இன்னார் இந்தச் சாதியென்று சொல்லிஅவருடன் பழகுவதை ஊக்கப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ எங்கள் வீட்டில் நடந்ததில்லை. சாதி பற்றிய பேச்சு எழுந்ததும் ஓரிரண்டு தருணங்களில் எனது கேள்விகளால்தான்.
சாதியும் அது பற்றிய விளக்கமும் இல்லாத ஒரு வயதிலேயே எனது முதல் அனுபவம். ஞாபகமிருக்கிறது. வீட்டிலிருந்து நாங்கள் தேநீர் குடிப்போம். மாவிடிக்க வரும் இரண்டு ஆச்சிமார். செல்லாச்சி, தெய்வானை - இவர்களை "ஆச்சி" என்று விளித்தேன். (அவர்கள் போன பிறகு எனக்கு "அவைய ஆச்சி என்டெல்லாம் சொல்றேல. பேர் சொல்லலாம்" என்று அறிவுறுத்தினார்கள். அவ்வளவு வயசான ஆட்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாமெண்டா நான் ஏன் (15 வயசு மூத்த) மச்சாளை "தமயந்தி" என்டு பேர் சொல்லி கூப்பிடேலாது என்று கேட்டதற்குப் பரிசாய் முதுகில் மேள வாசிப்பும், "அது அப்பிடித்தான். சொன்னாக் கேட்கோணும்"மும் கிடைத்தன)
அவர்களின் சுருங்கின தோல், தொட்டுப் பார்க்கவே ஆசையாயிருக்கும். மரியாதையா ஆச்சி எண்டே சொல்லேலாதாம், இதில தொட்டா உதைதான். சேலையைக் குறுக்கில கட்டியிருப்பார்கள். கிளாசில்தான் இவர்களுக்கு பானங்கள் கொடுக்கப்படும். அதை ஒருதரும் தொடவும் கூடாது. அந்தக் கிளாசை நாங்கள் பாவிப்பதென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. இதெல்லாம் தெரியாமல் நான் குதர்க்கமாய்க் கேள்வி கேட்டால் அம்மாவுக்குத்தான் பேச்சு விழும், "ஒண்டுஞ் சொல்லிக்குடுக்கிறேல்லையோ" என்று. அம்மா பாவம். ஏன் தனிக் கிளாசென்று கேட்டாலும் பீற்றிக் கொள்வார்கள் - "நாங்கள் கிளாசில குடுக்கிறம், எத்தினபேர் சிரட்டையில குடுக்கிறவை தெரியுமோ!" ('பூனைக்குட்டி சிரட்டையில தண்ணிய நக்கி நக்கிக் குடிக்கிற மாதிரிக் குடிப்பார்களா என்று சந்தேகம் வந்தாலும், கேட்டால் விழக்கூடிய அடியின் கனம் நாக்கை அடக்கும்) நினைத்துப் பார்க்கிறேன், இவர்களெல்லாம் இடம்பெயர்வின் போது சாதி பார்த்தா ஒன்றாய் வீடுகளில் தங்கியிருப்பார்கள்? சாப்பிட்டிருப்பார்கள்? இவர்களின் சாதியப் பார்வை உடைந்து சிதறியிராதா?
ஊரிலே இருக்கிறவரை விடுவோம். வெளிநாட்டுக்கு வந்துவிட்டாய். பிற சமூகங்களோடு இணைந்து கற்கிறாய்/செயல்படுகிறாய். ஆனாலும் அதே சாதிக் கண்ணாடி கொண்டுதானே உன் சமூகத்தைப் பார்க்கிறாய்.
ஒரு அன்ரி. பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமாம். ஆரேனும் நல்ல பெடியங்கள் இருந்தாச் சொல்லுங்கோ என்று என்னிடமும் என் தோழியிடமும் சொன்னா. உடனேயே ஞாபகம் வந்த ஒரு நண்பனைச் சொன்னோம். யாரென்று அவவுக்கும் தெரிந்திருந்தது.
"எனக்கும் தெரியும் அவைய, நல்ல பெடியன் தான்.. (மெல்லிய குரலில்) ஆனா எங்கட ஆட்களில்லை. அவை வேற".
என்ன சொல்கிறாவென்று தெளிவாயத் தெரிந்தாலும், வம்புக்கு "இல்லை அன்ரி. அவங்களும் சிலோன் தான்" என்றாள் என் தோழி. எனக்குத் தாளாத சிரிப்பு. பாவம் அன்ரிக்கு விளங்கவில்லை.
"இல்லை. அவை சிலோன்தான். ஆனா வேறை". மென்று விழுங்குகிறார். நாங்களும் விடுவதாயில்லை.
"அப்ப என்ன சொல்றீங்க? அவையும் ஹின்டு. நல்ல boy. இதுக்கு மிஞ்சி என்ன அன்ரி?".
"இல்லையடா, உங்களுக்குத் தெரியாது, சாதி வேற"
"ஆ! ஷ்ரேயா..சா..ஆ..ஆ..தி வேறயாம்".. (ஆரம்பித்தோம்.) "நீங்க சாதி பாக்கிறனீங்களெண்டு தெரியாது அன்ரி எங்களுக்கு. அப்ப சிட்னியில நீங்க பழகிற எல்லாற்ற சாதியும் தெரியுமோ? பாத்தோ பழகிறனீங்கள்? ஊர் மாதிரி இங்கையும் புறிம்பாச் சாமான் வச்சிருக்கிறீங்களோ?" இன்னும் நிறைய அவவைக் கதைக்க விடாமல் கேட்டோம்.
எங்களிருவரின் கேள்விகளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லைப் போல. எதிர்பார்த்திருக்கவும் மாட்டா. "இல்ல, அப்பிடியெல்லாம் இல்ல" என்று தடுமாறிக் கொண்டிருந்தா. நேரமாகுதெண்டு அவவின் கணவர் வந்து கூப்பிட இதுதான் சான்ஸ் என்டு "வாறன் பிள்ளையள்" என்டிட்ட்டுப் போய்விட்டார். நாங்கள் சொல்லிச் சிரித்த போது, நாங்கள் அப்பிடி ஒரேயடியாப் போட்டுக் கேள்விகள் கேட்டிருக்கத் தேவையில்லையெண்டு தோழியின் அம்மா சொன்னா. "சாதி அன்ரி" கொஞ்சமாவது யோசித்திருப்பாவா என்பதே எங்களிருவருக்கும் உள்ள கேள்வி.
சாதி பார்க்கிற அன்ரி மாதிரியான ஆட்களைக் கண்டால், அவர்களது இந்தப் பழக்கம் வெளிப்பட்டால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதுவும் சில வேளைகளிலே அவர்கள் பற்றிய விம்பம் சரிகையில். எவ்வளவுதான் படித்த பண்பாளராய் இருந்தாலும் சாதி பார்க்கத் தூண்டுவது எது? ஏன் பார்க்க வேண்டும்? மனிதர்கள் தாம் பிறப்பது எந்தப் பெற்றாருக்கென்று தீர்மானிக்க முடிவதில்லையே? எல்லாரும் சமந்தானே? பொருள்வசதி தவிரப்பார்த்தால் எல்லாரும் ஆசைகளும் மகிழ்ச்சியும் கவலையும் பெருமையும் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கனவுகளும் ஞாபகங்களும் நிறைந்தவர்கள் தானே? இதிலே எங்கே இவர் உயர்வென்றும் அவர் தாழ்வென்றும் சொல்லப்போயிற்று?
சில வருடங்களுக்கு முன்னாலே சாதி குறித்த ஒரு சூடான விவாதத்தின் போது அம்மா சொன்னா: "சாதி பாக்கிறது பிழையானது/தேவையில்லாததெண்டு தெரியுது. ஆனாலும் சின்னனில இருந்தே வந்த பழக்கம். கொஞ்சம் தயக்கம் இருக்கு. ஆனா அதுவும் இருக்கக் கூடாதெண்டு தெரியும். எப்பவுமே புதுசு புதுசா சரியானதுகளை உணர்ந்து கொண்டுதான் இருக்கிறம் என்ன!".
கடைசி வசனம் சத்தியமானது. நானும் புதிது புதிதாய்க் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்.
சந்தேகம்: நாவலர் இந்தியாவிலிருந்தே இந்தச் சாதி வழக்கத்தைக் கொண்டு வந்தாரெனவும் அதன் பின்னரே இலங்கையில் மிக அழுத்தமாக வேரூன்றியதென்றும் என தோழியின் தந்தை சொல்வார். எந்தளவுக்கு இது உண்மை?
அவையள் எங்கண்ட ஆக்கள் இல்லை!
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
04 April 2006
13 படகுகள் :
நாவலர இதுக்குள்ள இழுத்து ஏதாவது சூடாத் தொடங்கலாமெண்டு நினைக்கிறியளோ?
எனக்கென்னெண்டா நாவலர் காவிவந்து வளத்து விடுற அளவுக்கு இதுவொண்டும் சின்ன விசயமாத் தெரியேல.
ஏற்கனவே நாவலரின்ர சாதித்தடிப்புப் பற்றி ஈழநாதனின்ர தளத்தில கொஞ்சம் கதைச்ச ஞாபகம்.
நாவலர் காவி வரலை.. அது ஏற்கனவே அங்கை இருந்தது. அவர் அதை வலுவாக்க முயற்சித்தவர். அது தளரக் கூடாது எண்டதில மும்மரமாப் பணியாற்றினவர்.
இன்னமும் யாழ்ப்பாணத்தில் கோயில்களில் சாதி அடிப்படையில் திரவிழாக்கள் நடக்கின்றன.
ஷ்ரேயா,
//இங்கையும் புறிம்பாச் சாமான் வச்சிருக்கிறீங்களோ?//
இது என்ன? விளக்கம் ப்ளீஸ்
நீங்க சொல்லுற மாதிரி, வெளிநாட்டுக்கு வந்து எல்லா மக்களோடையும் இணைந்தும் கலந்தும் பழகியும்கூட எங்கட ஆக்களுக்கு இன்னும் இந்த சாதிப் பயித்தியம் இருக்கு என்பதும், அவர்கள் கதைப்பதைப் பார்க்கும் போது எரிச்சலும்தான் வருகிறது. சிலருக்கு எடுத்துச் சொல்லலாம், சிலருக்கு சொல்லவும் ஏலாமல் வெறும் எரிச்சலோட போகவேண்டி வருகிறது..... ம்ம்ம்ம்ம்.
வசந்தன் - நானொண்டும் சூடாயோ குளிராயோ தொடங்கப்பாக்கேல்ல. அவர் சொன்ன ஞாபகம் வந்துது. அதுதான் கேட்டனான். அதுசரி, ஈழநாதன் எங்க?
சயந்தன்: தெளிவாக்கினதுக்கு நன்றி. சாதி அடிப்படையில திருதிருவிழா நடக்குதென்று சொல்றீங்கள், ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஆக்களின்ர பூசையா? அல்லது வேற ஏற்பாடு ஏதாவதா? விளக்கமாச் சொல்லுங்கோ.
துளசி - புறிம்பாக (பிறிம்பு?) வைத்திருத்தல் என்றால் வேறுபடுத்தி வைத்திருத்தல். சில வீடுகள்லே nonvegக்கும் vegக்கும் பிறிது பிறிதான பாத்திரங்கள் பாவிப்பார்கள் இல்லையா, அதுமாதிரி இவவும் இந்த ஆட்களுக்கென்று (ஊரிலே மாதிரி) தனியா பாத்திரம் வைத்திருக்கிறாவா என்று கேட்டோம். :O)
கலை - அந்த அன்ரியிடம் கேள்வி கேட்ட நாளைப் போல சந்தோசமான தருணமொன்று இன்னொருக்கா வராதா என்று ஆசைப்படுகிறேன். நீங்களும் இப்படியானவர்களிடம் கேட்கலாமே?
இந்த திருவிழா இந்த சாதிக்காரருக்கு.. இந்த திருவிழா இவைக்கு.. அதிலயும் யார் பெரிசா செய்யிறதெண்ட போட்டிகள்.. இப்படி.. இருக்கு..
அது சரி.. ஒஸ்ரேலியா எப்படி இருக்கிறது..?
ஒஸ்ரெலியாக்கென்ன.. நல்லாத்தானிருக்கு.
நீர் எங்க இருக்கிறீர் இப்ப? "மேடையிலே" சந்திச்ச நேரம் சொன்ன விசயமாயா வெளிக்கிட்டிருக்கிறீர்? அப்பிடியெண்டா வாழ்த்துக்கள். :O)
எத்தினபேர் சிரட்டையில குடுக்கிறவை தெரியுமோ!
நீங்க சொல்லுற மாதிரி, வெளிநாட்டுக்கு வந்து எல்லா மக்களோடையும் இணைந்தும் கலந்தும் பழகியும்கூட எங்கட ஆக்களுக்கு இன்னும் இந்த சாதிப் பயித்தியம் இருக்கு
வருந்தவைக்கும் உண்மை சந்திரவதனா. எரிச்சல்தான் வருகிறது இந்த ஆட்களைப் பார்த்தால்.
நல்ல பதிவு.நானும் இதை எழுதவேணும் என்று நினைத்ததுண்டு யாரையும் புண்படுத்து விடுவனோ என்று எழுதவில்லை.நீங்கள் தொடக்கியிருக்கிறீங்கள் நானும் எழுதப்போறன்.அந்த மாவிடிக்க வாற ஆச்சின்ர சுருங்கிப் போன தோலை நான் தொட்டுப் பார்த்திருக்கிறன்.
சாதி இந்தியாவில் இருந்து வந்தது என நீங்கள் சொல்வது சரி தான்...விளக்கமாக எழுத ஆசை..இலங்கை தமிழில் எழுதவில்லை என்றால் கோபித்துகொள்வீரா என்ன ?
-:)
நீங்க ரெண்டு பேரும் போட்ட பின்னூட்டத்தை இப்பத்தான் பாக்கிறன்.
சினேகிதி, அந்த அன்ரிட மனதை வருந்தப் பண்ணியிருப்பமோ என்டு கூட நான் யோசிக்கேல.. :O\
மாவிடிக்க வாற ஆச்சீ்ன்ட தோல் நானும் பிறகு தொட்டுப் பாத்திருக்கிறன்.
ரவி - கட்டாயம் எழுதுங்க.
Post a Comment