சுடுகிற கேள்விகளும் உண்மைகளும்

- முன்னுக்குப் போகிறவன் ஈரமாயிருந்த படிகளில் சறுக்குகிறான். அப்பாடா நான் சறுக்கவில்லை. நிம்மதி.
- என்னது! ராஜ் வீட்டில் களவு போனதாமா? நல்ல காலம், எங்களுக்கு ஒன்றும் அப்படி நடக்கவில்லை. நிம்மதி.
- சித்தியும் பிள்ளைகளும் பாதுகாப்பான பகுதிக்கு வந்து விட்டார்கள். இனிமேல் பயமில்லை. நிம்மதி.

இப்படி எத்தனை உதாரணங்கள்? எங்களுக்கோ, உடனடி வட்டத்துக்கோ நடக்காத வரையில் அப்பாடா! என்று நிம்மதிப் பெருமூச்சு எத்தனை தரம் விட்டிருப்போம். இப்படி நினைப்பது சரியானதுதானா? எங்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் ஏதேனும் ஒன்றென்றால் பதறிப்போகிற அளவுக்கோ அல்லது அதில் ஒரு அரைவாசியளவு கூடவோ வேறு எவருக்கும் வருத்தப்படுவதில்லையே.. ஏன்? ஏன் அப்படி நினைக்கிறோம்? அப்படி எங்களை நினைக்கத் தூண்டுவது என்ன?

சக மனிதரையும் தன்னைப் போலவே உணர வேண்டுமல்லவா? எது சரி எது சரியல்ல என்பது தனிப்பட்ட வரைவுகளுக்கு உட்பட்டது என்றாலும், பொதுவில் வைக்கக் கூடிய பல இயல்புகள் உண்டுதானே? அவற்றில் "சரியற்ற" ஒன்றாய் ஏன் 'சக மனிதரின் (எவராயினும்) துன்பத்தை அவ்விதமே பார்க்காமல், எங்களுக்கு இன்னும் ஏற்படாத ஒன்றாய்ப் பார்த்து நிம்மதி கொள்வது' இருப்பதில்லை? இதுதான் சுயநலம் எனப்படுவதா? சுயநலமென்றால், அது உயிர் என்றதொன்று உருவாகினதோடவே தோன்றியிருக்க வேண்டும். இனத்தின் விருத்திக்கும், தொடர்தலுக்கும் சுயநலம் அவசியமே. ஆனால் இனத்தின் தொடர்ச்சிக்கு/விருத்திக்குச் சவாலான/ஆபத்தை விளைவிக்கும் ஒரு சூழ்நிலை இல்லாதவிடத்தில் சுயநலத்துக்கு ஏன் இடம்? "நல்லகாலம்-எங்களுக்கு-நடக்கவில்லை" என்பது, ஒரு அடிப்படையான, தன்னிச்சையான உணர்வா?

சக மனிதன் வழுக்கி விழுந்து நோவதும், களவு போனால் எப்படியிருக்கும் என்பதும், சித்தி அனுபவித்ததைப் போன்றே இன்னும் மற்றவர்கள் அல்லற்படுவார்கள் என்பதும் என்னிடமிருந்து மிகக்குறைந்த பட்சம் ஒரு ஒத்துணர்வையோ அல்லது சித்திக்கு இருந்தது போன்று மற்றவர்களின் பாதுகாப்புக்காக (ஒன்றையும் அது சாதிக்காதெனினும்) கவலையையோ, அதற்கு ஆவன செய்வதோ பற்றிய சிந்தனையாகவோ இல்லாமல், எனக்கும் எனது நெருங்கின வட்டம் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனையில்லை என்றதுடன் நிம்மதியாக உணரத் தலைப்படுவது எனக்குக் குற்றவுணர்ச்சியையே தருகிறது. நான் என்ன செய்யட்டும் அதைப் போக்கிக் கொள்வதற்கு? ஏனையவர்களையும் என்னைப் போலவே ஏன் பார்ப்பதில்லை? அவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று சில வேளைகளில் நினைக்கத் தோன்றுகிறது. கொடூரமான சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. (உணர்வுகள் மரத்துப் போக ஆரம்பிப்பது இப்படித்தானா?)

(ஒவ்வொருமுறையும் இறப்புகள் குறித்தும் காயங்கள் தாக்கங்கள் குறித்தும் பேசப்படுகிற பொழுதில் உணராத வலிகள் ஏன் சிற்சில ஒற்றைக்கணங்களில் தம் கோரம் காட்டிப் போகவேண்டும்? டிசேயின் பதிவொன்றில் சில மரணங்கள் மட்டுமே உலுக்குவதைப் பற்றியும், (பெயரிலியினது என்று நினைக்கிறேன்) எங்கேயாவது செய்தியில் குண்டுவெடிப்பில் பத்துப் பேர் இறந்தார்களென்று சொன்னால் அவ்வளவுதானா, ----ம் ஆண்டு ----இல் நடந்த குண்டு வெடிப்பில் இத்தனைபேர் கொல்லப்பட்டார்களென்று கணக்குச் சொல்வதுமாய் இருக்கிற எங்களைப்பற்றியும் வாசித்தது, சொல்லத் தெரியாத ஒரு வேதனையான உணர்வுடன் நான் மட்டுமே இப்படி உணர்வதில்லை என்கிற சங்கடமான நிம்மதியையும் அங்கீகரிப்பையும் தந்தது.)

இப்படியெல்லாம் உணர்வது எனக்கே என்னை ஒரு கொடூரச்சியாய்க் காட்டுகிறது. என்னைக் குறித்து எனக்கே பயமெழுகிற வேளைகளிலும் "நல்லகாலம்-நாங்கள்-தப்பிவிட்டோம்"என்கிற அற்ப நிம்மதி (தொலைந்து போகாமல்) தலையெடுக்கிற நாளிலும் எவ்வளவு தூரம் நான் ஒரு மனிதப்பிறவியாக இருக்கிறேன் என்பது விளங்கித் தொலைக்கிறது. விளக்கம் அழகானதாக இல்லை என்பதைத் தவிர சொல்லிக் கொள்வதற்கு வேறில்லை.

பெட்டகம்