பூனைக்கு வாத்தென்று பெயர்


என்னுடைய உலகத்திலே உனக்குப் பெயர் முட்டாள் வாத்து. ஆனாலும் பல நாட்களாய் எனக்குத் தெரியும் நீ பூனைதானென்று. எங்காவது பூனைக்கு வாத்தென்று பெயர் வைத்ததைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அதற்கென்ன, பெயர்தானே.. இருந்துவிட்டுப் போகட்டும்.

யாரும் பார்க்காத நேரங்களில் பதுங்கிப் பதுங்கி மெல்ல நுழைந்து பின்னர் தைரியமாய் கண்முன்னே உலா வரும் பூனைக்குட்டியைக் கண்டதும் அட! என்று கவனிப்போமே... அது போலத்தான் உன் மீதான பிரியமும்.

என்னதான் பதுங்கினாலும் பூனை அலட்சியம் மிகுந்தது. அதிகாரம் பண்ணுவது. நாய்க்குட்டியைப் போல வாலாட்டுவதோ கண்டதும் துள்ளி தலைகால் தெரியாமல் சுற்றி வருவதோ இல்லை. தனக்குத் தேவையான போதில் மட்டும் வந்து கவனம் பெறுவது. எப்போதும் இருக்கும் அக்கறையை அதற்குத் தேவையான பொழுதிலே மட்டும் விரும்பி வந்து ஏற்பது. அந்த நேரத்தில் மட்டுமே பெருங்கருணை கொண்டு நம்மையும் ஒரு பொருட்டாய் மதிப்பது. வலிந்து உன் கவனம் ஈர்ப்பதில் என் முயற்சிகள் பெரும்பாலும் பலிப்பதில்லை. பழங்காலத்தில் பூனைகள் கடவுளராம். எந்தக் காலத்திலும் கடவுள் மனம் வைத்தால்தானே பேரின்பம் கிட்டுகிறது! நீயாய் வந்தாலும் அலட்சியப்படுத்தினாலும் உன் மீதான என் பிரியம் என்றைக்கும். அது உனக்கும் தெரியும், அதை நீ எப்படி  விளங்கிக் கொண்டிருக்கிறாய்?

பூனைக்குட்டியொன்று மடியில் இருக்கையில் எத்தனை மென்மையாய் இதமாய் ஆறுதலாய் இருக்கிறது. நீயும் உன்னைக் குறித்த நினைப்புகளும் ஞாபகங்களும் அப்படியே. சில்லிட்டுக் குறுகிப் போகும் நேரங்களிலெல்லாம் மன மடியில் கதகதப்பாய் உன்னைக்  கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அறிமுகப்படுத்துகிறாய். பலப்படுதலின் ஊற்றாயிருக்கிறாய். என்னையும் என் பொழுதுகளையும் உயிர்ப்பித்திருக்கிறாய். மெத்தென்ற அதே பாதத்தில் தான் கீறும் நகமும் மறைந்திருக்கிறது. உனது சில சொற்களிலே நான் உடைந்து உயிர்வலிப்பதும் பூனை விளையாட்டில் வெகு இயல்பாய் அடங்கிவிடுகிறது.

உனக்கானவை, உன்னால் நானறிந்த எனது நீலப் பூக்கள். ஆனால் பூனைக்குப் பூக்களால் ஆவதொன்றுமில்லை.

பெட்டகம்