எழுதுவதற்கெனக் காலையில் யோசித்து வைத்திருந்ததை ஓரமாய் வைத்துவிட்டு வேறொன்றைக் கையில் எடுத்திருக்கிறேன். புதிதில்லைத்தானே.
இங்கே ஒரு தோழி இருக்கிறார். எதிர்பார்த்தேயிருக்காத விதத்தில் வாழ்க்கை எங்கள் கொஞ்சப் பேருக்குச் சேர்த்து ஓங்கி ஒரு அறை விட்ட தருணத்தின் அடுத்தடுத்த நாட்களில் நாம் சந்தித்தோம். என் பெயரில் எனக்கு என்னைத் தவிர்த்தே இருபதுக்கும் மேற்பட்டோரைத் தெரியும் என்பதால் அரிய பெயர்களில் பெருவிருப்புண்டு. அவர் பெயரில் அவரை மட்டுமே நான் அறிவேன். உதிக்கும் சூரியனின் பெயர் கொண்டவர். நாங்கள் சூரியோதயம் காண்பதற்காக அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கூட வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறோம். போன ஆண்டின் அநேக வார இறுதிகளை இப்படியான காலை அழகாக்கியது. வேறு இருவரும் வருவார்கள் - மாறி மாறி. ஆனாலும் அதிகம் இவரே. தன்னைத் தானே சந்திக்க அவரை நான் அழைத்துச் செல்கிறேன் என்கிற என் மொக்கை நகைச்சுவையையும் பொறுத்துக் கொண்டு வருவார். அலைவரிசை மிகவும் ஒத்துப் போகும். பேசாது கழிகின்ற பொழுதுகள் கூட இயல்பாகவே இருக்கும். பேச ஒன்றுமில்லாவிட்டால் அந்தரித்துப்போய் ஏதோவொன்றை யோசித்துத் தேடியெடுத்துப் பேசவேண்டிய தேவையொன்றை மனம் உணராமல் இருப்பது எத்தனை சுகம்! என்னவொரு வரம்! அது எங்களுக்கு வாய்த்திருக்கிறது.
கொஞ்சநாள் பரவாயில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பவும் பழைய பள்ளங்களுக்குள் போகிற மாதிரித்தான் கடந்த சில கிழமைகள் கழிகின்றன. மீள்தல் என்பது விக்கிரமாதித்தனையும் வேதாளத்தையும் ஒத்தது. மடுவுக்குள் மனம் கிடக்கிறதென்பதைப் புறச்சுட்டல்களின்றிக் கண்டு கொள்ளல் என்பதுவே ஒரு பெரிய படிதான். பிறகு தீர்மானித்துக் கொள்ளவேண்டியது கிடப்பதா எழும்புவதா என்று. கிடக்கத்தான் சொல்லும்.. அதுவும் எழுவதற்குத் தேவைப்படும் பலத்தையும் தொடர்முயற்சியையும் உணர்ந்த பிறகு, இன்னும் உரக்கச் சொல்லும்.. "கிட .. கஷ்டம்.. எதற்கு.. யாருக்காக.. ஏன்.. பலனில்லை..". இப்படிப் பல சொல்லும் அதே மனம்தான் விக்கிரமாதித்த முயற்சிகளுக்கு அடிப்படையாக 'எனக்காக' என்றும் கத்தும். அந்த ஒரு சொல்லுத்தான் ஊறும் முதல் ஈரம். அப்படித்தானே எந்தப் பெரிய ஆறு(வது)ம் தொடங்குகிறது.
நிறைய நாட்களுக்குப்பின் போன கிழமை நீண்டதூரம் போகலாம் என்று நடக்கச் சென்றேன். வேனிற்காலம். பூத்துக் குலுங்கியும் கொட்டியும் எங்கும் அழகு கடை பரப்பி இருந்தது/இருக்கிறது. அதிலும் ஜக்கராண்டா என்கிற, ஊதாப்பூக்கள் கொண்டதொரு மரம் நான் நடக்கப் போன பகுதியில் நிறைய. சிட்னியில் இக்காலம் இந்த மரத்தின் பூத்திருவிழாவுக்குப் பெயர் பெற்றது. அன்றைக்கு 4 மணித்தியாலங்கள் மட்டுமே நடந்திருப்பேன். இளவெயிலும் குளிர்காற்றும் பூக்களும் மதில் மேலிருந்தபடி என்னைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பூனையும் மனதை ஆற்றின. நடுவில் ஒரு பூங்காவில் ஊஞ்சலுமாடி, கம்பிவேலிக்கு அப்பால் இருந்த ஒரு செடி வகையையும் அதன் பூக்களையும் ரசித்து, வீசிய காற்றினால் அவற்றைக் கலங்கலில்லாமல் படமெடுக்க முடியாமல் கண்ணிலும் மனதிலும் மட்டும் தேக்கியெடுத்த பின் அந்த குளத்துக்குக் கிட்ட வந்து சேர்ந்தேன். தோழிதான் மனதில் வந்தார். அவருக்கும் பிடிக்கும் என்று தோன்றிற்று.
தோழியைச் சந்திக்கும் வாய்ப்பு இன்றைக்கு அந்தக் குளத்துக்குக் கிடைத்தது. அவர் குரலை மட்டுமே கேட்டிருந்தாற் கூட அறியலாம் அவர் எத்தனை வியந்தும் மகிழ்ந்தும் அந்தக் குளத்திலிருந்த தாமரைகளைப் பார்த்தார் என்பதை. எனக்கு ஒலி-ஒளி இரண்டுமே கிடைத்தன.
உதிக்கும் சூரியனைப் பார்த்து மலரும் தாமரையைத் தெரியும். மாறி நடந்ததை இன்று நான் கண்டேன். மலர்கின்ற சூரியன் என்ன்ன்ன அழகு தெரியுமா?
0 படகுகள் :
Post a Comment