அது, இருப்பது, இருக்கிறது;
அது, இல்லாமலிருப்பது, இல்லாமலிருக்கிறது;
ஆனால், அது, இல்லாமலிருப்பது, இருக்கிறது என்பதல்ல;
அதைப்போலவே, அது, இருப்பது, இல்லாமலிருக்கிறதுமல்ல.
அம்மா வைத்திருந்த verse புத்தகம் போலே நானும் பள்ளிக்கூடக் காலங்களில் வைத்திருந்தேன். பகிடியான (autographல் எழுதக்கூடிய மாதிரி) சின்னச் சின்ன ஆங்கிலக் குறும்பாக்களையும் பிடித்த கவிதைகளும் தன்னில் கொண்டது. வாசித்தது பிடித்தால், உடனே அந்தக் கொப்பியில் எழுதிவிடுவேன். ஆனால் என்னுடையதிற்போல, உள்ள கஞ்சல் குப்பைகள் அவவின் புத்தகத்தில் காணக் கிடையாது. கிறிஸ்தவப்பள்ளிக்கூடத்தில் படித்ததன் பாதிப்புகள் ஆங்காங்கே தெரியும். பூக்களைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும், அவ வாசித்துப் பிடித்த கவிதைகளென்று அந்தக்காலத்து தடிப்பமான அட்டை கொண்ட கொப்பி.
நண்பர்கள்/வேண்டியவர்களின் பிறந்த நாட்கள் கடைசித் தாளில் சீராக எழுதப்பட்டிருக்கும். என் கொப்பிகளின் கடைசித் தாட்கள் போல் முகம் தெரியாத கிறுக்கல்கள் அம்மாவின் கொப்பியினை ஆக்கிரமித்தில்லை. அசிங்கமாக்கவில்லை. கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பு வரை மூலைகள் மடியாமல் பள்ளிப்புத்தகங்களோ குறிப்பேடுகளோ இருந்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் சபதமெடுத்துக் கொள்வேன்.. மூலை மடியாமல் பாவிப்பது என்று. ஒரு மாதம் போதும் எனக்கு, தோல்வியைக் காட்ட. மடிந்த மூலைகளை நிமிர்த்தும் போது என்னவோ செய்யும். புத்தகம் அழுகிறாற் போல ஒரு பிரமை. அதற்காகவே என்ன செய்தேன், ஒவ்வொரு புத்தகத்தின் முன்னட்டையிலும் "மூலை மடியாமல் கவனமாகத் திருப்பவும்" என்கிற பொருள் வர எழுதி ஒட்டினேன். பழக்கம் குறைந்து இல்லாமலே போனது. அம்மாவின் கொப்பியைப் பற்றி ஆரம்பித்து சுயபுராணம் பாடுறேன்.. :O)
எத்தனையாம் வகுப்பிலிருந்து வைத்திருந்தாவோ தெரியாது, ஆனால் சிறு வயதிலேயே ஆரம்பித்திருக்க வேண்டும். சிறு வயதிலிருந்து படிப்படியாக அவவுடன் கூடவே அவவின் எழுத்தும் வளர்ந்து மாறி வருவதை அழகாக அவதானிக்கலாம். வளர்ந்த பின்னால் எங்களுக்குக் காணக் கிடைக்கும் தோற்றத்தை/வாழ்வை விடவும் முந்தியதொன்று அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாயத் தெரிந்த ஒன்றானாலும் அதை நேரே பார்த்து உணருமாற் போல இருக்கும், பக்கங்களைப் புரட்டப் புரட்ட. கடைசிக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் எழுத்தும் அவவின் இப்போதைய எழுத்தும், ஒரு பருவத்தில் சேர்ந்திருந்து சில காலப்பிரிவின் பின் கண்டாலும் அடையாளம் காணக்கூடியதாயிருக்கிற தோழியின் முகச்சாயல் போல நிறையவே ஒத்திருக்கிறது. மாறாத எழுத்துக்களால் பக்கங்களை நிரப்பும் எவரைக் காண்பினும் எனக்கு அதிசயமே. ஒரு வரி எழுதும் போது இருக்கும் எழுத்து அடுத்த வரி எழுதும் போது மாறிவிடும். 10 வரியில் குறைந்தது ஏழு விதமான எழுத்துக்கள் இடம்பிடிக்கும். இந்தப்பழக்கம் காரணமாயோ என்னவோ , ஒருவருடன் பேசும் போது அவரைப்போன்றே பேச முற்படும் தன்மை போல, ஒருவரது எழுத்தையும் எழுதிப் பார்த்து ஓரளவுக்கு செய்யக்கூடியதாயும் இருந்தது.(கையொப்பங்களைப் "பிரதி" செய்து பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டதுதான்..நம்புங்கள்!!)
ஏனோ காலையில், அம்மாவின் புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வந்தது. வாசித்த முதற் சில தடவைகள் விளங்காமல் குழம்பினதும், மண்டையில் ஏறினதும் ஏற்பட்ட சந்தோசமும் ஞாபமிருக்கின்றன. கொஞ்ச நாள் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். அதைத்தான் என்னாலான மொழி பெயர்ப்பில், மேலே.
ஆங்கில மூலம்:
That, that is not, is not;
But that, that is not, is not that that is;
Nor is that, that is, that that is not.