என்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)
---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.
எடுத்துப் பேசும் போதெல்லாம் "எப்படியிருக்கிறாய்" என்ற கேள்வியுடன் ஆரம்பித்து அதற்குப் பதில் நான் சொன்னதுடன் நடந்தவைகளில் சிரிப்பானவற்றையோ அல்லது "அம்மா xx மணிக்குப் போனவ, இன்னும் வரேல்ல" என்றோ ""அம்மா சரியான குழப்படி, சொல்லுக் கேட்கிறேல்ல" என்றோ முறைப்பாடு சொல்லும் பெண் இன்றில்லை. உயிர் போய் 36 நாளாகிறது. மனிதர்களைக் கூர்ந்து கவனிக்க, உள்ளே தேடிப்பார்க்க என்று கடுமையாக ஞாபகமூட்டிக் கொண்டும் அட! இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே, அவருடன் அதிகநேரம் கழித்திருக்கலாமே என்று காலங் கடந்த ஞானோதயம் தரும் குற்றவுணர்ச்சிகளுடனும் கடந்து போயிருக்கிற ஒரு மரணம்.
செத்தவீட்டில் போன்று இதுதான் நடந்தது என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. முடிந்து போனபின் எங்கள் ஆறுதலுக்குத்தானே இந்த அக்குவேறு ஆணி வேறாகச் சாக முந்தி நடந்ததும், அவர் சொன்ன வார்த்தைகளுக்கு பொருளும் உள்ளர்த்தம் கண்டு பிடிப்பதும் கற்பிப்பதும். உசாராக சந்தோசமாக அன்பாக வாழ்க்கையை வாழத் தெரிந்த ஒருவர் இப்போது இல்லையே என்ற துக்கம்தான் அவரை அறிந்த சந்தோசத்துடனும் அவர் பற்றின ஞாபகங்களுடனும் சேர்ந்து மனதில் பூத்திருக்கிறது.
இறக்கப் போகிறார் என்று தெரிந்ததும் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பது பெருங் கொடுமை. அது போன்ற கொடுமைகள் எண்ணிக்கையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியனவாய்த்தான் இருக்கும். அதைவிட வெறுங் காலுடன் கொளுத்தும் வெயிலில் வறண்டு போனதொரு ஆற்றின் கரையில் அல்லது பாறையில் அசையாமல் நெடுநாட்களுக்கு நின்று கொண்டேயிருக்கலாம். மற்றவர் இருக்கட்டும்.. அவரது உடல் ஒத்துழைக்க மறுப்பதை உணர்ந்து கொண்டாலும் கருப்பையில் உருவாகின கணத்திலிருந்து கூடவே இருந்து கடந்த சில வருடங்களாக தோழிகள் போல ஒன்றாக வாழ்ந்திருந்தவள் இறக்கபோகிறாள் என்று அறிந்தும் எந்த நிமிடம் வரை என்று அறியாதிருப்பது போல வதை வேறொன்றும் வேண்டாம் என்று தோன்றுகிறது.
அந்த நாளையும் மழையைப் பூசிக் கொண்ட தொடர்ந்து வந்த நாட்களையும் கடந்து வந்த ஒரு பிற்பகலில் சந்திராவின் உடைமைகளினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த குறிப்பேட்டைக் கண்டேன். எண்ணற்ற குடும்பங்களுக்கே உரித்தான பரகசியமான இரகசியக் கதைகள். அதிலொன்றுதான் - அடுத்த தலைமுறைக்கு அரசல் புரசலாகத் தெரிந்த கதை..சந்திராவின் கோணத்திலிருந்து.
சிறுவயது வாழ்க்கையும், பட்டப்படிப்புக்கு புனே மற்றும் கல்கத்தா சென்றதும், சிங்களவரைக் காதலித்து மணந்த குற்றத்திற்காய் மூத்த தமக்கையின் குடும்பம் விலக்கினதும், எத்தியோப்பியாவுக்கு கற்பிக்கப் போனதும், அங்கு வேறொருத்திக்குக் கணவரால் பிறந்த பிள்ளைகளையும் அவற்றின் தாயையும் தனதாய் வரித்துக் கொண்டதும், அதையொட்டிய தனது உணர்ச்சிகளையும், பின்னர் தொழில் நிமித்தம் கிரிபத்தி போனதும், கணவர் இறந்த பின் தனியொருவராய் உழைத்து பிள்ளைகளைப் பார்த்ததும், அவர்களுக்கென்று வாழ்க்கை அமைய உதவினதும், தன் மாணவர்கள் பற்றியும், பிறகு நாடு திரும்பி மூத்த தமக்கையின் கணவர் இறந்து போயிருக்க அங்கு சென்று 34-35 வருடங்களின் பின் சகோதரிகளின் சந்திப்பும், அங்கு கூடவே அக்கா இறக்கும் வரையிருந்ததும், அதற்குப் பின் இரட்டைச் சகோதரியுடனிருந்த அன்றாட வாழ்க்கையும் விரிவான எழுத்தில் குறிப்பேட்டின் தாள்களில் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே அதற்குள் பழைய கடிதங்கள்(1965-69, 1977இல் எழுதியவை), இந்தியாவுக்குப் போக வீட்டிலிருந்து கொழும்பு சென்ற தொடர்வண்டிப் பயணச் சீட்டு(1950களின் ஆரம்பம்), பட்டம் கிடைத்ததென்று அறிவித்த தந்தி, பிள்ளைகளின் ஓவியங்கள், கவிதைகள் என்பனவும் ஒரு வாழ்க்கையின் மௌனச் சாட்சியங்களாய் அந்தக் குறிப்பேட்டில் கொட்டிக் கிடக்கக் கண்டோம். முன்முடிவுகளோ பின்முடிவுகளோ இல்லாமல் பார்க்கிறேன்; அவரெடுத்த முடிவுகளின்படி அதுதான் சந்திரா என்கிற மனுஷியின் வாழ்க்கை.
வாழ்க்கைச் சரிதையை எழுதி வைக்க வேண்டும் என்று சொல்லுகிற கிறிஸ்தவ சமயப் பிரிவொன்றில் சந்திரா சேர்ந்து கொண்டதில் எங்களுக்கும் ஒரு வாழ்க்கையை, வாழ்ந்தவரின் கண்ணுடாகப் பார்க்கக் கிடைத்தது. வாழ்ந்த வரைக்கும் அவர் சம்பாதித்துக் கொண்ட அன்பும் மனிதர்களுமே அதற்குச் சாட்சியம். நிறையப் பேரை இப்படியாக அவர்களின் பார்வையில் தெரியாமல் போய் விடுகிறது. பிறர் கொடுக்கிற நிறக் கண்ணாடிகளுக்கூடாகவே அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறோம்.
வாழ்க்கைக்குத் தேவையானது என்ன என்பதை - முழுமையாக ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு செலுத்தி, எவரென்றாலும் உள்ளன்போடு பழகி, எல்லாருக்கும் நல்லதே நினைத்து நன்மையே செய்த/செய்கிற - சந்திரா மற்றும் அவரது இரட்டைச் சகோதரி போன்ற அழகிகளிடமே கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
[சந்திராவின் இரணைக்கும், சந்திராவை அறிந்தவர்கள் எல்லாருக்கும், சந்திரா இருக்கும் போதிருந்தே இருக்கும் நடைமுறை பின்பற்றி முன்வீட்டுப் பிள்ளைகள் தொடர்ந்தும் நீர் வார்த்துக் கொண்டிருக்கிற சந்திராவின் பூஞ்செடிகளுக்கும்.]
சந்திரா என்றொரு அழகி
வகை: இப்பிடியும் நடந்துது , குழையல் சோறு