நிலவு வருகிறது கூடவே


எழுதி எத்தனையோ காலமாகிறது. 
இன்றைய நாளைக் குறித்து வைக்கத் தோன்றுகிறது.  அதைத் தனிப்படட முறையில் வைத்துக் கொள்ளலாமே எதற்கு பகிர என்றும் தோன்றாமலில்லை. ஆனாலும் இங்கே பதிகிறேன். 

தெளிந்த மனதாய் இருக்கிறது. நிறைய நாட்களுக்குப் பிறகு. வருடங்களென்று தான் சொல்ல வேண்டும் - முக்கியமாய் கடந்த இரண்டு/இரண்டரை ஆண்டுகள்.

மனதளவில் கொஞ்சங் கொஞ்சமாய் சுருங்கி, எல்லாரிடமுமிருந்து விலத்தி, சாப்பிடத் தோன்றாமல்/பிடிக்காமல் உடல் மெலிந்து, பிடித்தவை செய்யத் தோன்றாமல்/பிடிக்காமல், மரத்துப் போன மனதுடன் நாட்கள் கடந்தன. எதோ பிரச்சனை - நான் சரியாக இல்லை என்று எனக்குப் பிடிபட சில மாதங்கள் எடுத்தன. ஒரு நாள் காரணமேயில்லாமல் சக அலுவலர் எனக்குப் பிடித்த வகை சொக்லற் எனக்காகவென்றே வாங்கியதாகச் சொல்லி கையில் தந்து விட்டு நகர்ந்தார்.  கண்ணீரை  வழிய விடாதிருப்பதற்குப் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. ஆனாலும் முடியவில்லை. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாய்ஏனென்று விளங்காமல் நிறுத்தவும் முடியாமல் அழழென்று அழுதேன்.  
உடனடியாக உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது ஒரு சொக்லற். 

அப்போதிருந்ததை விடவும் இருண்ட இடத்தில் என் மனம் பிறகு கிடந்திருக்கிறது. நல்ல காலத்திற்கு மீள முடியா இடங்களுக்குப் போக உந்தவில்லை என் எண்ணங்கள். ஆனாலும் அதற்கு மிக மிகக் கிட்டப் போயிருக்கிறேன் என்பது என் உளவியல் ஆலோசகருடனான சந்திப்புக்கள் எனக்குச் சொல்லின. 

எனக்குத் தெரிந்து ஒரு வருடத்திற்கும் மேலாய் என்ன ஏதென்று தெரியாமல், மனவுளைச்சலோடு மரத்துப் போன மனதுடன்  நாட்களைக் கடத்தியிருக்கிறேன். என் மனதினை /எண்ணங்களைக் கவனித்து உரிய முறையில் கையாளப் பழகியிராததன் விளைவு தான் இந்த பிந்திய "ஓடி வெளித்தல்". நான் உணராமலேயே என்னைத் தொலைத்து நாலைந்து வருடங்கள் ஓடியிருந்திருக்கின்றன..படிப்படியாக பாரத்தை ஏற்றியபடிக்கு.
உடல் சார் காரணங்களால் அல்லாமல் புறக் காரணிகளால்  ஏற்பட்ட மனவழுத்தம். 

எவ்வளவு நெருங்கினவர்களென்றாலும் சொல்ல முடியாது எதோ சரியில்லை என்று.. அவ்வளவு சிறந்தது என்  முகமூடி . உடம்பு மெலிவதை தவிர வேறெதுவும் வெளியில் தெரியாது. அதையும் கூட நான் எடை குறைக்கிறேன் என்று (தாமாக) எடுத்துக் கொண்டார்கள். 

முழுதாய் வெளி வந்து விட்டேனென்று சொல்வதற்கு இன்னும் நாளிருக்கிறது. ஆனாலும் அதற்குரிய பாதையில் பயணிக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். 
கையைப் பிடித்துக் கடக்கும் சந்தர்ப்பங்களிலும், இருட்டென்றாலும் பாதை இருக்கிறதென்று தைரியம் சொல்லி வெளிச்சம் காட்டும் நேரங்களிலும், எனக்கு முதலே இந்தப்பாதை நடந்த அனுபவம் பகிரும் தருணங்களிலும் என வழிகாட்டிகளும் சக பயணிகளும் வாய்க்கப் பெற்றவள் நான். என் வாழ்விலுள்ளோர் மீது பெரும் வாஞ்சை பொங்குகிறது. நீங்களில்லாமல் நானில்லை (தமிழ் வாசிக்கத்  தெரியாது விட்டாலும் கூட உங்களிடம் இது வந்து சேரும்). 

உயிர்ப்பை  மீண்டும் உணரத்  தொடங்கியிருக்கிறேன். 

மழை வரும்.

1 படகுகள் :

சு. க்ருபா ஷங்கர் November 22, 2018 6:56 am  

அடடே, அப்படியா? நம்பவே முடியவில்லை. இருந்தாலும் திரும்புதலைக்கேட்டு மிக்க மகிழ்ச்சி. மகிழ்வான வாழ்வுக்கும் சுற்றத்துக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்! பாருங்கள், வயதான அந்திமக்காலத்தில் நாம் இப்படியெல்லாம் பேசிக்கொள்ளவேண்டியிருக்கிறது :p

பெட்டகம்