கள்ளனும் காசிநாதரும்

என்னுடைய அண்ணாமார் படித்தது, மட்டக்களப்பில் Central College என அறியப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தான் . சின்ன வயதிலிருந்தே அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்க நேரிட்டது. அவர்கள் படிக்கும் போது தலைமையாசிரியராய் இருந்தவர் பிரின்ஸ் காசிநாதர். (1990 களில் பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்). இவரைப் பற்றி இலங்கை நண்பர்கள் அறிந்திருக்கக்கூடும். மிகவும் கண்டிப்பானவர். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது எனக்கு இவரை யாரெனத் தெரியாது. நான் உள்ளே விடவில்லையாம். "உங்களை யாரென்று தெரியாது, அம்மா வரும் வரைக்கும் உங்களை உள்ளுக்கு விட முடியாது" என்று சொல்லி அவரை வெளியில் காக்க வைத்த 'பெருமை' என்னையே சாரும்.(நன்றி! நன்றி!!)

சொல்ல வந்ததை விட்டு விட்டு என் பெருமை பேசிக் கொண்டிருக்கிறேன். காசிநாதர் கண்டிப்பானவர் என்று சொன்னேன் தானே..விடுதியில் தங்கிப் படித்த ஒரு மாணவன் சரியான தெறிப்பாம்.( தெறிப்பு: குழப்படி என்றும் சுண்டுதல் என்றும் இரு பொருள்படும். கிழக்கின் வட்டார வழக்கு). ஒரு நாள் விடுதி மேலாளருக்குத் தெரியாமல் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டான் என்பதை யாரோ ஒரு 'நலம் விரும்பி' மேலாளருக்குத் தெரிவிக்க, அதை அவர் போய் காசிநாதரிடம் அறிவிக்க.. வந்தது வினை. ஐயா ஆறுதலாக படமெல்லாம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினாரா, அடுத்த நாள் தலைமையாசிரியரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

"டேய்! நீ படம் பாக்க போனியாமே?"
"ஐயோ! இல்ல சேர்!"
"உண்மையைச் சொல்லு...எந்தத் தியேட்டருக்கு போனனீ?"
"நான் போகல்ல சேர்!"
"படம் நல்லா இருந்ததா?"
"எனக்கு தெரியா சேர், நான் போகல்ல"

எத்தனையோ விதமாகக் கேட்டும் மாணவன் பிடி கொடுக்கவில்லை. "சரி! உன்னை நம்புறன்.. நீ போ!" என்றதுதான் தாமதம், தப்பினோம்! என்று மாணவன் வெளியேறும் போது

"படத்துக்கு போனது போனனீ..ஏன்டா செருப்பில்லாம போனாய்?"
"இல்ல சேர்..செருப்பு போட்டுட்டுத் தான் போனனான்"

அன்றைக்கு பிரம்புக்கு வேலை தான்! =O)

கவிதை என்ற பெயரில்..

பள்ளிக்கூடத்தில் தமிழ் மன்றம் நடத்தி வந்தோம். A/L படிக்கும் போது தமிழ் மீடியத்துக்குப் பொறுப்பான ஆசிரியையிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி வாங்கி , பிறகு அவவையே தலைமையாசிரியையிடம் தூது அனுப்பி ஒருமாதிரி கஷ்டப் பட்டு அனுமதி எடுத்து ஒரு கலைவிழா நடத்தினோம். அதிலே ஒரு புத்தகம் வெளியிடுவது என்று முடிவெடுத்து அதற்கு கதை கவிதை கட்டுரை என்றெல்லாம் சேகரித்து வெளியிட்டோம். அதிலே பெரிய கவிஞி என்ற நினைப்பில் நான் எழுதிக் கொடுத்து வெளிவந்தது தான், எனக்கு நினைவு தெரிந்து முதல் முதலாய் நான் கிறுக்கிய கவிதை. அண்ணா சொல்வார் நான் சின்ன வயதிலேயே(அடடா...child prodigy!) கவிதை ஒன்று சொன்னேன்/எழுதினேன் என்று. எனக்கு ஞாபகமில்லை. 'எனக்குப் பசிக்குது, கடையில சாப்பாடு இருக்குது' என்று தொடருமாம், மீதி மறந்து விட்டார் (நல்ல காலம்...சின்ன அண்ணாவைக் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை!!)

கலைவிழாவின் ஞாபக இதழில் வந்த என் 'கவிதை' எதைப் பற்றி என்று மறந்து விட்டேன்..புத்தகமும் கைவசமில்லை பார்த்து இங்கே தட்டச்ச.(தப்பினேன் என்று யாரோ சொல்வது கேட்பது போல ஒரு பிரமை!) =O)

பள்ளிக்கூடத்தில் கடைசி நாளுக்குச் சற்று முன், A/L பரீட்சைக்கு முன், எல்லோரும் ஆட்டோகிராஃப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதிலே எழுதும் போது எல்லோருக்கும் தாங்கள் பெரிய கவிதாயினிகள் என்ற நினைப்புத் தான் (நானும் விதி விலக்கல்ல). உரியவரிடம் திரும்பி வரும்போது நிறைய 'நிலாப் பெண்'களும், 'உன் ஆயிரத்தொரு ஞாபகத்திலே என்னையும் ஒன்றாக்கு!' என்று கேட்பவர்களும் 'மரணப் படுக்கையிலும் பழகிய மணித்துளிகளை மறக்காத இன்னுயிர்த் தோழி'களும் அந்தச் சின்னப் புத்தகத்துக்குள்ளே குடி வந்திருப்பார்கள். உணர்வுகளையெல்லாம் தெரிவிக்கத் துடிக்கின்ற காலமும் வயதும் அது.

பள்ளிகூடத்திலிருந்து விலகுகிறோம் என்பதே எனக்கும் இன்னும் பலருக்கும் பெரிய தாக்கமாய் இருந்தது. கவிதையா இல்லை வசன நடையா என்ற தெளிவில்லாத ஒரு நடையில் அப்போது நான் எழுதியதுதான் இது:

பள்ளி வாழ்க்கை பருவ காலம்
பாதி வாழ்க்கையின் வசந்த காலம்
வசந்தம் தரு நாள் மாறிய போதும்
வாடாமலராய் நினைவுகள் நிலைக்கும்
பள்ளியில் பயின்ற காலங்கள்
வாழ்க்கைச் சோலையின் இனிய கோலங்கள்
காலங்கள் மாறலாம்...கோலங்கள் அழியுமா?
குறும்புடன் பேசி, குழப்படிகள் செய்து
கூடி மகிழ்ந்த அந்த மின்னல் வாழ்க்கை -
இனியும் வருமா? இன்பங்கள் தருமா?
எத்தனை எத்தனை நினைவு மீன்கள்
என் ஞாபக நீரோடையில்!
இதய உதட்டில் மென்வருடலாய்
வண்ணத்துப்பூச்சிகள் - MC யின்
ஞாபக வர்ணங்கள் என்றும் எனக்குள்ளே.



இதற்குப் பிறகு நான் கவிதை என்ற பெயரில் ஒரு முயற்சியும் செய்ததாய் ஞாபகமில்லை.

என்ன சத்தம் இந்த நேரம்..அரட்டை ஒலியா?

கோயிலுக்கு போனால் சில/பல வேளைகளில் அங்கே சிலர் நடந்து கொள்ளும் விதம் இருக்கிறதே..சீ! என்று ஆகி விடும். பூசை நடந்து கொண்டிருக்கும்...இவர்களோ பக்கத்திலிருக்கும் தோழியிடம் நேற்றுப் போன கல்யாண வீட்டைப் பற்றியோ மகன்/மகள் செய்யும் வேலைகள் பற்றியோ அளந்து கொண்டிருப்பார்கள்.(வயது வந்தவர்களில் இந்த அநியாயத்தைச் செய்பவர்கள் 99.9% பெண்களே என்பது வருத்தத்துக்குரியது!). பதின் வயதினரைக் (teenagers) கேட்கவே வேண்டாம்..அம்மா நேற்று ஷொப்பிங் போக விடவில்லை என்பதிலிருந்து யாரை சைட் அடித்தார்கள் என்பது வரை அங்கே அரங்கேறும்(இவ்வயதினர்க்கு எதை எங்கே கதைப்பது என்கிற விவஸ்தையே இல்லை..திருவிழாவின் போது ஒருநாள் நடந்தது...முற்றிலும் உண்மை: ஒரு பெண் தன் தோழியிடம் சொன்னாளாம் "can you believe I'm still a virgin" என்று!! அவளுக்குப் பக்கத்தில் நின்று கொன்டிருந்த என் கணவரின் நண்பர் திரும்பி அவளைப் பார்த்து "Good for you" என்று சொன்னாராம். இயல்பாகவே இவர்களைப் பற்றிய கவலை எழுகிறது!). இவர்களுக்கு ஒரு விஷயத்தைக் கதைத்தே தீர வேண்டிய அவசியம் இருந்தால்:
(1) கோயிலில் வெளியே போய் கதைக்கலாம்.
(2) வீட்டிற்குப் போய் தொ(ல்)லைபேசியில் அலட்டலாம்.

மற்றவர்களும் கோயிலில் இருக்கிறார்களே, பூசை நடக்கிறதே மௌனமாக இருந்து கும்பிடுவோம் என்று ஏன் இவர்கள் நினைப்பதில்லை? எத்தனையோ முறை நான் திரும்பிப் பார்த்து "பூசை நடக்கிறது" என்று சொல்லியிருக்கிறேன். ஏதோ வேற்றுக்கிரகத்திலிருந்து வந்த ஒரு புதினமான உயிரினத்தைப் பார்ப்பது போல ஒரு பார்வை வீசுவார்கள்..பிறகு பூசை முடியும் வரை அல்லது சில வேளைகளில் கோயிலை விட்டுப் போகும் வரையும் கூட நான் ஏதோ செய்யக் கூடாததைச் செய்து விட்ட மாதிரி முறைத்துக் கொண்டேயிருப்பார்கள்!! சொல்லியும், ஒரு நிமிஷம் கடமைக்கு பேசாதிருந்து விட்டு மீண்டும் "கச்சேரியை" ஆரம்பிக்கிறவர்களும் உண்டு.

எப்படி, என்னத்தைச் சொன்னால் நம்மவர் இந்த மாதிரி நடந்து கொள்வது குறையும்? யாருக்காவது தெரியுமா?

சூ! மந்திரக்காளி

வேலையில் இருந்தபடியே "இரவுச் சாப்பாடு என்ன" என்று இந்த மனம் முன்னோக்கி (அடடா..!!) சிந்திக்க (சமையல் என்றாலே 'ஒவ்வாமை' <--அதான் allergy!!; அதுக்குள்ளே planning வேறே!) காளான் குழம்பு, முருங்கைகாய் வெள்ளை/பால் கறி, முட்டைப் பொரியல் செய்யலாம் என்று (கஷ்டப்பட்டு) நினைத்து வைத்திருந்தேன். வேலையிலிருந்து pick பண்ணும் போதே அன்புக் கணவர் திருவாய் மலர்ந்தார் "எனக்கு இன்றைக்கு 'ஜனனி'யில மீன் மசாலா தோசை தான் வேணும்"

மனதிற்குள் "அப்பாடா! இன்றைக்கு சமைக்கிறதிலிருந்து தப்பினோம்"
(என்றாலும் காட்டிக் கொள்ளாமல்) வெளியே சத்தமாக : "நான் இன்றைக்கு இதெல்லாம் சமைக்க என்று நினைச்சனான்"...list வாசித்தேன்
கணவர் திடீரென்று வெளியில் தலை நீட்டிப் பார்த்து "மழைக்கு இருட்டுதம்மா" ( நான் "நற நற")

வேலையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு 20 நிமிட drive இல் தான் (என் வயிற்றில் பால் வார்த்த)ஜனனி உணவகம் இருக்கிறது. driving....

அங்கே போனால்...பூட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லும் பலகை தொங்குகிறது. ஜனனி உட்பட பல இலங்கை உணவகங்கள் திங்கட் கிழமைகளில் திறப்பதில்லை. மனக்குரல் "ஐய்யய்யோ...சமைக்கணுமோ??"

கணவர் முகம் =O( . "சரி, உன் நண்பி சொன்னாளே, அந்த 'ராம்ஸ்' கடைக்குப் போவம்"
(வயிற்றில் மீண்டும் பால்+தேன் ;O) )

ராம்ஸை தேடியதுதான் மிச்சம்...கண்டே பிடிக்க முடியவில்லை (அட ராமா!!). பிறகென்ன..."மந்திரக்கோல் ஒன்று என்னிடம் இருந்தால் அதை ஒரு "விசுக்கு" விசுக்கி விதம் விதமா சாப்பாடு வரச் செய்யலாம் என்ன!" என்று நிறைவேறாத ஆசையெல்லாம் வெளிப்பட 3 மாடி (மூச்சு வாங்க) ஏறி, கதவு திறந்து, வீட்டிற்கு வந்து அவர் அரிசி போட... நான் கறி சமைக்க...(என்ன சிரிப்பு?)

நல்லா சாப்பிட்டு வந்து கணினிக்கு முன்னாலிருந்து இதை தட்டச்சுகிறேன்.
மனம்:" நாளைக்கு சமைக்கணுமே...என்ன கறி வைக்கலாம்?"
நாளைய பிரச்சனை நாளைக்கு! என்று யாராவது இந்த "மனத்துக்கு" சொல்லுங்களேன்!

மீண்டும் ஒரு முறை சந்திப்போமா...

நான் 4 பள்ளிக்கூடங்களில் படித்திருக்கிறேன். பள்ளிக்கூடத்தில் என்னோடு ஒன்றாகப் படித்த சில தோழிகளை தேடிப் பிடிக்க வேண்டும்; அவர்கள் இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்களோ , மீண்டும் ஒரு முறை அவர்களச் சந்திக்கக் கிடைத்தால் எவ்வளவு நல்லாக இருக்கும் என்றெல்லாம் மனம் கற்பனை வளர்க்கிறது. இனி, காணாமல் போனவர் விபரம் =O)

தோழி 1:

தேடுகின்ற முதல் தோழிக்கு பிரசாந்தி என்று பெயர்.(அவர்கள் சாய் பாபா பக்தர்கள்).என்னோடு முதல் பள்ளிகூடத்தில் முதலாம் ஆண்டு முதல் 4ம் ஆண்டு வரையும், பிறகு 2ம் பள்ளிக்கூடத்தில் 7ம் ஆண்டு வரையும் படித்தவள். 1990ம் ஆண்டு, பிரச்சனையால் நாங்கள் கொழும்புக்கு குடிபெயர்ந்தோம். ஊருக்குத் திரும்பவும் 1994ம் ஆண்டு ரயிலில் போய் விட்டு வரும் போது நடுவில் ஒரே இரயில் நிலையத்தில் கொழும்பு-->மட்டக்களப்பு & மட்டக்களப்பு-->கொழும்பு இரண்டு புகைவண்டியும் நிறுத்த நேர்ந்தது. தண்ணீர் / உடல் உபாதை என்று பலரும் இறங்கி ஏறிக் கொண்டிருந்த போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம். (காதல் கதையில் எழுதுற மாதிரி இருக்கு lol) அவசர நலவிசாரிப்புகளின் பரிமாற்றம். அவளைக் கடைசியாகக் கண்டது நான் மீண்டுமொருமுறை ஊருக்குப் போன போது(ஆண்டு சரியாக ஞாபகமில்லை). ஆனாலும் நான் அறிமுகப்படுத்தாமலே சரியாக அடையாளம் தெரிந்து கொண்டாள். 1999 இல் கேள்விப்பட்டேன் அவள் லண்டனில் தன் சகோதரி(கள்)உடன் வசிப்பதாக. விபரம் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்?

தோழி 2:

இவள் பெயர் யசோதா ('யசோதரா'வாக கூட இருக்கலாம்). இவள் தொடர்பற்றுப் போனது 1990ம் ஆண்டுடன். ஒழுங்காக, சினேகமாய்த் தான் பழகினோம். எங்கள் வகுப்பில் 4/5 பிள்ளைகள்...ஒருவருடன் ஒருவர் கோபம். இவள் இந்தப் பக்கம் வந்தால், அவள் வகுப்பின் மற்றப் பக்கத்தால் செல்வாள்.(இதற்கும், தோழிக்கும் என்ன சம்பந்தம் என்று எரிச்சல் படாமல்...வாசியுங்கள்) அப்போது 11/12 வயது இருக்கும். ஒருவருடன் கோபம் போடுவது fashion என்று நினைத்தேனோ என்னவோ..இதுவரை காரணம் ஞாபகமில்லை...யசோதாவுடன் கண்ணைக் கட்டி கோபம். (நல்ல காலம் பாம்பு வந்து கொத்தவில்லை!! =O)) . பிரச்சனையும் வந்து கொழும்பிற்கும் வந்தாயிற்று. திரும்ப ஊருக்குப் போன சமயத்தில் இன்னொரு நண்பியிடம் கேட்டேன்..."யசோ எப்பிடி?". ஏன்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது.......1990ம் ஆண்டுப் பிரச்சனையில் அம்மாவையும் அப்பாவையும் அந்தப் பெண் இழந்து விட்டாளாம், அவளும் தங்கையும் மாமாவுடன் தான் இப்போது வசிக்கிறார்கள் என்றும் அறிந்தேன். இந்தத் தோழியை எப்படியாவது சந்தித்து விட வேண்டும்...

ஏன்??

ஒரு ஊரிலே ஒரு மாடு இருந்ததாம். ஒரு நாள் அது ஊரைச் சுற்றி வரும் போது ஒரு கடையின் கதவின் முன் நின்று கதவை நக்கிற்றாம், ஏன்??

நன்றி: லவன், 1999

மாமியும் மருமகளும்

வந்தியத் தேவன் 55 சொற்களில் எழுதியதை வாசித்த போது மாமி அம்மாவுக்குச் சொன்னது ஞாபகம் வந்தது.மாமி கனடாவால் 8/10 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருந்த சமயம் அது. கனடா வர்ணனை முடிந்து என் மச்சா(ள்+ன்), கனடாவிலே இருக்கும் மாமியின் சகோதரியின் பிள்ளைகளைப் பற்றிக் கதை வந்தது. மச்சானின் திருமணம் நடந்து ஒரு வருடமும், மச்சானுடைய சித்தி மகளுக்கு திருமணம் முடிந்து 8 - 9 மாதங்களும் ஆகியிருந்தது. மருமக்களை பற்றிக் கேட்டதற்கு மாமி சொன்னா:

"என்னத்த சொல்றது?தங்கச்சிட மருமகன் தங்கமான பெடியன். சுதாவை ஒரு வேலையும் தனியா செய்ய விடுறதில்லை.எல்லா வேலைக்கும் உதவி செய்வார். காலையில தேத்தண்ணி போட்டு குடுக்கிறதும் அவர்தான். அதுக்கு இருக்குது எனக்கு வந்த மருமகள்...ஒரு வேலையும் செய்யாது. அவவுக்கு காலை coffee பிரசாத் போட்டு குடுத்து எழுப்புவான். சமையலும் அரைவாசி அவன் தான்."

சுதாவுக்கு கணவர் செய்வதை சிலாகிக்கும் மாமியால், அதையே தான், தன் மகன் மருமகளுக்குச் செய்கிறான் என்று உணர முடியவில்லை. பாசம் கண்ணை மறைப்பது என்பது இதுதானா?

(இத்தனைக்கும் மாமி ஒரு ஆசிரியை!)

மழை வருது..மழை வருது...குடை கொண்டு வா!!

அன்று மாமா,மாமி ஊரிலிருந்து வருவதாக இருந்தது. ஆனால் இரவு 8.30 ஆகியும் வரவில்லை. நாங்கள் நாடகம் பார்க்க தொ.கா.வின் முன்னால் இருந்து விட்டோம்.வழமையாக தொடர்ந்து பார்க்கின்ற நாடகம்...அம்மா அதிலேயே ஒன்றிப் போயிருந்தா. ஒரு கதா பாத்திரம் எங்கோ சென்று திரும்பும்பொழுது பலத்த மழை பெய்கிறது. ஒரு கொட்டிலில் அவசரத்திற்கு ஒதுங்குகிறார்.
அப்போது பார்த்து gate இல் தட்டிச் சத்தம் கேட்டது. அப்போது நாங்கள் இருந்த வீட்டில் வாசல்கதவோடு தான் TV யை வைத்திருந்தோம்.TVக்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன மேசை. அதில் தான் அம்மாவின் Handbag குடை எல்லாம் வைப்பது வழக்கம். gate இல் தட்டிச் சத்தம் கேட்டது தான் தாமதம் அம்மா TV யிலிருந்து பார்வையை விலக்காமலே வாசலுக்குப் போனார்.திடீரென்று எதோ ஞாபகம் வந்தவர் போல ஓடி வந்து TV பக்கத்திலிருந்த மேசையில் வைத்திருந்த தன் குடையை எடுத்து விரித்துக் கொண்டு gate ஐ திறக்கப் போனார். உள்ளே வந்த மாமா மாமிக்கோ ஏன் அம்மா மழை பெய்யாத போது "நனைந்து விடுவீர்கள்" எனக் குடை விரித்துப் பிடிக்கிறார் என விளங்கவில்லை...அம்மாவிடம் கேட்டார்கள், அப்போது தான் அம்மாவுக்கு உறைத்தது..தான் TVயில் மழை பார்த்து விட்டு உண்மையாகவே பெய்கிறது என நினத்துக் குடை பிடித்திருக்கிறா என்று. பிறகு அங்கே பெய்தது சிரிப்பு மழைதான்!

சரவணபவனில் மகாராஜா

ஒரு நாள் சதீசும் மற்றைய 4/5 நண்பர்களும் நல்லாக பியர்+வேறு உற்சாக பானங்கள் அருந்தி விட்டு, கொழும்பு-வெள்ளவத்தையில் இருக்கும் சரவணபவன் சைவ உணவகத்திற்கு போனார்களாம். அங்கே உணவு பரிமாறுபவர்கள்(waiters) தமிழ்ப் படங்களில் வரும் அரச சேவகர் போல் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். நண்பர் கூட்டத்திற்கு நல்ல பசி+வெறி. waiter வருவார் என்று பொறுமையாய் காத்திருக்க, கூட்டத்தில் ஒருவன் கையைத் தட்டி "யாரங்கே" என்று சொல்லவும், waiter வரவும் சரியாய் இருந்திருக்கிறது.

"அரசன் நான் வந்து எவ்வளவு நேரம் காத்திருப்பது, உடனே 10 தோப்புக்கரணம் போடு!" என்று சொல்லியிருக்கிறான். waiter ம் இவர்களை humour பண்ண நினைத்து "சரி மகாராஜா" என்று ஒரு தோப்புக்கரணம் மட்டும்போட்டிருக்கிறார். பிறகு "என்ன உணவு வேண்டும்" எனக் கேட்டு எல்லோரது ஓடரையும் எடுத்துக்கொண்டிருக்க, மீதி தோப்புக்கரணம் போடவில்லையென்று மகாராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. ரகளை பெரிதாக முன்பு இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முகாமையாளர் ஒடி வந்து waiterஐ காப்பாற்றி விட்டராம். "எனக்கே சாப்பாடு தராமல் துரத்தி விட்டார்களே"என்று திரும்பி வருகையில் மகாராஜா ஒரே புலம்பலாம்!

இப்போது இந்தக் கூட்டத்திலுள்ள ஒருவருக்கும் அங்கே அனுமதி இல்லை என்று கேள்வி =O).

ஹலோ... யார் கதைக்கிறது?

இது நடந்து இப்ப ஒரு 10 / 11 வருசம் இருக்கும். ஒரு நாள் என் நண்பி வீட்டில் (வழக்கம் போல் முழு நாளும்) இருந்து "சல்"லடித்துக் கொண்டு இருந்தோம். திடீரென தொலைபேசி சிணுங்க தோழியின் தம்பி எடுத்தான். நண்பிக்கு அழைப்பு. நாங்கள் இருந்த அறைக்குள் வந்தான்,

தம்பி: ஷ்ரேயா அக்கா ....நீங்க போன்ல
நண்பி: என்ன?

(நண்பியும் நானும்...!?!?!?) (ஏனென்றால் அவளது நண்பியர் கூட்டத்தில் ஷ்ரேயா என்ற பெயரில் 2 பேர் தான். என் பெயர் + அப்பா பெயர் = "ஷ்ரேயா மழைப்பெண்" என்று வைத்துக் கொள்வோம்)

நண்பி "இவன் என்ன உளறுறான்" என்ற படியே போய் தொலைபேசியை எடுத்து,

நண்பி: ஹலோ யார் கதைக்கிறது?

தொ.பே.குரல் என்ன சொல்லிற்றோ.. நண்பி ரிசீவரை பொத்திக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். சிரித்த சிரிப்பில் அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது.என்னிடம் தொலை பேசியை நீட்டினாள்.

நான்: ஹலோ

தொ.பே குரல்: ஹலோ...

நான்: யாரோட கதைக்க வேணும்?

தொ.பே குரல்: கௌரியோட

நான்: நீங்க யார் கதைக்கிறது?

தொ.பே குரல்: ஷ்ரேயா கதைக்கிறன்

நான்: ஷ்ரேயாவா? எந்த ஷ்ரேயா?

தொ.பே குரல்: ஷ்ரேயா மழைப்பெண்

நான்: நான் ஷ்ரேயா மழைப்பெண் கதைக்கிறன்...

தொ.பே.யை வைத்து விட்டார்கள். அன்றைக்குச் சிரித்த சிரிப்பிற்கு அளவு கணக்கில்லை. பிறகு தான் தெரிய வந்தது - என் நண்பியோடு சினேகமாக விரும்பிய (காதலிக்க அல்ல!) பையன் தான் தனது அக்காவிடம் சொல்லி அப்படி தொலைபேசியிருக்கிறான் என்று!! இப்போது அவன் எங்கள் நல்ல நண்பன்.

இப்போதும் இதைச் சொல்லி அவனைக் கடிப்போம், எனக்கு ஒரு ஆசை..இதை அவன் மனைவியிடம் சொல்லிச் சிரிக்க!!

ப்ரில்லியன்ட் டியூப் லைட்?

தோழி வீட்டிற்குப் போயிருந்தேன். கெட்டிக்காரர்களைப் பற்றி கதை வந்தது. சில வேளைகளில் அவர்களுக்கு மிக இலகுவான விஷயத்தையும் விளங்கிக் கொள்ள சிரமமாக இருக்கிறது என்பதைப் பற்றி தோழியின் தங்கை சொன்னாள். அவளது வகுப்பில் ஒருத்தி இருக்கிறாளாம்...பேச்சுக்கு அவள் பெயர் கவிதா என்று வைத்துக் கொள்வோம்.

உதாரணம் 1:
மாணவி 1: என் அம்மாக்கு ஸ்பீடிங் டிக்கெட் வந்திருக்கு
கவிதா: ஏன்?என்ன செய்தாங்க?


உதாரணம் 2:
மாணவி 1: நான் தலை மயிரை ப்ளீச் பண்ணப் போகிறேன்
கவிதா:என்ன கலர்க்கு?

நம்மிடையே நிறைய கவிதாக்கள்.

நானும் இந்த டியூப் லைட் கேள்வியெல்லாம் கேட்டு சிரிப்புக்கு ஆளாகியிருக்கிறேன்.(நான் brilliant என்று சொல்லவில்லை!) என் அனுபவம் ஒன்று:

தோழி: இந்த புதன்கிழமை என் பேரன்ட்ஸ் வெடிங் அனிவசரி.
நான்: அம்மாவுக்கும் அப்பாவுக்குமா?
(சுற்றியிருந்த நண்பர் கூட்டம் "கொல்" சிரிப்பு!)(நானும் ஒப்புக்கு சிரித்து வைத்தேன்! வேறென்ன செய்ய?)

பெட்டகம்