நான் பார்த்த கூத்து!

இன்டைக்கு மட்ச், டிவியப் போடு

நல்லகாலம் ஞாபகப்படுத்தினாய்... நான் போடுறன் நீ ****க்கு அடிச்சு அவனை வரச்சொல்லு.

மூன்றாமவன்: "ஏன் அடிக்கப் போறீங்க ..நோகும்" (இரண்டாமவன், "எல்லாரும் ஒருக்கச் சிரியுங்களன்டாப்பா, எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறான்" என்று சொல்லி மூன்றாமவனிடமிருந்து ஒரு அடியை வாங்கிக்கொண்டான்)

(அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒருநாள் கிரிக்கற்போட்டி ஆரம்பித்திருந்தது)

பார்வையாளர்களைக் காட்டிக்கொண்டிருந்த போது ஒரே நேரத்தில் "சான்மான்" ஒரு கத்தல். கொஞ்ச நேரத்தில் "சங்கீதா" என்று இன்னோரு கூச்சல். (எனக்கென்னவோ சான்மானுக்குக் கிடைத்த கூச்சலை விட சங்கீதாவுக்கு இன்னும் உரக்கவும் உசாராகவும் கேட்டது போல இருந்தது. ஆனாலும், "பிரமை" என்று சொல்லிக்கொண்டேன்)

ஜயசூரிய விளாசத்தொடங்கியிருந்தார். கடைசி வரை பார்த்து விட்டு எழுந்து தேநீர் குடித்தார்கள். அவுஸ்திரேலிய ஆட்டம் தொடங்கியது. ஒவ்வொரு வீரராய் ஆட்டமிழந்ததும் பெருங்கூச்சல்.

"என்னதான் சிங்களவன் என்டு பேசினாலும், கிரிக்கட்டெண்டோடன ஏன்டா இலங்கைக்கு சப்போட் பண்ணிறம்?" என்று ஒரு புத்திஜீவி கேட்டார். விழுந்து விழுந்து சிரித்தார்களே தவிர, அவனுக்குப் பதில் சொல்லவில்லை. நானும் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அன்ட்ரூ சிமண்ட்ஸ் வந்து ஒரு சிக்ஸரைத் தூக்கி விட்டார்.. "ஐயோ.. வந்திட்டாண்டா அனுமான்".

விளம்பர இடைவேளை போட்டதும், அவசர அவசரமாக மற்றத் தொ.கா.நிலையத்திற்கு மாற்றினான் ஒருவன். "அடெய், விசரா இப்பத் திரும்பப் போடுவாங்கள்..ஏன்டா சனலை மாத்துறாய்?"

மாற்றினவன் சிரித்துக் கொண்டே "மச்சான்... வடிவாப்பார் ! இப்ப சொல்லு பாப்பம் எனக்கு விசரோ என்டு!!!" திரையிலே ஷரபோவா அழகாக டெனிஸ் ஆடிக்கொண்டிருந்தார்.

"என்ன நீட்டுக்காலடா இது!" (இந்த "இது", மிகக்குறுகியதொரு "இ"யும், பெருமூச்சுக்களின் தொகுப்பாய் "து" என்பதும் சேர்ந்த ஒன்று என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லைத்தானே!)

வெற்றிலை வைத்து அழைக்காத குறையாய், தொலைபேசியில் அழைத்து, அழைப்பை ஏற்று(!!) வந்தவன், "கிரிக்கற்றைப் பாக்காமல் என்னத்தையடா...." என்று ஆரம்பித்து "ஐயோ மரியாக்குஞ்சு, உந்த மெல்பேண் வெக்கைக்க உங்களை விளையாட வைச்சிட்டாங்களே" என்று தடாலடியா பிளேட்டை மாத்தினான். "அடப்பாவி" என்று கூட்டமாய்க் குரல் கொடுத்தார்கள்.

"உப்பிடிச் சின்னச்சின்ன சட்டையளும் காற்சட்டைகளும் போட்டுக்கொண்டுதான் விளையாடோணுமோடா? முழுக்கால், அற்லீஸ்ட் கால்வாசிக்கால் மறைக்கப் போடலாந்தானே?" - இது புத்திசீவி

"கால்காலை மறைக்கப்போடோணும் என்னடா, அதானே கேட்கிறாய்?"
"ஓம்..",
"சரிதானேயடா அப்ப, கால் தரை கால் எட்டிலொண்டு, போட்டிருக்கிறது அந்த சைசிலதான் இருக்கு"
சொல்லிவைத்தது போலத் தலையிலடித்துக் கொண்டார்கள்.

"எதைப்போட்டாலும் விளையாடினாச் சரிதானே" என்று ஒருவன் சொன்னதும் ஆமோதித்து பழையபடி கிரிக்கட்டுக்குத் திரும்பினார்கள்.

"எனக்குப்பசிக்குது" சாப்பாடெடுக்கப் போனான் ஒருவன்.

அன்ட்ரூ சிமண்ட்ஸ் ரன்னவுட்டாகிப் போனார். "அப்பாடா, இனி வெண்டிடலாம்" ஒரு துளி சந்தேகமுமின்றி வெளிப்பட்டது குரல்.

"டேய், நான் சாப்பாடெடுக்கப்போகத்தான் சிமண்ட்ஸ் அவுட்டாகினவன். நீங்களும் வந்து எடுங்கோடா!". சிரிப்பலை.

மற்றவனும் சாப்பாடெடுக்கப் போனான்.. க்ளார்க் பவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். தாங்கள் சாப்பாடு எடுக்கப்போனால் விக்கற் விழுமென்று எல்லாருக்குமே நம்பிக்கை வந்ததில் சமையலறைக்குள் போக்குவரத்து நெரிசல்.

கடைசியாய் ஒரு பந்திருக்கையில் மொத்தமாய் அவுஸ்திரேலிய அணி ஆட்டமிழந்ததும் உற்சாகமாய்க் கைதட்டி, நாளைக்குக் காணப்போகிற அவுஸ்திரேலிய நண்பர்களுக்கு என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டே கலைந்து போனார்கள்.

9 படகுகள் :

கலை January 23, 2006 7:01 pm  

என்ன ஷ்ரேயா? இன்னும் பட்டை இறக்கவில்லையா? போற அவசரத்தில், அவசரமாக வாசிச்சுப்போட்டு, ஒரு ஸ்டார் போட்டுட்டுப் போவோம் எண்டால், இங்கே பட்டையைக் காணேல்லை. பின்னூட்டமிட வேண்டியதாப் போச்சு. :)

சுவாரசியமா எழுதி இருக்கிறீங்க.

துளசி கோபால் January 24, 2006 1:18 pm  

ஷ்ரேயா,

இங்கே அந்தக்'கூத்து' பார்க்கலை.

ரொம்ப ஜாலியா இருந்தமாதிரி இருக்கு:-)

துளசி கோபால் January 25, 2006 8:21 am  

ஷ்ரேயா,

'தமிழ்மணம்' மூலமாத்தான் இப்ப இங்கெ வந்தேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) January 25, 2006 10:39 am  

பட்டை வந்தாச்சேய்!!! :O)

நிரல்பலகையை நோண்டினதில எழுத்தெல்லாம் கொஞ்சம் பருத்துப்போச்சு!!

நன்றி கலை, துளசி.

Anonymous January 25, 2006 5:59 pm  

"சரிதானேயடா அப்ப, கால் தரை கால் எட்டிலொண்டு, போட்டிருக்கிறது அந்த சைசிலதான் இருக்கு"

'கால் தரை கால் எட்டிலொண்டு'? அப்படின்னா? பொழிப்புரை பதவுரை போட்டாட்டி இன்னும் 15 நாட்களுக்கு உங்களால் வலைப்பதியமுடியாமல் போகக்கடவது!

துளசி கோபால் January 25, 2006 7:23 pm  

கால், அரைக்கால் எட்டில் ஒன்று.

இதைத்தான் கால் தரைக் கால் என்று சொல்லியிருக்கீங்க, இல்லையா ஷ்ரேயா?

'பட்டை' போட்டுக்கொண்டதுக்கு வாழ்த்துக்கள்:-)

வசந்தன்(Vasanthan) January 25, 2006 7:34 pm  

அதுசரி, சிட்னியில எப்பிடி வெக்கை?
கிரிக்கெட் மச் பாக்க வந்த ஆக்களில அந்த வெக்கை தெரியேலயே? எல்லாம் குளிர்ச்சியாத் தானே தெரிஞ்சுது?
இஞ்ச சரியான வெக்கையப்பா.

வித்யாசாகரன் (Vidyasakaran) February 01, 2006 1:22 am  

ஷ்ரேயா,

அது என்ன சான்மான், சங்கீதா? சொல்லுங்களேன். வேறு யாரும் இதைக் கேட்காததைப் பார்த்தால், நான் மட்டும்தான் மக்கு என்று தோன்றுகிறது. குற்றமில்லை. :-)

- வித்யா

`மழை` ஷ்ரேயா(Shreya) February 02, 2006 12:09 pm  

துளசி விளக்கம் சொல்லியும் க்ருபாவின் சாபம் பலிச்சிடுச்சே!!
க்ருபாண்ணே நானே விளக்கம் சொல்றேன் கேட்டுக்கோங்க! 1/4 இது கால். . பெருக்கற்குறியை "தரை" என்று சொல்வார்கள். எனவே: 1/4 X1/4 என்பது சொற்களில்: கால் தரை கால். இதன் பெறுமதி எட்டில் ஒன்று.

வசந்தன் - பாத்தா குளிர்ச்சியாத்தான் இருந்திருக்கும் உமக்கு! ம்ம் மெல்பேண் வெக்கையின் ஊக்கிகளுள் ஒன்றாக உம்மட பெருமுச்சும் தொழிற்படுதாமே.. கேள்விப்பட்டன்! ;O)

வித்யா - "சான்மான்" என்பது ஒரு நண்பனுக்கு வைத்த "பட்டப்பெயர்". அதாவது, அவனை செல்லமாக அழைக்கும் பெயர். ஆக: சான்மான் "நண்பன்". சங்கீதா "நண்பி". இப்ப விளங்கிச்சா?

பெட்டகம்