முதல் தரிப்பு

முதலாவதாய்ப் போன நாடு பிரான்ஸ். போதவே போதாத ஆறே நாட்கள். படிகளும் croissantsம் நிறைந்த பரிஸ். அவசரத்துக்குப் போவதானால் கூட 30சதம் கொடுத்தாக வேண்டும் பொதுவிடங்களில். இப்படியே உழைத்து பெரும்பணக்காரராய்விடலாம் போல! பரிசில் கண்ட இன்னுமொன்று எல்லா வீட்டுக்கும் ஒரு குட்ட்ட்டி பலகணி இருப்பதுதான். ஆட்கள் நிற்கமுடியாது.. ஆனால் பூந்தொட்டிகள் உட்காரலாம்.


வழமையாக எல்லாரும் பார்கிற ஐபல் கோபுரம் பார்க்கப் போனோம். எனக்குத் தேவையாயிருந்த மாதிரி - நான் கோபுரத்தின் உச்சியைத் தொடுவது போல - படமெடுக்க என்னோடு சேர்ந்து வந்த இரண்டு படக்காரர்களாலேயும் முடியவில்லை. தடை செய்யப்பட்டிருந்தாலும், வளையத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் உலோகத்தாலான கோபுரச் சிற்றுருவங்களை 'சல் சல்'லென்றுபடி ஆட்டியபடி வழி மறிக்கும் சிறு வியாபாரிகள் நிறைந்திருந்தார்கள். பழங்காலத்தைய சிற்பங்கள்/சிலைகள்.

சுழித்துக் கொண்டோடும் 'சுகந்தமான' செய்ன் நதியைக் கடந்து போய் தொடர்ந்து வளைக்கும் 'ஸ' போல நெளிந்த வரிசையில் நுழைவுச் சீட்டு வாங்க சேர்ந்து கொண்டோம். நகர்ந்து போன வரிசையில் திடீரென ஆங்கிலம் கேட்டது - அதுவும் ஒஸி வழக்கில். எனக்கா இனியில்லையென்ற மகிழ்ச்சி. போன இரண்டு நாட்களுக்குள் பொறுக்கின 'bon jour', 'au revoir' 'merci', 'madamme', 'monsieur' என்பவற்றை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாத ஆளுக்கு தெரிஞ்ச இங்கிலிபீசைக் கேட்டால் சொல்லவும் வேணுமா!! ஹொக்கிப் போட்டியொன்றுக்காக வந்திருந்த 4 பெண்கள். நல்லா அளவளாவி, போட்டிக்கு ஊக்கப்படுத்தி விடைபெற்றோம்.


கோபுரத்திலே மேலே ஏறினால் படமெடுக்க பொக்கற்றிலிருந்து கையை எடுக்க முடியவில்லை. குளிரோ குளிர். ஆனால் என்ன காட்சி.. நெப்போலியன் கோட்டை/அணையாவிளக்கு,
வெள்ளைத் தேவாலயம், லூயி மன்னனின் கோட்டை எல்லாம் தெரிந்தன.





[பரிசில் நடந்து கொண்டே இருக்கலாம் போல. cobble stone பாதைகளில் பழங்காலத்தைய வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசியபடி, அகலமான பாதைகளைச் செப்பனிட்டவர்களைப்பற்றிச் சிந்தித்தபடி நடந்தோம். வழமையாய்ப் பார்க்கும் நிறங்களிலான வானம்தான்.. பார்க்க ஆசையாய் இருந்தது. வீசும் காற்றிலே கிளையிலிருந்து தரைக்கு இடம் மாறும் இலைகள்; தரையிலேயே இடம் மாறித்திரியும் சருகுகள்(ஆனால் நாளைக்காலையில் தெருவில் அவை இரா). தொடர்ந்து நடக்கச் சொன்ன இருபுறமும் மரம் வளர்த்த தெருக்கள். நடப்பதற்காகவே இன்னொருமுறை போக வேண்டும்.முதல் முதலாய்ப் போகும் ஆர்வத்துடன்.]

அன்றைகே வெள்ளைத் தேவாலயமும் போகக் கிடைத்தது. நகரின் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது. அதன் பெயர்:La Basilique du Sacré Coeur.

வெள்ளைக் கட்டிடடமென்பதால் 'வெள்ளைத் தேவாலய'மாக்கி விட்டார்கள். வழமையாய் என்னை நிற்கச் செய்யும் stained glass windows. என்னதொரு கூரை.. 25 - 30 ஆள் உயரமிருக்கும். உள்ளுக்குள்ளே சலன/ஒளிப்படமெடுக்க அனுமதியில்லை. நிறைய ஓவியங்கள். கூரையில் பென்னாம்பெரியதொரு ஓவியம். பிறரால் உருக வைகப்படவென்றே மெழுகுதிரிகள்.

ஆலயத்தின் மாதிரி உருவைச் செய்து வைத்து "உங்கள் ஆலயத்தின் தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் உதவுங்கள்" என்று தமிழ் உட்பட 15 - 20 மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். எல்லாம் தாண்டி வந்ததும் ஒரு ஒரு வேண்டுதல்/பிரார்த்தனைப் புத்தகம். தமிழில் கூட இருந்தது - கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்லி, பிள்ளைக்கு நடக்கவிருக்கிற திருமணத்திற்கு ஆசி வேண்டி என்று பலதரப்பட்ட வேண்டல்கள், இறைஞ்சல்கள். மனதில் சொல்லக்கூடியதை 'வணக்கம் கடவுளே' என்று நானும் தாளையும் மையையும் வீணாக்கி வெளியேறிய பிறகுதான் ஞாபகம் வந்தது ஏனையோர் போட்டதுபோல முகவரி போடாமல் வந்தது. அடடா..யார் வணக்கம் சொன்னதென்று யேசு யோசித்திருப்பாரோ?

23 படகுகள் :

Anonymous January 05, 2007 11:11 pm  

//ப்ளொகர் படம் ஏற்றுக் கொள்ள மாட்டாராம்.//

இதுவும் சிட்னி வலைப்பதிவர் மாநாட்டிலை விவாதிக்கப்பட்டது. கானா பிரபா இதற்கு ஒரு நல்ல தீர்வைத் தந்தார். சாப்பாட்டில கண்ணாயிருந்ததால இப்படி நல்ல சில தகவல்களைத் தவறவிட்டுட்டீங்கள் போலயிருக்கு. கானா பிரபா தந்த யோசனை இதுதான்:
firefox பாவித்துப் பாருங்கோ. எத்தனை படமெண்டாலும் bloggerஇல ஏத்தலாம்.

கானா பிரபா January 05, 2007 11:37 pm  

மீண்டும் ஆணித்தரமாகச் சொல்லுகிறேன், நெருப்பு நரி கைகொடுக்கும் ;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) January 05, 2007 11:56 pm  

நன்றி சிறி அண்ணா & பிரபா.

வீட்டில வலை மேயிறது குறைவு.[அலுவலகமிருக்கப் பயமேன்! ;O) ]
நெருப்புநரிய இறக்கி இப்பத்தான் வேலை நடக்குது. அலுவலக கணனியில நரியார்தான் ஆஸ்தானமா இருக்கிறார். அதால பிரச்சனை இதுவரை வந்ததில்லை. பிரபா சொன்னதில கவனஞ் செலுத்தாம இருந்ததுக்கு சாப்பாட்டோட சேர்த்து அதுவும் காரணம்.

Anonymous January 06, 2007 12:15 am  

ஷீரேயா!
நீஙகள் வாகனத்தை நாடாது;பாதாள தொடர் வண்டியில் சென்றதே!!நேரத்தை மிச்சம் பிடிக்க நல்லவழி.
இங்கு பொதுக் கழிப்பிடங்கள் இலவசமாக்கிப் பலவருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் காப்பிச்சாலைகளில் கட்டாயம் கட்டணமே!!எதுவும் வாங்காதவர்களுக்கு.இந்த பலகணி(நல்ல தமிழ்ச்சொல்) 60 க்கு முற்பட்ட காலத்துக் கட்டிடங்களுக்கு இருந்தது; பின்பு பெட்டி அமைப்பாக மாறி 90 களில் புதிய கட்டிடங்கலும் வைக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆட்கள் இருந்து சிறு மேசைபோட்டு உணவருந்தக் கூடியவண்ணம்.
ஈபில் கோபுரம் பிரான்ஸ் வரும் உல்லாசிகளால் பார்க்க விருப்பப்படும் இடத்தில் முதலிடம் வகுப்பதால் கூட்டம் அதிகமே!!
குளிர் காலம் வந்துள்ளீர்கள்...அதைத் தவிர்க்க முடியாதே!!!ஆனால் மேலே நின்று தெளிவான நேரம் பார்ப்பது கொள்ளை அழகே!!
வைற் சேச்; அணையா விளக்கு நம்மவர்கள் இட்ட காரணப் பெயர்கள்.
நிச்சயமாக நீங்கள் இங்குள்ள தமிழ் நண்பர்கள்;உறவினர்களுடன் தான் சுற்றியுள்ளீர்கள். அவர்கள் இந்த வட்டத்துக்குள் தான் பார்க்குமிடங்களை அமைப்பார்கள்.
வெள்ளைத் தேவாலயம் ஒரு காலத்தில் தமிழர்களை ஒன்று சேர்க்குமிடம்; யாரையும் ஞாயிறில் இங்கே காணலாம்.
லூவர் அருங்காட்சியகம்; நோத்ர டாம் து பாரிஸ் கட்டாயம் பார்த்திருக்கலாம்.
அத்துடன் லிட்டில் இந்தியா- ஈழம் (La chapalle) பார்க்கவில்லையா??
யோகன் பாரிஸ்

`மழை` ஷ்ரேயா(Shreya) January 06, 2007 12:54 am  

கெட்டிக்காரர் நீங்கள் யோகன். இம்முறைப்பயணம் உல்லாசத்திற்காகவென்றாலும் அதிக நேரம் உறவினர்களோடேதான் செலவழித்தோம். விடுமுறையும் உறவினரும் எண்ணெயும் நீரும் போல என்று இப்பத்தான் கற்றுள்ளேன் :O)
நாட்களும் போதவில்லை. :O(

மெட்ரோவிற்தான் திரிந்தோம். சான் மிசெல் (நொட்ர டாம்) பகலில் போகச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அதன் stained glass யன்னல்களைப் பார்ப்பது ஒரு கனவு.

லா ஷப்பெல் பார்த்த ஞாபகமில்லை. அடுத்தமுறை வந்தால் Normandy, Brittany, Champagne முதலிய வேறு சில இடங்கள் (very-out-of-Paris) போகிற எண்ணமுண்டு.

Carrefour ஐ 'கபூர்' என்று இந்தியனின் பெரிய கடை என்று உச்சரிப்பைக் கொண்டு நினைத்து முதல் நாள் கடைக்குப் போக முன்னம் 'மயங்கினேன்'. :OD

அடுத்தமுறை வரும்போது கட்டாயம் பிரெஞ்சு கற்றுக் கொண்டு வருவதாய்த் தீர்மானம். இல்லாவிட்டால் முடியாது :O)

குமரன் (Kumaran) January 06, 2007 5:00 am  

உங்க பயண கதையை நல்லா எழுதுகிறீர்கள் ஷ்ரேயா. போன பதிவிலிருந்து படித்துக் கொண்டு வருகிறேன்.

குமரன் (Kumaran) January 06, 2007 5:01 am  

தரிப்பு என்றால் என்ன பொருள்?

`மழை` ஷ்ரேயா(Shreya) January 06, 2007 10:38 am  

வாங்க குமரன்.

தரிப்பு என்றால் நிறுத்தம். 'தரிப்பு/தரித்தல்' என்பதற்கு நிற்பது, உடுத்துவது/அணிவது என்று இரண்டு பொருள் (இப்போதைக்கு எனக்குள்ள ஞாபகத்தில்) வரும். மேலும் வேறு பொருள் இருப்பின் நண்பர்கள் சொல்லவும்

1. நிற்றல் - வண்டி தரித்து நின்றது. (நிறுத்துமிடம் = தரிப்பிடம்)
2. உடுத்தல்/அணிதல் - அவன் புத்தாடை தரித்தான்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) January 06, 2007 2:51 pm  

நல்ல இடுகை. நிறைய எண்ணங்களைத் தூண்டிவிட்டு எழுதச் சொல்லுது. இப்போதைக்குக் கொஞ்சம்..

1. எனக்கும் இந்த cobble stone பாதைகள் பிடிக்கும். இதுக்காகவே, இங்க எங்கட ஊரில இருக்கிற சில சாலைகளில நடைப்பயணம் போறது.

2. பாரிஸில மட்டுமில்ல இன்னுஞ்சில நகரங்களில நடந்து திரிய ஆசை. சன்பிரான்சிஸ்கோவில நடந்து திரியோணும் எண்டிருந்த ஆசை மட்டுந்தான் தீர்ந்திருக்கு.

3. பாரிஸில நடந்து திரிஞ்ச ஆளெண்டபடியா, ரெண்டு படம் சொல்லுறம். நேரங்கிடைக்கேக்க பாருங்க. நான் சொல்லுற ஓடர்ல பாருங்க. அது மிக மிக *** முக்கியம்*** முதலாவது படம் எடுத்து ஏழு வருசம் கழிச்சு இரண்டாவது படம் எடுத்திருக்கீனம். கதைப்படியும் ஏழு வருசந்தான். படத்தில நடிக்கிறவைதான் வசனமும் எழுதினவை என்பது இன்னமும் சுவாரசியமான விசயம். சரிசரி படத்தின்ர பெயரைச் சொல்லிர்ரன்.

1. before sunrise
2.before sunset

-மதி

கலை January 06, 2007 7:40 pm  

தரிப்பு= தங்குமிடம் (நீங்கள் சொன்ன நிறுத்தம், resting place), பொறுமை (tolerating), நினைவிற்கொள்ளுதல் (retaining in memeory), நிச்சயம் (certainty), கையிருப்பு (cash on hand).

இது எல்லாம் நானாக சொல்லவில்லை. இங்கு பார்த்ததும் அகராதியைப் புரட்டினேன். எல்லாம் தமிழ் அகராதி துணை. :)))

கலை January 06, 2007 7:42 pm  

அட, சொல்லாமல் விட்டிட்டன். உங்கட பயண அனுபவங்களை இரசிக்கும்படியா எழுதுறியள். தொடருங்கோ.

கார்திக்வேலு January 06, 2007 9:49 pm  

//ஒரு குட்ட்ட்டி பலகணி இருப்பதுதான். ஆட்கள் நிற்கமுடியாது.. ஆனால் பூந்தொட்டிகள் உட்காரலாம். //

i think these are referred to as "French Balconies"

//'வணக்கம் கடவுளே' //
:-)

`மழை` ஷ்ரேயா(Shreya) January 06, 2007 10:57 pm  

படம் பார்க்கச் சொன்னதுக்கு நன்றி மதி. கட்டாயம் எடுத்துப் பார்க்கிறேன். பரிஸ் தவிர வேறிடங்களுக்கு போயிருப்பீர்களென்று நினைக்கிறென்.. உங்களுக்கென்ன! பிரெஞ்ச் தண்ணி இல்லையில்ல ஷம்பெய்ன் பட்ட பாடா இருக்கும். ;O) கலக்கியிருப்பீங்க! இப்பத்தான் தொடங்கியிருக்கிறன் என்ட பிரெஞ்சுப் பாடத்தை!

`மழை` ஷ்ரேயா(Shreya) January 06, 2007 11:01 pm  

தரிப்புக்குப் பொருள் சொன்னதற்கு நன்றி கலை. புதியவை நானும் அறிந்து கொண்டேன். குமரன் வந்து பார்ப்பார் என்டு நினைக்கிறன்.

கார்த்திக் - என்ன செய்வது! பேனா & தாள் கண்டால் கை சும்மாயிருப்பதில்லை :O))

மலைநாடான் January 06, 2007 11:19 pm  

//வழமையாய் என்னை நிற்கச் செய்யும் stained glass windows//

ஷ்ரேயா!

நீங்களும் இந்த ரசனை உடையவரா?

இவ்வகைச் சாளரங்களை இத்தாலியில் உள்ள தேவாலயங்களிலும் அதிகம் காணலாம். மிக அற்புதமான வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும்.

உங்கள் பயணத்தொடர் மிக நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.தொடருங்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) January 06, 2007 11:36 pm  

ஆம் மலைநாடரே.. இவற்றிற்காகவே தேவாலயங்கள் செல்லப் பிடிக்கும். எப்படிச் செய்கிறார்களென்று பார்க்கவும் ஆசை.

குமரன் (Kumaran) January 07, 2007 12:31 am  

ஷ்ரேயா. திரும்ப வந்து பார்த்தனென். சொல் ஒரு சொல் வலைப்பூவுல அடுத்த சொல்லா 'தரிப்பை' சொல்லலாமெண்டு இருக்கேன்.

(ஈழத்தமிழில் எழுத முயன்றுள்ளேன். தவறென்றால் திருத்துங்கள்)

மலைநாடான் January 07, 2007 12:39 am  

//எப்படிச் செய்கிறார்களென்று பார்க்கவும் ஆசை.//

அதற்கு நீங்கள் வெனிஸ் போகவேண்டும். நானும் இன்னும் பார்க்கவில்லை. ஒவ்வொரு கோடைவிடுமுறையிலும் போக நினைத்துத் தவறிப் போகிறது. இம்முறையாவது முடிகிறதா பார்ப்போம். பாரத்தபின் வந்து, அனுபவத்தைச் சொல்கின்றேன்.:)

`மழை` ஷ்ரேயா(Shreya) January 07, 2007 9:41 am  

//பாரத்தபின் வந்து, அனுபவத்தைச் சொல்கின்றேன//
கட்டாயம் சொல்லுங்கோ

`மழை` ஷ்ரேயா(Shreya) January 07, 2007 9:43 am  

குமரன் - இருக்கிறன்/இருக்கன் என்று முடித்தால் உங்கள் ஈழ உச்சரிப்புச் சரி. :O)

FAIRY January 07, 2007 3:45 pm  

ரொம்ப நாள் டைம் இல்லை – sorry. அழகான இடங்கள் அழகா வர்ணித்திருக்கறீங்க.

ஒரு பொடிச்சி January 07, 2007 9:04 pm  

//அழகான இடங்கள் அழகா வர்ணித்திருக்கறீங்க.//
repeatu!

Anonymous December 12, 2009 7:43 am  

now I stay tuned..

பெட்டகம்