வாழ்வதற்கு ஒரு வண்ணம்


உங்களுக்கென்று மிகப் பிடித்த ஒரு (அல்லது சில/பல) நிறங்கள் இருக்குமல்லவா? எனக்கும் சில நிறங்களிருக்கின்றன. என் மனநிலையைப் பொறுத்து ஒவ்வொரு நேரங்களிலும் ஒவ்வொரு நிறம் - பச்சை நிறமே பாட்டிலே வருவது போல. ஆனாலும் 80 - 85% அது ஒரு குறிப்பிட்ட நீலம். அதை நான் என் இருபதுகளின் ஆரம்பத்தில் கண்டு கொண்டேன். இன்றுவரை அதுவே எனக்கு மிகப் பிடித்தமான நிறமாயிருக்கிறது. 


கிட்டடியில் களை பிடுங்க வேண்டி வந்தது. களை என்று தெரியும். வளரவிடக் கூடாதென்று தெரியும். ஆனாலும் அழகாயிருக்கிறது என்று வளரவிட்டுவிட்டேன். பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு செடியினடியில் முளைத்தது. பார்த்ததன் சீத்துவம் இவ்வளவுதானா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆனால் கொஞ்ச நாள் செடியினைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதனோடு வழமை போல பேசி, தருகிற பழத்திற்கு நன்றி சொல்லவில்லை. எப்படியோ களையும் வந்துவிட்டது. சும்மாவும் இல்லை, கொடியோடு சேர்ந்து அதுவும் கிடுகிடென வளர்ந்தபடி. செடிக்குப் போகவேண்டிய சத்தினைக் களை உறிஞ்சுவதைக் கவனித்தேன். களையை பேசாமல் விட்டால் என்ன என்று தோன்றிய ஒரு பொழுதில்தான் அதனால் செடிக்கேற்படும் சத்துக்குறைபாட்டையும் பூக்கள் குறைந்ததையும் காண நேர்ந்தது. 


அழகாய்த்தானிருந்தாலும் களையைப் பிடுங்கி எறிய வேண்டும் என்று புரிந்த தருணத்தைப் போல ஒரு சின்ன ஆனால் தெட்டத் தெளிவான ஒர் கணத்தில் தான் எனக்கு மிகப் பிடித்தமான நீல நிறத்தை நான் கண்டுகொண்டேன். ஒரு வகை நீலம். மிக அழகான நீலம். அதைப் போல காண்கிற போதெல்லாம் பக்கத்திலிருக்கும் ஆளைக்கூப்பிட்டு, இது மாதிரி ஆனா இதுவல்ல என்று சொல்ல வைக்கிற, எனக்குள் கண்டெடுத்து, எனக்கு வெளியே நான் தேடுகிற நீலம் எனக்கேயானது. எத்தனையோ காட்சிகளில் என் மனக்கண்ணில் தன்னை வெளிப்படுத்துவது. எனக்குப் பல உணர்வுகளை அளிப்பது. என்னைப்பற்றியோ பொதுவாக வாழ்க்கை பற்றியோ நினைத்தால் கட்டாயம் படிவது இந்த நீலம் தான். எனது நீலம்.


அட! இப்படி நடந்துவிட்டதே என்று கடந்து போனதைப் பற்றியோ, நாளைக்கு/இனி வரும் நாட்களில் என்ன நடக்கும் என்றோ யோசித்து அதிலேயே மூழ்கிப் போய்விடாமல் வாழ்க்கை என்பது அதன் வழியில் வாழ்ந்து பார்க்கத்தான் என்பது என் எண்ணம். எத்தனை எத்தனை மனிதர்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள், காட்சிகள்! என்றோ ஒரு நாளைக்குத் தெரியும் நினைத்துக் கொண்டதும் நடந்து கொண்டதும் சரியா என்று. அதற்கிடையில் எனக்குத்தான் என்னைப்பற்றிக் கணக்கில்லாச் சந்தேகங்களும் கேள்விகளும்.ஒரு இலக்குமில்லாமல் நகர்கிறேன் போலத் தோன்றுகிறது. 


இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டமைப்புப் பிடிக்காமல் ஆனால் முழுதும் அந்தக் கட்டுகளைத் தகர்த்து வந்து விடவும் முடியாமல் என்னவாய் இருக்க வேண்டும் என சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதின் தெளிவற்ற சித்திரம் தான் நான். வியாபார உலகிலே பார்த்தால் குறிப்பிட்ட இலக்கு வைத்து அதை நோக்கிச் செயல்பட்டு வெற்றியடைகிறார்கள். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் அதைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. என்ன செய்ய இப்படி நடந்து விட்டது/இப்பிடித்தான் நடக்கும் என்று இல்லாமல் நாமாய் முடிவெடுத்துச் செயல்படுத்தி - கஷ்டமாயிருந்தால் தான் என்ன, செய்து பார்ப்பதுதான்! - அதன் படிக்கு வாழ்க்கையைக் கொண்டு போனால்? எங்கள் வழியை முழுக்க நாங்களே தீர்மானித்துக் கொள்வது என்று வந்துவிட்டால் எங்கள் முடிவுகளுக்கும் செயல்களுக்கும் முற்றுமுழுதாக நாமே பொறுப்பு. சற்றுப் பயமுறுத்தும் ஒரு செயல் அல்லவா? எங்களுக்கு நாங்கள்தான் பொறுப்பு. வேறு யாரிலும் பொறுப்பைச் சாட்டிவிடவோ குறை சொல்லவோ முடியாது. அப்படிச் செய்வதனால் இசைந்து போகும் இயல்புக்கு முதல் வேட்டு. நாம் இசைந்து போகத்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். குடும்பத்துக்கு, பள்ளிக்கு, நண்பர்களுக்கு, அலுவலகத்திற்கு, இனத்திற்கு, மொழிக்கு, மதத்திற்கு என்று ஒரு முடிவில்லாத பட்டியல். வித்தியாசமாய் இருப்பது வேண்டாததாய்ப் பார்க்கப்படும். ஒதுக்கி வைக்கப்படுவோமோ என்று ஒரு பயம். அதுதான் உள்ளூர ஆட்டுவிக்கிறது. 


அந்தப் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு எங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு, எவ்வள்வு இலகுவானதென்று கணிக்காமல், கடினமானதாயே இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு பாதையைத் அமைத்துக் கொள்ள வேண்டும். கடினமாயிருக்கும் பாதையின் பயணமும் இலக்கினை அடைந்தவுடன் வரும் மகிழ்ச்சியும் தரும் சாதனை உணர்விற்கு அளவுகோலில்லை. எந்தவித 'ரிஸ்க்'ம் வாழ்க்கையில் இல்லாமல் இருக்கிறதன் ஆபத்து நமக்கென்று ஒரு பாதையை அமைத்து அதில் வரும் இடர்களைச் சந்தித்துத் தோல்வியடைவதிலும் பார்க்க மிகமிக மோசமானது.  


எனக்காய் இந்த உலகில் எங்கோ காத்துக் கொண்டிருக்கிறது எனது நீலம். அதனை தேடிப் போகிறேன் நான். கண்டடைந்தால் அகத்திலும் புறத்திலும் நீலம். இல்லையேல் அகத்தில் மட்டும். எப்படியும் என் நீலம் என்னிடமிருக்கும்..



பெட்டகம்