இனிமைகள் காற்றுடன் கதை பேசும் இலைகளைப் போல தொடர்ந்து இசைத்துக் கொண்டுதானிருக்கின்றன.. நாம்தான் தொடர்ந்து செவி மடுத்துக் கொண்டேயிருப்பதில்லை. இயற்கையும் இசையும் கூட அப்படித்தான் - கவனித்தால் தன் பாட்டுக்கு மனம் இலேசாகி விடுகிறது.
இரண்டாம் குறிப்பு: இன்றைக்குக் கண்ட பிள்ளையார் எறும்புகள். சின்னக் கறுத்த எறும்புகள். இவற்றை ஏன் பிள்ளையார் எறும்புகள் என்று சொல்கிறோம்? (அல்லது வழக்கம் போல நான் தானா!). வீடு வரும்போது கட்டிட வாசலில் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு ஒரு இறந்து போன பூச்சியின் உடலைத் தூக்கிக் கொண்டு நின்றன. படியேறி வீட்டில் பை வைத்து நூலகத்துப் புத்தகங்களை எடுத்து மீண்டும் இறங்கி வர எடுத்த இரண்டு நிமிட நேரத்தில் மொத்தமாய்க் காணாமற் போயிருந்தன. பூச்சிக்கு அரச மரியாதையுடன் கூடிய தகனமா நல்லடக்கமா அல்லது வேறெதுவுமா?
சின்ன வயதில் எறும்பு கொன்று அதனால் சிவன் நெற்றிக் கண்ணால் எரித்து விடுவாரோ என்று பயந்திருந்த சில நாட்களின் ஞாபகம் திரும்பவும் மேலெழுகிறது.
முதல் குறிப்பு இரண்டாம் பகுதி: அலுவலகத்து 'Secret Santa' தந்த 'Air (French Band)' இனது 'மூன் சபாரி' கேட்கக் கேட்க கண்ணுக்குள் விரியும் ஒரு வேப்ப அல்லது மா மரத்தின் கீழ் போடப்பட்ட ஒரு கயிற்றுக் கட்டில்/ஹமொக், கொஞ்சம் காற்று, கொஞ்சம் பழரசம் (இவையுடன் அந்த இசையும்) சேர்ந்தால் சொர்க்கம் போலத் தோன்றுகிறது. பார்க்கலாம்.. நத்தார் விடுமுறைக்கு வேப்ப/மா மரங்கள் இல்லாவிட்டாலும் ஏதாவதொரு நிழலின் கீழ் இந்தச் சொர்க்கம் கிடைக்கிறதாவென்று. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது பகல் கனவு.
முதல் குறிப்பு முதலாம் பகுதி: நாதமாய் செவியை நிறைக்கிறது. பயிற்சி இல்லாமல் துருப்பிடித்துப் போன சிலவற்றை இரண்டு தரம் திருப்பித் திருப்பி வாசிக்க வாசிக்க நீண்ட நாளைக்குப் பின் சந்திக்கும் நண்பர்களின் அளவலாவல் போல் வீணைத்தந்திகளில் விரல்களின் கோலங்கள். சிலவேளைகளில் கையைக் கூர்ந்து பார்த்தால் எப்படிப் போய் வருகிறது - அடுத்தது இந்த சுரம்தான் என்றெண்ணாமலே - என்பது ஆச்சரியமாயிருக்கிறது. சூழலை மறக்கடிக்கச் செய்யவென்றே இசை வழிகிறது. நனைந்து கொண்டேயிருக்கிறேன்..
இன்றைய கிறுக்கல் குறிப்புகள்.
வகை: கிறுக்கினது
வெயில்
வெயில் பற்றின முதல் நினைவு எதுவாக இருக்கும்? கூரைக்குள்ளால் ஒளிந்து வந்து தரையில் வட்டம் போடுவதும் இலைகளுக்கூடாய் வந்து விழுந்து தன் 8 நிமிஷப் பயணக் களைப்புப் போக தரையில் கிடப்பதுமே என் ஞாபகமாய் மேலெழும்புகிறது. குளிர்காலத்தில் ஹைட் பார்க்கில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு குளிருக்கு இதமான மெல்லிய சூட்டை அனுபவித்தால் தெரியும்.. வெயிலின் அருமை. அயனவலயப் பிறவி என்ற பெயர் சரியாய்த்தான் இருக்கிறது. வெயில் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.. வெயில் தாகம் எடுத்து அலைகிறேனோ என்றதொரு சந்தேகம் முளைத்திருக்கிறது. எப்போதும் சூரிய ஒளி் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கவும் சாயுங் காலத்தில் சூரியன் சாயாமலிருக்கவும் கூடுமானால் என்று கனவு காணத் தோன்றுகிறது. எல்லாம் குளிர் செய்யும் வேலை.. கோடை வந்த பிறகு என்னிடம் கேட்டுப் பாருங்கள்.. மழைதான் வேண்டுமென்று 'முழக்கி'ச் சொல்லுவேனாயிருக்கலாம். :O)
சுட்டெரித்த (போதும் அதைக் கண்டு கொள்ளாமலிருந்த) ஊர் வெயிலுக்கும், முகத்திலறைகிற அனல் காற்றுடன் நடமிடுகிற இங்கத்தேய வெயிலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அவ்வளவு ஏன் 2-3 மணிக்கெல்லாம் தலை கொதிக்க கவசம் ஏதுமின்றி நடந்து சென்ற கொழும்பு வெயிலும், செழித்த மரங்களுக்கிடையே ஒளித்துப் பிடித்து விளையாடும் கம்பகா வெயிலும், தெருவுக்குப் போட்டிருக்கும் தாரினை உருக்கி உரு மாற்றும் மட்டக்களப்பு வெயிலும், திருக்கோணமலை, யாழ்ப்பாணம், பொலநறுவை, நீர்கொழும்பு, காலி, கதிர்காமம், பிபிலை என்று நான் போயிருக்கிற அத்தனை இடங்களிலும் நான் கண்ட வெயில்களும் வித்தியாசமானவைதாம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குணம் அதற்கு. காளிக்குக் கோபம் வருமாம். அவவுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ, தன் கோபத்தையெல்லாம் காளி கோயில் மணலில் வெயில் இறைத்து வைத்திருக்கும். தடை போட்டு மரங்களும் கூரைகளும் குடை பிடித்தாலும் எப்படியோ உள்நுழைந்து தரையில் பொட்டு வைத்து / கோலம் போட்டு அழகுபார்க்கும். தாவரங்கள் வாழ உயிர் கொடுக்கும். சில இடங்களில் வெயிலுக்கு ஒரு குளிர்ச்சி கூட வந்துவிடும். மனிதர்களைப் போல வெயிலுக்கும் கோபம், அமைதி, அழகு, கருணை என்று எத்தனையோ முகங்கள், குணங்கள்.
(முதற் தடவை நோர்வே போயிருந்த மூன்று மாதங்கள் அங்கு இலையுதிர் மற்றும் பனிக்காலம். அந்த ஆண்டு பனிக்காலம் பிந்தினதாம்..ஆனாலும் வெயில் இல்லாமல் போகாமலில்லை. என் உற்சாக மட்டமும் அந்நேரத்து வெயிலைப் போலவே குறைந்து போனது. இங்கு வந்த பிறகுதான் வின்டர் ப்ளூஸ் என்பது பற்றிக் கேள்விப்பட்டேன். குளிர்காலமென்றாலும் நல்ல சூரிய வெளிச்சமுள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தது நல்ல காலம் .)
குளிர்நாடுகளிலே பிறந்தவர்கள் பலர் பாவம்; வெயிலைத் தாங்கார்களாம். ஆனால் எனக்கோ இன்னுமின்னும் வேண்டும் போல இருக்கிறது. வசந்த காலத்து இலைகளையும் பூக்களையும் (விட்டுப் போக மனமில்லாமல் தொங்கும் குளிரையும்) தடவி் காற்றை நிறைக்கும் அந்த மஞ்சள் வெயிலுக்காகவும், அந்த அழகிய மஞ்சள் வெளிறி நிறமற்றுப் போய் ஈரமில்லாமல் சண்டித்தனம் காட்டுகிற காற்றோடு சேர்ந்து எறிக்கிற கோடை வெயிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன். என்னதான் மழையினை நேசித்தாலும் எப்போ வருமென்று பார்த்திருந்தாலும் முத்துக்களும் வெள்ளிச் சரங்களும் காட்டும் நாட்டியத்துக்காய்க் காத்திருந்தாலும், வெயிலைக் காணாத மாத்திரத்தில் என் மனமும் அலைய ஆரம்பித்து விடுகிறது - வீடு திரும்பப் பிந்துபவரைப் பற்றி எண்ணுகிற ஈழத்துக் குடும்பத்தினதைப் போல .
வகை: இயற்கை , கிறுக்கினது , குழையல் சோறு
நம்பகமான நிறுவனங்கள்
நியுயோர்க்கிலுள்ள ரெபுட்டேஷன் இன்ஸ்ட்டிடியூட் உலகின் நம்பகமான நிறுவனங்கள் பற்றி 29 நாடுகளில் 60,000 பேரிடம் இவ்வாண்டின் தொடக்கத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை போர்ப்ஸ்.கொம் தளத்தில் காணக் கிடைத்தது. அதில் நாடு வாரியாக உயர் 200, உயர் 100, உயர் 50 மற்றும் உயர் 10 இல் காணப்படும் நிறுவனங்களின் நாடுகளைப் பட்டியலிட்டால்..
- உயர் இருநூறில் முதல் ஐந்து இடங்களை (மொத்தமாக 104 நிறுவனங்கள்)அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான், ரஷ்யா, பிரேசில், சீனா என்பனவும்
குறிப்பிடப்பட்ட 200 நிறுவனங்களில் இந்தியாவில் அமைந்திருப்பவை 7. (சுவிற்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து ஆகியவற்றிற்கும் 7 நிறுவனங்கள்): விப்ரோ, இன்போசிஸ், டாடா, மாருதி உத்யோக், எல்.ஐ.சி, இந்துஸ்தான் லீவர் மற்றும் மகிந்திரா & மகிந்திரா.
தத்தமது நாட்டிலேயே இந்நிறுவனங்கள் மதிப்பிடப்படுகின்றன. மக்கள் தம்நாட்டு நிறுவனங்களில் நம்பகமானவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவைத் தவிர ஏனைய நாடுகளில் கருத்துக்கணிப்பு இணையத்தினூடாகவே நடத்தப்பட்டிருக்கிறது. வயது, பால், கல்வித்தகைமை வேறுபாடின்றி பலதரப்பட்ட (இணையத் தொடர்பாடல் வசதி உள்ளோரிடம்) கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கருத்துக்கணிப்பு மற்றும் தரப்பட்டியல் எவ்வாறு கையாளப்பட்டு முடிவு எட்டப்படுகிறது என அறிய இங்கே பாருங்கள் .
பாட்டொன்று கேட்டேன்..
பிரபாவிடம் அல்ல.(கேட்க வேண்டிய ஒரு பாடல் இருக்கிறதுதான்..) :O)
நான் சொல்ல வந்தது யூரோவிஷன் பாட்டுப்போட்டி. மே 12ம் திகதி போட்டியில் சேர்பியா வென்றுமாயிற்று. எங்களூரில் நேற்றைக்கும் இன்றைக்குமாகத்தான் SBS ஒளிபரப்புகிறது. எனக்குப் பிடித்திருந்த பாடல் 6ம் இடம் கிடைத்த பல்கேரியாவினுடையது. டம் டம்மென்று நல்ல அடி.. நீங்களும் பாருங்களேன்:
(மு.பி.கு: பயணக்கதையை அடுத்த பாகத்தோடு முடிக்கிற எண்ணம், சினேகிதி வேறே ஏன் இன்னும் விசரியாவே இருக்கிறீங்க என்றும் கேட்டுவிட்டா.. கெதியில பதிவுகளோட வாறேன். )
வகை: குழையல் சோறு , திரை
விசரியென்கிற நான்...
விளையாடக் கூப்பிட்ட ராதா ஸ்றீராம், பிரபா, மலைநாடருக்கு நன்றி.. விசர்க்குணங்கள் இருக்குது என்டு தெரிஞ்சுதான் கூப்பிட்டிருக்கிறீங்க போல!! :O))
முதல்ல விளையாட்டுக்கு ஆள் சேர்த்திட்டு வாறன்..
யோகன் (பாரிஸ்)
சினேகிதி
மதி
கலை
அஞ்சலி
தங்களது சித்திர விசித்திர குணாம்சங்களைச் சொல்லுமாறு மேற்கூறியவர்களை இத்தால் அழைக்கிறேன்.
எனக்கு இருக்கிற சில விசித்திர குணம் (என்டு எனக்குப் படுபவை)
5. எதாவதொன்றில் ஆர்வம் வந்தால் அதுவே கதி. எப்படியும் 5- 6 வாரமெடுக்கும் அந்த அலை ஓய! பிறகு இன்னொருமுறை அதிலே ஆர்வம் வரும் வரை திரும்பிப் பார்ப்பதேயில்லை. மாறாத ஆர்வம் சிலவற்றில் இருக்கிறது. உதாரணத்துக்கு:
* ஆவணப்படங்கள் கண்டால் பார்க்கவே வேண்டும். வேற ஒன்றும் அந்த நேரத்தில் ஓடாது. பார்க்க முடியாவிட்டால் பதிவு செய்து பிறகு பார்ப்பேன். தொ.காவில சில நிகழ்ச்சிகளை அவற்றின் தலைப்பு/முடிவு இசைக்காகவே பார்க்க ஆரம்பித்ததும் உண்டு. (Sitting Ducks சலனக் கேலிச்சித்திரம், House தொடர்.. இன்னும் சில நிகழ்ச்சிகள்). தொ.கா. நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு அடிமையாகவே கிடப்பதும் ஒரேயடியாய் அவற்றைப் பார்ப்பதை நிறுத்துவதும் உண்டு.
* அனுப்பும் வாழ்த்து மடல் அனேகமாக நானே செய்ததாய் இருக்கும். இதற்காகவே, காண்கிற பூக்கள், வித்தியாசமான அமைப்புடைய இலைகள் சேகரிப்பேன். பேரங்காடிக்குப் போய் என்னைத் தவற விட்டால் வந்த வழியில் எங்காவது புத்தக/கைவினைப் பொருள் கடை இருக்கிறதா என்று பார்த்து அதற்குள் நுழைந்தால் என்னைக் கண்டு பிடிக்கலாம். அந்தளவு புத்தக/கைவினை வெறி.
4. கோவம் வரும். ஏன் எதுக்கெண்டெல்லாம் இல்லை. சுள்ளென்று எரிந்து விழுவேன். ஆனால் மற்ற நேரங்களில், அமைதியின் உருவமாய் இருப்பவர்களுக்கே கோவம் வரும் சந்தர்ப்பத்தில், எனக்கே ஆச்சரியம் வரும் வகையில் அமைதியாய் பொறுமையாய் பொறுமையின் சிகரம் ஒரு எருமையாய் இருப்பேன். ஆக, கோவம் வரும். ஆனா எப்ப என்டு தெரியாது.
குறிப்பாக எரிச்சல் வருவது மேற்கத்தேய 'பெண்' வரையறையை தங்களுக்குக் கற்பித்துக் கொண்ட பல்கலைக் கழகம்/வேலை செல்லும் இங்கிருக்கும் பெண்களிடம்(அறிவு சார்பாய் இல்லாமல் தோற்றத்தில் அதிக ஈடுபாடு கொள்வது அதைக் கொண்டே மற்றவர்கள் மதிப்பிடுவது என்பதைச் சொல்கிறேன்.). உடைகளுக்கான கடைகளை விட புத்தகக் கடை பிடிக்கும் என்றும் பேருந்தில் நான் சுவர்ப்பூச்சு கொள்கலன்கள், உலக்கை மற்றும் தகரம் கொண்டு போனதையும் சொல்லி (முழுக்க முழுக்க "நான் எனது தேவைக்காக செய்திருக்கிறேன் பார், ஒரு வெட்கமும் இல்லை" என்று காட்ட என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிப்பட்ட தேவைகள் இங்கு 99% பேருக்கு வராது என்பதும் நினைவுக்கு வரும்) அவர்கள் முகம் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்க்க & அவர்களுடன் தர்க்கித்து கற்பிதங்களை உடைக்கப் பிடிக்கும்.
3. சில இடங்களுக்கு முதல் முறையாகப் போனாலும் அவ்விடத்திற்கு முதலும் வந்திருந்த மாதிரித் தோன்றும். நண்பர்களிடம் சொன்னால் போன பிறப்பில் வந்திருப்பாய் என்று கேலி பண்ணுவார்கள். ஏனோ தெரியவில்லை பழைய காலத்து வீடுகள் கட்டிடங்கள் என்பவற்றிற்குப் போனால் அதிகமாகத் தோன்றும். வந்த மாதிரி இருக்கிறது தானே என்று அவ்விடத்தின் உள்ளமைப்புப் பற்றிக் கேட்டால் அம்போ! ஆக வெளியில மட்டும் பார்த்துப் போயிருக்கிறன் போல போன பிறப்பில!!! :O\
2. முந்தினதின் நீட்சியாக யாரைப் பார்த்தாலும் முதல்லே எங்கேயோ கண்ட மாதிரி இருக்கே என்று யோசிப்பது. எப்படியும் இதுவரை வாழ்நாளில் சந்தித்த/பார்த்திருந்த ஒருவருடன் புது முகத்தை ஒப்பிட்டுக் கொள்வது. அப்படி யாரையும் ஒத்திராத முகமா? கண்ணையோ மூக்கையோ காதையோ நெற்றியையோ ஒப்பிடத் தொடங்குவேன்!! புத்தம் புதிதாயே முகம் இருந்தால் மனதில் தேக்கிக் கொள்வேன்.. இன்னொரு ஆளைச் சந்தித்தால்/பார்த்தால் ஒப்பிடுவதற்கு!! :O))
இந்த வியாதி வர வர முற்றுகிறது என்று நினைக்கிறேன்.. வார இறுதியில் சந்தித்த ஒரு வயதுக் குட்டிப் பெண்ணைப் பார்த்து இவளை மாதிரியே யாரைத் தெரியும் என்று யோசித்து, கடைசியில் கண்டு பிடித்தேன்!!!
1. யாரோட கதைச்சாலும் அவங்கட வட்டார வழக்கில/ வேற்று நாடாயிருந்தா அந்த அக்சன்ற்றுடைய ஆங்கிலம் கதைப்பது. மாற்ற வேண்டும் என்டு முயற்சித்திருக்கிறேன். ஆனாலும் கவனிக்காம விட்ட பொழுதொன்றில மூளையும் குரல்வளையும் சதி பண்ணி விடும். சீனாக்காரனிட்டக் கதைச்சா அவன் சொல்லுற மாதிரியே "த்ரீ"க்குப் பதிலா "ட்ரீ/ட்லீ"யும், "ப்ரைட் ரைசு"க்குப் பதிலா "ப்லை லை" யும் தான் என்ட வாயில இருந்து வரும். இதே இத்தாலியனோட என்டா "இட்" "இத்" ஆகிறதும் நடக்கும். வேலையிடத்திலே பல நாடுகளைச் சேர்ந்த ஆட்கள் இருப்பதால் எனக்கும் வசதியாய் அமைந்து விடுகிறது!!(என்ன இதுவரை இந்த ஐரிஷ்/ஸ்கொட்டிஷ்/வெல்ஷ் அக்க்சன்ற்றுகள்தான் வராதாம்.) புதுசு புதுசாய் அக்சன்ற் கற்றுக்கொண்டு வீட்டே போய்/குட்டித்தோழர்களிடம் பேசிக்காட்டுவது பொழுது போக்கு. என் வீட்டு இல்லத்தரசன் யாரோடு பேசினாலும் தனது அக்சன்ற் / 95% இலங்கைத் தமிழிலேயே கதைப்பார். நான் அப்படியில்லைத்தானே.. ஒரு நாள் தமிழக நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த ஒரு (தமிழக)முதியவவுடன் பேசினேன். "உன்னோட வீட்டுக்காரர் பேசறது புரியலே, ஆனா நீ சரியா பேசறே" என்றாரே!!
இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் வந்தது. இந்த விசர் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :O))
தலைப்பில்லாத கதை
ஒரு உண்மைச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு (கதையெழுதும் முயற்சியில்) ஆங்கிலத்தில் எழுதியது. அதிலிருந்து தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். கதைக்குத் தலைப்பு(இதுவரை) இல்லை.
போரில் சம்பூர் அரச படையால் கைப்பற்றப்பட்டதும் கடைக்குப் போன சீலனும் மகள் கவிதாவும் திரும்பி வரும் வரை காத்திருந்து கையில் கிடைத்ததை வாரியெடுத்துக் கொண்டு ஊரோடு சேர்ந்து ஓடின இரண்டாம் நாளே காட்டுக்குள்ளாலே நடந்த மக்களுக்குள் ஆளுக்கொரு பிள்ளையுடன் தொலைந்து போனார்கள் சீலனும் ஆனந்தியும். வீட்டிலிருந்த விதத்துக்கும் காட்டு வாழ்க்கைக்கும் எவ்வளவோ வித்தியாசம். வில்வனுக்கு இவையொன்றும் புரியவில்லை. ஒரு நாள் இரவில் சீலன் திறக்க மாட்டாமல் கண்களை மூடின சில நிமிடங்களில் பக்கத்தில் எங்கேயோ நகர்ந்து நகர்ந்து போய் காஞ்சோன்றிச் செடி பட்டு அரிப்புத் தாங்காமல் அவன் அழுது காட்டையே கலங்கடித்தான். அழுகையை நிற்பாட்ட வாயில் துணியடைய வேண்டி வந்தது.
தூரத்தே கேட்ட வெடிச்சத்தம் ஆனந்தியை எழுப்பிற்று. இன்னும் விடியவில்லை. விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது. சுற்றியிருந்த மரங்களின் வடிவம் கறுப்பாய்த் தெரிந்தது. சில்வண்டுகளும் விட்டு விட்டுக் கச்சேரியைத் தொடர்ந்து கொண்டிருந்தன. எப்போது தூங்கிப் போனோம் என்று நினைத்தவளாய் பக்கத்தில் படுத்திருந்த கவிதாவையும் தங்களைப் போலவே மரங்களுக்குக் கீழே படுத்திருக்கும் மற்றவர்களைப் பார்த்தாள். நாலைந்து நாட்களாக காட்டுக்குள்ளால் நகர்கிற கூட்டம். விடிகாலையில்தான் கொஞ்சமேனும் உறங்கும். நித்திரை எவ்வளவு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. நேற்றைக்கு பாம்புக் கடியில் தன் மகனைத் தொலைத்த தாய் கூட இப்போதைக்கு மகன் இல்லை என்கிற நினைப்பிலிருந்து எவ்வளவு தூரமாய் உறங்குகிறாள். விடியல் சூரியனையும் அவளிடமிருந்து புது அழுகையையும் கொண்டு வரும். நித்திரைதான் திறமான வலிநிவாரணி - அது உடல்சார்ந்ததோ அல்லது மனம் சார்ந்ததோ. பகலில் அத்தனை வேலை வைக்கும் வில்வன் கூட இரவில் அமைதியாக உறங்குவானே என்று தன் மகனைப் பற்றி நினைத்ததும் ஆனந்திக்கு நித்திரை வரவில்லை. சீலன் தன்னைப்போல் பொறுமையாகப் பார்க்க மாட்டானே என்ற எண்ணம் எழுந்து அலைக்கழித்தது.
சீலனுக்கு ஆனந்தியில்லாமல் வில்வனைச் சமாளிப்பது முடியவில்லை. நடந்து களைத்தால் நின்று ஓய்வெடுக்கிற சூழ்நிலையில்லை. வில்வன் திமிறி அழ அழ மற்றவர்களுடன் ஈடு கொடுத்து வில்வனைச் சமாளித்தபடியே வலுக்கட்டாயமாக நடந்தான். இரவுகளில் கொஞ்சம் பரவாயில்லை. நடந்த களையில் படுத்துவிடுவான். ஆனாலும் இடையிடையே எழுந்து பார்த்துக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் ஆத்திரமாய் வரும். வடிகாலுக்கு எங்கே போக? ஆனந்தி இதுவரை எப்படிச் சமாளித்தாள் என்று அதிசயமாக இருந்தது.
விடிந்து பார்த்தால் வில்வனைக் காணவில்லை. வந்தவழியே சுற்றுமுற்றும் ஒருநாள் முழுவதும் தேடினதுதான் மிச்சம். ஆனால் பிரிந்த குடும்பம் 'சீலன், உன்ட மனிசி இந்தா எங்களோடதான் இருக்கு" என்று அவர்கள் ஊர்க் கிழவி ஒருவர் சீலனை அடையாளங் கண்டு கொண்ட தயவால் சேர்ந்தது. மகனைத் தொலைத்த குற்றத்துடன் ஆனந்தியிடம் போய் நின்றான். அவன் விவரஞ் சொன்ன போது வந்த பதற்றமும் அவர்களிருவருமாய் இன்னொரு பகல் முழுதும் தேடி சூடுபட்ட வில்வனின் உடலைக் கண்டெடுத்த நேரம் ஏற்பட்ட வேதனையும் மனவுளைச்சலை அதிகரித்தன. தான் மகனை வெறுத்து "அவன் இல்லாமல் போனால்.." என்று நினைக்கவில்லையே.. அன்றைக்கு ஏதோ அலுப்பில் எண்ணியது உண்மையாகி விட்டதே என்று நினைத்து நினைத்து மறுகினாள் அந்தத் தாய். தான் நிலைகுலைந்தால் ஆனந்திக்கு ஆறுதல் சொல்வது யார் என்று சீலனும், வில்வனில்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க விரும்பாத ஆனந்தியும் அழுகையை மறுதலித்து நின்றனர்.
ஆனாலும் தாய்க்கும் தந்தைக்கும் மகனைக் கவனிக்கிற பளு இல்லாமல் போனது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தபோதிலும் பிள்ளை இறந்ததில் இப்படியெல்லாம் நிம்மதிப்படுகிறோமே என்று குற்றவுணர்வும் அதன் கூடவே வந்தது. ஆனந்திக்கு இருந்ததைப்போலவே சீலனுக்கும் அதே குற்றவுணர்வைத் தந்து திருப்திப்பட்ட அந்த நிம்மதி அவர்கள் அதை வன்மையாக எதிர்த்தொதுக்கியபோதும் மனதில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டது. இரவு வந்து, கவிதா 'இனி தம்பி இல்ல என்னம்மா' என்று அவனுக்காகவே தூக்கிக் கொண்டு வந்த கணிதப் புத்தகத்தைத் தடவியபடி சொன்ன மட்டில் வில்வனுக்காகவா அல்லது தங்களுக்காகவா என்று தெரியாமல் அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்.
வகை: கதை
இரண்டாம் தரிப்பு II
ரெய்ன்(f)பால் நீர்வீழ்ச்சிக்குக் காலையில் போகவென்றிருந்த பயணம் பிற்பகல் இரண்டு/மூன்று மணி போலத்தான் சாத்தியமாயிற்று. ஷாவ்ஹௌசன் (சாருஹாசன் அல்ல) கன்ரோனில் ஜெர்மன் - சுவிஸ் எல்லைக்கருகில் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிதான் ஐரோப்பாவிலேயே பெரிதென்றார்கள். இரண்டு மூன்று வழிகளில் இவ்விடத்தை அடையலாம். இங்கே பாருங்கள்.
விரைவிலேயே பனிமூட்டம் சூழ்ந்துவிட்டதால் நிறைய நேரம் நிற்கவில்லை. நீர்வீழ்ச்சி ஆரம்பிக்குமிடத்திற்கும் ஏறவில்லை. கோடை காலத்திற்தான் செல்லலாம். மேலே ஒரு கோட்டையும் இருக்கிறதாம். படகுச் சவாரி போகலாம், அல்லது நடந்து மலையேறலாம். மலை ஏறுவதற்குமே வெவ்வேறு வழிகளுண்டாம். நாங்கள் அடிவாரத்திற்குப் போனோம். குட்டியொரு பாலமிருக்கிறது. கீழே பார்த்தால் தரை தெரியக்கூடியளவு தெளிந்த நீர். தரைதான் தெரியவில்லை... அவ்வளவிற்கு மீன்கள். சாப்பாட்டுப் புத்தி போகுமா.. எப்பிடிப் பிடிக்கலாம் என்றெல்லாம் ஆராயப்பட்டதுடன் பொரிச்சா சுவையாயிருக்குமென்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. கதையோடவே முடிஞ்சு போச்சு.. செயலிலே இறங்கவில்லை. அத்துடன் தப்பின மீன்கள். :O)
கடந்து அந்தப்பக்கம் கோட்டைக்குப் போனால் ஒரு ஞாபகச் சின்னக் கடையும் (பூட்டியிருந்தது) படகுத் துறையும், ஒரு உணவகமும் இருந்தன. தண்ணீரோ சில்ல்ல்!!. வீரம் காட்டவென்று தண்ணிருக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல் மேலே நின்று படமெடுத்தோம். குளிர்காலத்தில் போவதில் சனமில்லாமல் ஆறுதலாய் இடம் பார்க்கக் கிடைத்தாலும், கோடைகாலத்திலே செய்யக்கூடியதாயிருக்கிற படகுச் சவாரியோ, மலையேறலோ இல்லாமல் போனது வருத்தமே.
இதுவரை இப்படி அழகான இடத்தைப் பனிமூட்டத்திற்கூடாகப் பார்க்கும் சந்தர்ப்பம் படங்களிலும் (கதாநாயகி அறிமுகம்/பாடல்)(இதற்கு நக்கலாக 'அழகிய தீயே'ல் கடைசியில் ஒரு காட்சி வைக்கப்பட்டதல்லவா. இன்னும் சிரித்துக் கொள்வேன் அதை நினைத்து) விளம்பரப் பிரசுரங்களிலும் மட்டுமே கிடைத்தது. படத்தைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஷாவ்ஹௌசனில் படங்கள் வரையப்பட்ட பழங்காலத்து வீடுகளும் இருக்கின்றனவென்று அறியக்கிடைத்தது. செல்லவில்லை. விவரங்கள் கீழேயுள்ள சுட்டிகளிற் கிடைக்கும்.
1. http://www.about.ch/cantons
2. http://www.virtualtourist.com
வின்ரத்தூரிலிருந்து சுவிஸ்ரயிலெடுத்து இரண்டு மணி நேரத்தில் தூன் நகரை வந்தடைந்தோம். போன இடங்களிலெல்லாம் எங்களைச் சாப்பிட வைத்தே அழகு பார்த்தார்கள். தூனில்தான் கொஞ்சமாவது அதிலிருந்து விடுதலை; அடுத்தநாள் நாட்டுக்கோழி இறைச்சியென்று - அதற்குள்ளிருந்த முட்டைகளோட சேர்த்து - பரிமாறும் வரை :O(. சுட்ட மீனும் சலட்டும் சாப்பிட்டுவிட்டு பத்து நிமிட நடையிலுள்ள நகர் மையத்தைப் பார்க்கப்போனோம். நத்தார்ச் சோடனைகள் ஆரம்பித்திருந்தன. அடுத்தநாள் சந்தையாம். கடைகளின் எலும்புக்கூடுகளாய் சில stalls முளைத்திருந்தன. 12ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கிற கோட்டை கண்ணில் பட்டது. அடுத்தநாள் அதைப் பார்க்கப் போகிறதாய் முடிவு. கண்ணிற் பட்ட ஒரு மணிக்கூட்டுக் கடைக்குள் நுழைந்தோம். ஒரு அடி உயரமிருக்கும் ஒரு கடிகாரத்தைக் காட்டி விலை கேட்டோம்.. 20,000 சுவிஸ் பிராங்குகளாம்!!!! அடேயப்பா! கையாலேயே செய்யப்படுவதால் அவ்வளவு விலை.
அடுத்தநாள் மப்பும் மந்தாரமுமாய் விடிந்தது. சுவிஸில் கடைசி நாளென்பதால் மனம் சோர்ந்தும், கோட்டை & இன்னொரு நாடு (அடுத்தநாளாயினும்) பார்க்கப் போகிற உற்சாகமும் கலந்து மனம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. சந்தை & கோட்டையைப் பார்க்கப் போனோம்.
வகை வகையாய் சீஸ். தோற் பொருட்கள், ஆடைகள், நத்தார் அலங்காரங்கள், பூக்கள், காதணி/மாலைகள்/மோதிரங்கள், பிரம்புப் பொருட்கள் என்று பலதும் விற்கும் கடைகள். பிரம்புக் கூடையொன்றை ஒரு சிறு இயந்திரத்தினுதவியுடன் சில நிமிஷங்களிலேயே பின்னுகிறார் கடைக்காரக் கிழவர். அவருக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுகடை. பொன்னிறமாய் சிற்றுருவங்கள். கண் பார்த்ததும் கால் இழுத்துச் சென்றது. தேன் மெழுகாலான மெழுகுதிரிகள். சந்தையிலே கொஞ்சம் சீஸ் வாங்கிச் சாப்பிட்டு கோட்டை நோக்கி நடந்தோம்.
கோட்டையில் கீழ்த்தளத்தில் ஒரு 'சத்திரம்'. கோட்டையின் கீழ்த்தளப்பகுதியில் கொஞ்சத்தை இப்போது கடைகளாக்கி விட்டார்கள். குதிரைகள் ஏறுவதற்கென்று வைத்தவை போலிருந்த படிகளில் ஏறி நடுத்தளம் அடைய ஒரு பீரங்கி வரவேற்றது. அதிலேயே ராசா ராணியாய் முகம் வைத்துப் படமெடுக்க ஒரு ஓவியம். ராசா ராணி (வீரன், காதலி?)யின் முகங்களைத் திறந்து அந்த ஓட்டையிலே எங்கள் திருமுகங்களை வைத்துப் படமெடுக்கலாம். ஒரு சின்ன அருங்காட்சியகமும் இருக்கிறது. நாங்கள் போன அன்றைக்குப் பூட்டு. இன்னும் கொஞ்சம் படியேறிப் போக ராசாவின் சாப்பாட்டறை. இப்பவெல்லாம் விழாக்கள்/விருந்துகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அன்றைக்கும் கதிரை-மேசைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேலை செய்பவர்களை ஒரு knight மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
மேலிருந்து படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு கீழிறங்கினோம். பழைய பாலத்தைப் பார்க்கப் போகிற வழியில் மதிலேறிச்(புத்தி போகாதே!!) சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.
பாலத்தடிக்கு நடந்தோம். தூனுக்கூடாக ஓடும் ஆறு வசந்த காலத்தில் பெருக்கெடுக்குமாம். குளிர்காலத்தில் கொட்டியுள்ள பனியெல்லாம் உருகியோட, ஆறு சந்தை வரை வரும். அதற்கேற்றபடி நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த மதகுகளை(சரியான பிரயோகம்தானா? அல்லது மடை என்று சொல்ல வேண்டுமா?) பொறி கொண்டு இயக்குகிறார்கள். அப்பொறிகள் கொண்டதொரு சிறிய மரப்பாலம் தான் பழைய பாலம். மேற்கூரையில் பாசி படர்ந்து போயிருந்தது. நீர் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. ஒரேயொரு மடைக்கதவைத் திறந்து வைத்திருந்தார்கள் அன்று. ஆற்றில் பாண்/உரொட்டித் துண்டுகளை வீசினால் அன்னங்கள்/நீர்ப்பறவைகள் விரைந்து வருகின்றன. பின்புலமாய்க் கோட்டையும் வேறு கட்டிடங்களும். நடை பயில நல்லதொரு இடம்.
தூனில் பார்க்க இன்னுமொன்றிருக்கிறது. வொக்கர் பனோராமா (Wocher Panorama) எனப்படுகிற சுற்றிவர வரைந்த ஒரு ஓவியம். பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்க்கை பற்றியது. இது குறித்த மேலதிகத் தகவலுக்கு: http://www.thunersee.ch/en
இப்படியெல்லாம் சுற்றிவிட்டு வீட்டே வந்து அடுத்த நாள் பயணத்திற்கு ஆயத்தமானோம்.
ஜேர்மனி. கத்திகளுக்குப் பேர்போன சொலிங்கனில் கால் பதித்தோம். எனக்கே மழை அலுக்குமென்று நான் எதிர்பர்க்கவில்லை. ஜெர்மன் வாசிகளுக்கு hats off. காற்றும் மழையும் ஊசியாக் குத்தின குளிரும்.. அப்பப்பா!!! கொட்டின மழையில் இடம் பார்க்க எங்கே போவது? கடைசியில் ஷ்வேப பான்(schwebe bahn) தான் பராக்குக் காட்டிற்று. வழமையாக் கீழே இருக்கிற தண்டவாளம் இதற்கு மேலே. தொங்கிக் கொண்டு ஓடுகிறது இந்த ரயில். கொஞ்சத் தூரத்துக்கு மேலே ரயிலோட கீழே ஆறோடுகிறது.
(இரவிலெடுத்த படம் தெளிவில்லை என்பதால் விக்கியில் பாருங்கள்.
ஜேர்மனியில் நின்ற இரண்டு நாட்களும் கட்டாய் ஓய்வு போலத்தான். வெளியில் இறங்க முடியவில்லை. குளிர். இங்கிருந்து நோர்வே போகிற திட்டம். சிட்னியிலிருந்து விலை பார்த்த போது 30 யூரோ இருந்த விமானப் பயணச்சீட்டு 100 யூரோக்கும் மேலாலே எகிறியிருந்தது. ஒரு மாதம் முதல் பதிவு செய்வதற்குத்தானாம் அந்தக் குறைந்த விலை. அவசரப் பயணகாரருக்கு தண்டம்தான். சில நாட்கள் முன்னே பின்னே போகக்கூடும் என்று பதிவு செய்யாமல் விட்டதன் விளைவு ஆளுக்கு 100 யூரோக்கும் மேலாகக் கொடுத்து விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டதுதான். விமானச் சீட்டு எடுப்பதானால் 3 - 4 வாரத்திற்கு முன்னரே வாங்குவது உத்தமம்.
இலையுதிர்/வசந்த காலம், பின்னிரவு/அதிகாலைப் பயணம், செவ்வாய்-வியாழக் கிழமைப் பயணம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்தால் மலிவு விலை விமானச்சேவைகளின் பயணச்சீட்டுகளை இன்னும் மலிவாய்ப் பெறலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது முன்பதிவு செய்தல். குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாகவே.
நிறைய நாடுகள் போகிறீர்கள். ஒரே பயணச்சீட்டிலேயே எல்லாத் தரிப்பும் போட்டெடுத்தீர்களேயானால் இலகுவாக இருக்கலாம்; ஆனால் கட்டாயம் விலையாக இருக்கும். நடுக் கட்டங்களை தனிப்பயணங்களாய்க் கருதிப் பயணச் சீட்டு எடுப்பது பணப்பைக்குச் சேதம் விளைவிக்காது. உதாரணமாய் நான் சிட்னி-பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ்-சிட்னி பயணிக்கிறேனென வைத்துக் கொள்வோம். சிட்னி-பரிஸ் & பரிஸ்-சிட்னி மட்டுமே பிரதான சீட்டில் எடுத்துக் கொண்டு, பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ் பயணங்களை விமானம்/பேருந்து/ரயில் என்று விருப்பமான comboவில் போட்டெடுத்துக் கொண்டால் விலை குறைவாக இருக்கும்.
மலிவுவிலை விமானச் சேவை
"இரை" மீட்டல் 3
சாப்பாட்டைப் பத்திக் கதைச்சித்திருந்தனான், நடுவுல உட்டுத்துப் பொயித்தன். குறை நினையாதங்க மனே.
கடற்கரைக்குப் போனாக் கட்டாயம் இரிக்குமெண்டு சொன்ன சாமான் கொத்துரொட்டி. சில ஆக்கள் வீச்சு ரொட்டியெண்டுஞ் சொல்லுறவங்க. என்ன சாமான் என்டு விளக்கத் தேவல்லத்தானே... உருட்டி வைச்சிரிக்கிற மாவை நாலு சுழட்டுச் சுழட்டி விசுக்கினா விரிஞ்சி வாறத்த 'டங்கர டங்கர'யெண்டு போட்டிருக்கிற பாட்டுக்கு ஏத்த ஒரு தாளத்துக்குக் கோவா, முட்டை, இறைச்சி, வெங்காயம், பச்சக்கொச்சிக்கா எல்லாம் போட்டு கொத்தின ரொட்டி. என்னதான் களையெண்டாலும் அந்தப்பாட்டுக்கும் கொத்துரொட்டித் தாளத்துக்கும் கால் சும்மா தானா ஒரு ஆட்டம் போடப்பாக்கும். கவனமா இரிக்கோணும். சாப்பாட்டுப் பேப்பரில சுத்தி பிறகு பேப்பரில சுத்தித் தருவாங்க. சாப்பாட்டைக் கட்டுறதே தனிக்கலை. எவ்வளவுதான் முயற்சிச்சாலும் கடசில சொருகிறத்துக்கு எனக்கெண்டா பொக்கற் மாரி இரிக்கிறதேல்ல.
சாப்பாடுப் பார்சலப் பத்திக் கதைக்கக்குள்ளதான் ட்ரெயினில போகக்குள்ள கொண்டு போற சாப்பாட்டு ஞாவகம் வருது. அநேகமா இடியப்பப் பிரட்டலாத்தான் இரிக்கிற. பயணத்தண்டைக்கு விடிய ஒழும்பி இடியப்பம் புழிஞ்சி பிச்சி பிரட்டுவாங்க. ஆனா முட்டையோட நின்டிரும். இறைச்சி/மீனெல்லாம் பாவிக்கிறல்ல. அதைச் சிந்தாமக் கொள்ளாம மடில வச்சிச் சாப்பிடோணும். இல்லாட்டி பாண்/பணிஸ். முதலை பணிஸ்தான் பிள்ளையள் விரும்பித் தின்னிற. இல்லாட்டி கிறீம் பணிஸ். இப்ப இருக்கிற சீனி consciousness அப்ப எங்க கிடந்த!! [பாண்/பணிசுகள் சாப்பிடக்குள்ள வடிவா ஒரு பரிசோதனையும் செய்யலாம். தொடர்ந்து ஒரு ரெண்டு மூண்டு கிழமைக்கு சாப்பிட்டா வயிறு ஊதும். சாப்பிடல்லண்டா வயிறு குறைஞ்சிரும்.]
இந்தக் கொத்துரொட்டிய சும்மா வழிக்கடையில வாங்கிச் சாப்பிடல்லாம்.. அந்த மாரி இரிக்கும். [ருசியே செய்யிறவன்ட வேர்வை கலக்கிறதிலதான் வருது என்டு அண்ணா சொன்னாச் சரி, நமக்கு வாய்க்கால சாப்பாடு இறங்கா. "புள்ளைய ஏன் அரியண்டப் படுத்தா" என்டு வாங்கிக் கட்டுவாரு. என்டத்தையும் பங்கு போட்டுத் தின்றதான்.] கொழும்பில நல்லம் என்டா அது சரியற்காரன்ட(Chariot) கொத்துரொட்டிதான். நல்லாச் செய்திரிப்பான். விலையும் பரவால்ல. எங்கயோ கொட்டாஞ்சேனை/மருதானை/கோட்டைப் பக்கம் போனாலும் அண்ணாப்பிள்ளையர் வாங்கித்து வருவேர். அதுவும் நல்லா இரிக்கிற. என்ன கடையெண்டு எனக்குத் தெரியா.
என்னதான் கொத்துரொட்டியத் திண்டாலும், பசியெண்டா முதல்ல என்ன ஞாவகம் வரும்? சோறும் கறியும் தானே? [நமக்கென்ன பஸ்ற்றாவும் நூடுல்சுப்பும் அப்பெங்க தெரிஞ்ச?அதென்னண்டு தெரியா இனி இல்லண்ட பசி வந்தா நாம ஏன் சாப்பிட லேசான, உடன வயித்த நிறப்பிற சாப்பாட்டத் தேடுற?] மத்தியானச் சாப்பாட்டுக்கு ரெண்டிடம். ஒன்டு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள. மற்றது கொள்ளுப்பிட்டில க்றீன் கபின்/பகோடா(Pagoda. பக்கோடா இல்ல). ஒரு சிங்கள ஊரில போய் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டா எப்பிடியான கறி இரிக்குமோ அப்பிடியான சாப்பாடு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள இருக்கிற கடையில. கடையிர பேர்தான் மறந்துத்தன். விலாசா கிச்சனோ என்னயோ. எனக்கு ஞாவகமா போஞ்சி, வாழப்பூ, கறணக் கிழங்கு(சமைச்சொழியும் மட்டும் வெட்டினாளுக்கு கை கடிக்கும்), மரவள்ளிக்கிழங்கு, பிலாக்கா, பிஞ்சுப் பிலாக்கா (பொலொஸ்),கோழிறச்சி, மீன்/கணவா/றால் குழம்பு/ பொரியல்,கத்தரிக்கா, வெண்டிக்கா, கரவில(பீர்க்கங்கா என்டு நினைக்கன்) சீனிசம்பல், தேங்காப்பூ சம்பல், சட்னி,லீக்ஸ், கீரை ஏதாவது என்டு நிறையக் கறி இரிக்கும். விருப்பமான சோறு - சிவப்பு, வெள்ளை - கேட்டெடுக்கல்லாம். கறியளக் காட்டக் காட்ட போட்டுத்தருவாங்க. இலையிலதான் சாப்பாடு போடுவாங்க. இலைய வட்டில்ல வச்சித் தருவாங்க. அத நாம பிறகு கரண்டி/முள்ளுக்கரண்டியால சாப்பிடுற. :O)
அங்க அப்பிடியெண்டா கிறீன் கபினில நீங்க போய் நிண்டு எடுத்து வரோணும். என்ன கறி மாறினாலும் இவனிட்ட கட்டாயம் நெத்தலிக் கருவாட்டுப் பொரியலும் பப்படமும் தேங்காப்பூச் சம்பலும் சட்னியும் பருப்பும் கீரையும் இருக்கும். இருந்து சாப்பிடுறதுக்கு நல்ல தோதான இடம். வெள்ளை உடுப்புப் போட்ட waiter/server. அரைவட்டமா இருக்கை (சுவரோட கட்டிச் சீமெந்து போட்டது) போட்ட வட்ட மேசை நாலைஞ்சு. (மற்றக் கதிர மேசையளும் இரிந்ததான்..) பின்னுக்கு சுவரில பழங்காலத்திய முறையில கீறின/அச்செடுத்த ஓவியம். நல்ல நிழலா இருக்கும். பக்கத்தால காலிவீதி கிடக்கெண்டு மறந்தே பொய்த்திரும். பிறகு சாப்பிட ஐஸ்கிறீம், வட்டிலப்பம், பழக் கலவை இல்லாட்டி தயிரும் கித்துள் பாணியும்.
கித்துள் பாணியப்பற்றிச் சொல்லோணும். நல்ல இனிப்பான பாணி. நான் முதல் இதத் தென்ன மரத்திலருந்துதான் எடுக்கிறண்டு நினைச்சித்திருந்த. அப்பிடியில்ல. கித்துள் (Caryota Urens) என்டே ஒரு மரங் கிடக்கு.
Kingdom Plantae - Plants
Subkingdom Tracheobionta - Vascular plants
Superdivision Spermatophyta - Seed plants
Division Magnoliophyta - Flowering plants
Class Liliopsida - Monocotyledons
Subclass - Arecidae
Order - Arecales
Family - Arecaceae (Palm family)
Genus - Caryota L. (fishtail palm)
Species - Caryota urens L. (jaggery palm)
தென்னையிட விட்டத்தில மூண்டில ஒரு பங்குக்குத்தான் வரும். 15 - 20m உய..ரமா வளரும். கொண்ட பனை(கொண்டைப் பனை?), கூன்டல்பனை(கூடல் பனையெண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.. அதா இதெண்டு தெரியல்ல), திப்பிலி என்டு தமிழில சொல்லுறதாமெண்டு இந்தப்பக்கம் சொல்லுது.
"This and other large Caryota species are sources of sago, fibre and toddy (fermented sap). The genus is the only one within the palm family with bi-pinnate (doubly divided) leaves. Caryotas are monocarpic, that is, when the flowering stem has finished fruiting it dies. The fruit is filled with crystals that cause severe irritation and should not be handled" - என்டுது இந்த ஊர் Royal Botanic Gardens தளம். கிட்டத்தான் கிடக்கு.. போய்ப் படம் எடுத்து வந்து இணைக்கிறன்.
கித்துள் பாணி, கித்துள் மரத்திட பூவை (பாளை?) வெட்டி எடுக்கிற. பாளையிட அடில வெட்டி மூலிகைக் கலவை கொஞ்சம் பூசிற. இப்பிடிப் பூசிறது பாளை முதிராமத் தடுக்கும். ரெண்டு நாளைக்குப் பிறகு பாளையச் சேத்துக் கட்டி நுனிகள வெட்டிருவாங்க. கீழ ஒரு பானைய/முட்டிய வைச்சா பிறகென்ன, பாணி அறுவடைதான். நேரடியா மரத்திலருந்து வாறதால அப்பிடியே சத்தும் இரிக்கும். இப்ப என்னண்டா நிறைய விக்கோணும் என்டதால சீனியக் கலந்தும் விக்கிறாங்க. வாங்கக்குள்ள பாத்து வாங்கோணும். (வாயில வைக்க மட்டும் எப்பிடி வித்தியாசம் கண்டு பிடிக்கிறண்டு எனக்குத் தெரியா). கித்துள் பாணியைக் காய்ச்சினா சக்கரை. பாணில மாதிரியே இதிலயும் சீனி கலக்கிறாங்களாம் இப்ப. சக்கரை வாங்கக்குள்ள கடும் நிறமாயும் மென்மையாவும் இருக்கிறதுதான் நல்ல சக்கரை. சீனி போட்ட சக்கரை நிறங் குறைஞ்சி கடிக்க/உடைக்க ஒண்ணாம கடினமா இரிக்கும். அத வாங்கப்படா!
தென்னையிலிருந்து கள்ளு எடுக்கிற மாதிரியே கித்துள் மரத்திலருந்து கள்ளும், தென்னந் தும்பிலருந்து கயிறு செய்யிறது மாதிரி கயிறும் செய்வாங்களாம். கயிறு மட்டுமில்ல, கூடைகள், தூரிகை செய்யக்கூடப் பாவிக்கிற. மரமும் நல்ல உறுதியா இருக்கிறவடிவா வீட்டுச் சாமான்/உத்திரம் செய்றவங்க.
எனக்குத் தெரிஞ்ச கித்துள் பாணிக் கதை இவளவுந்தான். ஆருக்கும் மேலதிக விவரம்/நான் சொன்னதில திருந்தங்கள் தெரிஞ்சாச் சொல்லுங்க.
அ.சொ.பொ.வி:
-----------------------
பச்சக் கொச்சிக்கா - பச்சை மிளகாய்
கடிக்க/உடைக்க ஒண்ணாம - கடிக்க/உடைக்க முடியாமல்
பாண் - bread
பணிஸ் - bun
வாயில வைக்க மட்டும் - வாயில் வைக்கும் வரை
வகை: இயற்கை , கும்பகர்ணனுக்குத் தங்கச்சி
இரண்டாம் தரிப்பு
-:சற்றே நீண்ட இடுகை, பஞ்சி பாராமல் எழுதச் சொல்லி பிரபா சொன்னதால் :O) :-
பரீ(நன்றி சிறி அண்ணா)யிலிருந்து அடுத்த நாடு நோக்கின பயணம். இந்தப்பயணம் ரயிலில். [ஐரோப்பாவில் ரயில், பேருந்து மூலம் பயணம் செய்வது பிரசித்தம். ஒவ்வொரு பிரதான நகரத்திலிருந்தும் இன்னொரு நகரத்திற்கு ரயிலோ பேருந்தோ செல்கிறது. பயன்படக்கூடிய சுட்டிகள் கீழே.]
ரயிலைப் பற்றி் - மிகவும் வசதியான இருக்கைகள். துப்பரவான கழிவறைகள்.பயணப்பொதிகளை வைப்பதற்கென்றே ஒவ்வொரு பெட்டியின் முன் பின் பகுதிகளில் தனியிடம். இரண்டு எதிரெதிர் இருக்கைகளுக்கு நடுவே ஒரு மேசை.(மடிக்கக்கூடியதாக இருக்கும்). முன்பதிவு செய்து வைத்திருந்தது TGVயில். இது ஒரு கடுகதி ரயில். பயணம் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில்/குறிப்பிட்ட பகுதிகளில் பயணிகளை உட்கார்ந்திருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுமாம். வண்டி மிக வேகமாகப் போவதால் சமநிலை தவறக்கூடும் என்பதாலேயே இப்படிச் சொல்லப்படுகிறது என்று எனக்குச் சொல்லப்பட்டது. நின்று பார்க்கத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
கார் டு நோட் (Gare du Nord)இற்கு நாங்கள் போக்குவரத்து நெரிசலுக்கூடாக நீந்திப் போய்ச் சேர்ந்த போது நேரம் காலை 7.42. ரயிலோ 7.45இற்கு. சின்னையா சொல்லச் சொல்ல காலை ஆறரை வரை முதல்நாள் கடையில் எங்களுக்குத் தேவையானதைக் கேட்கத் தெரியாமல், எங்கள் நிறத்தில் தெரிந்த ஒருவரைப் பிடித்ததில் அவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்து தமிழும் தெரிந்தவராகி இருந்து விட்ட பாவத்தில், அவருதவியால் வாங்கிக் கொண்டு வந்த சிம் மை செல்பேசியில் போட்டு நோண்டிக்கொண்டிருந்துவிட்டுக் குளிக்கப்போன கண்ணன் வாங்கின திட்டை நான் திரும்ப வாங்கவேண்டும் என்பதால் அவரை மட்டும் காருக்குள் விட்டுவிட்டு அடுத்தாய் வண்டி எத்தனைக்கு என்று பார்க்க கண்ணன், தம்பியுடன் சேர்ந்து நானும் ஓடினேன்.
பயணச் சீட்டு விற்பனைப் பகுதிக்குப் போனால், அங்கிருந்த பெண் சொன்னதின் படி அடுத்த TGV அன்று மாலைதான். வேறென்ன வண்டியுள்ளது என்று விசாரித்தால், SNCF இருக்கிறது. ஆனால் பயண நேரம் அதிகம் என்றார். சரியென்று அதற்குரிய சீட்டை வாங்கினால், அது TGVயினதை விட 40யூரோ குறைய என்று சொல்லி அந்தக் காசை மீளத் தந்தார். ஆனால் 9.40க்கு ரயில் புறப்படுவதோ கார் லெ எஸ்ற்றிலிருந்து(Gare l'est). அங்கே போய் ரயிலேறினோம். இரண்டு மணித்தியாலங்களின் பின் கண்விழித்தேன். பிரான்சின் நகர்ப்புறம் மறைந்து புல்வெளிகள் நிறைந்த நாட்டுப்புறம் கண்ணில் பட்டது.
சில மணித்தியாலங்கள் போனதும் ரயில் சுவிஸிற்குள் நுழைந்தது. எனக்கு எந்தப் பக்கம் படமெடுப்பதென்றே தெரியவில்லை..அவ்வளவு அழகு. இந்தப்பக்கம் பார்த்தால் பச்ச்ச்சைப் புல்வெளிகள், அந்தப்பக்கம் மலைகள். இரண்டு பக்கங்களிலும் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று இலையுதிர்காலம் நிறந்தீட்டின இலைகளுடன் மரங்கள். கோடையிலும் பார்க்க இலையுதிர் காலத்திற்றான் இந்நாடு அழகாயிருக்கும் என்று தோன்றுகிறது. சிறு நீர்நிலைகளும் அவற்றில் மீன்பிடிப்பவர்களும் அவர்கள் வசித்திருக்ககூடிய பண்ணை வீடுகளும் எங்களைக் கடந்து போன காட்சிகளுள் அடங்கும்.
பாசல் நகரை அடைந்து அடுத்த ரயிலேறி - சுங்க அதிகாரிகள்/காவலர் எங்கிருந்து வருகிறோம், எங்கு நிற்போம், எவ்வளவு நாட்களுக்கு என்று கேட்டுவிட்டு உள்ளே சுவிசுக்குள்ளே விடுகிறார்கள் - வின்ரத்தூர் நகரை அடைந்தோம். தங்கியிருந்த வீட்டில் சுவிஸிலேயே பிறந்து வளர்ந்த இரு சிறு பெண்கள். நல்ல்ல்லாவே தமிழ் கதைக்கிறார்கள்/எழுதுகிறார்கள்
ஒரு பாலர் பாடசாலைக்கு அடுத்த நாள் போனோம். வகுப்பில் எத்தனை பிள்ளைகளோ அத்தனை பேரின் தாய்மொழியிலும் 'வணக்கம்' என்று சொல்லி ஒரு வரவேற்புப் பாடல் ஒவ்வொருநாட் காலையிலும் படிக்கப்படுமாம். நல்லம் என்ன? பாலர் பாடசாலைகளில் கரல்ஸ் பாடிப் போகிற வழக்கம் இருக்கிறது. Turnip கிழங்கினை சிறு மூடியுள்ள ஒரு சட்டி போல வெட்டிக் கொண்ட பின் - கிண்டியெடுத்த கிழங்கின் உள்ளீடு அவித்து ஒரு சூப் மாதிரிச் செய்யப்பட்டு ஊர்வலம் போவதற்கு முதல் நாள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் - அதற்குள் மெழுகுதிரி வைத்து ஊர்வலம் போவார்கள்.. வீடு வீடாய் கரல் பாடிக் கொண்டு. அநேகமானோர் இனிப்புகள் பரிசளிப்பார்களாம். நாங்கள் போன அன்று இருவரும் ஊர்வலம் போய் வந்திருந்தார்கள்.
போய் நின்ற நாள் முதல் அங்கத்தேய வெண்ணெய்க்கட்டிகளையும் சொக்கிளேற்றையும் ஒரு கை பார்த்தோம். :O) பிரபல காப்புறுதி நிறுவனமான வின்ரத்தூர் க்ரூப் இந்நகரத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. வின்ரத்தூரின் பிரபல தேவாலயத்தைப் பார்க்கக் கிடைக்கவில்லை. ஆனால் புனித தந்தையர் பேதுரு+பவுலின் ஆலயத்தைப் போய்ப் பார்த்தேன். நடந்து போகக்கூடிய தூரத்தில் இருந்ததும் தனி ஆராய்ச்சிக்குக் காரணம். ஆனால் கமரா பிழையான தெரிவில் விடப்பட்டிருந்ததால் அநேகமான படங்கள் தெளிவாக வரவில்லை. :O
அமைதியான ஆலயத்தைச் சுத்தஞ் செய்தபடி ஒருவர். சுவர் முழுதும் விவிலியத்துக் கதைகள் சொல்லும் ஓவியங்கள். அத்துடன் வேலைப்பாடுடைய உட்கூரை. சிறு உருவங்கள் (புனிதர்களாயிருக்கலாம்) அமைந்த stained glass windows. விட்டு வரவே மனமில்லை. நீர்வீழ்ச்சி பார்க்கப் போவதென்றிருந்தபடியால் மனமில்லாமல் திரும்பினேன்.
சுட்டிகள்:
www.eurorailways.com
www.raileurope.com
www.eurostar.com
www.busabout.com
www.eurolines.com
www.europeforvisitors.com
முதல் தரிப்பு -II
அடுத்ததாய்ப் பார்க்கப்போன இடம் - வர்சாய் அரண்மனை. சொல்லத்தெரியாமல் வர்சாய்ல்ஸ் என்று வாசித்துக் கொண்டு திரிந்தேன். வரைந்து நிறந் தீட்டின மாதிரிப் புற்தரை. இதைப் பராமரிக்க எவ்வளவு மினக்கட வேணும்! மூன்று பக்கங்களிலும் அரண்மனைத் தோட்டங்கள்.
பரிசிலிருந்து, தனது அரசியல் குழப்பங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டிருக்கவென்று வந்து தங்கியிருந்தானாம் 14ம் லூயி மன்னன். அப்படியே படிப்படியாகக் கட்டிக் கட்டி 2600+ அறைகளும் பென்னாம் பெரிய தோட்டங்களுமுள்ளதாக இந்த அரண்மனை உருவெடுத்திருக்கிறது.
நாங்கள் போன நாளன்று அரசியரின் அறைகளிலொரு பகுதி திறந்திருந்தது. அதன் முகப்பில் தங்க முலாம் பூசிய கடிகாரம். விட்டால் எல்லவற்றுக்குமே தங்க முலாம் பூசியிருப்பார்கள் போல! காட்சிக்கு விக்ரொறீ, அடிலேய்ட் என்ற இருவர் பாவித்த பொருட்கள் சில இருந்தன. அவர்களின் பாவனையிலிருந்த பெரிய ஓவியங்கள், கட்டில், பியானோ, புத்தக அலுமாரி, கண்ணாடி என்று பலவித பொருட்கள் காட்சிக்கு வைத்திருந்திருந்தார்கள்.
குளிர் காலமென்றாலும் கூட்டம். கோடைக்கு நினைத்தும் பார்க்கேலாது என்று எண்ணுகிறேன்.
தோட்டங்களில் வேலை நடந்து கொண்டிருந்தது. சிலைகளை மூடியிருந்தார்கள். பூச்சாடிகள் இரண்டு ஆளுயரமாய் . அவற்றையும் மூடியிருந்தார்கள். குளிர்காலத்தில் பனி படிந்து/தங்கி விடக்கூடும் என்பதால்.
பெரிய பெரிய நிலைகளும் அவற்றைச் சுற்றிச் சிலைகளும் என்று பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது.
குட்டிக் குளங்களுக்கு நடுவே சிலைகள். கால் நோகும் வரை தோட்டத்தில் உலாவினதில், மரத்தாசை பிடித்த எனக்கு நிறையப் படங்கள் எடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.
இலையுதிர் காலம்/குளிர்காலம் என்றதால் சில மரங்கள் மொட்டையாயும், சில நிறம் நிறமாய் இலைகள் கொண்டும்.. படமெடுத்துத் தீரவில்லை!
போன இரண்டாம் நாடு பற்றி அடுத்த பதிவாய்ப் போடுகிறேன்.
முதல் தரிப்பு
முதலாவதாய்ப் போன நாடு பிரான்ஸ். போதவே போதாத ஆறே நாட்கள். படிகளும் croissantsம் நிறைந்த பரிஸ். அவசரத்துக்குப் போவதானால் கூட 30சதம் கொடுத்தாக வேண்டும் பொதுவிடங்களில். இப்படியே உழைத்து பெரும்பணக்காரராய்விடலாம் போல! பரிசில் கண்ட இன்னுமொன்று எல்லா வீட்டுக்கும் ஒரு குட்ட்ட்டி பலகணி இருப்பதுதான். ஆட்கள் நிற்கமுடியாது.. ஆனால் பூந்தொட்டிகள் உட்காரலாம்.
வழமையாக எல்லாரும் பார்கிற ஐபல் கோபுரம் பார்க்கப் போனோம். எனக்குத் தேவையாயிருந்த மாதிரி - நான் கோபுரத்தின் உச்சியைத் தொடுவது போல - படமெடுக்க என்னோடு சேர்ந்து வந்த இரண்டு படக்காரர்களாலேயும் முடியவில்லை. தடை செய்யப்பட்டிருந்தாலும், வளையத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் உலோகத்தாலான கோபுரச் சிற்றுருவங்களை 'சல் சல்'லென்றுபடி ஆட்டியபடி வழி மறிக்கும் சிறு வியாபாரிகள் நிறைந்திருந்தார்கள். பழங்காலத்தைய சிற்பங்கள்/சிலைகள்.
சுழித்துக் கொண்டோடும் 'சுகந்தமான' செய்ன் நதியைக் கடந்து போய் தொடர்ந்து வளைக்கும் 'ஸ' போல நெளிந்த வரிசையில் நுழைவுச் சீட்டு வாங்க சேர்ந்து கொண்டோம். நகர்ந்து போன வரிசையில் திடீரென ஆங்கிலம் கேட்டது - அதுவும் ஒஸி வழக்கில். எனக்கா இனியில்லையென்ற மகிழ்ச்சி. போன இரண்டு நாட்களுக்குள் பொறுக்கின 'bon jour', 'au revoir' 'merci', 'madamme', 'monsieur' என்பவற்றை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாத ஆளுக்கு தெரிஞ்ச இங்கிலிபீசைக் கேட்டால் சொல்லவும் வேணுமா!! ஹொக்கிப் போட்டியொன்றுக்காக வந்திருந்த 4 பெண்கள். நல்லா அளவளாவி, போட்டிக்கு ஊக்கப்படுத்தி விடைபெற்றோம்.
கோபுரத்திலே மேலே ஏறினால் படமெடுக்க பொக்கற்றிலிருந்து கையை எடுக்க முடியவில்லை. குளிரோ குளிர். ஆனால் என்ன காட்சி.. நெப்போலியன் கோட்டை/அணையாவிளக்கு,
வெள்ளைத் தேவாலயம், லூயி மன்னனின் கோட்டை எல்லாம் தெரிந்தன.
[பரிசில் நடந்து கொண்டே இருக்கலாம் போல. cobble stone பாதைகளில் பழங்காலத்தைய வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசியபடி, அகலமான பாதைகளைச் செப்பனிட்டவர்களைப்பற்றிச் சிந்தித்தபடி நடந்தோம். வழமையாய்ப் பார்க்கும் நிறங்களிலான வானம்தான்.. பார்க்க ஆசையாய் இருந்தது. வீசும் காற்றிலே கிளையிலிருந்து தரைக்கு இடம் மாறும் இலைகள்; தரையிலேயே இடம் மாறித்திரியும் சருகுகள்(ஆனால் நாளைக்காலையில் தெருவில் அவை இரா). தொடர்ந்து நடக்கச் சொன்ன இருபுறமும் மரம் வளர்த்த தெருக்கள். நடப்பதற்காகவே இன்னொருமுறை போக வேண்டும்.முதல் முதலாய்ப் போகும் ஆர்வத்துடன்.]
அன்றைகே வெள்ளைத் தேவாலயமும் போகக் கிடைத்தது. நகரின் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது. அதன் பெயர்:La Basilique du Sacré Coeur.
வெள்ளைக் கட்டிடடமென்பதால் 'வெள்ளைத் தேவாலய'மாக்கி விட்டார்கள். வழமையாய் என்னை நிற்கச் செய்யும் stained glass windows. என்னதொரு கூரை.. 25 - 30 ஆள் உயரமிருக்கும். உள்ளுக்குள்ளே சலன/ஒளிப்படமெடுக்க அனுமதியில்லை. நிறைய ஓவியங்கள். கூரையில் பென்னாம்பெரியதொரு ஓவியம். பிறரால் உருக வைகப்படவென்றே மெழுகுதிரிகள்.
ஆலயத்தின் மாதிரி உருவைச் செய்து வைத்து "உங்கள் ஆலயத்தின் தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் உதவுங்கள்" என்று தமிழ் உட்பட 15 - 20 மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். எல்லாம் தாண்டி வந்ததும் ஒரு ஒரு வேண்டுதல்/பிரார்த்தனைப் புத்தகம். தமிழில் கூட இருந்தது - கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்லி, பிள்ளைக்கு நடக்கவிருக்கிற திருமணத்திற்கு ஆசி வேண்டி என்று பலதரப்பட்ட வேண்டல்கள், இறைஞ்சல்கள். மனதில் சொல்லக்கூடியதை 'வணக்கம் கடவுளே' என்று நானும் தாளையும் மையையும் வீணாக்கி வெளியேறிய பிறகுதான் ஞாபகம் வந்தது ஏனையோர் போட்டதுபோல முகவரி போடாமல் வந்தது. அடடா..யார் வணக்கம் சொன்னதென்று யேசு யோசித்திருப்பாரோ?