தன் உடல்மீதான மருத்துவ உரிமைக்காக வழக்குப் போடும் 13 வயதுப் பெண் அனா. அனா, தாய் சேரா, தகப்பன் பிரையன், தமையன் ஜெஸி, வழக்குரைஞர் கம்பெல், வழக்கில் அனாவின் பாதுகாவலர் யூலியா என்போர் பேசுவதினூடாகக் கதை நகர்த்திச் செல்லப்படுகிறது.
அனாவின் தமக்கை கேற்றிற்கு ஒருவித இரத்தப்புற்று. அவளுக்கு அந்நோயுள்ளது என்று அறியப்பட்ட போது சிகிச்சைக்கு இரத்தம் கொடுப்பதற்கான பொருத்தமான வழங்கிகளாக அவள் குடும்பத்தினர் இருக்கவில்லை. சிறுதொகைக் கருக்களிலிருந்து கேற்றிற்குப் பொருந்தும் மரபணு வடிவமைப்புள்ள ஒரு கருவைத் தேர்ந்து செயற்கை முறையில் அனாவை சேரா பெற்றெடுக்கிறார். பிறந்த போது தொப்புட் கொடியிலிருந்தும், பிற்பாடு ஒவ்வொரு கட்டத்திலும் தன் உடலிலிருந்து என்புமச்சை, குருதி முதலியனவும் கொடுக்கும் ஒரு வங்கியாக அனா வாழ்கிறாள். தேவையானதை அனாவின் உடலிலிருந்து பெறுவதற்கான வழிமுறைகள் படிப்படியாக உடலுக்கு அதிகம் தாக்கம் கொடுப்பவையாகின்றன. அடுத்ததாய் ஒரு சிறுநீரகம் வழங்கப்பட வேண்டி வருகிறது. கேற்றை உயிரைப் போன்று நேசிக்கிறாள் அனா. ஆனாலும் இதுவரை போலன்றி 13 வயதில் இனிமேலும் தன் உடல் பற்றிய மருத்துவ முடிவுகளைத் தானே எடுக்கவேண்டும் என்ற முடிவில் தன் பெற்றோரின் அதிகாரத்தின் கீழ் அவ்வுரிமை இனிமேலும் வராதிருக்கும் வண்ணம் வழக்குத் தொடர்கிறாள். கேற்றுடைய சிகிச்சைக்காகவே பிறந்த அனாவின் இம்முடிவு குறிப்பாக தாய் சேராவுக்கு விசனத்தைத் தருகிறது. அனாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார்.
வழக்குரைஞராய் இருந்து, பிள்ளைகளைக் கவனிப்பதற்காய் வீட்டிலே இருந்துகொண்ட தாய் சேராவின் பாத்திரம், நோயுற்றிருக்கும் கேற்றைப் பற்றிய சிந்தனை மட்டுமேயுடையவராய்ச் சித்தரிக்கப்படுகிறது. போதியளவு அழுத்தம் கொடுக்கப்பட்டில்லை. அனா மீதோ ஜெஸி மீதோ சேரா கொண்டுள்ள கரிசனை மிகவும் மேற்போக்கானதாயிருக்கிறது. அப்படி வளர்த்த பாத்திரம் திடீரென அனாவின் நிலையை உணர்ந்து கொள்ளக்கூடியதாய் இருக்கிறதெனச் சொல்வது கொஞ்சம் நெருடுகிறது. தகப்பன் பிரையன், எந்நேரமும் நடக்கக்கூடும் என்றிருக்கும் கேற்றின் மரணத்துக்குத் தன்னை தயார்ப்படுக்கொண்டுள்ளதாயும் தன் மற்ற இரு பிள்ளைகளுக்கு வேண்டிய போதிய கவனிப்பு இல்லாமலிருப்பதை உணர்ந்தவராயும் காணப்படுகிறார். இவர் ஒரு தீயணைப்பு வீரர். ஜெஸி - முழுக்கவனமும் கேற் மேலேயே இருப்பதாலும், கேற்றுக்கு அவசியம் என்பதால் அனாவுக்கும் அந்தக் கவனமிருப்பதாலும் தனிமையாக உணர்கிறான். வெறுமையாய் விடப்பட்டிருக்கும் கட்டடங்களுக்குத் தீவைக்கிறான்.
அனாவின் வழக்குரைஞர் - கம்பெல். கம்பெல் உதவிக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சேவை நாயை வைத்திருக்கிறார். அது பற்றிக் கேட்போருக்கெல்லாம் சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறார். கடைசியில் ஏனென்கிற காரணம் தெரியவருகிறது. வாக்கு நடக்கையில் அவருக்கு வலிப்பு வந்துவிடுகிறது. நாய், வலிப்பு வரமுன்னம் கம்பெலின் உடலிலிருந்து வெளிப்படும் மணம், வேறு சில மாற்றங்களைக் கவனித்து அவருக்கு தன்னாலியன்ற முறையில் நடக்கப்போவதைத் தெரியப்படுத்துகிறது, ஆனாலும் அவர் அதை வழக்கின் உச்சகட்டத்தை அண்மிப்பதால் உதாசீனம் செய்கிறார். [இதற்காகவே, முன்னறிவிப்புப் பெறுவதற்காகவே இவருக்கு நாய் வேண்டியதிருக்கிறது]. வழக்கின் போது ஒரே வீட்டில் வாழ்வதால் அழுத்தத்துக்குள்ளாக்கப்படாமல் அனா இருக்கும் பொருட்டு ஒரு பாதுகாவலரை நீதிபதி நியமிக்கிறார். அவர் ஜூலியா. கம்பெலும் ஜூலியாவும் முன்னரே ஒருவரையொருவர் அறிந்திருந்ததாயும் காதலராயிருந்ததாயும் சொல்லப்படுகிறது. இருவருக்குமிடையிலான உறவு அழுத்தமில்லாததாயும், வலிந்து திணிக்கப்பட்டதாயுமுள்ளது.
வழக்கு நடக்கையில் கேற் மிகவும் சுகவீனமுற்று மருத்துவமனையிலுள்ளாள். குறுக்கு விசாரணையின் போது வழக்குத் தொடரச் சொல்லி அனாவைக் கேட்டுக் கொண்டது கேற் எனத் தெரியவருகிறது. வழக்கில் அனாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கம்பெல் அனாவுக்குப் 18 வயதாகும் வரை அவள் நலனை கருத்திற் கொண்டு மருத்துவ முடிவுகளை அனா சார்பில் எடுக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிடுகிறார். சில வேலைகள் செய்ய வேண்டியதிருப்பதால் அனாவும் கம்பெலும் நீதிமன்றில் பின் தங்க, பெற்றோர் மருத்துவமனை செல்கிறார்கள். அங்கே கேற்றுடன் பேசுகிறார்கள். பிரையனுக்கு வேலையிலிருந்து அவசர அழைப்பு வருகிறது. ஒரு வாகனவிபத்து. பயணியை விடுவிக்கும் பொருட்டு சேதமடைந்த வாகனத்துக்குள் நுழையும் பிரையன், பயணிகள் அனாவும் கம்பெலும் எனக் காண்கிறார். அனா உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டும், அவளது மூளை செயலிழக்கிறது. கம்பெல் அனாவின் சிறுநீரகத்தை கேற்றிற்குக் கொடுக்கும்படி சொல்கிறார். அனாவை உயிருடன் வைத்திருக்கும் இயந்திரம் அணைக்கப்படுகிறது.
கடைசி அத்தியாயம் கேற் பேசுவது போல். ஜெஸி பற்றியும், எப்படி அனாவின் இழப்பினூடாக வாழ்ந்தார்கள் என்பது பற்றியும் பேசும் கேற் இதுவரை பெற்ற சிகிச்சைகளின் பலனாய் சுகமுற்றுள்ளாள். ஆனாலும் தன் வேண்டுகோளுக்கிணங்க வழக்குத் தொடுத்தமையால்தான், அன்றைக்கு நீதிமன்றம் சென்றமையால்தான் அனா இறக்க நேரிட்டது என்கிற குற்றவுணர்ச்சி அவளுக்கிருக்கிறது.
இதுதான் My Sister's Keeperன் கதை.
ஒரு தேவைக்காக வடிவமைக்கப்படும் குழந்தைகள், அப்படிப்பட்ட ஒரு தெரிவை (சில பல காரணங்களுக்காக) செயற்படுத்தும் பெற்றோர் என்பன பற்றித் தொட்டுச் செல்கிறது இப்புத்தகம். கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் படைத்திருக்கலாம் போலத் தோன்றுகிறது. கதைக் கரு சற்றே வித்தியாசமாய், சிந்தனையைத் தூண்டுவதாய் இருக்கிறது. ஆனாலும் ஆசிரியர் எங்கும் தன் முடிவுகளை (இறுதிப் பகுதி தவிர்த்து) வாசகர் மேல் சுமத்தவில்லை. மாறாக வாசகரை சிந்திக்க வைக்கிறார். இதனை வாசிக்கையிலேயே கேள்விகள் எழுகின்றன. ஒரு குழந்தைக்கு உடல்நலமில்லையென அவளுக்கு உதவவென்று மட்டுமே பெற்றெடுக்கப்படும் மற்றக் குழந்தை. மூத்த பிள்ளையின் நலன் சாராமல் இந்தப்பிள்ளையின் இருப்பு? மூத்தவள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனால் குடும்பத்தில் இவளது இடம் என்ன? கதையிலேயே இவற்றுக்கான விடைகளை ஓரளவில் காணலாம்.
தேவைக்காக உருவாக்கப்படும் திசுக்கள்/கருக்கள்/குழந்தைகள் என்பதும் ஒரு நோயாளிக்கு எந்தக் கட்டம் வரை & at what/whose expense சிகிச்சை வழங்குவது, அதை யார் தீர்மானிப்பது என்பதும் முடிவற்ற விவாதமாயே நீள்கின்ற விதயங்கள். வார்ப்புரு போல இந்த சூழ்நிலையில் இன்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனச் சொல்ல முடியாது ஏனெனில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எடுக்கப்படுகின்ற முடிவுகளும் அவை எடுக்கப்படுவதன் பின்னணியும் வேறுவேறாகத்தான் இருக்கும்.
கதைக்கு முடிவென்று ஒன்று இருக்க வேண்டுமென்பதற்காக அமைத்தது போன்று, மரணத்தைத் தொடும் நோயாளிக்கான சிகிச்சை என்கிற விதயத்தில் ஆசிரியரின் கருத்தோ என்ற ஐயத்தை எழுப்புகிறது போல அமைக்கப்பட்ட முடிவு - கேற் சுகமடைவதும் அனா இறப்பதும் - செயற்கையாகத் தோன்றுகிறது.
மிகச் சிறந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும், வாசிப்பிற்குகந்ததாய் - சிந்தனையைத் தூண்டுவதாய் எனக்கு இந்தப் புத்தகம் தோன்றியது.
வாசித்தது
Posted by
`மழை` ஷ்ரேயா(Shreya)
21 September 2006
வகை: படிச்சுக் கிழிச்சது
5 படகுகள் :
புத்தகம்(ங்கள்) வாசிக்க நேரமில்லாவிட்டாலும், ஒரு கதை வாசித்த திருப்தியை தருகிறது உங்களது பதிவு. நீண்ட நாட்களாக எதையும் வாசிக்கவில்லையே என்ற கவலையை போக்கியதற்கு நன்றி.
Good of you to read books. So that non - readers can know the story.
நல்ல கதை. நன்றி, சிறுகதையாக சொன்னதற்கு.
It has all the ingrediants of a medico-legal drama ..might make a good movie :-)
advancement in areas like cloning, stem cell research etc are pushing the boundaries of medical ethics as we know
though its abt making decisions and accepting its consequences the circumstances are unique and not sure how easily the reader could relate to such scenarios
yekkov, out of my league. :))
நன்றி கலை & தேவதை.
கார்திக் - இன்னவிதமான முடிவு எடுக்கப்படக் கூடும்/வேண்டும் என்று நினைத்துப் பார்க்க மட்டும்தான் முடிகிறது. :O\
பிரேமலதா - இதெல்லாம் out of your leagueஆ? சரி சரி.. (அடடா!...உங்களுக்காகவே போடணும்னு இருக்கிற பதிவு இன்னும் என் செல்பேசில தூங்குது. இந்த வார இறுதில போட்டிர்றேன். promise! ;O)
Post a Comment