இன்னொருமுறை வேண்டும்..

பள்ளிக்கூட விடுமுறை வந்தால் ஊரிலேயே இருப்பதென்பது அரிது. எங்கேயாவது போவோம். அதுக்காக ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒவ்வொரு ஊர் போய்ப் பார்த்தோம் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. கொழும்பு கம்பஹா, யாழ்ப்பாணம். இவ்வளவும்தான். சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ள மாதிரி.

இவற்றிலேயும் கம்பஹா போனால் போடுற கும்மாளம்! அந்த ஊர்களில் நிலத்தில் சிறு சிறு கற்கள் நிறையக்கிடக்கும். செருப்பில்லாமல் முதல் இரண்டு நாட்களுக்கு நடக்க ஏலாம இருக்கும். பிறகு பழகிவிடும். பழகின பிறகு வெறுங்காலோட நடக்கிறதென்ன..ஓடியும் திரியலாம். (இப்ப போனா எல்லா நாளும் செருப்புத் தேவைப்படும் ..பின்னென்ன.. காப்பெட்டிலயும் பளிங்குத்தரையிலயும் தானே நடக்கிறது!)

எம்மி வீட்டில் அவவின் தம்பி மகள் என்னை விட ஒரு வயது மூத்தவ. அவவுடனும், பக்கத்திலிருக்கும் அவவின் தோழிகளுடனும் சேர்ந்து ஒரே விளையாட்டுத்தான். வீட்டுக்குக் கிணறு இருந்தாலும் "பல்லெஹா லிந்த"(கீழ் கிணறு) ல் குளிக்கும் சுகமே தனி. கிணறு என்று பெயர்தான் தவிர அங்கே சீமெந்தும் இல்லை துலாவும் இல்லை. மேடான இடத்தில் உள்ள வீட்டு வழியாக நடந்து வந்தால், வழி நெடுக இறப்பர், தென்னை, கமுகு, முந்திரிகை, கொறுக்காப்புளி, நமினங், பலா, வில்வம், விளா, மா, இவற்றுடன் பெயர் மறந்துவிட்ட & தெரியா மரங்களும் எலுமிச்சை, மிளகாய், கறுவா, கோப்பிச் செடிகளும் வளர்ந்து இருக்கும். எத்தனையோ ஆண்டாய் வீட்டிலிருந்து கிணற்றுக்கு நடந்த ஒற்றையடிப் பாதை பச்சைப் புல்லுக்கு நடுவில், ஆறொன்று வளைந்து நெளிந்து ஓடுவதைப் போல சிறுகல் நிரம்பிக் கிடக்கும். பள்ளத்திலே ஒரு 10 -12 அடி ஆழத்துக்கு கிண்டின வளைந்த மூலைகளுள்ள ஒரு 6 அடி x 7 அடி குழிதான் கிணறு. மேல் மட்டத்தில் தண்டவாளத்துக்கு ஸ்லீப்பர் கட்டை போல பலகைகள் (ஆனால் அடுத்தடுத்துப்) போட்டிருக்கும். மேட்டுப்பகுதியிலிருந்து இறங்கி வருவதற்கு மண்ணும் சுற்றி நின்ற மரங்களின் இயற்கையான வேரின் ஓட்டமும் கொண்டு அமைத்த படிகள். குளித்த/கழுவிய நீர் போக ஒரு ஓடை மாதிரிச் செய்திருப்பார்கள். கிடுகு பின்னி ஊற விட்டிருப்பார்கள். உடுப்புத் தோய்க்க ஒரு கல். கிணற்றுக்குப் பக்கத்தில் சின்னதொரு மண்மேடு. அதற்கப்பால் பசுமையான வயல். அரை மணி நேரத்திலே மூன்று நான்கு தடவை கேட்கும் தொடர்வண்டிச் சத்தம், மரத்தில் இருந்து கூவும் குயில் மற்றும் பெயர் தெரியாப் பறவைகள் என்று வெயில் தெரியாமல் அந்தக் கிணற்றில் கை வாளியால் அள்ளிக் குளிப்பது தனிச் சுகம். அதுவும் வேறெங்கு போனாலும் தலைக்கு மேல் ஷவரைத் திறந்து நின்று குளித்துப் பழகினால் இந்தக் குளிப்பு சொர்க்கம் மாதிரித்தானே இருக்கும். :O)

குளிக்கப் போவதற்கு இல்லாத ஆயத்தமெல்லாம் செய்வோம். அள்ளிக்குளிக்கும் வாளிக்குள்ளே குளித்த பின் அணியும் ஆடையும் சவர்க்காரமும் துவாயும். சொன்ன அனைவரும் வர முதல் நீ போகக்கூடாது என்று "விதிமுறைகளும்" கள்ளமாய் எடுத்துக்கொண்டு போகும் உப்பு மிளகாய்த்தூளும் (எதற்கா? வழியில் மா, நமினங் மரம் இருக்கென்று சொன்னேன் தானே..அதுக்குத்தான்.) இந்த நமினங் ஒரு விதமான பழம். பார்த்தால் காது போன்ற அமைப்பில் சுருக்கங்களுடன் இருக்கும். கடித்த அப்பிளின் உட்புறம் வெண்மையிலிருந்து ஒரு வித சிவப்பாய் மாறுவது போல இதன் நிறமும் மாறும். காலையில் 8 மணி போலத் தொடங்கி மத்தியானம் 12 ௧ மணி வரை போகும் விளையாட்டு. பிறகு குளிக்க ஆயத்தப்படுத்தப் பிரிவது 10 நிமிஷத்துக்கு. பிறகு குளிக்கப் போனவளுகளைத்தேடி யாராவது வரும்மட்டும் ஒன்றரை இரண்டு மணித்தியாலத்துக்கு நீராடல்தான். சில வேளைகளில் அட்டை வரும் என்று பயப்படுத்தினால் அன்றைக்கு சேற்று நிறத்தில் கலங்கிய தண்ணீரில் காலில் வந்து ஒட்டும் இலையும் எனக்கு "அட்டை"தான். மேட்டுப்பகுதிக்குத் தாவினால் தண்ணி(யின் நிறம்) தெளியும் வரை திரும்ப இறங்குவதில்லை! குளித்துமுடித்து உடுப்புக்கழுவி, கழுவின உடுப்பைக் கையிலும் ஒரு வாளி நிறையத் தண்ணியும் கொண்டு வீடுகளுக்குப் போவோம்.

பின்னேரத்தில் புளியங்கொட்டையும் கிரிக்கெட்/எல்லேயும் விளையாடுவோம். படிப்போம். (என்ன படிப்பு.. படத்துக்கு நிறம் பூசிறது தான்) பிறகு ஒரு ஐந்து மணிபோல போய் கறுவா மரத்தின்(செடியின்?) இலைத்தண்டைக் கடித்துச் சுவைத்த படியே மஞ்சாடி பொறுக்கிறது. சின்னனா சிவப்பா பாக்க வடிவா இருக்கும். (அது நிறயச் சேத்துக் கொண்டு மட்டக்களப்புக்குப் போனா, அதில கொஞ்சத்தைக் குடுத்தா, "காய்கள்" சன்னங்களா பாவிக்கப்படுற தன்ட மரத்துவக்கை செல்வம் அண்ணா 2/3 பின்னேரங்களுக்குக் கடன் தருவார்!)
பின்னேரம் சாமியும் கும்மிடவேணும். புத்தருக்கு "சரணம் கச்சாமி" சொல்லி அவ கும்பிடுவா. நான் அதையும் சொல்லி, அதுக்குப் பிறகு ரெண்டு தேவாரமும் படிப்பன். பூவெல்லாம் போட்டு தடல்புடலா பூசையும் நடக்கும். தேவாரம் தெரியாதுதானே என்ட தோழிக்கு. அதனால மத்தியானத்தில "படிக்கிற" நேரத்தில "தேவாரப்பட்டறை" நடக்கும். நல்லாச்சிரிக்கலாம்.. உச்சரிப்பைக் கேட்ட அம்மனோ.. சிவபெருமானோ.. புத்தரோ.. ஓடியே போயிடுவாங்க! ;O)

அங்கே மின்சாரம் 89 - 90ம் ஆண்டில்தான் வந்தது. அது வரை தொலைக்காட்சி இல்லை எங்களைத் தொந்தரவு பண்ண. சிலர் car கலத்திலே பாத்தவங்கதான். இரவில நிலாவோ இல்லையோ.. கட்டாயம் வெளி முற்றத்தில இருந்து ஆளுக்கு ஒவ்வொருவர் மடியில் தலை வச்சிருந்து கதை கேட்பம்.

வெளிக்கிடுறநாள் வந்தா அதைப்போல துக்கம் கிடைக்காது. ஏதோ இனிக்கிடைக்காது மாதிரி உள்ள இளநீரெல்லாம் ஆய்ஞ்சு தரச்சொல்லி வழுக்கல் எல்லாம் போட்டுக் குடிக்கிறதும், உலகத்திலயே கடைசி நாள் போல பலகாரம் சாப்பிட்டுச் சாப்பிட்டு எனக்கென்டு பிரத்தியேகமாக் கட்டின ஊஞ்சல் ஆடி தோழிக்கு பதினைஞ்சு தரம் அடுத்த முறை வரும் போது என்ன செய்வது என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கையில் எம்மி கூப்பிடுவா. "ஏந்தான் இந்த அலுப்புப் பள்ளிக்கூடம் தொடங்குதோ!" என்று பலவிதமான திட்டுக்களோடவே, வெட்டக் கூட்டிக்கொண்டு போறது மாதிரி இழுபட்டுக் கொண்டு போவேன்.

இனிமேல் போனால் அந்த கவலையற்ற வயதில் செய்தவற்றின் நினைவுத்தடங்க்ள் தான் எஞ்சியிருக்கும். சாப்பாட்டுக்கோ குளிப்புக்கோ இருட்டுக்கோ நித்திரைக்கோ சொல்லவோ/கூப்பிடவோ எம்மியிருக்க மாட்டா. நேரத்துக்குத் திரும்பி விட வேண்டும் என்கிறதொரு அர்த்தமில்லாத அவசரமுள்ள ஒரு adult ஆக நான்..

பெட்டகம்