Showing posts with label ஒரு காலத்தில. Show all posts
Showing posts with label ஒரு காலத்தில. Show all posts

மீண்டு

என் வீட்டை நிரப்பி மிதக்கிறது துயர். எப்போது அது தோள்மீதேறி அழுங்குப்பிடியாக மனதை பற்றிக் கொள்ளும் என்பதை அறிந்து கொள்ள முடிவதில்லை என்பதுதான் எரிச்சலாக இருக்கிறது. சிலநாட்களில் பாவம் பார்த்து அது உலாத்தப் போய்விடுகிறது. அப்படி அது இல்லாதிருக்கும் சில நேரங்களில் முப்பதுக்கும் இருபதுக்கும் இடையிலான ஆண்டுகளுக்கு முற்பட்டதொரு உலகத்தின் காட்சிகளும் ஓசைகளும் என்னை உயிர்ப்பிக்கின்றன. 

தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து இரண்டாயிரத்தின் ஆரம்ப ஆண்டுகள் வரை சில அன்றாடமும், விழா நாட்களும், விடுமுறைக்கு வந்திருக்கும் உறவுகளும், திருமணங்களும், திவசமும், சின்னஞ் சிறு குழந்தைகளும்  வளர்ந்த இரண்டாம் முறைக் குழந்தைகளும், நண்பர்களும், உறவினர்களும், இசைத்தலும், ஆடலும், பல்லுக்கொழுக்கட்டைகளும், செல்லங்களும், முறைப்புகளும், மாலை விளையாட்டுகளும் பதிவு செய்யப்பட்ட அற்புதமான ஒரு காணொளித் தொகுப்பு என்னைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. 

என் மனதை இப்போது நிரப்பும் சந்தேகங்கள், பயங்கள், அந்தரிப்புகள் இல்லாத என்னை நான் அவ்வுலகத்தில் காண்கிறேன். என்ன அழகு! சுயநம்பிக்கை இருந்தது. என்மீது எவ்வளவு அன்பிருந்தது (என்னுள்ளிருந்தும், மற்றவர்களிடமிருந்தும்). என்ன செய்தாலும் அந்த அன்பு இருக்கும் என்பது மனதின் அடியாழத்தில் பதிந்திருந்தது. நானாக இருந்தேன். ஒருவித வார்ப்புருக்குள்ளும் என்னைப் புகுத்திக் கொள்ளாமல் கவலையற்று நானாய் இருந்ததைக் காண்கிறேன். அந்த என்னைப் பார்க்கையில் ஆசையாக இருக்கிறது. தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்தும், தானாய் இருக்கச் சுதந்திரம் உடைய, அசைக்க முடியாத் தன்னம்பிக்கை கொண்ட ஒருத்தி. 

இப்போதைய என்னைப் பார்த்தால் அவளுக்கு என்ன தோன்றும்? ஏன் இப்படி இருக்கிறேன் என்ற வினா பல கோணங்களிலிருந்தும் தலை தூக்குமாயிருக்கும். அவளை ஞாபகப்படுத்திக் கொள்ள முயல்கிறேன்.  அவளாய்  இன்னுமிருப்பின் நான் என்ன செய்ய/சொல்லக்கூடும் என்று எண்ணிக்கொள்ளத் தோன்றுகிறது. 

அவள் துணிவின் வெளிச்சத்தில் இப்போதுள்ள அறிவையும் அனுவபத்தையும் கொண்டு.

 

 

இறப்புப் பற்றிய என் குறிப்பு

மரணம் தொட்ட முதல் கணமென்று தம் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருப்பவர்களோடு சேர்ந்து விபத்தைப் பற்றி எழுத முடியாதவாறு மரணம் தொட்ட பொழுதிலேயே அதனோடு போய் விட்ட கார்த்திகேயனுக்கு அஞ்சலி.

இறப்புத் தேவைதான். அல்லாவிடில் உலகின் சமநிலை குழம்பிவிடும். மரணம் குறித்த பயம் கிட்டத்தட்ட எல்லாருக்கும் மனதின் அடியில் உறங்கிக் கிடக்கும். அதை மேல் மட்டத்திற்குக் கொண்டுவருவது தன் வட்டத்தில் நிகழும் இழப்பே. சில வேளைகளில் சில மரணங்கள் நிம்மதியைத் தந்தாலும் பல வேளைகளில் மனக் கிலேசத்தையே உண்டு பண்ணுகின்றன. அதுவும் பழகிய ஒருத்தரின் மரணம் பல நாட்களுக்கு மனதில் தேங்கும்.

மரணமென்று எனக்கு அறிமுகமாகிய போது எனக்குப் பத்துப் பதினொரு வயதிருக்கலாம். முதலாவது எம்மியோடு கூடவே செல்லும் புத்தவிகாரையின் பிக்குவும் இரண்டாவதாக எனது ஆசிரிரியரின் தங்கையும். பிக்குவுக்குத் தலை பிளந்ததால் ஏற்பட்ட காயம் ஏற்படுத்திய மரணம். மருத்துவமனையிலிருந்தவரைப் பார்த்த ஞாபகம் இன்னும் அவ்வப்போது தலைகாட்டும். ஆசிரியரின் தங்கை நஞ்சுண்டு தற்கொலை. வீட்டே தான் அலறியடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். ஒன்றும் செய்யவேண்டிய தேவையிருக்கவில்லை. வழியிலேயே உயிர் பிரிந்திருந்தது. அதற்கு முதல் 3 நாட்களுக்கு முன்னர் தான் கல்வி+இன்பச் சுற்றுலா ரியூஷன் மாணவர்களோடு போய் வந்திருந்தார்கள். அதன் போதெல்லாம் உற்சாகமாய் இருந்த பெண். என்ன ஏதென்று தெரியவில்லை. அரளிவிதை கைகொடுத்திருந்தது அவவின் மரணத்தை நிறைவேற்ற. அவவின் கணவரைக் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. நெருங்கியவர்களின் இறப்பு எப்படிப் பாதிக்கும் என்று கண்கூடாகப் பார்த்து உணர்ந்து கொண்டேன் அவவின் கணவரையும் அண்ணாவையும் பார்த்து. இன்னும் ஞாபகமிருக்கிறது, எத்தனை பேருடைய நாவில் எத்துணை கதைகள் அவவைப் பற்றியும், அவவின் இறப்பிற்கான காரணி பற்றியும். அவர்களின் சொல்லும் செயலும் மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளக் காலாக இருந்தது.

நெருங்கிய உறவினர்களில் அறுவர் இறந்த போதும், அதில் மூவரின் செத்த வீட்டுக்குத் தான் போகக்கிடைத்தது. இறந்து போன அத்தையுடனான என் கடைசி ஞாபகம் எதற்கென்றே ஞாபகமில்லாத அவவுடனான அற்பச் சண்டை. மிகவும் பாதித்த மரணங்கள் இரண்டு. எம்மியினதும். ரீச்சரினதும். எம்மியைப் போன்றல்லாது ரீச்சரைக் கடைசியாகக் கூட பார்க்கக் கிடைக்கவில்லை. வெளிநாட்டு வாழ்க்கைக்குக் கொடுக்கும் விலையில் இதுவும் ஒன்று. ஆனால் காணாததும் ஒரு வகையில் நல்லதுதானோ! இனிமையாய் வழியனுப்பி வைத்த முகம் தானே மனதில் நிற்கிறது. அசைவின்றிக் கிடக்கும் அவவை என்னால் பார்த்திருக்க/அதை மனதில் உள்வாங்கியிருந்திருக்க முடியாது.

சில செத்த வீடுகள் களைகட்டும் - சில பல வேளைகளில் திராவகங்களின் உதவியொடும். ஆனாலும் சுற்றத்தின் அழகு மரணவீட்டில்தான் வெளிப்படும். தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியமானவை இறந்தவர் காட்டிய அன்பு & சொத்து. பழைய குடும்பக் கதைகள் வெளிவரும். சுவாரசியம் குன்றாது சொல்வதில் விண்ணர்கள் புண்ணியத்தில். கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றியிருக்கும். சிலவேளைகளில் திருமணப்பேச்சுகளும் தொடக்கப்படும். ஒரு இறப்பு பலநாள் காணாதோருக்கு ஒரு சந்திப்புச் சந்தர்ப்பமாக அமைவதனாலாக இருக்கலாம்.

செத்த வீடுகளில் நான் செய்ததும் இப்போதும் செய்யத் தலைப்படுவதும் ஒன்றே ஒன்றுதான். ஏனென்று தெரியவில்லை - சவத்தை உற்றுப் பார்த்து நெஞ்சுக்கூடு ஏறி இறங்குகிறதா எனப் பார்ப்பேன்.. என்னதான் நான் ஊன்றிப் பார்த்தாலும், உற்றவர் அழுது அரற்றினாலும் மாண்டவர் மீண்டவராவதில்லை. போனவர் போனவர்தான். செத்தவீடு நடந்து கொஞ்ச நாளைக்கு இறப்பும் இருப்பும் பற்றிய கேள்விகள் & பயங்களால் மனம் நிரம்பியிருக்கும். நாள் போகப்போக உச்சத்திலிருந்து பழையபடி அவை அடிமனதுக்குக் குடிபெயரும்...இன்னொரு இறப்பு - தணலை ஊதி நெருப்பாக்குவது போன்று - அவற்றைத் தட்டியெழுப்பும் வரை.

இது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது: மரணம் மனிதரை மறப்பதில்லை, அவர்கள்தான் மரணத்தை மறந்து விடுகிறார்கள்.

பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I I

பெரியம்மா வீட்டில் எனக்குத் தெரிந்து எப்போதும் ஆடு, மாடு, நாய், பூனை, மைனா, கிளி, கோழி என்று ஒரு விலங்குப் படையே வீட்டில நிற்கும். பெரியப்பா காலமை எழும்பி தேத்தண்ணி குடிச்சிட்டு பலாவிலை குத்தப் போவார். அவரோட நடந்து நடந்து ஆட்டுக்கு கிளிசரியாக் குழை பிடுங்கி, கோழிக்கு தீன் போட்டு வாறது எவ்வளவு சுகம் தெரியுமா!

இப்ப போனால், பெரியம்மா-பெரியப்பா இல்லாத வீட்டில், மாடும் ஒற்றை மைனாவும் ஐந்தாறு கோழிகளும் இரண்டு நாய்களும் இரண்டோ மூன்று ஆடுகளுமே! பலாவிலைகளும் கம்பியில் கோர்க்க ஆளின்றி சும்மா விழுந்து கிடக்கின்றன. :O(

வாசற்படித் தூணில் அல்லது வீட்டின் பின்புறத்திலே கட்டிப் போடப்பட்டிருக்கும் நாய்கள். ஆண்டுக்கு ஒன்றிரண்டு தரம் மட்டுமே எங்களைக் கண்டாலும், ஞாபகம் வைத்திருந்துக்கும். உடம்பில் ஒரு துண்டு சதையையும் கேட்பதில்லை. நல்ல நாய்கள். தேவையான அளவு சாப்பாடு போட்ட பெரியம்மாக்கு ஒரு "ஓ".

அவவின் வீடு வடிவானது. "ட" வடிவில். முன் கூடத்தைத் தாண்டிப் போனால் கூட்டுக்குள்ளிருந்து "ராணி...ராணி" என்று பெரியம்மாவைக் கூப்பிடும் கிளிகள். வேறு சில சொற்களும் அவற்றுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத்தான் மறந்து போய்விட்டது. மைனாக்கள் பேசி அங்கே தான் நான் பார்த்தது. என்ன பேசின என்று கேட்கிறீங்களா? அதை யார் கேட்டது..நான் தான் வீட்டுக்குள்ளே போய் பயணப்பையை வைத்த கையோடு, பெரியம்மாக்கு முத்தம் கொடுத்து வீட்டு ஆட்டுக் குட்டிகளைப் பார்க்க ஒரே ஒட்டமாக ஓடி விடுவேனே! முகம் கழுவு / குளிச்சிட்டு வா - இதெல்லாம் என் காதுக்கு வந்து சேர முதல் காற்றில கரைந்து விடும். அப்படியே விழுந்தாலும் அதை யார் கேட்டது!

அங்கேயிருந்த ஒரு ஆட்டுக்கு என்னைப் பிடிப்பதில்லை. முட்ட வரும். முட்ட வரும் என்று சொல்லத்தான் இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது.

அப்ப எனக்கு 2 - 3 வயது இருக்குமாம். (அதென்னா இருக்கு"மாம்"? நடந்தது எனக்கு ஞாபகமில்லை..வீட்டில எம்மியும் அம்மாவும் சொல்லக் கேட்டது.) ஒரு நாள் வீட்டில சீனி முடிஞ்சிட்டுதாம்/அல்லது முடியிற தறுவாயில இருந்துதாம். வீட்டில எம்மியும் பெரியண்ணாவும் நானும் தானாம் அந்த நேரம் இருந்ததனாங்க. வேற வேலைகளும் வீட்டில இருந்த படியா எம்மி போய் பெரியண்ணாட்ட கேட்டிருக்கிறா கடைக்குப் போய் சீனி வாங்கி
வரச் சொல்லி. அவரும் ஒம் என்று சொன்னாராம். கொஞ்ச நேரத்தால பாத்தா ஆள் இன்னும் வீட்டிலயே புத்தகம் வாசிச்சுக் கொண்டிருந்தாராம்.

எம்மி (எம்மி யாரென்று தெரியாதவர்கள் இங்கே
பார்க்கவும்) சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் "தங்கச்சியப் பாத்துக் கொள்ளு" என்டிட்டு கடைக்கு வெளிக்கிட்டிருக்கிறா. எங்கட ஆள் என்ன செய்தார்...புத்தகம் வாசிக்கிறார். தங்கச்சிக்காரி விளையாடிக் கொண்டிருக்கிறா. புத்தக மன்னன் அதை வாசிச்சு முடிச்சிட்டு நிமிர்ந்தா... "ஞானம்..தங்கச்சிய காணம்!".

வீடெல்லாம் தேடி ..தெருவெல்லாம் தேடிக் களைச்சு பயத்தில வேர்த்து விறுவிறுத்துப் போய் இருக்கிறாராம் எம்மி வரேக்குள்ள. இங்கே இப்பிடிக் களேபரம் ஆகுமென்று தெரியாம திறந்திருந்த படலையால வெளியில போன குட்டி ஷ்ரேயா தத்தக்க பித்தக்க என்று நடந்து போயிருக்கிறா. ஒரு மாடு முட்ட ஆயத்தமா வந்துதாம். தெருவில நின்ற ஒரு ஆள் உடன தூக்கி எடுத்திட்டாராம். ஆரடா பிள்ளை .. தனிய "வீரமா" நடந்து வருது என்று பார்த்ததில அதில நின்ற ஒருவருக்குத் தெரிந்து விட்டது. இது வைத்தியரம்மாட பிள்ளை என்று கண்டு கொண்டதில் வீட்டிலே கொண்டு வந்து விட்டார்களாம். (இல்லாட்டி இன்றைக்கு நட்சத்திரமாக இருந்து இப்படியெல்லாம் எழுதி உங்களை இம்சைப் படுத்தக் கிடைச்சிருக்குமா!) அன்றைக்கு அண்ணாப்பிள்ளையர் நல்லா வாங்கியிருப்பார்! இப்படிக் கூத்துக் காட்டியும், இவரின் "கொதி" வேலையை அப்பாவிடம் போட்டுக் கொடுத்தும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும், அவர் செல்லம்தான்.

சரி..சரி பெரியம்மாவின் ஆடு முட்ட வரும்...ஓடி வந்து விடுவேன். பிறகென்ன.. கோழிகளைத் துரத்துவதும்..தப்பியோட முயற்சிக்கும் பூனையை வலுக்கட்டாயமா தூக்கிக் கொண்டு திரிவதும் என்று மிச்சப் பொழுதுகள் போகும். மிருகங்களோடு கதைப்பது ஒரு அலாதி இன்பம். திருப்பிக் கதைக்க மாட்டா. சில வேளைகளில் ஆசிரியை - மாணவர் விளையாடும் போது "கணக்கு சரியாச் செய்யாத மொக்கு ஆட்டுக் குட்டிக்கு" மெல்லிய குட்டும் விழும். கொஞ்ஞ்ஞ்ஞ்சம் பொறுங்க!!! நான் குட்டினதைப் போய் அம்மாடச் சொல்லியிருக்குமோ ஆட்டுக் குட்டி? அம்மா ஆடு "குட்டினால் முட்டுவேன்" என்று நினைச்சுக் கொண்டுதான் எனக்குக் கிட்ட வந்திருக்க வேணும். :O|


ஆனாலும் எதிர்பார்ப்புகளின்றி அன்பு செலுத்துறதில ஆடு, மாடு, நாய், பூனைகளுக்கு இணையில்லை...என்ன சொல்றீங்க!

பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் ஒரு நாய், ஒரு பூனை. இவ்வளவும் தான் வளர்கையில் செல்லப்பிராணிகள். அவற்றுக்கும் எனக்குமான தொடர்பை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை எழுதச் சொல்லும் "எனது செல்லப்பிராணி" கட்டுரையின் 5 வசனங்களில் அடக்கி விடலாம். அவ்வளவு நெருக்கம். அதற்காக நாய்/பூனை பிடிக்காதென்றில்லை. பிடிக்கும் என்றுமில்லை. கிட்டே வந்தால்..கடிக்க முயற்சிக்காவிட்டால் தடவிக் கொடுப்பேன்.

எங்கள் பூனை (பெயர் ஞாபகமில்லை..அதனால் இப்போதைக்கு 'பூனை' என்றே வைத்துக் கொள்வோம்.) வீட்டிற்கு வந்தது எப்படி என்று சொல்கிறேன். நாங்கள் இருந்தது அரச உத்தியோகத்தவருக்கென்று ஒதுக்கப்பட்ட மனையொன்றில்.(குவார்ட்டர்ஸ்) பக்கத்தில் ஓரளவு பெரிய காணி. அதற்குள் ஒரு கிணறு(இல்லை..பூனை இதற்குள் இருந்து எடுக்கப்படவில்லை!!) ஏனோ தெரியவில்லை, ஒரு சிறிய (2 அடி X 4 அடி) செவ்வகத் துவாரம் தவிர்த்து கிணற்றின் மேல் புறம் மூடப்பட்டிருக்கும். வழக்கம் போல கிணற்றுவாசிகள்: தவளைகள் & ஒன்றிரண்டு மீன்கள்.கிணற்றிற்கு10 - 15 மீற்றர் தள்ளி ஊர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு. அதற்குப் பக்கத்தில் ஒரு பனை மரம். அப்பாலே 4 அடி எடுத்தால் தெரு. தெருவிலிருந்து வீட்டிற்கு வரும் ஒரு வழி இந்த வெளிநோயளர் பிரிவைத் தாண்டி வருவது. ஒரு நாள் எங்கள் வீட்டுக் கருணைக்கந்தன், பிராணிகளின் உயிர்காப்போன் , போனதொரு பிறவியில் சிபிமன்னனாயிருந்திருக்கக்கூடிய எனது சின்னண்ணா (இதை வாசிச்சா எனக்கு இருக்கு!;O) ) அவ்வழியால் நடந்து வந்துகொண்டிருக்கையில் வழக்கமா எல்லாப் பூனையும் கத்துற மாதிரியே 'மியாவ்..மியாவ்' என்று சத்தம் கேட்டிருக்கிறது. சத்தம் வருகிறது...உருவத்தைக் காணவில்லை. தேடியதில் கண்டு பிடித்தது எங்கே தெரியுமா? பனைமரத்தில்!! அம்மரம் மற்றப் பனைகளோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் குட்டையானது. யாரையோ பிடித்து மரத்திலிருந்து பூனையை இறக்கினார்களாம். வீட்டில் வைத்துப் பராமரித்தார் அண்ணா. அவருக்கு பூனைகள் என்றால் நல்ல விருப்பம் என நினைக்கிறேன். (ஆனால் தவளையைக் கண்டால் வேறே வினையே வேண்டாம்!! கரப்பானைக் கண்டால் (வீராவேசம்(!?) வரும் வரை) நான் செய்வது போல கதிரையிலிருந்து இறங்க மாட்டார்!!) :OD அதுதான் பூனை வந்த கதை.

நாய் இருந்தது என்று சொன்னேன் தானே..நாய் எப்படி வீட்டே வந்தது..யாரேனும் காப்பாற்றினார்களா என்றெல்லாம் தெரியாது. சூரன் என்று பெயர் வைத்திருந்தார்கள் அண்ணாமார். நல்ல முசுப்பாத்தி. ஒருநாள், ஆளுயர நிலைக்கண்ணாடி, இரண்டு இழுப்பறைகள் கொண்ட ஒரு சின்ன தளபாடம்(Dressing table) இருக்கிற அறைக்குள்ளே போய்விட்டது. வெளியே எவ்வளவு கூப்பிட்டும் வரவில்லை. கண்ணாடிக்கு முன்னுக்குப் போய் நின்றது தான் தாமதம் குரைக்க ஆரம்பித்தது. நிறுத்தவே முடியவில்லை. கண்ணாடியை நகங்களால் கீறி வைத்தது. (கண்ணாடியின் வீரத்தழும்புகளை இன்றக்கும் காணலாம்!!).

இவனுக்கு மட்டும் மிருக வைத்தியர் வந்து போவா. பூனையை ஏனென்றும் இல்லை(அதை நாங்க துளசி மாதிரி அக்கறையா ஒன்றும் பார்த்துக்கொள்ளுறதுமில்ல. அது தன்பாட்டுக்குச் சுத்திவிட்டு வந்து போடுறதைச் சாப்பிடும். அடுப்புக்குக் கிட்ட படுத்துக் கிடக்கும்..பிறகு திரும்ப ஊர்சுத்தப் போகும்.) அந்த வைத்தியருக்கு ஒரு கால் போலியோவோ ஏதோ வந்து, கொஞ்சம் சூம்பினது போலிருக்கும். இழுத்து இழுத்துதான் நடப்பா. வடிவான நீட்டுப் பாவாடை(காலை மறைப்பதற்காக?) தான் அணிவா. ஒன்றின் டிசைன் இன்னும் ஞாபகமிருக்கிறது. கடும்நீல நிறப் பின்னணியில் சின்னச்சின்னதாக மயிலிறகு வரைந்திருந்தது. அவவுக்கு வடிவாக இருக்கும்.

சூரன் ஒருநாள் எழும்பக் கஷ்டப்பட்டு அதன் கூட்டுக்குள்ளேயே படுத்துக் கிடந்தது. கண்ணைப் பார்த்தால் கருவிழியில் வெண்படலம் தெரிந்தது. ஆளனுப்பி மிருக வைத்தியரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அவ பார்த்து விட்டுச் சொன்னா இரவு பாம்பு கடித்திருக்கிறதென்று. அன்றைக்கே சூரன் செத்துப் போனான்.

அதற்குப் பிறகு வடிவான மஞ்சள், சாம்பல் நிறங்களில், கோழிக்குஞ்சுகள் 10 வாங்கி வளர்த்தேன். அம்மாவின் "மருந்தக'த்துக்கு வெளியே ஒரு கூடடித்து கம்பி வலை போட்டு பத்துக் குஞ்சையும் குடி வைத்தோம். காலையில் திறந்து விடுவதும், பிறகு பள்ளிக்கூடத்தால் வந்து கொஞ்ச நேரம் விளையாடிக் கூட்டில் அடைப்பதும் (அடைக்க முயற்சிப்பதும்) தான் என் வேலை. நடுவில் தீனி போட்டு, பருந்து கொத்திக் கொண்டு போகாமல், யாரும் களவெடுக்காமல் பார்த்துக் கொள்வது இவ!
ஒருநாள் இரவு யாரோ பத்தையும் களவெடுத்துப் போய் விட்டார்கள். :O( ஒரே அழுகை.

அதுக்குப் பிறகு வீட்டில மிருகங்கள் வளர்க்கவில்லை. ஆனா மிருகங்களோடு விளையாட்டுக்குக் குறைவிருக்கவில்லை.

(தொடரும்)

பவள மல்லிகை

பாட்டி வீடு. பெயரைச் சொல்வதை விட, புளியடியார் என்றால் தான் இன்னும் வடிவா ஊருக்குள்ளே தெரியும். ஒரு சிவப்பு பெரிய 'கேற்'. ஓட்டிக் கொண்டு வரும் (ஒரு அளவான) வேகத்தில சைக்கிள அதில் மோதினா, கொளுக்கியும் போடாமலிருந்தா, தகரத்தில அடி வாங்கின சத்தத்துடன் திறக்கும். படலையிலிருந்து வீட்டுக்கு 25மீ இருக்கும். 2 பக்கத்திலும் பூமரங்கள். நடுவிலே கொஞ்சம் வெண்மலும் செம்மணலும் கலந்த
நிறத்தில் பாதை. என்னென்ன பூமரம் என்றெல்லாம் ஞாபகமில்லை. போய் 8 ஆண்டுகளாகினதினால் என்று சாட்டு சொல்ல மாட்டேன். அங்கே போனபோதெல்லாம் விளையாட்டும், கிடைக்கிற விதம் விதமான சாப்பாடுமே பிரதானமாக மனதில் முன்னிற்கும். மச்சி(மச்சாள் வயதுக்கு நிறையவே மூத்தவ என்பதால் இப்படித்தான் கூப்பிடுவது)சின்னப்பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்பு எடுப்பா. அப்ப அங்கே நானும் போயிருந்து சம வயதுப் பிள்ளைகளுடன் இருந்து படிப்பேன். எல்லா நாளும் சரியாக தமிழும் எழுதி, கணக்கும் செய்து வந்திருந்தேன்...எப்பயாவது தடுக்குப்படவேணும் என்கிற நியதிப்படி பால் + சோறு = பால்ச்சோறு என்று எழுதி பிழை விட்டது நல்ல ஞாபகம். இதே வகுப்பிலிருந்த பையன் நான் இந்தச் சம்பவம் நடந்து 3- 4 வருடங்களுக்குப் பிறகு (அந்த சில வருட இடைவெளியில் 10- 11 வயதுக்குரிய வளர்ச்சி வர ஆரம்பித்திருந்தது) விடுமுறைக்கு பாட்டி வீட்ட போன போது மச்சாளைக் கேட்டான் "முதல் ஒராள் வருவாவே..அவா இப்ப வாறேல்லையோ" என்று. மச்சாள் சொன்னா "அவதான் இவ" என்று. அந்தப் பையனின் கண் விரிந்தது. சில வினாடிகள் இமைக்காது பார்த்தவன் "வளந்து போனா..அதுதான் அடையாளம் தெரியேல்ல" என்று சொல்லிவிட்டு, தந்த கணக்கை செய்ய தொடங்கி விட்டான். ஏனடா தன்னில் இப்படி வளத்தி இல்லை என்று யோசித்திருப்பானோ என்னவோ!! ;o)

வீட்டுக்குப் போகிற வழியில் பூமரம் நிற்கும்..என்னென்ன என்று தெரியாது என்று சொன்னேன் தானே, ஆனால் நல்ல வடிவானதாக இருக்கும்.கனாஸ் வாழை இருந்ததாக ஞாபகம். மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்களுடையது. அப்படியே நேரே போனால் வாசல்.இடப்பக்கமா முற்றம் தொடரும். முற்றத்திற்கும் வீட்டிலிருந்து இன்னொரு வாசல். ஒரு கூடத்தில் 2ம் சந்தித்து வலப்பக்கமுள்ள கதவுக்குள்ளால் போனால்வீட்டின் ஹோல் வரும். நுழைந்தவுடன் வலப்பக்கம் கேற்றை பார்க்கும் சாளரம். நேர் முன்னல் சாமியறை. அதுக்குப் பக்கத்தில் பாட்டி/மச்சாள்/அத்தையின் அறை. அதைத்தாண்டிப் போனால் மாமி&மாமாவின் ஒரே சாய்மணைக் கதிரை.கதிரைக்கு இடப்பக்கத்தில் ஒரு 3 அடி தள்ளி சாப்பாட்டு மேசை. அதுக்கும் இடப்பக்கமாக ஒரு சின்ன ஓடை.இதன் கதவு முதல் சொன்ன முற்றத்துக்குள் திறக்கும். இது தான் அந்த வீட்டிலேயே பிடித்த இடம்...சைக்கிள் வைக்கும் இடம் & புத்தக அடுக்கு இருந்த இடம்.

சாய்மணைக்கதிரை தாண்டினால் ஒரு சின்ன கூடம்.இதற்கு இடப்பக்கத்தில் சமையலறை.வலப்பக்கத்தில் மாமா/மாமியின் அறை. இதை தாண்டினா கொல்லைப்புறத்துக்கு போகும் வாசல்.தரை ஒரு 5 அடிக்கு 15 அடி சாணியால் மெழுகியிருக்கும்.இதில் இடப்புறம்தான் 2 வாங்கு மேசை போட்டு மச்சாள் வகுப்பு நடத்துவது. வலப்புறம் ஒரு குகை மாதிரி.அதற்குள் இல்லாத சாமானே இருக்காது!!! கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள்!!). கிணற்றடி வேலியில் கொவ்வைக் கொடி படர்ந்திருக்கும்.

கிணற்றுப்பக்கம் போகாமல் பின்புற வாசலிலிருந்து நேரே பார்த்தால்..ஆகா!!அந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா?) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு! பின்னேரத்தில் அதன் வாசம்..ம்ம்ம்...நினைத்துப் பார்க்கும் போது அதன் வாசம் இன்னும் என் மூக்கில்.

மாமி/அத்தை இதில் பூவெடுத்து சாமிக்கு வைப்பார்களோ என்னவோ! விடுமுறைக்குப் போகையில் என்னென்ன முஸ்பாத்தி பண்ணலாம் என்பதே யோசனையாக இருக்கும். பெரியம்மா பெரியப்பா பாட்டி, மாமி மாமா அத்தை மச்சாள் இவர்களெல்லாம் விடுமுறையின் அங்கங்கள். அவர்களை அவர்களாகவே, தனி நபர்களாக பார்த்ததேயில்லை. என் மனதில் அவரவருக்கென்று ஒரு பிம்பம். அதற்கூடாகவே பார்த்திருக்கிறேன். இப்போ யோசிக்கும் போது தான் மனதில் உறைக்கிறது. இன்னொருமுறை இன்ஷா அல்லா போகக் கிடைத்தால் மாமி, அத்தை, பெரியம்மா என்று நிறக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவர்களாகவே பார்ப்பேன் என தோன்றுகிறது. இலங்கையிலிருந்து புறப்பட்டதிலிருந்து நிறைய கற்றிருக்கிறேன். பிறரைப் பார்ப்பதிலும் ஒரு கொஞ்சம் தெளிவும், முதிர்ச்சியும் வந்துள்ளது என்றும் நினைக்கிறேன். இப்போது போய் பார்க்க முடிந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய வாசம் வீசுகையில் அதை அப்படியே உணரக்கிடைக்கும்.

பெட்டகம்