அந்தர(ங்க)த்தில் மழை


டாலிங் ஹாபரின் சில்லிட்ட படிக்கட்டில்
என் இதயத்தையும் அவளிருந்த குமிழியையும்
அன்று நான் உடைத்துக் கொண்ட பின்
என் மீது வந்தமர்ந்து,
இப்பொழுதும்  என்னோடு ஒட்டிக்
கொண்டிருக்கிறது  அந்த மாய வண்ணத்துப்பூச்சி - அன்றைய இரவின்
ஈரலிப்புடனும்  மாறாத அதே கதகதப்புடனும்.

உடை(ந் )த்ததற்குப் பதிலாக
மீண்டுமொரு குமிழி செதுக்குகிற போதெல்லாம்
தன் வண்ணங்களையெல்லாம் உதிர்த்து அதிலே  பூசியபடி
சத்தமில்லாமல் கேட்கிறது அந்த வண்ணத்துப் பூச்சி - அந்தப்
பெண்ணை என்னசெய்து விட்டேனென்று.
அந்த ஒரு வினவலில் துண்டு துண்டாய்ச் சிதறுகிறது
வண்ணம் பூசிய புதுக்குமிழி. 

செதுக்கிச் செதுக்கிக் களைத்துப் போனாலும் 
வாளாவிருக்க விடாமல் துரத்துகிறது வண்ணத்துப் பூச்சி.
வாலை ஆட்டாமல்,
சிறு முனகல் தானும் இல்லாமல்,
காதுகளைத்  தொங்கவிட்டு,
தலையைச் சரித்து,
துளைக்கும் மினுமினுத்த கண்களால் மட்டும் என்னைத் தொடர்கிறது
துரத்தினாலும் போகாத அவளது நாய்க்குட்டி.

ஒரு அதிகாலையில்
தேநீரின் துணையோடு - உனக்கு
உண்மையைச் சொல்லும் துணிவு எனக்கு வரும்வரை
பெய்ய விரும்பாமலும் 
பெய்யாமலிருக்க முடியாமலும்
அந்தரத்தில் தொங்குகிறது மழை.

இன்றைய தருணம்


இன்றைக்கு நல்ல வானிலை. இதமான வெயில், சுகமான தென்றல். கார் கழுவலாம் என்று நேற்றே யோசித்திருந்தேன். கராஜிலிருந்து வெளியில் எடுத்து வாகாய் நிழலில் நிறுத்தி ஸ்பொன்ஞ்சும் நீரும் கொண்டு கழுவ ஆரம்பிக்கையில் மனம் கட்டுக்குள் இருக்கவில்லை. அலைபாயும் தனது தொழிலை அது செவ்வனே செய்து கொண்டிருந்தது.  அதன் போக்கில் விட்டுவிட்டு கை மட்டும் காரைக் கழுவிக் கொண்டிருந்தது.   சுற்றியலைந்து களைத்த பின் நான் வாகனம் கழுவிக் கொண்டிருந்த இடத்துக்கே என் மனம் திரும்பியது. கழுவக் கழுவ அற்றுப் போய்க் கொண்டிருந்த வாகனத்துத் தூசியைப் போலவே எண்ணங்களும் மனதிலிருந்து கலைந்து போக, ஒரு கட்டத்தில் அங்கே வண்டியும் நானும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். அதைக் கழுவி விடுவது மட்டுமே தலையாய பணியாக இருந்தது. இன்றைக்குத்தான் வண்டியின் சரியான நிறத்தைப் பார்த்தேன் என்று சொன்னால் நம்பக் கஷ்டப்படுவீர்களோ தெரியவில்லை. காரினை மட்டுமே கண்டு புலன்களில் அதனை நிறைத்துக் கொண்ட நாளில் அதன் வண்ணத்தை சரியாகப் பார்த்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை எனக்கு.

நாங்கள் குளிப்பது போலத்தான் வாகனக் குளியலும். முதலில் நீர் வார்த்து, பின் சவர்க்காரம் தேய்த்து, நீர் கொண்டு அலசிய பின் துவட்டிக் கொள்வது.
வாகனம் கழுவ என்றிருக்கிற திரவத்தை ஒரு வாளியில் இட்டு அது நுரைக்க நுரைக்க நீர் நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். நுரையில் விரும்பியபடிக்கு அளைந்து விளையாடிக் கொள்ளலாம். முழங்கை வரை வாளிக்குள் அமிழ்த்தி ஸ்பொஞ்சினை நனைத்து காரின் ஒவ்வொரு பகுதியாக தேய்த்துக் கழுவினேன். வாகனம் கழுவுவதென்பது ஒரு முழு உடற்பயிற்சி. குனிந்து நிமிர்ந்து வளைந்து எட்டியெல்லாம் வேலை செய்ய வேண்டி வரும். காரில் ஒவ்வொரு பகுதியாகத்தான் நுரைக் கரைசல் கொண்டு கழுவிய பின் நீர் கொண்டு அலசி அதற்கென இருக்கிற துணியால் துடைக்க வேண்டும். இங்கே தான் நம் குளியலும் வாகனக் குளியலும் வித்தியாசப்படுகின்றன. நம்மைப் போல் தலை முதல் கால் வரை ஒரே தடவையில் நுரை குளித்து அலம்பிக் கொள்ள முடியாது. அப்படியாக  ஒவ்வொரு பகுதியையும் தேய்த்து நுரை போகக் கழுவி துடைத்தும் விட்ட பின் கொஞ்சமாய்ப் படுகிற இளஞ்சூட்டு வெயிலில் செல்லம் போல நின்றிருந்தது.

சில்லுகளைக்  (wheel hub) கழுவும் போது தான் கொஞ்சம் கிரீசும் தூசும் நகத்தினடியில் ஒளிந்துகொண்டன. எல்லாம் கழுவி முடிக்கும் வரை வேறொரு சிந்தனையுமில்லாமல் இருந்தது அழகான  உணர்வாய் இருந்தது. தியானம் போல. கனவுகளில்லாத நித்திரை போல. 

வீட்டுக்குள் வந்த பின்னர் மனம் உணர்ந்த நிறைவும் நகத்தினடியிலிருந்த அழுக்கும்தான் வாகனம் கழுவினதற்குச் சாட்சியாக இருந்தன. கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின் வெயில் கொட்டிக் கிடந்த புல்லில் கிடந்து புத்தகம் வாசித்தேன். கார்திக் வேலுவின் 'மொழி  பெயர்த்த மௌனம் ' கவிதை நினைவுக்கு வந்தது. இலக்கியச்  சந்திப்புக்கு எதைக் கொண்டு செல்ல என்று இதுவரை இருந்த  குழப்பம் தீர்ந்தது. 

சந்திப்பிற்குப் போகும் வழியில் எதிர்பாராத ஒரு அழகான நிலவைக் கண்டேன். உதட்டில் புன்னகையொன்று வந்து குந்திக் கொண்டது. பூமிக்கு மிகவும் அண்மையில் நிலவு வரும் காலத்துப் பூரணைக்கு அடுத்த நாள். பெரியதொரு பந்து. கோழிக் குஞ்சினதை விடக் கொஞ்சம் அழுத்தம் கூடின மஞ்சள் நிறத்தில். அடிவானத்தில் சில மரங்களின் பின்னால் முகில்களோடு  மறைந்து விளையாடிய வட்டப் பந்து. சந்திப்பு நடக்கும் இடத்திற்கு நிலவைக்  கண்டு ஐந்து நிமிடங்களுக்குள் போய் விட்டேன். அங்கு நின்றவருக்குக் காட்டுவதற்கிடையில் மஞ்சள் வெளிறி பந்தும் சற்றே மேலேறி விட்டிருந்தது. கொஞ்ச நேரம் நிலவையே ரசித்துக் கொண்டிருந்தோம். மூன்றாவமர் வர, அவருக்குக்கும் காட்டினோம். சந்திப்பு முடிந்து கலையும் போது நிலவு உயரத்தில் சின்னதொரு வெண்பந்தாகிச் சிரித்துக் கொண்டிருந்தது. 

முன்னமே தெரிந்திருந்தாலும் பல வேளைகளில் உணர்ந்தாலும் இப்போ கொஞ்ச நாட்களாக திரும்பத் திரும்ப எனக்கு நினைவுறுத்தப்படுகிறது ஒரு நாளினையும் வாழ்க்கையையும் அழகாக்குவது எதிர்பாராமல் வரும் சின்னச்சின்னத்  தருணத்துச்  சந்தோசங்கள்தான் என்று. அதையே கொஞ்ச நேரம் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தோம். தேவதேவனின் கவிதையொன்றைப்  பற்றிப் பகிர்ந்து கொண்டார் ஒருவர்.

வேறெதையும் எழுதாவிட்டாலும், இன்றைய என் நாளை  அழகாக்கிய கார் கழுவினதும் நிலவைப் பார்த்ததும் போன்ற தருணங்களைச் சில நாட்களுக்கொருமுறையாவது  இங்கே பதிந்து வைக்கும் உத்தேசம்.

உங்கள் நாட்கள் எதனாலானவை? 

வாழ்வதற்கு ஒரு வண்ணம்


உங்களுக்கென்று மிகப் பிடித்த ஒரு (அல்லது சில/பல) நிறங்கள் இருக்குமல்லவா? எனக்கும் சில நிறங்களிருக்கின்றன. என் மனநிலையைப் பொறுத்து ஒவ்வொரு நேரங்களிலும் ஒவ்வொரு நிறம் - பச்சை நிறமே பாட்டிலே வருவது போல. ஆனாலும் 80 - 85% அது ஒரு குறிப்பிட்ட நீலம். அதை நான் என் இருபதுகளின் ஆரம்பத்தில் கண்டு கொண்டேன். இன்றுவரை அதுவே எனக்கு மிகப் பிடித்தமான நிறமாயிருக்கிறது. 


கிட்டடியில் களை பிடுங்க வேண்டி வந்தது. களை என்று தெரியும். வளரவிடக் கூடாதென்று தெரியும். ஆனாலும் அழகாயிருக்கிறது என்று வளரவிட்டுவிட்டேன். பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு செடியினடியில் முளைத்தது. பார்த்ததன் சீத்துவம் இவ்வளவுதானா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆனால் கொஞ்ச நாள் செடியினைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதனோடு வழமை போல பேசி, தருகிற பழத்திற்கு நன்றி சொல்லவில்லை. எப்படியோ களையும் வந்துவிட்டது. சும்மாவும் இல்லை, கொடியோடு சேர்ந்து அதுவும் கிடுகிடென வளர்ந்தபடி. செடிக்குப் போகவேண்டிய சத்தினைக் களை உறிஞ்சுவதைக் கவனித்தேன். களையை பேசாமல் விட்டால் என்ன என்று தோன்றிய ஒரு பொழுதில்தான் அதனால் செடிக்கேற்படும் சத்துக்குறைபாட்டையும் பூக்கள் குறைந்ததையும் காண நேர்ந்தது. 


அழகாய்த்தானிருந்தாலும் களையைப் பிடுங்கி எறிய வேண்டும் என்று புரிந்த தருணத்தைப் போல ஒரு சின்ன ஆனால் தெட்டத் தெளிவான ஒர் கணத்தில் தான் எனக்கு மிகப் பிடித்தமான நீல நிறத்தை நான் கண்டுகொண்டேன். ஒரு வகை நீலம். மிக அழகான நீலம். அதைப் போல காண்கிற போதெல்லாம் பக்கத்திலிருக்கும் ஆளைக்கூப்பிட்டு, இது மாதிரி ஆனா இதுவல்ல என்று சொல்ல வைக்கிற, எனக்குள் கண்டெடுத்து, எனக்கு வெளியே நான் தேடுகிற நீலம் எனக்கேயானது. எத்தனையோ காட்சிகளில் என் மனக்கண்ணில் தன்னை வெளிப்படுத்துவது. எனக்குப் பல உணர்வுகளை அளிப்பது. என்னைப்பற்றியோ பொதுவாக வாழ்க்கை பற்றியோ நினைத்தால் கட்டாயம் படிவது இந்த நீலம் தான். எனது நீலம்.


அட! இப்படி நடந்துவிட்டதே என்று கடந்து போனதைப் பற்றியோ, நாளைக்கு/இனி வரும் நாட்களில் என்ன நடக்கும் என்றோ யோசித்து அதிலேயே மூழ்கிப் போய்விடாமல் வாழ்க்கை என்பது அதன் வழியில் வாழ்ந்து பார்க்கத்தான் என்பது என் எண்ணம். எத்தனை எத்தனை மனிதர்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள், காட்சிகள்! என்றோ ஒரு நாளைக்குத் தெரியும் நினைத்துக் கொண்டதும் நடந்து கொண்டதும் சரியா என்று. அதற்கிடையில் எனக்குத்தான் என்னைப்பற்றிக் கணக்கில்லாச் சந்தேகங்களும் கேள்விகளும்.ஒரு இலக்குமில்லாமல் நகர்கிறேன் போலத் தோன்றுகிறது. 


இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டமைப்புப் பிடிக்காமல் ஆனால் முழுதும் அந்தக் கட்டுகளைத் தகர்த்து வந்து விடவும் முடியாமல் என்னவாய் இருக்க வேண்டும் என சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதின் தெளிவற்ற சித்திரம் தான் நான். வியாபார உலகிலே பார்த்தால் குறிப்பிட்ட இலக்கு வைத்து அதை நோக்கிச் செயல்பட்டு வெற்றியடைகிறார்கள். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் அதைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. என்ன செய்ய இப்படி நடந்து விட்டது/இப்பிடித்தான் நடக்கும் என்று இல்லாமல் நாமாய் முடிவெடுத்துச் செயல்படுத்தி - கஷ்டமாயிருந்தால் தான் என்ன, செய்து பார்ப்பதுதான்! - அதன் படிக்கு வாழ்க்கையைக் கொண்டு போனால்? எங்கள் வழியை முழுக்க நாங்களே தீர்மானித்துக் கொள்வது என்று வந்துவிட்டால் எங்கள் முடிவுகளுக்கும் செயல்களுக்கும் முற்றுமுழுதாக நாமே பொறுப்பு. சற்றுப் பயமுறுத்தும் ஒரு செயல் அல்லவா? எங்களுக்கு நாங்கள்தான் பொறுப்பு. வேறு யாரிலும் பொறுப்பைச் சாட்டிவிடவோ குறை சொல்லவோ முடியாது. அப்படிச் செய்வதனால் இசைந்து போகும் இயல்புக்கு முதல் வேட்டு. நாம் இசைந்து போகத்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். குடும்பத்துக்கு, பள்ளிக்கு, நண்பர்களுக்கு, அலுவலகத்திற்கு, இனத்திற்கு, மொழிக்கு, மதத்திற்கு என்று ஒரு முடிவில்லாத பட்டியல். வித்தியாசமாய் இருப்பது வேண்டாததாய்ப் பார்க்கப்படும். ஒதுக்கி வைக்கப்படுவோமோ என்று ஒரு பயம். அதுதான் உள்ளூர ஆட்டுவிக்கிறது. 


அந்தப் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு எங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு, எவ்வள்வு இலகுவானதென்று கணிக்காமல், கடினமானதாயே இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு பாதையைத் அமைத்துக் கொள்ள வேண்டும். கடினமாயிருக்கும் பாதையின் பயணமும் இலக்கினை அடைந்தவுடன் வரும் மகிழ்ச்சியும் தரும் சாதனை உணர்விற்கு அளவுகோலில்லை. எந்தவித 'ரிஸ்க்'ம் வாழ்க்கையில் இல்லாமல் இருக்கிறதன் ஆபத்து நமக்கென்று ஒரு பாதையை அமைத்து அதில் வரும் இடர்களைச் சந்தித்துத் தோல்வியடைவதிலும் பார்க்க மிகமிக மோசமானது.  


எனக்காய் இந்த உலகில் எங்கோ காத்துக் கொண்டிருக்கிறது எனது நீலம். அதனை தேடிப் போகிறேன் நான். கண்டடைந்தால் அகத்திலும் புறத்திலும் நீலம். இல்லையேல் அகத்தில் மட்டும். எப்படியும் என் நீலம் என்னிடமிருக்கும்..



வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.



(என் கருத்துப்  பிந்தியதாயினும், எதையும் மாற்றப் போவதில்லையாயினும்) நான் கற்ற மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் சரஸ்வதி சிலை நிறுவல் எனக்கு தனிப்பட்ட அளவில் ஏமாற்றமளிப்பதாயுள்ளது.

சிலை நிறுவப்பட்டுவிட்டது. எதற்காயிருக்கலாம் என்று யோசித்துப் பிடிப்பது மிகச் சுலபம். அத இந்தப்பதிவில சொல்ல வரவில்லை. பள்ளிக்கூட வளாகத்தில் சரஸ்வதியின் சிலை ஏன் தேவையில்லை  என்பதற்கான காரணங்களை முன்வைப்பதே இதன் நோக்கம்.

1. கிறிஸ்தவ மிசனரிமாரால் 1820ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாயினும் இப்பள்ளி ஒரு தேசியப் பாடசாலையாதலால் தற்போது எவ்வித சமய சார்புடைய நிறுவனங்களாலும் நடத்தப்படுவதில்லை.

2. அரசியலும் சமயமும் கற்பிக்கப்பட்டாலும், பாடசாலையானது அரசியல் மற்றும் சமய சார்பற்றிருக்க வேண்டும்.

3. பாடசாலையில் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மாணவிகள் கற்கின்றனர். சிங்கள அரசினால் இழைக்கபட்ட அதே அநீதி தானே இங்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய மாணவிகள்/ஆசிரியர்கள் மீது இந்துக்களால் பிரயோகிக்கப்பட்டுள்ளது.  சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாலும் அவர்களின் குரல் மதிக்கப்படாது போவதாலும் ஏற்படும் மனவுளைச்சல், தொடரும் மனத்தாங்கல்கள் பற்றித் தமிழரான எங்களுக்குத்தான் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறதே. கற்றவைகளும் அனுபவங்களும் தேவையான எச்சந்தர்ப்பத்திலும் நமக்கு கை கொடுப்பனவாக இருக்க வேண்டும்.

4. இந்தச் சிலையை அமைப்பதற்கான செலவீடு என்னவென்று தெரியவில்லை. ஆனால், கணிசமான தொகையாக இருந்திருக்க வேண்டுமென்பது எனது கணிப்பு. உதாரணத்திற்கு ரூ 1,00,000 என வைத்துக் கொள்ளலாம். சிலை அமைப்பதை விட பின்வருவனவற்றில் ஏதாவொன்றிற்காவது அப்பணம் செலவழிக்கப்பட்டிருந்தால் பிரயோசனமாயிருந்திருக்கும் என நினைக்கிறேன்.


- பாடசாலை நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்குதல்.
- விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல்
- கணினிகள் வாங்குதல்.
- அறிவியல் கூடத்திற்கான உபகரணங்களோ, வேதிப் பொருட்களோ வாங்குதல்.
- வேறு தேவையான உபகரணங்கள் / தளவாடங்கள் வாங்குதல்.
- வறுமையான குடும்பத்து மாணவியரில் ஒருவரையோ சிலரையோ தேர்ந்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளல். பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் அதன் பாவனைக்காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
- தேவைப்படும் கட்டிடத் திருத்த வேலைகள் செய்து கொள்ளல்.


இவை மட்டுமே எனக்குத் தோன்றியவை. இதை விட இன்னும் பலவற்றிற்கு  இப்பணம் ஆக்கபூர்வமாகப் பயன்பட்டிருக்கலாம்.

மும்மதத்தவரும் கற்கும் பள்ளியில் பெரும்பான்மை மதத்தவர் தெய்வத்தின் சிலை சொல்வது என்ன? எல்லா நேரத்திலும் எல்லாருடைய கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால், சரியான கருத்து (அது ஒன்றேயாயினும்) பகிரப்படும் போது அங்கே ஒரு உரையாடலுக்கான தேவை வருகிறது. சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் அமைகிறது. சிலைக்கான மெதடிஸ்த திருச்சபையின் கண்டனம் சமய சம்பந்தமானது என்றாலும் அக்கண்டனத்திற்குப் பதிலாக 'யார் என்ன சொன்னாலும் சிலை நிறுவல் நடந்தே தீரும்' என்று பதிலளித்த அதிபர் மாணவியருக்குச் சொல்லாமல் சொன்னது என்ன? ஏனையோரின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவல்ல என்பதைத்தானே!

பிந்திய செய்தி:
  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36876


My dear school, I am disappointed and ashamed. 


பெட்டகம்