குறிப்பட்டதொரு பதிவைத் தேடுகையில் இது கண்ணில் பட்டது. சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் எழுதி draft ஆகவே இருந்தது. இன்றைக்குப் பதிகிறேன்.
````````````````````````````````````
உங்களுக்கும் இப்பிடித் தோன்றியிருக்கக் கூடும்; அநேகமாக எதையாவது பார்த்தால் ஒரு சொற்றொடரோ அல்லது ஒரு சொல்தானும் மனதில் சட்டெனப் படும். புல்லைப்பார்த்தால் "அட! புல்லு" என்பதையோ, கடலைப் பார்த்து எவ்வளவு பெரிதாயிருக்கிறது என்று நினைத்துக்கொள்வதையோ இங்கு சொல்லவில்லை.
போன கிழமை படிக்கட்டில் கால் வைத்த போது ஏனோ "உதறி விரித்தது போல" என்று தோன்றிற்று. எப்பவாவது வாசித்த ஒரு கவிதையிலிருந்தோ கட்டுரை/கதையிலிருந்தோ வந்திருக்க வேண்டும். குட்டையான கட்டிடங்களுக்கு மத்தியில் உயரமானதைக் கண்டால், ஒரு bookmark போல என்று நினைத்துக் கொள்வேன். என் நண்பிக்கு எல்லாக்கட்டிடங்களும் (குறிப்பாக கபில (brown) நிறப் பூச்சுள்ளவை) கேக் துண்டுகள் மாதிரித்தான் தெரிகின்றன. :O) கிளைபரப்பி அடர்ந்து நிற்கும் மரத்தைக் கண்டால் "காற்றுக்கு விசிறி விடுகிறது" என்றும், இலைகள் சலசலக்க கிளைகள் ஆடுகையில் "அலையடிக்கிறது" என்றும் தோன்றும். இப்படி நிறைய.
இதெல்லாம் தன்னிச்சையாகத் வந்து விழுகின்றனவா அல்லது நாங்கள் முதலில் வாசித்த/பார்த்த ஏதாவது மனதில் தங்கி, ஒரு சிறு தூண்டல் கிடைத்ததுமே வெளி வருகிறதா? உதாரணமாக, இலையுடன் கிளை அசைகையில் அலையடிப்பது என்று எனக்குத் தோன்றுவது நேற்று நீருக்கடியிலுள்ள பவழ(ள?)ப்பாறைகள் பற்றிய விவரணப்படத்தில் பார்த்த கடற்தாவரத்தின் இலை அசைவு மனதில் தங்கியதினாலாயிருக்கலாம். காரணமிருந்தேயாக வேண்டிய கட்டாயமில்லை.
இதைப்போலவே மாறாய், ஒரு சொல்லை/ வசனத்தைச் சொன்னதும் சில உருவங்கள்/வடிவங்கள்/பிம்பங்கள் மனதில் தோன்றும். இப்படி, மனம் எதனால் இப்படிச் செயற்பட்டு புரிந்து கொள்ள முடியாத இணைப்புகளை உருவாக்குகிறது? இந்த இணைப்புகளின்/உருவ(க)ப்படுத்தல்களின் பயன் என்ன?