போகுமிடம் ஒளி வீச...

கொஞ்ச நாளா தொ(ல்)லைக் காட்சியில் ஒரு விளம்பரம் போடுறாங்க. ஒராள் இரவில கட்டிலால எழும்பி, பிய்ச்சுப் போட்ட கடதாசி துண்டுகளை சாளரத்துக்குள்ளால வெளியில எறியிறார். அதை எறிஞ்ச சாளரம் வழியாவே தானும் குதிச்சு (எலும்புகள் ஒன்றுமே உடையாம!!) ஓடுகிறார். காட்டுக்குள்ளாலயெல்லாம் ஓடுறார்..கரடியொண்டு துரத்துது, அவர்ட கால் படுற இடமெல்லாம் வெளிச்சம் வருது. (நல்ல காலம்..ஊரில இந்தாள் இல்ல..இல்லாட்டி, சாமீ! என்டு பகல்ல சனமும் ..களவெடுக்க வசதியா இருக்கும் என்று இரவில கூட்டிப் போக கள்ளனும் க்யூவில நிப்பாங்க!!) சரி..இப்பிடியே விளம்பரம் தொடர்ந்து போகுது.

இவ்வளவு நாளும் சப்பாத்து உற்பத்தியாளர்கள், "எங்க சப்பாத்தில சொகுசு அதிகம்", "காற்றோட்டம் உள்ளது" என்று தானே யோசிச்சு உருவாக்கிட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறாங்க. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில மனிசனைக் கடிச்ச கதை மாதிரி தான் இப்ப ஆகிப் போச்சு(அது என்ன கதை??யாராவது சொல்லுங்க!) ஏன் அப்பிடிச் சொல்றேன் என்றால், இப்பவெல்லாம் கடிகாரத்தில இருந்து ஏவுகணை வரைக்கும் எல்லாத்திலயும் micro processors இருக்குது தானே.( புதுசா ஏதாவது சொல்லு என்கிறீர்களா..சொல்றன், சொல்றன்)

அதே micro processorsல ஒன்றைத் தூக்கி சப்பாத்துக்குள்ள வைச்சிருக்கிறாங்க, அடிடாஸ். அந்த processor, நீங்க கால் பதிக்கிற விதம், பாதத்தில் எந்த இடத்தில் கூடுதலாக cushioning வேணும் & இன்னும் கொஞ்சம் வேற விஷயங்களையும் எல்லாம் கணக்குப் போட்டு நீங்க நிலத்தில கால் வைக்கும் விதத்துக்கு ஏத்த மாதிரி வளைஞ்சு குடுக்குதாம். விலைதான் மயக்கம் போட்டு விழ வைக்கிற அளவில இருக்கும் என்று நினைக்கிறன்..ஒரு வேளை பர்ஸின் கனமறிந்து அதுக்கும் வளைஞ்சு குடுக்குமோ??. :o)

சிட்னிக்கு இப்பத்தான் வருகுது இந்தச் சப்பாத்து..ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடாவில முதலே வந்திருக்குமென்டு நினைக்கிறன்.

இந்தப்பதிவை தட்டச்ச ஒரு ஞாபகம் வருது.. எனக்கு அப்ப ஒரு 10- 12 வயசிருக்கும்.அப்ப புதுசா ஒரு சப்பாத்து வந்தது. நடக்கும் போது சப்பாத்தின் அடியில் உள்ள லைட் எரியும். அதை வாங்கித் தரச் சொல்லி அம்மாக்கு ஒரே நச்சரிப்பு. எவ்வளவு அரியண்டப் படுத்தியும் அது கிடைக்கல்ல!! (ஹ்ம்ம் <-- ஏக்கப் பெருமூச்சு!..வேற ஒன்றுமில்ல!!) :o(

போர்களும் போர்வீரர்களும்

துளசியின் ANZAC நாள் பற்றிய பதிவை வாசித்த பின் உடனே எழுத வேணுமென நினைத்திருந்தேன்..இப்பத்தான் எழுதுகிறேன்.

சமூகக் கல்வி, இலங்கையில் படித்தவர்களுக்கு அறுவையான பாடம். இத்துடன் பல பேரால் தரித்திரம் என ஏசப்படும் சரித்திரமும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஏசி ஏசித்தான் அதை படிப்பதே!

நான் இப்போ சொல்ல வருவது நான் எப்படியெல்லாம் ஏசினேன் என்பதை அல்ல. சமூகல்வியிலா அல்லது வரலாற்றிலா என்று ஞாபகமில்லை..உலக வரலாறு பற்றிய ஒரு பகுதி இருந்தது. அதில், நடந்த உலகப் போர்களைப் பற்றியும் ஐ.நா சபை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இருக்கும். என் ஞாபகத்திற்கு எட்டியவரை (எட்டாட்டி கொக்குத்தடிதான்! :o) ) அதிலே போர்களேற்பட என்ன காரணி தூண்டுதலாக இருந்தது என்றும் என்னென்ன நாடுகள் எந்தப் பக்கம்(போரில்!!) கட்சி சேர்ந்தன என்பதைப் பற்றியும் தான் இருக்கும். ஜப்பானுக்குக் குண்டு போட்டதும் படித்தோம். ஆனால் இவை அனைத்துமே மேலோட்டமாக ஏதோ ஒரு சம்பந்தமில்லாத ஒன்றைச் சொல்வது போலவே கையாளப்பட்டிருந்தன. எனக்குத் தெரிந்து, ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்பதைத் தவிர, அவன் அரங்கேற்றிய இனப்படுகொலை பாடத்திட்டத்தில் இருக்கவில்லை (அல்லது, படித்து, நான் தான் மறந்து போய் விட்டேனோ தெரியாது! தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).

{ஆஷ்விட்ஸிற்கு இரயில் மூலம் அனுப்பபட்ட கணக்கற்ற யூதர்களைப் பற்றியும் அவர்களின் கொடுமையான இறுதிநாட்களைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். இந்த ரயில் பயணங்களில் ஒன்றிலிருந்து பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிச் சொல்லும் The Twentieth Train" (எழுதியவர்: Marion Schreiber, இது Silent Rebels:The true story of the raid on the twentieth train to Auschwitz என்ற பெயரில் முன்னர் வெளியிடப்பட்டது) புத்தகத்தைத் தான் இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்து முடிந்தவுடன் அதைப்பற்றிய ஒரு தனிப்பதிவை இடுகிறேன்.}

இலங்கையில் இருந்தவரை உலகப்போர்களைப் பற்றிய எனது அறிவு மிக மிக மிகக்குறைவு. இங்கே சிட்னிக்கு வந்த பின்னரே நான் பல டொக்யுமென்ட்ரிகளைப் பார்த்தும், புத்தகங்கள் & அச்சிதழ்களை வாசித்தும் இப்போர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவிலிருந்து எண்ணிலடங்காதோர் போருக்குச் சென்றமையால் இந்நாடு போர்களின் ஞாபகார்த்தத்திற்கு பெரும் மதிப்பளிக்கிறது.

என் சந்தேகம் இது தான்...உலகப்போர்கள் இரண்டும் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையும் (அவுஸ்திரேலியா போன்றே) பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்தது. இலங்கையிலிருந்து இப்போர்களுக்குச் சென்ற (போயிருக்கிறார்களெனக் கேள்விப்பட்டிருக்கிறேன்) வீரர்கள் நினைவு கூரப்படுவதுண்டா?இல்லையெனின் ஏன்? இந்தியாவில் எப்படி?

தொடர்வண்டி அனுபவங்கள்

வேலைக்கு நான் தொடர்வண்டியில் (புகை இல்லாத புகையிரதம்) தன் செல்வது. பயணம் 75 % சுவாரசியமானதாகவே அமையும்( சக பயணிகள் பலரைப் போலவே மற்ற 25% நேரமும் ஷ்ரேயா நித்திரை கொள்வா / புத்தகத்தில் தொலைந்து போவா!). சந்திக்கும் மனிதர்களும் நமது உலகம் எவ்வளவு பன்முகமுடையது என்பதை உணர்த்திச் செல்வர். காலை வணக்கம் அல்லது சும்மா ஒரு "ஹாய்" புன்சிரிப்போடே சொல்பவர்களூம், நாம் முந்திக் கொண்டோமென்றால் கடமைக்குச் சொல்பவர்களுமாகப் பயணம் தொடங்கும். அனேகமாக எல்லாரும் புத்தகம் வாசிப்பார்கள். கொஞ்ச நாளைக்கு முன்பு பார்த்திருந்தீர்களானால் கிட்டத் தட்ட 60 - 65 % பயணிகள் டான் ப்ரௌனின் டா வின்சி கோட் வாசித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

எனக்கு நண்பர்கள் சிலர் தொடர்வண்டி நிலையத்திலே அறிமுகமானவர்கள். கணவனை இழந்து, மகளுடன் இங்கே குடியேறி சகோதரியுடன் வதியும் ஒரு அன்ரி, என் வயதொத்த இரு பெண்கள், இவர்கள் எல்லாரிலும் பார்க்க, சுவாரசியமாகக் கதை சொல்லும் ஒரு இந்தியப் பெண். இது வரை எத்தனையோ நாட்கள் அவவுடன் பயணித்திருக்கிறேன். அவளது மகனதும் கணவனதும் பெயர் தெரிந்தாலும்,இற்றை வரை அவவின் பெயர் தெரியாது! அடுத்த முறை கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாலும், கதை ருசியில் மறந்து விடுவேன். :o) தனக்கு கல்யாணம் நடந்த கதை சொன்னாள். எங்கள் பயண நேரம் 40 நிமிடம்..அவ்வளவு நேரமெடுத்து, புதுப்பெண் போல வெட்கி, முகம் சிவந்து, எப்படி கல்யாணப்பேச்சு வந்தது என்பதில் ஆரம்பித்து கல்யாணம் நடந்தது வரை...அப்படிக் கதை சொல்லக் கூடிய ஒருவரை நான் அதுவரையில் சந்தித்திருக்கவில்லை. அவ சொன்ன விதம்,முடிவு தெரிந்திருந்தாலும், அடுத்து என்ன நடந்ததோ என்று நினைக்க வைத்தது! கன நாட்களாகக் காணவில்லை.அடுத்த வண்டியைப் பிடிக்கிறாவோ என்னவோ!

காலை வண்டியில் ஏறும் போது இன்னொரு பெண்ணும் கூடவே ஏறுவா. அவவின் தோழியைக் கண்டாவோ...என் கோழித் தூக்கம் போச்சு! கதையை விட, சிரிப்பே அதிகம். ஒரு நாள் அப்படி என்னதான் கதைக்கிறார்கள் என்று கவனித்தேன். ஒரு பையனை விரும்புகிறா என்று விளங்கிற்று. அது ஒரு வியாழனோ..வெள்ளிக்கிழமை. வந்தது திங்கள்..அவவும் வந்தா. தோழியக் கண்டது தான் தாமதம்...ஓடிப் போய் அருகில் உட்கார்ந்து வார இறுதியில் அவனைக் கண்ட, கதைத்த கதை சொன்னாள். அவன் தனது தொ.பே.இலக்கத்தை எடுத்ததாக சொன்னா. இப்படியே அவவின் கதைகள் ஒரு நாடகம் போல நீண்டு செல்லும். வழமையாய் அந்தப் பெட்டியிலேயே ஏறும் சில பேருக்கு முழுக்கதையும் தெரியும். அந்தக் கிழமைஇறுதியும் முடிந்து அடுத்த திங்கள், தோழியிடம் (+ அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரின் காதிலும்!!).."We went out..YAY!" எல்லார் முகத்திலும் அடக்க மாட்டாத ஒரு புன்சிரிப்பு. (நாங்கள் கை தட்டியிருந்திருக்க வேண்டும் என இப்ப நினைக்கிறேன்)

இப்படிச் சந்தோசமனவைகளுடன் நடக்கிற பயணங்களில் சில மனவருத்தங்களும் ஏற்படுவதுண்டு. வேலை முடிந்து திரும்புகின்ற ஒரு களைத்த பொழுதில், இருக்க இடம் கிடைக்கவில்லை. நான் மூவர் இருக்கக் கூடிய இருக்கைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். அதிலே சாளர ஓரமாக ஒரு வெள்ளையினப் பெண்மணி, நடுவில் ஒரு சீனரோ ஜப்பானியரோ கொரியரோ (இப்போதைக்குச் சீனர் என்று வைத்துக் கொள்வோம்) அவருக்குப் பக்கத்தில் இக்கரையில் ஒரு மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த பெண்..அவவோ நல்ல நித்திரை. வெள்ளைப் பெண் புத்தகம் வாசித்துக் கொண்டு, ஒரு can "Jim Beam" beer குடித்துக் கொண்டிருந்தா. சீனர் அசைந்ததில் அவரது கால் அவவின் காலில் பட்டு விட்டது. "மன்னியுங்கள்' என்று அவர் சொன்னாலும் அவவோ "என்னைத் தொடாதீர்கள்/என்னில் பட வேண்டாம்." என்று கடுமையாகச் சொன்னதுமல்லாமல் தூசைச் தட்டுவது போல அவரது கால் பட்ட இடமும் தட்டி, ஏதோ அருவருப்பான ஒன்றை மிதித்து விட்டது போல முகஞ்சுளித்து, அருவருத்தா. சீனர் முகங் கறுத்து என்னைத் திரும்பிப் பார்த்தார். இப்படி நடப்பதுதான் என்று நான் கேள்விப்பட்டிருந்தாலும், கண்முன்னே நடந்ததில் நான் திகைத்துப் போயிருந்தது அப்பட்டமாக என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து புன்னகைத்தார். அது பதிலடி கொடுக்க முடியாத இயலாமையின் வெளிப்பாடு என்பது இருவருக்கும் தெளிவாகவே தெரிந்தது.

பயணங்கள் தொடர்கின்றன..கூடவே அனுபவங்களும்.

என் அம்மாவைத் தெரியாது!

முந்தநாளுக்கு முதல்நாள்(நாலாம் நாள்) எங்கள் வீட்டு பதிலிறுக்கும் கருவியில் "அம்மா மட்டக்களப்பால் வந்து விட்டா. உங்களுடன் கதைக்க வேணுமாம்.அவவுக்கு எடுங்கோ" என்று அண்ணா சொல்லியிருந்தார், அம்மா தனது பிரம்மகுமாரிகள் ராஜயோகத்தினரில் மருத்துவத்துறையில் உள்ளோருடன் கிழக்கிற்குப் போவது இந்த வருடத்திற்கு இது நாலோ ஐந்தாவது முறை. கடற்கோளால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மருத்துவ முகாம்களிற்கு மருந்து விநியோகிப்பதும் மருத்துவம் பார்ப்பதும் இவர்களது பணி.

போன கிழமையும் இப்படித்தான் புறப்பட்டுப் போக முன் கதைத்தேன். வந்து விட்டா தானே, புதினங்கள் சொல்லப் போகிறாவென்று எடுத்தால், "நான் சுகமா இருக்கிறன், பயப்பிட ஒண்டுமில்லை" என்று தொடங்கினா. என்னவென்று கேட்டால், திரும்பி வரும்போது பெய்த மழையால் ஈரமாகியிருந்த பாதையில் சாரதி தன் கை(கால்?) வரிசையைக் காட்ட வாகனம் பாதையிலிருந்து விலகி புரண்டு விட்டதாம். நெஞ்சுக்கூட்டு எலும்புகளில் இரண்டின் முறிவும் கழுத்தெலும்பில் ஒரு வெடிப்பும் பக்கத்திலிருந்த இருவர் இவவுக்கு மேலே விழுந்ததில் பரிசாகக் கிடைத்துள்ளது. ஒருமாதம் ஓய்வாகப் படுக்கையில் இருக்கச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். நிலமையின் பாரதூரம் விளங்கிய படியால், ஓமென்றிருக்கிறா. நான் பிறந்ததற்கு இருந்தபின், இது தானாம் இரண்டாம் தரமாக அவ ஒரு மாதம் தொடர்ச்சியாக வீட்டிலிருக்கப்போவது!!!!

சரி வீட்டிலேயே இருந்தால் அலுப்படிக்குமே..பாவமே என்று அம்மாவுக்குப் புத்தகங்கள் வாங்கி அனுப்பத் தீர்மானித்தேன். புத்தகக் கடைக்குள் நுழையும் வரை ஒன்றும் மனதில் தோன்றவில்லை. என்ன வாங்கலாம் என்று கண்ணை அலைய விட்ட போதுதான் உறைத்தது..எனக்கு அம்மாவைத் தெரியாது. அவக்கு என்ன மாதிரியான புத்தகங்கள் பிடிக்கும்? வரலாறு பிடிக்குமோ?காதல்?பயணங்கள் சம்பந்தமாய் ஏதாவது?ஆங்கில இலக்கியம்?மர்மக் கதைகள்?த்ரில்லர்? ஆஆ!!!!(கற்பனை செய்க: ஷ்ரேயா தலைமயிரைப் பிய்த்துக் கொள்வது!!)

சித்திக்கு அவவின் பிள்ளைகளிடமிருந்து கிடைத்த புத்தகமாம் என்று Chicken soup for the mother's soul பற்றிச் சொன்னா.தானும் மிகவும் விரும்பி வாசிக்கிறா என்று போன முறை கதைத்த போது சொன்னதில் அந்த தொடரிலேயே வேற என்ன கிடைக்கும் என்று பார்த்தேன். Chicken soup for the mother's soul 2 கிடைத்தது. அதுவும், Chicken soup for the working woman உம் வாங்கினேன். பிறகு அப்படியே பண்பியல்(classics) புத்தகங்களைப் பார்த்த போது Moby Dick கண்ணில் படவே அதையும் எடுத்துக் கொண்டு, மனிதனின் வரலாறு பற்றி ஆராயும் The footsteps of Eveம் இவற்றுடன் சேர்த்து அம்மாவுக்குப் பிடிக்க வேண்டுமே என்று வாங்கியுள்ளேன். இன்று பின்னேரம் அல்லது நாளை மீண்டும் ஒருமுறை புத்தகக்கடைக்கு விசிட்டடிக்கணும். ஏதாவது நல்ல புத்தகங்களின் தலைப்புகள் சொல்றீங்களா?

அம்மாவைப் பற்றி, ஒரு தனி மனுசியாக, 'அம்மா' என்கிற பாத்திரத்திலிருந்து விலக்கிப் பார்த்தால் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லாருக்கும் இப்படியா? புத்தகக்கடைக்குள் இது என் (மர)மண்டைக்குள் உறைத்தபோது உண்மையாகவே அதிர்ந்தேன்.(அந்த 9.0 ரிக்டர் அதிர்ச்சி, பிறகு சாப்பிட்ட டொம் யம்முடன் சேர்ந்து மூக்காலும் வியர்வைச் சுரப்பிகளாலும் சுனாமி வடிவெடுத்தது வேறே விஷயம்!). விரைவில் அவவிடம் போய் புதிதாய்ச் சந்தித்து, அவவை அறிந்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது. நினைத்துப் பார்க்கிறேன்...இப்படிப் பார்த்தால், என் வாழ்வில் 80 - 85% பேரை நான் புதிதாய் சந்திக்க வேண்டும்! அம்மாதானே..அண்ணாதானே என்கிற பிம்பத்திற்கூடாகப் பார்ப்பதால் தான் இப்படிப் பலரையும் "தவற" விடுகிறோமோ?

மகிழும் வாழ்க்கை

ஒருவர் சிலாகித்துச் சொன்னதன் பெயரில் ஒரு புத்தகம் (மின் வடிவத்தில்) வாசித்தேன். மர்மக் கதையோ, விஞ்ஞானப் புனைகதையோ அல்ல. பொலிஅனா என்னும் ஒரு சிறு பெண் எப்படி தன் வாழ்வில் உள்ள & ஏற்படும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைக் காண்கிறாள் என்பதே கரு. அதை ஒரு விளையாட்டாகவே அவள் பார்க்கிறாள். அவளது அந்த "மகிழ்ச்சி காணும்" விளையாட்டு எப்படி அவளைச் சுற்றியிருக்கிறவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை. கதை மாந்தரில் அவள் ஏற்படுத்தும் மாற்றங்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது / கதையில் சொல்லப்படுவது போன்று திடீரென்று ஏற்பட முடியாதவை போல எனக்குத் தோன்றினாலும், அம்மாற்றங்கள், ஒருவர் சில விஷயங்களை உணர்ந்ததும் அவரில் ஏற்படக்கூடியவையே.

பொலிஅனாவைப் போலவே சின்ன விடயங்களிலே நானும் சந்தோசப்பட்டுக்கொள்கிறேன் என்பது மகிச்சியாக இருக்கிறது. ஆனாலும், "மகிழ்ச்சி காணும்" விளையாட்டை நான் என் வாழ்வின் எல்லாத் தளங்களிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதை இப்புத்தகத்தை வாசித்த பின் உணரத் தலைப்பட்டுள்ளேன். பொலிஅனாவின் கதையை இங்கே வாசிக்கலாம். வாசிப்பை ஒரு நாளில் முடித்து விட்டாலும், வாசித்ததை, வாசிப்பு நமக்கு உணர்த்துவதை, மறக்க முடியாதென்றே தோன்றுகிறது. இன்னும் பிறக்காத என் பிள்ளை(களு)க்கு ஒரு வாசிப்பு அனுபவமாக இதை நான் கொடுப்பேன். :o)

என்மொழி இன்மொழி

வேலைத் தலத்தில் என்னையும் சேர்த்து 3 இலங்கையர். அனேகமாக ஒன்றாகத்தான் மதிய உணவை உண்போம். மற்ற இருவரும் சிங்களவர் என்றாலும் எனக்காக முதலில் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்கள். என் சிங்கள(பேச்சுப் பழக்க)த்தை மறக்காதிருக்க வேண்டும் என்பதால் அவர்களுடன் சிங்களத்தில் கதைக்கத் தொடங்கினேன். இப்போது சாப்பாட்டு அறைக்குள் மற்றவர்கள் வந்தாலும் நாங்கள் மூவரும் சிங்களத்திலேயே தொடர்ந்தும் உரையாடுவோம். எங்கள் பட்டப்பெயர் : Sri Lankan Mafia!

இந்த மாஃபியாவிலே "ரங்கிக", நடந்த சம்பவங்களை சுவைபடச் சொல்லுவதில் விண்ணன்.ஒரு முறை இலங்கையில் தங்களது CIMA வகுப்பில் நடந்தததாம் என்று இதைச் சொன்னார்:

ஒரு மாணவன், இங்கிலாந்திலிருந்து திரும்பியவன். பிரிடிட்டிஷ் accent உடன் ஆங்கிலத்தில் கதைப்பதும், ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பதும் என்று பெரும் அலட்டல் பேர்வழியாம். மற்றவர்களெல்லாரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இயலாக் கட்டத்தில் ஒரு நாள் அவனிடம் எப்போது இங்கிலாந்திற்குப் போனாய், எங்கே படித்தாய் என்று பூர்வீக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தான் சாதாரண தரப் பரீட்சைக்கு (16 வயது) இலங்கையில் தோற்றிய பின்பு இங்கிலாந்து சென்றதாயும், இப்போ 7 - 8 வருடங்கள் இங்கிலாந்திலேயே இருந்து படித்து விட்டதால் சிங்களம் சுத்தமாக மறந்து விட்டதென்றும் சொல்லியிருக்கிறான். இவர்களும் ஒன்றும் பேசாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விட்டு "அப்படியா" என்று எல்லாத்தையும் கேட்டுக் கொண்டார்களாம்.

வகுப்பு நடப்பது கடற்கரைக்கு அண்மையில். மதிய உணவு இடைவேளையில் கடற்கரைக்குச் சென்று அலையில் விளையாடுவது வழக்கமாம். ஒருநாள் அலட்டல் மாணவனையும் அழைக்க, அவனும் கடற்கரைக்கு சென்றிருக்கிறான். மாணவர்களில் ஒருவன் அல.மாணவனின் காலணிகளை கழற்றியிருந்த இடத்திலிருந்து எடுத்து வந்து கடலுக்குள் எறிந்து விட்டானாம். அல. மா.வும் காலணிகளி மீட்க காற்சட்டை நனைந்து விடாமல் தூக்கிய படியே மெது மெதுவாக நீருக்குள் செல்லும் போது, காலணிகளை எறிந்த மாணவன் பின்னாலிருந்து இவனை பலமாக நீருக்குள் தள்ளி விட்டானாம்.

"புது அம்மோ" ( ஐயோ அம்மா) என்று சொல்லிக்கொண்டே அல.மா. நீருக்குள் விழுந்தானாம்.

அந்தச் சம்பவத்திற்குப் பின் வகுப்பில் யார் என்ன கேட்டாலும் முழுக்க முழுக்க சிங்களத்திலேயே பதில் சொல்வானாம்.

சொந்த மொழியை, பேசுவதில் இவ்வளவு வெட்கமும் தயக்கமும் எதற்கு? இங்கே அவுஸ்திரேலியாவில் பார்க்கிறேன், தமிழைப் பேசத் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் கதைப்பதற்கு வெட்கம் அல்லது ஆங்கிலத்தைக் கதைப்பது போல ஒரு accent உடன் பேசுகிறார்கள். பெற்றோரே "என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது " என்று பெருமையடிக்கும் போது முகத்திலே 2 விட வேண்டும் போல இருக்கும். இரண்டு மொழிகள் தெரிந்திருப்பதில் நன்மையே தவிர தீதில்லை. தமிழ்ப் பிள்ளைக்குத் தமிழ் வராது/தெரியாது, ஆனால் பள்ளியில் 2ம் பாடமாக பிரெஞ்சோ, சீனமோ படிக்கும், அதைப் பெருமையாகவும் கதைக்கும். இதை ஊக்குவிக்க இங்கே நிறையவே பெற்றோருமுண்டு.எங்கே போய் சொல்வது!

பெட்டகம்