இன்றைக்கு நல்ல வானிலை. இதமான வெயில், சுகமான தென்றல். கார் கழுவலாம் என்று நேற்றே யோசித்திருந்தேன். கராஜிலிருந்து வெளியில் எடுத்து வாகாய் நிழலில் நிறுத்தி ஸ்பொன்ஞ்சும் நீரும் கொண்டு கழுவ ஆரம்பிக்கையில் மனம் கட்டுக்குள் இருக்கவில்லை. அலைபாயும் தனது தொழிலை அது செவ்வனே செய்து கொண்டிருந்தது. அதன் போக்கில் விட்டுவிட்டு கை மட்டும் காரைக் கழுவிக் கொண்டிருந்தது. சுற்றியலைந்து களைத்த பின் நான் வாகனம் கழுவிக் கொண்டிருந்த இடத்துக்கே என் மனம் திரும்பியது. கழுவக் கழுவ அற்றுப் போய்க் கொண்டிருந்த வாகனத்துத் தூசியைப் போலவே எண்ணங்களும் மனதிலிருந்து கலைந்து போக, ஒரு கட்டத்தில் அங்கே வண்டியும் நானும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். அதைக் கழுவி விடுவது மட்டுமே தலையாய பணியாக இருந்தது. இன்றைக்குத்தான் வண்டியின் சரியான நிறத்தைப் பார்த்தேன் என்று சொன்னால் நம்பக் கஷ்டப்படுவீர்களோ தெரியவில்லை. காரினை மட்டுமே கண்டு புலன்களில் அதனை நிறைத்துக் கொண்ட நாளில் அதன் வண்ணத்தை சரியாகப் பார்த்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை எனக்கு.
நாங்கள் குளிப்பது போலத்தான் வாகனக் குளியலும். முதலில் நீர் வார்த்து, பின் சவர்க்காரம் தேய்த்து, நீர் கொண்டு அலசிய பின் துவட்டிக் கொள்வது.
வாகனம் கழுவ என்றிருக்கிற திரவத்தை ஒரு வாளியில் இட்டு அது நுரைக்க நுரைக்க நீர் நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். நுரையில் விரும்பியபடிக்கு அளைந்து விளையாடிக் கொள்ளலாம். முழங்கை வரை வாளிக்குள் அமிழ்த்தி ஸ்பொஞ்சினை நனைத்து காரின் ஒவ்வொரு பகுதியாக தேய்த்துக் கழுவினேன். வாகனம் கழுவுவதென்பது ஒரு முழு உடற்பயிற்சி. குனிந்து நிமிர்ந்து வளைந்து எட்டியெல்லாம் வேலை செய்ய வேண்டி வரும். காரில் ஒவ்வொரு பகுதியாகத்தான் நுரைக் கரைசல் கொண்டு கழுவிய பின் நீர் கொண்டு அலசி அதற்கென இருக்கிற துணியால் துடைக்க வேண்டும். இங்கே தான் நம் குளியலும் வாகனக் குளியலும் வித்தியாசப்படுகின்றன. நம்மைப் போல் தலை முதல் கால் வரை ஒரே தடவையில் நுரை குளித்து அலம்பிக் கொள்ள முடியாது. அப்படியாக ஒவ்வொரு பகுதியையும் தேய்த்து நுரை போகக் கழுவி துடைத்தும் விட்ட பின் கொஞ்சமாய்ப் படுகிற இளஞ்சூட்டு வெயிலில் செல்லம் போல நின்றிருந்தது.
சில்லுகளைக் (wheel hub) கழுவும் போது தான் கொஞ்சம் கிரீசும் தூசும் நகத்தினடியில் ஒளிந்துகொண்டன. எல்லாம் கழுவி முடிக்கும் வரை வேறொரு சிந்தனையுமில்லாமல் இருந்தது அழகான உணர்வாய் இருந்தது. தியானம் போல. கனவுகளில்லாத நித்திரை போல.
வீட்டுக்குள் வந்த பின்னர் மனம் உணர்ந்த நிறைவும் நகத்தினடியிலிருந்த அழுக்கும்தான் வாகனம் கழுவினதற்குச் சாட்சியாக இருந்தன. கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின் வெயில் கொட்டிக் கிடந்த புல்லில் கிடந்து புத்தகம் வாசித்தேன். கார்திக் வேலுவின் 'மொழி பெயர்த்த மௌனம் ' கவிதை நினைவுக்கு வந்தது. இலக்கியச் சந்திப்புக்கு எதைக் கொண்டு செல்ல என்று இதுவரை இருந்த குழப்பம் தீர்ந்தது.
சந்திப்பிற்குப் போகும் வழியில் எதிர்பாராத ஒரு அழகான நிலவைக் கண்டேன். உதட்டில் புன்னகையொன்று வந்து குந்திக் கொண்டது. பூமிக்கு மிகவும் அண்மையில் நிலவு வரும் காலத்துப் பூரணைக்கு அடுத்த நாள். பெரியதொரு பந்து. கோழிக் குஞ்சினதை விடக் கொஞ்சம் அழுத்தம் கூடின மஞ்சள் நிறத்தில். அடிவானத்தில் சில மரங்களின் பின்னால் முகில்களோடு மறைந்து விளையாடிய வட்டப் பந்து. சந்திப்பு நடக்கும் இடத்திற்கு நிலவைக் கண்டு ஐந்து நிமிடங்களுக்குள் போய் விட்டேன். அங்கு நின்றவருக்குக் காட்டுவதற்கிடையில் மஞ்சள் வெளிறி பந்தும் சற்றே மேலேறி விட்டிருந்தது. கொஞ்ச நேரம் நிலவையே ரசித்துக் கொண்டிருந்தோம். மூன்றாவமர் வர, அவருக்குக்கும் காட்டினோம். சந்திப்பு முடிந்து கலையும் போது நிலவு உயரத்தில் சின்னதொரு வெண்பந்தாகிச் சிரித்துக் கொண்டிருந்தது.
முன்னமே தெரிந்திருந்தாலும் பல வேளைகளில் உணர்ந்தாலும் இப்போ கொஞ்ச நாட்களாக திரும்பத் திரும்ப எனக்கு நினைவுறுத்தப்படுகிறது ஒரு நாளினையும் வாழ்க்கையையும் அழகாக்குவது எதிர்பாராமல் வரும் சின்னச்சின்னத் தருணத்துச் சந்தோசங்கள்தான் என்று. அதையே கொஞ்ச நேரம் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தோம். தேவதேவனின் கவிதையொன்றைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார் ஒருவர்.
வேறெதையும் எழுதாவிட்டாலும், இன்றைய என் நாளை அழகாக்கிய கார் கழுவினதும் நிலவைப் பார்த்ததும் போன்ற தருணங்களைச் சில நாட்களுக்கொருமுறையாவது இங்கே பதிந்து வைக்கும் உத்தேசம்.
உங்கள் நாட்கள் எதனாலானவை?