குடும்பம் என்பது முதலில் துணையுடன் தான் ஆரம்பிக்கிறது. பிறகு குழந்தைகள் என்று வந்து விட்ட பிறகு குழந்தைகளும் அவர்களது தேவைகளுமே பிரதானமாகி முன்னிலைப்படுத்தப் படுவது இயல்பே. குழந்தைகள் + அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது முக்கியமானதுதான். ஆனாலும் துணையும் முக்கியமல்லவா? தம்பதியரிடையே பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் உருவாவதற்கு வீட்டு வேலைகளை பங்கிடுவதிலிருந்து பிள்ளை வளர்ப்பு வரை காரணிகள் நிறையவே உண்டு. வாழ்க்கையானது வேலை, குழந்தைகள், தேவைகளை(வீடு வாங்க/கட்ட, சாதனங்கள் வாங்க) நிறைவேற்றுதல் என்பவற்றில் கழிகிறது. இந்தப் பயணத்திலே கூடவே வரும் துணைக்கென மட்டும் தனியே எவ்வளவு நேரத்தை ஒதுக்க முடிகிறது? கல்யாணம் கட்டி xx வருஷமாச்சு /பிள்ளை பெத்தாச்சு, இதுக்கு மேலே என்ன தனிமை என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். இருவரின் தனிமை உடற் சுகத்துக்காகத்தான் என்றில்லை. அதற்கும், அதையும் மீறியதாக மன சுகத்திற்கும், கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்தலை வளர்ப்பதற்குமான ஒரு நேரமே அது.
வீட்டுக்குள்ளே தான் என்பதில்லை. கடற்கரையில், பூங்காவில் ஓர் நடை, ஒரு திரைப்படம், உணவகத்தில், அல்லது இருவருக்கும் பிடித்தமான ஒரு பொழுது போக்கு..படகோட்டலாம், கண்காட்சிகளுக்குப் போகலாம். ஒரு 2 மணித்தியாலத்திற்கு அல்லது ஒரு காலை/மாலை வேளைக்கு நண்பர்களிடம் / உறவினர்களிடம் babysittingக்கு கேட்கலாம். (அவர்களதுதிருமண ஆண்டு நிறைவு நாளன்று அவர்களது குழந்தைகளை பார்த்துக் கொள்ள offer பண்ணுங்கள்.. நீங்கள் babysitting க்கு கேட்ட மாத்திரத்திலேயே சரியென்பார்கள்!!)
கணவன் - மனைவி உறவு விசேஷமானது. எல்லா விஷயங்களைப் போலவும் இந்த உறவை வளர்க்கவும் வளப்படுத்தவும் முயற்சி தேவை. அதற்கு செய்யக் கூடிய சில சின்ன விஷயங்கள்:
- மற்றவர் முன்னிலையில் துணையை சிறுமைப்படுத்தாதீர்கள் மாறாக.. பாராட்டுங்கள் (என் கணவர் எனக்குப் பிடிக்குமென்று --- கற்றுக் கொள்கிறார் / --- செய்தார் ; என் மனைவி ஓவியம் வரைவதில் கில்லாடி etc)
- இப்படித்தான் இருக்க வேண்டும் / செய்ய வேண்டும் என்று ஒன்றிலும் கட்டாயப்படுத்தாதீர்கள். இருவருமே தனி மனிதர்கள். சேர்ந்து செய்ய என்ன வழி என்று பாருங்கள்
- சின்னதாய் ஆச்சரியப்படுத்துங்கள் - வெகு நாளாய் நச்சரிக்கப்படும் விஷயத்தை செய்து முடியுங்கள். மனைவி ஒரு shelf போட்டுத்தரச் சொல்லிக் கொண்டே இருக்கிறாரா...அவர் சந்தைக்கு போய் வர முன்னம் செய்து வையுங்கள்)
- குழந்தைகளுக்குப் போலவே துணைக்கும் செல்லங் கொடுங்கள்.
- பிடித்த விஷயங்கள், கனவுகள், பயங்கள், மற்றும் என்னென்னவோ அதையெல்லாம் பற்றி கதையுங்கள். (துணை கதைக்க வரும் போது நீங்கள் பிஸியாக இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்: "கொஞ்சம் வேலையாக இருகிறேன். இதை முடித்ததும் முதல் வேலை நீ என்ன சொல்கிறாய் என்பதை கேட்பது தான்". சொன்னது போல தேடிப் போய் என்ன விஷயம் என்று கேட்க மறக்கக் கூடாது!!)
- துணையின் கருத்து கேட்கவோ, உற்சாகப்படுத்தவோ, நன்றி சொல்லவோ, மன்னிப்புக் கேட்கவோ தயக்கம் வேண்டாம்.
இதெல்லாம் நானாக சொல்லவில்லை. பெரியவர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். மேலே குறிப்பிட்டது மட்டுமன்றி இன்னும் பல முக்கியமான சின்ன விஷயங்கள் இருக்கின்றன.. நீங்களும் சொல்லுங்களேன்.சின்னச் சின்ன விஷயங்கள் தான்...ஆனாலும் நிறையவே தாக்கத்தை உண்டு பண்ணும். பிறகென்ன , துணை பாத்ரூமில் + எப்போதும் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" என்று பாடிக் கொண்டிருப்பார்!! (வீட்ல இனி காதல் சாம்ராஜ்யம் தான்!!)
பி.கு:- என் உபயமாக:
- கருத்து வேறுபாடா?தலையே போனாலும் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டை பிடிக்காதீர்கள்!!
- காதல் கடிதம் அல்லது ஒரு மடல் அனுப்புங்கள்
- துணைக்கு கண்ணடித்துப் பாருங்கள்!! இதைப் போல ரொமான்டிக் ஆன விஷயம் வேற ஒன்றுமே இல்ல. (அடடா!!)