I scream, you scream , we all scream for ice cream!!
எப்ப கார்ணிவெல் ஐஸ்க்றீம் அறிமுகமானண்டு தெரியல்ல. ஒருவேளை பள்ளிக்கூட விடுதியில தங்கியிருக்கேக்குள்ளயாயிருக்கலாம்.
விடுதிச் சாப்பாடு.. காலையில பாண் இரிக்கும் இல்லாட்டி புதன் கிழமையில கிரிபத். (கிரிபத் இரிக்கே, திண்டுத்துப் போனா சரியா ரெண்டாம் பீரியட்டுக்கு நித்திரை தான் வரும்) வேற என்னென்ன இரிந்தண்டு ஞாவகமில்ல. எட்டுமணிக்குப் பள்ளி துடங்கிற. ஏழு மணிக்கு மணியடிச்சோண்ணே வந்து வரிசையா நிக்கோணும். பிறகு சாப்பாட்டறைக்குள்ள போய் மேசையடியில நிண்டு ஒருக்கா சாப்பாட்டுக்கு நன்றி/செபஞ் சொல்லோணும். சொல்ல விருப்பமில்லண்டா பேசாம நிக்கல்லாம் இல்லாட்டி ஆரையோடையும் தனகுவேலை. முதல் நாள் பின்னேரம் புறக்கின காக்கா இறக ஆராவது புள்ளையிர தலைமயிரில செருகல்லாம்.. பிரார்த்தனை சொல்ற மேட்ரனுக்கு ரொக்கற் உடல்லாம்.. ரெண்டு நிமிசத்துக்குள்ள என்ன கூத்தெல்லாம் காட்டேலுமோ அதெல்லாம் காட்டி எப்பிடியாவது ஆரயாவது சிரிக்க வைச்சிர்ற. சின்னாக்கள்தானே.. 1 - 4ம் வகுப்புப் புள்ளையள் தான் பக்கெண்டு சிரிக்குங்கள். மத்தியானச் சாப்பாடு சொல்றதுக்குப் பெரிசா ஒண்டுமில்ல. இரவுச் சாப்பாட்டுக்கு மீன்/முட்டை/மாட்டிறைச்சி இரிக்கும். புள்ளையள் பாவமெண்டுத்து கிழமையில ஒரு நாளோ ரெண்டு கிழமைக்கொரு தரமோ கோழிறச்சி. வியாழக்கிழமையில.
சனி-ஞாயிறுக்கு வீட்டுக்குப் போற பிள்ளையள் கொண்டாற, இல்லாட்டி பாக்க வாற அம்மாப்பா கொண்டாற தின்பண்டமெல்லாம் வைக்க இடமிரிந்த. பின்னேரம் படிச்சி முடிஞ்சோணே இதுகளக் கொண்டுபோய்த் தின்ற. விதம் விதமான பலகாரம், முட்டைமா(இது என்ட பங்குக்கு) பிஸ்கற் என்டு நிறய.
இவ்வளவுமெல்லாம் திண்டும் , பிறகு சில நாள் நடு இரவில நள்ளிரவு விருந்தெண்டு சொல்லி நடத்திற. மேட்ரன் ஒருநாள் சத்தம் போட்டாவு. அடுத்த தரம் என்ன செய்தமெண்டா ஒராள் போய் அவட அறைக்கதவில் பூட்டைப் போட்டுத்து வந்துத்து. அவ பாவம், "கதவத் திறங்கடி" என்டு ஒரே ஏச்சு. எங்களுக்கென்ன கழண்டா கிடக்கு அவட கதவைத் திறக்க. பேசாம உட்டுத்தம். அவையும் படுத்துத்தாவு.. நாம நல்லாக் கிடந்து சிரிச்சி கூத்தடிச்சி திண்டிட்டுப் படுத்த. அடுத்தநாள் காலம்பிற நைசாப் போய் பூட்டைக் கழட்டித்தம். அவ காலையிலயும் கிடந்து தட்டுறாவு. ஒன்டுந் தெரியாத மாரிப் போய் "ஏன் மிஸ்? கதவு திறந்துதானே கிடந்த" என்டு சொல்லித்து அவ பதில் சொல்ல முதல் ஒரே ஓட்டம்!! :O)
ஒரு தவணைக்கு ஒருக்கா மாதிரி வெளில கூட்டித்துப் போவாங்க விடுதிப் பிள்ளையள. அதுக்கெண்டே சனி-ஞாயிறில வீட்டுக்கும் போகாமச் சில கிளையள் நிக்கிற. தெறிப்பு வேல பாக்கத்தான். ஒருக்கா இப்பிடித்தான் படம் பாக்கக் கூட்டிப் போனவங்க முன்னுக்கு லிபேர்ட்டித் தியேட்டருக்கெண்டு நினைக்கன். இன்டியானா ஜோன்ஸ் யேசு கடைசியாப் பானமருந்தின புனிதக் கோப்பையைத் தேடிப் போற கதை.[வேதக்காரப் பள்ளிக்கூடமெண்டவடியா வேற கதைகள் கூட்டிப் போமாட்டாங்க] அண்டைக்கு நாங்க காட்டின கூத்தில அதுக்குப் பிறகு படத்துக்கே கூட்டிப் போறல்ல. :O) அப்பிடி வெளில போனநேரம்தான் முதல்தரம் கார்ணிவெலுக்குப் போயிரிப்பன் போல. ஏனெண்டு தெரியா அதப்பத்தி ஞாவகமில்ல.
ஒரு நாள் என்ட ஒரு நண்பி அக்காச்சிக்குப் பிறந்த நாள். முதலே அம்மாட்டக் கேட்டு வைச்சித்து, பிறகு எப்பிடியோ wardenட்டயும் அனுமதி வாங்கித்தாவு. செரியான கெட்டிக்காரி. அவட நண்பிகள் நாலு பேரும் இவையும் நானும். கார்ணிவெலப் பத்தி என்ட முதல் ஞாவகம் அதுதான். அங்க போனா, என்னத்தை ஓடர் பண்ணிற எண்டு தெரியா. சரியெண்டு ஒரு சொக்ளற் சன்டே குடிச்சன். சா! என்ன திறமான ஐஸ்க்றீம். மட்டக்களப்பில இருக்கக்குள்ள பல்லுப் புடுங்கினதுக்குக் கிடைச்ச "பௌசியா"க்கடை ஐஸ்க்றீமை விடயே பரவால்லண்டா பாத்துக் கொள்ளுங்க.
விடுதியால வெளிக்கிட்ட பிறகும் ஆருக்கும் ட்றீட் குடுக்கிறண்டா இந்தக் கடைதான்.கொஞ்சம் பழைய வீட்டிலானே கடை நடந்த, திருத்த வேலை செய்யிறண்டு பிறகு கொஞ்ச நாள் பூட்டியிருந்த. Banana boat என்டும் ஒரு ஐஸ்கிறீம். வாழைப்பழத்த நெடுக்காப் பிளந்து இன்னுமென்னென்னையோ போட்டுத் தருவாங்க. [இப்ப சிட்னில இப்பிடி ஒரு ஐஸ்கிறீம நினைச்சும் பாக்கேலா! கிலோ தொண்ணுத்தொம்பது சதத்துக்கு வித்த வாழைப்பழம் இப்ப கிலோ 11 டொலருக்குக் குறைவா இல்ல. இந்த சீத்துவத்துல பனானா போட்தான்!!] பிறகு walls (streets) ஐஸ்க்றீம் கடை எல்ல இடத்திலயும் வந்தோணே வாற வழில வாங்கி வழி வழியாக் குடிச்சி வாற. அம்மாக்கு அந்தப் பழக்கத்தை கண்ணில காட்டேலா. ஆக்கள் ஒரு சாங்கமாப் பாப்பாங்களாமெண்டு சொல்லுவாவு. அவ ஏசிறன்டுத்து, விறு விறெண்டு ஐஸ்க்றீமைத் திண்டொழிச்ச பிறகுதான் வீட்டுக்கே போற. :O))
இந்த வனிலா ஐஸ்க்றீம் இரிக்கெலுவா..அதோட உறைப்புச் சுண்டல் சாப்பிட்டிருக்கெயளா? [க்றீம் கிறக்கரோட சேத்து சீசும் சீனிசம்பல்/கட்ட சம்பலும் சாப்பிடுற. இப்பிடி கொஞ்சம் 'வித்தியாசமான' கொம்பினேசன் முயற்சியும் இடைக்கிட செய்யிறதான் :O) ] [க்றீம் கிறக்கரெண்டத்தான் இன்னொண்டு ஞாவகம் வருது. லெமன் பவ் என்டொரு பிஸ்கற் வாறதானே. அதில பிஸ்கற் ரெண்டுக்கும் நடுவில லெமன் க்றீம் இரிக்கும். சின்னனில பிஸ்கற்றப் பிரிச்சி கிறீம மட்டும் ராவித் திண்டுத்து வெறும் பிஸ்கற்ற அம்மாட்டத் திருப்பிக் குடுக்கிற. போன கிழமை ஒரு சின்னாள் அதேவேலை செய்யிறதக் கண்டன். ;O) ]
உறைப்புச் சுண்டல் ஐஸ்கிறீமோட சாப்பிட்டதா என்டு கேட்டனாந்தானே..அந்தச் சுண்டலுக்கு காலிமுகத்(Galle face) திடலுக்குப் போகோணும். ஒரு காலத்தில வீட்டில எல்லாரும் சேர்ந்து போகக் கூடியதா இருந்த. தண்ணில் கால் நனைக்க உட மாட்டாங்க .. ஆனா அந்தக் காத்து.. அப்பிடியொரு சுகம். கடற்கரைக்குப் போனாக் கிடைக்கிற இன்னொண்டு அவிச்சுப் பொரிச்ச மரவள்ளிக் கிழங்கு. கொச்சிக்காத்தூளும் உப்பும் தூவி வச்சிரிப்பான். அந்த மாதிரி இரிக்கும். அந்தத் தள்ளு வண்டில் அங்கெங்கயோ வரக்குள்ளயே கண்டுபிடிச்சிருவம். இப்ப யோசிக்கிறன், தின்னுறத்துக்குத்தான் பீச்சுக்குப் போனனாமளா என்டு.
அண்ணாவங்க நிண்டா, கடற்கரைக்குப் போனா அன்டைக்கு முக்கியமான ஒரு சாப்பாட்டுச் சாமான் கட்டாயம் இரிக்கும். அத என்னண்டு அடுத்த பதிவில. சரியா மனே..
சொல் விளக்கம்:
கிரிபத்(சிங்களச் சொல்) - பொங்கல்
தெறித்தல் - குழப்படி/அட்டகாசம் பண்ணல்.
வேதக்கார - கிறிஸ்துவக்கார
அதுக்காவண்டி - அதற்காகவேண்டி
கொச்சிக்காய் - மிளகாய்
போனனாமளா - போனோமா
திறமான - உயர்ந்த/சிறந்த
ஏசிறன்டுத்து - ஏசுவது(திட்டுவது) என்பதால்
இரிக்கெலுவா - இருக்கிறது அல்லவா
ஒரு சாங்கமா - ஒரு மாதிரியாக
திண்டொழிச்ச - தின்று (உண்டு) முடித்த
"இரை" மீட்டல் 2
கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும் - ஒரு பின்னூட்டம்
"சக்தி"யில் பத்மாவின் "கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்" பதிவுக்கான என் பின்னூட்டம் சற்றே பெரிதாகிப் போனதால் தனிப் பதிவாக இடுகிறேன்.
சுதந்திரம் "கொடுக்கப்படும்" ஒன்றல்ல என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. பெண்களில் பலர் உட்பட. இதில் இன்னமும் வேதனையான ஒன்று என்னவென்றால் படித்த பெண்களும் அடங்கி நடத்தல்தான் அழகு/சரி என்கிற ரீதியில் நினைப்பதும் வாழ்வதும். பரஸ்பரம் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு உறவில் அடங்கி நடத்தல்/கட்டுப்பாடுகள் என்பன இருப்பதில்லை.
பெண்ணை, சார்ந்திருப்பதனூடாகப் பெருமைப்பட்டுக் கொள்ளச் சொல்கிறது எங்கள் சமூகம். ஒரு பெண்ணின் இருப்பு ஆணைச் சார்ந்ததாக ஆக்கப்படுவது ஏன்? உதாரணமாக எடுத்துக் கொண்டால், பெண் தனித்து வாழ்வதை சமூகம் எளிதில் அங்கீகரிப்பதில்லை. அதெப்படி தனியாக வாழக்கூடும்? ஏன்.. தன்னைத் தானே கவனித்துக் கொள்வதற்கும் பிடித்தமான வகையில் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கும் ஒரு பெண்ணால் இயலுமாயிருந்தால், ஒரு பந்தத்தில் இணைந்திருக்கப் பிடிக்காமலிருந்தால் அந்தப் பெண் திருமணஞ் செய்ய வேண்டியதின் அவசியம் அடிபட்டுப் போய்விடுகிறது. (திருமணம் வேண்டியதா/ வேண்டாததா என்ற விவாதத்துக்குள் நான் போகவில்லை) ஆனால் இதை ஒரு சராசரி ஆளுக்குச் சொல்லிப் பாருங்கள்.. அதெப்படி பெண் தனியாக வாழ்வது என்ற பதில் தான் வரும். ஏன்? பெண்கள் அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சார்ந்தே இருந்து பழகிப் போனதால். ஆண்கள் சொல்வது ஏனென்று என்னால் ஊகிக்கக் கூடியது ஈகோ. "நான் இருக்கிறேன்தானே பார்த்துக்கொள்ள.. தேவைகளைக் நிறைவேற்ற. பெண் என்பவள் என் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும்" என்கிற எண்ணம்.
சரி, அவ்வளவு தூரம் போக வேண்டாம்.. நம் பெண்களில் எத்தனை பேரை விரும்பிய இடத்துக்குத் தனியே (எவ்வளவு தூரமானாலும்) குடும்பத்தினர் போக விடுவார்கள்? "ஐயோ பெண்ணை அவ்வளவு தூரம் தனியே அனுப்புவதா"/"அவளுக்குப் போய்ப் பழக்கமில்லை"/"அவளால் முடியாது" என்ற ரீதியில் பதில் வரும். அவளால் முடியுமா முடியாதா என்பதை அவளே தீர்மானிக்க விடுங்களேன். நன்கு படித்து வேலையிலிருக்கும் ஒரு பெண் (புத்தகங்களையே ஆணுக்குரியவை பெண்ணுக்குரியவை என்று வகைப்படுத்திய அறிவாளி) நேற்றுப் பயணம் போதல் பற்றிப் பேசுகையில் சொல்கிறா "நான் தனியாய்ப் போகமாட்டேன். அதெப்பிடிப் போவது. கலியாணங் கட்டின பிறகு தனியே பயணம் செய்வது அழகில்லையல்லவா. அப்படி நான் விரும்பி அதைச் சொன்னாலும், கணவர் 'ஏன் அப்படித் தனியே போக யோசிக்கிறீர்கள்? என்ன பிரச்சனை' எனக் கேட்கக் கூடும்".
[அவவிற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் திருமணம் செய்திருந்தால் எல்லாவற்றையும் சேர்ந்தே செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பிழையாக நினைப்பார்கள்/ (கணவன்) பெயர் கெட்டுவிடும் என்று இன்னும் நினைப்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடிவதில்லை. திருமணம் செய்து கொண்டால் நீங்கள் தனித்தன்மையற்றவர் ஆகி விடுகிறீர்களா? இல்லையே!. ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்கும் கட்டாயம் பிடித்திருக்க வேண்டுமென்பதில்லை தனியே உங்களுக்குரிய வெளியில்(personal space) இயங்க முற்படுவது பிரச்சனைக்குரிய ஒன்றெனக் கருத வேண்டிய காரணம் இல்லை. ஒன்றாகச் சேர்ந்து செய்வதையும் செய்யுங்கள். தனிப்படவும் இயங்குங்கள். அது ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் இன்னும் நேசிக்கவும் இடந் தரும்]
இப்படி, தங்களை உண்மையாகவே வெளிப்படுத்துவதற்கும் விருப்பப்படி செயலாற்றுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளே வாழ்க்கையாகிப் போகின்றன. தளைகளை உடைத்துக் கொண்டு வெளியில் வர முயற்சிக்கையிலேயே அப்பெண்ணிற்கிருக்கக்கூடிய தன்னம்பிக்கையின்மை, பொருளாதார முட்டுக்கட்டைகள் என்பவை அவளுக்கெதிராக ஆயுதமாக்கப்பட்டு அம்முயற்சிகள் தோற்பிக்கப்படுகின்றன. அப்படியும் விடாது முயன்று சுதந்திரமாய் வாழும் சகோதரிகள் எம் சமூகத்தினரிடமிருந்து எதிர்கொள்பவை நாம் அறியாதவையல்ல. [அவற்றைப் பற்றி இப்போதைக்கு இங்கு வேண்டாம்.]
நினைத்தநேரம் நினைத்தபடி சென்றுவரக்கூடிய சூழல் தருகிற சுதந்திரத்தை/புத்துணர்ச்சியை, தளைகளை வென்று செயலாற்றுவது தரும் தன்னம்பிக்கையை, சமூகத்தில் தன் பங்களிப்பை, விரும்பியது கற்றுத் தேறித் தன்னை முன்னேற்றிக் கொள்வதில் கிடைக்கிற திருப்தியை சரிவரப் புரிந்து கொள்ளாமல் இன்னுமின்னும் பொத்திப் பொத்தி "பாதுகாப்பு, பண்பாடு" என்று அடைத்து வைக்கப்படுவதையுணராத பெண்களும் தங்கக்கூண்டென்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டு காலம் தள்ளுவார்கள். கண் திறப்பதேயில்லை பலருக்கு!
"இரை" மீட்டல் 1
கொழும்பில் எனது சாப்பாட்டு நினைவுகள்/அனுபவங்களைப் பதிய நினைத்திருக்கிறேன். பள்ளிக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்:
காது என்டொராள் இருந்த. பள்ளிக்கூடத்தில பொது உதவிக்கெண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டவர். வகுப்புகள் இடம் மாறினா கரும்பலகை தூக்கிறண்டா, ப்ரொஜெக்டர் போடுறண்டா, ஒடிட்டோரியத்தில திரை வேலை செய்யல்லண்டா அவரத்தான் கூப்பிடுற. ரசாயன வகுப்புக்கு குடுவைகள் கழுவுறது, lab சுத்தமாக்குறது என்டும் பலதரப்பட்ட வேலைகள். அவற்ற பேர் காது என்டு சொன்னான் தானே.. முழுப்பேர் சல்காது. எப்ப பள்ளிக்கூடத்தில வேலைக்குச் சேர்ந்தவர் என்டு ஒருதருக்கும் தெரியா. படிச்சு முடிச்சு பள்ளிக்கூடத்திலயே வேலைக்குச் சேர்ந்த அக்காமாரைக் கேட்டாலும் அவங்களுக்கும் தெரியா. அவரோட கதைக்க முயற்சித்ததாயும் ஞாபகமில்ல. ஆனா என்னண்டா ஆள் சரியான அமசடக்கி. கொஞ்ச நாள் தொடர்ந்து மிடில் ஸ்கூல் (6 - 8ம் வகுப்பு)பிள்ளையள்ர சாப்பாடு கொஞ்சம் சாப்பிட்ட மாதிரியோ.. முழுக்கவோ சாப்பிடுப்பட்டோ இருக்கத் தொடங்கித்து. பிள்ளையள் ஒரே முறப்பாடு. மினக்கெட்டு வீட்டில சொல்லி நேற்று நண்பி கொணந்த மாதிரி நூடுல்சோ இல்லாட்டி நண்பி கேட்டெண்டு சொல்லி தோசையோ[சிங்களப்பிள்ளையளுக்கு தோசையெண்டாக் காணும். எங்களுக்கு அதுகள்ர பிஞ்சுப் பிலாக்காக் கறியில (பொலொஸ்)(இதுக்கு அர்ப்பணிக்கிறத்துக்கெண்டே தனிப் பதிவு போடலாம்!!) கண்] கொணந்து அது சாப்பிடாமலே காணாமப் போறண்டா!!
இடைவேளை பற்றிச் சொல்லக் கிடக்கு. எல்லாப்பள்ளிக்கூடத்திலயும் இது நடக்குமெண்டு நினைக்கன். இடைவேளை மணியடிச்சாக் காணும். 11.10 - 11.40 என்டு நினைக்கிறன். (மாட்டுக்கிளையள் ஏறி மிரிக்கிறமாரி இடிச்சுத் தள்ளி ஓடுங்கள். படியால போகயும் ஏலா.. வரயும் ஏலா). அரைமணித்தியாலத்துக்குள்ளதான் சாப்பாடும் விளையாட்டும். கிடுகிடெண்டு கொணந்ததைப் பிரிக்கிற. Tuck Shop போற கதை தனிக்கதை. அத இப்பத்தைக்கு விடுவம். கொணந்ததைப் பிரிச்சா, உங்களுக்கெண்டு ஒரு குழு இருக்குமெல்லா.. அதுக்குள்ள என்டதிலருந்து ஒரு துண்டு ஒராளுக்கும் இன்னொராளிடதிலருந்து ஒரு கரண்டி மற்றாளுக்கும் போகும். கடசியாப் பாத்தா வீட்டருந்து கொணந்தது உங்களுக்கு வாய்க்குள்ளயே போயிருக்காது. மற்றாக்கள்ர சாப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமா வயித்த நிரப்பிரும். எல்லாருக்கும் இதான் கதை. ஆருக்கும் பிறந்தாநாளெண்டாக் காணும். கேக் என்டதையே சீவியத்தில முதல் முதல் கண்டமாதிரி (பிறந்தாள்க்காரப் பிள்ளை தோழியெண்டா) எனக்கு ரெண்டு துண்டெண்டு முதல்லயே சொல்லி வைச்சிர்ர. பிள்ளையும் அதுக்கேத்தமாதிரி ரெண்டு துண்டுக்காராக்களையெல்லாம் எண்ணி கேக்கை வெட்டிக் கொண்டரும். அதையும் உள்ளுக்கு அனுப்பிற. பிறகு விளையாடப் போற. சில பிள்ளையள் விளையாடித்து வந்துதான் சாப்பிடுங்கள். வகுப்பு நடக்கும் .. தண்ணி குடிக்கிற சாக்கில நைசா ஒரு துண்டுப் பாணை விழுங்கிற. ரீச்சரும் ஒண்டும் சொல்லுறல்ல..அநேகமா. சிரிச்சித்து விட்டிருவாவு.
இப்பிடிச் செய்யிற பிள்ளையளுக்கு இன்டவெலுக்க சாப்பாட்டுப் பெட்டியத் திறந்தா சாப்பாட்டக் காணல்லண்டா எப்பிடி இரிக்கும்! ஒரேயடியா முறைப்பாடு வரத் தொடங்கித்து. சரியெண்டு ஒருநாள் மூணு prefect அக்காமார் ஒவ்வொரு வகுப்பிலயும் ஒளிஞ்சித்து இருந்தவங்களாம். பிள்ளையளெல்லாம் அசெம்பிளிக்கோ காலமைப் பிரார்த்தனைக்கோ பொய்த்துகள். சுத்தமுத்த பாத்துத்து ஒராள் வகுப்புக்குள்ள வருதாம். ஒரு பையத் திறந்து சாப்பாட்ட எடுத்து விறுவிறெண்டு சாப்பிடுப்படுதாம். பிறகு இன்னொரு பை. ஆராள்.. சல்காதுதான்! prefect அக்காச்சிக்கு இப்ப என்ன செய்யிறண்டு தெரியல்ல. சத்தம் போடயும் ஏலா. பேசாம இருந்துபோட்டு, பிறகு ரீச்சரிட்டப் போய் சொன்னதாம். பிறகு பிறின்சிப்பல் கூப்பிட்டுக் கதைச்சண்டும் அதுக்குப் பிறகு களவு போறல்லெண்டும் சொல்லிக் கிடந்த. அப்பல்லாம் அந்தாளக்கண்டா கிளுகிளெண்டு சிரிக்கிறதான் தொழில். இப்ப நினைக்கத்தான் பாவமா வருது. உண்மையாவே களவுதானா இல்லாட்டிப் பசீல எடுத்துச் சாப்பிட்டதா என்டு இத்த வரைக்கும் தெரியா. :O
இந்தப் பள்ளிக்கூடத்திலதான் எனக்கு போண்டா என்ட சாமான் அறிமுகமான. மணியடிக்க, வெளிவேலைக்குப் போய் வர ஒராள் இருந்த. என்ன பேரெண்டு மறந்துத்தன். காசு குடுத்தா வாங்கித் தருவேர். A/L நேரந்தான் இந்த வேலை செய்த. தவா சேர் தூங்கித்தூங்கிப் பாடமெடுப்பார், நாம இஞ்சால சத்தம் போடாம வெட்டுறதான். சிலவேள டபிள் ட்ரிப்பிள் பீரியடும் பாடம் நடக்கும் ஒரே ஆளோட.
தவா சேர் இரிக்காரே அவர் ஒரு முசிப்பாத்தியான ஆள். ஒருநாள் எங்கயோ அவர்ர ஸ்கூட்டர்ல போகக்குள்ள விபத்தாகித்து. ஆரோ வந்து இடிச்சித்தான். அடுத்தநாள் வந்து தான் எப்பிடிப்போன அவன் எதால வந்து இடிபட்ட என்டெல்லாம் விளக்கம் சொல்லத் தேவல்லயா! எங்களுக்கும் உசார் பிடிச்சிரும் ஏனெண்டா இந்தாள் கதைக்கத் தொடங்கினா எப்பிடியும் ஒரு முக்கா மணித்தியாலத்துக்கு பாடமில்லண்டு தெரியும். இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் நழுவ விட்டிருவமா!! இன்னும் ஞாபகமிருக்கு, விபத்து நடந்து ரெண்டு மூண்டு மாசத்துக்குப் பிறகும் அவரிட்ட கதை கிளறுற. ஸ்கூட்டர் திருத்திட்டீங்களா சேர்? என்டு! அவரும் நாங்க கேக்கிறதப் பத்தி விளப்பமில்லாம கதை சொல்லுவார்! படிப்பிக்கத் துடங்கின காலத்துக் கதையும் வரும். இவரிட்டத்தான் ரியூசனுக்குப் போன. மூண்டுமணிக்கு வகுப்பு. ஒருநாள் சேர் வெண்பலகையில வெப்பக் கணக்கு ஏதோ எழுதிறார். எப்பிடித் தீர்க்கிற என்டும் எழுதியெழுதி வந்தவர், திடீரென்டு எழுதாம நிண்டுத்தார். எங்களுக்கு முதல் விளங்கல்ல. பிறகு சிரிப்பெண்டா!! பள்ளியால வந்து நல்லாச் சாப்பிட்டுத்து வகுப்புக்கு வந்ததில சேர் வெண்பலகையில சாஞ்சு நித்திர!! :O))
பள்ளில இருக்கக்குள்ளதான் பெரேரா & சன்ஸ் இல(பள்ளிக்கு நேர முன்னாலயே கடை வச்சிரிந்தாப் பின்ன!!) இக்ளெயாஸ் (Éclairs) என்ட ஒண்டையும் தின்னப் பழகின. இஞ்ச வந்து பாத்தா வெறுங் கிறீம உள்ளுக்கு அடைஞ்சு அதுக்கு மேல சொக்கிலட்ட ஊத்திரிக்கான். அங்கெண்டா மெதுமெதெண்டு ம்ம்ம்... மெதுமெதெண்டத்தான் இன்னொரு சாமான் ஞாபகம் வருது. Carnival கடை ஐஸ்கிறீம். அது அடுத்த பதிவில. :O)
(இந்தத் தமிழ் விளங்கல்லண்டாச் சொல்லுங்க, வழமையா எழுதிற மாதிரி அடுத்ததை எழுதிறன். இப்ப பொய்த்து வாறன் மக்காள்.)
நா. ப. கா 2
பிரேமலதாவுக்குச் சொன்னாலுஞ் சொன்னன்.. இப்பத்தான் படம் போட நேரம் வந்திருக்கு! எல்லாமே செல்.பேசில எடுத்த படங்கள்.
நிறைய நாளாகுது பணியாரஞ் செய்து சாப்பிட்டு. பணியார உதவி: கஸ்தூரிப்பெண். (பக்கத்தில இருக்கிறது கரட் அல்வா, சப்பாத்தி):
வடிவாயிருக்கும் என்டு தோணினா போக வரேக்க செல்.பேசில சுடுறதுதான். அப்பிடிச் சுட்ட பூக்கள்:
சீசனில முதன் முதலா எங்களுக்கு இரையாகப் போகுதெண்டு தெரியாமலே (ஒருதருஞ் சொல்லிராதீங்க!!)ஒருக்காத் தொட்ட கையில வாசம் மிச்சம் வைச்சிட்டுப் போற மாம்பழம். ம்ம்... புட்டவிக்கிறதா இல்லாட்டி சாப்பிட்ட பிறகு சாப்பிடுறதா?
வகை: படம் பார்