என் அம்மாவைத் தெரியாது!

முந்தநாளுக்கு முதல்நாள்(நாலாம் நாள்) எங்கள் வீட்டு பதிலிறுக்கும் கருவியில் "அம்மா மட்டக்களப்பால் வந்து விட்டா. உங்களுடன் கதைக்க வேணுமாம்.அவவுக்கு எடுங்கோ" என்று அண்ணா சொல்லியிருந்தார், அம்மா தனது பிரம்மகுமாரிகள் ராஜயோகத்தினரில் மருத்துவத்துறையில் உள்ளோருடன் கிழக்கிற்குப் போவது இந்த வருடத்திற்கு இது நாலோ ஐந்தாவது முறை. கடற்கோளால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மருத்துவ முகாம்களிற்கு மருந்து விநியோகிப்பதும் மருத்துவம் பார்ப்பதும் இவர்களது பணி.

போன கிழமையும் இப்படித்தான் புறப்பட்டுப் போக முன் கதைத்தேன். வந்து விட்டா தானே, புதினங்கள் சொல்லப் போகிறாவென்று எடுத்தால், "நான் சுகமா இருக்கிறன், பயப்பிட ஒண்டுமில்லை" என்று தொடங்கினா. என்னவென்று கேட்டால், திரும்பி வரும்போது பெய்த மழையால் ஈரமாகியிருந்த பாதையில் சாரதி தன் கை(கால்?) வரிசையைக் காட்ட வாகனம் பாதையிலிருந்து விலகி புரண்டு விட்டதாம். நெஞ்சுக்கூட்டு எலும்புகளில் இரண்டின் முறிவும் கழுத்தெலும்பில் ஒரு வெடிப்பும் பக்கத்திலிருந்த இருவர் இவவுக்கு மேலே விழுந்ததில் பரிசாகக் கிடைத்துள்ளது. ஒருமாதம் ஓய்வாகப் படுக்கையில் இருக்கச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். நிலமையின் பாரதூரம் விளங்கிய படியால், ஓமென்றிருக்கிறா. நான் பிறந்ததற்கு இருந்தபின், இது தானாம் இரண்டாம் தரமாக அவ ஒரு மாதம் தொடர்ச்சியாக வீட்டிலிருக்கப்போவது!!!!

சரி வீட்டிலேயே இருந்தால் அலுப்படிக்குமே..பாவமே என்று அம்மாவுக்குப் புத்தகங்கள் வாங்கி அனுப்பத் தீர்மானித்தேன். புத்தகக் கடைக்குள் நுழையும் வரை ஒன்றும் மனதில் தோன்றவில்லை. என்ன வாங்கலாம் என்று கண்ணை அலைய விட்ட போதுதான் உறைத்தது..எனக்கு அம்மாவைத் தெரியாது. அவக்கு என்ன மாதிரியான புத்தகங்கள் பிடிக்கும்? வரலாறு பிடிக்குமோ?காதல்?பயணங்கள் சம்பந்தமாய் ஏதாவது?ஆங்கில இலக்கியம்?மர்மக் கதைகள்?த்ரில்லர்? ஆஆ!!!!(கற்பனை செய்க: ஷ்ரேயா தலைமயிரைப் பிய்த்துக் கொள்வது!!)

சித்திக்கு அவவின் பிள்ளைகளிடமிருந்து கிடைத்த புத்தகமாம் என்று Chicken soup for the mother's soul பற்றிச் சொன்னா.தானும் மிகவும் விரும்பி வாசிக்கிறா என்று போன முறை கதைத்த போது சொன்னதில் அந்த தொடரிலேயே வேற என்ன கிடைக்கும் என்று பார்த்தேன். Chicken soup for the mother's soul 2 கிடைத்தது. அதுவும், Chicken soup for the working woman உம் வாங்கினேன். பிறகு அப்படியே பண்பியல்(classics) புத்தகங்களைப் பார்த்த போது Moby Dick கண்ணில் படவே அதையும் எடுத்துக் கொண்டு, மனிதனின் வரலாறு பற்றி ஆராயும் The footsteps of Eveம் இவற்றுடன் சேர்த்து அம்மாவுக்குப் பிடிக்க வேண்டுமே என்று வாங்கியுள்ளேன். இன்று பின்னேரம் அல்லது நாளை மீண்டும் ஒருமுறை புத்தகக்கடைக்கு விசிட்டடிக்கணும். ஏதாவது நல்ல புத்தகங்களின் தலைப்புகள் சொல்றீங்களா?

அம்மாவைப் பற்றி, ஒரு தனி மனுசியாக, 'அம்மா' என்கிற பாத்திரத்திலிருந்து விலக்கிப் பார்த்தால் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லாருக்கும் இப்படியா? புத்தகக்கடைக்குள் இது என் (மர)மண்டைக்குள் உறைத்தபோது உண்மையாகவே அதிர்ந்தேன்.(அந்த 9.0 ரிக்டர் அதிர்ச்சி, பிறகு சாப்பிட்ட டொம் யம்முடன் சேர்ந்து மூக்காலும் வியர்வைச் சுரப்பிகளாலும் சுனாமி வடிவெடுத்தது வேறே விஷயம்!). விரைவில் அவவிடம் போய் புதிதாய்ச் சந்தித்து, அவவை அறிந்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது. நினைத்துப் பார்க்கிறேன்...இப்படிப் பார்த்தால், என் வாழ்வில் 80 - 85% பேரை நான் புதிதாய் சந்திக்க வேண்டும்! அம்மாதானே..அண்ணாதானே என்கிற பிம்பத்திற்கூடாகப் பார்ப்பதால் தான் இப்படிப் பலரையும் "தவற" விடுகிறோமோ?

9 படகுகள் :

Thangamani April 15, 2005 5:10 pm  

//இப்படிப் பார்த்தால், என் வாழ்வில் 80 - 85% பேரை நான் புதிதாய் சந்திக்க வேண்டும்! அம்மாதானே..அண்ணாதானே என்கிற பிம்பத்திற்கூடாகப் பார்ப்பதால் தான் இப்படிப் பலரையும் "தவற" விடுகிறோமோ?//

ஆமாம், இதைப் புரிந்துகொள்ளும் போது மிகவும் ஆச்சர்யமாய் இருக்கும்.

நல்ல பதிவு.

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) April 15, 2005 7:22 pm  

அன்புள்ள ஷ்ரேயா,
உங்களின் அனுபவமும், தவிப்பும், தீர்மானமும் படிக்க அழகாய் இருந்தன. உண்மையில் நான் எல்லோருமே நிற 'தவற' விடுகிறோம் தான். அதை உணரும்போது காலம் கடந்துவிட்டதோ என்ற ஒரு பயமும் சிலவேளைகளில் வருவதுண்டு. உங்கள் அம்மா குணமடையவும், உங்கள் அம்மாவை நீங்கள் மேலும் அறியவும் வாழ்த்துக்கள். அன்புடன், ஜெயந்தி

Chandravathanaa April 15, 2005 7:49 pm  

ஷ்ரேயா
உங்கள் அம்மா குணமடையவும், உங்கள் அம்மாவை நீங்கள் மேலும் அறியவும் வாழ்த்துக்கள்.

வசந்தன்(Vasanthan) April 15, 2005 10:06 pm  

ஷ்ரேயா!
அதிர்ச்சியான உண்மை.
உங்கள் அம்மா குணமடைய ஆசிகள். ஆனால் அறிய வேண்டும் என்று அறிய முற்படும்போது உங்கள் அம்மாவைப் பற்றிய உண்மையான அறிதல் கிடைக்குமா?

`மழை` ஷ்ரேயா(Shreya) April 16, 2005 1:21 am  

எல்லாருக்கும் நன்றி.

வசந்தன்..உங்கட கேள்விக்குப் பதில் தெரியவில்லை. ஆனாலும் ஒரு ..என்னவென்று சொல்வது?..தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் / உணர்தல்(realization?) இருக்குமல்லவா? புதிதாக அறிமுகமாகும் ஒருவரை அறிந்து கொள்வதை விட ஏற்கெனவே ஒரு பிம்பத்திற்கூடாகப் பார்த்தவரை அறிந்து கொள்வது முழுதாகச் சாத்தியப் படாது தான்..ஆனாலும் முயற்சிக்கலாம் தானே.

ம்ம்..முயற்சிக்கலாம் என்று எழுததத்தான் நீங்க என்ன சொல்ல வாறீங்க என்று விளங்குது...இயல்பாய் / இயற்கையாய் இந்தச் சந்தர்ப்பத்தில் "அறிதல்" நடக்காது. ஒரு அவசரமும் கூடவே தொத்திக் கொள்ளும் என்று நினைக்கிறன். அப்பிடித்தானே?

வேறு கோணத்தில் இந்த விஷயத்தைப் பார்க்க வைத்ததற்கு நன்றி. :o)

வசந்தன்(Vasanthan) April 16, 2005 2:07 am  

சரியாப் பிடிச்சிட்டியள் ஷ்ரேயா.
இது எனக்குமிருக்கிற நிலைதான். முக்கியமான காலத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவன் நான். தோழர்களைப் புரிந்துகொண்ட அளவுக்கு என் குடும்பத்தாரை நான் புரிந்திருக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை.

Aruna Srinivasan April 16, 2005 12:52 pm  

ரொம்ப யதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள். அப்புறமாக உங்கள் அம்மாவோடு பேசியதெல்லாம், வாங்கி அனுப்பிய புத்தகம் பற்றி, அதைப் பற்றி அவர் என்ன சொன்னார் என்று எழுதுங்கள். உங்கள் பதிவுகள் படிக்க எளிமையாக இயல்பாக இருக்கின்றன. இலங்கைத் தமிழ் ஒரு போனஸ் :-)

Anonymous April 18, 2005 7:45 am  

பிம்பத்திற்கூடாகப் பார்த்தல், புரிந்து/அறிந்து வைத்துக்கொள்ளுதல் இரண்டின் நோக்கமூமே "நெருக்கமாக இருந்த்தல்" என்ற அமைதியுணர்வை அடையத்தான்.

உதாரணமாக, ஒருவரின் விருபத்தைப் பற்றி சரியாக அறிந்து வைத்திருக்காவிட்டால், நாம் அவரிலிருந்து நிறைய அன்னியப்பட்டு இருக்கிறோமோ என்று உள்மனம் நினைக்கும். உறவு/அண்னன்/அம்மா என்ற தளத்தில் இருக்கும் ஒருவரின் விருப்பங்கள் பற்றி அறிந்து இருக்காவிட்டாலும், அந்நியோன்னியத்தன்மைக்கு ஒரு பாதிப்பும் வராது. ஏனெனில் உறவு நிலையில் எதிர்பார்ப்புகள் முன்னிலைப்படுத்தப்படுவது இல்லை. எனவே அறிந்து வைத்திருத்தல், புரிந்து கொள்ளுதல் என்பவை விட்டுக்கொடுத்தல் என்பதால் அவசியமற்றும் கூடப் போய்விடுகின்றன. சில உறவுகளில் வெளிப்படுத்துதல் என்பது கட்டாயமான ஒன்றாக இல்லாவிட்டால், பிம்பம் மட்டுமே 'நெருக்கத்தை'ப் பாதுகாக்கும். :-)

என்ன, ரொம்ப கொழப்பிட்டேனா? :-))

கண்டுக்காதீங்க, எல்லாம் நான் எனக்கே சொல்லிக்கொண்டவை. ;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) April 18, 2005 9:37 am  

Grrருபா....கடவுள் பாதி மிருகம் பாதி மாதிரி குழப்பம் பாதி தெளிவு மீதி என்று தான் உங்கள் பின்னூட்டம் (எனக்கு) இருக்கிறது! :o)

//உதாரணமாக, ஒருவரின் விருபத்தைப் பற்றி சரியாக அறிந்து வைத்திருக்காவிட்டால், நாம் அவரிலிருந்து நிறைய அன்னியப்பட்டு இருக்கிறோமோ என்று உள்மனம் நினைக்கும். உறவு/அண்னன்/அம்மா என்ற தளத்தில் இருக்கும் ஒருவரின் விருப்பங்கள் பற்றி அறிந்து இருக்காவிட்டாலும், அந்நியோன்னியத்தன்மைக்கு ஒரு பாதிப்பும் வராது.//

இது தெளிவு. ஆனாலும் பதிவில் சொல்ல வந்தது அம்மாவின் விருப்பு வெறுப்பு பற்றி தெரியாததனால் அன்னியோன்னியம் குறைந்து விட்டது மாதிரியான உணர்வு ஏற்பட்டதென்று அல்ல. விருப்பு வெறுப்புகளை அறிந்திருப்பதும் அவவை அறிதலின் முக்கிய பகுதி தான். ஒருவரை அறிதல்என்பது அவரது விருப்பு வெறுப்பை அறிந்து கொள்வதோடு மட்டும் முடிந்து விடாது என்பது எனது கருத்து.

//சில உறவுகளில் வெளிப்படுத்துதல் என்பது கட்டாயமான ஒன்றாக இல்லாவிட்டால், பிம்பம் மட்டுமே 'நெருக்கத்தை'ப் பாதுகாக்கும். :-)//

சுத்த்தமா ஒன்னுமே விளங்கவில்லை!! :o\

பெட்டகம்