று ஆறுதலான விஷயம்

வீ எம்

`மழை` ஷ்ரேயா(Shreya) August 29, 2005 8:52 am  

வீ.எம் - யாரால் எதற்காக தீட்டு/தெய்வக்குற்றம் ஆக்கப்பட்டது என்பது கூட சுவாரசியமான அலசலாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் கேட்டாள்... "அப்படியெண்டா அம்மனுக்கு மாதப்போக்கு வந்தா என்ன செய்வாங்க? கோயில்லே இருக்ககூடாதென்று வெளீலயா வைச்சிருப்பாங்க?"

சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடிவதில்லை. :O|

பெட்டகம்