சொல்லத்தான் நினைக்கிறேன்

நிறையச் சொல்லோணும் போல, ஆனா என்னத்த எப்பிடி எங்க தொடங்கிச் சொல்லுறதெண்டு தெரியாம முழிச்ச/தவிச்ச அனுபவம் இருக்கா? அப்பிடித்தான் எனக்கு வழமையாவே இருக்கிறது.

nervousஆனா (இல்லாட்டிப் பொய் சொல்லக்குள்ள)தான் நான் வழமையா வளவளவெண்டு அலட்டுறது. இல்லாட்டிக் கொஞ்சம் அமைதியா நல்ல பிள்ளையா (இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ட மாதிரி) இருந்துகொள்ளுவன். ஆனாலும் எப்பவும், ஆரோடையும் பகிர்ந்து கொள்ளோணும் என்டு நினைக்கிறவைகளைப் பற்றிச் சிந்தனை ஓடும். படிச்ச புத்தகமோ, நடந்த விசயங்களோ இல்லாட்டி மனசில வாற எண்ணங்களோ - இப்பிடி நிறைய. என்னதான் நெருங்கின நட்பிருந்தாலும், எதையும் பேசக் கூடியதாயிருந்தாலும் பல விசயங்கள் சொல்லப்படாமலே போய் விடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில இது கூடினாப்போல தான் தெரியுது. புதிதாய் எதையுமே கதைக்ககூடியவர்களின் அறிமுகம் கிடைத்து நல்லாப் பழகியிருந்தாலும், ஏதோ தடுக்கும். இவர்கள் என்ன நினைப்பார்களோ என்டுற நினைப்பாலயோ என்டு நீங்கள் நினைச்சா நான் பொறுப்பில்ல. (அந்த எண்ணம் எப்பவாவவது வருமா என்டு அம்மா ஒரே கேக்கிறவ). என்னெண்டு சொல்லத்தெரியல்ல. ஆனா ஏதோ
ஒன்டு - இதப்பற்றிக் கதைக்காம விடுவம் என்டு எண்ண வைக்கும். அதுவும் சில விசயத்துக்குத்தான். [குழப்புறனா?] அது என்ன, ஏனெண்டு இன்னுந் தெரியாது.

சொல்லாமப் பூட்டிப் பூட்டி வைக்கிறதுகள் நிறைஞ்சு மூச்சு முட்டுமாப் போல வரும் சில நேரம். அப்ப மட்டும், வன்தகடு நிறம்பினா கொஞ்சக் கோப்புகளை அழிச்சு இடமெடுக்கிற மாதிரி, சிலது மட்டும் வெளியில கொட்டும். எனக்கிருக்கிற ஒரு தோழிக்கு இதுக்கு முற்றிலும் எதிர்க்குணம். அவ சொல்லாம உள்ளுக்கு வைச்சுக் கொண்டிருக்கிறதுதெண்டு பாத்தா ஒருகைவிரல் விட்டு எண்ணலாம். அந்தளவுக்குக் கதை. முதலொருக்கா அவவிட்டக் கேட்கப் போக, உள்ளுக்கு வைச்சிருந்து என்ன செய்யிறது? சிந்தனை ஊறுகாய் போடுறதோ என்டு பதில் தந்தவ. எப்பிடி அவவுக்கு ஏலுமாயிருக்கென்டு இப்பவும் யோசிக்கிறனான்.

சரி நேர இன்னொராளிட்டக் கதைக்கத்தானே வேண்டாமெண்ணுது மனம், அப்ப எழுதிப் பாப்பமெண்டாலும் (அதுக்கு ஒரு "இது" வேணுமெண்டதையெல்லாம் கணக்கில சேர்க்காம விடுவம்), ம்கூம், வரமாட்டுதாம். சொல்லல்லண்டா ஒண்டும் குறையப் போறதில்லத்தான். ஆனா எத்தினையோ பேர் ஒரு ரெண்டு வரிக் கவிதையிலையோ, இல்லாட்டி ஒரு கதையிலையோ, கட்டுரையிலயோ தங்களை/ தங்களின்ட எண்ணங்களை எவ்வளவு அழகா வெளிப்படுத்திறாங்க என்டு பாத்தால் ஆசையா இருக்கு. அட, இதை நானும் யோசிச்சனான்/வாசிச்சனான்/பாத்தனான் என்டு மனதில படும். ஆனா அந்தளவுக்கு எளிமையா அழகா வெளிப்படுத்தத் தெரியல்லையே என்டு தோணும். பிறகென்ன, சொல்லத் தெரியாட்டிச் சொல்லத் தேவையில்ல என்டிட்டு இன்னும் சேரச் சேர பூட்டிப் பூட்டி வைக்கிறது தான். அது என்னையுமறியாமலேயே வெளிவாறது தாதிக்கு முன்னால உடைஞ்ச கொட்டின மாதிரிச் சந்தர்ப்பங்களிலதான்.

இனி அப்பிடி ஒரு சந்தர்ப்பம் வேண்டாமெண்டு எழுதத் தொடங்கினன். ஏன் அப்பிடிச் சொல்லவெளிக்கிட்டனான்? என்ட எண்ணங்கள் என்னையறியாம வெளிவாறதை எண்ணி வெட்கப்படுறனா? ஆனா அப்பிடி வெளிவாறது எப்பவும் எல்லாருக்கும் நடக்கிற ஒண்டுதானே.. என்டு யோசிக்கத் தொடங்கி, பதில் இன்னும் கிடைக்காம, கேள்வியையும் சேர்த்துப் பூட்டி வைக்கிறன், இப்போதைக்கு.

10 படகுகள் :

theevu May 26, 2006 5:49 pm  

ம் கன காலத்திற்குப் பிறகு...

கதை சொல்வதா இல்லையா என்பதற்கே இவ்வளவு ஆலவட்டம் என்றால்..

நன்றாக எழுதுகிறீர்கள்

`மழை` ஷ்ரேயா(Shreya) May 26, 2006 6:07 pm  

நன்றி தீவு. எனக்கு எப்பவுமே மே - ஜூன் மாதமெண்டா எழுதுறதுக்கு ஏதாவது கூடுதலா அகப்படுறது வழமை. :O) கனநாள் ஆச்சுத்தான் எழுதி. ஆனா ஒன்டுமில்லாம எழுதியும் பிரியோசனமில்லத்தானே?

தொடரொண்டு தொடங்கியிருக்கிறன்.. அதில அடுத்தது விரைவில பதிவேன்.

ரவி May 26, 2006 6:11 pm  

ஒன்னுமே புரியல மேடம்..

கார்திக்வேலு May 26, 2006 6:35 pm  

You are back to form now :-)

நீங்க டும் டும் டும் படம் பார்த்திருக்கீங்களா ..அதுல ஜோதிகா அப்பாவா வரும் நடிகர் அடிக்கடி ஒரு வசனம் பேசுவார்,"எனக்குக் கோர்வையா பேச வராது " என்று அது தான் ஞாபகம் வந்தது.

இது ஒரு சிக்கலான விஷயம் தான் நானும் இது போன்ற சூழ்நிலை எற்பட்ட போது யோசித்துப் பார்த்தது தான். பல விதமான காரணங்கள் இருக்குமோ என்றே தோன்றுகிறது.

1.மத்தவங்க நாம சொல்ல வருவதை சரியாக உள்வாங்கிக் கொள்வார்களோ என்ற தயக்கம்.
lack of acknowledgement and feedback ,some people don't want to be understood or acknowledged at all unless they are received in a way they expect others should receive them.There is nothing wrong in this.

2.நமக்குள்ளேயே படர்ந்திருக்கும் ஒரு தெளிவின்மையும் உற்சாகமின்மையுமாக இருக்கலாம்." Thats nothing, leave it" என்பது போன்ற ஒரு சூழ்நிலை.

3.ஒருவருக்கு இயல்பிலேயே அமைந்த "உள்முகப் பார்வை "Introvertedness" or even ambivertedness.
(Introvertedness should not be confused with shyness.Introverted person chooses to keep quiet but can express very well whenever and whereever she/he feels like doing so)
//இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ட மாதிரி// :-)

4.நீங்கள் குறிப்பிட்ட நண்பர் "வெளி முகத்தன்மை" extravertedness உடையவராய் இருந்திருக்கலாம்.

5.எழுத்து என்பது கூட ஒரு வகையில் extra-personal activity தான் பேசுவது போல

//பிறகென்ன, சொல்லத் தெரியாட்டிச் சொல்லத் தேவையில்ல என்டிட்டு இன்னும் சேரச் சேர பூட்டிப் பூட்டி வைக்கிறது தான்//

இப்படிப் பூட்டி வைப்பது பின்னெப்பொழுதோ ஒரு சமயதில் வெளிப்பட்டு நம்மையே ஆச்சரியப்படுத்தக்கூடும்.

பலர் எழுத வேண்டும் என்று உந்தப்படுவதாய் உணர்வது இந்த ஒரு நிலையில் தான் .

Only way to come out of this loop is to write / speak/ interact,and get acknowledged.It might be hard and emotionally tiring going on in a pointless communication but somwhere there one can find their groove.

வெள்ளிக்கிழமை நேரம் காலம் வீடு போய் சேரலாம் என்று இருக்கும்போது இப்படி ஒரு பதிவைப் போடலாமா :-)

மணியன் May 26, 2006 6:52 pm  

முன்னால் நீங்கள் எழுதிவந்தபோது படித்தவன் தான் நான். உங்கள் கதையை தொடருங்கள். மனது இலேசாகும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) May 26, 2006 10:04 pm  

செந்தழல் ரவி - புரியலேன்னு சந்தோசப்பட்டுக்கோங்க. ஒன்னுமில்லை. வழமையா மனசிலே படுறதுதான். இங்கேதான் எல்லாத்தையும் கொட்டுறோமே, இதையும் கொட்டுவோம் என்டு...

மணியன் - நன்றி. ஏற்றி வைத்துக் கொண்டு என்று சொல்கிற அளவில் பாரமில்லை. ஆனாலும், உண்மைதான், எங்கேயாவது (எந்த வடிவிலென்றாலும்) கொட்டிவிட்டால் ஓரளவுக்கு மனம் அமைதியாகிறதுதான்!!

`மழை` ஷ்ரேயா(Shreya) May 26, 2006 10:06 pm  

நீண்ட பின்னூட்டுக்கு நன்றி கார்த்திக்வேலு. நான் இன்ரொவேர்டட்தான். அதுவே சிலசமயம் என்னை வெளிப்படுத்திறதுக்குத் தடையா இருக்கோ என்றும் யோசித்திருக்கிறன்.
//பூட்டி வைப்பது பின்னெப்பொழுதோ ஒரு சமயதில் வெளிப்பட்டு// அதான் தாதி விசயத்தில் ஓரளவுக்கு நடந்தது. ஒரு சின்னத் தூண்டல் போதும் பூட்டினதெல்லாம் வெளிவர.

கடைசியா நீங்க இங்கிலிபீசுல சொல்லியிருக்கிறது உண்மை. வலைப்பதிவில்லாட்டி நிறையப்பேரை அந்தந்த நாட்டிலோ இல்லாட்டி ஒரு சின்ன வட்டத்திலயோதான் தெரிஞ்சு கொண்டிருப்போம்.

//Only way to come out of this loop is to write / speak/ interact//
ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும், அங்கீகரிப்பு இல்லாதபோதிலும் தொடர்ந்த "வெளிப்படுத்தல்" நடக்கும்தானே?

வெள்ளிக்கிழமை நாளில் பதிந்ததற்கு மன்னிப்பு ப்ளீஸ்! (உங்க அலுவலகத்திலே மாதக்கடைசி வெள்ளியன்று "பான விருந்து" இல்லைங்களா? வீட்டுக்குப் போக அவசரப்படுறீங்க?) :O)

கார்திக்வேலு May 27, 2006 12:21 am  

ஷ்ரேயா,
ஆம் வெளிப்படுத்துதல் நடக்கும் தான், ஆனால் சரியான feedback இல்லாமல் அதன் வீச்சும் பரிணாமமும் எந்த அளவு இருக்கும் என்பது கேள்விக்குரியதே

சாமி வரங்கொடுத்து என்ன பயன், ஜான் ஹாவர்டு கொடுக்கணுமே.நானோ ஒரு பச்சை அட்டைக் காரோட்டி , பூச்சியத்திற்கு சற்றே மிகுந்தாலும் பறித்துவிடுவாராமே.
(To be read in actor prabhu's voice)
"என்ன கொடும சார் இது"
:-))

`மழை` ஷ்ரேயா(Shreya) May 27, 2006 10:30 am  

புரியுது. ஊக்கமோ எங்கே இன்னும் முன்னேறலாம் என்று சொல்லிக் கொடுக்கிறதோ இருந்தா வீச்சு அதிகம் தான்.

பாத்தீங்களா! நீங்க எங்கூருன்னு இவ்வளோ நாள் தெரியாமப் போச்சே!!! :O\

கார்திக்வேலு May 27, 2006 1:02 pm  

பக்கந்தான் சாம்பல் காடு,நமக்கு நீங்க ஆங்கிலத்திலேயும்
பதிவு எழுதும் விஷயம் இப்போ தான் தெரிஞ்சுது :-)

பெட்டகம்