வழமை போலவே என் பிற்பகல் பழச்சாற்றை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். அப்பிள், வாழைப்பழம், கரட், இஞ்சியுடன் எப்போதேனும் தோன்றினால் மாம்பழமும் அரைத்த சாறு. இதைத் தட்டச்ச ஆரம்பிக்க இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்பு உள்ளெடுத்த ஒருவாய்ச்சாறு மின்னல் போன்று ஒரு ஞாபகத்தைக் கிளப்பிப் போனது. வந்த ஞாபகம் மின்னல் போல என்று சொல்கிறேன் ஏனென்றால் வந்த வேகத்திலேயே மறைந்தும் விட்டதனால்.
குழாயூடாக வாய்க்குள் வந்த அந்தக் கொஞ்சச் சாறு தட்டியெழுப்பிய ஞாபகம் எனது சிறுபருவத்துப் பரிச்சய வாசனைகளிலோ அல்லது சுவையிலோ ஒன்று என்பது மட்டும் தெரிகிறது. என்னவென்று ஞாபகப்படுத்திக் கொள்ள மீண்டும் மீண்டும் உறிஞ்சிச் சுவைக்கிறேன். வலுக்கட்டாயமாகச் செய்யப்படும் எதுவும் இயல்புமில்லை அத்துடன் எதிர்பார்க்கும் பலனைத் தருவதுமில்லை என்று உணர்த்திச் செல்கிறது என் தொண்டையில் இறங்கிக் கொண்டிருக்கும் பழச்சாறு.