Showing posts with label இன்றைய தருணம். Show all posts
Showing posts with label இன்றைய தருணம். Show all posts

குடும்பம் ஒரு குறுக்கெழுத்துப் புதிர்

 மூத்தண்ணனின் மகள் தன் இணையோடு வந்து தங்கியிருந்தாள். எங்கள் வீட்டின் மூத்த பேரப்பிள்ளை. அவள் எங்களுக்கு எத்தனை செல்லம் என்பது அவளுக்குப் புதினமாய் இருக்கிறது. அவள்  குழந்தையாயிருந்த போது எடுத்த ஒளிப்பதிவுக் காட்சிகளை பார்த்தபடி "I was such a brat and you all encouraged me" என்றாள். குழந்தைக்கு, அதுவும் ஒன்றோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான்  காணக்கிடைக்குமென்றால் அதைத்தானே செய்வோம்! 25 ஆண்டுகளின் பின் அவளோடு கிடைத்த 2 கிழமைகள் அற்புதமானவை. 

வேலை முடிந்து வீடு வரும் போது வீட்டில் ஆளிருக்கும். சிரிப்புச் சத்தமிருக்கும். அன்றைக்குப் போய் வந்த பயணத்தைப் பற்றிச் சொல்லுவார்கள் ஆளுக்கொரு புத்தகத்தில் நிறந்தீட்டியபடியே. அதற்கும் ஒரு நாள் செல்லமாய் அலுத்துக் கொண்டாள் .. "உங்கட நிறப்பேனைகளின் கூர் சிறிதாக இருக்கின்றது".. அவள் நீர்வர்ணங் கொண்டு அழகாய் வரைபவள். அடுத்தடுத்த நாளே ஒரு சிறு பொதியைத் தந்து "உங்களுக்கு, எங்களிடமிருந்து " என்று சொன்னாள். திறந்தால் தூரிகைப் பேனாக்கள் பல நிறங்களில். அதை வைத்து மூவரும் ஆளுக்கொரு புத்தகத்தில் நிறந்தீட்டியபடியே பல நாட்கள் எத்தனையோ பேசி எங்கள் பொழுதுகளை அழகாக்கிக் கொண்டோம்.  

அந்தக்காலத்து எங்களையும், இப்போதைய எங்களையும் வாழ்வையும் பற்றிப் பேசித் தீரவில்லை எங்களுக்கு. சில பல இயல்புகள் ஒரே போன்று இருக்கின்றன எங்களுள். ஒரு நாள் எதற்கோ விழுந்து விழுந்து சிரித்தாள்.. என் ரோசாப்பூ மருமகள்..அவளது 4 வயதில் சிரித்தது போன்றே கால் நூற்றாண்டு கழித்தும் அதே சிரிப்பு. சிரிப்பு மாறாதுதானே. 

அவர்கள் வந்து நின்ற நாட்களில் எனது நத்தார்க் கொண்டாட்டங்களும் வந்து போயின. ஒரு நாள் பிந்தி வீட்டுக்கு வந்தால் "இவ்வளவு நேரம் எங்க போயிட்டு வாறிங்க ?" என்று பகிடியாக அதட்டியதற்கு  "அப்பம்மாவே இப்படிக் கேட்டதில்லை" என்று நான் பதில் சொல்ல,  என் வீட்டில் முத்துகள் கொட்டிக் கிடந்தன.

அவளது இணை மக்ஸ். அவனே சமைத்தான், சுத்தப்படுத்தினான். இயல்பாய் இருக்கவும் மனம் விட்டுக் கதைக்கவும் முடிந்தது அவனோடு.  மென்மையாயும் வருத்தாமலும் ஓட்டமில்லாமலும் வாழ முனைகிற இளையோர்.

இரண்டு கிழமைகளை மிக மிக அழகாக்கி விட்டு அவர்களுடைய பயணத்தைக் தொடர்ந்திருக்கிறார்கள்.  மூன்று கிழமைகளில் பின் தொலைபேசினோம். அவள் எதோ தின்பண்டம் தயாரிப்பதைக் காட்டியபடியே மக்ஸ் என்னுடன் பேச இடையிடையில் அவளும் என்று பேசிக் கொண்டிருந்தோம். வேலை முடித்து வந்து தாங்கள் குறுக்கெழுத்துப் புதிர் செய்ததாகச் சொன்னாள். தங்களால் கண்டுபிடிக்கமுடியாத எதோ இரண்டு மூன்று சொற்களுக்குரிய துப்புச் சொல்லிக் கேட்டாள் ..ஒன்றைச் சரியாகச் சொன்னேன். அப்படியே ஆரம்பித்து அதைச் செய்து கொண்டிருந்தோம். தொலைபேசியில் பேசத்தான் வேண்டுமென்றில்லை குறுக்கெழுத்துப் புதிரும் செய்யலாம் என்று அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும். 

அடுத்த முறை அதையே பாதி நேரம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். வாழ்க்கையின் இனிமை எங்கெல்லாமிருந்து எட்டிப்பார்க்கிறது! 

 

பூட்டிய கதவுகளைத் திறத்தல்

இன்றைக்கும் வழமை போல நடக்கப் போனேன். ஐந்தாறு நிமிடங்கள் நடந்த பின் கதவைத் திறப்புக் கொண்டு பூட்டினேனா என்ற சந்தேகம் முளைத்தது. அதுவும் வழமைதான், அதற்காகவே கதவைப் பூட்டும் போது முழுக் கவனத்தையும் அதில் வைப்பேன். இன்றைக்கு எப்படிக் கவனம் கலைந்தது என்று தெரியவில்லை. பூட்டியிருப்பேன் என்று தெரிந்தாலும், சரி போய்ப் பார்த்து வரலாம் என்று திரும்பினேன். 

எனது பக்கத்து வீட்டின் புல் முற்றத்தில் தாயுடன் நின்றான் அவன். பின்னேரங்களில் நடக்கப் போகும் போது காண்பேன்.. தாயுடன் தங்கள் வாசலில்/முன்முற்றத்தில் நிற்பான். இரண்டோ மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டின் ஒன்றரை வயது இளவரசன். நாங்கள்பேசிக்கொள்வதில்லை .. கையசைத்தல் மட்டுமே. இன்றைக்கு என்னைக் கண்டதும் ஓடி வந்தான். பேச இன்னும் வராது. ஆனாலும் பேசிக் கொண்டோம். அடுத்த வீட்டின் முற்றத்தில் செங்கல் பாவியிருந்தது. அதில் இரண்டு மூன்று கற்கள் சம நிலையில் இல்லாமல் நடனமாடின. அதை அசைத்துக் காட்டினேன். எனது கையைப் பிடித்திழுத்தான். தான் கீழே அமர்ந்து என்னையும் இழுத்தான். தாயும் அருகிலேயே அமர்ந்து கொண்டார். இன்னொருவர் முற்றத்தில் அமர்வது ஏதோ போலிருந்தது. அவனுக்கோ தாய்க்கோ அது பொருட்டாயிருக்கவில்லை. கைகளை ஆட்டி ஏதேதோ சொன்னான். பாதையின் மறுபுறம் என் வண்டி நின்றது. அதைக் காட்டியும் பேசினான், ஆம் அது என்னுடையது என்றேன்.. ஓ விளங்கிக் கொண்டாயா என்பது போல அழகாய்ப்  புன்னகைத்தான். பரஸ்பரம் பெயர்கள் அறிந்துகொண்டோம்.

நடக்கப் போகலாம் என்று எழுந்து அவனிடம் விடைபெற முனைந்தேன். கையைப் பிடித்து இழுத்து மீண்டும் அமர்த்தினான். அவன் அம்மா சிரித்துக் கொண்டார்.  நானும் அவரும் இருக்க, செங்கல் மீது நின்றாடினான். எறும்புகளைக் குந்தியிருந்து பார்த்தான். கரைந்தபடி பறந்த காகத்தையும் விர் விர்ரென்று சென்ற வண்டிகளையும். 

மனமில்லாது விடை பெற்றுக் கொண்டேன். 

எப்போதுமே,  திரும்பி நடந்து வரும் நேரத்தில் மனம் கொஞ்சம் அடங்கி அமைதியான நிலையில் இருக்கும். வீட்டிலிருந்து 500மீ இருந்திருக்கும்.. அவன் ஞாபகம் வந்தது. புன்னகைத்தேன்.. அழுகையும் வந்தது. அந்தக் குழந்தை சொரிந்த அன்பு எனக்கு மிகவும் தேவைப்பட்டிருந்தது.

கதவைப் பூட்டியது பற்றியது போன்றான  சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்குத் திரும்பிப் போகலாம்.. அன்பு காத்திருக்கும். 

 

  

சேய்மை

முதலில் அம்மா மட்டுமே இருந்தார். அவருக்குள் நான் இருந்தேன். 
 
பிறகு, அவர் அதே ஊரில் வேலைக்குப் போவார், வீட்டில் எம்மியுடன் பத்திரமாய் நானிருந்தேன். 
அம்மா எப்போதும் இருந்தார் - பாடசாலையில் நானும் வைத்தியசாலையில் மருந்தாய் அம்மாவும் இருக்கையிலும், பக்கத்து நகருக்குப் போன போதும், விடுமுறைக்கு எம்மியுடன் போகும் நாட்களிலும், வண்டியேறி அம்மாவுடன் பயணம் போகையிலும். 
 
போர் எங்களூருக்கும் வந்து கதவைத் தட்டிய பொழுதிலும் அம்மா இருந்தார். பிறகு நாங்கள் அந்தச் சிறு தீவின் கிழக்கிலும் மேற்கிலுமாய் ஆனபோதும் எழுவான்கரையில் சூரியனோடு சேர்த்து அம்மாவும் இருந்தார். 
 
தீவின் படுவான்கரையில் மீண்டும் சேர்ந்து கொண்டோம். பதின்மத்தின் அத்தனையையும் நான் காட்ட, அம்மாவாய் மட்டுமே இருந்தார் அம்மா. அவரில்லாமல் -  தந்தைக்கொப்பான அண்ணனுடனே இருந்தாலும் கூட - நான் தவிப்பேன் என்பதை நோர்வேயிலுள்ள ஒரு கிராமமே  நினைவு தெரிந்த என் இருபதுகளின் ஆரம்பத்தில் முதலில் எனக்குச் சொன்னது. காலப்போக்கில் மனதின் அடுக்கொன்றில்  அந்த அறிதல் மறைந்து போயிற்று. அப்பொழுதும் அம்மா இருந்தார்.
 
குட்டித்தீவிலிருந்து அகன்று பெருந்தீவில் வாழ்வு என்றானது. அப்போதும் அம்மா இருந்தார். தொலைபேசியின் மறுமுனையிலும் கணினித் திரையிலும்.. அல்லாத போதுகளிலும்.
நினைவழிவு நோய் அம்மாவைப் பற்றிக் கொள்ள முன்பு இத்தனை இறுக்கமாய் நான் அம்மாவைப் பற்றிக்கொண்டதில்லை என்றே நினைக்கிறேன். அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் வாழ்க்கை என்முன் விரிந்து கிடந்தது. என்னிலும் 45 ஆண்டுகள் மூத்த அம்மாவுக்கு வயது போகிறது என்பது பற்றிச் சிந்தித்திராத காலம் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். 
 
அம்மா - சுதந்திரமாய்த் தன்னிறைவாய், எல்லாவற்றையும் தானே கவனிப்பவராயும் மற்றவருக்கும் செய்து தருபவராயும் இருந்தார். 
எங்கேயும் பயணிக்கத் தெரிந்த, 
எந்த அலுவலகத்திற்கும் போய் வேலைகளை முடிக்கத் தெரிந்த, 
பயமில்லாத, 
ஊக்குவிக்கிற, 
எல்லாருடைய பிறந்த நாட்களையும் ஞாபகம் வைத்திருந்து வாழ்த்து மடல் அனுப்பும்,
தொலைபேசுகிற, 
யாரையும் அன்புடனே எப்போதும் பார்க்கும் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போகத் தொடங்கினார். 180 பாகை மாற்றம். அவரில் தங்கியிருந்த எம்மில் அவர் சார்ந்து கொண்டார். அது புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
என்னத்தை எப்படி எப்போது எங்கே செய்ய வேண்டுமென்று அம்மாவுக்குத் தெரியாமல் போனால் என்ன செய்வது? யோசித்திருக்கிறேன். 
அப்படியே அம்மா அவற்றைத் தெரியாதவரானார். அதுவும் புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
வாழ்க்கையில் சில கேள்விகள் விடாமல் திரும்பத்திரும்பத் தோளில் தட்டும். அம்மா என்னை மறந்து போனால் என்ன செய்வது? இந்தக் கேள்வி என்னைப் பலநாட்கள் துரத்தியபடி இருந்தது. சில நாட்களில் எட்டிப்பிடித்து விடும். சில நாட்களில் அக்கேள்வியை எதிர்கொள்ளாவண்ணம் மனதைத்  திசைதிருப்பி விடுவேன்.  
அப்படியே அம்மா மறந்தும் போனார். அதுவும் புதிதாய் இருந்தது. 
'அம்மாவால் மறக்கப்படுதல்' எனும் பாதைவழியே பயணித்தல் என்பதுவும் விதிக்கப்பட்டதொரு வாழ்வனுபவமாகிற்று. 
அம்மாவே மறந்து விட்டால் குழந்தை என்ன செய்வது? தன்னிரக்கம் வழியும். அம்மாவும் அவரது அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் அறிவுரையும் தைரியமும் மிகவும் தேவைப்பட்ட காலகட்டத்தை அவையின்றிக் கடந்து கொண்டேன். 
அம்மா இல்லாது போய்க்கொண்டிருந்தார்.. ஆனாலும் இருந்தார்.

எனக்கு மிகவும் பிடித்த 'மொழி பெயர்த்த மௌனம்' கவிதையில் இப்படி எழுதியிருப்பார் கார்த்திக் வேலு: 
"... குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி, தலை சீவி, 
சட்டை அணிவித்து விடு. 
அவர்களுடன் நடை பயில்.."
தன்னையும் மறந்து காலத்தையும் கடந்து நிகழ்கணத்தில் மட்டும் வாழ்ந்திருந்த அம்மாவுடன் அதைத்தான் செய்தேன். மணிமுடி போன்றும் காதணிகளாயும் பூக்களை அவருக்கு அணிவித்தேன். அவர் அதுவரை ஒருபோதும் இட்டிரா மருதோன்றியையும்.
அதுவும் புதிதாக இருந்தது.  
அம்மா இல்லாதிருந்தார். ஆனாலும் இருந்தார்.
 
நடவாது போனார். படுக்கையிலானார். கையைத் தடவிக் கொடுத்தும், காலுக்கு எண்ணெய் பூசியும், பலருக்கு மருந்தாகவே இருந்தவரின் புண்ணுக்கு மருந்திட்டும், என்ன பேசுவதென்று தெரியாத பகல் வெக்கைப்பொழுதுகளில் சும்மா செல்லம் பொழிந்தும், சில நேரங்களில் வெறுமே கையைப் பற்றியபடியே உறங்கிப் போயும் அவர் அருகிருந்தேன்
புறப்படும் போது கொஞ்சிச் சொன்னேன் "கஷ்டப்படாதீங்க. போகோணுமெண்டா போங்க". 
அப்போதும் இருந்தார்.
 
வழியனுப்பிய போதில், தளைகளற்று, பேரன்பில் திளைத்திருக்கின்றார் அம்மா என்பது போலவும் ஏதோ அடுத்த கட்டத்திற்கு மெதுவாய் நகர்ந்திருக்கிறார் போலவும் தோற்றிற்று. இன்னும் இருக்கிறார் என்பதாய். 
 
அம்மா இல்லாமல்தான் இருந்தார்.. ஆனால் இருந்தார். அம்மா இல்லாது இருத்தல் என்பது புதினமான ஒன்றாக இருக்கிறது. மனம் துழாவுகிறது. பாதுகாப்பாய் உணரக்காணோம். அரண் இருந்த இடம் வெற்றிடமாய் வெறுமையாய் இருப்பது, பெயரறியா உணர்வுகளையும் சேர்த்து மிகவும் புதிதாய் அந்தரிப்பாய் அந்நியமாய் ஒண்ணாமல் இருக்கிறது.
அம்மா காணாமற்றுப் போய்விட்டார். 
இப்போ, சட்டை அணிவித்துத் தலைசீவிப் பூ வைத்துவிட அம்மா இல்லாமல் நான் என்ன செய்யட்டும்?   

என் அரசி

இன்றைக்கு அம்மாவின் 92ம் பிறந்தநாள்.  மற்றைய ஆண்டுகளை போலல்லாது முதல்முறையாக அம்மாவுக்குரிய வாழ்த்தை நான் மனத்திற்குள்ளே சொல்லிக்கொண்டேன். அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.  

பூவுலகில் அவரில்லை. ஆனாலும் நிறையப்பேரின் மனங்களில் வாழ்கிறார். கடந்த மாதம் ஏறாவூரில் நடந்த நினைவேந்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். வேலையொன்றைக் குறிப்பிட்டு, அதனைச் "செய்து தர இயலுமா" என்றே   பணியாளர்களிடம் கேட்கிற அம்மா, தன் விளையாட்டுப் பொருள்களாகிய வெற்றுக் குளிசை டப்பாக்களையும் சேலைன் போத்தல்களையும் பெற வேண்டிச் சில மாதங்களுக்கொருமுறை காய்ச்சலால் பீடிக்கப்படும் சிறுவனை அரவணைத்துப் பேசும் அம்மா, அம்மாவே மருந்து என நம்பும் உம்மாக்கள், போர்க்காலத் தட்டுப்பாட்டில், நோயாளர்களுக்குச் சுற்றுச்சூழலில் கிடைப்பதை வைத்துச் சிறப்புறச் சேவை செய்த அம்மா, அம்மாவைக் கண்டதும்  இரத்தம் படிந்த ஆயுதங்களைத் தாங்களாகவே கீழே போடும் /மடித்துக் கட்டிய சாரத்தைத் தழைய விடும் ஊரின் கத்தி/வாள் வீசும் 'வீரர்கள்' என்ற கோணங்களில் அம்மாவைப் பார்த்தோம். 

யாருமறியா இரவு மழைக்குக் காலைப் பூந்தோட்டம் சாட்சி என்று ரூமியின் கவிதை சொல்லும்.

எங்கள் ஊர். எங்கள் அம்மா.

அவருக்கு ஏறாவூர் மீதிருந்த அன்பு தெரியும். அப்படியே அம்மா மீது ஏறாவூருக்கும் என்று தெரியும், ஆனால் அது எந்தளவில் என்பதனை  நானோ  ஏன் அண்ணாவோ கூட நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்றே சொல்வேன். அன்றைக்கு ஏறாவூரின் சிம்மாசனமேறி அமர்ந்திருந்தார் அம்மா. பெயரிலும் 'ராணி' அல்லவா. 

அம்மா ஒரு ஆளுமை என்று நினைத்ததே இல்லை. ஆனால் இப்போது அது தெள்ளத்தெளிவாய் இருக்கிறது. அன்பும் அரவணைத்தலும் அவரது தனிப்பண்புகள். ஒரு நிபுணர்/திறமைசாலி ஒரு செயலைச் செய்யும் போது அது எளிதாக, 'இவ்வளவு தானா' என்பது போலத் தோன்றி, நாம் முற்படுகையில் கடினமாக இருக்குமல்லவா, அப்படித்தான் இவையும். அம்மாவுக்கு யார் எவர் என்று இல்லை, எல்லாரும் ஒன்றுதான். ஒத்து வரவில்லையா/அவர்களுக்கு விளங்கவில்லையா, பரவாயில்லை, அவர்களுக்கு நல்லது நினைத்து அப்படியே விட்டுவிடு என்பார். அதெப்படி என்றால் மிகவும் லேசான விஷயம் என்று பதில் வரும். 

எல்லாரிடமும் அன்பு காட்டவோ எல்லோரையும் அப்படியே நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளவோ  நம்மில் அனேகரால் முடிவதில்லை. என்னதான் முயன்றாலும் முட்டி மோதினாலும் அதில் இன்னும் நான் போவதற்கு நிறைய் ...யத் தூரம் இருக்கிறது. என்னைக் குறித்து அம்மா ஏமாற்றமடைந்து விடக்கூடாதே என்று தான் இப்போதெல்லாம் யோசிக்க வருகிறது. அப்படி இருப்பது உதவியாகக் கூட இருக்கிறது என்று சொல்லலாம். பிந்தித்தான் யோசிக்க நேர்ந்தாலும் சற்றாவது யோசிக்கிறேன் என்பது புரிகிறது.

வாழ்தல் என்பது எப்படி என்று  ஆற்றுப்படுத்தியிருக்கிறார். வாழலாம். 

பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.   

  

 


காத்திருத்தலின் நிறம்

ஒரு பூ மதில் மேல் இருக்கிறது. இளவெயில் கொண்ட  ஒரு மாலைப்பொழுதோடு  கை கோர்த்தபடி புன்னைகையைப் பேசுகிறது அந்தப் பூ. தனதென்றோ இல்லையென்றோ சொல்லிவிட முடியாதவொன்றிற்காய் இதழ் விரிக்கிறது. குளிர்ந்த கைகளால், இதழ்களால்  என்று சொல்ல வேண்டுமோ.. காற்றை அளைகிறது. சொல்லித் தீர்க்க முடியாததொரு உணர்வில் ஒரு fado பாடலைப் போலத் திளைக்கிறது.

அரவணைப்பையும் புறக்கணிப்பையும் அறிந்த உணர்ந்த பூ அது. எத்தனை புறக்கணித்தாலும் அரவணைப்பை மட்டுமே பதிலாய்த்தர தர அது விழைகிறது. எரித்தாலும் பதிலுக்குக் குளிர்விக்கத்  தயங்காதது. எல்லாமறிந்த காற்றை மென்மையாய் ஏந்துவது. 

முற்றுப் பெறாதவொரு உரையாடலின் முழுமையற்ற ஞாபகம் அந்தப் பூ எதிர்பாராதவொரு கணத்தில் எங்கோ அடியாழத்திலிருந்து முகிழ்க்கின்றது . அதன் மீதியைத் தேடி,  பிரவகிக்கிற  எல்லா   நதிகளிலும் பூ நீந்துகிறது. மூழ்குகிறது. நதியை அறிந்து மீன்களோடும் பாசியோடும் கூழாங்கற்களோடும் கரையுமல்லாத நதியுமல்லாத சகதியோடும் தோழமை கொள்கிறது. அவை தம் ரகசியங்களைப்  பகிர்ந்து கொண்ட பிறகு பூ கரையேறுகிறது. இருந்த ஞாபகத்தையும் அந்த முடிவு காணா உரையாடலையும் ஒவ்வொரு நதியும் மறக்காமல் எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. பூவின் நிறத்தையும் கூட. 
 
ஒரே வாத்து எல்லாக்கரைகளிலும் பவழமல்லியை மிதித்துக்கொண்டு சிறகு உலர்த்தியபடி நடை பயில்கிறதை ஓரக்கண்ணால் பார்த்தபடி ரகசியங்கள் தொடர்ந்து இழைக்கப்படும் துண்டினால் தலை துவட்டிக் கொள்கிறது பூ.

நதி கழுவிக் கொண்டு போய்விடுகிற வண்ணத்தை மழை அழைத்துவரும் வானவில் மீண்டும் பூவுக்குப் பூசி விடுகிறது. எங்கும் சரியாய்ப் பொருந்தியிருந்தாலும்  ஞாபகம் முழுமையற்ற இடத்தில் மட்டும் வண்ணம் இருப்பதில்லை. பவழமல்லி மணக்கிற அவ்விடத்தில்தான் வண்ணத்தை விழுங்குகிற ஒரு வாத்தின் இறகின் தடமும் இருக்கிறது. ஆனாலும் அதனால் விழுங்கமுடியாத நிறமொன்றும்  உள்ளது. அது, காத்திருத்தலின் நிறம்.

காத்திருத்தலின் நிறம்  நீலம்; அதன்  நடனம் தாண்டவம். எனக்குத் தெரிந்த வரை.  
பூ காத்திருக்கிறது. நீல நிறத்தில். அருளல் ஆரம்பிக்கிற கணத்துக்காய். எப்போதும்போலவே எல்லாமுமாய்க் கூடவே  இருக்கிறது மழை.

ஒளித்தலும் வெளித்தலும்

 

காலை. யன்னற் கண்ணாடியோரம் அமர்ந்திருந்தேன். உள்ளங்காலைச்  சூடாக்கிய வெய்யில் கண்ணாடிக்கு வெளியேயிருந்த சிறு செடியின் இலைகளின் நிழல்களோடு சேர்ந்து என்மீது ஓடிப்பிடித்தும் கணுக்கால் முழங்கால் என்று ஏறியும் விளையாடியது. காலை வெய்யில்தான் எத்தனை இதமானது. கண்ணாடிக்கு அப்பாலிருந்த செடிக்கு சில யானாக்களைத் தொடுத்தது போல வளைந்து வளைந்து செல்லும் விளிம்பு கொண்ட இலைகள். அந்தப் பசிய இலைகளில் பட்டு, இதோ தொட்டு உணர்ந்து விடலாம் என்பது போல ஊறியிருந்தது மஞ்சள் வெய்யில். அவற்றின் மிக மெல்லிய நரம்புகள் கூட அப்படியே தெரிந்தன. சில இலைகளுக்குக் கொஞ்சமே வெய்யில் கிடைத்தது. கிடைத்தளவிற்குத தங்களைக் காட்டிக் கொண்டன அவை.  

மனிதர்களைப் பற்றி நினைத்தேன். இந்த இலைகளைப் போலத்தான் அவர்களும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறார்கள். தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இரகசியங்கள் எல்லாரிடமும் இருக்கின்றன. 

அன்பும்.

மலர்தல்


எழுதுவதற்கெனக் காலையில் யோசித்து வைத்திருந்ததை ஓரமாய் வைத்துவிட்டு வேறொன்றைக் கையில் எடுத்திருக்கிறேன். புதிதில்லைத்தானே.

இங்கே ஒரு தோழி இருக்கிறார். எதிர்பார்த்தேயிருக்காத விதத்தில் வாழ்க்கை எங்கள் கொஞ்சப் பேருக்குச் சேர்த்து ஓங்கி ஒரு அறை விட்ட தருணத்தின் அடுத்தடுத்த நாட்களில் நாம் சந்தித்தோம்.  என் பெயரில் எனக்கு என்னைத் தவிர்த்தே இருபதுக்கும் மேற்பட்டோரைத் தெரியும் என்பதால் அரிய பெயர்களில் பெருவிருப்புண்டு. அவர் பெயரில் அவரை மட்டுமே நான் அறிவேன். உதிக்கும் சூரியனின் பெயர் கொண்டவர். நாங்கள் சூரியோதயம் காண்பதற்காக அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கூட வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறோம். போன ஆண்டின் அநேக வார இறுதிகளை இப்படியான காலை அழகாக்கியது. வேறு இருவரும் வருவார்கள் - மாறி மாறி. ஆனாலும் அதிகம் இவரே. தன்னைத் தானே சந்திக்க அவரை நான் அழைத்துச் செல்கிறேன் என்கிற என் மொக்கை நகைச்சுவையையும் பொறுத்துக் கொண்டு வருவார். அலைவரிசை மிகவும் ஒத்துப் போகும். பேசாது கழிகின்ற பொழுதுகள் கூட இயல்பாகவே இருக்கும். பேச ஒன்றுமில்லாவிட்டால் அந்தரித்துப்போய் ஏதோவொன்றை யோசித்துத் தேடியெடுத்துப் பேசவேண்டிய தேவையொன்றை மனம் உணராமல் இருப்பது எத்தனை சுகம்! என்னவொரு வரம்! அது எங்களுக்கு வாய்த்திருக்கிறது.

கொஞ்சநாள் பரவாயில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பவும் பழைய பள்ளங்களுக்குள் போகிற மாதிரித்தான் கடந்த சில கிழமைகள் கழிகின்றன. மீள்தல் என்பது விக்கிரமாதித்தனையும் வேதாளத்தையும் ஒத்தது. மடுவுக்குள் மனம் கிடக்கிறதென்பதைப் புறச்சுட்டல்களின்றிக் கண்டு கொள்ளல் என்பதுவே ஒரு பெரிய படிதான். பிறகு தீர்மானித்துக் கொள்ளவேண்டியது கிடப்பதா எழும்புவதா என்று. கிடக்கத்தான் சொல்லும்.. அதுவும் எழுவதற்குத் தேவைப்படும் பலத்தையும் தொடர்முயற்சியையும் உணர்ந்த பிறகு, இன்னும் உரக்கச் சொல்லும்.. "கிட .. கஷ்டம்.. எதற்கு.. யாருக்காக.. ஏன்.. பலனில்லை..". இப்படிப் பல சொல்லும் அதே மனம்தான் விக்கிரமாதித்த முயற்சிகளுக்கு அடிப்படையாக 'எனக்காக' என்றும் கத்தும். அந்த ஒரு சொல்லுத்தான் ஊறும் முதல்  ஈரம். அப்படித்தானே எந்தப் பெரிய ஆறு(வது)ம் தொடங்குகிறது.

நிறைய நாட்களுக்குப்பின் போன கிழமை நீண்டதூரம் போகலாம் என்று நடக்கச் சென்றேன். வேனிற்காலம். பூத்துக் குலுங்கியும் கொட்டியும் எங்கும் அழகு கடை பரப்பி இருந்தது/இருக்கிறது. அதிலும் ஜக்கராண்டா என்கிற, ஊதாப்பூக்கள் கொண்டதொரு மரம் நான் நடக்கப் போன பகுதியில் நிறைய. சிட்னியில் இக்காலம் இந்த மரத்தின் பூத்திருவிழாவுக்குப் பெயர் பெற்றது. அன்றைக்கு 4 மணித்தியாலங்கள் மட்டுமே நடந்திருப்பேன். இளவெயிலும் குளிர்காற்றும் பூக்களும் மதில் மேலிருந்தபடி என்னைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பூனையும் மனதை ஆற்றின. நடுவில் ஒரு பூங்காவில் ஊஞ்சலுமாடி, கம்பிவேலிக்கு அப்பால் இருந்த ஒரு செடி வகையையும் அதன் பூக்களையும் ரசித்து, வீசிய காற்றினால் அவற்றைக் கலங்கலில்லாமல் படமெடுக்க முடியாமல் கண்ணிலும் மனதிலும் மட்டும் தேக்கியெடுத்த பின் அந்த குளத்துக்குக் கிட்ட வந்து சேர்ந்தேன். தோழிதான் மனதில் வந்தார். அவருக்கும் பிடிக்கும் என்று தோன்றிற்று. 

தோழியைச் சந்திக்கும் வாய்ப்பு ன்றைக்கு அந்தக் குளத்துக்குக் கிடைத்தது.  அவர் குரலை மட்டுமே  கேட்டிருந்தாற் கூட அறியலாம் அவர் எத்தனை வியந்தும் மகிழ்ந்தும் அந்தக் குளத்திலிருந்த தாமரைகளைப் பார்த்தார் என்பதை. எனக்கு ஒலி-ஒளி இரண்டுமே கிடைத்தன.

உதிக்கும் சூரியனைப் பார்த்து மலரும் தாமரையைத் தெரியும். மாறி நடந்ததை இன்று நான் கண்டேன். மலர்கின்ற சூரியன் என்ன்ன்ன அழகு தெரியுமா?

குவளையைத் தாண்டி வழிகிறது வாஞ்சை

காலையில் மனதில் வருவதையெல்லாம் எழுதுமொரு பழக்கத்தை சில கிழமைகளாகக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் எழுதிக்  கொண்டிருக்கையில் தற்செயலாக நிமிர்ந்தபோது என் கண்ணிற்  பட்டது. என்  வழமையான குவளைதான். அறைக்குள் அதை எடுத்து வருவது மிகக்குறைவு. எப்படியோ இன்றைக்கு என்னுடன் கூடவே வந்து  விட்டது. ஒவ்வொரு நாளும் பாவிப்பதுதான்.. ஆனால் பலநாட்களாக நான் நினைத்துச் சுவைக்காத ஒன்றை அது இன்றைக்கு மீட்டியது. 


மனவழுத்தமும் உடைவும் நெருங்கிய இரு இளையோர்களின் இறப்பும் 2019 இனை மறக்க முடியாத ஆண்டாக மாற்றியிருந்தன. அவுஸ்திரேலியாவில் 'granny flat ' என்று சொல்லப்படும் வீட்டோடு (பெரும்பாலும்)இணைந்த ஒரு பகுதியில் குடியிருந்தேன். அந்தச் சிறுவீடு வசதி மிக்கது. வெளிச்சம் மிக்கது. படுக்கையறையின் உட்கூரை சாதாரணமாக இங்கு  இருப்பதை விட உயர்ந்தது. 'பெரிய' வீட்டையும் என் பகுதியையும் ஒரு  கதவுதான் பிரிக்கும். இந்தப்பக்கம் ஒரு சீவன்.  மற்றப்பக்கம் 3 சீவன்கள். அவற்றில் ஒன்றிடம் என்னைச்  சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எழுப்பும் அலாரம் இருந்தது. கட்டிலில் எழும்பி இருந்து என் கால் நிலத்தில் பட்டவுடன் அலாரம் ஓய்ந்துவிடும். அதற்கு நாலுகாலும் ஒரு வாலும்  என்று சொல்லத் தேவையில்லைத்தானே? நான் எழும்பி விட்டேன் என்று எப்படித்தான் தெரியுமோ...வீட்டில் மற்ற இருவரும் இந்த நாலு கால் ஆளின் மனிதப் பெற்றோர் - ஹானியே (அம்மா) +ஆதில் (அப்பா).  நன்றாகத்தான் எல்லாம் இருந்தன. 2020 மார்ச் மாதம் ஆதில் என்னிடம் வந்தான். நான் வசிக்கும் பகுதியில் இன்னும் ஒரு மாதத்தில் குழந்தைப் பராமரிப்புச் சேவையைத் தொடங்க முடிவெடுத்திருப்பதால் எனக்கு ஒரு மாதம் தவணை தர வந்திருந்தான். அந்தரப்பட்டுச் சொல்வது புரிந்தது. நானும் ஓம், பிரச்சனையில்லை இடம் பார்க்கிறேன், சங்கடப்படாதே என்று சொல்லி அனுப்பினேன். பிறகு ஒரு இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து கதவைத் தட்டி, "உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வீட்டில் ஒரு அறையில் நீ வாடகைக்கு இருக்கலாம், இப்போதுள்ள பகுதியினைப் பிள்ளைகள் இல்லாதபோது பாவித்துக்கொள்" என்றும் சொன்னான். கொஞ்சநாள் இருந்து பார்த்துவிட்டு எனக்குச் சரிப்படவில்லையென்றால் நான் வேறிடம் பார்ப்பதென்று முடிவெடுத்தேன். ஒத்துக்கொண்டான்.

இரண்டு கிழமைகளின்பின் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டி வந்தது. கோவிட். முதல் மூன்று வாரங்களும் பகலிலே அந்தப்பக்கம் திருவாளர் நாலுகால் ஒருவால் சார்லியும் இந்தப்பக்கம் இரண்டுகால் நானுமாய் இருந்தோம். தெருவில் போகிறவர்களை பார்த்து அவன் குரைக்க அதனால் அவன் மீது நான் குரைக்க என்றும் (தனிமையினால் ஏற்படுகிறது என்று நான் உணர்ந்து கொள்ளாத) ஒரு வித அரியண்டமான உணர்வு என்றும் வேலையோடு சேர்ந்து நிரம்பின பொழுதுகள்.

முதலில் வந்தவள் ஸோயி. இரண்டு வயது. இந்தோனேசியப் பெற்றோர். இளஞ்சிவப்பு நிறம் மட்டுமே கொண்டவை அவளது ஆடைகள். நிறத்தின் கடுமை கூடிக்குறையுமே தவிர மாறவே மாறாது. அப்பா காலையில் அழைத்து வருவார். கத்தியழுது வழியனுப்புவாள். பிறகு ஹானியேவை ஒரு நாய்க்குட்டியைப் போலத் தொடர்ந்தபடி இருப்பாள். காலை விளையாடி, மதியம் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து மறுபடியும் விளையாடி முடித்துக் கொறிப்புக்கள் சாப்பிட்டு ஹானியேவுடன் வண்டியில் ஏறித் தன் வீடு செல்லும்மட்டும் என்னைப்  பார்ப்பாள் அன்றிப் பேச மாட்டாள். என்னுடன் பேச நிறைய நாட்கள் எடுத்தது அவளுக்கு. பிறகு இழுத்து வைத்துக் கதை சொல்வாள். வேறு எவரோடும் பேசக்கூட முடியாது.

இவளுக்குப் பின் வந்தாள் ஏழு மாதத்து ஆர்ட்டமிஸ் - பாரசீகத்து ஹானியேவின் மருமகள். பெயரைத் தட்டச்சும் போதே ஒரு பென்னாம் பெரிய புன்னகை விரிகிறது - முகத்திலும் நெஞ்சிலும். அடுத்த மாதம் வந்தது ஒரு வயதுடைய லூனா. நிலா. லெபனானும் இத்தாலியும் அவள் பூர்வீகத்தில். அழகிய பெரிய கண்கள். அடர்ந்து நீண்ட இமை. வாரத்தில் இடைவெளி விட்டு இரண்டு நாட்கள் மட்டுமே வருவாள். முதலிரண்டு நாட்கள் வீறிட்டு அழுது சிவந்த கண்களும் நனைந்து ஒட்டிய  இமைமயிர்களும் கமறிய குரலும் இன்னும் ஞாபகமிருக்கின்றன. இரண்டு பைகள் வைத்திருந்தாள். அணிந்துகொள்ளும் தூங்கும் பைகள்.

இப்படி ஒவ்வொருத்தராய் இன்னும் சிலரும் என் தோட்டத்துக்குள் புதிது புதிதாய்ப் பூத்தார்கள்.

அவர்கள் நித்திரை கொள்ளும் அறையாகிய என் முன்னாள் படுக்கையறைக்கு ஒரு அகன்ற வழுக்கிக் கதவு (sliding door ) இருந்தது. அதன் நிலையான கண்ணாடிக்கருகில் என் மேசை. இரண்டு தொட்டில்களையும் காணாதவண்ணம் சேணம் கட்டியது போல இருக்க வேண்டும். தப்பித் தவறிப் பார்த்துவிட்டால் போதும். கைகளைத் தூக்கிக் கொண்டு ஒரு மயக்கும் சிரிப்பை அள்ளித் தெளித்தபடி சிறை மீட்கச் சொல்வார்கள். மீட்காவிட்டாலும் மன்னித்தருளுவார்கள்.

ஒரு நாள், முதல் பந்தியில் சொன்ன என் குவளையில் இருந்ததெல்லாம் தீர்ந்து போக அதை நிரப்புவதற்காய் எழ முற்பட்டேன். அப்போதுதான் எழும்பி இருந்த லூனா ஒளிரும் என் திரையைத் தொட்டிலில் சட்டத்தைப் பிடித்தபடி நின்று பார்ப்பதைக்  கண்டேன். அப்படித்தான் நினைத்தேன். ஒள என்றாள். எனக்கு விளங்கவில்லை. திரையைப் பார்த்தேன். எக்ஸெல் என்னைப் பார்த்தது. குவளையைக் கையில் எடுத்ததும் அதைக் காட்டி மீண்டும் ஒள என்றாள். என்னடா இது வடிவேலுக்கு வந்த போட்டி என்று நினைத்துக் கொண்டது ஞாபகமிருக்கிறது. நீருக்குரிய அவளது சொல்லுமல்ல அந்த ஒள. அவள் மீண்டும் சொன்ன போதுதான்  எனக்கு ஓடி வெளித்தது அவள் குவளையில் குடியிருக்கும் ஆந்தைகளைச் சொல்கிறாள் என்று(owl). அந்தக் குவளையின் வெளிப்புறம் முழுதிலும் இருபத்திச் சொச்ச ஆந்தைகளும் பலவண்ண இலைகளும் மரக்கிளைகளில் அசையாதிருக்கின்றன.

அவ்வாந்தைகளுக்கு அன்று அதியற்புதமானதொரு நாள். நிலவு அவற்றைத் தொட்டது. ஒள ஒள என்று கண்கள் விரிய தன் பட்டான சுட்டுவிரல் கொண்டு ஒவ்வொன்றாய் அடையாளம் கண்டு அன்பைப் பூசியது. நிலவு தடவித்தரும் என்று எந்த ஆந்தைதான் யோசித்திருக்கும்?

நிலவு வருகிறது கூடவே


எழுதி எத்தனையோ காலமாகிறது. 
இன்றைய நாளைக் குறித்து வைக்கத் தோன்றுகிறது.  அதைத் தனிப்படட முறையில் வைத்துக் கொள்ளலாமே எதற்கு பகிர என்றும் தோன்றாமலில்லை. ஆனாலும் இங்கே பதிகிறேன். 

தெளிந்த மனதாய் இருக்கிறது. நிறைய நாட்களுக்குப் பிறகு. வருடங்களென்று தான் சொல்ல வேண்டும் - முக்கியமாய் கடந்த இரண்டு/இரண்டரை ஆண்டுகள்.

மனதளவில் கொஞ்சங் கொஞ்சமாய் சுருங்கி, எல்லாரிடமுமிருந்து விலத்தி, சாப்பிடத் தோன்றாமல்/பிடிக்காமல் உடல் மெலிந்து, பிடித்தவை செய்யத் தோன்றாமல்/பிடிக்காமல், மரத்துப் போன மனதுடன் நாட்கள் கடந்தன. எதோ பிரச்சனை - நான் சரியாக இல்லை என்று எனக்குப் பிடிபட சில மாதங்கள் எடுத்தன. ஒரு நாள் காரணமேயில்லாமல் சக அலுவலர் எனக்குப் பிடித்த வகை சொக்லற் எனக்காகவென்றே வாங்கியதாகச் சொல்லி கையில் தந்து விட்டு நகர்ந்தார்.  கண்ணீரை  வழிய விடாதிருப்பதற்குப் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. ஆனாலும் முடியவில்லை. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாய்ஏனென்று விளங்காமல் நிறுத்தவும் முடியாமல் அழழென்று அழுதேன்.  
உடனடியாக உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது ஒரு சொக்லற். 

அப்போதிருந்ததை விடவும் இருண்ட இடத்தில் என் மனம் பிறகு கிடந்திருக்கிறது. நல்ல காலத்திற்கு மீள முடியா இடங்களுக்குப் போக உந்தவில்லை என் எண்ணங்கள். ஆனாலும் அதற்கு மிக மிகக் கிட்டப் போயிருக்கிறேன் என்பது என் உளவியல் ஆலோசகருடனான சந்திப்புக்கள் எனக்குச் சொல்லின. 

எனக்குத் தெரிந்து ஒரு வருடத்திற்கும் மேலாய் என்ன ஏதென்று தெரியாமல், மனவுளைச்சலோடு மரத்துப் போன மனதுடன்  நாட்களைக் கடத்தியிருக்கிறேன். என் மனதினை /எண்ணங்களைக் கவனித்து உரிய முறையில் கையாளப் பழகியிராததன் விளைவு தான் இந்த பிந்திய "ஓடி வெளித்தல்". நான் உணராமலேயே என்னைத் தொலைத்து நாலைந்து வருடங்கள் ஓடியிருந்திருக்கின்றன..படிப்படியாக பாரத்தை ஏற்றியபடிக்கு.
உடல் சார் காரணங்களால் அல்லாமல் புறக் காரணிகளால்  ஏற்பட்ட மனவழுத்தம். 

எவ்வளவு நெருங்கினவர்களென்றாலும் சொல்ல முடியாது எதோ சரியில்லை என்று.. அவ்வளவு சிறந்தது என்  முகமூடி . உடம்பு மெலிவதை தவிர வேறெதுவும் வெளியில் தெரியாது. அதையும் கூட நான் எடை குறைக்கிறேன் என்று (தாமாக) எடுத்துக் கொண்டார்கள். 

முழுதாய் வெளி வந்து விட்டேனென்று சொல்வதற்கு இன்னும் நாளிருக்கிறது. ஆனாலும் அதற்குரிய பாதையில் பயணிக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். 
கையைப் பிடித்துக் கடக்கும் சந்தர்ப்பங்களிலும், இருட்டென்றாலும் பாதை இருக்கிறதென்று தைரியம் சொல்லி வெளிச்சம் காட்டும் நேரங்களிலும், எனக்கு முதலே இந்தப்பாதை நடந்த அனுபவம் பகிரும் தருணங்களிலும் என வழிகாட்டிகளும் சக பயணிகளும் வாய்க்கப் பெற்றவள் நான். என் வாழ்விலுள்ளோர் மீது பெரும் வாஞ்சை பொங்குகிறது. நீங்களில்லாமல் நானில்லை (தமிழ் வாசிக்கத்  தெரியாது விட்டாலும் கூட உங்களிடம் இது வந்து சேரும்). 

உயிர்ப்பை  மீண்டும் உணரத்  தொடங்கியிருக்கிறேன். 

மழை வரும்.

2014ன் குறிப்புகள்


புத்தாண்டு பிறந்து விட்டது. ஒவ்வொருத்தரும் இந்த ஆண்டு புத்தகம் படிக்க, தவறாமல் உடற்பயிற்சி செய்ய, இனிப்பைக் குறைக்க,  பயணிக்க என்றெல்லாம் உறுதி பூண்டிருப்போம். போன வருடத்தில் செய்ததையே 2015இலும் தொடரலாம் என்றிருக்கிறேன் நான்.  அப்படிச் செய்தது அன்றன்றைய நாளில் என்னை மகிழ்வித்த, புன்னகைக்க வைத்த, ஓ!இதற்கு நன்றி என்று தோன்றிய ஒன்றோ சிலவோ பலதோ எதுவானாலும் குறித்து வைப்பது. கொஞ்சம் தினக்குறிப்பு மாதிரி.
எதையும் இலகுவாய் எடுத்துக் கொள்ளும் ஆள் நான். பலருக்கு மனதை வருத்தும் காரணங்களாக அமைபவற்றை என்னால் அலட்டிக் கொள்ளாமல் கடந்து போக முடியும். அப்படிப்பட்ட என்னை 2012 இன் இறுதிக் கால் (என் கவனமின்மையால்) கலைத்திருந்தது. என் இயல்பிலிருந்து மாறிப் போனேன். அது உறைத்ததும் அதிலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்பினேன். அதற்கு எப்போதும் மகிழ்ந்திருக்கும் கலையை மீளக கற்க வேண்டியிருந்தது. அன்றைய நாளை அதன் நிகழ்வுகளை எந்தளவுக்குக் கவனித்திருக்கிறேன்/அனுபவித்திருக்கிறேன் அல்லது எவை என்னைக் குழப்ப இடமளித்திருக்கிறேன் என்று பார்க்கவே  இந்தப்பயிற்சியைத் தேர்ந்தேன். ஆனால் பட்டியலில் இடம்பெறுபவை மேற்பந்தியில் சொன்ன வகைப்பாட்டுக்குள் வர வேண்டும். நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை விட்டுவிடல். அவ்வளவுதான். ஒரு நாளில் அன்பான, அழகான, மகிழ்ச்சியான, நன்றிக்குரியதான அல்லது அமைதி தருவதான பல நிகழ்வுகள் நடக்கும். அதே நாளில் நாம் சினந்து எரிச்சல் பட்டு மனம் வருந்தி அலைக்கழிந்துமிருப்போம். அன்றிரவு அல்லது அடுத்த நாள் (சில வேளைகளில் வார, மாத, ஏன் ஆண்டுக்கணக்கிலும்) முன்னவற்றை விடப் பின்னவைக்குத்தான் தான் மனதில் அதிகம் இடம் கொடுக்கும் மனப்போக்கு நம்மில் பலருக்கும் இருக்கிறது. கனம் மிக்கது அந்த மனப்போக்கு. ஆனால் ஒரு இறகைப் போலே எங்கள் தோள்களில் அமர்ந்துகொள்ளவும் எண்ணங்களுக்கு ஏதோ எங்கள் தெரிவு போலவே தன் வண்ணத்தைப் பூசுவதே தெரியாமல் பூசவும் அதால் முடியும். மெல்ல மெல்ல அழுத்திச் சேற்றில் தள்ளிவிடும். சரியானதை எடுத்துச் சொல்லும் அமைச்சர்களில்லாத அரசின் நிலைதான் பிறகு. உணராமல் நாமும் உழப்பிக் கிடப்போம். என்னைப் பொறுத்தளவில் பயிற்சி பயனளித்தது என்றே சொல்வேன். முழு ஆண்டிலும் மிகச்சில நாட்களே எழுதவில்லை. அன்றிரவே எழுதவில்லையென்றால் அப்படியே விட்டேன். இந்த முறை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் அந்த விதியை. அடுத்த நாள் வரை அனுமதிக்கிறேன் எனக்கு. 

நீஈஈஈல வானம், அனலடித்த பின் அள்ளிக் கொண்டு வீசும் குளிர்ந்த தென்காற்று, மழை, மரங்கள், காதல், குடும்பம், சுற்றம், புத்தகங்கள், அன்பு, பயணம், நட்பு, கொண்டாட்டம், நகைப்பு, நீச்சல், தேனீர், ஞாபகங்கள், இசை என 2014ஐ நிறைத்தவற்றுள் உறைய வைத்த வெட்டிய காய்கறிப் பொதிக்கான நன்றி நவிலலும் உண்டு. ஒரு சின்னச் சந்தோசமே போதுமாயிருக்கிறது. நிறைவளிக்கிறது. மிகவும் எளிமையான ஒரு சிந்தனையோட்டமோ என்று சந்தேகமும் வராமலில்லை. ஆனால் இப்படி இலகுவாய் சந்தோசப்பட்டுக் கொள்ளுவது பிடித்திருக்கிறது.

இதை எழுதின 2015ன் முதல் நாளினை இங்கே குறித்து வைக்கிறேன். சிட்னிக்குரித்தான வாணவேடிக்கைக் களியாட்டங்களுடன் அன்புக்குரியவர்களின் அருகாமையில் தொடங்கிய நாள். விடுமுறை நாளின் ஆறுதலான பகற்பொழுது. நட்பைக் கொண்டாடிய அருமையான மாலை. சாய அமர்ந்த போது தற்செயலாய் தொலையியக்கி மூலம் உயிர்பெற்ற தொலைக்காட்சியில் எங்களுக்கு மிகப்பிடித்த Edinburg Military Tattoo வின் 2014ம் ஆண்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து ஸூபின் மேத்தாவின் வழிநடத்தலில் Vienna Philharmonic Orchestra வின் நிகழ்ச்சியும் நிறைத்த அற்புத இரவுப்பொழுது. மனம் குறை கொண்டதும் நிகழ்ந்ததுதான் நேற்று. ஆனாலும் அதிக நேரமில்லை.. சொன்ன சந்தோஷங்களின் முன் அவை காணாமலே போய்விட்டன. 

உங்களுடைய புத்தாண்டு ஆரம்பம் எப்படி? 


-------
இப்படியெல்லாம் நேற்று செல்பேசியிலிருந்து எழுதிவிட்டு பிரசுரிக்கும் பொழுதில் தவறுதலாக அழித்துவிட்டேன். எரிச்சல் வந்தது உண்மை. ஆனாலும் இதைப் போன்றதொரு பதிவு எழுதப்பட்டு இல்லாமலானதும் முரண்நகைதான் இல்லையா? சிரித்துக் கொண்டே நாளைக்குத் திரும்ப எழுதுவோமென்று போய்ப் படுத்துக் கொண்டேன். இடுகையைத் திரும்ப இன்றைக்கு எழுதியிருக்கிறேன். கணினியிலிருந்து. எப்போதும் நிமிடங்களைச் சுவையாக்குவதற்கு ஏதாவது இருந்து கொண்டுதானிருக்கிறது. 

புத்தாண்டு வாழ்த்துக்கள் :O)


அந்தர(ங்க)த்தில் மழை


டாலிங் ஹாபரின் சில்லிட்ட படிக்கட்டில்
என் இதயத்தையும் அவளிருந்த குமிழியையும்
அன்று நான் உடைத்துக் கொண்ட பின்
என் மீது வந்தமர்ந்து,
இப்பொழுதும்  என்னோடு ஒட்டிக்
கொண்டிருக்கிறது  அந்த மாய வண்ணத்துப்பூச்சி - அன்றைய இரவின்
ஈரலிப்புடனும்  மாறாத அதே கதகதப்புடனும்.

உடை(ந் )த்ததற்குப் பதிலாக
மீண்டுமொரு குமிழி செதுக்குகிற போதெல்லாம்
தன் வண்ணங்களையெல்லாம் உதிர்த்து அதிலே  பூசியபடி
சத்தமில்லாமல் கேட்கிறது அந்த வண்ணத்துப் பூச்சி - அந்தப்
பெண்ணை என்னசெய்து விட்டேனென்று.
அந்த ஒரு வினவலில் துண்டு துண்டாய்ச் சிதறுகிறது
வண்ணம் பூசிய புதுக்குமிழி. 

செதுக்கிச் செதுக்கிக் களைத்துப் போனாலும் 
வாளாவிருக்க விடாமல் துரத்துகிறது வண்ணத்துப் பூச்சி.
வாலை ஆட்டாமல்,
சிறு முனகல் தானும் இல்லாமல்,
காதுகளைத்  தொங்கவிட்டு,
தலையைச் சரித்து,
துளைக்கும் மினுமினுத்த கண்களால் மட்டும் என்னைத் தொடர்கிறது
துரத்தினாலும் போகாத அவளது நாய்க்குட்டி.

ஒரு அதிகாலையில்
தேநீரின் துணையோடு - உனக்கு
உண்மையைச் சொல்லும் துணிவு எனக்கு வரும்வரை
பெய்ய விரும்பாமலும் 
பெய்யாமலிருக்க முடியாமலும்
அந்தரத்தில் தொங்குகிறது மழை.

இன்றைய தருணம்


இன்றைக்கு நல்ல வானிலை. இதமான வெயில், சுகமான தென்றல். கார் கழுவலாம் என்று நேற்றே யோசித்திருந்தேன். கராஜிலிருந்து வெளியில் எடுத்து வாகாய் நிழலில் நிறுத்தி ஸ்பொன்ஞ்சும் நீரும் கொண்டு கழுவ ஆரம்பிக்கையில் மனம் கட்டுக்குள் இருக்கவில்லை. அலைபாயும் தனது தொழிலை அது செவ்வனே செய்து கொண்டிருந்தது.  அதன் போக்கில் விட்டுவிட்டு கை மட்டும் காரைக் கழுவிக் கொண்டிருந்தது.   சுற்றியலைந்து களைத்த பின் நான் வாகனம் கழுவிக் கொண்டிருந்த இடத்துக்கே என் மனம் திரும்பியது. கழுவக் கழுவ அற்றுப் போய்க் கொண்டிருந்த வாகனத்துத் தூசியைப் போலவே எண்ணங்களும் மனதிலிருந்து கலைந்து போக, ஒரு கட்டத்தில் அங்கே வண்டியும் நானும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். அதைக் கழுவி விடுவது மட்டுமே தலையாய பணியாக இருந்தது. இன்றைக்குத்தான் வண்டியின் சரியான நிறத்தைப் பார்த்தேன் என்று சொன்னால் நம்பக் கஷ்டப்படுவீர்களோ தெரியவில்லை. காரினை மட்டுமே கண்டு புலன்களில் அதனை நிறைத்துக் கொண்ட நாளில் அதன் வண்ணத்தை சரியாகப் பார்த்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை எனக்கு.

நாங்கள் குளிப்பது போலத்தான் வாகனக் குளியலும். முதலில் நீர் வார்த்து, பின் சவர்க்காரம் தேய்த்து, நீர் கொண்டு அலசிய பின் துவட்டிக் கொள்வது.
வாகனம் கழுவ என்றிருக்கிற திரவத்தை ஒரு வாளியில் இட்டு அது நுரைக்க நுரைக்க நீர் நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். நுரையில் விரும்பியபடிக்கு அளைந்து விளையாடிக் கொள்ளலாம். முழங்கை வரை வாளிக்குள் அமிழ்த்தி ஸ்பொஞ்சினை நனைத்து காரின் ஒவ்வொரு பகுதியாக தேய்த்துக் கழுவினேன். வாகனம் கழுவுவதென்பது ஒரு முழு உடற்பயிற்சி. குனிந்து நிமிர்ந்து வளைந்து எட்டியெல்லாம் வேலை செய்ய வேண்டி வரும். காரில் ஒவ்வொரு பகுதியாகத்தான் நுரைக் கரைசல் கொண்டு கழுவிய பின் நீர் கொண்டு அலசி அதற்கென இருக்கிற துணியால் துடைக்க வேண்டும். இங்கே தான் நம் குளியலும் வாகனக் குளியலும் வித்தியாசப்படுகின்றன. நம்மைப் போல் தலை முதல் கால் வரை ஒரே தடவையில் நுரை குளித்து அலம்பிக் கொள்ள முடியாது. அப்படியாக  ஒவ்வொரு பகுதியையும் தேய்த்து நுரை போகக் கழுவி துடைத்தும் விட்ட பின் கொஞ்சமாய்ப் படுகிற இளஞ்சூட்டு வெயிலில் செல்லம் போல நின்றிருந்தது.

சில்லுகளைக்  (wheel hub) கழுவும் போது தான் கொஞ்சம் கிரீசும் தூசும் நகத்தினடியில் ஒளிந்துகொண்டன. எல்லாம் கழுவி முடிக்கும் வரை வேறொரு சிந்தனையுமில்லாமல் இருந்தது அழகான  உணர்வாய் இருந்தது. தியானம் போல. கனவுகளில்லாத நித்திரை போல. 

வீட்டுக்குள் வந்த பின்னர் மனம் உணர்ந்த நிறைவும் நகத்தினடியிலிருந்த அழுக்கும்தான் வாகனம் கழுவினதற்குச் சாட்சியாக இருந்தன. கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின் வெயில் கொட்டிக் கிடந்த புல்லில் கிடந்து புத்தகம் வாசித்தேன். கார்திக் வேலுவின் 'மொழி  பெயர்த்த மௌனம் ' கவிதை நினைவுக்கு வந்தது. இலக்கியச்  சந்திப்புக்கு எதைக் கொண்டு செல்ல என்று இதுவரை இருந்த  குழப்பம் தீர்ந்தது. 

சந்திப்பிற்குப் போகும் வழியில் எதிர்பாராத ஒரு அழகான நிலவைக் கண்டேன். உதட்டில் புன்னகையொன்று வந்து குந்திக் கொண்டது. பூமிக்கு மிகவும் அண்மையில் நிலவு வரும் காலத்துப் பூரணைக்கு அடுத்த நாள். பெரியதொரு பந்து. கோழிக் குஞ்சினதை விடக் கொஞ்சம் அழுத்தம் கூடின மஞ்சள் நிறத்தில். அடிவானத்தில் சில மரங்களின் பின்னால் முகில்களோடு  மறைந்து விளையாடிய வட்டப் பந்து. சந்திப்பு நடக்கும் இடத்திற்கு நிலவைக்  கண்டு ஐந்து நிமிடங்களுக்குள் போய் விட்டேன். அங்கு நின்றவருக்குக் காட்டுவதற்கிடையில் மஞ்சள் வெளிறி பந்தும் சற்றே மேலேறி விட்டிருந்தது. கொஞ்ச நேரம் நிலவையே ரசித்துக் கொண்டிருந்தோம். மூன்றாவமர் வர, அவருக்குக்கும் காட்டினோம். சந்திப்பு முடிந்து கலையும் போது நிலவு உயரத்தில் சின்னதொரு வெண்பந்தாகிச் சிரித்துக் கொண்டிருந்தது. 

முன்னமே தெரிந்திருந்தாலும் பல வேளைகளில் உணர்ந்தாலும் இப்போ கொஞ்ச நாட்களாக திரும்பத் திரும்ப எனக்கு நினைவுறுத்தப்படுகிறது ஒரு நாளினையும் வாழ்க்கையையும் அழகாக்குவது எதிர்பாராமல் வரும் சின்னச்சின்னத்  தருணத்துச்  சந்தோசங்கள்தான் என்று. அதையே கொஞ்ச நேரம் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தோம். தேவதேவனின் கவிதையொன்றைப்  பற்றிப் பகிர்ந்து கொண்டார் ஒருவர்.

வேறெதையும் எழுதாவிட்டாலும், இன்றைய என் நாளை  அழகாக்கிய கார் கழுவினதும் நிலவைப் பார்த்ததும் போன்ற தருணங்களைச் சில நாட்களுக்கொருமுறையாவது  இங்கே பதிந்து வைக்கும் உத்தேசம்.

உங்கள் நாட்கள் எதனாலானவை? 

பெட்டகம்