மெய்ப்பட வேண்டாம்

சினேகிதிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானேன். தூக்கியில்(lift) கீழே வந்து இறங்குமுக விரைவுப்படிக்கட்டில் காலை வைத்த படியே பக்கத்தில் வரும் நண்பருடன் அன்றைய நாளைப்பற்றிக் கதைக்கிறேன். இதென்ன...படி 45 பாகை சரிவிலிருந்து 80 பாகை சரிவாகிறதே! பக்கத்தில் வரும் நண்பரிடம் சொல்ல எத்தனிக்கிறேன்..குரல் எழும்புவதாகக் காணோம். அவரோ ஒரு வித சலனமும் இல்லாமல் தனது புதிய செல்லிடப்பேசியின் செயற்பாடுகள் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார். படிகள் ஆடுகின்றன, அதை உணர்ந்து நிமிர்ந்து அவர் பார்ப்பதற்குள் படிகள் மேலிருந்து இறப்பர் போர்வையைப் பிரித்துக் கொண்டு விழ ஆரம்பிக்கின்றன. இருவரும் பக்கத்திலே செயற்படும் ஏறுமுகப்படிக்கட்டிற்குப் பாய்கிறோம். கால் தடுமாறியதில் அவர் விழுந்து விட்டார். உதவுவதற்காய் கைகளை நீட்டுகிறேன். அவரால் கைகளைப் பிடிக்க முடியவில்லை. படிகள் என்னை மேலே மேலே கொண்டு போகின்றன.

வெளியில் ஒரே இருட்டாக இருக்கிறது.நின்று சுற்றுமுற்றும் எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. காலில் ஏதோ நெருடுகிறது. என்னவென்று தெரியாமல் பயத்தில் உதறுகிறேன். சரேலென விடுபட்டாலும் மீண்டும் மீண்டும் காலில் வந்து பூனையொன்று உடம்பைத் தேய்க்குமாற் போல் உரசுகிறது. அழுத்தம் அதிகரிக்க ஓட ஆரம்பிக்கிறேன். நாலைந்து அடிகளுக்கு மேல் எடுத்து வைக்கமுடியாமல் பாரமாக ஏதோ இழுத்துப் பிடிக்கிறது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்கிறேன். அழுக்குப் பச்சை நிற மெல்லிய கிளைகள். நிற்கும் ஒவ்வொரு கணத்திலும் அவை என்னைச் சுற்றிப்படர்கின்றன. அறுத்தெறிந்து விட்டு தலைதெறிக்க ஓடுகிறேன். என் குளிர்கால coat பாரமாக இருக்கிறது. களைத்தாலும் - முதல் முறை நின்றபோது காலைச்சுற்றிய அக்கிளைகள் என்னைத் துரத்தியபடி ஜுமாஞ்ஜி படத்தில் போல இடையில் இருப்பவற்றையெல்லாம் விழுங்கித் தம் பிடிக்குள் எடுத்துக்கொள்வது போலத் தோன்றுவதால் - நிற்கும் துணிவில்லை. அவற்றிடமிருந்து தப்ப தொடர்வண்டி நிலையத்துக்குள் நுழைகிறேன்.

தொடர்வண்டி நிலையம் பழையதொரு கோட்டை போலக் காட்சி தருகிறது. பயணச்சீட்டு வழங்கும் இயந்திரமும், பூக்கடையும், வாசலிலே நிற்கும் சில இசைக் கலைஞர்களும் வழமையான இடமன்றி வேறிடங்களில். ஒரு கதவு - இதற்கு முதல் கண்டிராதது. திறந்து திறந்து மூடுகிறது. பலரும் சாரி சாரியாக உள்ளே போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். நானும் எனது பயணச் சீட்டைக் காட்டி உள்ளே ஓடுகிறேன். தொடர்வண்டி வரும் என்று எதிர்பார்த்தால்..அப்படி ஒன்றும் இல்லை. ஒரு சின்ன அறைக்குள்தான் போயிருக்கிறேன். என்னுடன் சேர்த்து அந்த வரவேற்பறைக்குள் ஒரு இருபது, இருபத்தைந்து பேர் இருக்கிறார்கள். ஒரு மூதாட்டி வருகிறா. முகமெல்லாம் சுருக்கங்கள். வயதை சொல்ல முடியவில்லை. 80 - 85 அல்லது 100 - 105..அல்லது அதற்கும் கூட இருக்குமோ தெரியவில்லை. வயதைச் சொல்ல முடியவில்லை. இதற்கு முன் அவவை நான் கண்டதில்லை. ஆனாலும் உடனேயே அவவைப் பிடித்து விட்டது எனக்கு. எல்லாரையும் ஒரு பெரிய கூடத்துக்குள் அழைத்துப் போகிறா. மேசைகளில் விதம் விதமான சாப்பாடுகள். கணத்துக்குக்கணம் அவை முன் இருப்பவர்களின் எண்ணத்துக்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு பொருள் எனக்காக நிறைய நாளாகக் காத்திருப்பதாக அந்த மூதாட்டி சொல்கிறா. ஒரு படிக்கட்டைக் காட்டி அதன் வழியே போய் அப்பொருளை எடுக்கட்டாம். நானும் படியில் ஏறுகிறேன்.

படிக்கட்டுச் சுழன்றுபோய், தலைகீழாக இருக்கும் இன்னொரு படிக்கட்டுடன் சேர்ந்து கொள்கிறது. அதன் வழியேயும் ஏறுகிறேன். வழியெல்லாம் விதம் விதமான சிற்பங்கள். சில, தாம் உருவாக்கப்பட்டது பற்றிய ஆவணப்படங்களை சலனப்படங்களாகக் காட்டுகின்றன. சிலவேளைகளில் படிகள் திடீரென முடிந்துவிடும்.பக்கத்திலிருக்கும் சுவரைத் தாண்டிக்குதித்து பயணம் தொடர வேண்டியிருந்தது. நடுநடுவில் இது வரை சந்தித்திராத பலரும், நிறைய நாட்களுக்கு முன் சந்தித்து பெயரும் முகமும் மறந்து போனவர்களும் வழியில் வந்து கதைத்துப் போகிறார்கள். சின்ன வயது ஞாபகங்களில் இருந்து உயிர் பெற்ற இடங்களும் இடையில் வருகின்றன. ஆனால் அங்கே போக முடியவில்லை. காவலர்கள் நின்று தடுக்கிறார்கள். ஞாபங்களில் மட்டுந்தான் இனிமேல் அங்கே போக அனுமதியாம். என்னைப்போலவே பல இடங்களூக்கு முன்னால் காவலர்களுடன் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பலரைக் காண்கிறேன். என்னையும் அவர்களையும் யோசித்துப் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. கடைசியில் தூரத்தில் பல இழுப்பறைகள் கொண்ட ஒரு மரச்சுவர் தெரிகிறது. ஓடிப்போய் என் பெயர் சொல்லும் இழுப்பறையைத் திறக்கிறேன். அதற்குள் இதுவரை நான் காணாத ஒரு பூ. வேறொன்றுமில்லை..அந்தப் பூ மட்டும்தான். பூவைக் கையில் எடுத்து மூதாட்டியிடம் கேட்கிறேன் "இதை வைத்து நான் என்ன செய்வது?"

"கடற்கரையில் கொண்டு போய் நடு" என்று அவ சொன்னதைச் செய்ய கடற்கரைக்குப் போகிறேன். டார்லிங் ஹாபரோ மான்லியோ ஏன் வெள்ளவத்தைக் கடற்கரையோ அல்ல...மாறாக ஒரு நிழல் போலே ஞாபகமிருக்கும் பாசிக்குடாக் கடற்கரைக்கு. பூவுக்கு வளர்வதற்குத் தண்ணீர் வேண்டுமே என நினைத்து அலை படும் இடத்தில் நடுகிறேன். அலை பெருக்கெடுத்து வருகிறது. மூழ்கிவிடுவேனோ என்கிற பயத்தில் ஓடிப்போய் பக்கத்தில் உள்ள குகைக்குள் நுழைகிறேன். விளக்குடன் நிற்கும் அம்மா "வெள்ளம் வரமுன் வா" என்று சொல்லி ஆயத்தமாய் வைத்திருக்கும் கயிறொன்றையும் என்னிடம் வீசுகிறா. கயிறு காற்றில் பறந்து போகிறது. அம்மாவையும் காணவில்லை.தனித்து நிற்கிறேன். வெள்ளம் முழங்காலளவு வந்து விட்டது. தப்புவதற்காக உயரே உயரே கால் நோக நோக ஏறுகிறேன்.

குகைக் கூரையில் ஒருவனை நாலைந்து குள்ள மனிதர்கள் இழுத்துக் கொண்டு போகிறார்கள். இறந்து விட்டானாம்.அவன் யாரெனத் தெரிகிறது... படியில் தவறி விழுந்த என் நண்பன். இதோ எட்டிவிடும் என்றபடியே கொஞ்சம் கொஞ்சமாக கைகளை நீட்டி நுனிக்காலில் நின்றுகொண்டு "விளையாட்டுப்போதும்" என்று அவனைத் தட்டியெழுப்ப முயல்கிறேன். . இதென்ன .. அவனைபோலவே எனக்கும் கால் தடுமாறி, மீண்டு வரமுடியாத ஒரு இருண்ட பள்ளத்துக்குள்ளே...

திடுக்கிட்டுக் கண்விழிக்கிறேன்..அப்பாடா..கனவு மட்டுமே!

13 படகுகள் :

துளசி கோபால் July 21, 2005 12:38 pm  

என்ன ஷ்ரேயா, கனவுன்னுட்டு ஒரு கதையையே எழுதியிருக்கீங்க?

நல்லா இருக்கு!

`மழை` ஷ்ரேயா(Shreya) July 21, 2005 1:50 pm  

என்ன்ன்னது கதையா???? கலப்படமேயில்லாத சுத்தக் கனவு துளசி!நான் சொன்னேனே என் (இரவுக்)கனவுகளின் ரேஞ்சே தனி என்று! :o)

நேத்து இரவு வந்துது. நடுவுலே கொஞ்சம் மறந்து போனதிலே இப்ப இவ்வளவுதான் ஞாபகம் இருக்கு. :o(

supersubra July 21, 2005 2:37 pm  

கவலைப்பட வேண்டாம். கனவை கணினியில் பதிவு செய்யும் முறை விரைவில் வந்துவிடும்.அதன் பிறகு நீங்கள் வேண்டும் பொழுது அதை ரீப்ளே செய்து பார்த்துக்கொள்ளலாம்.
உங்கள் கனவு அருமையான த்ரில்லர் படம். இணையதளத்தில் ஒளிப்பேழையாக வெளியிடலாம்

`மழை` ஷ்ரேயா(Shreya) July 21, 2005 3:08 pm  

அதை ஏன் கேட்கிறீங்க Superசுப்ரா..ஒவ்வொரு கிழமையும் இப்பிடி 2 - 3 திரில்லர் கனவில நடிச்சு நடிச்சே என் இதயம் பலவீனமாகுது.

"த்ரில்லர் கனவுகள் வாடகைக்கு விடப்படும்" என்று பலகை மாட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! ;o)

தருமி July 21, 2005 3:43 pm  

தூங்கிறதுக்கு முந்தி என்னென்ன சாப்டீங்க, வாசிச்சீங்க இப்படி கனவெல்லாம் வர்ரதுக்கு?

`மழை` ஷ்ரேயா(Shreya) July 21, 2005 5:11 pm  

இடியப்பம், சொதி, சம்பல், நெத்தலிக்கருவாடு இதெல்லாமும் 8 - 10 செரிப்பழமும் சாப்பிட்டேன்.

ம்ம்ம்...ஒன்றும் வாசிக்கவில்லை (தொ.காவின் text கணக்கில் இல்லைத்தானே!)

எதுக்கு இப்பிடி விலாவாரியா கேட்கிறீங்க? நீங்களும் "எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுண்டு படுப்பின் கெட்ட கனவு வரும்" வகையா?

ஒரு பொடிச்சி July 21, 2005 5:15 pm  

நல்ல விவரிப்புகள். நீங்கள் சிறுகதை எழுதலாம் ஷ்ரேயா. மிக நல்லா வரும் என்று படுகிறது!

'ஷ்ரேயாவின் கனவுகள்' என தலைப்புக் கொடுப்போமா?!

முகமூடி July 21, 2005 6:09 pm  

நேற்று எங்கள் வீட்டு அழைப்புமணி ஒலித்தது.. திறந்து பார்த்தால் வாசலில் ஷ்ரேயா...

திடுக்கிட்டுக் கண்விழிக்கிறேன்..அப்பாடா..கனவு மட்டுமே! உடம்பெல்லாம் வியர்த்திருந்தது... கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, இளகிய மனசு கொண்ட எனக்கு இந்த மாதிரி கனவு தரவேண்டாம் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு மீண்டும் தூங்கப்போனேன் ;-))

சினேகிதி July 21, 2005 11:17 pm  

\\சினேகிதிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானேன். // enako endu ninachittan :)

kanavu super...enakum ippidi strange kanvugal varathu samathilla ellumbi kathranan.nanum oru pathivu podavenum ithaipathi.

\\விளக்குடன் நிற்கும் அம்மா "வெள்ளம் வரமுன் வா"\\ amma ena appidi seiranga??

`மழை` ஷ்ரேயா(Shreya) July 22, 2005 9:20 am  

முகமூடீ!!!!! முடியல..உங்க கடி தாங்க முடியல!

//இளகிய மனசு கொண்ட எனக்கு..//

உங்களுக்கு "இளகிய மனசு??". இளகிய மனசு தருமிக்கே என்று அறுதியும் இறுதியும் உறுதியுமாகச் சொல்கிறேன். ;o)

நன்றி பொடிச்சி. நான் கதை எழுதுவதா? யோசித்துப் பார்த்திருக்கிறேன்தான்..ஆனா கதைக்கருவோ களமோ மண்டையில் உதிக்கவில்லையே!
..ஐயகோ!!! என் செய்வேன்!! பொடிச்சி கேட்பதை நிறைவேற்ற முடியாமலிருக்கின்றதே!! ;o)


கனவில நடந்ததுக்கு/சொன்னதுக்கு முழிச்சிருக்கும் போது விளக்கம் சொல்லா ஏலாது தானே சினேகிதி? (ஒரு வேளை அம்மாட்ட கேட்டாத் தெரியுமோ!:o\

Anonymous July 22, 2005 8:31 pm  

உங்கள் வலைப்பதிவில் பெய்யும் மழையைப் போலவே விரைவில் வெள்ளித் திரையிலும் மழை பெய்ய இருக்கிறது. மழை - சுகமான தலைப்பு, சற்று சோம்பலானதும்கூட.

தருமி July 24, 2005 4:22 am  

"உங்களுக்கு "இளகிய மனசு??". இளகிய மனசு தருமிக்கே என்று அறுதியும் இறுதியும் உறுதியுமாகச் சொல்கிறேன். ;o)"
முகமூடியின் சார்பில் கேட்கிறேன்: அது என்ன தருமியை வம்புக்கு இழுக்கிறீர்கள்; நீங்கள் கொடுத்த லின்கும் வேலை செய்யவில்லை. prove it , madam, prove it.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 25, 2005 9:28 am  

மனோஜ் - மழை போல சுகமான விஷயம் வேறில்லை. புத்தகத்தோடு/ நல்லதொரு திரைப்படத்தோடு கையிலே ஒரு கோப்பி & கொறிக்க ஏதாவது.. இவற்றுடன்! :o)

மழை என்று திரைப்படமா? யார் நடிக்கிறார்கள்? நடிகை ஷ்ரேயாவா? ;o)

தருமி - அச்சச்சோ..துளசியின் பதிவிலுள்ள சுட்டிக்குப் பதிலாக வேறென்னவோ சுட்டியைத் தந்திருக்கிறேனே...
சரியான சுட்டி

தருமி..இளகிய மனசு என்றால் வேப்பங்காயாக கசக்கிறதா? இளகிய மனசு வேண்டாமென்றால் உங்களை எதற்காம் நான் உதாரணமாக்குவது?
:o)

நான் கேட்ட //நீங்களும் "எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுண்டு படுப்பின் கெட்ட கனவு வரும்" வகையா?
//
இற்குப் பதில் சொல்லவில்லையே நீங்கள்???

பெட்டகம்