திருமணமாகி இங்கே வந்த புதிதில் கணவர் வேலைக்குப் போய்விடுவார். தனியே வீட்டில் இருப்பேன். படிக்கத்தொடங்க இன்னும் 6 மாதம் இருந்தது. கணவர் வெளிக்கிட்டால், நான் குளித்து வெளிக்கிட்டு சாப்பிட்டு சித்தி வீட்டிற்குப் போவேன், அவவுக்கு வேலை இல்லாத நாட்களில். மற்ற நாளெல்லாம் வீட்டுக்குள்ளே. மற்றப்படி பக்கத்திலே கடைக்கும் நூலகத்துக்கும் தான். சில வேளைகளில் செய்ய ஒன்றுமிராது. மனமும் ஒரு நிலையில் இருக்காது. புது இடம், யாரும் தோழிகளும் இல்லை. கிடைத்தவர்களோ கணவரின் நண்பர்களின் மனைவியர். அவர்களுடன் இப்போதும் நல்ல நட்புண்டு, ஆனால் ஒத்த வயதிலர். ஒத்த வயதுக்காரருக்குள் இருக்கும் ஒட்டே தனி. என்னுடன் படித்து, நான் வர 7 வருடங்களுக்கு முன்பதாகவே இங்கு குடும்பமாகப் புலம் பெயர்ந்து வந்து விட்ட என் தோழியும் அவளது தங்கைகளும் வேலை படிப்பென்று திரிந்ததில் அங்கேயும் மனம் விட்டுப் பேச, வந்த புதிதில் எப்படியிருந்ததென்றெல்லாம் கேட்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
திருமணமாகிச் சில வாரங்களே! அப்படியிருக்க, "இங்கே இருக்க முடியவில்லை, அம்மாவிடம் போகப்போறேன்" என்று சொல்லலாமா என்று ஒரு ஏனென்று தெரியாத (தேவையற்ற) தயக்கமோ வெட்கமோ ஈகோவோ ஏதோ ஒன்று அவரிடம் மனம் விட்டுச் சொல்வதைத் தடுத்தது. ஆனாலும் நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டார். "வீட்டிலிருக்காதே.. நூலகம் போ, தொடர் வண்டியிலேறிப் போய் cityயைப் பார்" என்று நகரின் வரைபடத்தையும் தந்து அனுப்பினார் ("உனக்கு கையில map தந்ததே பிழையாப் போச்சு! - வீட்டிலயே இருக்கிறதில்லை" - இது இப்பத்தைய வசனம் ;O) . புதிதாக இரண்டு தெரு சுற்றி வந்து பெயர் என்னென்ன என்று அவருக்குச் சொல்ல வேண்டும். இதிலேயே எனக்கு ஓரளவு ஊர் பிடிபட்டது. cityயென்றால் எனக்கு ஏதோ பெரிய சொர்க்கம் மாதிரி. பின்னே.. கொழும்பு மாதிரி ஒரு சின்ன நகரிலேயே நேரம் செலவழித்த எனக்கு சிட்னி புதுமையாக இருந்தது. "பட்டிக்காட்டான் பட்டணத்தைப் பாத்த கதை"தான்.
ஊரில் என் நட்பு வட்டம் பெரிது. அப்படி இருந்து, அறிகிற / உணர்கிற எல்லாவற்றையும் இன்னொருவரிடம் பகிர்ந்தே பழக்கப்பட்டுவிட்ட எனக்கு இவரொருவரிடமும், பழக்கமற்ற புதியவர்களிடமும் தான் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றான போது ஏமாற்றமாகவிருந்தது. கணவருடனான பகிர்வு சரி. மூன்று நான்கு வாரங்களாய்த்தான் பழக்கமுள்ளவர்களிடம் நினைப்பதெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ன! (இங்கைத்தேய வட்டம் இப்போது மிகவும் பெரிதாகிவிட்டது). செல்லமாகவே வளர்த்தார்களா.. சமையலும் ஒழுங்காத்தெரியாது. (ஏதோ..இது வரை மருத்துவமனைக்கு என் சாப்பாடு காரணமாகப் போகவில்லை!) எல்லாமே புதிது. சரியாக வரவில்லை என்றதும் சில தடவை முயற்சித்தேன்.. தொடர்ந்து செய்யத்தான் கைவரும் என்பது உறைக்கவில்லை. அதுவும் இன்னொரு ஏமாற்றம். இப்படிப் புது முயற்சிகள் ஏமாற்றத்தில் முடிந்தன.
இப்பிடியாக நிறைய எதிர்பார்ப்பிலிருந்து வித்தியாசப்பட்டதில் உணரத்தலைப்பட்டதெல்லாம் பகிர ஆளின்றி /ஆளிருந்தபோதிலும் வீண் வீம்பு / ஈகோ இடம் கொடுக்காததில் உள்ளுக்குள்ளேயே போட்டுப் பூட்டி புழுங்கியது இந்தா அந்தா என்று வெடிக்கும் நிலை வந்தது. 3 மாதத்தில் நுழைவனுமதி(விசா) மாற்ற வேண்டி வந்ததில் இலங்கை போய் 3 கிழமையில் திரும்பினேன். கொஞ்சம் ஆறியிருந்த மனம் திரும்பக் குப்பை சேர்க்கத் தொடங்கியது. ஒன்றிரண்டு மாதத்தில் ஏதோ உடல் நலக்குறைவும் ஏற்பட்டு வைத்தியரிடம் போக, அவர் சொன்னார், இரத்தப்பரிசோதனை செய்ய வேண்டுமென்று. தாதி உள்ளே அழைத்துச் சென்று பேசியபடியே இரத்தமெடுத்தா.
பிறகு கேட்டா: "நீ இங்கே வந்து எவ்வளவு நாள்?"
"4/5 மாதம்."
"இங்கே இடம், மனிதர், சூழல்..பிடித்திருக்கிறதா"
"ம்ம்.."
"இடமாற்றத்தை, வாழ்க்கை முறை மாற்றத்தை எப்படிக் கையாளுகிறாய்? இயலுமாக இருக்கிறதா?"
அவ்வளவுதான். ஆரம்பித்தது! எதுவா? நயகரா. அதுவும் தோற்றது போங்கள்! அடைத்து வைத்திருந்த அவ்வளவும் தீரும் வரை அழுதேன். நல்ல தாதி போல. என் முதுகை தடவிய படியே இருந்தா. கணவருக்கு ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும், என் அழுகையைப் பற்றிய அவருடைய புரிதல் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. "புதிய இடத்தில் முற்றும் புதிதாக வாழ்க்க தொடங்குவதென்பது கஷ்டமானது. இசைவடையக் கொஞ்சக் காலமெடுக்கும்" என்றெல்லாம் சொல்லி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தா. அங்கிருந்து வெளிக்கிடும் போது, தெரியாத ஒருவரின் முன் அழுது விட்டோமே என்று வெட்கம் பிடுங்கியது. அவவின் முகமோ பெயரோ ஞாபகமில்லை. வார்த்தைகளே மனதில் நிற்கின்றன.
அவ சொன்னதன் உண்மை விளங்க எனக்குக் கொஞ்சக் காலம் எடுத்தது. விரைவில் படிக்கவும் ஆரம்பித்ததில் மனதிலிருந்தவைகளும் படிப்படியாக அகன்று என் இயல்பு நிலைக்கு வந்தேன். படிப்பதற்கோ வேலைக்கோ செல்பவர்கள் வீட்டிலிலேயே இருப்பவர்களை விட மிகக்குறைந்த கால அளவிலே இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவது கண்கூடு. வெளியில் செல்லாது வீட்டிலேயே தம் வாழ்க்கையை நடத்துவோர் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே தம்மை அடைத்துக் கொள்கின்றனர். இருக்குமிடம் பற்றிய ஆர்வமோ வெளியுலகில் ஈடுபாடோ இல்லாதவர்களின் "பிடுங்கி நடப்படும் வாழ்க்கை" எப்படியிருக்குமென யோசித்துப்பாருங்கள். கவனத்தைக் செலுத்துவதற்கு வேறு செயற்பாடுகள் / பிள்ளைகள் இல்லாதவிடத்து இதுவரை பழகியன போய் புதியனவாய்ப் புகும் புதுச் சூழலும் மனிதரும் வாழ்க்கை முறையும் மனதைப் போட்டு அருட்டும். ஆரம்பிக்கும் புது வாழ்க்கை ஒருவருக்குத்தான் என்றால் பரவாயில்லை. மற்றவர் உறுதுணையாயிருக்கலாம். இருவருக்குமே புதிதாய் வேர்விட வேண்டிய சந்தர்ப்பமென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். அடிப்படையாய் நாம் பார்த்துப் பழகியவைகளும் கலாச்சாரமும் இருக்க, புதிதாய் எதிர்கொள்ளக்கூடியவைகள் முற்றிலும் மாறுபட்டதாயிருப்பது சாத்தியமே. எப்படி இவற்றையெல்லாம் சமாளித்து, பழகியெடுப்பது என்று ஒரு மலைப்பு ஏற்படுவது இயல்பே. சில எதிபார்ப்புகளும் கணிப்புகளும் நிறைவேற, வேறு சிலது ஏமாற்றங்களாகலாம். புதிய வாழ்க்கைக்கென எவ்வளவுதான் ஒத்திகை பார்த்து, எதிர்கொள்ளக்கூடியதென எதிர்பார்த்து அதற்கேற்ப ஆயத்தஞ் செய்து நடந்து கொண்டாலும் வாழ்க்கையின் இருப்பை உறுதிப்படுத்துவதாய் எதிர்பாராமல் நிகழ்பவையும் புதிய இடத்தில் சுயமாய் ஒரு வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியமும் நினைத்திருந்தவைகளைப் புரட்டிப் போட்டு விடும்.
இதெல்லாம் ஏன் இப்ப சொல்கிறேனென நீங்கள் கேட்பீர்கள். புதுசா உறவினரொருவரின் மனைவி வந்திருக்கிறா. அவ ஊரிலிருந்த பொழுதிருந்தே நான் தொலைபேசியிருக்கிறேன். ஒத்த வயது. அவவும் துணைவர் வேலைக்குப் போக வீட்டிலிருக்கிறா. பயந்த சுபாவம், இருக்குமிடம் ஆராயும் ஆர்வமுமில்லை. திரைப்படம் பார்த்து, சமைத்து, தூங்கியெழுகின்றதிலேயே அவவின் நாட்கள் கழிகின்றன. எதையும் இலகுவாக எடுத்துக் கொள்பவள் என்று என்னைக் குறித்து எனக்குக் கொஞ்சம் (தற்)பெருமையான எண்ணமுண்டு. அப்படியான நானே புதிதாய் வேர் விட வேண்டி வந்ததில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். அவவைப் பார்த்தால் அதிகமாக மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் சாத்தியமிருக்கும் போலத் தோற்றுகிறது. இயன்றவரை நான் கடந்து வந்த உணர்வுகள், பெற்ற அனுபவங்கள், இங்கத்தேய வாழ்க்கை & நடைமுறைகள் பற்றிச் சொல்லிவருகிறேன். வேலை தேடுகிறா. விரைவில் கிடைத்தால் நலம்.
இங்கே வந்து அடுத்த கிழமை என்னிடம் பேசிக்கொண்டிருந்தவ கேட்கிறா: "ஏங்க ஷ்ரேயா, உங்க வேலைய செவ்வாயிலேருந்து சனி வரைன்னு மாத்திக்க முடியாதா?" ஒரு குழந்தையிடம் பேசுவது போலிருக்கிறது.
23 படகுகள் :
// ஒத்த வயதுக்காரருக்குள் இருக்கும் ஒட்டே தனி. //
நறநற நறநற.... என்னவா? பல்லைக் கடிச்சுக்கிட்டு இருக்கன்.
அது ஏன் செவ்வாய் டு சனி? திங்களன்னைக்குக் கதைக்கவா?
//அது ஏன் செவ்வாய் டு சனி?திங்களன்னைக்குக் கதைக்கவா?//
நீங்க வேற! அவ வீட்டுக்காரருக்கு புதனும் ஞாயிறும் தவிர மீதி நாள் வேலையாம்!அவர் இல்லாட்டியும் பரவால்லே..போனாப் போகுதுன்னு செவ்வாய் - சனி (புதன் உட்பட), நீ வேலைக்குப் போன்னு "பெரிய மனசு" பண்ணியிருக்கா! :O)
கேட்டதைப் பார்க்க பாவமாத்தான் இருந்துது.
//நறநற நறநற.... என்னவா? பல்லைக் கடிச்சுக்கிட்டு இருக்கன்.//
20% தள்ளுபடி தர்ற தைரியம் தானே இது? :O)
சமையலும் ஒழுங்காத்தெரியாது. சரியாக வரவில்லை என்றதும் சில தடவை முயற்சித்தேன்.. தொடர்ந்து செய்யத்தான் கைவரும் என்பது உறைக்கவில்லை.
சமையல் வேலை எல்லாம் அப்போ நீங்கதானா? அதிசயமா இருக்கே! ஓ, சரி சரி. நீங்க சென்ற தலைமுறைப் பெண் இல்லையா.... ;-)
இந்தக்காலத்துப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டால் அப்படி இருக்காது. எனவே நானும் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கைவரும் அளவுக்கு முயற்சித்து நல்ல 'இல்லான்' எனப் பெயரெடுக்க முயற்சிக்கிறேன்.;-)
புதுசா வந்து இறங்கியவுடன் ஒவ்வொருமுறையும் செலவழிக்கும் போது இலங்கை ரூபாய்க்கு மாத்திப் பார்ப்பது. மனைவியாக வருபவர்களுக்கு இந்த அனுபவம் உண்டோ தெரியாது.
க்ருபா - நீங்க பேச்சிலர் ஆக முன்னமே உங்க வலைப்பதிவு பேச்சில்லாமப் போய் கிடக்கு..ஏன்ணா? :O)
//நானும் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கைவரும் அளவுக்கு முயற்சித்து நல்ல 'இல்லான்' எனப் பெயரெடுக்க முயற்சிக்கிறேன்//
உங்களுக்குப் புதுப்பாட்டு தெரியுமா க்ருபா:- "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பொண்ணுங்க வயித்துப் பசி இருக்குது தம்பி!!"
//சமையல் வேலை எல்லாம் அப்போ நீங்கதானா? அதிசயமா இருக்கே!//
அதெல்லாம் ஒரு கனாக்காலம்ணே! இப்பல்லாம் ஒப்பந்தம் போட்டுத்தான் சமையலே நடக்குது. அதென்னது ஒப்பந்தம் என்று கேட்பவர்களுக்கு: யார் வேலை முடிஞ்சு வீட்டுக்கு முந்தி வர்றாங்களோ அவங்க சமைக்கணும். மற்றாள் பாத்திரம் கழுவி வைக்கணும். பலநாள்ல நான் போட்ட இந்த ஒப்பந்தம் backfire ஆகிடுது!! :O(
//ஒவ்வொருமுறையும் செலவழிக்கும் போது இலங்கை ரூபாய்க்கு மாத்திப் பார்ப்பது.//
அது எல்லாருக்கும் பொதுவான பழக்கந்தானே அனோனிமஸ்! :O)
இதன் இரட்டைக்குணம்: இவ்வ்வ்ளோ விலையா என்று யோசிப்பது!
இனி இலங்கைக்குப் போனா இங்கைத்தேயக் காசுக்கு மாத்திப் பாத்துட்டு "நல்ல மலிவா இருக்கே" என்று நினைப்பமோ! :O)
ஷ்ரேயா உங்க கிட்டேயே கேட்டுரலாம்...
அதென்னங்க கல்யாணம் ஆன உடனேயே மனைவி கணவன் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும் என்ற வரைமுறை??
அது எந்த ஊரா இருந்தாலும் அதெப்படி சம்மதிச்சிட்டு போறீங்க....
"ராமர் இருக்குமிடம் தானே சீதைக்கு அயோத்தி" அப்டீன்னு இதில்ல நிறைய பேர் டயலாக் வேற விடுவாங்க....
என்னுடைய கல்லூரி தோழி ஒருத்திக்கு சமீபத்தில் திருமணமானது. பாருங்க இவளுக்கு சுமார் 35ஆயிரம் சம்பளம். இந்தியாவில் இது நல்ல சம்பளம்!! கணவருக்கு சிங்கப்பூர். வேலையை விட்டுவிட்டு அங்கே குடி பெயர்ந்து விட்டாள்.
இன்னொரு சம்பவம். இந்த முறை கணவர் வேலையை விட்டுவிட்டு மனைவியின் சம்பாத்தியத்தில் வேலை தேடினார். இரண்டே மாதங்களில் வேலை கிடைத்தது.
என் ஓட்டு இரண்டாமானவருக்கே... நீங்க என்ன சொல்றீங்க
ஓஹோ, அக்ரிமெண்ட் படி சமயலா, பரவாயில்லை. அப்போ நீங்க தங்கச்'சீ' இல்லை, தங்கச்சிதான். :-)
பொண்ணுங்க வயித்துப்பசி மட்டுமா இருக்குது, அப்போ புடவை துவைக்கறது, பாத்திரம் துலக்கறது எல்லாம் எந்த கணக்குல வரும்? :-))
பிள்ளையார் சதுர்த்தி முடிஞ்ச கையோட ஒரு பதிவு போட்டுட்டேன், வாழ்க மேல்Kind:
http://malekind.blogspot.com/2005/09/blog-post.html 'உதவாக்கரை'ல பதிவு அப்பறம்
//நறநற நறநற.... என்னவா? பல்லைக் கடிச்சுக்கிட்டு இருக்கன்.//
20% தள்ளுபடி தர்ற தைரியம் தானே இது? :O)
:))
போன ஜோருல புள்ளைங்கல்லாம் "அம்மாட்டப் போகப் போறன்!" ன்னு அடம் புடிப்பீங்க! ஆம்பளைங்க அந்த ஊரு அருமை பெருமைகளை சொல்லிச்சொல்லி உங்களை மாத்திருவாங்க.. ஒரு 5 வருசம் ஆனா ஆம்பளைங்க "நான் சொந்த ஊருக்கு போகப்போறேன்"னு அடம்பிடிப்போம். அந்நேரத்துல நீங்க தெளிவா செட்டில்டு மைண்டுல இருப்பீக!!!
அப்பறம் என்ன? கடைசிவரைக்கும் எங்களுக்கு +1 syndrom தான்! :)
ஷ்ரேயா
ஒப்பந்தம் இங்கேயும் உண்டு. தினமும் அர்விந்த் சமைப்பது நான் சாப்பிடுவது . ஆளுக்கொரு வேலை சரிதானே
//புதுசா வந்து இறங்கியவுடன் ஒவ்வொருமுறையும் செலவழிக்கும் போது இலங்கை ரூபாய்க்கு மாத்திப் பார்ப்பது. மனைவியாக வருபவர்களுக்கு இந்த அனுபவம் உண்டோ தெரியாது.//
அட இது எல்லாருக்கும் பொதுதானே.
ஷ்ரேயா,
தலைப்பைப் பாத்திட்டு நாட்டுக்குப் போறியளோ எண்டு ஓடியந்தன், ஆனா காப்பாத்திட்டியள்.
மிச்சம் நேரில.
பத்மாவின்ர வேலைபிரிப்பும் நல்லாத்தான் இருக்கு.
கணேஷ் - திரு(க்)கோணமலையில நீங்க கேட்ட மாதிரி மனைவி வீட்டுக்கு கணவன் குடி பெயர்ற வழக்கம் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறன். ஆனா சரியாத் தெரியாது.
க்ருபா - புடவை: அநேகமா ட்ரை க்ளீனிங். அதனால சலவைக்கடைக்காரர் பார்த்துக்கொள்வார். மற்ற உடுப்புகள்: இருக்கவே இருக்குது சலவைப் பொறி. பாத்திரம் கழுவ dish washer.(இதுக்குத் தமிழ் என்ன? சட்டிகழுவிப்பொறியா?) :O)
இளவஞ்சி - அது என்ன +1 சின்ட்ரோம்? (நீங்க கேட்கிறப்ப மனைவி "கொஞ்ச நாள் கழிச்சுப் போகலாம்" என்டு சொன்னா அது ஆஆஆஆரம்பத்துல நீங்க சொன்னதுக்குப் பழிக்குப் பழி. (அது அவங்களையும் பாதிக்கும் என்டாலும், காட்டிக்கொள்ள மாட்டாங்க!) ;O)
தேன்துளி பத்மா - உங்க வாழ்க்கை எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கணுமே! குடுத்து வைச்ச ஆள்டாப்பா நீங்க! :O)
மற்ற வலைப்பதிவாளினிகளின் வீட்டு (சமையல்) ஒப்பந்தமெல்லாம் எப்பிடியோ தெரியல்லயே.. கொஞ்சம் உங்க பிரலாபத்தை எடுத்து விடுங்க தோழீஸ்! :O)
வசந்தன் - பயப்பிடாதீங்க. அப்பிடியே ஊருக்குப் போனாலும் சயந்தன் மாதிரி 2 கிழமையில ஓடியர மாட்டன். (உண்டு களிக்க வேணுமே!!).
எனக்கொரு தனிமடல் போடுங்க, எப்ப இஞ்சால வாறீங்க என்டதைப் பற்றிக் கதைக்க.
//வசந்தன் - பயப்பிடாதீங்க. அப்பிடியே ஊருக்குப் போனாலும் சயந்தன் மாதிரி 2 கிழமையில ஓடியர மாட்டன். (உண்டு களிக்க வேணுமே!!).
எனக்கொரு தனிமடல் போடுங்க, எப்ப இஞ்சால வாறீங்க என்டதைப் பற்றிக் கதைக்க.//
இப்ப என்னத்துக்கு அந்தாள இழுக்கிறியள்?
எனக்கு முகவரி தெரியாதே?
நீங்கள் எனக்குப் போடுங்கோ.
maathahal@hotmail.com
//இப்ப என்னத்துக்கு அந்தாள இழுக்கிறியள்?//
தனகுவாரந்தான்!! வேறென்ன!! ;O)
நான் மின்னஞ்சல் போடுறன். என்ட மின்னஞ்சல், பதிவுக்குக் கீழே ஷ்ரேயா என்டிருக்கெல்லா, அதில சொடுக்கினா வரும்.
நமது பெண்கள் பலரின் நடைமுறை வாழ்க்கையை
சொல்லிச்சிது பதிவு.
வந்த உடனையே படிப்பில் இறங்கியதால் நான் பெரிசாக
பாதிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் பேசிய ஆங்கிலத்தோடு கொஞ்சக்காலம்
மல்லுக்கட்டினேன். எனக்கு தெரிஞ்ச வேறு பெண்கள் இப்படி
சிறிது கஸ்டப்பட்டார்கள் என்று அறிந்தேன். அதுவும் தமிழர்கள்
நெருக்கமான பகுதியில் அல்லாதவர்கள். வீட்டுக்குள் சிறைப்பட்டு
நிறையே மன அழுத்தங்களிற்குள் உள்ளாகிறார்கள்.
வீட்டு வேலை குழந்தை என்று நான்கு சுவருக்குள்
அடங்கி கஸ்டப்படுகிறார்கள். வேதனையான விடயம் தான்.
ஆங்கிலம் விளங்கியெடுக்க இலகுவான வழி தொலைக்காட்சியில செய்தியோ, உள்நாட்டுத் தயாரிப்பான நிகழ்ச்சிகளையோ பார்க்கிறதுதான். accentஐ விரைவில் பிடிக்கலாம்.
மன அழுத்தம் உருவாகிறதுக்கும் அப்படியே அது தங்கிவளர்வதற்கும் பல காரணிகள்.
//அது எந்த ஊரா இருந்தாலும் அதெப்படி சம்மதிச்சிட்டு போறீங்க...//
போகமாட்டோம்னு சொன்னா மட்டும் விட்றுவாங்களா?
Post a Comment