தூது

கீழ இருக்கிறது போலத்தான் எண்ணமோடினது, சில சமீபத்திய புகைப்படங்களைப் பாக்கக் கிடைச்சதில. வழமையா எழுதுற மாதிரி எழுத வரேல்ல. அப்பிடி இருந்திருந்தா எவ்வளவோ நல்லாருந்திருக்கும் என்டு எனக்கே தெரியுது.

(disclaimer: பின்குறிப்பை வாசிச்சுட்டு மேற்கொண்டு வாசிக்கிறதா என்ட முடிவுக்கு வரவும். )

-------------------

எனக்குள் நிறைவது தான்
அவர்களுக்குள்ளும்

எவர் கடந்து போகையிலும்
ஏற்படும் அந்தச் சிறு வெளியை
தடவிச் சென்று நிரப்பும் நாசியின் நட்பு.

இன்று என்னுட் புகுந்து வெளிவருங் காற்றே,
நாளையோ மறுநாளோ
எப்போதேனும் அவர் நாசி சேர்ந்தால்
நீ என்னுள்ளிருக்கையில்
அவர்களை நினைத்துக் கொள்வதைச் சொல்.

இத்தனை நாட்களிலும் - நான்
அவர்களைக் காணாத போதுகளிலும்
அவர்கள் என்னை எண்ணாத போதுகளிலும்
எமக்குள் நிறைந்திருந்தாய் - காற்றே
போய்ச் சொல்,
நினைவுகள் சுருங்கிய போதிலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று.

என் கண்களுக்குத் தெரியும்,
நான் பார்த்தவை - இன்று
இக்கரையில் நானும்
அக்கரைக்கு அப்பாலுமாய் அவர்களும் நிற்கையில்
தூரங் கடந்த சகபயணி
காட்டிப்போன காட்சிகளில்
முன்னை நாட்களில் - பிரிவென்பதைச்
சந்திக்காதவரை நான் கண்டவை
இன்றைய பொழுதில் வேற்றுருவாய்

அப்படியேதானிருப்பர் என்றவென் எண்ணம்
பொடியாகி உன்னில் கலக்கக் கண்டாய்
ஆண்டுகளின் பசித்தீவிரத்தில்
உண்ணப்பட்டுப் போயிருக்கின்ற
உறவுகளிடம் - காற்றே
போய்ச்சொல்
உடல்கள் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

உன்னைக் கிழித்தபடி பறந்த - அந்த
உந்துருளிச் சவாரிகளின் சாரதியை
பயணி மீண்டும் காணும் வரை
சாரதிக்குப் பயணியை ஞாபகமில்லாப்
பொழுதொன்றில் அவருக்கும்,
உன்னூடாகக் கைகள் வீசிக் - கிளையிருந்து
குதித்து,
கைகளும் வால்களும் ஆட - கால்களுதறி
ஆளையாள் கண்டுகொள்ளும் வஞ்சமில்லா
வாஞ்சை மட்டும் நிரம்பியதாய்
ஓடிக் களைத்த போதுகளில்,
அவதி அவதியாய்ப் பேரளவுகளில்
உன்னை விழுங்கிய - என்
சிறுபருவத்து மாந்தரும் விலங்குகளும்,
அடிவாங்கிக் கற்ற பின்னும்
புகலிடந் தருமந்தத் தாவரங்களும்
எங்கெங்கிருப்பினும் - காற்றே
போய்ச்சொல்
தோல் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

அவர்களைத் தொட்டு - என்னிடம்
மீள்வாயெனின், எனக்கும் வந்து
சத்தமாய்ச் சொல்லிப் போ காற்றே
காலம் போல நேசிப்பும்
ஒருபோதும் சுருங்காதென்று.

-------------------

குறிப்பு: அறுவையாயிருக்கு(ம்! கட்டாயமா) . பாவம் நீங்க.

11 படகுகள் :

துளசி கோபால் June 02, 2006 11:37 am  

ஓஓஓஓஓஓஓஓ கவிதையா?

அப்பச் சரி:-)))

ஒரு பொடிச்சி June 02, 2006 11:47 am  

நண்பர்கள் பிரிவுத் தூது..
//போய்ச் சொல்,
நினைவுகள் சுருங்கிய போதிலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று.//
நியம் நல்லா இருக்கு

கார்திக்வேலு June 02, 2006 1:37 pm  

திருப்தியாக அமைந்துள்ளது ஷ்ரேயா.

//ஆளையாள் கண்டுகொள்ளும் வஞ்சமில்லா
வாஞ்சை மட்டும் நிரம்பியதாய்//

//இன்று என்னுட் புகுந்து வெளிவருங் காற்றே,
நாளையோ மறுநாளோ
எப்போதேனும் அவர் நாசி சேர்ந்தால்///

There is a flow throughout the poem.
நீங்கள் இன்னும் கூடச் சிறப்பாக எழுத முடியுமென்றே தோன்றுகிறது.

ஒரு பொடிச்சி June 02, 2006 1:49 pm  

//நீங்கள் இன்னும் கூடச் சிறப்பாக எழுத முடியுமென்றே தோன்றுகிறது.//
true

`மழை` ஷ்ரேயா(Shreya) June 02, 2006 1:54 pm  

துளசி - நீங்கதான் சொல்றீங்க. :O)

`மழை` ஷ்ரேயா(Shreya) June 02, 2006 1:57 pm  

நன்றி பொடிச்சி, கார்திக்வேலு.

//நீங்கள் இன்னும் கூடச் சிறப்பாக எழுத முடியுமென்றே தோன்றுகிறது.// //true//

சோம்பல்தான் தடைக்காரணி. :O( முயற்சியைத் தொடர்கிறேன். ஊக்கத்துக்கு நன்றி.

கஸ்தூரிப்பெண் June 02, 2006 3:47 pm  

என்காற்று, உன்காற்று, தனிக்காற்று
எல்லா காற்றும் ஒரே நிறம்தான்.

ஆழமானவர் என்று அன்று சொன்னேன், இப்பொழுது புரிகிறதா?

`மழை` ஷ்ரேயா(Shreya) June 02, 2006 3:49 pm  

:O)

Anonymous June 04, 2006 6:21 pm  

நீங்கள் மறுமொழி மட்டுறுத்தல் செய்யாததற்கு ஏதாவது விசேட காரணம் உள்ளதா?

`மழை` ஷ்ரேயா(Shreya) June 05, 2006 10:00 am  

நன்றி கலை.

Annonymous - மட்டுறுத்தலைச் செயற்படுத்தாததற்குத் தனிப்பட்ட காரணம் இருக்கிறதுதான். எதற்குக் கேட்கிறீர்கள்?

Anonymous December 12, 2009 8:43 am  

huh... good post :))

பெட்டகம்