தித்தோம்.. சந்தித்தோம்

நேற்றைய அறிவித்தலின் படியே சிட்னி வலைப்பதிவர் சந்திப்பு இடம்பெற்றது.

ஒரே "மேடை"யிலேயே நின்றிருந்தாலும் ஷ்ரேயாவுக்கும் சயந்தனுக்கும் ஆளையாள் கண்டுபிடிக்கக் கொஞ்ச நேரமெடுத்தது. எங்க நிற்கிறீங்கள்? மேடைக்கு வந்துட்டீங்களோ? போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்தவாறே தன்னைத் தேடி நடக்க ஆரம்பித்த சயந்தனை - வலைப்பதிவில் அவர் போட்டிருந்த படத்திலிருந்ததைப் போலவே ஒருவர் கடந்து போகிறார் என உணர்ந்ததும் - ஷ்ரேயா கையை ஆட்டித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். செயலாளருக்குப் 19 வயது தானாம்.. மெல்பேணில் அப்படித்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்பக்கூடிய தோற்றம்தான்!

செயலாளரைப் பத்திரமாக மீண்டும் மெல்பேணுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதால் மிகுந்த பாதுகாப்பிற்கிடையிலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. ஒளிப்பதிவுக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன. சில காவலர்களும் இதற்கெனவே சிறப்பு ஏற்பாடாக அமர்த்தப்பட்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பார்வையாளகளில் சிலருக்கு இருக்கக்கூட இடமிருக்கவில்லை. அவ்வளவு வலைப்பதிவு ஆர்வலர்களைப் பார்த்ததில் செயலாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அடிக்கடி பார்வையாளரில் சிலர் மீது அவர் பார்வை திரும்பியமை சந்திப்பில் சிறிது சலசலப்பையும் திசைதிரும்புதலையும் உருவாக்கச் சந்தர்ப்பமாக அமைந்தது. ஆனாலும் சிறிது நேரத்தில் செயலர் தன்னைச் சுதாரித்துக் கொண்டதில் கூட்டம் வழமைக்குத் திரும்பியது.

இந்தச் சந்திப்பில் முதலிலே என்ன கதைப்பதெனத் தயக்கமேற்பட்டதில் சில சொந்த விதயங்கள்/ தகவல்கள் பரிமாறப்பட்டன. பின்னர் கொஞ்ச நேரத்தில் சந்திப்புக் களைகட்டியது. பேசப்பட்ட விதயங்களில் தெரிந்த/அறிந்த வலைப்பதிவர்களின் பிளவாளுமை பற்றிய கலந்துரையாடல் குறிப்பிடத்தக்கது. ஊரறிந்த இரகசியமொன்றையும் வலைப்பதிவராகும் ஆர்வமுடையவர்களின் நன்மை கருதிச் செயலர் போட்டுடைத்தார், அது மிகவும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிளவாளுமை பற்றிய உரையாடலின் போதே வலைப்பதிவுலகின் துப்பறியும் நிபுணர்கள் அடையாளம் காட்டப்பட்டனர். இவர்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரோடு சேர்ந்து செயற்பட்டால் அத்துறையினர் மிகவும் பலனடைவர் என நம்பப்படுகிறது.

மேற்கூறியது, தமிழ் வலைப்பதிவுகளின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிப் பேச வழிகோலியது. சிட்னியில் தமிழ்/தமிழர் நிலை, பண்பு குறித்துத் தனது மனமகிழ்வைத் தெரிவித்த செயலர், சிட்னியில் போன்றதான் தமிழார்வம் மெல்பேணில் இல்லையென விசனமடைந்தார். இனிதே இவ்வாறு சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தலைவர் வசந்தன் செய்மதி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். (மாநாடு பற்றிய அறிவிப்பில் பின்னூட்டமிட்டு ஆசி தெரிவித்தமைக்கும் தலைவருக்கு நன்றி) செயலகத்தினை சிட்னிக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் ஆராய்ப்பட்டது. ஆனாலும் இப்போதைக்கு அது தேவையில்லையெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலைப்பதிவர் இருவரும் தத்தம் வாசிப்புக்குட்படுவன பற்றியும் பேசினர். ஏனைய வேலைகளுக்கிடையில் வாசிப்பிற்கென போதுமானளவு நேரம் ஒதுக்க முடியவில்லையென செயலாளர் மனம் வருந்தினார். பார்வையாளர்களுக்கு உதவுமுகமாக இடையிடையே ஒலிபரப்பப்பட்ட சில அறிவுறுத்தல்கள் சந்திப்புக்கு அவ்வப்போது இடையூறாய், நாராசமாய் இருந்திருப்பினும் அவை பெருந்தன்மையாக எம்மாலும், ஏனைய பார்வையாளர்களாலும் பொறுத்தருளப்பட்டன.

க்றைஸ்ட்சர்ச் மாநாடு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துத் தெரிவித்ததுடனும், ஞாபகார்த்தமாக சில புகைப்படங்கள் எடுத்ததுடனும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முதலாவது சிட்னி வலைப்பதிவர் மாநாடு இனிதே நிறைவேறியது. மேலும் விபரங்களும், படங்களும் விரைவில் செயலாளரின் பதிவில்.

15 படகுகள் :

துளசி கோபால் September 20, 2005 11:49 am  

//சில புகைப்படங்கள் எடுத்ததுடனும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ...//

எங்கே அந்த வ.மு. படங்கள்?

செயலரிடம் தலைவருக்குக் 'களி' கொடுத்தனுப்பலையா?:-)

நியூஸி மாநாட்டுக்கு வாழ்தியதற்கு நன்றி. அதுக்குள்ளே இங்கே பனிமழை நின்னுறணும்/நிக்கும்/நிக்கவைப்பேன்:-)

`மழை` ஷ்ரேயா(Shreya) September 20, 2005 11:57 am  

படங்கள் செயலாளர்தான் எடுத்ததால், அவரின் பதிவில் வெளியிடப்படும்.

//அதுக்குள்ளே இங்கே பனிமழை நின்னுறணும் / நிக்கும்/ நிக்கவைப்பேன்:-) //

ஆஹா!! :OD

பனிமழைக்குக் கெட்டகாலம் போல! வரக்கூடாத நேரத்தில வந்து நின்று உங்கட கோபத்துக்கு ஆளாகிட்டுது! :O)

துளசி கோபால் September 20, 2005 12:37 pm  

டி.ராஜ்,

//தமிழக அம்மாவுக்கு நீங்க முன்னோடி ....//

நான் அவுங்க 'ட்வின் சிஸ்டர்'ங்க.
நிஜமாவே இதுவரைக்கும் உங்களுக்குத் தெரியாதா?

வசந்தன்(Vasanthan) September 20, 2005 12:40 pm  

சந்திச்ச மேடையையும் மண்டபத்தையும் படத்திலகாட்டினாத்தான் மாநாட்டின்ர சிறப்பு விளங்கும்.
நான் புதிய வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்திறதப் பற்றிக் கதைக்கச் சொன்னன். கதைக்கேல போல. இன்னும் அறிக்கை வந்து சேரேல.

வசந்தன்(Vasanthan) September 20, 2005 12:41 pm  

என்ன இருந்தாலும் துளசியும் எங்கட சம்மேளனத்தின்ர உறுப்பினர் தானே. ஏன் அவவைச் சீண்டிப் பதிவு போடுறியள்? மாநாடு நடத்திறதில ஆர் முந்தினா என்ன? பிரியோசினமா நடந்தாச் சரிதானே?

`மழை` ஷ்ரேயா(Shreya) September 20, 2005 12:46 pm  

துளசி - :O)

யாரும் மதிப்பிற்குரிய துளசியைச் சீண்டவில்லை. தலைவர் இப்பிடிப் பொறுப்பில்லாமக் கதைக்கக் கூடாது. :O(

புது வலைப்பதிவர்களைப் பற்றிக் கதைச்சனாங்க. செயலாளருக்கும் எழுதுறதுக்கு விஷயம் வேணுமெண்டு சிலவற்றை விட்டிருக்கிறன்/ மேலோட்டமாக் குறிப்பிட்டிருக்கிறன்.

Anonymous September 20, 2005 3:35 pm  

மெல்போர்ன்-சிட்னி. சிறு குறிப்பு வரைக. தமிழகம்-புதுதில்லியின் தொலைவு இருக்குமா?

`மழை` ஷ்ரேயா(Shreya) September 20, 2005 3:44 pm  

மெல்போர்ன் - சிட்னி

சயந்தன் September 20, 2005 6:01 pm  

இஞ்சை பாருங்க.. விடுமுறையில வந்த நான் மாநாட்டில கலந்து கொண்டதே பெரிய விசயம்.. அதுவும் தலைவரின்ரை ஆக்கினை தாங்காமல்தான்.. கொஞ்சம் பொறுங்கோ.. எல்லாம் ஆறுதலா எடுத்து வீடறன்.. sydney UTS பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் அல்லாதவர்கள் UNI கணணிகளை பாவிக்க கூடாதாம்.. ஏன் வந்த இடத்தில மானக்கெடுவான் எண்ட பயத்தில்... சயந்தன்

Anonymous September 20, 2005 7:31 pm  

//செயலாளருக்குப் 19 வயது தானாம்.. மெல்பேணில் //

தலைவருக்கு 17 ஆம்

:) :)

வீ. எம் September 20, 2005 11:07 pm  

2 பாக்கட் களி இருந்த பார்சல் வேணும், சென்னைக்கு அனுப்புங்க..

`மழை` ஷ்ரேயா(Shreya) September 21, 2005 8:43 am  

மதன் - என்ன!! இன்னும் போடல்லயா செய்தியில? ஒரு வேளை நீங்க தவற விட்டிருப்பீங்க :O)

செயலாளர்ர்ர்ர்ர்ர் - இது சரியில்ல.

குழைக்காட்டான் - நீங்க பழைய படங்களைப் போட்டுட்டு! 17 வயதில நீங்க காட்டின படத்தில போல இருந்திருப்பார் சயந்தன். வயசைக் குறைக்கிறது பிரச்சனயில்ல, ஆனா எதுவும் ஒரு அளவோட இருக்கோணும். 14, 12, 10 , 10> என்டு இன்னுமின்னும் குறையாட்டிச் சரிதான்! ;O(

வீ.எம் - நீங்க கடை மாறி மன்னிக்கவும் வீடு மாறி வந்துட்டீங்க. களி (பெருந்தொகையாகக்) கிடைப்பது இங்கே!

கலை September 21, 2005 8:32 pm  

வ.மா. இன் (வலைப்பதிவாளர் மாநாடு) வ.மு. (வரலாற்று முக்கியத்துவம்) படங்களைப் பார்க்க ஆவல்.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 22, 2005 8:43 am  

கலை - படங்கள் செயலாளர்தான் எடுத்தவர், அவரின் பதிவில் வெளியிடப்படும்!

Anonymous November 08, 2005 5:41 pm  

//ஊரறிந்த இரகசியமொன்றையும் வலைப்பதிவராகும் ஆர்வமுடையவர்களின் நன்மை கருதிச் செயலர் போட்டுடைத்தார்//

அது என்ன,,?

பெட்டகம்