நீண்டதாகத் தோன்றும் நாள் எது? _ _ _ _ _கக் காத்திருப்பது (இடைவெளியை உங்களுக்குப் பொருத்தமானதை வைச்சு நிரப்பணும்) என்டு சொல்லாதீங்க. ஏனெண்டா நான் அதைப் பற்றிக் கேட்க இல்ல. ஒரு கிழமையில நீண்ட நாள் என்று நீங்க உணருற நாளைப் பற்றிக் கேட்கிறன்.
வெள்ளிக் கிழமை சனி-ஞாயிறை எதிர்பார்ப்பதிலயே கழிந்து விடுகிறது. வியாழக்கிழமையில அட வாரஇறுதிக்கு இன்னும் ஒரு நாள்தானே என்டு உற்சாகம் வந்து விடும். புதன்கிழமை வந்தால் 'அப்பாடா! கிழமையின் நடுப்பகுதி தாண்டியாச்சு' என்றொரு ஆசுவாசம்.
திங்கள் இருக்குதே, அதுதான் ஒரு கிழமையிலயே மிகவும் விரைவில போவது (எனக்கு). சரி சரி.. வாரஇறுதிக்கு அடுத்ததா. வாரஇறுதிக்கு இறக்கை கட்டி விட்டிருக்கு அல்லது கால்ல சக்கரம் பூட்டியிருக்கு. அல்லது இரண்டுமே. எப்பிடி வருது எப்பிடிப் போகுது என்று தெரியாமல் பறந்தோடுகிற 2 நாட்கள். கொஞ்சம் நின்டு நிதானிச்சுப் போகச் சொல்லணும்.. போகாட்டிக் கூடப் பரவால்ல இல்லையா? :O)
விழாக்காலம் தானே.. நத்தார் வந்துது 4 நாள் வார இறுதியோட. ஆங்கிலப் புத்தாண்டு வந்துது 3 நாள் வார இறுதியோட. இப்பிடியெல்லாம் நீண்ட வாரஇறுதியில ஆறுதலா இருந்திட்டு இன்னும் 12 கிழமை காத்திருக்க வேணும் அடுத்த நீண்ட வார இறுதிக்கு. என்ன கொடுமை இது கலண்டர்!
ஐந்து நாள் வேலை செய்தால் மூன்று நாள் வார இறுதியாக இருக்க வேண்டும். எவ்வளவு நல்லா இருக்கும். (அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில 4 நாள் வேலை 3 நாள் வார இறுதியென்று கொஞ்ச நாள் செயல்படுத்திப் பாத்தார்களாம். ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் வேலை. உற்பத்தித் திறன் அதிகரித்ததாம். பலருக்கும் திட்டம் பிடித்தும் இருந்ததாம். எனக்கும் பிடித்துத்தானிருக்கு.) இப்ப இருக்கிற 2 நாள் நடைமுறையில, சனிக்கிழமை கொஞ்சம் வீட்டு வேலை செய்து (அல்லது செய்ற மாதிரிப் பாவனை பண்ணி) எங்கேயும் போய் வந்தால் ஞாயிறு 'என்னைப்பார்' என்று ஓடி வந்து விடுகிறது. கொஞ்சம் ஆறிக் கீறி என்னவும் செய்வமெண்டா டாட்டா பாய்பாய் ச்சீரியோ என்டுட்டு ஞாயிறும் தப்பியோடின சனிக்கிழமையைப் பிடிக்க ஓடிடும். பிறகென்ன நீலமான (எழுத்துப் பிழையில்லை) திங்கள். ஆனா நீளம் தெரியாத் திங்கள்.
வேலைக்குப் போகிற நாட்களில் இந்த செவ்வாய் இருக்கே.. அது தன்ட செவ்வாயாலே ("உனக்கு இருக்குடீ" என்டு) எங்களை (என்னைப்) பார்த்துச் சிரிக்கிறது போலும். திங்கள் காலையில் 8.30 மணிக்கு ஒரு வேலை ஆரம்பித்து முடித்து நிமிர்ந்தால் எப்படியும் 10மணிக்குக் குறையாது. அதே வேலையை செவ்வாயன்று செய்து பாருங்கள்.. ஒன்பதேகால் கூட ஆகியிருக்காது. உண்மையாத்தான். நகருதா என்று அடிக்கடி கூர்ந்து பார்க்க வைக்கிற மணிக்கூடு செவ்வாய்க்கிழமைக்கே சொந்தம். நல்ல வேளை இந்த மாதம் எஞ்சியிருக்கிற பொது விடுமுறையான அவுஸ்திரேலியா தினம் செவ்வாய்க் கிழமை வருகிறது. நீண்ட வாரஇறுதி இல்லாதது கவலைதான்.. ஆனால் செவ்வாய் வேலை இல்லையென்பது அந்தக் கவலையை ஈடு செய்துவிடுகிறது. செவ்வாய்க்கிழமைகள் எத்தனை மணித்தியாலங்களைக் கொண்டவை? கட்டாயம் 24க்கும் கூடவாகத்தான் இருக்க வேண்டும்.
செவ்வாய்க் கிழமைகளை தேசிய வேலை செய்யாத நாளென்று அறிவிக்க வேணும். "ஹலோ, மிஸ்டர். கெவின் ரட், திஸ் இஸ் ஷ்ரேயா ஸ்பீக்கிங்..."