பார்வை

சின்ன வயதில் அம்மா அப்பா, ஆசிரியர்கள் என்று தொடங்கி மனதுக்குப்
பிடித்தவர்களை நம்முள்ளத்திலே மிக உயர்ந்த ஒரு அரியாசனம் போட்டு அதில் அமர்த்தி விடுகிறோம்.

அவர்களுக்குத் தெரியாததோ, செய்ய முடியாததோ ஒன்றுமேயில்லை என்ற அளவில் இருக்கும் அவர்கள் மீதான நம் கண்மூடித்தனமான நம்பிக்கை. யாராவது இவர்களைப்பற்றி - இருக்கிற நம்பிக்கையை சிதைக்கிற மாதிரி -
எதிர்க்கருத்துச் சொன்னார்களோ தொலைந்தார்கள். வளர்ச்சிதான் எம்மிலும்,
சுற்றியிருப்பவர்கள் & சூழல் பற்றிய எம் பார்வையிலும் எத்துணை
மாற்றத்தைக் கொண்டு வருகிறது! வளர வளர "அவர்களுக்கு எல்லாம் தெரியும் / இயலும்" என்கிற அசைக்க முடியாத(தாகக் கருதப்பட்ட) நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கும். ஆனாலும் அது எப்போதும் முழுதாகச் சிதைவதில்லை.

நாம் போட்டுக் கொடுத்த அரியாசனத்தில் தான் இன்னும் வீற்றிருப்பார்கள்.ஆனால் எமது பார்வை முதிர்ச்சியடைய அடைய, அந்த
அரியாசனத்தின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து வருவது போலத் தோன்றும். அவர்களிலிருந்த அதே அன்பும் மதிப்பும் ஆரம்பகாலப் பிரமிப்பின்
& சிறுபிள்ளை நம்பிக்கையில் கொஞ்சத்தோடும் ஒரு ஓரத்தில் இன்னும்
இருக்கும். எட்டா உயரத்திலிருப்பவர் என்று அகலக்கண் விரித்துப்பார்க்கிற
அந்தப் பார்வை போய் எம்மைப்போலவே பார்க்கப்படும் காலம் வரும். அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடுகள் கொள்கைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் - இவற்றையெல்லாம் சீர்தூக்கி நாம் பார்க்கத் தொடங்குவோம்.

அப்படி நாம் பார்க்க வசதியாக அவர்களும் வாழ்ந்து வைத்திருப்பார்கள். ஏற்ற
இறக்கங்கள், எடுக்கப்பட்ட பலவிதமான முடிவுகளும், காரணங்களும்,
நம்பிக்கைகளும், பெற்றவையும் இழந்தவையும், ஏமாற்றங்கள்
எதிர்பார்ப்புகளுமென்று அங்கே ஒரு வாழ்க்கை, தொடர்ந்து கொண்டிருக்கும்
ஒரு இன்னிசைக்கச்சேரியைப்போல அரங்கேறிக் கொண்டிருக்கும்.

வாழ்க்கையை ஒரு விதமாகக் கணக்குப் போட நாம் கற்றிருப்போம்; அவர்கள் கற்றதும் செயல்படுத்தியதும் வித்தியாசமாக இருக்கும். அவர்களின் செயல்கள் காணும் போது மனம் சிலவேளைகளில் பெருமிதமும் மகிழ்ச்சியும், நன்றியுணர்வும், மற்றவேளைகளில் சலிப்பும் கசப்பும் ஆத்திரமும் என்று ஒவ்வொரு உணர்வாகக் கிளை தாவும்.

அவர்களும் மனிதர்கள்தான் என்று உணரக் காலம் தேவைப்படுகிறது. உணர்ந்தாலும் மனதில் ஏற்கெனவே அரியாசனத்தில் இருத்திய உருவத்துடன் ஒப்பிட்டு உண்மையை ஏற்க மனம் தயங்குகிறது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும், மனதில் சின்னதொரு ஏமாற்றம் தலைகாட்டுகிறது.

விம்பங்களின்றிப் பார்க்கும் கலையை நான் இன்னும் கற்கவில்லை!

5 படகுகள் :

வசந்தன்(Vasanthan) August 14, 2005 11:31 am  

//விம்பங்களின்றிப் பார்க்கும் கலையை நான் இன்னும் கற்கவில்லை//


நானும் தான்.


அதே நேரம் சிறுவயதில் தீயவராகவும் கொடுமைக்காரராகவு மனத்தில் தோன்றியவர்கள் பின் வளரவளர கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்தாலும் சாதாரணமானவர்களுக்குக் கிட்ட வரமுடியாது. அவர்கள் நிரந்தரக் கொடுமைக்காரராக மனத்தில் இடம்பிடித்துவிடுவார்கள்.

Ramya Nageswaran August 14, 2005 3:41 pm  

ஷ்ரேயா, சிலரை 'larger than life' என்று வர்ணிப்பதை கேட்டிருக்கிறேன். இன்னும் அப்படிபட்டவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தருமி August 14, 2005 4:06 pm  

இளவயதில் நான் கேட்கும் எந்த ஆங்கிலச் சொல்லுக்கும் உடனே பொருள் சொன்ன எனக்கு என் அப்பா ஒரு நடமாடும் 'dictionary' என்ற நினைப்பும், அதனால் ஏற்பட்ட பிரமிப்பும் இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது. ஒரு நாள் நான் கேட்ட ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை என்றதும் அப்பாவின் மீது நான் ஏற்றி வைத்திருந்த மதிப்பின் சரிவும், அதனால் எழுந்த ஏமாற்றமும், கவலையும் இன்னும்
ஞாபகத்தில் இருக்கிறது

`மழை` ஷ்ரேயா(Shreya) August 15, 2005 3:11 pm  

நன்றி - வசந்தன், ரம்யா, தருமி.

எனக்குச் சமீப காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களைப் பார்த்ததில்தான் இதை எழுதினேன். பெரியதோ சிறியதோ, ஏமாற்றம் ஏமாற்றம் தானே! சில விதயங்களில் போகிற போக்கில் எடுத்துக் கொண்டாலும், சிலவற்றில் அப்படியில்லை. மனதிலே தங்கிவிடும்.

ரம்யாக்கா -
larger than life: இதற்குச் சரியான விளக்கம் என்ன? அப்பிடி larger than life ஆக யாரையும் சந்திச்சாச் சொல்லுங்க.

கயல்விழி August 15, 2005 9:11 pm  

//அவர்கள் மீதான நம் கண்மூடித்தனமான நம்பிக்கை. யாராவது இவர்களைப்பற்றி - இருக்கிற நம்பிக்கையை சிதைக்கிற மாதிரி -
எதிர்க்கருத்துச் சொன்னார்களோ தொலைந்தார்கள். //

இன்றும் கூட எனது நிலைஇதுவே தான். உடனேயே வாய் வைத்துவிடுவேன். அவர்கள் பிழை செய்தார்களா இல்லையா என்பது அடுத்தது.

இப்போ அவர்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்குவதில்லை.

பெட்டகம்