காத்திருத்தலின் நிறம்

ஒரு பூ மதில் மேல் இருக்கிறது. இளவெயில் கொண்ட  ஒரு மாலைப்பொழுதோடு  கை கோர்த்தபடி புன்னைகையைப் பேசுகிறது அந்தப் பூ. தனதென்றோ இல்லையென்றோ சொல்லிவிட முடியாதவொன்றிற்காய் இதழ் விரிக்கிறது. குளிர்ந்த கைகளால், இதழ்களால்  என்று சொல்ல வேண்டுமோ.. காற்றை அளைகிறது. சொல்லித் தீர்க்க முடியாததொரு உணர்வில் ஒரு fado பாடலைப் போலத் திளைக்கிறது.

அரவணைப்பையும் புறக்கணிப்பையும் அறிந்த உணர்ந்த பூ அது. எத்தனை புறக்கணித்தாலும் அரவணைப்பை மட்டுமே பதிலாய்த்தர தர அது விழைகிறது. எரித்தாலும் பதிலுக்குக் குளிர்விக்கத்  தயங்காதது. எல்லாமறிந்த காற்றை மென்மையாய் ஏந்துவது. 

முற்றுப் பெறாதவொரு உரையாடலின் முழுமையற்ற ஞாபகம் அந்தப் பூ எதிர்பாராதவொரு கணத்தில் எங்கோ அடியாழத்திலிருந்து முகிழ்க்கின்றது . அதன் மீதியைத் தேடி,  பிரவகிக்கிற  எல்லா   நதிகளிலும் பூ நீந்துகிறது. மூழ்குகிறது. நதியை அறிந்து மீன்களோடும் பாசியோடும் கூழாங்கற்களோடும் கரையுமல்லாத நதியுமல்லாத சகதியோடும் தோழமை கொள்கிறது. அவை தம் ரகசியங்களைப்  பகிர்ந்து கொண்ட பிறகு பூ கரையேறுகிறது. இருந்த ஞாபகத்தையும் அந்த முடிவு காணா உரையாடலையும் ஒவ்வொரு நதியும் மறக்காமல் எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. பூவின் நிறத்தையும் கூட. 
 
ஒரே வாத்து எல்லாக்கரைகளிலும் பவழமல்லியை மிதித்துக்கொண்டு சிறகு உலர்த்தியபடி நடை பயில்கிறதை ஓரக்கண்ணால் பார்த்தபடி ரகசியங்கள் தொடர்ந்து இழைக்கப்படும் துண்டினால் தலை துவட்டிக் கொள்கிறது பூ.

நதி கழுவிக் கொண்டு போய்விடுகிற வண்ணத்தை மழை அழைத்துவரும் வானவில் மீண்டும் பூவுக்குப் பூசி விடுகிறது. எங்கும் சரியாய்ப் பொருந்தியிருந்தாலும்  ஞாபகம் முழுமையற்ற இடத்தில் மட்டும் வண்ணம் இருப்பதில்லை. பவழமல்லி மணக்கிற அவ்விடத்தில்தான் வண்ணத்தை விழுங்குகிற ஒரு வாத்தின் இறகின் தடமும் இருக்கிறது. ஆனாலும் அதனால் விழுங்கமுடியாத நிறமொன்றும்  உள்ளது. அது, காத்திருத்தலின் நிறம்.

காத்திருத்தலின் நிறம்  நீலம்; அதன்  நடனம் தாண்டவம். எனக்குத் தெரிந்த வரை.  
பூ காத்திருக்கிறது. நீல நிறத்தில். அருளல் ஆரம்பிக்கிற கணத்துக்காய். எப்போதும்போலவே எல்லாமுமாய்க் கூடவே  இருக்கிறது மழை.

வருத்தும் எதுவுமே வன்முறைதான்


சமீபத்தில் இலங்கைப் பயணம் போயிருந்தேன். மகிழ்ச்சியாகக் கழிந்த சில நாட்களின் பின்னர் ஓர் ஊருக்குச் சென்றேன்.  பலவருடங்களாக எதிர்கொள்ளாத ஒன்றை முன்னிலும் கீழ்த்தரமான வடிவில் சந்திக்க நேர்ந்தது.  11 வயதுச் சிறுவனும்  17  வயதுச் சிறுமியும் நானும் நடந்து கொண்டிருந்தோம். சிறுவன் எங்களிலும் பார்க்க ஒரு ஐந்தாறு மீற்றர் முன்னால். போகிற வழியில் ஒரு  பெரிய   பெட்டிக்கடை. அங்கே நின்றிருந்தவர்களை நாங்கள் கவனிக்கவில்லை எம் பாட்டில் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்ததால்.

சரியாக கடையை நாங்கள் கடக்கவும் அந்தக் குழுவிலிருந்து  " பார்க்க குப்பென்டு  இருக்கு.  கொண்டே வைச்சு என்னவும் செய்யலாம் போல இருக்கு" என்று ஒரு குரல் எழுந்தது. அதற்குச் சொல்லுவதற்கு என்னிடம் பதிலிருந்தது. ஆனாலும், அவர்களைக் கடந்து வந்துவிட்டதும், நான் அங்கிருந்து புறப்பட்ட பின்பும்  அப்பெண் தொடர்ந்து அவ்வழியால் சென்று வர வேண்டியதன் அவசியம் இருப்பதும் (அவரது உள/உடல் பாதுகாப்புக்காக), அதற்குப் பதில் சொல்லி விஷயத்தை வளர்க்க & எங்களைத்  தாழ்த்திக் கொள்ள விரும்பாததுமே நாங்கள் பதிலிறுக்காமல்  கடந்து வரக் காரணங்களாய் அமைந்தன."பொம்பிளைகளுக்கு 'நல்ல' மரியாதை" என்பதைத்  தாண்டி வேறொன்றையும் எங்களுக்குள்ளே  பேசிக்  கொள்ளவில்லை. இதை வாசிக்கிற நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் எப்படி நாங்களிருவரும் உணர்ந்திருப்போம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை - உங்களுக்கே தெரியும். ஆணாக இருக்கும் பட்சத்தில், உங்கள் அந்தரங்கத்தை உங்களது விருப்பின்றி ஒருவர் தொடுவது போன்று x 1000 என்று  உதாரணமாகச்  சொல்லலாம்.

பல பெண்களுக்கு இப்படியான வதைச் சொற்பிரயோகங்கள் கேட்பதென்பது துரதிர்ஷ்டவசமாக அன்றாட நிகழ்வாக அமைந்து விடுகிறது. சொற்களைக் கணக்கில் எடுக்காமல் கடந்து விடலாம்தானே என்று சொல்லலாம். சொல்லும் வதைக்கும்தானே ? பேசாமலிருக்கிறார்கள்.. அதனால் இப்படியானதை விரும்புகிறார்கள் என்று எடுத்துக் கொண்டால்?  சொல் ஒரு நாளைக்குச் செயலாக மாறுகிற போது?

பெண்களை நோக்கி இப்படி  நடந்து கொள்வது ஏன்? பெண்ணை ஒரு சக மனிதராய் பார்க்காது மறைப்பது என்ன? எனக்குத் தோன்றுவது (இதைச் செய்கிற ஆணிடம் தன்னம்பிக்கை/ சுயமரியாதை இல்லாமை, ஈகோ பிரச்சனை  என்பனவற்றையெல்லாம் தாண்டி) அடிப்படையாய் பெண் என்றால் ஒரு ஆணுக்குரிய மரியாதையைத் தரத் தேவையில்லை .. அவள் ஒரு படி குறைந்தவள் என்கிற பொதுப்புத்தியில் படிந்துள்ள கருத்து. யாரும் குறிப்பாக உங்களை இருத்தி வைத்து 'பெண் என்றால் ஆணிலும் குறைந்தவள்' என்றோ 'அவளுக்கு மரியாதை தரத் தேவையில்லை' என்றோ தனிவகுப்பு எடுத்துச் சொல்லித்தர வேண்டியதில்லை. செய்வதுமில்லை.  எங்களைச் சுற்றி வீட்டிலிருந்து  அலுவலகம் வரை அப்படித்தான் மனதில் படிய வைக்கப்பட்டிருக்கிறது பெரும்பாலான இடங்களில். அப்படிச் சிந்தனை இருக்கிறது என்பதையே பலர் உணர மாட்டார்கள். இதுவும் வன்முறைதான். அடிப்பது, வெட்டுவது, இரத்தம் என்பது மட்டுமே வன்முறையல்ல. வருத்தும் எதுவுமே வன்முறைதான். மரியாதை இருந்தால் பெண்ணை வதைக்கிற எதற்கும் - சொல்லோ, செயலோ, கருத்தோ எதுவாயினும் - சரியாகச் சிந்திக்கிற யாரும் உடன்போக மாட்டார்கள். இங்கே சொல்லுகிற மரியாதை என்பதை  பேருந்தில் எழுந்து இடம் கொடுப்பது அல்லது ஆசிரியருக்கு வணக்கம் சொல்லுவது போல என்று எடுத்துக் கொண்டால் நீங்கள் போக வேண்டிய தூரம் அதிகம் :O).


பெண்ணை நுகர்வுப் பண்டமாய் இவ்வுலகமே பார்க்கிறது. 'சந்தைப்படுத்தலில்' பெண்ணின் நிலை எப்படி என்பது தெரியும்தானே? கொஞ்ச நாளைக்கு முன் பார்க்கக் கிடைத்த, காட்சிகளால் கோபப்படுத்திய காணொளி கீழே. காணொளி இந்தியாவை மையமாகக் கொண்டதாயினும் எல்லா நாடுகளிலும் இதைப் போன்ற ஆபத்தான கருத்துப்பாடு சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.


http://youtu.be/Rt1Rhd_sRhg

கடைசியில் திரையில் இடது பக்கமிருப்பவர் சொல்லுவது சரியெனத் தோன்றுகிறதா அபத்தமாயிருக்கிறதா உங்களைப் போறுத்தவரை? பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை விட பதுங்க வைப்பது சரியானதாய்ப் படுகிறதா? ஒரு 4 வயதுச் சிறுமிக்கே தனது  உடல் & அதன் நீட்சியாக உயிரும் குறித்தான பாதுகாப்பில்லாத போது (அண்மையில்  நடந்தது) பெண்களுக்கான நம்பிக்கை எதிலிருந்து வரும்? நாங்கள் வாழும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சிறு வயதிலிருந்தே மரியாதை என்பது எப்பாலருக்கும் உரியது/சமமானது என்பது  பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

~~~~~~~~~~~

பெப்ரவரி 14. பெண்கள்  வன்முறைக்கெதிராக எழுவதைக் குறிக்க எடுத்துக் கொண்ட நாள். One Billion Rising (100 கோடி பெண்கள் எழுக) நிகழ்வு. இந்தத் தளத்தில் பாருங்கள்.  பெண்களுக்கு மரியாதை அளிக்கிற, எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பான ஒரு சூழலை அமைக்கிற ஒருவராக இருக்கிறீர்களா?

பெட்டகம்