01 - வரம்

முக்கியமான ஒராள் சொன்னதின் படி கீழுள்ள disclaimer போட்டு ஆரம்பிக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------
Disclaimer:- பின்வருவது, கதை சொல்வதில் எழுதுவதில் செய்து முடித்த முதல் முயற்சி.
------------------------------------------------------------------------------------------------------------------------

காலம்: ஏதோ ஒர் காலம்..
இடம்: கிளிமஞ்சாரோ மலை உச்சி.

எல்லாக் கடவுளரின் வீடும் அங்கேதான். இதுவரைக்கும் மக்காவும், ஜெருசலேமும் கைலாயமும்தான் புத்தகயாவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். ஒரே களேபரமாயிருக்கிறது. சிவனையும் விஷ்ணுவையும் காணோம். எங்கேயென்று தெரியாமல் பத்தினிப் பெண்களின் இலக்கணப்படி பிலாக்கணம் பாடி மூக்கைச் சிந்துகிறார்கள் பார்வதியும் இலக்குமியும். அவர்களுக்கு மரியாளும் சரஸ்வதியும் ஆறுதல் சொல்ல, அல்லாவும் தாடியைத் தடவினபடி யேசுவும் மற்றையவர்களோடு ஆலோசிக்கிறார்கள். சித்தார்த்தன் முருகனிடம் மயில் மணிக்கு என்ன வேகத்தில் போகும் என்று சன்னக்குரலில் விசாரிக்கிறான்.


அதே சமயத்தில், இன்னுமோரிடத்தில்...

சிவன் இப்போ கைதி. ஒருத்தர் பிடித்துக் கொண்டு போய்ப் பொதுச் சிறையில் அடைத்துவிட்டார். தொடர்ந்த காவல். ஒன்றையும் இந்த மனிதர்களுக்கு முன்னால் நின்று நினைத்துக் கொள்ள முடியவில்லை. எதிரிலிருப்பவன் மனதில் என்ன ஓடுகிறது என்று தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அதைச் செய்யலாமென்று கண்டுபிடிக்குமளவு திறனுடையவர்களாக மனிதர்களைப் படைத்ததை எண்ணி பிரம்மனின் மேல் அடக்கமுடியாத கோபம் வந்தது சிவனுக்கு. அவருக்கான காவலாளி அதை அறிந்து சிரித்துக் கொண்டான். சிவன், ஆசுவாசப் படுத்திக் கொள்ள வற்றிக் கொண்டு போகிற தண்ணீர் கொஞ்சம் தலையிலிருந்து குடித்துக் கொண்டார்.

தண்ணீர் குடிக்கையில்தான் அவருக்குக் கூடவே கைதான விஷ்ணுவின் ஞாபகம் வந்தது. "என்ன செய்கிறானோ" என்று நினைத்துக் கொண்டதுக்கு, காவலாளி, "விஷ்ணுவா, அவன் செத்துப் போய்விட்டான்! காலையில் விசாரணைக்குக் கூட்டிக் கொண்டு போக ஆள் வந்து பார்க்கையில்தான் நாங்களே தெரிந்து கொண்டோம்" என்றான். "அடப்பாவமே..இந்த மனிதர்கள் பிடித்த நாளிலிருந்து தண்ணீரோ உணவோ தரவில்லையே.. கைவரிசை காட்டிச் சாப்பாடு வரவழைத்தாலும் அதையும் பிடுங்கி விடுகிறார்கள். நானாவது தலையிலிருந்து வருவதைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.. அவனென்ன செய்வான் பாவம்!" என்று பரிதாபப்பட்டுக்கொண்டார். என்னதான் இருந்தாலும் மச்சான். அதுக்கும் மேலாக கடவுள் வியாபாரத்தில் ஒரு முக்கிய பங்காளி. அப்படிப்பட்ட விஷ்ணு செத்துப் போனானே என்று சிவனுக்குக் கண்ணீர் வந்தது.

ஏன் இதை நடக்க அனுமதித்தாய், ஏன் அதைப் படைத்தாய் என்று சரமாரியாகக் குறுக்கு விசாரணை. இருக்கிற சடைமுடியெல்லாம் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒன்றுமே பேசவில்லை. ஒன்றுமே நினைத்துக் கொள்ளாமலிருக்கவும் பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. இரவாகிற்று. மனிதர்கள் அடித்த அடிகளில் சிலது பட்டு பாம்புகளெல்லாம் உஸ்புஸ்சென்று சீற ஆரம்பித்திருந்தன. காவலாளி உறங்கி விட்டான் என்று உறுதி செய்துகொண்டு தப்பிக்கும் வழி பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார் சிவன். எதுவும் சரி வராது என்று தெரிந்தது. நினைத்துக் கொண்டதைச் செயற்படுத்த முடியாது. மனதிலிருப்பதெல்லாம் தெரிந்து விடுகிறது.

மனதிலே திடீரென ஒரு எண்ணம். இத்தனை நாட்களிலும் இல்லாமற் போன வரங்களால் படாரெனச் சரிந்திருக்கக் கூடிய கடவுள் நிறுவனப் பங்கின் விலை நிலவரம் வயிற்றில் புளியைக் கரைத்தது. அல்லா யேசு பிரம்மன் மூவரும் நிலையை எப்படிக் கையாளுவார்களோ என்று கவலை வந்து உட்கார்ந்து கொண்டது. சித்தார்த்தன் சிறுபிள்ளை, கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது. வாகனம் கூட இல்லை அவனுக்கு. கடவுள் நிறுவனம் வர்த்தகக் காப்புக்காய் எடுத்த முடிவு இப்
டியொரு இக்கட்டில் உதவக்கூடுமென்று அவர் யோசித்திருக்கவில்லை. தனக்கு முன்னாலிருந்த அல்லாவிடமிருந்து தான் பொறுப்பேற்றுக் கொண்டது போல அடுத்ததாய் இயேசு பதவிக்கு வருவார் என்பதும் இவ்வளவுநாள் கட்டிக்காத்த நிறுவனம் அழியாதென்பதும் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. "பிரம்மன் குட்டையை குழப்பினால்?" என்கிற சந்தேகம் எட்டிப்பார்த்து புளிக்கரைசலாய் வயிற்றை மொத்தமாய் நிரப்பிற்று. அதைப் போக்க, எப்படிக் கைதானோம் என்று நினைத்துப் பார்த்தார் சிவன். எல்லாம் இந்த தவமிருப்பதைக் கண்டதும் வரும் புல்லரிப்புத்தான் காரணம். பூரித்துப் போய் வரம் கொடுப்பதை இனி நிறுத்தவேண்டும். விளம்பரம் போனாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். உடனேயே சிரிப்பும் வந்தது. இந்தச் சிறைக்குள்ளிருந்து எப்படி வெளியில் போவது, எப்படி வரம் கொடுப்பது!! பிடித்துக் கொண்டு வந்தவனுக்கு என்ன வரம் கொடுத்தோம்..யோசிக்கலானார். ஆ! ஞாபகம் வந்து விட்டது.. சும்மா வரமா கேட்டான்.. "எப்போது நான் அழைத்தாலும், நான் திருப்பி அனுப்பும் வரை என்கூடவே வரவேண்டும். அப்படி நீர் என்னுடன் இருக்கும் போது, நாம் எங்கிருக்கிறோம் என்பது வேறு யாருக்குமே தெரியக் கூடாது" என்றெல்லவா வரம் வாங்கினான். அவன் கெட்டித்தனத்தை மெச்சிக் கொண்டார் சிவன்.

வரம் கொடுத்து மாட்டுப்படுவது இருவருக்குமே வழமைதானென்றாலும், அவருக்குப் புரியவில்லை எப்படித் தான் விழுந்த அதே வலையில், அதே நேரத்திலேயே விஷ்ணுவும் மாட்டினானென்று. உரத்து யோசித்தார். சீறியபடியே பாம்பு, "மடச்சிவனே, மனிதன் முன்னமொருமுறை சும்மா பாட நீரும் எங்கோ கற்பனையிலிருந்த படி ஆகட்டும் என்று சொன்னதை மறந்தீரோ" என்றது. சிவனுக்கு அப்பவும் புரியவில்லை. தண்ணீர் வறண்டுபோன தலையைத் தடவிய படியே யோசிக்கிறார். பாம்பே பாடிக்காட்டிற்று: "இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்". அப்படி வரம் கொடுத்ததையும், சிறைப்பிடித்தவனுக்கு கொடுத்த வரத்தில் தான் தப்பிக்க ஓட்டை வைக்காமல் போகவும் வைத்த தன் மறதியை (அல்லது, பெயர்ந்து போன அறளையை) நொந்துகொண்டார். multi tasking & mutliple desktop விளையாட்டைத் தம்மிடமே காட்டிய மனிதனை நினைத்து சிவனுக்கு நெஞ்சை அடைத்தது. ஏற்கெனவே அரக்கர்களுடன் போரிட்டுத் தளர்ந்திருந்த உடல். தண்ணீர் தண்ணீ ரென்று அலறினார். யாருக்கும் கேட்கவில்லை. சிவனும் செத்துப்போனார்.

ஏன்?எப்படி?உங்களுக்குமுண்டா?

குறிப்பட்டதொரு பதிவைத் தேடுகையில் இது கண்ணில் பட்டது. சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் எழுதி draft ஆகவே இருந்தது. இன்றைக்குப் பதிகிறேன்.

````````````````````````````````````

உங்களுக்கும் இப்பிடித் தோன்றியிருக்கக் கூடும்; அநேகமாக எதையாவது பார்த்தால் ஒரு சொற்றொடரோ அல்லது ஒரு சொல்தானும் மனதில் சட்டெனப் படும். புல்லைப்பார்த்தால் "அட! புல்லு" என்பதையோ, கடலைப் பார்த்து எவ்வளவு பெரிதாயிருக்கிறது என்று நினைத்துக்கொள்வதையோ இங்கு சொல்லவில்லை.

போன கிழமை படிக்கட்டில் கால் வைத்த போது ஏனோ "உதறி விரித்தது போல"
என்று தோன்றிற்று. எப்பவாவது வாசித்த ஒரு கவிதையிலிருந்தோ கட்டுரை/கதையிலிருந்தோ வந்திருக்க வேண்டும். குட்டையான கட்டிடங்களுக்கு மத்தியில் உயரமானதைக் கண்டால், ஒரு bookmark போல என்று நினைத்துக் கொள்வேன். என் நண்பிக்கு எல்லாக்கட்டிடங்களும் (குறிப்பாக கபில (brown) நிறப் பூச்சுள்ளவை) கேக் துண்டுகள் மாதிரித்தான் தெரிகின்றன. :O) கிளைபரப்பி அடர்ந்து நிற்கும் மரத்தைக் கண்டால் "காற்றுக்கு விசிறி விடுகிறது" என்றும், இலைகள் சலசலக்க கிளைகள் ஆடுகையில் "அலையடிக்கிறது" என்றும் தோன்றும். இப்படி நிறைய.

இதெல்லாம் தன்னிச்சையாகத் வந்து விழுகின்றனவா அல்லது நாங்கள் முதலில் வாசித்த/பார்த்த ஏதாவது மனதில் தங்கி, ஒரு சிறு தூண்டல் கிடைத்ததுமே வெளி வருகிறதா? உதாரணமாக, இலையுடன் கிளை அசைகையில் அலையடிப்பது என்று எனக்குத் தோன்றுவது நேற்று நீருக்கடியிலுள்ள பவழ(ள?)ப்பாறைகள் பற்றிய விவரணப்படத்தில் பார்த்த கடற்தாவரத்தின் இலை அசைவு மனதில் தங்கியதினாலாயிருக்கலாம். காரணமிருந்தேயாக வேண்டிய கட்டாயமில்லை.

இதைப்போலவே மாறாய், ஒரு சொல்லை/ வசனத்தைச் சொன்னதும் சில உருவங்கள்/வடிவங்கள்/பிம்பங்கள் மனதில் தோன்றும். இப்படி, மனம் எதனால் இப்படிச் செயற்பட்டு புரிந்து கொள்ள முடியாத இணைப்புகளை உருவாக்குகிறது? இந்த இணைப்புகளின்/உருவ(க)ப்படுத்தல்களின் பயன் என்ன?

மழையின் ஆறு

கூப்பிட்ட பொடிச்சிக்கு நன்றி.

மதி தனது ஆறுப்பதிவில் சொன்னது போல, இந்தப்பட்டியல் இந்தக்கணத்துக்குரியதுதான். நாளைக்குக் கேட்டால் கட்டாயம் சற்றேனும் மாறியிருக்கும். கீழிருப்பவை எந்தவித ஒழுங்கிலுமில்லை. முதலாவதாக இருப்பது முதலாவதாயோ கடைசியா இருப்பது கடைத் தேர்வாகவோ இல்லை. வேண்டுமானால் ஞாபகம் வந்த ஒழுங்கென்று வைத்துக் கொள்ளலாம்.


பிடித்தவற்றில் சில
1. மென்மையான தூறலோ பேரிரைச்சலோ - மழை.
2. மழைக்கு இதமாய் வாழ்த்து மடல் (நன்றாக ஆக்குகிறேனென்று சொல்லி அதை அசிங்கமாக்குவதைப் பற்றிப் பேசப்போவதில்லை :O\ ) செய்தல் அல்லது ஒரு புத்தகத்தை யன்னற்கட்டில்/யன்னலருகில் இருந்து வாசித்தல். ஏலவே வாசித்து முடித்த ஒன்றானால் எழுமாறாகப் பொறுக்கிய ஒரு பக்கத்தை வாசித்தல் - எனக்கு மட்டுமே என்று நினைத்திருந்த பழக்கம் இன்னொருவருக்குமுண்டு என்று இரண்டு நாட்களுக்கு முன் அறியக்கிடைத்தது. வியந்து கொண்டேன்.
3. பயணிப்பது. சைக்கிளுக்குத் தனீ இடம்
4. நண்பர்களுடன் வெட்டி அரட்டையாய் இல்லாமல் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து விதயங்கள் பேசுவது.
5. பெயர் தெரியாமல் ஆரம்பம் தவறவிட்டுப் பார்த்துப் பிடித்துப் போகிற அந்தப் பின்னிரவுப் படப்பெயரின் தேடல்
6. வீணை வாசிப்பு



பிடித்த இசை/இசையமைப்பாளர்
1. SBS வானிலை அறிக்கை காட்டுகையில் போடுகின்ற இசை - அநேகமாக. இதில் இந்த மாதம் குறிப்பாகப் பிடித்தது: மாலி. இத்துடன் ABC போடுகின்ற குறும்பட (என்னவென்று வகை பிரிக்கத் தெரியவில்லை) இசை
2. ஷ்யாமாண்ணா - விரைவில் உடனடிச் சூழல் தவிர இன்னும் நன்கு அறியப்படுவார் எனும் நம்பிக்கையுண்டு. எனது பதின்மப்பருவத்தில் நிகழ்ந்ததுக்கெல்லாத்துக்கும் ஒரு பின்னணி இசையாய். (என் பாட்டு இன்னும் ஞாபகமிருக்கிறது yay!!)
3. பாத்திய - சந்துஷ்
4. இளையராஜா/ஏஆர் ரகுமான்
5. என்னையறியாமல் அசைய வைக்கும், கரைக்கும் எதுவும்
6. யானி - இன்னமும் நீட்டுத் தலைமயிரின் வசீகரிப்புப் போகவில்லை என்று அம்மா சொல்லிக்கொள்ளக்கூடும்!! ;O)


எப்போதும் சிரிக்க வைப்பவர்கள்/உற்சாகப்படுத்துபவர்கள்/சும்மா பேசினாலேயே ஆசுவாசப்படுத்துபவர்க
ள்
1.
ண்ணன்
2. சஷி அண்ணா
3. அம்மா
4. ஷாமினி
5. மிஸிஸ் ஜோண்
6. ஷகி


பாதிப்பவர்கள் / பார்வை சீரமைப்பவர்கள் (தொடர்ந்தும் நான் கற்
றுக்கொண்டிருப்பதால் இறந்தகாலத்தில் போட யோசிக்கவில்லை)
1. அம்மா
2. பென்னா (இவரெழுதி, கொதியில் நான் கிழித்துப் போட்டு அம்மா ஒட்டி வைத்திருப்பதை அனுப்பச் சொல்ல வேண்டும்) :O)
3. ரஞ்சன் அண்ணா & சாந்தி அக்கா (என் பதின்ம வயதுப் பார்வைகளை - அவர்களறியாமலே - மாற்றியதில் இத்தம்பதியருக்கு முக்கிய பங்குண்டு)
4. நண்பர்கள் சிலர்
5. வலைப்பதிவர் ஓரிருவர்
6. ரீச்சர்


வாசித்தவற்றில் பிடித்தவை
1. மணல் வீடு, அக்னி நட்சத்திரம்
2. யாரெழுதினதென்றோ பெயரோ தெரியாமல் ஆனந்தவிகடனில் வந்து, மனிங் ப்ளே
ஸ் சம்சன் புத்தக நிலையத்தில் கட்டி வைத்திருந்த அந்தப் புத்தகம். அது உண்மைக்கதையென்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.
3. Kite Runner
4. The Alchemist
5. தமிழில் ஈழமுரசோ/உதயனோ ஏதோவொன்றில் வந்து, வாசித்த விலங்குப் பண்ணை
6. The Gate
....ஏதோ இரண்டு சொன்ன மாதிரி இருந்துது..அதற்கிடையில் ஆறா?


பிடித்த திரைப்படங்க
ள்
1. அஞ்சலி
2. ஹிமாலயா
3. ப்ளாக்
4. மறுபடியும்
5. பெயர் மறந்து போன எத்தனையோ ஆசிய/சுவீடிஷ்/அரபு மொழிப்படங்கள். குறிப்பாக, மூன்றாம் பரிசான சப்பாத்துக்காக ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு முதலாவதா வந்த சிறுவனின் ஏமாற்றம் பற்றினது..
6. பாட்டுகளுக்காக & பின்னணி இசைக்காகவே பிடித்த படங்கள்.



மறக்காத இடங்கள்
1. பாட்டிவீடு
2. பெரியம்மா வீட்டுப் பின் முற்றம்
3. கம்பகா
4. ரீச்சர்வீட்டுக் கொய்யாமரமும், மாமா மத்தியானம் படுக்கிற கொட்டிலும்
5. பள்ளிக்கூட விடுதி/கடல் தெரியும் வகுப்பறைகள்
6. மனம் குழம்பினபோது போய் சிலதடவைகள் உட்கார்ந்த அந்த மத்தியான வேளையின் சுடுபாறை
...........இதுவும் ஆரம்பித்ததுமே முடிந்துவிட்டதே!!



போக விரும்பும் நாடுகள்(இலங்கை தவிர்த்து):
1. இந்தியா
2. அயர்லாந்து (அந்த அக்சன்ற்றுக்காகவும், பச்சைப்பசேலுக்காகவும்)
3. கிரேக்கம்
4. கம்போடியா
5. திபெத்
6. நோர்வே (இந்த முறை ஒழுங்காப் பார்க்க)



திருத்த வேண்டிய (என்னைப்பொறுத்தவரை) கெட்ட பழக்கம்/மாற்ற வேண்டியது
1. செயல்கள் தள்ளிப்ப்போடுவது
2. பல நேரங்களில் நேரம் தவறுவது
3. ஓம் ஓமென்று சொல்லிச் சொல்லியே ஒன்றைச் செய்யாதிருப்பது
4. குறிப்பறியாமை
5. எடுத்ததை முடிக்காமல் இன்னொன்றுக்குத் தாவுவது
6. அலட்டுவது



செய்ய வேண்டுமென நினைத்திருப்பவை
1. இன்னும் படமெடுக்க
2. நீச்சல் கற்றுக் கொள்ள
3. மலையேற
4. இன்னும் நிறைய வாசிக்க
5. இதுவரைக்கும் இல்லாமலிருக்கிற ஒரு "பெரியாள் உரையாடல்" (அல்லது ஒரு கடிதமேனும்) - என் அண்ணாவுடன்
6. லொஜிக் உதைத்ததில் நின்று போன "படைப்பை"த் தொடர



தொடருங்கள் என்று அழைக்க விரும்புவது:

ஹீரோயினி!

ஒரு ஊரிலே... இல்லை, பல ஊர்களைக் கொண்டதொரு பெரிய ஊரிலே ஒரு ராணி இருந்தாவாம். இருந்தாவாம் என்ன.. இருக்கிறாவாம். அவ கனவு காணுறதிலதான் ராணியாம். என்னது? இந்தக்கதை வேண்டாமா? பிறகு வேற கதை சொல்லிறன். இன்டைக்கு இந்தக் கதைதான்.

என்னுடன் கூடப்படித்த தோழிக்கு 21ம் பிறந்தநாளாம். கொண்டாடுறாவெண்டு போறன். அங்கே போனால் பள்ளியில் ஒரே வகுப்பை என்னோட பகிர்ந்து கொண்ட நண்பிகள். (ஒரு நண்பனையும் காணேல!!) எங்கள விட ஒரு வகுப்புக் கூடின ஆட்களில 4 பேர். அதில ஒராளுக்கு என்னைத் தெரியும். நானும் அவவும் ஆளையாள் கண்டதும், தன்னுடன் இருந்த ஆட்களுக்கு என்னை அறிமுகப்படுத்துறா. ஆனா வேறென்னவோ பெயர் சொல்லி. என்னடா இது என்று யோசிக்கிறேன். எனக்குப் பெயர் மாற்றினது எனக்கே தெரியவில்லையோ??

சரி, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வோம் என்று போகிறேன். கையிலே அன்பளிப்புகளொன்றும் இருக்கவில்லை. (நான் போறதே பெருசு. இதுக்குள்ள அன்பளிப்புத் தேவையில்லைத்தானே!!). ஒரு காவிப்பூச்சுள்ள கட்டடம். (கட்டின இடமெண்டா கட்டிடம் தானே..ஏன் கட்டடம் என்று எழுதுறோம்?? ஒருவேளை நான் மட்டுந்தானோ தாடி போர்வைக்கு வெளிலையா உள்ளுக்கா என்ட கதை மாதிரிக் குழம்பிட்டன்??)

கட்டிடமெண்டதும் பெரிசா இஞ்ச பிள்ளையிட முதலாம் பிறந்த நாளுக்கு வாடகைக்குப் பிடிக்கிற ஹோல் மாதிரியென்று யோசிக்காதீங்க... அந்தக்காலத்து இலங்கை பஸ் ஸ்டாண்ட் சீமெந்தால கட்டியிருப்பாங்களே..அதுமாதிரி ஒரு சின்ன இடம். அங்கே மற்றத்தோழிகள் சுற்றிவர இருக்க இவ சிதிலமான கொங்கிறீற்/சீமெந்துத் தரையில இருக்கிறா. ஓட்டுக் கூரை. அங்கே போனாலும் ("லும்" என்டுறது ஏனெண்டு கொஞ்சத்தில சொல்றன்) என்னைக் கண்டு கொள்வார் இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதிருந்த அதே “குழுவில சேராததால்” வாற (நானேன் சேராம இருக்கப் போறன், “சேர்க்கப்படாததால் வாற” என்டு வாசிக்கவும்) ஒரு பாதுகாப்பின்மை (என்ன பணியாரப் பாதுகாப்பு? ஆசிரியையிட்ட தனியப் பேச்சு வாங்கத் தேவையில்லை! அவ்வளவுதான்!!) அல்லது ஒரு தனிமையா/தாழ்வா உணர்ந்த மாதிரி (கனவுக்குத் திரும்புறன். நீங்களும் வாங்க) உணர்ந்தன். சரி, இவர்கள் கதைக்கப் போறதில்லை என்டபடியால இறங்கி அந்தக்கட்டிடத்தைச் சுற்றினன். இவங்க இருந்த இடத்துக்கு இடப்பகுதியில ஒரு கதவு. சரி, கொஞ்ச நேரம் இந்த அறைய ஆராய்வம் என்டு போனா அது ஒரு கழிப்பறையாம். அதுவும் பழைய தரைச் சாயலில்! வாளியொண்டு ஒரு மூலையில் கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கு. அதுக்குள்ள நிக்கத் தேவையில்லையென்று வெளியில வாறன்.

இப்ப, என்னைக் கண்டிட்டு, நண்பிகள் கூட்டம் கூப்பிடுது. (கழிப்பறைக்குள்ள போய் வாறதுதான் தகுதியா அல்லது முன்னம் கண்ணுக்குத் தெரியாம இருந்து அதுக்குள்ள போயிட்டு வந்த பிறகு தெரியிறனா என்டு எனக்கு விளங்கல்ல). வாழ்த்துறன் என்ட தோழியை. அப்பத்தான் (கனவிலையே) யோசிக்கிறன், என்னண்டு இவக்கு 21 வயசா இருக்கும்? இந்த வருசம் n வயசாயெல்லா இருந்திருக்கோணும் என்டு.

அப்பிடி என்ட மூளை கொஞ்சம் வேலை செய்ய எத்தனிக்கையில, கீயா மாயாவெண்டு ஒரே சத்தம். என்னெண்டு பாத்தா காலிமுகத் திடல்ல மாதிரி படிக்கட்டோட உரசி கடலலையடிக்குது. விளிம்புக்குப் போய் நின்டு பாக்கிறன். பெரியதொரு அலையெழும்பி (கடற்கோள்?) வருது. ஆனா இன்னும் கரைக்கு வரயில்ல. அலை எழும்பின படி நிக்க, அதுக்குப் பின்னாலும் முன்னாலும் என்டு மாறி மாறி (தொ.கா.வில, படம்பிடிச்ச எதையாவது, இன்னொண்டோட ஒப்பிட க்ராபிக்ஸ் பயன்படுத்திற மாதிரி) ஒவ்வொரு நகரங்கள் தோன்றுது. என்னெண்டா, அலையிட உயரத்தோட அந்த நகரங்களில இருக்கிற கட்டிடங்களின்ட உயரத்தை ஒப்பிட்டு, எது உயரமா இருக்கோ, அதுக்கேத்த மாதிரி உயரமானதைப் பின்னுக்கும், கட்டையானதை முன்னுக்கும் படபடவெண்டு மாறி மாறிக் காட்டுப் படுது. (ஆர் காட்டினதெண்டு எனக்குத் தெரியாது!!). பாத்தால் அலை கரைக்கு வருது (பின்ன, எவ்வளவு நேரந்தான் அசையாம க்ரபிக்சுக்கெண்டு நிற்கிறது).

இப்பிடி அலை வந்தா தடுக்கவெண்டு(!!) ஒரு திரை மாதிரி ஒன்று வைச்சிருக்கிறாங்க. கடல்ரோந்துப் படையினரும் அவங்கட விசைப்படகில வந்து ஸ்டைலா ஒரு வளைவடிச்சு நிண்டாங்க. திரைய இறக்கோணும். ஒராள் முயற்சிக்கிறார். அது ஒரு கம்பில சுத்தியிருக்கு. அடிக்கிற காத்தில அவரால திரைய விரிக்க முடியுதில்ல. அந்தக் கம்பிட ஒரு முனை வந்து நாங்க நிண்டு புதினம் பாக்கிற தரைக்கு வந்து "டணங்" கெண்டு விழுகுது. அப்ப ஒராள் வந்து, அந்த "டணங்"கி விழுந்ததைப் பிடிச்சு இழுக்க, திரை விரியுது. எல்லாரும் வந்து நிண்டு பாராட்டுறாங்க. ஆரையா? என்னைத்தான். ஏனா? கடல் ரோந்து வீரரே செய்யக்கஷ்டப்பட்டதை நாந்தான் செய்து திரைய விடுவிச்சது.

குறிப்பல்லாத குறிப்பு:: பாராட்டு விழாவோ ஏதோவெண்டு கனவு தொடரத் தொடங்க, விடிகாலைக் கனவு பலிக்குமெண்டு தெரிஞ்சோ அல்லது தெரியாமலோ, நான் கனவிலையாவது ஒரு VIP ஆகிறது பிடிக்காமலோ மிச்சக்கனவைக் கலைத்த தொலைபேசி அழைப்பை .........!!!

தேங்கிய சில - 3


தெருவில் அலைந்தவர்களும், பாலியல் தொழிலாளியாயிருந்தவரும், வெளிநாடு போகவென்று வந்து முகவரால் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாய் நின்றவரும், பெண்போராளியென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரும், இன்னுமின்னும் எத்தனையோ சூழ்நிலைகளால் தன்னிடம் தள்ளப்பட்டவர்களைக் கொண்ட அதே "பெண்களுக்கான தடுப்பு நிலையம்".

தையல், கூடை பின்னல் போன்ற "பெண்களுக்குரிய" கைத்தொழில்கள் கற்றுத் தருகிறார்கள். அழகழாக பொம்மைகளும், ஆடைகளும் கைவினைப்பொருட்களும் நிறைந்து கிடக்கின்றன. அதனை விற்பார்களாம்.(விற்று வரும் காசு யாருக்குப் போகும்? தயாரித்தவர்களுக்கு உரிமையானது அவர்களிடமே போய்ச் சேருமா அல்லது சுரண்டலா என்று இன்றைக்குத்தான் கேள்விகள் எழுகின்றன.)

நன்னடத்தை(!?)யுடையவராய், நம்பிக்கையுடையவராய் (தொடர்ந்து) காணப்படின், அலுவலகங்கள், அங்காடிகள், என்பவற்றைச் சுத்தம் செய்வதைக் குத்தகைக்கு எடுத்
துக் கொண்ட நிறுவனத்தின் மூலம் வேலைக்கனுப்பப்படுவர். அப்படி வெளியே போனவர்களில் சிலர் வேலைக்குப் போய்த் திரும்பாமல் தப்பின சம்பவங்களுமுண்டு. அப்படி நடந்தால் அவவுடன் கூடப் போனவர் பாடு அன்றைக்கு அவ்வளவுதான். அடியும் வசவுகளும் வாங்கி, வேலைக்குப் போவதிலிருந்தும் நிறுத்தப்படுவார்.

இத்தடுப்பு நிலையத்திற்கு ஒரு பக்கத்தில் தொழிற்சாலையொன்றுண்டு. அங்கே வேலைக்கு வருபவர்களுடன், மேலாளருக்குத் தெரியாமல் மதிலால் எட்டிப் பேசிச் செய்திகள் அறிவதில் ஆரம்பித்து, காதல் வயப்பட்டு தப்பியோடுவதும், காதல் முறிவடைந்தால் ப்ளேடால் கைகளைக் கிழித்துக் கொண்டு குருதி இவர்களுக்கிருக்கும் ஆசையை, தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதும் நடக்கும். இருக்கிற ஒரு தொலைக்காட்சியில் ஒன்பது மணி வரை நிகழ்ச்சிகள் பார்ப்பதும், ஆங்காங்கே உட்கார்ந்து கதை பேசுவதும் மட்டுமே இவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது.

வசிக்கும் சூழலில் காவலாளி தவிர ஆண்வாடையே இல்லை. என்னதான் அடைத்துக் கிடந்தாலும், மனதுக்குக் கடிவாளம் போட்டாலும், அவற்றையும் மீறி உடலின் தேவைகள் தலைகாட்டுவதில் தன்னினச் சேர்க்கையாளராகின சில பெண்களுடனும் பேசக் கிடைத்தது. மற்றப் பெண்களால் இவர்கள் ஒதுக்கப்படவில்லை. இப்பெண்களின் முதுகுக்குப் பின்னால் இவர்களைப் பற்றிக் கதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. போன பதிவில் சொல்லியிருந்த பெண்ணிடம் பேசுகையில் தன்னினச் சேர்க்கையாளரான இப்பெண்கள் குறித்து அவவின் கருத்துக்க் கேட்டதற்கு அவ "அது அவர்கள் சொந்த விசயம். எனக்கு வெறுத்தது அவர்களுக்கும் வெறுக்க வேண்டும் என்றில்லையே. உடல் தேவையை நிறைவேற்ற ஒரு வழி. அவ்வளவுதான்" என்று சொன்னதில் இருந்த முதிர்ச்சியை வழமையாக் குறுகிய கண்ணோட்டத்துடனே பாலுறவைப் பார்க்கும் எம் சமூகத்திலிருந்து வந்த ஒருவருடையது என்று நான் உணரக் கொஞ்சக் காலம் சென்றது.

மறந்து போயிருந்த இந்தத் தடுப்பு நிலையத்தில் இருக்கிறவர்களைப் பற்றின நினைவு இதை எழுதத் தொடங்கியதும் ஞாபகங்களை அசைபோட்டுப் பல கேள்விகளை எழுப்புகிறது. என் நினைவுத் திறனும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நிலையத்தினதும் பெண்களினதும் சுகாதார நிலை என்ன? அவற்றைக் கவனிப்பது யார்?
வேலைக்கனுப்பப்படும் பெண்களினது சம்பளம் அவர்களிடம் சேர்கிறதா?
கைவினைப்பொருட்கள் விற்ற பணத்திற்கு என்ன நடக்கிறது?
வெளிவாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப்படுகிறார்களா?
வெளியில் வந்தால் இவர்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது?

விடை தெரியாத கேள்விகள் இன்னும் இன்னும் எழுகின்றன.

குறிப்பு: இன்னும் விரிவாக எழுதலாமே என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்னுமின்னும் இந்த அனுபவங்களைப் பற்றி தோண்டித்தோண்டி யோசிக்கையில் வருகிறதெல்லாம் மனவருத்தத்தையும் எழுப்பி, என்னைப்பற்றி நிறையக் கேள்விகளையும் முன்வைக்கிறது. அவை காரணமாகச் சுருக்கிச் சொல்லியிருக்கிறேன்.

தூது

கீழ இருக்கிறது போலத்தான் எண்ணமோடினது, சில சமீபத்திய புகைப்படங்களைப் பாக்கக் கிடைச்சதில. வழமையா எழுதுற மாதிரி எழுத வரேல்ல. அப்பிடி இருந்திருந்தா எவ்வளவோ நல்லாருந்திருக்கும் என்டு எனக்கே தெரியுது.

(disclaimer: பின்குறிப்பை வாசிச்சுட்டு மேற்கொண்டு வாசிக்கிறதா என்ட முடிவுக்கு வரவும். )

-------------------

எனக்குள் நிறைவது தான்
அவர்களுக்குள்ளும்

எவர் கடந்து போகையிலும்
ஏற்படும் அந்தச் சிறு வெளியை
தடவிச் சென்று நிரப்பும் நாசியின் நட்பு.

இன்று என்னுட் புகுந்து வெளிவருங் காற்றே,
நாளையோ மறுநாளோ
எப்போதேனும் அவர் நாசி சேர்ந்தால்
நீ என்னுள்ளிருக்கையில்
அவர்களை நினைத்துக் கொள்வதைச் சொல்.

இத்தனை நாட்களிலும் - நான்
அவர்களைக் காணாத போதுகளிலும்
அவர்கள் என்னை எண்ணாத போதுகளிலும்
எமக்குள் நிறைந்திருந்தாய் - காற்றே
போய்ச் சொல்,
நினைவுகள் சுருங்கிய போதிலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று.

என் கண்களுக்குத் தெரியும்,
நான் பார்த்தவை - இன்று
இக்கரையில் நானும்
அக்கரைக்கு அப்பாலுமாய் அவர்களும் நிற்கையில்
தூரங் கடந்த சகபயணி
காட்டிப்போன காட்சிகளில்
முன்னை நாட்களில் - பிரிவென்பதைச்
சந்திக்காதவரை நான் கண்டவை
இன்றைய பொழுதில் வேற்றுருவாய்

அப்படியேதானிருப்பர் என்றவென் எண்ணம்
பொடியாகி உன்னில் கலக்கக் கண்டாய்
ஆண்டுகளின் பசித்தீவிரத்தில்
உண்ணப்பட்டுப் போயிருக்கின்ற
உறவுகளிடம் - காற்றே
போய்ச்சொல்
உடல்கள் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

உன்னைக் கிழித்தபடி பறந்த - அந்த
உந்துருளிச் சவாரிகளின் சாரதியை
பயணி மீண்டும் காணும் வரை
சாரதிக்குப் பயணியை ஞாபகமில்லாப்
பொழுதொன்றில் அவருக்கும்,
உன்னூடாகக் கைகள் வீசிக் - கிளையிருந்து
குதித்து,
கைகளும் வால்களும் ஆட - கால்களுதறி
ஆளையாள் கண்டுகொள்ளும் வஞ்சமில்லா
வாஞ்சை மட்டும் நிரம்பியதாய்
ஓடிக் களைத்த போதுகளில்,
அவதி அவதியாய்ப் பேரளவுகளில்
உன்னை விழுங்கிய - என்
சிறுபருவத்து மாந்தரும் விலங்குகளும்,
அடிவாங்கிக் கற்ற பின்னும்
புகலிடந் தருமந்தத் தாவரங்களும்
எங்கெங்கிருப்பினும் - காற்றே
போய்ச்சொல்
தோல் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

அவர்களைத் தொட்டு - என்னிடம்
மீள்வாயெனின், எனக்கும் வந்து
சத்தமாய்ச் சொல்லிப் போ காற்றே
காலம் போல நேசிப்பும்
ஒருபோதும் சுருங்காதென்று.

-------------------

குறிப்பு: அறுவையாயிருக்கு(ம்! கட்டாயமா) . பாவம் நீங்க.

தேங்கிய சில - 2

அந்தத் தடுப்பு நிலையத்திற்குப் போவதற்கு கொஞ்சம் ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தது. துணிமணிகளும், முக்கியமான பொருட்களாக சவர்க்காரக்கட்டிகளும், சானிற்றரி நப்கின் முதலியனவும் வாங்கியும், சேகரித்தும் கொண்டு போனோம். அங்கே போகிற ஒவ்வொரு தடவையும்.

கொண்டு போனவற்றை மேலாளரிடம் கொடுத்துவிடுவோம். அவவிடந்தான் கொடுக்கவும் வேண்டும். அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்று மட்டுமே அறிந்து கொள்ளமுடியும். சரியான முறையில் பங்கிடப்பட்டதா என்றறிய இயலாது. மாதத்துக்கு ஒரு சவர்க்காரம். அதுவே உடலுக்கும் துணி துவைக்கவும். எங்கள் போன்று நிறுவனத்தினர் யாரேனும் போனால் மட்டுமே உடலுக்கும் துணி துவைக்கவும் என்று தனித்தனியான ச. கட்டிகள் கிடைக்கும். சமயத்தில் உடுப்பைக் கழுவித் தம்மைக் கழுவாமலும், மாறியும் நடப்பது வழமையென நேர்முகங் கண்ட பெண் சொன்னா. அவ சொல்கையில், குளியலறையில் கரைத்துக் கரைத்து நுரையூதுவது ஞாபகம் வந்தது இப்பவும் ஞாபகமிருக்கிறது. மாதா மாதம் வரும் உபாதைக்குத் துணி பாவிப்பார்களாம். அதைக் கழுவத்தான் சவர்க்காரச் சேமிப்பு மும்முரமாக நடப்பதாம். எப்ப போனாலும், இவர்கள் கேட்பது சவர்க்காரம்! இப்படிப்பட்ட சூழலில் தோல் நோய்கள் பரவலாயிருப்பது ஆச்சரியமில்லை.

[19..20 வயதென்றாலும், அப்போதெல்லாம் சிந்திப்பதில்லை. இங்கிருக்கும் பெண்களின் சுகாதாரம் பற்றிய கேள்விகளோ, அடிப்படைத் தேவைகளினைப்பற்றியோ, அவற்றின் நிலையைப் பார்க்கையில்/அறிகையில் ஏற்படும் அதிர்ச்சி தவிர, என்னிடம் கேள்விகளோ, அவற்றுக்கான பதிலோ, அல்லது அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதகு என்னாலான முயற்சிகளைச் செய்யும் தொடர்ந்த ஆர்வமோ இருக்கவில்லை. இப்போது நினைத்துப் பார்க்க, என்ன மாதிரி ஒரு கிணற்றுத் தவளையாய் இருந்திருக்கிறேன்.. சூழலை/சமூகத்தைப் பற்றிய உணர்வின்றி இருந்திருக்கிறேன் என்பதை நினைக்க வெட்கமாயிருக்கிறது. ஏன் அப்படி இருந்தேன்? இப்பவும் சில வேளைகளில் யோசிப்பது, ஒருவேளை நான் கொஞ்சம் slowவோ என்று. அதாவது 5 வயசில் யோசிக்கிறதை 7இல யோசிப்பது, 15 இல விளங்கியிருக்க வேண்டியது 18இல மண்டையில் உறைப்பது..இப்படிப் பல. அதன் தாக்கமோ? இது என்னைப் பற்றின ஆய்வாகப் போக முதல் நிறுத்துறன்.]

நேர்முகங் கண்டவர்களில் ஒரு பெண், திருகோணமலைப் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டோ மூன்றோ வயதான குழந்தைக்குத் தாயாம். அது நான் இவரிடம் பேச இரண்டு வருடங்களுக்கு முன். வெளிநாடு செல்வதற்காக முகவரான ஒரு தெரிந்த பையனை நம்பி வந்தவர். முகவர் ஒரு விடுதியில் அறையெடுத்து இவரைத் தங்க வைத்து உணவு உடையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஓரிரவு, பணத்தைத்தா நாளையன்றைக்கு நீ விமானமேறுவாய் என்று சொல்லிப் பணமெடுத்துப் போனது போனதுதான். அதற்குப் பிறகு காணவேயில்லை. பார்த்துப் பார்த்து இருந்திருக்கிறா..இரண்டு நாளாயிற்று. அன்றிரவு பாலியல்தொழிலாலியென்று தவறாக அடையாளங் காணப்பட்டு காவல் நிலையத்தில் ஒரு வாரமிருந்தவர், வெளியில் வந்ததும் விடுதிக்குப் போகப் பிடிக்காமல் ஊருக்குப் போகத் தெரியாமல் தெருவில் அலைந்ததில் உண்மையாகவே பாலியல் தொழிலாளியாக்கப்பட்டார். இடையிடையே இத்தொழிலுக்கேயுரிய காவற்துறைக் கெடுபிடிகளில் காவல்நிலையம் சென்று வந்திருக்கிறார். கடைசி முறை பிடிபட்ட போது அங்கிருந்த அதிகாரியிடம் தன்னைத் திருப்பியனுப்ப வேண்டாமென்று கெஞ்சி, ஊருக்குப் போக உதவுமாறு கேட்டதற்கு அவ்வதிகாரி இங்கு கொணர்ந்து விட்டிருக்கிறார்.

என்னிடம் தனது தொழிலைப் பற்றிப் பேச நிறையக் கஷ்டப்பட்டார். இடையிடையே "சின்னப்பிள்ளைகளுக்கு/திருமணமாகாதவர்களுக்குச் சொல்லும் விசயமில்ல" என்று தணிக்கையும் செய்வா. ஒரு ஆறுதல், இவவின் பா. தொழில் முதலாளி எயிட்ஸ் பற்றி அறிவுறுத்தியிருந்தது. தான் பாவித்த காப்பு முறைகள் பற்றிச் சொன்னா. சில நேரங்களில் பார்வைகள் வெறிக்கும்.

உழைக்கிற பணத்தில் குழந்தைக்குப் பொருட்கள் வாங்கி அனுப்புவதாம். குழந்தை பற்றிப் பேசயில் கண் கலங்கும். வீட்டுக்குப் போகக்கிடைத்தால் போக விரும்பினாலும், எப்படித் தன்னால் கணவனை/குழந்தையை/பெற்றாரை எதிர்கொள்ள முடியும் என்கிற கேள்வி இருக்கிறது. அவ்வளவு கறை படிந்தவராக உணர்கிறார். எவ்வளவு தேய்த்தாலும் படிந்த கறை போகுமா எனக் கேட்பார். சொல்வதற்குப் பதில் தெரிந்ததில்லை. வெளிநாடு போகவென்று முகவரை நம்பி வந்த
இவவினுடையதைப் போன்ற கதையுடன் இன்னுஞ் சிலர் அங்கு இருக்கிறார்கள்.

நானும் படங்காட்டுறன்


கொஞ்ச நாளாய் [26ம் மாடிக்கு வேலையில் குடி பெயர்ந்ததிலிருந்து என்று வாசிக்கவும் :O) ]கட்டடங்கள்/சாளரங்களைப் படமெடுக்கும் வியாதி வந்திருக்கிறது.

எடுத்தவற்றில் இரண்டு:

கண்ணாடியில் கோபுரம்

பட்டுத்தெறித்ததில் நெளிந்த யன்னல்

சொல்லத்தான் நினைக்கிறேன்

நிறையச் சொல்லோணும் போல, ஆனா என்னத்த எப்பிடி எங்க தொடங்கிச் சொல்லுறதெண்டு தெரியாம முழிச்ச/தவிச்ச அனுபவம் இருக்கா? அப்பிடித்தான் எனக்கு வழமையாவே இருக்கிறது.

nervousஆனா (இல்லாட்டிப் பொய் சொல்லக்குள்ள)தான் நான் வழமையா வளவளவெண்டு அலட்டுறது. இல்லாட்டிக் கொஞ்சம் அமைதியா நல்ல பிள்ளையா (இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ட மாதிரி) இருந்துகொள்ளுவன். ஆனாலும் எப்பவும், ஆரோடையும் பகிர்ந்து கொள்ளோணும் என்டு நினைக்கிறவைகளைப் பற்றிச் சிந்தனை ஓடும். படிச்ச புத்தகமோ, நடந்த விசயங்களோ இல்லாட்டி மனசில வாற எண்ணங்களோ - இப்பிடி நிறைய. என்னதான் நெருங்கின நட்பிருந்தாலும், எதையும் பேசக் கூடியதாயிருந்தாலும் பல விசயங்கள் சொல்லப்படாமலே போய் விடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில இது கூடினாப்போல தான் தெரியுது. புதிதாய் எதையுமே கதைக்ககூடியவர்களின் அறிமுகம் கிடைத்து நல்லாப் பழகியிருந்தாலும், ஏதோ தடுக்கும். இவர்கள் என்ன நினைப்பார்களோ என்டுற நினைப்பாலயோ என்டு நீங்கள் நினைச்சா நான் பொறுப்பில்ல. (அந்த எண்ணம் எப்பவாவவது வருமா என்டு அம்மா ஒரே கேக்கிறவ). என்னெண்டு சொல்லத்தெரியல்ல. ஆனா ஏதோ
ஒன்டு - இதப்பற்றிக் கதைக்காம விடுவம் என்டு எண்ண வைக்கும். அதுவும் சில விசயத்துக்குத்தான். [குழப்புறனா?] அது என்ன, ஏனெண்டு இன்னுந் தெரியாது.

சொல்லாமப் பூட்டிப் பூட்டி வைக்கிறதுகள் நிறைஞ்சு மூச்சு முட்டுமாப் போல வரும் சில நேரம். அப்ப மட்டும், வன்தகடு நிறம்பினா கொஞ்சக் கோப்புகளை அழிச்சு இடமெடுக்கிற மாதிரி, சிலது மட்டும் வெளியில கொட்டும். எனக்கிருக்கிற ஒரு தோழிக்கு இதுக்கு முற்றிலும் எதிர்க்குணம். அவ சொல்லாம உள்ளுக்கு வைச்சுக் கொண்டிருக்கிறதுதெண்டு பாத்தா ஒருகைவிரல் விட்டு எண்ணலாம். அந்தளவுக்குக் கதை. முதலொருக்கா அவவிட்டக் கேட்கப் போக, உள்ளுக்கு வைச்சிருந்து என்ன செய்யிறது? சிந்தனை ஊறுகாய் போடுறதோ என்டு பதில் தந்தவ. எப்பிடி அவவுக்கு ஏலுமாயிருக்கென்டு இப்பவும் யோசிக்கிறனான்.

சரி நேர இன்னொராளிட்டக் கதைக்கத்தானே வேண்டாமெண்ணுது மனம், அப்ப எழுதிப் பாப்பமெண்டாலும் (அதுக்கு ஒரு "இது" வேணுமெண்டதையெல்லாம் கணக்கில சேர்க்காம விடுவம்), ம்கூம், வரமாட்டுதாம். சொல்லல்லண்டா ஒண்டும் குறையப் போறதில்லத்தான். ஆனா எத்தினையோ பேர் ஒரு ரெண்டு வரிக் கவிதையிலையோ, இல்லாட்டி ஒரு கதையிலையோ, கட்டுரையிலயோ தங்களை/ தங்களின்ட எண்ணங்களை எவ்வளவு அழகா வெளிப்படுத்திறாங்க என்டு பாத்தால் ஆசையா இருக்கு. அட, இதை நானும் யோசிச்சனான்/வாசிச்சனான்/பாத்தனான் என்டு மனதில படும். ஆனா அந்தளவுக்கு எளிமையா அழகா வெளிப்படுத்தத் தெரியல்லையே என்டு தோணும். பிறகென்ன, சொல்லத் தெரியாட்டிச் சொல்லத் தேவையில்ல என்டிட்டு இன்னும் சேரச் சேர பூட்டிப் பூட்டி வைக்கிறது தான். அது என்னையுமறியாமலேயே வெளிவாறது தாதிக்கு முன்னால உடைஞ்ச கொட்டின மாதிரிச் சந்தர்ப்பங்களிலதான்.

இனி அப்பிடி ஒரு சந்தர்ப்பம் வேண்டாமெண்டு எழுதத் தொடங்கினன். ஏன் அப்பிடிச் சொல்லவெளிக்கிட்டனான்? என்ட எண்ணங்கள் என்னையறியாம வெளிவாறதை எண்ணி வெட்கப்படுறனா? ஆனா அப்பிடி வெளிவாறது எப்பவும் எல்லாருக்கும் நடக்கிற ஒண்டுதானே.. என்டு யோசிக்கத் தொடங்கி, பதில் இன்னும் கிடைக்காம, கேள்வியையும் சேர்த்துப் பூட்டி வைக்கிறன், இப்போதைக்கு.

சுயசரிதை

தனது ஆய்வுக்காக "உம்மைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக" என்று (எல்லாரையும்) கேட்ட மதுமிதாவுக்கு-

முன்குறிப்பு: ஆய்வில் என் பதிவைச் சேர்த்துக் கொள்ள இத்தால் (சுயநினைவுடன் என்று நினைத்துக் கொண்டு..) சம்மதம் அளிக்கிறேன்.

வலைப்பதிவர் பெயர்: ஷ்ரேயா

வலைப்பூ பெயர் : "மழை"

சுட்டி(உர்ல்) : http://mazhai.blogspot.com

ஊர்: எதைக் கேட்கிறீங்க? பிறந்ததா? வளர்ந்தவையையா அல்லது வசிப்பதையா? இல்லாட்டி பிடிச்சதையா???

நாடு: முன்னம் இருந்தது இலங்கையில. இப்ப வசிப்பது அவுஸ்திரேலியாவி
ல.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான். (தன் கையே தனக்குதவியாமே!!)

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: தமிழ்ப்பதிவிலே.. 01/மார்ச்/2004

இது எத்தனையாவது பதிவு: நூறுகள் - 01, பத்துக்கள் - 04, ஒன்றுக்கள் - 08

இப்பதிவின் சுட்டி: http://mazhai.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தது எப்பவுமே நாட்குறிப்பு மாதிரி இருந்தது. வாசித்த தமிழ்ப்பதிவுகளின் உள்ளடக்கம் வித்தியாசமாய் இருந்ததால், முயற்சித்துப் பார்க்க என்று சோதியில் கலந்தேன்.

சந்தித்த அனுபவங்கள்: 90% நல்லவையே

பெற்ற நண்பர்கள்: அருமையானவர்கள்.

கற்றவை: நிறைய. என் பார்வைகள்/கருத்துக்கள் சீர்ப்பட்டிருக்கின்றன

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எப்பொழுதும் இருந்ததுதான். புது ஊடகம், அவ்வளவுதான் வித்தியாசம்.

இனி செய்ய நினைப்பவை: ஆரம்பிப்பதை முடிப்பது. நிறைய இடம் பார்க்க வேண்டும். புத்தகங்களும் வாழ்க்கையும் நிறையப் படிக்க வேண்டியதிருக்கிறது. இன்னும் நிறையச் சிரிக்கவும் வேண்டும்.. நான் சிரிப்பது காணாதாம்!! ஆ!மறந்துவிட்டேன்..தண்ணீரும் குடிக்க வேண்டும் இப்போதையதை விட அதிகமாக.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எல்லாரையும் மாதிரி ஆசையும் கோபமும் கனவும் ஆதங்கமுமென்று எல்லாம் நிரம்பிய, இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறவர்.(<<<"வள்" போடாமல் "வர்" போட்டதன் காரணம்: தன்னைத்தானே முதல்லே மதிக்க வேணுமாமே!)

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: 1)மனிதர்களைப் போலச் சிறந்த ஆசான்கள் யாருமில்லை.(தத்துவம் தத்துவம்!!). 2) நன்றி.. வணக்கம்.

தேங்கிய சில - I

பெண்களுக்கான அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். அங்கே வரும் பெண்ணொருவர் என்னைக் கூப்பிட்டு, இன்னொரு நிறுவனத்தின் சார்பில் சில பெண்களை நேர்முகங் காணவேண்டியிருக்கிறது. முடியுமா எனக் கேட்டா. சரியென்று ஒத்துக் கொண்டேன். நேர்முகத்திற்குரிய கேள்விகளடங்கிய தாளில் என்னவெல்லாம் இருந்ததென்று ஞாபகமில்லை. ஆனாலும் காணவிருந்த பெண்களிடம், அவர்களைப் பேசவிட்டு, அந்தப் பேச்சோட்டத்தின் இயல்பு மாறாமல் கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்திருந்தார்கள்.

பெண்களுக்கான தடுப்பு நிலையம். என்னையும், அழைத்த பெண்ணையும் சேர்த்து மூவர் மட்டுமே. பழைய அரச மருத்துவமனைகள் பார்த்திருக்கிறீர்களா? காவி நிறமடித்து, சீமெந்துத் தரைக்குச் சிவப்படித்து, இருக்கையென்ற பெயரிலே இற்றுப் போன வாங்குமாக... அப்படித்தான் இருந்தது நாங்கள் போன இடம். நாலைந்து கதிரைகளும் போடப்பட்டிருந்தன. அவை அந்தச் சூழலுக்குப்
பொருத்தமில்லாமல் திணிக்கப்பட்டவைகளாய்த் தெரிந்தன.

முன்னமே இவர்கள் அனுமதி பெற்றிருந்தார்கள். அதனால், பணிப்பாளரைப் பார்த்ததும் ஒரூ குறிப்பேட்டில் எங்கள் பெயர், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றைக் குறித்துக் கொண்டு உள்ளே போக அனுமதித்தார்கள். உள்ளிருந்து வெளியே வரவோ, வெளியிலிருந்து உள்ளே போகவோ (எப்படிப் பார்த்தாலும்) ஒரே ஒரு கதவுதான். அந்த மரக் கதவுக்கும் ஒரு கதவு. பூச்சுக்கும் மேலாய் ஆங்காங்கே துரு தலைகாட்டும் இரும்புக் கிராதி போட்டது. மரக்கதவு திறந்திருக்கிறது, இரும்புக் கதவுக்கு ஆமைப் பூட்டு. கதவைத் திறக்கப் போன காவலாளியுடன் கூடவே போகையில், அந்தக் கதவுக்குப் பின்னால் எத்தனை வகை உணர்ச்சிகளைத் தேக்கிக் கொண்ட முகங்கள். புன்னகைக்கும் அங்கே பஞ்சமிருக்கவில்லை. கதவு திறக்கிறது. ஓடி வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எங்கேயிருந்து வருகிறோம், எதற்கு, என்ன கொண்டு வந்திருக்கிறோம்... கேள்வி மேல் கேள்வி. பணிப்பாளர் இந்தக் கூச்சலைக் கேட்டு, வந்து போட்ட அதட்டலில் கலைந்து போனார்கள். ஆனாலும் தூண்களுக்குப் பின்னால் நின்று பார்த்தபடி.

ஒரு பெண் எங்களைக் கவனிக்கவேயில்லை. கையில் குழந்தையை வைத்துத் தாலாட்டுவது போன்று பாவனை செய்து கொண்டிருந்தார். திடீரென கைகளை ஆட்டிப் பெருங்குரலெடுத்து "ஐயோ! என் பிள்ளை" என்று கத்தினா. அந்தக் கத்தல் அதிர்வைக் கொடுத்தது எனக்கு மட்டும்தான். மற்றவர்களெல்லாரும் ஒன்றும் நடவாதது போல் தத்தம் வேலை. என்னுடன் வந்தவர்களும் கூட. என்னுடன் வந்த பெண்ணொருவ நாம் அன்றைக்கு வெளியில் வந்ததும் அந்தக் கத்தலிலும் சூழலிலும் என் முகம் வெளிறிப் போனதாகச் சொல்லப் போவது எனக்கு அப்போது தெரியவில்லை.

என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிறந்து சில நாட்களேயான குழந்தையுடன் தெருவில் அலைந்திருக்கிறா. பிடித்துக் கொண்டு வந்து உடல் நலமின்றி இருந்த குழந்தையை அவரிடமிருந்து பிரித்துத் தனியே வைத்திருந்திருக்கிறார்கள்.

[அவவைப்பார்த்ததும் ஆறாம் வகுப்புப் படிக்கையிலே மட்டக்களப்புப் பேருந்து நிலையத்தில் பைத்தியக்காரி என்று எல்லாராலும் ஏளனஞ் செய்யப்பட்ட பெண்தான் ஞாபகத்திற்கு வந்தார். எப்படியென்று இப்போது ஊகிக்கக்கூடிய நிலையிலே அவர் கருத்தாங்கிக் குழந்தை பெற்றெடுத்து, பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்குக் காணாமல் போய் மீண்டும் ஒரு சுட்டெரிக்கிற இரண்டு மணி வெயிலில் தேநீர்க் கடையில் வாங்கின கொதிக்கும் தேநீரை அந்தக் குழந்தைக்குப் புகட்ட முயற்சித்து அது வீலென்று அலறியதில் அடி கொடுக்கும் பெண்ணாய் மீண்டும் அதே பேருந்துத் தரிப்பிடத்திற்கே குடிவந்தா. பிற்பாடு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை.]

தடுப்பு நிலையப் பெண், குழந்தை இறந்ததைச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறா. காண்பவர்களிடம் போய் "என் குழந்தையைக் கண்டாயா" என்பதும், பதில் சொல்லாவிடில் அவர்களைத் திட்டுவதுமாக இருந்தவவின் அறிமுகத்துடன் அந்த தடுப்பு நிலையத்தின் கதவு அன்றைக்குத் திறந்து கொண்டது.

புதுசு


யாகூ மின்னஞ்சல் புது வடிவமா புதுசா வடிவா வந்திருக்கு என்று போன வாரம் கிட்டத்தட்ட 2 மாசத்துக்குப் பிறகு யாகூவை எட்டிப்பார்த்த போது கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். நேற்றுப் பார்த்தா "சுடு அஞ்சல்" அந்த ஐடியாவத் தானும் சுட்டு புதுப் பிறவி எடுத்திருக்கு! எல்லாரும் கூகிளின் "சுயமாகப் புதுப்பிக்கிற" விளையாட்டுத்தான்.

ஹொட்மெயிலில், அவுட்லுக்கில் செய்வது போல வலதுசொடுக்கில் செய்கைகளுக்கான தெரிவும், சொடுக்கி, ஒன்றிலிருந்து இன்னொரு ஃபோல்டருக்கு (இதுக்குத் தமிழ் என்ன? "கோப்புப் பை"யா?) இழுத்துப் போடவும், அஞ்சலின் உள்ளடக்கத்தைப் பார்க்க ஒரு பகுதியுமென்று நல்லாத்தானிருக்கிறது.


யாகூ தனது இணையத்தளத்தையும் புது வடிவமாக்கியுள்ளது. அஞ்சல் கணக்கில் நுழைந்தால் கிறுக்குவதற்கு கிறுக்கற்புத்தகமும் தருகிறார்கள்.

ஆறுதலாய் ஆராய்ந்து பார்த்து ஒரு ஒப்பீடு எழுதணும்.

என்ன விலை

திரு(க்)கோணமலைப் படுகொலை சம்பந்தப்பட்ட கட்டுரைகளிரண்டுடன் படங்களும் கைக்குக் கிடைத்தன. பார்த்த பின் ஏன் பார்த்தோமென்று இருந்தது. தாங்கவே முடியவில்லை. மண்ணில் அரைவாசி புதைந்து கிடந்த உடல், தாயின் சடலத்தினருகே தலையின்றிக் குழந்தை... எழுதும் போதே மனம் பதைக்கிறது. நேரிற் பார்த்தவருக்கும் படமெடுத்தவருக்கும் எப்படி இருந்திருக்குமென்று கற்பனை பண்ணவே தயக்கமாயிருக்கிறது.

இலங்கை சென்று, போன கிழமை திரும்பிய நண்பரிடம் (அவருக்கு நான் அந்தக் கட்டுரை இணைப்பினை அனுப்பியிருந்தேன்) இதைப்பற்றிப் பேசுகையில், "நீங்க அனுப்பினதெல்லாம் பார்த்தா வெளிநாடுகளிலே இருக்க்கிறவர்களுக்குத்தான் மனம் வருத்தப்படும். ஏனென்றால் வெளிநாடுகளிலே குறிப்பாகத் தொலைக்காட்சிகளிலே காட்டுபவைக்கெல்லாம் பார்ப்பவர் மனதைக் கருத்தில் கொண்டு viweer advice என்று வன்முறைக் காட்சியா, சிறியவருக்கு உகந்ததா, பயப்படும்படியானதாய்க் காட்சியமைப்பு இருக்குமா என்றெல்லாம் நிகழ்ச்சி/செய்தி தொடங்க முன்னமே போடுவார்கள்.அங்கே இதெல்லாம் இல்லை. எடுத்தவுடன் இரத்தக்களறியாய்க் காட்டுவது சாதாரணம். இலங்கை ஊடகங்களில் இவற்றை விடக் கொடூரமான காட்சிகள் படங்கள் காட்டப்படுகின்றன/ பிரசுரிக்கப்படுகின்றன" என்கிறார் அவர்.

குழந்தைகளும் வயது போனவர்களும், சட்டென்று பயப்படும் இயல்புடையவர்களும் பாதிக்கப்பட மாட்டார்களா என்று கேட்டோம். பதிலாய்க் கிடைத்தது:
"ஊடகங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. செய்தியை எவ்வளவு graphicக் காட்ட முடியுமோ அப்படிக் காட்டுவார்கள். பரபரப்புத்தான் அங்கே விலைபோகிறது. மற்றது, மக்களும் பயப்பட்டு என்ன ஆகப்போகுது? அவங்களுக்கு, தெருவோரத்தில் சுடப்பட்டு இறந்தவர் பிணம் என்பது தினப்படி காணும் ஒன்றாகவே இருக்கிறது. அங்கே, ஒருத்தர் இறந்து விட்டாரென்றால் அது மிகச் சாதாரணமான ஒன்றாகவே இருக்கிறது. இறப்பு எப்போதும் வரக்கூடும் என்பதை ஞாபகப்படுத்தவே தேவையில்லை. நன்கு அதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சம்பவத்தில் நான்கு பேர் இறந்து விட்டர்களென வைத்துக்கொள்வோம். அதைச் செய்தியில் சொன்னால், 'நாலு பேர்தானாமே செத்தது. அன்டைக்கு 15 பேர் செத்தவங்க' என்று ஏதோ க்ரிக்கற் ஸ்கோர் சொல்வது போலச் சொல்லிப் போவார்கள். பத்திரிகையில் வரும் படங்களிலுள்ள காட்சிகளுக்கும் அதே கதியே. கழுத்தில் துப்பாக்கிச் சூட்டோடுள்ள சடலத்தின் படத்தைப் பார்க்கிலும் தலை சிதறிய சடலத்தில் படம் அதிகமாய்ப் பேசப்படும். சில வேளைகளில் இவ்வளவுதான் காயமா என்கிற ஏமாற்றத் தொனியும் தென்படும்."

கழுத்தில் பாய்ந்து உயிர் குடித்ததுவும், தலையைச் சிதறடித்து உயிர் எடுத்தததும் அதே சன்னம் தான், போனதும் உயிர்தான். ஆனாலும் அவற்றிலே வித்தியாசம் பார்த்து, எது வலித்திருக்கும் அதிகமென்று ஆராய்ச்சி செய்யுமளவுக்குக் குரூரர்களாகிப் போனோமா? :O(

மதிப்பில்லா உயிருக்கு மதிப்பேயில்லாத சூழலில், வன்முறகளின் தாக்கங்களைத் தம்மில் நிறைத்துக் கொண்டு வளரும் பிள்ளைகள் தாமே வன்செயலாளராவதில் வியப்பில்லை. உளவியல் பாதிப்புத்தானே அதுவும்! "பைத்தியம்" என்பதை மட்டுமே உளநலக்குறைவாய் அறிந்த சமூகத்தில், யுத்தத்தின் போது ஏற்படும் பாதிப்புக்கு மருந்தில்லை. (யாழிலிருந்த சகலருக்கும் ஒரே ஒரு உளவியல் மருத்துவர்/நிபுணர் மட்டுமே இருப்பதாக 2001/2002ல் அறிய வந்தது ஞாபகம் வந்து தொலைக்கிறது).

அடுத்த கேள்வியாய் எழுவது, ஊடகச் செய்தியாளரது உளநலம். கருத்தில் கொள்ளப்படுகிறதா? ஆமென்றால் என்ன விதத்தில் பேணப்படுகிறது? நேரே போய் இரத்தமும் சதையுமாய் தெறித்துக் கிடக்கிறதை, இலக்கின்றி வெறிக்கிற கண்களை.. என்று இன்னும் எத்தனையையுமோ தம் கருவிகளால் பதிவு செய்யும் தம் ஊழியரைப் பற்றிச் செய்தி நிறுவனங்களுக்கு அக்கறையுண்டா? செய்தியும் அதற்குப் படமும் கிடைத்தால் சரி என்கிற நிலைதானே நிலவுகிறது? இது சரியானதுதானா?

மடல்

அன்புள்ள நண்பனுக்கு

நலம். நலமறிய ஆவல் என்றெல்லாம் வழமையான கடிதங்கள் போலே இது இல்லை. வெறுமனே நலவிசாரிப்பாக இருந்துவிட்டுப் போவதானால் எழுத வேண்டாமே.. தொலைபேசி இருக்கிறதே. குழப்புகிறேனா? கேட்பாய் என்கிற நம்பிக்கையில், கொஞ்சம் உரிமையாய் ஒரு விசயம் சொல்ல நினைத்திருக்கிறேன்.

நான் சொல்லப்போவதைச் சொல்ல எனக்கென்ன தகுதியிருக்கிறதென நீ யோசிப்பாய். தேவையான ஒன்றை எடுத்துச் சொ
ல்வதற்கு, அதைப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சரியானது எது என்று உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வதற்கு முதற்படி முயற்சி எடுப்பவரும் எடுத்துச் சொல்லலாம். அதை நானே செய்யும் வரை உனக்கு எழுத விரும்பவில்லை.

ஞாபகமிருக்கிறதா.. நாங்கள் வகுப்புகளுக்குப் போன அழகு? 8 மணி வகுப்புக்கு நான் உன் வீட்டுக்கு 7.45 இற்கு வந்து உன்னை எழுப்பி, நீ வெளிக்கிட்டு வந்து நாங்கள் வகுப்புக்கு நடந்து போய்ச் சேர 8.30 ஆகும். மிஸ்சும் "உங்களுக்கு ஓட்டோ அனுப்பிறதா" என்று கேட்டு எத்தனை முறை அறிவுரை சொல்லியிருப்பா? அப்போதெல்லாம் சிரிப்போமே.

அந்த நேரந்தவறும் பழக்கம் இன்னும் இருக்கிறது. என்னிடம், உன்னிடம். இப்போதைய ஒருநாள் காலையை யோசித்துப் பார். ஒரு 10 நிமிட நித்திரையை விட முடியாமல், அடிக்கும் அலாரத்தின் தலையில் ஓங்கி ஒரு குட்டுப் போட்டு நிறுத்தி, ஐந்து நிமிடம், இன்னும் ஐந்து நிமிடமென்று எழுந்திருப்பதைத் தள்ளிப் போடுவோம். அந்த ஐந்துநிமிடங்களினது அருமை இன்னும் கொஞ்ச நேரத்தில் உணரப்படும். உனக்கே தெரியும். ஐந்து நிமிடமென்பது பத்தாகி, தற்செயலாய்க் கடிகாரம் பார்க்கையிலே புறப்பட நேரமாகிறதென்பது மூளையில் பதியும்.

அடித்துப் பிடித்து எழுந்து, காலைக்கடன் முடித்துப் புறப்படுகையிலேயே ஐந்து - பத்து நிமிடத் தாமதம் தலை காட்டியிருக்கும். ஓட்டமும் நடையுமாய் இளைக்க இளைக்க தொடர்வண்டி நிலையம் போய் மூடிக் கொண்டிருக்கும் வண்டியின் கதவு வழியே புகுந்து இருக்கையில் உட்கார்ந்தால் 40 நிமிட இளைப்பாறல். இல்லை, காரில் போகிறாயா வேலைக்கு? பிந்தி விட்ட அவசரம் காரை ஓட்டுவதில் தெரியும். எவ்வளவு பாதுகாப்பானது இந்த வண்டியோட்டல்? கவனக்குறைவுகளும், சிறுசிறு தாமதங்களும் ஏற்படுத்தும் எரிச்சலும் ஒரு அழகான காலையைக் குழப்பியிருக்கும். அலுவலகத்தை அடையும் போது இருக்கும் மனநிலையை நினைத்துப் பார்.

அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறோமா? இல்லையே. காலை வந்தவுடன் செய்தி வாசிப்பு. ஒருதரம் வாசித்தவுடன் விடுகிறோமா என்ன! திரும்பத் திரும்ப பிபிசியும் சிட்னி மோர்னிங் ஹெரல்டும் பார்ப்பது அடிக்கடி பணியைக் குழப்பும். கிரிக்கெட் போட்டி நடந்தால் அதன் ஸ்கோர் பார்க்க, தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்ப, வலைப்பதிவு பார்க்க, மின்/தொ.பே/வாயு இணைப்புகளுக்கும் இன்ன பிறவுக்குமான கட்டணங்கள் செலுத்த, வங்கித் தொடர்பாடல் என்று தனிப்பட்ட செயல்களுக்கு, அலுவலகப் பணி செய்ய வேண்டிய நேரத்தில் எடுத்துச் செலவழிக்கிறோம். இதுவும் ஒரு வகைக் களவுதான். களவென்பது கிடக்க, இது என்ன செய்யும் தெரியுமா? செய்து முடிக்க வேண்டிய பணி தலைக்கு மேல் குவியும். சொந்த வேலை செய்ததில் அலுவலக நேரம் ஓடியே போய்விட்டிருக்கும். ஐந்து மணிக்கும் பிறகும் உட்கார்ந்து வேலையைச் செய்வோம். பலர் இந்த விதயத்தில் பரவாயில்லை. ஒரு ஏழு மணிக்காவது வீடு போய்விடுகிறார்கள். நீ முடித்து விட்டுத்தான் வீடு திரும்புகின்றாய். எத்தனை மணியானாலும். வேலை முடித்து
விட்டே போகிறாய். இங்கே என்ன நடக்கிறது? தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரத்தை எடுத்து வேலைக்கெனச் செல்வழிக்கிறாய். ஒருவிதத்தில் இது குற்றவுணர்ச்சியால் வரும் ஈடுகட்டலே.

வீட்டை அடைவதும், இரவுணவும், இளைப்பாறலும், நித்திரைக்குப் போவதும் தட்டிவிட்ட டொமினோக் கட்டைகள் போல ஒன்றன் பின் ஒன்றாய் பிந்திப் பிந்தி நடைபெறும்.நேரஞ் சென்று படுத்தால் அடுத்த நாள் காலை நேரத்துக்கு எழும்ப மனம் வராது. மீண்டும் மேலே சொன்னது அடுத்த நாளும் தொடரும். இது உடலுக்கோ மனதுக்கோ நல்லதல்ல. கடின வழியில் நான் உணர்ந்த பாடம் அது. உன் அருகாமை கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் உன் களைப்பு வீட்டாரால் புரிந்து கொள்ளப்படும்.

காலையில் நேரத்துக்கு எழும்புவதிலிருந்து பணியக வேலை முடித்த பிறகுதான் சொந்தவேலை (அல்லது உணவு இடைவேளையின் போது) என்று உறுதி கொண்டாயானால் ஐந்து மணிக்குப் பிறகு எவ்வளவோ நேரம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வாய். வேலை அதிகமான நாட்களில் இரவிரவாய் பணியகத்தி
லேயே கிடக்காமல் "எவ்வளவு வேலையென்றாலும் இத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய் விடுவேன்" என்று உறுதி எடுத்துக் கொள். இரவிரவாய்க் கண்முழித்து வேலை செய்த களை முழுதும் நீங்காமல் அடுத்த நாளும் வேலைக்கு வருவாயானால் அதிலே ஒரு பிரயோசனமும் இல்லை.

கேட்டால் சொல்வதென்ன? எல்லாம் குடும்பத்துக்குத் தான் மாடாய்/நாயாய் உழைக்கிறேன். நீ மிருகம் போலே உழைக்க வேண்டியதில்லை. மனிதனாய், குடும்பத்தை மனதிற் கொண்டவனாய் வாழ்ந்து கொள். போதும். யாருக்காக உழைக்கிறாயோ அவர்களே முக்கியமானவர்கள். உன் சம்பளம் மட்டுமே அங்கே எதிர்பார்க்கப்படுகிறதென்று நினைக்கிறாயா? உன்னைத் தவிர மற்றதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். பணம் மட்டுமே தேவைகளை நிறைவேற்றிவிடுவதில்லை. உன் பணம் கொடுக்காத மனநிறைவை உன் அருகாமையோ அல்லது உன் கனிவான ஒரு வார்த்தையோ பெற்றுத்தந்துவிடும். கவனித்துப்பார்..உனக்கே தெரியவரும்.

இந்தக் கடிதம் பார்த்து "லெக்ச
டிக்கிறேன்" என்று நீ சொல்லக்கூடும். நான் உணர்ந்ததை, உரிமையுடன் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாய் என்று நம்புகிறேன். நலமறிய ஆவல்.

இப்படிக்கு, மாறா அன்புடன்
தோ
ழி.

தெரிந்தால் சொல்லுங்க

ஆடிக்கொண்டார்.. அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ..
ஆர நவமணி மாலைகள் ஆட, ஆடும் அரவம் படம் பிடித்தாட...

மீதிப்பாட்டு என்னதான் யோசித்தும் ஞாபகம் வரவில்லை. தெரிந்தால் சொல்கிறீர்களா?

அதோடு சேர்த்து இந்தப்பாட்டும்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. கையிலே வேல் பிடித்த கருணை சிவபாலனை.. (படத்தில வந்த அதேதானுங்கோ..)

நன்றி.

அவையள் எங்கண்ட ஆக்கள் இல்லை!

இன்னார் இந்தச் சாதியென்று சொல்லிஅவருடன் பழகுவதை ஊக்கப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ எங்கள் வீட்டில் நடந்ததில்லை. சாதி பற்றிய பேச்சு எழுந்ததும் ஓரிரண்டு தருணங்களில் எனது கேள்விகளால்தான்.

சாதியும் அது பற்றிய விளக்கமும் இல்லாத ஒரு வயதிலேயே எனது முதல் அனுபவம். ஞாபகமிருக்கிறது. வீட்டிலிருந்து நாங்கள் தேநீர் குடிப்போம். மாவிடிக்க வரும் இரண்டு ஆச்சிமார். செல்லாச்சி, தெய்வானை - இவர்களை "ஆச்சி" என்று விளித்தேன். (அவர்கள் போன பிறகு எனக்கு "அவைய ஆச்சி என்டெல்லாம் சொல்றேல. பேர் சொல்லலாம்" என்று அறிவுறுத்தினார்கள். அவ்வளவு வயசான ஆட்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாமெண்டா நான் ஏன் (15 வயசு மூத்த) மச்சாளை "தமயந்தி" என்டு பேர் சொல்லி கூப்பிடேலாது என்று கேட்டதற்குப் பரிசாய் முதுகில் மேள வாசிப்பும், "அது அப்பிடித்தான். சொன்னாக் கேட்கோணும்"மும் கிடைத்தன)

அவர்களின் சுருங்கின தோல், தொட்டுப் பார்க்கவே ஆசையாயிருக்கும். மரியாதையா ஆச்சி எண்டே சொல்லேலாதாம், இதில தொட்டா உதைதான். சேலையைக் குறுக்கில கட்டியிருப்பார்கள். கிளாசில்தான் இவர்களுக்கு பானங்கள் கொடுக்கப்படும். அதை ஒருதரும் தொடவும் கூடாது. அந்தக் கிளாசை நாங்கள் பாவிப்பதென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. இதெல்லாம் தெரியாமல் நான் குதர்க்கமாய்க் கேள்வி கேட்டால் அம்மாவுக்குத்தான் பேச்சு விழும், "ஒண்டுஞ் சொல்லிக்குடுக்கிறேல்லையோ" என்று. அம்மா பாவம். ஏன் தனிக் கிளாசென்று கேட்டாலும் பீற்றிக் கொள்வார்கள் - "நாங்கள் கிளாசில குடுக்கிறம், எத்தினபேர் சிரட்டையில குடுக்கிறவை தெரியுமோ!" ('பூனைக்குட்டி சிரட்டையில தண்ணிய நக்கி நக்கிக் குடிக்கிற மாதிரிக் குடிப்பார்களா என்று சந்தேகம் வந்தாலும், கேட்டால் விழக்கூடிய அடியின் கனம் நாக்கை அடக்கும்) நினைத்துப் பார்க்கிறேன், இவர்களெல்லாம் இடம்பெயர்வின் போது சாதி பார்த்தா ஒன்றாய் வீடுகளில் தங்கியிருப்பார்கள்? சாப்பிட்டிருப்பார்கள்? இவர்களின் சாதியப் பார்வை உடைந்து சிதறியிராதா?

ஊரிலே இருக்கிறவரை விடுவோம். வெளிநாட்டுக்கு வந்துவிட்டாய். பிற சமூகங்களோடு இணைந்து கற்கிறாய்/செயல்படுகிறாய். ஆனாலும் அதே சாதிக் கண்ணாடி கொண்டுதானே உன் சமூகத்தைப் பார்க்கிறாய்.

ஒரு அன்ரி. பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமாம். ஆரேனும் நல்ல பெடியங்கள் இருந்தாச் சொல்லுங்கோ என்று என்னிடமும் என் தோழியிடமும் சொன்னா. உடனேயே ஞாபகம் வந்த ஒரு நண்பனைச் சொன்னோம். யாரென்று அவவுக்கும் தெரிந்திருந்தது.
"எனக்கும் தெரியும் அவைய, நல்ல பெடியன் தான்.. (மெல்லிய குரலில்) ஆனா எங்கட ஆட்களில்லை. அவை வேற".
என்ன சொல்கிறாவென்று தெளிவாயத் தெரிந்தாலும், வம்புக்கு "இல்லை அன்ரி. அவங்களும் சிலோன் தான்" என்றாள் என் தோழி. எனக்குத் தாளாத சிரிப்பு. பாவம் அன்ரிக்கு விளங்கவில்லை.
"இல்லை. அவை சிலோ
ன்தான். ஆனா வேறை". மென்று விழுங்குகிறார். நாங்களும் விடுவதாயில்லை.

"அப்ப என்ன சொல்றீங்க? அவையும் ஹின்டு. நல்ல boy. இதுக்கு மிஞ்சி என்ன அன்ரி?".
"இல்லையடா, உங்களுக்குத் தெரியாது, சாதி வேற"
"ஆ! ஷ்ரேயா..சா..ஆ..ஆ..தி வேறயாம்".. (ஆரம்பித்தோம்.) "நீங்க சாதி பாக்கிறனீங்களெண்டு தெரியாது அன்ரி எங்களுக்கு. அப்ப சிட்னியில நீங்க பழகிற எல்லாற்ற சாதியும் தெரியுமோ? பாத்தோ பழகிறனீங்கள்? ஊர் மாதிரி இங்கையும் புறிம்பாச் சாமான் வச்சிருக்கிறீங்களோ?" இன்னும் நிறைய அவவைக் கதைக்க விடாமல் கேட்டோம்.

எங்களிருவரின் கேள்விகளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லைப் போல. எதிர்பார்த்திருக்கவும் மாட்டா. "இல்ல, அப்பிடியெல்லாம் இல்ல" என்று தடுமாறிக் கொண்டிருந்தா. நேரமாகுதெண்டு அவவின் கணவர் வந்து கூப்பிட இதுதான் சான்ஸ் என்டு "வாறன் பிள்ளையள்" என்டிட்ட்டுப் போய்விட்டார். நாங்கள் சொல்லிச் சிரித்த போது, நாங்கள் அப்பிடி ஒரேயடியாப் போட்டுக் கேள்விகள் கேட்டிருக்கத் தேவையில்லையெண்டு தோழியின் அம்மா சொன்னா. "சாதி அன்ரி" கொஞ்சமாவது யோசித்திருப்பாவா என்பதே எங்களிருவருக்கும் உள்ள கேள்வி.

சாதி பார்க்கிற அன்ரி மாதிரியான ஆட்களைக் கண்டால், அவர்களது இந்தப் பழக்கம் வெளிப்பட்டால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதுவும் சில வேளைகளிலே அவர்கள் பற்றிய விம்பம் சரிகையில். எவ்வளவுதான் படித்த பண்பாளராய் இருந்தாலும் சாதி பார்க்கத் தூண்டுவது எது? ஏன் பார்க்க வேண்டும்? மனிதர்கள் தாம் பிறப்பது எந்தப் பெற்றாருக்கென்று தீர்மானிக்க முடிவதில்லையே? எல்லாரும் சமந்தானே? பொருள்வசதி தவிரப்பார்த்தால் எல்லாரும் ஆசைகளும் மகிழ்ச்சியும் கவலையும் பெருமையும் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கனவுகளும் ஞாபகங்களும் நிறைந்தவர்கள் தானே? இதிலே எங்கே இவர் உயர்வென்றும் அவர் தாழ்வென்றும் சொல்லப்போயிற்று?

சில வருடங்களுக்கு முன்னாலே சாதி குறித்த ஒரு சூடான விவாதத்தின் போது அம்மா சொன்னா: "சாதி பாக்கிறது பிழையானது/தேவையில்லாததெண்டு தெரியுது. ஆனாலும் சின்னனில இருந்தே வந்த பழக்கம். கொஞ்சம் தயக்கம் இருக்கு. ஆனா அதுவும் இருக்கக் கூடாதெண்டு தெரியும். எப்பவுமே புதுசு புதுசா சரியானதுகளை உணர்ந்து கொண்டுதான் இருக்கிறம் என்ன!".
கடைசி வசனம் சத்தியமானது. நானும் புதிது புதிதாய்க் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்.


சந்தேகம்: நாவலர் இந்தியாவிலிருந்தே இந்தச் சாதி வழக்கத்தைக் கொண்டு வந்தாரெனவும் அதன் பின்னரே இலங்கையில் மிக அழுத்தமாக வேரூன்றியதென்றும் என தோழியின் தந்தை சொல்வார். எந்தளவுக்கு இது உண்மை?

நேர மாற்றம்

மு.கு: தொலைக்காட்சிச் செய்தி பார்த்தலும் இணையத்திலேயும் அசல் வடிவிலேயும் பத்திரிகை வாசிப்பதும் என் தினப்படி நடவடிக்கைகள்.

--------------------------

சனிக்கிழமை பின்னேரம்:
"சாந்திக்கா.. நாளைக்காலையிலே எனக்கு ஏழு மணிக்கு வேக்கப் கோல் .. மறந்திராதிங்க"
"இல்லமா..மறக்காம கட்டாயம் தரேன். இல்லன்னா பலகாரம் செய்ய வீட்டுக்குத்தான் வரணும்"
"ஒகே..நாளைக்காலையிலெ பேசலாம்..போய்ட்டு வர்றோம்"

ஞாயிறு காலை, 07:15 மணி
முழிப்பு வந்திட்டுது. என்னடா இந்த சாந்திக்கா இன்னும் போன் பண்ணல்லயே...என்று யோசித்துக்கொண்டே எழும்புகிறேன். நாட்காட்டியைப் பார்த்தால், 26 மார்ச். ம்ம்..இன்றைக்கு ஏதோ நடக்கோணுமே என்பது தெரிகிறதே ஒழிய என்னவென்று ஞாபகம் வர்ற மாதிரிக் காணோம்.சரி, வரக்குள்ள வரட்டும் என்று விட்டாச்சு.

8 மணி.. சாந்திக்காவின் வேக்கப் கோல். அவவின் "குட் மானிங்..எழுந்துக்கலயா இன்னும்?"க்குப் பதில் சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டு, தன்னிச்சையாக தொ.காவைப் போட்டால் பொறி தட்டியது இன்றைக்கு நேரம் மாத்துற நாள் என்று. "ஒரு மணித்தியாலம் அதிகமாக இருக்கே.. அநியாயமா வெள்ளனவே எழும்பிட்டனே" என்று நொந்து கொண்டேன்.
என்றாலும் சந்தேகம்.. தொ.காவில் நேற்றுப் பார்த்த போதெல்லாம் நேர மாற்றத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? ம்ம்ம்... சரி எதுக்கும் டிவில பாப்பம்.. சனல்10 மாத்தியிருக்கு. சனல்7 ஏன் பழைய நேரத்தையே போட்டுக்கொண்டிருக்கிறாங்கள்? போடு டெக்ஸ்ற்ற..அதில மாத்திருக்கிறான். சாந்திக்காவும் அதுதான் 8 மணிக்கு எழுப்பியிருக்கிறா..நேரம் மாறினா 8மணி 7 மணியாயிரும்.. சரிதானே!!
என்டாலும் ஒரு சந்தேகம், கணினியைப் போட்டேன்..அதிலயும் நேரம் மாறிட்டுது. அப்ப சரிதான். அடட.. இன்டைக்கு நல்லா நேரமிருக்கு. ஆறுதலாப் போகலாம் பலகாரம் சுட. இவன் சனல்7காரனுக்கு லூஸ். நேரம் மாத்தாம சனத்தைக் குழப்புறான்.

எடு வீட்டிலில இருக்கிற மணிக்கூடெல்லாம். அலாரம் மட்டுமே 4. (இதிலே முக்கியமாச் சொல்லோணும்: அலாரமும் மின்சூளும் (டோர்ச் லைட்) கொஞ்சம் வித்தியாசமான உருவங்கள் நிறங்களில கண்டா, எங்கட வீட்டில குடியேறிடும். தலையாட்டிக்கொண்டிருக்கிற அலாரம் தொடங்கி, வட்ட/சதுர/திருகிற/பொத்தான் அமத்திற மின்சூள் வரைக்கும் இருக்கு. ஒரு மியூசியமே இதுகளுக்காண்டித் தொடங்கலாம். தூக்கி எறிவமெண்டா அதுக்கு தடையுத்தரவு. அதிலயும் ஒரு அலாரம் இருக்கு. சரிய சனிக்கிழமையிலே காலமை 11 மணிக்கு அடிக்கும். எங்கெருந்து சத்தம் வருதென்டு இன்னும் கண்டுபிடிச்சுக் கொண்டிருக்கிறம்)

சரி, இனி அறைக்குள்ளே இருக்கிறதும், வரவேற்பறையிலிருக்கிறதும் குசினியில இருக்கிரதும் என்டு இன்னும் மூண்டு. மொபைல்லயும் மாத்தோணும்.. எடு அதுகளையும். இருந்து எல்லாத்திலயும் மாத்தியாச்சு.

குளிச்சு வெளிக்கிட்டு, (அப்பவும் சனல்7 நேரம் மாத்தல்ல, அசல் விசரங்கள்) காலமைச் சாப்பாடு சாப்பிடுறன்.. தொ.பே.அழைப்பு வருது.

"ஓய்! எங்கெ இருக்கே? புறப்பட்டுட்டியா இல்ல இன்னு வீட்லேயேதானா? பத்தேகால் மணி இப்போ! ..பலகாரம் 10மணிக்கு ஆரம்பிக்க என்று இருந்தோமே..என்ன ISSAT (Indian Srilankan Standarad Arrival Time) ஆ?"
"ஹையோ! ISSATலாம் இல்ல. இன்னைக்கு டேலைட் சேவிங்க்ஸ்க்கு நேரம் மாத்தினாங்களே.. தெரியாதா? நான் லேட் இல்ல. இப்பத்தான் ஒம்பதேகால்"

"அம்மா..தாயே.. இ-மெயில்,பேப்பர் வாசிக்கிறப்ப, டீவி பாக்கறப்ப கொஞ்சூண்டு கான்சன்ட்ரேட் பண்ணனும்மா..டைம் இந்த வாரம் மாத்தலே"
"...(என்ன உளர்றா)..."
"அதான் மெல்பேண்லே கொமன்வெல்த் கேம்ஸ் நடக்குதில்ல..அதனாலே அடுத்த வாரம்தான் டைம் மாத்துறாங்க. ராசாத்தி, உங்க நேரத்தை மாத்திட்டு தயவு செஞ்சு உடனடியா புறப்படுறீங்களா?!"
"போச்சுடா!!அப்ப நான் இன்டைக்கும் லேட்டா?" :O(

பிடிக்கவில்லை

எனக்கு மனிதர்களைப் பிடிக்கும். பிடிக்காத ஆட்களென்று பார்த்தால் (அதற்காக தீராத பிறவிப்பகை என்றெல்லாமில்லை) ஒருகை விரல் கொண்டு எண்ணிவிடக்கூடியளவு பேர்தான் தேறுவார்கள். நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு சக மனிதப்பிறவியின் மீது வெறுப்பு வந்திருக்கும். எனக்கு, அப்படியே வெறுப்பு வந்தாலும் அம்மனிதர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளில் நிகழ்பவைகளால் அநேகமான வேளைகளில் அந்த வெறுப்பின் தாக்கம் குறைந்துவிடும். புதிதாய்ப் பதிவு செய்கையில் பழையனவற்றைத் தூக்கிப்போடுவது மனித இயல்பா?

பிடிக்காமற் போவதற்கான எனது வகைப்படுத்தல்:

  • சிலரைப் பார்த்த(தா)லே பிடிக்கது.
  • சிலருடன் பேசியபின் பிடிக்காது. (கண்ணைப்பார்த்து/முகத்தைப்பார்த்துப் பேசாமை)
  • சிலருடன் ஆரம்பமே சரியாயிராது.
  • சிலரது பழக்கவழக்கங்கள்/குணங்கள் பிடிக்காது (ஆளைப் பிடிக்காமற் போவதற்கும் பழக்கவழக்கம்/குணங்களைப் பிடிக்காமற் போவதற்கும் வேறுபாடு உண்டெனத் தெரிந்தாலும் அதைச் செய்வதற்கு அறிவைச் சரியாய்ப் பிரயோகிப்பதில்லை!)

கொஞ்ச நாளாய்க் கவனிக்கிறேன், மிகவிரைவிலேயே (இவ்வளவு நாளும் இருந்ததை விடச் சற்று அதிகமாக)ஆட்களைப்பற்றிய அபிப்பிராயம் உருவாகி, என்னையறியாமலேயே வகைப்படுத்தல் ஆரம்பித்துவிடுகிறது. பார்த்த விதம் சரியில்லை, ஏன் இப்படிச் சத்தம்போடுகிறான்/ள், உதவவில்லை, கதைப்பது அறிவற்றதனமாய் உள்ளது - இப்படி (அநேகமாக) மிகச் சாதாரணமாய் கணக்கிலெடுக்கத் தேவையே இல்லாத விதயங்களெல்லாம் காரணிகளாய் அமைகின்றன. சிலவேளைகளில் மேற்கூறியவை எழுப்புவது எரிச்சலுணர்வாயிருப்பினும் அதையும் வெறுப்பெனக் கொள்கிறேன் போலவும் தோன்றுகிறது. என் சகிப்புத்தன்மை/பொறுமை இவையெல்லாம் தேய்கின்றனவோ? அறளை பெயருதோ??? :O(

எழுத ஆரம்பித்த நேரத்திலிருந்து இடையிடையே வேறு வேலைகளும் செய்ததால், பதிவு செய்ய நினைத்ததில் அரைவாசியே மேலே எழுதப்பட்டிருக்கிறது. மீதி மறந்து போய்விட்டது. இந்த வார இறுதியில் ஞாபகம் வந்தால் முழுமையாய் எழுதி மீள்பதிவு செய்வேன். இல்லாட்டி, இப்படியே.. அரைகுறையாய்!(இதுவும் பிடிக்கவில்லை)

பி.கு: இதை வகைப்படுத்துபவர் "அனுபவம்" என்று வகைப்படுத்தவும் , நன்றி.

நான் பார்த்த கூத்து!

இன்டைக்கு மட்ச், டிவியப் போடு

நல்லகாலம் ஞாபகப்படுத்தினாய்... நான் போடுறன் நீ ****க்கு அடிச்சு அவனை வரச்சொல்லு.

மூன்றாமவன்: "ஏன் அடிக்கப் போறீங்க ..நோகும்" (இரண்டாமவன், "எல்லாரும் ஒருக்கச் சிரியுங்களன்டாப்பா, எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறான்" என்று சொல்லி மூன்றாமவனிடமிருந்து ஒரு அடியை வாங்கிக்கொண்டான்)

(அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒருநாள் கிரிக்கற்போட்டி ஆரம்பித்திருந்தது)

பார்வையாளர்களைக் காட்டிக்கொண்டிருந்த போது ஒரே நேரத்தில் "சான்மான்" ஒரு கத்தல். கொஞ்ச நேரத்தில் "சங்கீதா" என்று இன்னோரு கூச்சல். (எனக்கென்னவோ சான்மானுக்குக் கிடைத்த கூச்சலை விட சங்கீதாவுக்கு இன்னும் உரக்கவும் உசாராகவும் கேட்டது போல இருந்தது. ஆனாலும், "பிரமை" என்று சொல்லிக்கொண்டேன்)

ஜயசூரிய விளாசத்தொடங்கியிருந்தார். கடைசி வரை பார்த்து விட்டு எழுந்து தேநீர் குடித்தார்கள். அவுஸ்திரேலிய ஆட்டம் தொடங்கியது. ஒவ்வொரு வீரராய் ஆட்டமிழந்ததும் பெருங்கூச்சல்.

"என்னதான் சிங்களவன் என்டு பேசினாலும், கிரிக்கட்டெண்டோடன ஏன்டா இலங்கைக்கு சப்போட் பண்ணிறம்?" என்று ஒரு புத்திஜீவி கேட்டார். விழுந்து விழுந்து சிரித்தார்களே தவிர, அவனுக்குப் பதில் சொல்லவில்லை. நானும் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அன்ட்ரூ சிமண்ட்ஸ் வந்து ஒரு சிக்ஸரைத் தூக்கி விட்டார்.. "ஐயோ.. வந்திட்டாண்டா அனுமான்".

விளம்பர இடைவேளை போட்டதும், அவசர அவசரமாக மற்றத் தொ.கா.நிலையத்திற்கு மாற்றினான் ஒருவன். "அடெய், விசரா இப்பத் திரும்பப் போடுவாங்கள்..ஏன்டா சனலை மாத்துறாய்?"

மாற்றினவன் சிரித்துக் கொண்டே "மச்சான்... வடிவாப்பார் ! இப்ப சொல்லு பாப்பம் எனக்கு விசரோ என்டு!!!" திரையிலே ஷரபோவா அழகாக டெனிஸ் ஆடிக்கொண்டிருந்தார்.

"என்ன நீட்டுக்காலடா இது!" (இந்த "இது", மிகக்குறுகியதொரு "இ"யும், பெருமூச்சுக்களின் தொகுப்பாய் "து" என்பதும் சேர்ந்த ஒன்று என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லைத்தானே!)

வெற்றிலை வைத்து அழைக்காத குறையாய், தொலைபேசியில் அழைத்து, அழைப்பை ஏற்று(!!) வந்தவன், "கிரிக்கற்றைப் பாக்காமல் என்னத்தையடா...." என்று ஆரம்பித்து "ஐயோ மரியாக்குஞ்சு, உந்த மெல்பேண் வெக்கைக்க உங்களை விளையாட வைச்சிட்டாங்களே" என்று தடாலடியா பிளேட்டை மாத்தினான். "அடப்பாவி" என்று கூட்டமாய்க் குரல் கொடுத்தார்கள்.

"உப்பிடிச் சின்னச்சின்ன சட்டையளும் காற்சட்டைகளும் போட்டுக்கொண்டுதான் விளையாடோணுமோடா? முழுக்கால், அற்லீஸ்ட் கால்வாசிக்கால் மறைக்கப் போடலாந்தானே?" - இது புத்திசீவி

"கால்காலை மறைக்கப்போடோணும் என்னடா, அதானே கேட்கிறாய்?"
"ஓம்..",
"சரிதானேயடா அப்ப, கால் தரை கால் எட்டிலொண்டு, போட்டிருக்கிறது அந்த சைசிலதான் இருக்கு"
சொல்லிவைத்தது போலத் தலையிலடித்துக் கொண்டார்கள்.

"எதைப்போட்டாலும் விளையாடினாச் சரிதானே" என்று ஒருவன் சொன்னதும் ஆமோதித்து பழையபடி கிரிக்கட்டுக்குத் திரும்பினார்கள்.

"எனக்குப்பசிக்குது" சாப்பாடெடுக்கப் போனான் ஒருவன்.

அன்ட்ரூ சிமண்ட்ஸ் ரன்னவுட்டாகிப் போனார். "அப்பாடா, இனி வெண்டிடலாம்" ஒரு துளி சந்தேகமுமின்றி வெளிப்பட்டது குரல்.

"டேய், நான் சாப்பாடெடுக்கப்போகத்தான் சிமண்ட்ஸ் அவுட்டாகினவன். நீங்களும் வந்து எடுங்கோடா!". சிரிப்பலை.

மற்றவனும் சாப்பாடெடுக்கப் போனான்.. க்ளார்க் பவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். தாங்கள் சாப்பாடு எடுக்கப்போனால் விக்கற் விழுமென்று எல்லாருக்குமே நம்பிக்கை வந்ததில் சமையலறைக்குள் போக்குவரத்து நெரிசல்.

கடைசியாய் ஒரு பந்திருக்கையில் மொத்தமாய் அவுஸ்திரேலிய அணி ஆட்டமிழந்ததும் உற்சாகமாய்க் கைதட்டி, நாளைக்குக் காணப்போகிற அவுஸ்திரேலிய நண்பர்களுக்கு என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டே கலைந்து போனார்கள்.

இழவரசர்!!




மின்னஞ்சலில் வந்தது.
சரியாத்தானே தலைப்பை எழுதியிருக்கிறன்?

சாறு!

வழமை போலவே என் பிற்பகல் பழச்சாற்றை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். அப்பிள், வாழைப்பழம், கரட், இஞ்சியுடன் எப்போதேனும் தோன்றினால் மாம்பழமும் அரைத்த சாறு. இதைத் தட்டச்ச ஆரம்பிக்க இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்பு உள்ளெடுத்த ஒருவாய்ச்சாறு மின்னல் போன்று ஒரு ஞாபகத்தைக் கிளப்பிப் போனது. வந்த ஞாபகம் மின்னல் போல என்று சொல்கிறேன் ஏனென்றால் வந்த வேகத்திலேயே மறைந்தும் விட்டதனால்.

குழாயூடாக வாய்க்குள் வந்த அந்தக் கொஞ்சச் சாறு தட்டியெழுப்பிய ஞாபகம் எனது சிறுபருவத்துப் பரிச்சய வாசனைகளிலோ அல்லது சுவையிலோ ஒன்று என்பது மட்டும் தெரிகிறது. என்னவென்று ஞாபகப்படுத்திக் கொள்ள மீண்டும் மீண்டும் உறிஞ்சிச் சுவைக்கிறேன். வலுக்கட்டாயமாகச் செய்யப்படும் எதுவும் இயல்புமில்லை அத்துடன் எதிர்பார்க்கும் பலனைத் தருவதுமில்லை என்று உணர்த்திச் செல்கிறது என் தொண்டையில் இறங்கிக் கொண்டிருக்கும் பழச்சாறு.

இது ஒரு வெயில்காலம்

வேர்க்கிறதே என்று இலங்கையில் சலித்துக் கொள்வதுண்டு - காற்றின் ஈரப்பதனின் அருமை தெரியாமல். இங்கே சிட்னியின் கோடை சுட்டெரிக்கும். சராசரிக் கோடைகால வெப்பநிலை 35 - 37°C எனினும் குறைந்தது ஒரு பத்து நாட்களாவது 40°C யைத் தாண்டும். காற்றில் ஈரப்பதன் 10 - 20% இற்குள்தான் இருக்கும். உலர்ந்த காற்று வீசினால் பற்றியெரிகிற பெருநெருப்புக்குக் கிட்டே நிற்பது போலவும், காற்று வீசாமலிருந்தால் ஆளை வெதுக்கிவிடக்கூடிய வெக்கையுமாய் ஒன்றும் செய்யத் தோன்றாமல்/இயலாமல் எரிச்சல் தரும். வேர்த்தால் அதிசயம். அப்பிடியொரு வெயில்தான் முதலாந்திகதி சிட்னிக்கு வாய்த்தது. விடுமுறைக்கென்று நீண்டதூரம் சென்றிருப்பின் வழியில் ரேடியேட்டர்கள் செயலிழந்து போய் தவித்துப்போய் நின்ற பல வாகனங்களையும் மனிதரையும் கண்டிருக்கலாம். ஏதோ 2ம் திகதி முதல் இன்று வரை ஒரே மழை மூட்டமாய் இருக்கிறது. அதுசரி, முதலாந்திகதி ஆவியாகினதெல்லாம் (எந்த நீர்நிலையில இருந்து என்டெல்லாம் கேட்கக் கூடாது!) திரும்பிக் கீழே வரத்தானே வேணும்!

இந்த வெயிலில் காய்ந்துபோய் நிற்கிற விக்ஸ்(யூகலிப்ரஸ்) மரமும் புற்களும் பற்றைகளும் பற்றியெரியத் தொடங்குவதும் இந்தக் கோடைகாலத்தில்தான். காட்டுத்தீ பின்வரும் முக்கியமான 3 காரணங்களால் ஆரம்பிக்கிறது:

- வேண்டாத வேலையாய் நெருப்பு வைப்பவர்கள்(firebugs)
- Campfire / Barbeque போட்டுக் கவனமின்மையால பறந்த நெருப்புப் பொறி
- மின்னல்

இந்த நெருப்பைக் கட்டுப்படுத்தவென்று குளிர்காலத்திலேயே சில பகுதிகளில் நெருப்பைக் கட்டுப்பாடாக எரித்து(backburning) முன்னெச்சரிக்கையாகச் செயற்படுவார்கள். காவற்றுறையினரும் (வசந்தன், கவனிச்சீங்களா?) firebugs இன் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிப்பர்.
அவுஸ்திரேலிய வெயில் பொல்லாதது. சூரியக்குளியல் செய்பவர்களுக்கெல்லாம் Slip Slop Slap என்று மேலாடை, களிம்பு பூசி, தொப்பியுமணியுமாறு நிதமும் அறிவுறுத்தப்படுகிறது. இல்லையோ.. பிறகு தோற்புற்றுநோய் வந்துவிடும். இப்போது புதிதாக (நியுஸீயில் போன்றே) கண்ணுக்குக் குளிர்கண்ணாடியும் அணியச் சொல்கிறார்கள். பார்வையைத் தொலைக்கும் வாய்ப்பும் அதிகமாகிறதாம் இந்த வெயிலால். எல்லாத்துக்கும் இந்த ஒஸோன் படலத்தின் பெரியதொரு ஓட்டைதான் காரணம்.

நான் அனுபவித்த மிகக்கூடிய & குறைந்த வெப்பநிலை(கள்?) - 12°C , 48.8°C. நீங்கள் அனுபவித்த அதிகூடிய & மிகக்குறைந்த வெப்பநிலை பற்றிச் சொல்லுங்களேன்?

பேரைச் சொல்லடா!


"ஹாய்"
குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், எங்கேயோ பார்த்த முகமமொன்று மெலிதாய் புன்னகை ஒன்றைச் சுமந்து கொண்டு. ("ம்ம்..யாரிது??) "ஹாய்"

"எப்பிடி இருக்கிறீங்க"
(அட..தமிழ்..) "நல்லா இருக்கிறன். நீங்க?"
"ஓக்கே."

வழமையான வேலைக்குப் போறீங்களா, எங்கே இருக்கிறீங்க என்கிற பரஸ்பர(இதற்குத் தமிழ் என்ன?) விசாரணைகள். (டேய்.. நீ என்னோட படிச்சனி என்டு தெரியுது.. பேரைச் சொல்லன்டா!!)

"உங்கட ஃபிரெண்ட்..ம்ம்..மாலினி எப்பிடி இருக்கிறா? இப்ப எங்க ஆள்?"
"அவ இப்ப ரஷ்யாவில படிக்கிறா."
"மலேசியாவிலதானே முதல் படிச்சவ"
"ஓம்.அது முடிச்சு இப்ப ரஷ்யாவில."
"அடுத்த தரம் கதைக்கேக்குள்ள/மெயில் போடேக்குள்ள நான் கேட்ட என்டு சொல்லுங்கோ."
(ஆரோட கதைச்சுக் கொண்டிருக்கிறனென்டு தெரியாம நான் முழிக்கிறன்..அவக்கு என்னண்டு விளங்கப்படுத்திறது!!) "ஓ! கட்டாயம்". (ட்ரெயினால இறங்க முன்னம் பேர் சொல்லுவாய் தானே?)

இது நடந்தது சில மாதங்களிருக்கும். அவனைத் தொடர்ந்து காண்பதுவும், இருவருக்கும் பொதுவான/தெரிந்த நட்புகளைப் பற்றிய செய்திப் பரிமாற்றமுமாயும் தொடரும் உரையாடல்கள். (அடேய்..பேரைச் சொல்லித் துலையனடா..). கதைத்ததிலிருந்து ஊகித்ததில் அவன் படித்த பள்ளிக்கூடத்தின் இணையத்தளம் போய் உயர்தரப் பரீட்சை எடுத்த வருடத்தின் படி தேடி, நிழற்படங்களைக் கூர்ந்து பார்த்தும் எந்தப் பயனுமில்லை.

திரும்பவும் ஹாய்கள் & நட்பு வட்டங்கள் பற்றிய பேச்சு. நானும் ஏதோ நினைப்பில் இரண்டு குமார்களையும் (குமர்கள் அல்ல!) இன்னுமொருத்தனையும் ஞாபகப்படுத்திக் கொண்டு, அந்த மூவரில் ஒருவன்தான் இவன் என்று தீர்மானித்தேன். திருவிழா நேரத்தில் ஏதோ ஒரு குமார் என்னோட வந்து கதைத்தானே.. முகம் மறந்து போச்சே!! சரி, இனிமேல் process of elimination தான்!

குமார்1 என்று எடுத்துக்கொண்டேன் அடுத்த முறை காணும் போது. பேசுகையில் சொன்னான் குமார்1 வருகிற மாசி மாதம் திருமண்ம் செய்து கொள்ளப்போகிறான் என்று. (அடப்பாவி, அது நீயில்லையா!)

பிறகு கதைத்த சில சந்தர்ப்பங்களில் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. (சந்தித்த அன்று முழுக்க.. " பேரைச் சொல்லி அறிமுகம் செய்கிற பழக்கமில்லையா உனக்கு" என்று திட்டித் தீர்ப்பதுதான்!! முகம் மட்டும், "என்னைப் பார்த்திருக்கிறாய்.. எங்கெயென்று சொல்லு" என்று வேதாளமாய் கேள்வி கேட்கும்.)

நேற்றும் அதே "ஹாய்". சரி இன்டைக்கு உன் பெயர் அறியாமல் விடுவதில்லை. கொஞ்ச நேரம் பேசிய பின், மாலினியின் மின்னஞ்சல் முகவரி கேட்டதற்கு, "உம்மட ஃபோன் நம்பரைப் போட்டுத்தாரும். அனுப்பிறன் என்று செல்லிடப்பேசியைக் கொடுதுவிட்டு பெயர் தெரிந்துவிடும் என சந்தோசத்தில் மிதந்தால், "இந்தாங்கோ" என்று நீட்டியதில் இருந்தது அவனது இலக்கம் மட்டுமே!!! (ஐயோ!!!)

மாலினியிடம் பேசுகையில் "பெயர் தெரியாமல் பேசும்" கதை சொன்னால், ஜோக் ஒஃப் த இயர் என்று சிரிக்கிறாள். பிறகு அவளுடன் சேர்ந்து யோசித்தும் பிடிபடவில்லை. காலையிலே நடந்து போகும் போது மின்னலாய் பொறிதட்டியது. வீதியிலே துள்ளாத குறை. கடந்து போன எவரும் முகத்தில் என் சிரிப்பைக் கண்டு ஒரு மாதிரித்தான் பார்த்துப் போயிருப்பர். பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் இவ்வளவு நாளும் என்டு அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ என்றொரு யோசனை வேறு வந்து தொலைத்தது.

இன்றைக்கும் கண்டேன். ஆனாலும் பெயர் சொல்லி அவனை விளிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டுமேயென அவன் மின்னஞ்சலைக் கேட்டேன்.

"என்ட பெயர் தெரியுந்தானே?" (அப்ப நான் பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் என்டது உனக்குத் தெரிஞ்சிருக்குமோ என்டு யோசிச்சது சரிதானா!! தெரியாம முழிக்கிறனென்டு கண்டா பேரைச் சொல்றதுதானே!!)
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "ஓமெண்டுதான் நினைக்கிறன்" "என்ன ஸ்பெலிங் பாவிக்கிறனீங்க? Gயா Kயா..."

வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது!


பி.கு: கணவரும் தோழியும் சொன்னமாதிரி "பெயர் தெரியாமல்தான் இதுவரைக்கும் உன்னுடன் கதைத்தேன்" என்று ஒத்துக்கொண்டு அவனிடமே பெயரைக் கேட்காமலிருந்தது நல்லதென்றே தோன்றுகிறது. எல்லாம் நன்மைக்கே!?

அவசரமாக ஐடியா தேவை.

நேற்று ஒரு பெண்குழந்தை பெற்றெடுத்த, மூன்று மாதங்களே இங்கே தங்கப்போகும் என் தோழிக்கு, உபயோகப்படும்படி என்ன கொடுக்கலாம்? சொல்லுங்களேன்?

புதுத்தாய்மார் (மற்றவர்களால் கொடுக்கப்படக்கூடியதாக) என்ன விரும்புவார்கள்?

பார்ப்பதற்கு இன்றிரவு போகிறோம் நண்பர்களே, இன்னும் 5 மணித்தியாலத்திற்குள் பதில் சொல்லுங்களேன்...

குறிப்பு:

  • தாயும் சேயும் நலம்.
  • இங்கே கோடைகாலம் இப்போது.
  • புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடில்லை அவளுக்கு.
  • நிறைய ஆடைகளும் வந்துவிட்டனவாம் குழந்தைக்கு.

மனக்கறை

அழகானதொரு கடற்கரைப்புறம் அசிங்கமாகிப்போன கதை:

க்ரொனொலா: இரண்டு வாரங்களுக்கு முன்பு - பணிமுடிந்து நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு தன்னார்வ lifeguardகள் மத்தியதரைக்கடற்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் தோற்றமுடைய ஒரு குழுவினரால் "இது எங்களுக்கான கடற்கரை. இங்கு எங்கே வந்தாய்? போ" என்று பயமுறுத்தப்பட்டார்கள். "எல்லாருக்குமான கடற்கரையில், உங்களைப் பாதுகாக்கவே நாங்கள் செயல்படுகிறோம்" என்று பதில் சொன்னதற்கு பரிசு மூர்க்கமான தாக்குதல். தாக்கப்படுவதைக் கண்டு சண்டை விலக்க ஓடிவந்த மூன்றாவது lifeguardம் பலமாகத் தாக்கப்பட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்: கடற்கரையில் lifeguardகள் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மத்தியகிழக்கு நாடுகள்/மத்தியதரைக்கடற்பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் போன்று தோற்றமுடையோர் தாக்கப்பட்டார்கள். காவலர் பாதுகாப்பளிக்க நேரிட்டது. lifeguard சங்கத்தினர் சில லெபனானியர்களுக்குத் தம் அலுவலகத்தில் பாதுகாப்பளித்தார்கள்.

அணிதிரண்ட அன்றிரவும், தொடர்ந்த இரவுகளிலும்: தம்மினத்தவர் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நொருக்கப்பட்டு, வீடுகளுக்கு கற்களெறியப்பட்டன.

பதிலுக்குப் பதில் என்று தொடர்கிறது சிட்னியில்.

பதட்டம் நிலவுகிறதென்றும், பிரச்சனைப்பட்டார்களென்றும் சொல்கிற ஊடகங்கள், பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்கள் பற்றி அலட்டிக் கொள்வதாய்க் காணோம். சம்பந்தப்பட்டவர்கள்: லெபனான்/பக்கத்து நாடுகளிலிருந்து இங்கே வந்து குடியேறியோர்/இரண்டாம் தலைமுறை & வெள்ளையர். (ஆக, அவுஸ்திரேலியனை, இன்னொரு அவுஸ்திரேலியன் தாக்குகிறான்!). இந்த வெள்ளை அவுஸ்திரேலியர்களுக்கு இருப்பது ஊடகங்களாலும் அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் அரசினாலும் புகட்டப்படும் செய்திகள். இவர்களுக்கு மத்தியகிழக்கு நாடுகள் / மத்தியதரைக்கடற்பிரதேசங்களிலிருந்து வந்தவர்களென்றால் ஒரு பீதி. தீவிரவாதியாக இருப்பானோ.. குண்டு வைப்பானோ என்று. அந்த பாதுகாப்பின்மையே ஒருவித மூர்க்கமான தற்காப்பு உணர்ச்சியை வளர்க்கிறது.

இங்கே, லெபனானியர்களைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம் நல்லதன்று. இளைஞர்கள் சிலர் சேர்ந்தால் பொது இடத்தில் intimidating ஆக நடந்து கொள்வதுண்டு. இது லெபனானியர்கள் மட்டுமல்ல என்றாலும், கொஞ்சம் வன்முறை அதிகமானவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களே முன்னிறுத்தப்படுகிறார்கள். குழு வன்புணர்வுச் சம்பவங்களும் நடந்துள்ளன. வன்புணர்ந்த குழுவினர் இச்சமூகத்தினர் என்பதும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது வெறுப்பையும், ஒரு வித அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது. எந்தச் சமூகத்திலும் பிரச்சனைக்குரியவர்கள் சிறு அளவில் இருக்கத்தான் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எல்லாருமே இப்படியானவர்கள் என முத்திரை குத்துவது எனக்கென்னவோ முட்டாள்தனமாகப் படுகிறது.

பிடுங்குப்பாடாக (நன்றி வசந்தன்) இருக்கிறதைப் பற்றி லெபனானியரொருவர் பத்திரிகைக்கு "எப்போதும் ஒரு படி குறைவாகவே நடத்த/பார்க்கப்பட்டோம்; குழு வன்புணர்வுச் சம்பவங்கள் நடந்த போது ஒட்டுமொத்தமாக(அந்த ஒரு சிலர் காரணமாக) எங்கள் சமூகம் ஒதுக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டோம். இப்படியானவற்றால் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்." என்று சொல்கிறார். கடைசியாக அவர் சொல்லியிருப்பது என்ன தெரியுமா? "வன்முறைக்குக் காரணம் முஸ்லிம் லெபனானியர்கள்தான்; அவர்களுடனான பிரச்சனை அவர்களுடனேயே பேசித்தீர்க்கப்படவேண்டிய ஒன்று. அதனால் கிறிஸ்துவ லெபனானியர்களான எங்களைப் பலிகடாவாக்காதீர்கள்". இது எப்படி இருக்கு?

கடற்கரை எல்லாருக்குமானது; தனிப்பட்ட குழுவுக்கோ அதைச் சார்ந்தவர்களோ மட்டுமானதல்ல என, வாழ்க்கை முறையைக் காக்க வெளிக்கிட்டவர்கள் - lifeguards மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் - வன்முறைக்கு எதிரானதாக ஒலிக்கத் தொடங்கியது எப்படி/எப்போது இனவெறி சாற்றும் ஒன்றாக முகம் மாற்றித் தடம் மாறியது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

இனவெறி எல்லாருக்குமில்லை. இருக்கிற சிலர் அதை வெளிக்காட்ட நல்லதொரு சந்தர்ப்பமாகவே இதைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு வெள்ளையர் அல்லாதோர் எவரும் அவரவர் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டியவரே. அவுஸ்திரேலியா ஒரு பல்கலாச்சார நாடு என்பதோ, வேறு நாட்டிலிருந்து வந்து இங்கு வாழ்வோர் நாட்டுக்குச் செய்யும் பங்களிப்பைப் பற்றியோ இவர்கள் சிந்திப்பதில்லை. இவர்கள் ஒருபுறமென்றால், மறுபுறத்தில் இங்கே வந்து வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளோரின் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் ஊடகங்கள், அரசு புண்ணியத்தில் சாதாரண சராசரி மனிதர்களாய், குடிமக்களாய்ப் பார்க்கப் படாமல் விடப்படுகையில், அதன் காரணமாக ஏற்படும் ஆத்திரம், காழ்ப்புணர்ச்சி என்பவற்றால் ஆட்கொள்ளப்பட்டு வேண்டாத செய்கைகள்/பேச்சு/எண்ணங்களுடையவர்களாக மாற்றப்பட்டவர்களாய் காணப்படுகிறார்கள்.

அத்தகைய கொஞ்சப்பேரின் முட்டாள்தனத்தாலும் குறுகிய மனப்பாங்கினாலும் ஒரு வேண்டாத சிறு பொறியாய் ஆரம்பித்தது பெரிதாய்ப் பரவுகிறது. கடுமையான சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலே இந்தப்பிரச்சனையை கட்டுமீறிப்போவதிலிருந்து உடனடியாய்த் தடுக்கும். நாளாந்த நடவடிக்கையோ வாழ்க்கையோ கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும், உடனடியாக மேலும் இனவெறி தூண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடக்காதிருக்கும்படி கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், காவலர்களுக்கு இன்னும் கூடிய அதிகாரங்கள் அளிக்கப்படல் போன்றவை வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் குறைக்க உதவும்.

ஆனால், என்னதான் அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும், சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் இருபகுதியினருமே பதிலுக்குப் பதில் என்று நடந்து கொண்டால் ஒரு நாளும் முடிவு வராது. Political correctness பார்த்து, நோகாமல் நொய்யாமல் தீர்வு காண்பதென்பது முடியாது. இரு தரப்புமே பிரச்சனை இருபக்கமும் இருக்கிறதென்பதை உணர்ந்து அதைப் பற்றித் தெளிவாகப் பேசி தீர்க்கமான முடிவெடுத்து அதனைச் செயற்படுத்த முற்படும் வரை, இப்போது க்ரொனலாவிலும் மரூப்ராவிலும் நடப்பது தொடர்ந்து வேறு வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் தலைதூக்கி, ஊடகங்களுக்குச் சிலநாள் தீனியாய் இருக்குமேயன்றி சுமுகமான உறவுள்ள சமூகம் உருவாகும் சூழ்நிலை தராது.

தண்டனை

அவுஸ்திரேலிய கிழக்கு நேரப்படி, இன்று காலை 9மணிக்கு (சிங்கப்பூர் காலை 6) அந்த இளைஞன் தூக்கிலிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பான்.

அவன், வான் ஙுவென். வழிதவறிய தனது இரட்டைச்சகோதரனின் வழக்குரைஞர் கடனைத் தீர்ப்பதற்காக சிங்கப்பூர் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த முற்பட்டிருக்கிறான். சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்திலே 400கிராம் ஹெரோயின் சகிதம் பிடிபட்டதற்கான தண்டனையே மேற்சொன்னபடி நிறைவேற்றப்பட்டது.

நல்லதொன்றைச் செய்ய யோசித்தும், அதைச் செயற்படுத்த தவறான வழியைத் (தெரிந்தே) தேர்ந்தெடுத்ததே அவனுக்கு முடிவையும் தேடித்தந்தது. அவன் குற்றவாளி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அவனுக்களிக்கப்பட்ட தண்டனை தான் உறுத்துகிறது. அவன் செய்ததற்கு சிறைத்தண்டனை போதும் என்பதே என் கருத்து. சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால் அது முடிந்ததும் வெளியே வந்து இதையே மீண்டும் செய்ய மாட்டானா என்ற கேள்விக்கு (ஆயுள் தண்டனை வழங்கலாம் என்பதைத்தவிர) என்னிடம் பதிலில்லை.

சிங்கப்பூருக்குள் போதைமருந்து கடத்துவோருக்கு மரணதண்டனையளிப்பதன் மூலம் அவ்வாறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை, தமது எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒரு தயக்கத்தைக் காட்டும்படி வைக்கிறது சிங்கப்பூர். இந்தத் தண்டனை முறை அந்த எச்சரிக்கை விடுத்தலைச் செவ்வனே செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. மரண தண்டனைதான், ஆனாலும் தூக்கிலிட்டுக் கழுத்து முறிய, துடிதுடிக்கக் கொல்வதுதான் ஒரே வழியா? இதே எச்சரிக்கையை வேறு தண்டனை(கள்) மூலம் விடுக்க முடியாதா?

குறிப்பு: கடைசியாக மகனைக் கட்டித்தழுவ அனுமதி கேட்ட அவனது அம்மாவுக்கு, ஜோன் ஹவாட் (அவுஸ்திரேலியப் பிரதமர்) தனிப்பட்ட வேண்டுகோள் சிங்கப்பூருக்கு விடுத்தமையால், மகனது கைகளைப் பற்றிக்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

குறுக்கெழுத்து II

கொஞ்சம் வித்தியாசமான குறுக்கெழுத்து.

ஆங்கிலத்திலே குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லை கட்டங்களில் இட வேண்டும்.(உதாரணமொன்று நிரப்பப்பட்டுள்ளது). செய்றீங்களா?

நிரை(இ.வ):

1. Slumber 2. Post 4. Particle 5. Night 6. Hindrance; Harm 7. Bend 8. Cooking 9. Reparation
11. Vessel 13. Limericks 14. Sin 15. Goat 17. Widow 18. Consent 20. Abbreviation Of Mister (Reversed)


நிரல்(மே.கீ):

1. Mind 3. Rapidity 4. Proximity 5. Parody 6. Tooth 7. Paddy Field 8. Occurence 10. Home 12. Disparity 15. Yes (Upside Down) 16. Our 19. Tree (Upside Down) 20. Moon

இது கொலைகளின் கதை

மு.கு: இளகிய மனதுடையவர்கள் இதை வாசிக்க வேண்டாம்..பிறகு என்னுடன் சண்டைக்கும் வர வேண்டாம்.

பகல் பலது வீட்டிலே கழிந்த போது ஆசையில் எடுத்து/வாங்கி வந்து பார்த்துப் பார்த்து தேவையறிந்து உரமிட்டு வளர்த்ததுவும், பள்ளிக்குப் போகையிலேயும் பாசத்துடன் கவனித்ததுவுமாய் இருந்த என் செல்லச் செடிகள்... ( "இவ்வளவு மரம் ஏன் வளர்க்கிறீங்க? கரப்பொத்தான் எல்லாம் வரும்". "இல்லை அப்பிடி ஒன்டும் வராது. நான் கவனமாப் பார்ப்பன்")

வாடிப்போய்த் தண்டுடன் இலையில்லாமல் நின்று வளர்ச்சி நிறுத்தப் போராட்டம் நடத்தின வாழைக்குத் தலை வெட்டி, ("ஐயோ! ஏன் வெட்டுறீங்க? ஒரேயடியா சாகப்போகுது". "இல்ல.. இப்பிடி வெட்டினா வருமாம்..--- சொன்னவ ".) இலைகள் வர, விசேட நாளுக்கெல்லாம் தலைவாழை கிடைத்ததுவும்..("அப்பவே சொன்னன் தானே! :O) ")

தாவரமும் அதன் வளர்ப்பும் பற்றி நண்பியின் ஆர்வம் தொற்றியதில் அது பற்றிய வகுப்புகளுக்குப் போனதொரு ("அவக்கு back yard இருக்கு, அவ அதுக்கு மரம் வைப்பா. உம்மட நிரம்பின பல்கனியில இனியெங்க இடம்?". "இல்லையில்ல, எப்பிடிப் பராமரிக்க என்டு படிக்கத்தான் நான் போறன்") ஆர்வக் கோளாற்றுக் காலத்தில் வாங்கின பூந்தொட்டிகளும், சிலபல செடிகளும் ஏற்கனவே இருந்த பலகணித் தாவரக் குடும்பத்தில் கலந்தனவே. ( "இன்டைக்கு இவ்வளவும்தானா?". ":O ")

சமையலறையின் சேதன மீதிகள் போட்டு வளர்த்ததில் ஒன்றாய் நன்றாக கிளையும், கிளையில் இலையும் விட்டு, கரப்பொத்தான் தொடங்கி சிலந்தி வரை பலதுக்கும் புகலிடமாய் ("அப்பவே சொன்னன்..இதெல்லாம் போடாதையும் என்டு!கேட்டாத்தானே!! ") நின்ற இரட்டைப்பிறவிக் கருவேப்பிலையை வகுப்புக்குப் போய் பெற்றதாக நினைத்துக்கு கொண்ட அசட்டறிவின் காரணமாய்ப் பிரித்து, துணையிழந்த சோகத்தில் அவற்றை ஆழ்த்தியதும் ("வீண் வேலைகள் செய்யிறது"), அத்துடனே பக்கத்தில் நின்ற அழகான கானேஷன் தண்ணீர் தண்ணீரென அலறியது கேட்காமல், அதை தொண்டை வற்றச் சருகாக்கியதும், எனதருமைச் சிலந்திப் புல்லும் அதே கதிக்காளாகியதும்.. :O(

தேயிலையும், முட்டைக் கோதும் போட்டு வளர்த்த ரோசாச்செடியெல்லாம்வெறும் முள்ளாகி நின்று ("ரோசாப்பூவெண்டா எப்பிடி இருக்கும்?" .."Grrrr"), வளரப் பார்த்த வத்தகை, வான் பார்த்து, பூமி ஆராய்ந்து, வராமலே போனதுவும் என்று தாவர சங்கமத்துள் பலதும் வளர்த்திளைத்தேன் நான் - மெய்யே கள்ளியொன்று என்றறிந்து இன்புற்றேன். ( "எல்லாம் போய் இப்ப இதுவா!")

கவனியாது விட்டாலும், இன்னும் இருக்கிறேன் பார் என்று காட்டி மகிழ வைக்கும் அன்பான கள்ளிச்செடிகளுக்கும் (" நல்லகாலம், ஒன்டும் செய்யாம விட்டிருக்கிறீர்..உயிரோட நிற்குது", ":O("), வீட்டுக்குள்ளே இருப்பதனால் தப்பிப் பிழைத்திருக்கும் மூங்கிலுக்கும் துணையாய் நேற்றுக் கிடைத்த Kangaroo Paw வுக்கு "மேற்தட்டு" வாழ்க்கை வெறுப்பது எப்பவோ.. அன்றைக்கு மீண்டும் ஒரு கொலை நடந்திருக்கும்.

இருக்கிறது..இல்லை?

இருக்கும் பொருள் :

  • இருப்பது போன்று தோற்றம் உடையது
  • இருப்பது போன்று தோற்றமற்றது. (புலன்களால் உணர முடியாததாய் இருப்பது)

இல்லாத பொருள்:

  • இருப்பது போன்ற தோற்றம் தரக்கூடியது.

சாப்பாடு, சட்டை & சாயம்

நல்லகாலம் , மூச்சு விடுவது ஒரு தன்னிச்சையான செயல்... இல்லாட்டி இருக்கிற வேலைக்குள்ளே அதைச் செய்ய மறந்து போய், நிறைவேறாத ஆசை உள்ள ஆவி/பேயாய் (<--இப்பவே இதுதான் என்டு பெயர்!!) உலாவாமல்(நன்றி சில பல சினிமா & கதைகள்)..உங்களைப் பாட வைக்க (வேறென்னத்தை.. "சோதனை மேல் சோதனை" தான்!) திரும்பவும் வந்திருக்கிறேன்.

தெ.து.வ.ப.ச.செ. - மன்னிப்புக் கேட்கிறேன்.. எனக்குத் தொலைபேச முயற்சித்தீர்கள். ஆனாலும் அந்த நேரத்துச் சூழ்நிலைகளால் பதிலளிக்க முடியவில்லை! விரைவில் தொடர்பு கொள்கிறேன்.


------------------------------------------------------------------

சரி, விதயத்துக்கு வருவோம்...இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை என்று வானொலி, தொ.காவில் சொல்வது போல வாசிக்கவும்! >>> இன்றைய எரிச்சல்..வழங்குவோர்: பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம். (கலை - hint, hint!! ;o)

முக்கியமாக இவர்கள் கடைப்பிடிப்பதில் இரண்டை (என் பார்வையும் கலந்து சொல்கிறேன்) தாமே அல்லது "7 நாள் உபதேசம் பெற்ற" தங்கள் கூட்டத்தினர் சமைத்தாலொழிய இவர்கள் வேறிடத்தில், வேறு யார் வீட்டிலும் "சமைக்கப்பட்ட" உணவை உண்பதில்லை. பழமோ, பொதி செய்யப்பட்டிருப்பதிலிருந்து எவ்வித மாற்றமுமின்றிப் பரிமாறக்கூடியதாய் இருக்கும் உணவு/பானங்களைத் தவிர "ஞானம்" பெறாதவர் வீட்டில் உண்ணார்கள். ஏனா? நல்ல கேள்வி கேட்டீர்கள்!

"ஞானம்" பெறாதவர்கள் 1. உணவு தயாரிப்பு முறை அறியாதவர்கள் (அதாவது நல்ல எண்ணங்களோடே சமைக்க வேண்டும் என அறியாதவர்கள்) 2. அதனால், என்ன எண்ணங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்க சமைத்தார்கள் என்று தெரியாமையால், தற்செயலாய், தேவையற்ற/வீணான எண்ணவோட்டம் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் இருந்திருந்தால் அது உணவு மூலமாக தம்மை வந்தடையும். இது இவர்களது "தூய்மையைக் கெடுக்குமாம்". உடன்படுகிறேன்.. எண்ணங்கள் உணவின் தன்மையில் மாற்றமேற்படுத்துமென.


இவர்களே சமைப்பார்கள்..ஆனால் உள்ளி (பூண்டு), வெங்காயம் - இவை சமையலில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா. ஏனென்ற கேள்வி வருகிறதா? இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள்? அல்லது வெங்காயம், உள்ளி போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை இவர்களுக்கு அதீதமான பாலுணர்ச்சிதான் இருந்ததா!

வெள்ளை ஆடைதான் அணிவார்கள். அதிலும் முழுக்கைச் சட்டை. அதிலும் சேலை அணிவோர் - கேட்கவே வேண்டாம். கழுத்தோடு ஒட்டிய இரவிக்கைக்கழுத்து, முழுக்கை, சாதாரண இரவிக்கை போன்று இடுப்படியில் நிற்காமல் இன்னும் நீளமாய். ஆக மொத்தம் இரவில பார்த்தீர்களோ - தெரியாத ஒருவருக்கு lift கொடுத்து, அவர் காரை விட்டு இறங்கி நுழைந்த இடம் றொக்வூட் சவக்காலை என்று கண்ட ஒரு மாமாவுக்குப் போல - உங்களுக்கும் காய்ச்சல் வருவது சர்வ நிச்சயம்.

ஏன் இந்த நீட்டு ப்ளவுஸ்? சேலை கட்டினால் இடுப்புத் தெரியுமல்லவா? அப்பிடி இடுப்புத் தெரிவது கூடவே இருந்து தியானம் பயில்வோர்க்கு(பெண்கள் முன்னால் அமர ஆணகள் பின்னாலாம், மாறியே அமர்ந்தாலும் தியான நிலையத்தில் காண்கிற மற்ற நேரங்கள்!!) இடைஞ்சலாக..கவனத்தைக் குலைப்பதாக இருக்ககூடாதாம்.

எனக்கு விளங்கவில்லை, ஏற்கெனவே உள்ளி, வெங்காயமின்றிச் சாப்பிடுபவர்கள் & தியானத்திற்கென வருபவர்கள், கேவலம் ஒரு சின்னத்துண்டு தசையால் கவனம் சிதறுவதா? அப்ப இவர்கள் கவனம் தியானத்தில் இல்லையா? அப்படியானால் (இவர்கள் சொற்படி பார்த்தால்) உள்ளி, வெங்காயம் சாப்பிடுபவருக்கும், "பாலுணர்வு தூண்டப்படாமல் இருக்கும்" இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மனிதன் மனிதன் தான். அவனது அடிப்படை இயல்புகளைக் குலைத்து, அதற்குச் சாயம்
பூசுவானேன்?

சொல்ல விரும்புவது

என் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய வலைப்பதிவாளர்களே, வணக்கம்.

இன்றைக்கு நான் சொல்லப்போவது உங்களுக்கு முக்கியத்துவமில்லாத செய்தி.. ஆனாலும் நீங்கள் "சொல்லவில்லையே நீ" என்று சொல்லிவிடாமல் இருப்பதற்காக நான் சொல்வது என்னவென்றால்: ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி சரியாக அவுஸ்திரேலிய நேரம் 12 ஒக்டோபர் 2005, 02:00 முதல் நடைமுறைப்படுத்தப்படும் சில செயற்பாடுகள்/நடைமுறைகள் காரணமாக கிட்டத்தட்ட 2 - 3 கிழமைக்கு இந்தப்பக்கம் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு (நிகழ சந்தர்ப்பமே இல்லாத) மனவருத்தங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.(அடடே.. யாராவது வந்து corporate report எழுத கூட்டிட்டுப் போங்களேன்!! ;O)

புதிய செயற்பாடுகளை சரிவர மண்டைக்குள்ளே செலுத்தி (வசந்தன் - அந்த குளுக்கோசும் வீவாவும் இப்போ பயன்படும்! அன்பளிப்பு தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படும்!!) என்னென்ன செய்ய வேண்டும், எவ்வெப்போது செய்ய வேண்டும் என்பதையும் பழகியெடுத்து, சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. அதனால்... "இரண்டு கிழமையாவது நிம்மதி" என்று சந்தோசப் படுகிறவர்களும் "ரொம்ப முக்கியம் இது" என்று அங்கலாய்ப்பவர்களும் "அடடா!!" என்று கவலைப்படுபவர்களும் (இது ஒரே ஒருவர் தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!! ;O) ) ஒரு சில கோப்பை ரசங்களை (ரசம் - அவரவர் விருப்பத்தைப் பொறுத்து சுவை/நிறம்/மணம்/குணம் வேறுபடலாம்) அருந்தி மனதை ஆற்றிக்கொள்ளுங்கள்!

மீண்டும் கொஞ்ச நாளையால் சந்திக்கலாம்.

சம்பந்தமில்லாத பின்குறிப்பு: 125ம் பதிவு இந்த அறிவித்தலா!?! :O(

காணவில்லை!


தேடிச் chocolate நிதந் தின்று,
மழலைக் கதை பல பேசி,
களிப்புடனே புரண்டெழுந்து, குழப்படி மிக;
பிறர் மகிழக் குறும்புச் செயல்
புரியு மிந்தக் குட்டி வம்பனை...

பல நாளாய்க் காணோ மடா!!!

குண்டுவெடிப்பும் எரிச்சலும்

பாலியில்(Bali) குண்டு வெடித்தாலும் வெடித்தது ஊடகங்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்யத்தொடங்கி விட்டன. 2002ல் வெடித்த குண்டின் இலக்குப் போலவே இந்த முறையுமா எனத்தெரியவில்லை. ஜமா இஸ்லமியாக் குழுவினர் தான் அக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

நான் சொல்ல வருவது அதைப் பற்றியன்று. குண்டு வெடித்ததாகச் செய்தி வந்தது வெள்ளியிரவு. சனி காலையில் செய்தியில் சொல்கிறார்கள் அவுஸ்திரேலிய/நியுசவுத் வேலஸ்(எதென்று சரிவர ஞாபகமில்லை) இஸ்லாமிய அமைப்பு இக்குண்டு வெடிப்புக் குறித்து தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறதென்று. சகலவிதமான அமைப்புகளும் இந்தக்குண்டு வெடிப்புத் தொடர்பாக தமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்த வேளை, ஊடகங்கள் இஸ்லாமிய அமைப்பினரின் கண்டனச்செய்தியை மட்டும் தூக்கிப் பிடித்தமை ஊடகங்களின் பாரபட்சமான பார்வையையும், வேண்டாத, விஷ(ம)மான எண்ணங்களை மக்கள் மனதில் ஊன்ற வைக்கும் முயற்சியையுமே காட்டுகிறது. ஏற்கெனவே இஸ்லாமியர் = தீவிரவாதிகள் என்கிற எண்ணம் மக்களிடையே விதைக்கப்படுகிறது. கத்தோலிக்க, அங்லிக்கன், பௌத்த, இன்னும் எத்தனை மத அமைப்புகள் கண்டனச் செய்தியை வெளியிட்டிருக்கும்? ஏன் அவற்றைக் குறிப்பிடவில்லை? இஸ்லாம் மதத்தினர்தான் கண்டிக்கிறார்கள்; அவர்களைச் சார்ந்தவர்தான் செய்ததென அவர்களுக்கே சந்தேகம் வந்ததில்தான்/ தெரிந்ததில்தான் இவ்வாறு கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்கள் என்கிற நினைப்புகளுக்கு இடம் தரும்வகையில் தான் செய்தி சொன்ன விதம் அமைந்திருந்தது. குண்டு வெடிப்புக்குச் சூத்திரதாரிகள் பற்றிய ஊகங்கள் நிலவினாலும், இன்னும் சரியாக நிறுவப்படாத நிலையில் ஊடகங்கள் பொறுப்பற்றதனமாக, குறிப்பிட்ட சமூகத்தினரின் மீது காழ்ப்புணர்ச்சி வரும்வகையில் இவ்வாறு செய்தி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

பிரித்தானியரின் வழி வந்தவர்களென்று உறுதிப்படுத்திக்கொள்ள "Divide & Rule" உத்தியை ஊடகங்களின் மூலம் செயல்/வெளிப்படுத்துகிறார்களோ?

தெ.து.வ.ச.நி.கி.ச. க்கு வாழ்த்து!

நாளை தொடக்கம் நாளையன்றை வரை நடக்கவிருக்கும் நியூஸிலாந்து வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்.

சந்தித்துக் கொள்ளப்போகிறவர்களே, சிட்னி சந்திப்புப் போல அல்லாது விரைவிலே (சுடச்சுட) படங்களை வலையேற்றுங்கள்! ;O)

ஒரு அலறல்

அன்றைய ஒன்றுகூடல் எங்கேயோ, அங்கே திட்டுத்திட்டாய், தீவுகளாய்ப் பிரிந்து நின்று உரையாடல்கள். வெற்றுப்போத்தல்களுக்குப் பக்கத்தில் ஆண்கூட்டம். பிள்ளைகள் ஓடித்திரிவார்கள். அடிக்கடி, ஒரு விதுஷனுக்கோ அல்லது ஒரு லக்சனாவுக்கோ அம்மாவிடமிருந்து ஒரு உருட்டல்/மிரட்டல் குழப்படி கனத்தால் பரிசாய்க் கிடைக்கும். பிறகும் அம்மா தன் தோழிகளுடன் கதையில் மூழ்கிவிடுவா. அப்படியென்ன கதை என்று கேட்டால், நீங்கள் பாவம், "அனுபவிக்க" நிறைய இருக்கிறதென்று அர்த்தம்.

இந்தப் பெண்களுக்கு அநேகமாக ஒத்த வயதாயிருக்கும், அல்லது ஒத்த வயதில் பிள்ளைகளிருப்பார்கள். இங்கே முக்கியம் பிள்ளைகள் இருப்பது. அதுதான் அடித்தளமே! ஒருமாதம் தொடங்கி பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் வரை அங்கே செல்லுபடியாவார்கள். பிள்ளைக் கவனிப்பு/வளர்ப்பு/தண்டனை & சமாதான முயற்சிக்கான வழிமுறைகள் பற்றிய அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படும். கொஞ்ச நேரம் அந்தக் குழுவுக்குள்ளே மாட்டுப்பட்டால்:

  1. இல்லாத பிள்ளையைக் கவனிக்க / சரிவர வளர்க்கத் தேவையான 100% அறிவு, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உங்களுக்குக் கிடைக்கும்/தெரியவரும்.
  2. பைத்தியம் பிடிக்கும். விறாண்டுவதற்குப் பாயும் தேவைப்படலாம்.

எங்கள் "ஒன்றுகூடல்" சனத்தில் 3 தம்பதிகள் பிள்ளை பெற்றுக்கொள்ளாத பாக்கியசாலிகள். எப்ப பிள்ளை என்று எப்போதும் எங்கேயும் கேட்கப்பட்டு நச்சரிக்கப்படுபவர்கள். இதிலே நானும் ஒருத்தி. சில வேளைகளில் இவர்களது அலுப்புத் தாங்காமல் "pregnant ஆன் உடன் உங்களுக்குத்தான் முதல்ல சொல்லுவன். வந்து எல்லாம் செய்து தரோணும்" என்று (அல்லது இதே மாதிரி ஏதாவது) சொன்னால் அதற்குப் பிறகு ஒரு 3 சந்திப்புகளுக்குத் தப்பலாம். பிறகு ப.கு.க.தி. தான்! மற்றவர்களெல்லாரும் இருந்து Nappy rash, உடுப்பளவு, பிள்ளை சாப்பிடாமல் இருக்கிறது (இதற்கு பிள்ளையைத் தூக்க நாம்தான் 2 முட்டை குடிக்க வேண்டும்) பிள்ளைப்பராமரிப்பு நிலையத்துக்கு ஆகும் செலவு என்று நீண்டு போகும் கதைகளில் மூழ்கி அறிவுரை முத்துகளெடுத்துக் கொண்டிருக்க நாங்கள் மூவரும் இருந்து எங்களுக்குத் தேவையான கதைகள் பேசுவோம். அவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்புகளுடனே எங்கள் சம்பாசணைகள் தொடரும்.

அதுக்கும் வைபட்டது ஆப்பு! தோழியர் இருவரும் மூன்று மாத வித்தியாசத்தில் பிள்ளைகளையும் பெற்றார்களா, நான் அம்போ! என்று தனித்தீவாய் இந்த அறிவுரைக்கடல்களில் தப்பிக்க இயலாமல் முக்குளிக்கிறேன். தோழியரும் இருந்து nappy விலையும், சாப்பாடும், தேவைப்படக்கூடிய பிள்ளைப் பராமரிப்பையும் பற்றிக் கதைக்கிறார்கள். இப்ப யாருமே என் தோணியில் இல்லை.

இப்போதெல்லாம் இந்த ஒன்று கூடல்கள் நிறைய சக்தி விரயமாகிறது. ஏனா, பிள்ளைக் கதை மழையில் நனைந்து, nappy விற்கும் விலையில் துவாய் வாங்கித் தலைதுவட்ட முடியாமல் அயர்ந்து போய்ச் சளி பிடித்து ..ஆ..ஹச்!

பிள்ளை இருக்கிறவர்களெல்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க. பிள்ளை என்றொன்று எனக்கு வந்தால் அறிவுரைக்கும், சம்பாசணைகளுக்கும் கட்டாயம் உங்களைத் தேடி வருகிறேன்; அப்படி நானாக வரும் வரைக்கும் தயவு செய்து என்னைச் சும்மா விடுங்கள்!

(பரவாச்)சோதியில் நானும்!

ஈழநாதனின் பதிவிலிட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிக்கிறேன்.

தமிழ்மணத்திலே பலரும் வழங்குவர் பதிவுகளை வாரி
வாசிக்கையிலே இருக்கையை விட்டெழுவார் மேலதி காரி
சாளரத்தைச் சொடுக்காவிட்டால் மாறி
கண்மணியே - வேலையிலே எல்லாம் நாறிவிடும் நாறி!


இன்னுமொன்று:

இன்னொரு வெள்ளியுடன் வருது வார இறுதி
இரண்டே நாளில் திங்கள் வருவதும் உறுதி
அளவின்றிச் சோமபானம் பருகி
புதுக்கிழமையும் உடல்கள் தள்ளாடும் வெறி பெருகி
குடிப்பது ஏனென்றால் stressஸை இளக்க
கைமேற் பலன் தலைவலி மண்டை பிளக்க!

பி.கு: இந்த நேரிசை , சொத்தி இசை எண்டெல்லாம் சொல்லுறாங்களே, அப்பிடியெண்டா என்ன?

ஒரு நாள் அமைதி

இன்றைக்கு

Peace One Dayயாம். ஐ.நா சபையினரால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த நாள் செயல்முறைக்கு வரக் கொஞ்சம் அதிகப்படியான முயற்சி தேவைப்பட்டிருக்கிறது. எப்படி இந்த நாளைப்பற்றிய எண்ணம் வந்தது என்பதிலிருந்து எந்தெந்த நாட்டு / பாதுகாப்பு / கூட்டுறவுச் சபைகளின், சமயத்தலைவர்களை அணுகி, செப்.21 ஐ போர் நிறுத்தங்களுக்குரியதொரு நாளாகக் கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டது என்பதைப் பற்றியும், இந்த நாளின் முக்கியத்துவம், அது உணர்த்த விழையும் செய்தி என்பதையும் உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியை நேற்றிரவு அரைவாசியிலிருந்து பார்க்கக் கிடைத்தது. ஜெரமி, தனது எண்ணத்தைச் செயற்படுத்தக் கடந்து வந்த பாதையைப் பதிவு செய்திருக்கிறார். அதையே நிகழ்ச்சியாகத் தயாரித்திருந்தார்கள். ஒரு நாளைக்குப் போர் நிறுத்தமென்பது உணவு, மருத்துவ உதவி, தகவல், ஏனைய உதவிகள்/தேவைகள் போன்றவற்றைப் பெறுவதிலும் பகிர்வதிலும் அளப்பரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

2001ம் ஆண்டு செப். 11ம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சமாதான மணியடித்து கோஃபி அனான் இந்த நாளைப்பற்றிப் பேசுவதாக இருந்த நேரத்திலே உலக வர்த்தக மையக் கட்டடங்களின் மீதான தாக்குதலால் அந்நிகழ்வு தள்ளிப்போடப்பட்டது. ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்று இப்போது ஒரு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எல்லா நாடுகளுமல்ல. கடைப்பிடிக்கும் நாடுகளில் எல்லா அரசாங்கங்களுமல்ல. ஆனாலும் அரசு சாரா நிறுவனங்கள் (NGO), மாணவர் முன்னணிகள், மதக்குழுக்கள் போன்றோரால் இந்த "ஒருநாள் போர்நிறுத்தம்" பற்றிய விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. இவர்களின் நோக்கம் யுத்தத்தின் மூலம், வன்முறையின் மூலமன்றி வேறு வழியாலும் அமைதியைப் பெறலாம், நிலைநிறுத்தலாம் என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லுதல். நம் சிறு பங்குக்கு, இந்த நாளைக் குறித்து நாம் என்ன செய்யலாம்?

பெட்டகம்