ரயில் வாசம்

இன்றைக்கு ரீடரில் வாசிக்கவென்று தொட்ட அனைத்தும் ஏதோவொரு விதத்தில் ரயிலையோ அல்லது ரயில் நிலையத்தையோ பேசின.

முதலில் பார்த்தது "இவள் என்பது பெயர்ச்சொல்" . அதில் காட்டியிருந்த ரயில் நிலையத்துப் படத்தைப் பார்த்ததும் எனக்குள் ஞாபகம் வரக்கூடிய ஒரே ரயில் நிலையமும் அதன் படியே வந்ததும் ஏறாவூர் ரயில் நிலையமே. (அதைத்தவிர இன்னொரு ஊரென்று நினைத்தால் ரயில் நிலையத்தோடு வருவது எம்மியின் தொரனாகொடவாகத்தானிருக்கும்.) எனது ஞாபகத்தில் இருக்கிற ஏறாவூர் ரயில் நிலையத்திற்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருந்தது அந்தப் படம். எனக்கு ஞாபகமிருந்து படத்தில் இல்லாமலிருந்தது தென்னோலையால் கட்டப்பட்ட தயிர்முட்டிகளே. விளையாடுவதற்குப் பொருத்தமேயில்லாத பிளற்போமில் விளையாடிய ஞாபகமிருக்கிறது. அங்கே என்னுடன் கூட விளையாடுபவர் ஓர் அக்கா. அங்கே பணிபுரியும் அவரது அப்பாவுக்கு உணவு கொண்டு வருவார். அல்லது அவரைப் பார்க்க வருவார். சித்ரா என்று பெயர். நீண்ட பின்னல். ஆளும் அவரது சிரிப்பும் அவ்வளவு அழகு.

அவரை நிறைய நாள் மறந்து போய், திடீரென்று ஏறாவூர் பற்றிய உரையாடலோ ஞாபகமோ ஏதொவொன்றில் திரும்பக் கண்டெடுத்தேன். விவரம் தேடிய போது சுவிசில் இருக்கிறார் என்று சொன்னார்கள். சுவிசுக்குப் போன போது தேடினால் சுவிசில் இருப்பதாய்ச் சொன்னது வேறொரு சித்ராவாம். தேடுபவர் இன்னும் ஏறாவூரிலாம். ஒரு சேர எமாற்றமும் நம்பிக்கையும் கலந்து உணர்ந்தேன். முழுக்கவும் இல்லையென்று ஆகவில்லையல்லவா!

எனக்கேற்பட்டவை ரயில் நிலையங்களுக்கு மிகவும் பொருந்தக் கூடிய உணர்ச்சிகள். பிரிவிற்கும் சந்திப்பிற்கும் அவற்றோடு கூட வரும் உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்குமே என ஏற்படுத்தப்பட்டவை விமான, ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள். பிரிவின் சோகமா, சந்திப்பின் சந்தோசமா/ஆசுவாசமா அல்லது தொமஸ் தோக் ரயிலைக் கண்ட என் ரோசாப்பூ மருமகளின் கண்களில் மின்னியது போன்ற பரவசமா.. எத்தனை உணர்ச்சிக் கலவைகள். கூடவே ரயில் நிலையத்திற்கு அப்பால் எங்கேயோ உள்ள கிராமத்திலிருந்து அம்மாவிடம் மருந்தெடுக்க வந்தவேளை கண்ட ரயிலைப் பார்த்து தனது தாயிடம் அது என்னம்மா என்று கேட்ட சிறுவனின் ஞாபகம் வருது. அது வந்தால், 90களின் இறுதியில் யாழ் போனபோது சோதனைச் சாவடிகளில் கண்ட தண்டவாளம் ஞாபகம்வரும். அங்கேயிருந்து மனம் பழையபடி எறாவூருக்கு வந்து ஐந்து சதத்தை எடுத்துத் தண்டவாளத்தில் வைத்துப்பார்க்கிற, அல்லது காந்தம் வைத்திருக்கும் செல்வம் அண்ணாவினதும் இன்பனண்ணாவினதும் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கும் ஒரு சிறுமியிடம் வந்து நிற்கிறது. எண்ணங்களும் நினைவுகளும் ரயிலைப் போலத்தான் இல்லையா.. நீண்டு கொண்டே போகின்றன. தரித்து, மனிதர்களை ஏற்றி, இறக்கிப் பயணித்தபடிக்கு .

பயணத்தில் எம்மீது படிந்து போகும் ரயில் வாசமாய் மனிதர்கள்..

பெட்டகம்