கூப்பிட்ட பொடிச்சிக்கு நன்றி.
மதி தனது ஆறுப்பதிவில் சொன்னது போல, இந்தப்பட்டியல் இந்தக்கணத்துக்குரியதுதான். நாளைக்குக் கேட்டால் கட்டாயம் சற்றேனும் மாறியிருக்கும். கீழிருப்பவை எந்தவித ஒழுங்கிலுமில்லை. முதலாவதாக இருப்பது முதலாவதாயோ கடைசியா இருப்பது கடைத் தேர்வாகவோ இல்லை. வேண்டுமானால் ஞாபகம் வந்த ஒழுங்கென்று வைத்துக் கொள்ளலாம்.
பிடித்தவற்றில் சில
1. மென்மையான தூறலோ பேரிரைச்சலோ - மழை.
2. மழைக்கு இதமாய் வாழ்த்து மடல் (நன்றாக ஆக்குகிறேனென்று சொல்லி அதை அசிங்கமாக்குவதைப் பற்றிப் பேசப்போவதில்லை :O\ ) செய்தல் அல்லது ஒரு புத்தகத்தை யன்னற்கட்டில்/யன்னலருகில் இருந்து வாசித்தல். ஏலவே வாசித்து முடித்த ஒன்றானால் எழுமாறாகப் பொறுக்கிய ஒரு பக்கத்தை வாசித்தல் - எனக்கு மட்டுமே என்று நினைத்திருந்த பழக்கம் இன்னொருவருக்குமுண்டு என்று இரண்டு நாட்களுக்கு முன் அறியக்கிடைத்தது. வியந்து கொண்டேன்.
3. பயணிப்பது. சைக்கிளுக்குத் தனீ இடம்
4. நண்பர்களுடன் வெட்டி அரட்டையாய் இல்லாமல் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து விதயங்கள் பேசுவது.
5. பெயர் தெரியாமல் ஆரம்பம் தவறவிட்டுப் பார்த்துப் பிடித்துப் போகிற அந்தப் பின்னிரவுப் படப்பெயரின் தேடல்
6. வீணை வாசிப்பு
பிடித்த இசை/இசையமைப்பாளர்
1. SBS வானிலை அறிக்கை காட்டுகையில் போடுகின்ற இசை - அநேகமாக. இதில் இந்த மாதம் குறிப்பாகப் பிடித்தது: மாலி. இத்துடன் ABC போடுகின்ற குறும்பட (என்னவென்று வகை பிரிக்கத் தெரியவில்லை) இசை
2. ஷ்யாமாண்ணா - விரைவில் உடனடிச் சூழல் தவிர இன்னும் நன்கு அறியப்படுவார் எனும் நம்பிக்கையுண்டு. எனது பதின்மப்பருவத்தில் நிகழ்ந்ததுக்கெல்லாத்துக்கும் ஒரு பின்னணி இசையாய். (என் பாட்டு இன்னும் ஞாபகமிருக்கிறது yay!!)
3. பாத்திய - சந்துஷ்
4. இளையராஜா/ஏஆர் ரகுமான்
5. என்னையறியாமல் அசைய வைக்கும், கரைக்கும் எதுவும்
6. யானி - இன்னமும் நீட்டுத் தலைமயிரின் வசீகரிப்புப் போகவில்லை என்று அம்மா சொல்லிக்கொள்ளக்கூடும்!! ;O)
எப்போதும் சிரிக்க வைப்பவர்கள்/உற்சாகப்படுத்துபவர்கள்/சும்மா பேசினாலேயே ஆசுவாசப்படுத்துபவர்கள்
1. கண்ணன்
2. சஷி அண்ணா
3. அம்மா
4. ஷாமினி
5. மிஸிஸ் ஜோண்
6. ஷகி
பாதிப்பவர்கள் / பார்வை சீரமைப்பவர்கள் (தொடர்ந்தும் நான் கற்றுக்கொண்டிருப்பதால் இறந்தகாலத்தில் போட யோசிக்கவில்லை)
1. அம்மா
2. பென்னா (இவரெழுதி, கொதியில் நான் கிழித்துப் போட்டு அம்மா ஒட்டி வைத்திருப்பதை அனுப்பச் சொல்ல வேண்டும்) :O)
3. ரஞ்சன் அண்ணா & சாந்தி அக்கா (என் பதின்ம வயதுப் பார்வைகளை - அவர்களறியாமலே - மாற்றியதில் இத்தம்பதியருக்கு முக்கிய பங்குண்டு)
4. நண்பர்கள் சிலர்
5. வலைப்பதிவர் ஓரிருவர்
6. ரீச்சர்
வாசித்தவற்றில் பிடித்தவை
1. மணல் வீடு, அக்னி நட்சத்திரம்
2. யாரெழுதினதென்றோ பெயரோ தெரியாமல் ஆனந்தவிகடனில் வந்து, மனிங் ப்ளேஸ் சம்சன் புத்தக நிலையத்தில் கட்டி வைத்திருந்த அந்தப் புத்தகம். அது உண்மைக்கதையென்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.
3. Kite Runner
4. The Alchemist
5. தமிழில் ஈழமுரசோ/உதயனோ ஏதோவொன்றில் வந்து, வாசித்த விலங்குப் பண்ணை
6. The Gate
....ஏதோ இரண்டு சொன்ன மாதிரி இருந்துது..அதற்கிடையில் ஆறா?
பிடித்த திரைப்படங்கள்
1. அஞ்சலி
2. ஹிமாலயா
3. ப்ளாக்
4. மறுபடியும்
5. பெயர் மறந்து போன எத்தனையோ ஆசிய/சுவீடிஷ்/அரபு மொழிப்படங்கள். குறிப்பாக, மூன்றாம் பரிசான சப்பாத்துக்காக ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு முதலாவதா வந்த சிறுவனின் ஏமாற்றம் பற்றினது..
6. பாட்டுகளுக்காக & பின்னணி இசைக்காகவே பிடித்த படங்கள்.
மறக்காத இடங்கள்
1. பாட்டிவீடு
2. பெரியம்மா வீட்டுப் பின் முற்றம்
3. கம்பகா
4. ரீச்சர்வீட்டுக் கொய்யாமரமும், மாமா மத்தியானம் படுக்கிற கொட்டிலும்
5. பள்ளிக்கூட விடுதி/கடல் தெரியும் வகுப்பறைகள்
6. மனம் குழம்பினபோது போய் சிலதடவைகள் உட்கார்ந்த அந்த மத்தியான வேளையின் சுடுபாறை
...........இதுவும் ஆரம்பித்ததுமே முடிந்துவிட்டதே!!
போக விரும்பும் நாடுகள்(இலங்கை தவிர்த்து):
1. இந்தியா
2. அயர்லாந்து (அந்த அக்சன்ற்றுக்காகவும், பச்சைப்பசேலுக்காகவும்)
3. கிரேக்கம்
4. கம்போடியா
5. திபெத்
6. நோர்வே (இந்த முறை ஒழுங்காப் பார்க்க)
திருத்த வேண்டிய (என்னைப்பொறுத்தவரை) கெட்ட பழக்கம்/மாற்ற வேண்டியது
1. செயல்கள் தள்ளிப்ப்போடுவது
2. பல நேரங்களில் நேரம் தவறுவது
3. ஓம் ஓமென்று சொல்லிச் சொல்லியே ஒன்றைச் செய்யாதிருப்பது
4. குறிப்பறியாமை
5. எடுத்ததை முடிக்காமல் இன்னொன்றுக்குத் தாவுவது
6. அலட்டுவது
செய்ய வேண்டுமென நினைத்திருப்பவை
1. இன்னும் படமெடுக்க
2. நீச்சல் கற்றுக் கொள்ள
3. மலையேற
4. இன்னும் நிறைய வாசிக்க
5. இதுவரைக்கும் இல்லாமலிருக்கிற ஒரு "பெரியாள் உரையாடல்" (அல்லது ஒரு கடிதமேனும்) - என் அண்ணாவுடன்
6. லொஜிக் உதைத்ததில் நின்று போன "படைப்பை"த் தொடர
தொடருங்கள் என்று அழைக்க விரும்புவது:
மழையின் ஆறு
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
19 June 2006
24 படகுகள் :
//குறிப்பாக, மூன்றாம் பரிசான சப்பாத்துக்காக ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு முதலாவதா வந்த சிறுவனின் ஏமாற்றம் பற்றினது..
//
The Children of Heaven.
மஜிட் மஜிடியின் படம். இவரின் பிற படங்கள்
Baran
The Color of Paradise.
Boycott.
அனைத்து படங்களும் என்னைக் கவர்ந்தவை.
தர்சன்.
நன்றி தர்சன். பார்க்க முயற்சிக்கிறேன்.
/3. பயணிப்பது. சைக்கிளுக்குத் தனீ இடம்
....
.....
6. வீணை வாசிப்பு/
இவை எனக்கும் பிடிக்கும். சைக்கிளில் பயணிப்பதும் வீணை வாசிப்பதைக் கேட்கவும்...
மற்றும்படி நீங்கள் குறிப்பிட்ட 'மாற்றவேண்டிய கெட்டபழக்கங்கள்' எனக்கும் முழுமையாய் சொந்தமானது என்பதில் நானும் 'பெருமிதப்படுகின்றேன்'...வேறு எதற்கு?...என்னை மாதிரியே இன்னொருவர் இருக்கின்றார் என்றால் சந்தோசமாய் இருக்காதா என்ன :-)?
.....
நீங்கள் மழையோடு கரைவதுபோல எனக்கும் இதமாயிருக்கும் ஒரு பொழுதில் பிடித்தவற்றை எழுத முயல்கின்றேன். அழைப்புக்கு நன்றி ஷ்ரேயா.
Except "Boycott" i've seen the rest .
Dont worry SBS will most certainly repeat telecast them sometime soon :-).
(Iranian lang ..sounds ..so sweet )
//5. பெயர் தெரியாமல் ஆரம்பம் தவறவிட்டுப் பார்த்துப் பிடித்துப் போகிற அந்தப் பின்னிரவுப் படப்பெயரின் தேடல்//
check SBS WS they have a brief synposis of each movie they screen and have an option to SMS alert you when screening ur selected movie .
I've posted on Baran ..when it was screened here (long live SBS !!!) last year .
http://blog.360.yahoo.com/blog-LrKemvg6erTXy65kEwi89Z6r36CuCw--?cq=1&l=66&u=70&mx=71&lmt=5&p=12
Majid is few directors i've seen using slow motion so effectively .
Most actors in his movies are amatuers.
அழைப்புக்கு நன்றி ஷ்ரேயா,எழுத முயல்கிறேன் , யாரும் தவறியும் கூப்பிட்டுவிடக் கூடாதென நினைத்திருந்தேன்(மெய்யாலுமே !!!),இன்னொரு வகையில் பார்த்தால் கையில் கம்பெடுத்துக் கொண்டு யாரேனும் நின்றால்தான் எனக்கும் இது மாதிரி எழுதவரும்.
I am a perennial procrastinator :-)
//திருத்த வேண்டிய (என்னைப்பொறுத்தவரை) கெட்ட பழக்கம்/மாற்ற வேண்டியது
1. செயல்கள் தள்ளிப்ப்போடுவது
2. பல நேரங்களில் நேரம் தவறுவது
3. ஓம் ஓமென்று சொல்லிச் சொல்லியே ஒன்றைச் செய்யாதிருப்பது
4. குறிப்பறியாமை
5. எடுத்ததை முடிக்காமல் இன்னொன்றுக்குத் தாவுவது
6. அலட்டுவது
//
:-)
வேற என்ன சொல்வது.. அனைத்துமே எனக்கும் பொருந்தும்..
:-(
ஷ்ரேயா,
கொய்யா மரமுன்னதும் இங்கே......
பார்க்க விரும்பும் நாட்டில் நம்ம பேரைக் காணொம். ஆனா ஆறுலே ஒண்ணா இருக்கு!
இன்னும் ஒருத்தரும் இந்த விளையாட்டுக்குக்கூப்புட்டு இருக்கார்.
ரெண்டுமூணு நாளுலே போடறேன்ப்பா.
என்னத்தச் சொல்ல இருக்குன்னுற நினைப்புதான்.
டிசே - வீணை இசை பிடிக்காதவர் மிகவும் குறைவு, இல்லையா? இந்த ஊர்களில் கியர் போட்டு ஓடும் சைக்கிளில் ஊர்ச்சைக்கிளின் சுகம் தெரிவதில்லை(இந்த, ஒப்பிட்டுப் பார்த்தலும் மாற்ற வேண்டிய பழக்கங்கள் பட்டியலில் வந்திருக்க வேண்டியதோ? :O\ )
கார்திக் - படம் பார்க்கும் போது textலோ அல்லது மறுநாள் காலையிலோ அல்லாமல் நாலைந்து வாரங்கள் கழித்துப் பெயர் என்ன என்று கேள்வி முளைக்கும் போதுதான் தேடத் தொடங்குவேன். சில நேரங்களில் SBS இன் வலைப்பக்கமும் போய்ப் பார்ப்பதுண்டு.
என்னது கம்பெடுத்து நிற்க வேண்டுமா? பக்கத்து வீட்டுக்காரனிடம் சொல்லி ஒரு யூகலிப்டஸ் சிறுகிளை முறித்தெடுங்கள். :O)
யாழிசைச்செல்வன் - பரவாயில்லை, கூட்டுக்கு இன்னும் ஆட்கள் இருக்கிறார்கள். மாற்ற வேண்டிய பழக்கங்கள் உடையவர் சங்கமொன்று ஆரம்பித்து விடலாம். நாளைக்குத் தொடங்கலாம் / மாற்ற ஆரம்பித்து விடலாம் என்று தள்ளிப் போடாவிட்டால் சரிதான். :O)
துளசி, எனது தலயாத்திரைப் பட்டியல் மிகவும் நீளமானது. பதிவின் தொடக்கத்திலே சொன்னேனில்லையா .. ஞாபகம் வந்த ஒழுங்கென்று எடுத்துக் கொள்ளலாம். எனக்கு அடிக்கடி சொல்லப்படுவது இங்கேயும் பொருந்தும் போல: அங்க எங்கேயோ இருக்கிறதெல்லாம் கண்ணில படும். கண்ணுக்கு முன்னால கைக்கெட்டுற தூரத்துல இருக்கிறது படவே படாது!! :O\
இன்னொரு பதிவா எந்தெந்த நாடு ஏன் போகப் பிடிக்கும் என்று போடலாம்.. சரியா. :O)
//என்னத்தச் சொல்ல இருக்குன்னுற நினைப்புதான்.//
என்ன்ன்னது? என்னத்தை சொல்றதா? "என்னதை சொல்ல..என்னத்தை விட"னு எழுத நினைச்சு விட்டுப் போயிருக்கும்..அப்படித்தானே? :O)
ஷ்ரேயா, அன்பிற்கும் அழைப்பிற்கும் நன்றி. முன்னர் வந்த 'நான்கு' அழைப்பிற்கே இன்னும் எழுதவில்லை :-) அதனால், இந்த ஆறு விளையாட்டிற்குள்ளும் நான் நுழைவது ஐயமே.
செல்வராஜ் - வசந்தன் போலவா? :O)அவரும் நீங்க சொன்னதைப் போலவே மயூரன் அழைத்த போது சொல்லியிருந்தார். ஆனால் பிறகு பதிந்தார்.
உங்களுக்குத் தோன்றும் போது ஆறோ நாலோ பத்தோ - எண்ணிக்கையால் கட்டுப்படுத்தப்படாமல் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஓய்.
அதென்ன ஒரு இளக்காரம் "வசந்தன் போலவா" எண்டு?
விலங்குப்பண்ணை உதயத்தில வந்தது.
வசந்தன் - இளக்காரமுமில்ல சவக்காரமுமில்ல. சிரிப்பான் போட்டாலும் மல்லுக்கு நிக்கிறாங்களப்பா! :O)
விலங்குப்பண்ணை - சேமிச்சு வைச்சிருக்கலாமோ என்டு யோசிக்கிறனான்.
இங்கு குறிப்பிடப்படும் விலங்குப் பண்ணைக்கும் George Orwell இன் "Animal Farm" க்கும் சம்மந்தம் உள்ளதா
இல்லை நான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறனா:-)
நீங்க மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடவில்லை :O)
Animal farm தான் விலங்குப் பண்ணை.
வெளியே மழையடிக்க சாரல் மெதுவாய் உள்ளேயடிக்க நித்திரை கொள்ளப் பிடிக்கும் .
நெடுஙங்காலத்தின் பின்னர் இதனை அண்மையில் அனுபவித்தேன்.
ம்ம்... அதுவும் ஒரு சுகம்தான்..(விடியப்புறம் மழை பெய்தால் யன்னல் கண்ணாடில பட்டு வழியிறதைப் பார்த்துக்கொண்டு மழைக்குளிருக்கு படுக்க நல்லா இருக்கும்.
(நித்திரை கொண்டதெல்லாம் காணும்..மழையும் விட்டிட்டுது. எழும்பிப் ப்ளேன்ரீயொண்டு போட்டுக் குடியும்) :O)
நீங்கள் வீணை வாசிப்பீர்கள் என்பதைப் பழைய பதிவுகளில் எப்படியோ - தவற விட்டிருக்கிறேன்.
ம்.. ஒரு இசைக் கருவி பழக வேணுமென்று விருப்பமெல்லாம் இருந்தது (ஒரு காலம்! :-)
//6. லொஜிக் உதைத்ததில் நின்று போன "படைப்பை"த் தொடர//
கட்டாயம் தொடருங்கோ. உங்களுடைய விபரிப்பும் மொழியும் மிக அழகானது.
(இது சிலவேளை லொஜிக் உதைப்பதை மறைத்துக் கூட விடலாம்!!)
ஷ்ரேயா,
அவர் வேற எதையோ சொல்லிறார் போல கிடக்கு.
ஆசைகள் என்பது இந்த உலகத்தின் உயிர் உள்ள அனைவருக்கும் உடை ஒரு சொத்து. இருக்கும் ஆசைகளை நிறைவு அடை முயற்ச்சி என்னும் ஆயுதம் எடுக்க வேண்டும்.சொம்போறியாக மட்டும் இருக்க கூடாது. நன்றி தவறுகள் எதுவும் இருந்தால் மன்னிக்கவும்
இப்படிக்கு ,
குறிஞ்சித்தமிழ்.
http://kurinchitamil.blogspot.com
பொடிச்சி - அப்ப, முதல் எழுதினதிலயும் எங்கையோ என்ட "அழகான விபரிப்பால" லொஜிக் உதைச்சதை மறைச்சிட்டனோ?? ;O)
வசந்தன் - ஆரைச் சொல்றீர்??
உண்மைதான் ராஜ்குமார். கருத்துக்கு நன்றி. நீங்க சொன்னதிலே ஒரு பிழையுமில்லை.
பொடிச்சி - எழுத நினைத்து விடுபட்டுட்டுது.
//ஒரு இசைக் கருவி பழக வேணுமென்று விருப்பமெல்லாம் இருந்தது (ஒரு காலம்! :-) //
இப்ப கூடத் தொடங்கலாமே? பிறகு ஒரு காலத்தில யாரும் இசைக் கோப்பைத் திறக்காமலே இசைக்கருவி வாசிக்கிற சத்தம் வருது என்டு வலைப்பதிவுலக மக்கள் பயப்பட நீங்கள் காரணமா இருக்கக்கூடாது என்ன? :O)))
வசந்தன் - நீர் யாருக்குச் சொல்லுவீர் என்டதை யோசிக்காமப் போயிட்டன்! :O)
//அவர் வேற எதையோ சொல்லிறார் போல கிடக்கு.//
யாரெண்டு இப்ப விளங்கீட்டுது. ஒன்டும் சொல்றத்துக்கில்ல என்டுறதைத் தவிர ஒன்டும் சொல்றதுக்கில்ல.(அன்டைக்குத் "தூதுவனி"ல சொன்ன மாதிரித்தான். எத்தினையோ விசயமிருக்கும்...) ;O)
Post a Comment