இது கொலைகளின் கதை

மு.கு: இளகிய மனதுடையவர்கள் இதை வாசிக்க வேண்டாம்..பிறகு என்னுடன் சண்டைக்கும் வர வேண்டாம்.

பகல் பலது வீட்டிலே கழிந்த போது ஆசையில் எடுத்து/வாங்கி வந்து பார்த்துப் பார்த்து தேவையறிந்து உரமிட்டு வளர்த்ததுவும், பள்ளிக்குப் போகையிலேயும் பாசத்துடன் கவனித்ததுவுமாய் இருந்த என் செல்லச் செடிகள்... ( "இவ்வளவு மரம் ஏன் வளர்க்கிறீங்க? கரப்பொத்தான் எல்லாம் வரும்". "இல்லை அப்பிடி ஒன்டும் வராது. நான் கவனமாப் பார்ப்பன்")

வாடிப்போய்த் தண்டுடன் இலையில்லாமல் நின்று வளர்ச்சி நிறுத்தப் போராட்டம் நடத்தின வாழைக்குத் தலை வெட்டி, ("ஐயோ! ஏன் வெட்டுறீங்க? ஒரேயடியா சாகப்போகுது". "இல்ல.. இப்பிடி வெட்டினா வருமாம்..--- சொன்னவ ".) இலைகள் வர, விசேட நாளுக்கெல்லாம் தலைவாழை கிடைத்ததுவும்..("அப்பவே சொன்னன் தானே! :O) ")

தாவரமும் அதன் வளர்ப்பும் பற்றி நண்பியின் ஆர்வம் தொற்றியதில் அது பற்றிய வகுப்புகளுக்குப் போனதொரு ("அவக்கு back yard இருக்கு, அவ அதுக்கு மரம் வைப்பா. உம்மட நிரம்பின பல்கனியில இனியெங்க இடம்?". "இல்லையில்ல, எப்பிடிப் பராமரிக்க என்டு படிக்கத்தான் நான் போறன்") ஆர்வக் கோளாற்றுக் காலத்தில் வாங்கின பூந்தொட்டிகளும், சிலபல செடிகளும் ஏற்கனவே இருந்த பலகணித் தாவரக் குடும்பத்தில் கலந்தனவே. ( "இன்டைக்கு இவ்வளவும்தானா?". ":O ")

சமையலறையின் சேதன மீதிகள் போட்டு வளர்த்ததில் ஒன்றாய் நன்றாக கிளையும், கிளையில் இலையும் விட்டு, கரப்பொத்தான் தொடங்கி சிலந்தி வரை பலதுக்கும் புகலிடமாய் ("அப்பவே சொன்னன்..இதெல்லாம் போடாதையும் என்டு!கேட்டாத்தானே!! ") நின்ற இரட்டைப்பிறவிக் கருவேப்பிலையை வகுப்புக்குப் போய் பெற்றதாக நினைத்துக்கு கொண்ட அசட்டறிவின் காரணமாய்ப் பிரித்து, துணையிழந்த சோகத்தில் அவற்றை ஆழ்த்தியதும் ("வீண் வேலைகள் செய்யிறது"), அத்துடனே பக்கத்தில் நின்ற அழகான கானேஷன் தண்ணீர் தண்ணீரென அலறியது கேட்காமல், அதை தொண்டை வற்றச் சருகாக்கியதும், எனதருமைச் சிலந்திப் புல்லும் அதே கதிக்காளாகியதும்.. :O(

தேயிலையும், முட்டைக் கோதும் போட்டு வளர்த்த ரோசாச்செடியெல்லாம்வெறும் முள்ளாகி நின்று ("ரோசாப்பூவெண்டா எப்பிடி இருக்கும்?" .."Grrrr"), வளரப் பார்த்த வத்தகை, வான் பார்த்து, பூமி ஆராய்ந்து, வராமலே போனதுவும் என்று தாவர சங்கமத்துள் பலதும் வளர்த்திளைத்தேன் நான் - மெய்யே கள்ளியொன்று என்றறிந்து இன்புற்றேன். ( "எல்லாம் போய் இப்ப இதுவா!")

கவனியாது விட்டாலும், இன்னும் இருக்கிறேன் பார் என்று காட்டி மகிழ வைக்கும் அன்பான கள்ளிச்செடிகளுக்கும் (" நல்லகாலம், ஒன்டும் செய்யாம விட்டிருக்கிறீர்..உயிரோட நிற்குது", ":O("), வீட்டுக்குள்ளே இருப்பதனால் தப்பிப் பிழைத்திருக்கும் மூங்கிலுக்கும் துணையாய் நேற்றுக் கிடைத்த Kangaroo Paw வுக்கு "மேற்தட்டு" வாழ்க்கை வெறுப்பது எப்பவோ.. அன்றைக்கு மீண்டும் ஒரு கொலை நடந்திருக்கும்.

11 படகுகள் :

முகமூடி November 25, 2005 8:54 pm  

// இளகிய மனதுடையவர்கள் இதை வாசிக்க வேண்டாம் //

நான் இதை வாசிக்கல..

கலை November 26, 2005 1:38 am  

//மு.கு: இளகிய மனதுடையவர்கள் இதை வாசிக்க வேண்டாம்..பிறகு என்னுடன் சண்டைக்கும் வர வேண்டாம்.//

வாசிக்காமல் விட்டு விடலாமா என்று நிறைய யோசித்து, பின்னர் வாசித்தே விட்டேன். உங்களுக்கே சோகம், இதுல நான் வேறு வந்து சண்டை பிடிக்க வேண்டுமா என்று விட்டு விடுகிறேன்.

//தாவர சங்கமத்துள் பலதும் வளர்த்திளைத்தேன்//
:))

எனக்கும் தாவரத்துக்கும் நிறைய தொடர்பு இருந்தாக வேண்டும். ஆனாலும் ஏனோ எந்த ஒரு தாவரமும் என்னுடன் இருக்க விரும்புவதாயில்லை. காரணமறியேன்.:(

சினேகிதி November 26, 2005 2:46 am  

Shreya ungaluku evalo ilagiya manasu:-)

அ. பசுபதி (தேவமைந்தன்) November 26, 2005 10:33 am  

மரஞ்செடிகொடிகளோடு நாம் படும் அவத்தைகள் கொஞ்சநஞ்சமல்ல. இப்பொழுது எங்களூரில் அடித்த பெருமழையிலும் சூறையிலும் எம்வீட்டுச்செடிகள் நிலைகுலைந்து சாய்ந்தன. மழையினூடு சென்று மண் எடுத்துவந்து அணைத்துக் காக்க முயன்றிருக்கிறோம், நேற்று... காலை, இன்னும் ஒன்றேகால் மணி சென்று, பார்க்கவேண்டும். இந்த எண்ணம் தந்த தங்களின் பதிவு மிகவும் அருமையல்லவா?

துளசி கோபால் November 26, 2005 12:43 pm  

ஷ்ரேயா,

எதுவும் வேணாமுன்னு விட்டுட்டு இருக்கவும் முடியலையே(-:

நேத்து ஒரு தாமரைக் கிழங்கு வாங்கி வந்துட்டேன். அதோட தலையெழுத்துப்படி ஆவட்டும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) November 28, 2005 11:02 am  

முகமூடீ!! :O)

கலை - எனக்கும் அதே பிரச்சனைதான். அதனால் மிகக் குறைந்த கவனம் பெற்றாலும் "உயிர்வாழும்" கள்ளி வகையைத்தான் வளர்க்கிறேன்.(அது தானா வளருது, பிறகு ஏன், நாங்க "வளர்க்கிறம்" என்று கதைக்கிறோம்?)

`மழை` ஷ்ரேயா(Shreya) November 28, 2005 11:03 am  

பசுபதி - உங்கள் மரஞ்செடி கொடியெல்லாம் திரும்பவும் வேரூன்றி செழித்து வரும். கவலைப்படாதீர்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) November 28, 2005 11:03 am  

துளசி - வீட்டுலே குளமிருக்கா? இனிமே "ஆயிரம் தாமரை மொட்டுக்களே.." என்று பாட வேண்டியது தான்!! ;O)

செத்துப்போச்சு என்று நினைத்திருந்த கருவேப்பிலை மரங்களில் ஒன்று துளிர்த்திருக்கு. YAY!!

பத்மா அர்விந்த் November 28, 2005 10:44 pm  

கறிவேப்பிலைக்கு மோர் விட்டு வளருங்கள். அதற்கு B2 தேவை:)

வசந்தன்(Vasanthan) November 28, 2005 11:58 pm  

எல்லாம் ஒருத்தன் வந்த நேரம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) November 29, 2005 8:56 am  

B2 மட்டுமா தேவை? வேற உயிர்ச்சத்துக்கள் தேவையில்லையா? ஒரேயடியா "சென்ட்ரம்" வாங்கிக் கொடுக்கவா? :O)

வசந்தன் - அதாரது அந்த "ஒருத்தன்" ? :OD

பெட்டகம்