என்மொழி இன்மொழி

வேலைத் தலத்தில் என்னையும் சேர்த்து 3 இலங்கையர். அனேகமாக ஒன்றாகத்தான் மதிய உணவை உண்போம். மற்ற இருவரும் சிங்களவர் என்றாலும் எனக்காக முதலில் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்கள். என் சிங்கள(பேச்சுப் பழக்க)த்தை மறக்காதிருக்க வேண்டும் என்பதால் அவர்களுடன் சிங்களத்தில் கதைக்கத் தொடங்கினேன். இப்போது சாப்பாட்டு அறைக்குள் மற்றவர்கள் வந்தாலும் நாங்கள் மூவரும் சிங்களத்திலேயே தொடர்ந்தும் உரையாடுவோம். எங்கள் பட்டப்பெயர் : Sri Lankan Mafia!

இந்த மாஃபியாவிலே "ரங்கிக", நடந்த சம்பவங்களை சுவைபடச் சொல்லுவதில் விண்ணன்.ஒரு முறை இலங்கையில் தங்களது CIMA வகுப்பில் நடந்தததாம் என்று இதைச் சொன்னார்:

ஒரு மாணவன், இங்கிலாந்திலிருந்து திரும்பியவன். பிரிடிட்டிஷ் accent உடன் ஆங்கிலத்தில் கதைப்பதும், ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பதும் என்று பெரும் அலட்டல் பேர்வழியாம். மற்றவர்களெல்லாரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இயலாக் கட்டத்தில் ஒரு நாள் அவனிடம் எப்போது இங்கிலாந்திற்குப் போனாய், எங்கே படித்தாய் என்று பூர்வீக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தான் சாதாரண தரப் பரீட்சைக்கு (16 வயது) இலங்கையில் தோற்றிய பின்பு இங்கிலாந்து சென்றதாயும், இப்போ 7 - 8 வருடங்கள் இங்கிலாந்திலேயே இருந்து படித்து விட்டதால் சிங்களம் சுத்தமாக மறந்து விட்டதென்றும் சொல்லியிருக்கிறான். இவர்களும் ஒன்றும் பேசாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விட்டு "அப்படியா" என்று எல்லாத்தையும் கேட்டுக் கொண்டார்களாம்.

வகுப்பு நடப்பது கடற்கரைக்கு அண்மையில். மதிய உணவு இடைவேளையில் கடற்கரைக்குச் சென்று அலையில் விளையாடுவது வழக்கமாம். ஒருநாள் அலட்டல் மாணவனையும் அழைக்க, அவனும் கடற்கரைக்கு சென்றிருக்கிறான். மாணவர்களில் ஒருவன் அல.மாணவனின் காலணிகளை கழற்றியிருந்த இடத்திலிருந்து எடுத்து வந்து கடலுக்குள் எறிந்து விட்டானாம். அல. மா.வும் காலணிகளி மீட்க காற்சட்டை நனைந்து விடாமல் தூக்கிய படியே மெது மெதுவாக நீருக்குள் செல்லும் போது, காலணிகளை எறிந்த மாணவன் பின்னாலிருந்து இவனை பலமாக நீருக்குள் தள்ளி விட்டானாம்.

"புது அம்மோ" ( ஐயோ அம்மா) என்று சொல்லிக்கொண்டே அல.மா. நீருக்குள் விழுந்தானாம்.

அந்தச் சம்பவத்திற்குப் பின் வகுப்பில் யார் என்ன கேட்டாலும் முழுக்க முழுக்க சிங்களத்திலேயே பதில் சொல்வானாம்.

சொந்த மொழியை, பேசுவதில் இவ்வளவு வெட்கமும் தயக்கமும் எதற்கு? இங்கே அவுஸ்திரேலியாவில் பார்க்கிறேன், தமிழைப் பேசத் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் கதைப்பதற்கு வெட்கம் அல்லது ஆங்கிலத்தைக் கதைப்பது போல ஒரு accent உடன் பேசுகிறார்கள். பெற்றோரே "என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது " என்று பெருமையடிக்கும் போது முகத்திலே 2 விட வேண்டும் போல இருக்கும். இரண்டு மொழிகள் தெரிந்திருப்பதில் நன்மையே தவிர தீதில்லை. தமிழ்ப் பிள்ளைக்குத் தமிழ் வராது/தெரியாது, ஆனால் பள்ளியில் 2ம் பாடமாக பிரெஞ்சோ, சீனமோ படிக்கும், அதைப் பெருமையாகவும் கதைக்கும். இதை ஊக்குவிக்க இங்கே நிறையவே பெற்றோருமுண்டு.எங்கே போய் சொல்வது!

அறிவித்தல்

தமிழ் கற்பிக்க ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன் தானே..அதற்கு டோண்டு ராகவன் தன்னாலியன்ற உதவி செய்வதாக கூறியுள்ளார். சந்திரவதனாவும் உதவுவதாக சொன்னா. இருவருக்கும் நன்றி. ஒருத்தரும் தமிழ் வாத்தியாரக முன்மொழியப்படவில்லை. எனவே நானே உருவாக்கப்போகிறேன். (தலையில் அடித்துக் கொள்ளும் சத்தம் நிறையவே கேட்கிறது! :0)). எனக்கு பள்ளிக்கூடத்தில் திட்டித் திட்டிப் படித்த இலக்கணம் கொஞ்சம் தான் ஞாபகத்திலிருக்கிறது. என்ன ஒழுங்கில் ஆரம்பிக்கலாம் என்பது பற்றி ஒரு மூளைப்புயல் நடத்திக் கொண்டிருக்கிறேன் ..எனக்குள்ளே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இந்த வலைப்பதிவை (அடிப்படை தோற்றத்துடன்) உருவாக்கியிருப்பினும் இன்னும் பதிவுகள் எதுவும் இல்லை. அதிகாரபூர்வமாக தொடங்க சில நாட்கள்/ வாரங்கள் ஆகலாம். என்ன பெயர் வைக்கலாம் தலைப்பாக?யார் பதிவதாக போடலாம்?

என் கிறுக்கல் பலகையில் கேட்டிருப்பதை மீண்டும் இங்கே கேட்கிறேன். இலங்கையில் பள்ளிக்கூடத்தில் பாட நூல்கள் இலவசம். எனக்கு அப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வசதியுண்டு. இந்தியாவில் பாடப்புத்தகங்கள் என்ன முறையில் விநியோகிக்கப்பட்டன?இலவசமாகவா அல்லது வாங்க வேண்டியிருந்ததா? குறிப்பாக ஏதாவது புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டதா? இவற்றை எங்கே பெறலாம்? வலைப்பதிவரில் யாராவது தமிழை கல்லூரியில் பட்டப்படிப்பிற்காக அல்லது வேலை நிமித்தமாக படித்தவர்கள் இருக்கிறார்களா?

நிறையக் கேள்விகள் கேட்கிறேன்..உங்கள் கருத்துக்களை அறியத்தரவும்.


அறிவித்தல் 2: சிட்னி முருகன் கோயிலின் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. பூங்காவனம் சி.மு.இளைஞர் வட்டத்தினரால் வருடா வருடம் பொறுப்பேற்கப்பட்டு விமரிசையாக நடத்தப் பெறும் நிகழ்வு.. அதற்கு ஆயத்தம் செய்யுமுகமாக வரும் சனிக்கிழமை(19-மார்ச்) பலகாரம் தயாரிக்கப்பட இருக்கிறது. மத்தியானம் 1 மணி போல ஆரம்பிக்க யோசித்திருக்கிறோம். சிட்னி வாழ் இளைஞர்கள்/சிட்னி விருந்தாளிகள் விருப்பமிருந்தால் வந்து உதவலாம். மேலும் தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம். பாமினி எழுத்துரு தேவைப்படும்:

கற்போம் கற்பிப்போம்

சந்திரவதனாவின் பதிவில் இதை வாசித்ததும் ஒரு வாரமாக என் மனதில் நாளொரு மேனியும்(இது எப்படி சாத்தியம்..கூடு விட்டு கூடு பாய்கிறதா?) பொழுதொரு வண்ணமுமாக ( டியுலக்ஸ் பூச்சு உபயத்தில்) வளர்ந்து வந்த ஒரு எண்ணம் வலுப்பெற்றுள்ளது. சிறுவயதிலிருந்தே தமிழை படித்திருப்பதால் எங்களுக்கு இங்கே எண்ணங்களை எழுத்தில் பரிமாறிக் கொள்வது இலகுவாக இருக்கிறது. புலத்தில் வளரும் எங்கள் அடுத்த தலைமுறையினரின் தமிழறிவு எந்தளவில் இருக்கிறது? வகுப்புக்குப் போய் இருந்து 1 - 2 மணித்தியாலம் செலவழித்து, தான் உபயோகிக்காத மொழியைப் படிப்பதால் என்ன பயன் என்று தான் பல சிறார்கள் நினைக்கிறார்கள். இணைய மேய்தல் ஒரு பொழுது போக்காக இருக்கின்ற இவர்களுக்கும், தமிழ் படிக்க விரும்பும், தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்பும் எவருக்கும் உதவியாக, கற்றலின் ஆரம்பமாக ஒரு தமிழ் கற்பிக்கும் பதிவினை உருவாக்குவோமா?

பாலர் பாடசாலைகளில், முதலாம் வகுப்புகளில் போன்று “ஆனா”, “ஆவன்னா” சொல்லி ஏடு தொடக்கி, கொஞ்சங் கொஞ்சமாய் சொற்களை அறிமுகப்படுத்தி, இலக்கணத்தையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் முறையில் எழுத்தறிவிக்கலாம்.(இப்பிடியாவது, நேர் நேர், நேர் நிரை எல்லாம் எனக்கும் தெரியவரட்டுமே!!). இந்தப்பதிவில் சின்ன வகுப்புகளில் மாதிரி இடையிடையே சிறுவர் பாட்டுக்களையும் ( உ+ம் க.தோ. வெருளி, ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி..) சேர்த்துக் கொள்ளலாம்.

விளக்கங்களை ஆங்கிலத்தில் இடலாம். பிறகு தேவையேற்படின் பிரெஞ்சு, ஜேர்மன், மற்றும் வேறு மொழிகளிலும் விளக்கங்களைத் தரலாம். வலைவசம் (“கைவசம்” இப்படி உருமாறிவிட்டது!) மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன் இருக்கிறார், அவரிடம் கேட்கலாம். (உங்களிடம் அனுமதி கேட்காமலே, உங்களிடம் உதவி கேட்கலாம் என்று எழுதி விட்டேன் டோண்டு ராகவன், மன்னிக்க வேண்டும்.) (நீங்க இனிமேல் தப்ப முடியாது :o) )

என்ன சொல்றீங்க? யாரைத் தமிழ் வாத்தியாராகப் போடலாம்?

ஓ போடுங்க!

சில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் மிகவும் விரைவாக ஓடி மறைகின்றதா? இல்லாட்டி நான் அதனுடன் போட்டி போடுற வேகம் குறையவா? (சுசந்திகா / பீ.டி உஷா / மரியன் ஜோன்ஸ் / கதி ஃப்ரீமன் தரவழியா இருக்க வேணுமோ!!)

வீட்டில் இருக்கும் போது இப்படி இருப்பதில்லை (9 மணிக்கு பள்ளியெழுகின்ற வார இறுதிகள் இதற்குள் சேர்த்தியில்லை!!) ஒருவேளை வேலைக்குப் போவதால்தான் காலம் இப்படி (என் மாட்டேற்றுச் சட்டத்தில்..என் சார்பாக..ம்ம்..relativly :o) )கடுகதியில் ஓடி மறையுதா?

ஒரு வேலையை செய்யும் போது, அதாவது செய்யும் ஒரே விடயத்தையே கருத்தொருமித்துச் செய்யும் போது நேரம் போவது தெரிவதில்லை. இதற்கு, புத்தகம் வாசிப்பது(பாடப் புத்தகம் அல்ல), நித்திரை கொள்வது போன்றவை நல்ல உதாரணங்கள். (பி.கு: கலர் தெரப்பியும் இதிலே சேர்த்துக் கொள்ளப்படலாம் ;o) ). எதிர்மறையாக, இதெல்லாம் செய்ய வேண்டுமே என்று 4 - 5 விடயங்களை பட்டியல் போட்டுக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்படாது, நேரம் மட்டும் விட்டது தொல்லை என்று காணாமல் போயிருக்கும்.இது என் சார்பான நேரம் கழிதலின் வேகம் மட்டுமே. எனக்கு விரைவாக ஓடி மறைந்த ஒரு நாள் மற்றொருவருக்கு மிக நீண்டதான ஒன்றாக தோன்றலாம்..அது அவர் சார்பான நேரத்தின் வேகம். எல்லாருக்கும் பொதுவாக செலவழிந்து கொண்டிருக்கும் நேரமோ ஒரே வேகத்தில் தான் கழிகிறது.( உ+ம்: எனக்கு வேகமாக கழிந்த ஒரு நாளும் மற்றவரது நீ..ஈ..ண்ட நாளும் அதே 24 மணி நேரத்தைத் தான் கொண்டவை!)

எப்படி இவளிடமிருந்து தப்பியோடலாம்(உங்களைப் போலவே?)என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை இழுத்துப் பிடித்து, அலுவலகத்தில் பணியும், வீட்டில் "தார்மீகக் கடமைகளும்"(அடக்கி வாசிக்கிறதப் பற்றி ஷ்ரேயா கேள்விப்பட்டதேயில்லை!!) என்று செய்ய வேண்டியிருக்கிறது. ஆக இப்பிடியெல்லாம் நேரத்துடன் மல்லுக்கட்டும் போது, என்னுடைய இந்த வலைப்பதிவில் செலுத்தும் கவனம் மிகக் குறைவே. அதைப்பற்றி மனவருத்தமாக இருக்கிற போதெல்லாம் கை கொடுப்பது என்னுடைய "நாளைக்குச் கட்டாயம் செய்ய வேண்டும் / செய்து விடுவேன்" என்கிற சோம்பேறி மனப்பாங்கு தான்.(யாரது "நன்றே செய்வார்; அதை இன்றே செய்வார்" ங்கறது? ஷ்ஷ்!!).

அலுவலகம் / வீட்டுவேலைகள் /குடும்பம் இதெற்கெல்லாம் மத்தியில் பதிவுகளையும் கவனித்துக் கொள்ளும் எல்லா வலைப்பதிவாளர்களுக்கும் ஒரு பெரீ..ய்ய்..ய "ஓ"!.

பெயர்கள் பலவிதம்

பெயர்..இது இல்லாமல் ஒரு பணியாரப் படிவமும் நிரப்ப இயலாது. அதிலயும் இந்த குடும்பப்பெயர் இருக்கே..அதைப் போல தலையிடி பிடிச்ச விஷயம் வேற இல்ல. வெள்ளைக்காரனுக்கு குடும்பத்துக்கென்றே ஒரு பெயர் இருக்கும். அவனுக்கு என்று ஒரு பெயர் வைத்தாலும் திரு."குடும்பப்பெயர்" என்று கூப்பிட்டால் கட்டாயம் திரும்பிப் பார்ப்பான். ஆனால் எங்கள் நிலமை வேறு, குடும்பத்துக்கென்று (சில விதி விலக்குகள் உண்டு)தனிப் பெயர் இல்லை. அவரவருக்கென்று வைத்த பெயர்தான் அவர் சார்ந்த குடும்பத்துக்கும் பெயராகிறது. வெளிநாட்டில் படிவம் நிரப்புகையில் எப்படிப் போடுகிறீர்கள்? ஆண்களுக்குத் தான் தலை போகும் பிரச்சனையா இது தென்படுகிறது. (உதாரணத்துக்கு அப்பா:சின்னத்தம்பி, மகன்: யோகன் என்று வைத்துக் கொள்வோம்)மகன் தனது குடும்பப்பெயராய் அப்பாவின் பெயரைப் போட்டால் திரு. சின்னத்தம்பி என்று தான் விளிக்கப்படும். யோகனும் அப்பாவைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று தேமே என்று உட்கார்ந்திருப்பான். மாறிப்போடுவது தான் அவனுக்கு தன்னை விளிக்கிறார்கள் என்பதை உணர்த்தும். இங்கே பலர் அப்படித்தான் அப்பாவின் பெயரை முதல்/வைக்கப்பட்ட பெயராயும் தன் (உண்மையாக) வைக்கப்பட்ட பெயரை குடும்பப்பெயராகவும் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி மாற்றாமல் தன் பெயர் தனக்கும் அப்பா பெயர் குடும்பப்பெயராகவும் வைத்துக் கொண்டிருக்கும் நம்மவரும் உளர்.

இந்த குடும்பப்பெயர் வழக்கம் எங்கிருந்து எதற்காகத் தோன்றியயது? ஒரே இனத்தவர்/ குடும்பத்தினரை இனங்காணவேண்டிய தேவை சண்டை/சொத்து இவற்றைத் தவிர வேறே எதற்கு இருந்தது? அந்தக் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு முக்கியமான அடையாளமாக இருந்திருக்க வேண்டும் என் நினைக்கிறேன். இப்பெண்கள், இன்னாருடைய மனைவி/மகள் என்று (அப்பெண்களின்) வாழ்வில் காணப்படும் ஆண்களை வைத்தே நோக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணானவள் எடை போடப்படும் போது முதலில் இன்னாருடைய மகள்/மனைவி என்று குடும்ப விவரம் அலசப்பட்ட பின்னரே அவளது accomplishments பார்க்கப்படுகின்றன. பெண்கள் ஒரு ஆணைச் சார்ந்து நின்ற காலத்திற்கு வேண்டுமானால் இது பொருந்தியிருக்கலாம். ஆனால் பெண்கள் சுயமாக நிற்கிற இந்தகாலத்தில் இப்படிப்பட்ட பார்வை பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

எங்கள் ஊரில் வெள்ளைக்காரன் வரமுதல் பெண்களுக்கு நிர்வாகத் தேவைகள் இருந்ததா என்பது சரியாகத் தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் செல்வி.சின்னத்தம்பி, திருமதி.தங்கத்தம்பியுமாக அடையாளங் காணப்பட்டிருக்க மாட்டார்கள் என்று (நான்) நினைக்கிறேன். ஒரு பெண் வெள்ளைக்காரனின் வழக்கப்படி திருமணத்திற்குப் பின் திருமதியாகிறாள்.அதாவது தன் குடும்பப்பெயராக இவ்வளவு நாளும் உபயோகித்த தந்தையின் பெயரை விட்டு, கணவனின் குடும்பப் பெயரைத் தன் குடும்பப் பெயராக ஏற்கிறாள். இதப் பழக்கம் எப்போதிருந்து எங்கள் சமூகத்துக்குள் புகுந்தது?

இங்கே, எனக்கு நடந்த 2 சம்பவங்கள் சொல்கிறேன்:

முதலாவது, திருமணம் முடித்தவுடன் வந்த வம்பு. எனக்கோ அப்பாவின் பெயர் இருந்த இடத்தில் கணவர் பெயரைப் போட விருப்பமில்லை. அம்மா(இத்தனைக்கும் படித்தவர்.வைத்தியர்) சொன்னா அது கட்டாயமாம் என்று. எங்கேயிருந்து அவவுக்கு அந்த எண்ணம் வந்ததோ தெரியவில்லை. தாங்கள் எல்லாம் அந்தக் காலத்திலேயே எப்ப கலியாணம் முடிய கணவரின் பெயரைத் தன் பெயருடன் இணைப்பது என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்களாம்.(வேறே நினைவே இருக்கவில்லை போல என்று கிண்டலடித்தேன்!)இது தான் முறை என்றெல்லம் பெரிய்ய்.ய்..ய்ய விரிவுரை. எனக்கோ விருப்பமில்லை. என் மச்சானின் மனைவி பெயர் மாற்றம் செய்து கொள்ளாதவர். அவரிடம் பேசுவது என்று முடிவாயிற்று. அவ இருக்கவில்லை, என் மச்சானுடன் தான் கதைக்க முடிந்தது. அவர் சொன்னார், அப்படி பெயர் மாற்றச் சொல்லும் ஒரு சட்டமும் இல்லை என்று. அவர் என் கணவரிடம் கேட்டார் "ஷ்ரேயா உம்முடைய பெயருக்கு மாறுவது உமக்கு விருப்பமா?" அதற்கு கணவர் சொன்னார்.."மாறிறது விருப்பம். ஆனா அது அவட விருப்பம்" என்று. இதற்குப் பின்னும் அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு "-" போட்டு அப்பாவின் பெயரையும் கணவர் பெயரையும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். ஆனால் இங்கே எல்லா உபயோகத்திற்கும் பாவிப்பது அப்பாவின் பெயரை மட்டுமே. அலுவலர்கள் கேட்டால் "உங்கள் படிவங்களில் என் குடும்பப்பெயர் முழுவதும் அடங்காது" என்று சொல்லிவிடுவேன்.அவர்களும் விட்டு விடுவார்கள். கணவர் இதப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. உள்ளே அரிக்குமோ என்னவோ! :o)

சம்பவம் 2: இங்கே

ஆக எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள் ஒரு பெண் கல்யாணமானால் பெயரை மாற்ற வேண்டுமென்று.அது அந்தப்பெண்ணின் தெரிவு என்பது புரிவதில்லையா? பலவந்தமாக மாற்றச் செய்வது தனிமனித சுதந்திரத்தில்/உரிமையில் தலையிடுவதாகும் அல்லவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?திருமணமாகும் போது பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா? நீங்கள் ஆணாக இருக்குமிடத்து உங்கள் மனைவி உங்கள் பெயரை தன் குடும்பப்பெயராக இணைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பீர்களா? ஏற்கெனவே திருமணமாகி, மனைவி பெயர் மாறியுள்ளவர்களின் கருத்து என்ன?பெயர் மாற்றிய/மாற்றாத/மாற்ற விரும்பாமல் மாற்றிய மனைவியரின் கருத்து என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்..

கிறுக்க இடம் இல்லை!!

கிறுக்கல் பலகையின் சேவை இனிமேல் காசு கட்டினாத்தானாம், நீங்க அப்படி ஒரு சந்தா அங்கத்தவரென்றால் உங்களுக்குரிய சேவை தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும். இலவசமா எழுதித்தள்ளுறவங்க தொகை அதிகமானதால இந்த முடிவை நேற்றிலிருந்து செயல்படுத்திறாங்க.

புதுசா கிறுக்கல் பலகை தேடிறன்..நல்லதொன்று கிடைச்சா சொல்லுங்க!

ஓரினச் சேர்க்கை

இன்றைக்கு 2 பதிவுகள் படித்தேன். தோழியரில் ஒன்று. மற்றது பொடிச்சியினது. உடனடியாக மனம் "ஓரினச் சேர்க்கையாளர்" பற்றிய அறிமுகம் எனக்கு எப்ப ஏற்பட்டது என்பதை யோசித்தது. சரியாக குறிப்பிட முடியவில்லை. இலங்கையில் இருந்த போது எனக்கு இவை பற்றி தெரிந்திருந்திருக்கக் கூடும். ஞாபகமில்லை. ஒரு த.சே.வின் அறிமுகம் ஏற்பட்டது சிட்னியில் கல்லூரியில் தான். ஒரு பெண். அவவின் பாலியல் தெரிவு அவவின் சுதந்திரம் என்பதே என் கருத்தாக இருந்தது/ இருக்கிறது. ஒரு conservertive குடும்பத்திலிருந்து வந்த எனக்கு எப்படி இந்தக் கருத்து முதலிருந்தே மனதில் ஒரு விதமான குழப்பமும் இல்லாமல் தோன்றிற்று / வேரூன்றியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது. இவர்களின் சேர்க்கைத் தெரிவு சரியானதா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தனிப்பட்ட கருத்து எனக்கு இல்லை. ஒரு விஷயத்தில் தனிப்பட்ட கருத்து இல்லாதிருத்தல் சாத்தியமா என்பது பற்றிப் பிறகு பார்க்கலாம். ஆனாலும் ஒரு சக மாணவியாக அவவின் பேச்சும் நடவடிக்கைகளும்(5 வார்த்தையில் ஒன்று "f***", பெண் தோழியுடனான உறவு பற்றிய விளக்கங்கள்) என்னால் சகிக்கக் கூடியதானவையாக இருந்ததில்லை. அதற்காக எப்பவும் அவவோடு அளவாகவே வைத்துக் கொள்வேன். அவள் தவறாக எடுத்துக் கொள்வதில்லை என்பது பெரிய ஆறுதல். ஆனால் வகுப்பின் வழமையான பகிடி சேட்டைகளில் சேர்ந்து முஸ்பாத்தி பண்ணியிமிருக்கிறேன்.

இரண்டாவது அறிமுகம் ஒரு ஆண்.அதே கல்லூரியில் இரண்டாமாண்டின் போது. ஓரளவுக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் குழப்பங்கள் பிரச்சனைகள் பற்றி தெளிவு கிடைத்தது இவனது அறிமுகத்தினால் என்று சொல்லலாம். கொஞ்சம் அதிகப்படியான பெண்மையுடன் கூடிய பாவனை. உடல்வாகும் அப்படியே.. வளர்த்துக் கொண்டிருக்கும் தலைமயிர். Robert என்ற பெயருடையவன். நகம் வளர்த்து தெளிந்த நகப்பூச்சும் பூசியிருப்பான். முற்போக்குச் சிந்தனைகளுடையவன் என்று சொல்லலாம். இதே வகுப்பில் இருந்த சிலருக்கு இவன் அவர்களுடைய குழுவில் இடம் பெற்றது பிடிக்காமல் ஆசிரியரிடம் போய் இவனை குழுமாற்றம் செய்த "பெருமை" உண்டு. எங்கள் குழுவில் இவன் மட்டும்தான் ஆண். பெண்ணாக மாறப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். நாங்களும் அவனுடம் இருந்து பெண்ணாக இருப்பதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்வோம். சிறுவயதிலிருந்தே தான் தனிமையாக உணர்ந்ததாகச் சொல்வான். Princess என்பதே பள்ளியில் அவனது பட்டப்பெயராக இருந்திருக்கிறது.

ஒரு நாள் வந்தான்..வாகன ஒட்டுநர் அனுமதிப்பத்திரத்தைக் காட்டினான். அதில் "Sarah" என்று பெயர் மாற்றப்பட்டிருந்தது. சட்டத்தின் முன் தான் ஒரு பெண் என்பதை நிலைநிறுத்தும் முயற்சியின் பலன் அது என்பதை தெளிவாக விளங்கப்படுத்தினான். கல்லூரிக்கும் தேவையான அத்தாட்சிகளைக் கொண்டுவந்து சேராவாக மாறிவிட்டான். தொடர்ந்த வாரத்தில் இதுவரை ஆண்களின் ஆடையில் வலம் வந்த சேரா முதன் முதலாக ஒரு நீண்ட பாவாடையும் ஒரு வடிவான் மேற்சட்டையும் அணிந்து வந்து, வகுப்பில் சலசலப்பை ஏற்படுத்தினாள். கிசுகிசுப்பான பேச்சுகளும் நமுட்டுச் சிரிப்புகளும் நிறைந்த அந்தக்கணத்து வகுப்பை போன்று நாராசமானதாக வேறொன்றும் அவளுக்கு இருந்திராது என்பது திண்ணம். எங்களுக்கு, அதாவது குழுவிலிருந்த பெண்களுக்கு சேராவை பெண்ணாய் பார்ப்பதில் பிரச்சனை இருக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்கள் சென்றிருக்கும், வகுப்பிலே ஆசிரியர் இல்லாத சமயம் பார்த்து தீவிர "ஹோமோஃபோபிக்" ஒருவனுக்கும் இவனுக்கும் தர்க்கமேற்பட்டது.

"நீயெல்லாம் கடவுளுக்கு எதிரானாவன்"
"எதனை ஆதாரமாக வைத்து இப்படிச் சொல்கிறாய்"
"பைபிளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பாவிகள், தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறது"
"அதற்கு நான் என்ன செய்யட்டும்..நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்"
"அஹா! உன் செய்கைகளை ஆமோதிக்கும் கடவுளர் யாருமில்லை, அதனால் நீ கடவுள் பக்தியில்லை எனச் சொல்கிறாய்"
"என் காதலன் கத்தோலிக்கன்.அதற்கு என்ன சொல்கிறாய்"
"நரகத்திற்குப் போவான்"....

இப்படியே தொடர்ந்து பல அனாவசிய கோணங்களையும் தொட்ட அந்த விவாதம் கடைசியில் மற்றவன் "உன்னுடன் ஒரு அறையில் இருப்பதே என் மேல் ஏதோ ஊருவது போலுள்ளது" என்று சொல்லி வெளியேறியதில் முடிவுற்றது. அன்றைக்குத்தான் எனக்கு உறைத்தது, இப்படியும் மடத்தனமான ஆட்கள் இருக்கிறார்களே என்று. இவனும் சக மனிதன் தானே. உனக்கும் இவனுக்கும் செல்லப்பிராணியின் தெரிவில் வித்தியாசமிருக்கலாம்..உனக்கு நாயும் அவனுக்கு பூனையும் பிடிக்கலாம், அதற்காக தர்க்கம் செய்து,கீழ்த்தரமாக நடந்து கொள்வாயா?ஒருவனது தனிப்பட்ட விடயமான பாலியல் தெரிவு மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனத்திற்குள்ளாக வேண்டும்?

தப்பித் தவறி பழைய ஞாபகத்தில் Rob என்று கூப்பிட்டு நாக்கை கடித்து Sarah என்று நான் மாற்றியிருக்கிறேன்.ஒன்றும் பேசாது, அது பரவாயில்லை என்று சொல்லி, வேண்டுமென்று செய்யப்பட்ட தவறல்ல என்பதைப் புரிந்து கொண்டவள்.

ஆனாலும் அவனது "அவள்" மாற்றம், சுற்றியிருந்த எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. எதிர்ப்பாலர்மேல் ஈர்ப்பு இருப்பதையே நியதி என்று கண்டும் கேட்டும் வளர்ந்தோருக்கு இம்மாதிரியான பாலியல் தெரிவுகள் அதிர்ச்சியளிக்கும். ஒரு நாளும் காணாத ஒன்று, வழமைக்கு மாறான ஒன்றாக ஒருவருக்கு தோன்றுவது, இன்னொருவருக்கு மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கும். ஆணொருவருக்கு பெண்ணில் ஈர்ப்பு வருகிறது. ஒரு ஆண் தன்னினச் சேர்க்கையாளருக்கு இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அடிப்படை வித்தியாசங்கள் தான் மனிதர்களை ஈர்க்கின்றன, வேறுபடுத்துகின்றன. இயல்பாகவே இருக்கும் வித்தியாசங்கள் போன்று ஒருவர் செய்யும் தெரிவுகளும் அவரை சமூகத்தில் அடையாளம் காட்டும். ஆனால் துரதிஸ்டவசமாக சமூகத்தின் அங்கத்தவர் என்ற முறையில், சக மனிதப்பிறவி என்னும் அடிப்படையில் தன்னினச் சேர்க்கையாளர்கள் பெரும்பாலானோரால் பார்க்கப்படுவதில்லை. அந்நியப்படுத்தப்பட்டு, அருவருக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

செய்வதற்கு உரிமையில்லாத செயலான பிறரின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைப்பதும், அதன் மீதான விமர்சனமும் தேவையற்றன. தெரிவுகள் தனிப்பட்டவை, அவற்றில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ நாகரிகமல்ல. அப்படியே விமர்சிக்கத்தான் வேண்டும், அதுதான் வாழ்வினைச் செலுத்துகிறது என்று நினைத்தால் அதை அழுக்கான அந்தரங்கங்களுக்குள் புதைத்துக் கொள்வது புத்தியான செயல்.

தார் இட்ட வீதியிலே கார் ஓட்டும் வேளையிலே...

"ப்ரூம்..ப்ரூம்"
"என்னடா நித்திரையில காரோடுறா"...

இப்படி ஆரம்பிக்கும் விளம்பரத்தை ஐரோப்பிய தமிழ் வானொலி(எதென்று மறந்து போச்சு) நேயர்கள் கட்டாயம் கேட்டிருப்பார்கள். அண்ணாவின் மூத்த மகள் அடிக்கடி சொல்லிச் சிரிப்பாள்.

நான் கேட்பது இதுதான்..யாராவது கணவரிடம் கார் ஓட்ட பழகுறீங்களா? நான் உங்களுடன் ஒத்துணர்கிறேன்(Empathize). ;o)

பயிலுனர் அனுமதி எடுத்து 1 வருஷத்திற்கும் மேலே. இன்னும் பயில்கிறேன். வாகனத்தை கையாளும் பக்குவம் வந்ததும் என்னிடம் பழகலாம் அது வரை பயிற்றுநரிடம் பழகு என்று கணவரும் சொல்ல சரியென்று தலையாட்டினதில் ஆரம்பித்தது. அனுமதி கிடைத்து 3- 4 மாதங்களின் பின் தான் வகுப்புக்கான ஒழுங்கெல்லாம் செய்து..பயிற்றுனரிடம் கிழமைக்கு 2 வகுப்பு படி ஆரம்பித்தேனா..5 மாதமாய் தேடிக் கொண்டிருந்த வேலை கிடைத்தது.

7 வகுப்போடு பயிற்சியும் நின்று போச்சு. வேலைக்குப் போனேன். கிடைக்கிற நேரத்தில் கணவரிடம் பழகலாம் என்றால் 10 வகுப்பு முடித்து விட்டு வந்தால்தான் காரைத் தொடவே விடுவேன் என்று மிரட்டல்! ஹ்ம்..இந்த பிறவியில் நமக்கு லைசென்ஸ் கிடைக்கது போல என்று நொந்து கொள்வேன். 2ஆவதாக இன்னொரு வேலை கிடைத்தது. அதற்குப் போனேன். 1 மணித்தியாலம் பேருந்துப் பயணம். எலும்பெல்லாம் ஏதோ குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டுள்ளது போலிருக்கும். தொடர்ந்து 6- 7 மணித்தியாலம் call centreல் வேலை. வீட்ட வந்தா விழுந்து படுக்கத்தான் சொல்லும். ஒருகட்டத்தில் காது வலியும் வந்து விடவே அந்த வேலையை விட்டேன்.

2 மாதம் வீட்டிலிருக்க வேண்டி வந்தது. இந்த இடைவெளியில் கார் பழகல் திரும்ப வித்தியாரம்பம். 10 வகுப்புக்கு பிறகு கணவரிடம் பழகலாம் தானே என்று புதிதாக 3 வகுப்பு முடித்தேன். அவரிடம் போனால்..இன்னும் 10 கிளாஸ் போ என்று வாரி விட்டார். நான் விட்டேனா, ஒரு வகுப்புக்கே $30. 3 வகுப்பு முடிய கணவரின் நண்பரிடம் போய், "அண்ணா, சொல்லித்தாங்க" என்று பிடியாய் பிடித்துக் கொண்டேன். அவருடன் 3 - 4 தடவை பயிற்சி. கணவருக்கு ரோசம் வந்து "வண்டியை கையாளத் தெரிகிறது உனக்கு" என்று சொல்லி பழக்க ஆரம்பித்தார். வந்தது வினை!ஓட்ட ஆரம்பித்து முதல் சில நிமிடங்களுக்கு வண்டி அதற்குரிய லேனை விட்டு வெளியே போகும்..உள்ளே வரும்..ஓட்டுனர் கதி அந்தோ!! அதோடு விடுவேனா..எனக்கும் பெரிய மைக்கல் ஷூமாக்கர் என்று நினைப்பு!அக்சிலரேட்டரை அழுத்துவது எனக்கே தெரியாம நடக்கும். வேகம் அதிகம் போனால் போச்சு!(உண்மைதானே!). அடுத்து வரும் ..ஆப்பு வைப்பதெற்கென்றே ஒரு ரௌண்டபவுட்.

"பொறு..பொறு.."
"அந்த வாகனம் தூரத்தில தான் வருது..நான் எடுக்கிறனே"
"நான் சொல்றன்..பொறு".

ஒருமாதிரி எல்லாம் சமாளித்து ஓடினாலும் எங்கேயாவது பிசகி கணவர் வாயிலிருந்து வார்த்தை கடைசியாய் கடுமையாய் வந்ததோ..தொலைந்தேன்! அட..கண்ணாடி இவ்வளவு ஊத்தையா இருக்குதே..கையில் நகம் வளர்ந்து விட்டது..வெட்டணும்..அந்த பூமரம் ஏன் பூக்கவில்லை..இரவு என்ன சாப்பாடு (வேறொன்னுமில்லை..இதெல்லாம் அவர் பக்கத்திலிருந்து திட்டு வரும்பொழுது ஷ்ரேயா மனதில் திரையிடப்படுபவை ..ஹிஹி!! ) அவர் பாட்டுக்கு அ(க)ர்ச்சனை செய்வார், நான் பாட்டுக்கு இதெல்லாம் யோசித்து விட்டு, கடைசியா..நான் செய்தது பிழைதான்/சரியென்றால் நியாயம் சொல்லிவிட்டு மறுபடியும் கியர் மாற்றி, ஓட்டத்தொடங்குவேன். அடுத்த கணை வரும்:

"உனக்கு சுரணையே இல்லையா??"
"கையிருப்பு முடிஞ்சு போச்சு போல..போகும்போது வூலியில் (பல்லங்காடி) 4- 5 கிலோ வாங்கிட்டுப் போவம்"

அங்கே ஒரு சிரிப்பு பூத்து எல்லாம் சுமுகமாகிவிடும்..அடியேன் அடுத்த வெட்டு வெட்டும் வரை அல்லது லேனுக்குளிருந்து வாகனம் கொஞ்சம் வெளியேறப் பார்க்கும் வரை...

மார்கழியிலிருந்து புது வேலைக்குப் போவதாலும், கணவருக்கு கணக்காய்வாளர்கள்(auditors) வந்ததாலும் என் காதும் அவரது இதயமும் இப்போதைக்கு சற்றே ஓய்வெடுக்கின்றன.

பயம்

செய்து கொண்டிருக்கிறதெல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, அம்மாவின் மடியில் போய் சுருண்டு கொள்ள/சாய்ந்து கொள்ள வேண்டும் போல எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட காரணமுமின்றி அப்படிச் செய்ய வேணும் போல் மனதில் தோன்றிற்று.

அரிதாக எப்போதாவது எனக்கு ஒரு பயமும் வருவதுண்டு. ஒன்றுமே நடந்திராது, காரணமும் இருக்காது..ஆனாலும் ஏன் எதற்கென்று தெரியாமலே பயப்படுவேன். இது குளிர்காலத்தில் எற்படும் (winter blues) பாதிப்பல்ல. பதின் வயது முதலே இருக்கிறது என நினைக்கிறேன்.இந்த மாதிரி பயமாக இருக்கும் போதும் முதலில் சொன்னது போல அம்மாவின் மடியில் சுருண்டு கொள்ள அல்லது மிக நெருங்கியவர்களுடன் இருக்க வேண்டும் போலிருக்கும். சில சமயங்களில் 2- 3 நாட்களுக்கும் தொடரும் இந்தப் பயத்திற்குக் காரணம் யாருக்காவது தெரியுமா?

பவள மல்லிகை

பாட்டி வீடு. பெயரைச் சொல்வதை விட, புளியடியார் என்றால் தான் இன்னும் வடிவா ஊருக்குள்ளே தெரியும். ஒரு சிவப்பு பெரிய 'கேற்'. ஓட்டிக் கொண்டு வரும் (ஒரு அளவான) வேகத்தில சைக்கிள அதில் மோதினா, கொளுக்கியும் போடாமலிருந்தா, தகரத்தில அடி வாங்கின சத்தத்துடன் திறக்கும். படலையிலிருந்து வீட்டுக்கு 25மீ இருக்கும். 2 பக்கத்திலும் பூமரங்கள். நடுவிலே கொஞ்சம் வெண்மலும் செம்மணலும் கலந்த
நிறத்தில் பாதை. என்னென்ன பூமரம் என்றெல்லாம் ஞாபகமில்லை. போய் 8 ஆண்டுகளாகினதினால் என்று சாட்டு சொல்ல மாட்டேன். அங்கே போனபோதெல்லாம் விளையாட்டும், கிடைக்கிற விதம் விதமான சாப்பாடுமே பிரதானமாக மனதில் முன்னிற்கும். மச்சி(மச்சாள் வயதுக்கு நிறையவே மூத்தவ என்பதால் இப்படித்தான் கூப்பிடுவது)சின்னப்பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்பு எடுப்பா. அப்ப அங்கே நானும் போயிருந்து சம வயதுப் பிள்ளைகளுடன் இருந்து படிப்பேன். எல்லா நாளும் சரியாக தமிழும் எழுதி, கணக்கும் செய்து வந்திருந்தேன்...எப்பயாவது தடுக்குப்படவேணும் என்கிற நியதிப்படி பால் + சோறு = பால்ச்சோறு என்று எழுதி பிழை விட்டது நல்ல ஞாபகம். இதே வகுப்பிலிருந்த பையன் நான் இந்தச் சம்பவம் நடந்து 3- 4 வருடங்களுக்குப் பிறகு (அந்த சில வருட இடைவெளியில் 10- 11 வயதுக்குரிய வளர்ச்சி வர ஆரம்பித்திருந்தது) விடுமுறைக்கு பாட்டி வீட்ட போன போது மச்சாளைக் கேட்டான் "முதல் ஒராள் வருவாவே..அவா இப்ப வாறேல்லையோ" என்று. மச்சாள் சொன்னா "அவதான் இவ" என்று. அந்தப் பையனின் கண் விரிந்தது. சில வினாடிகள் இமைக்காது பார்த்தவன் "வளந்து போனா..அதுதான் அடையாளம் தெரியேல்ல" என்று சொல்லிவிட்டு, தந்த கணக்கை செய்ய தொடங்கி விட்டான். ஏனடா தன்னில் இப்படி வளத்தி இல்லை என்று யோசித்திருப்பானோ என்னவோ!! ;o)

வீட்டுக்குப் போகிற வழியில் பூமரம் நிற்கும்..என்னென்ன என்று தெரியாது என்று சொன்னேன் தானே, ஆனால் நல்ல வடிவானதாக இருக்கும்.கனாஸ் வாழை இருந்ததாக ஞாபகம். மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்களுடையது. அப்படியே நேரே போனால் வாசல்.இடப்பக்கமா முற்றம் தொடரும். முற்றத்திற்கும் வீட்டிலிருந்து இன்னொரு வாசல். ஒரு கூடத்தில் 2ம் சந்தித்து வலப்பக்கமுள்ள கதவுக்குள்ளால் போனால்வீட்டின் ஹோல் வரும். நுழைந்தவுடன் வலப்பக்கம் கேற்றை பார்க்கும் சாளரம். நேர் முன்னல் சாமியறை. அதுக்குப் பக்கத்தில் பாட்டி/மச்சாள்/அத்தையின் அறை. அதைத்தாண்டிப் போனால் மாமி&மாமாவின் ஒரே சாய்மணைக் கதிரை.கதிரைக்கு இடப்பக்கத்தில் ஒரு 3 அடி தள்ளி சாப்பாட்டு மேசை. அதுக்கும் இடப்பக்கமாக ஒரு சின்ன ஓடை.இதன் கதவு முதல் சொன்ன முற்றத்துக்குள் திறக்கும். இது தான் அந்த வீட்டிலேயே பிடித்த இடம்...சைக்கிள் வைக்கும் இடம் & புத்தக அடுக்கு இருந்த இடம்.

சாய்மணைக்கதிரை தாண்டினால் ஒரு சின்ன கூடம்.இதற்கு இடப்பக்கத்தில் சமையலறை.வலப்பக்கத்தில் மாமா/மாமியின் அறை. இதை தாண்டினா கொல்லைப்புறத்துக்கு போகும் வாசல்.தரை ஒரு 5 அடிக்கு 15 அடி சாணியால் மெழுகியிருக்கும்.இதில் இடப்புறம்தான் 2 வாங்கு மேசை போட்டு மச்சாள் வகுப்பு நடத்துவது. வலப்புறம் ஒரு குகை மாதிரி.அதற்குள் இல்லாத சாமானே இருக்காது!!! கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள்!!). கிணற்றடி வேலியில் கொவ்வைக் கொடி படர்ந்திருக்கும்.

கிணற்றுப்பக்கம் போகாமல் பின்புற வாசலிலிருந்து நேரே பார்த்தால்..ஆகா!!அந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா?) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு! பின்னேரத்தில் அதன் வாசம்..ம்ம்ம்...நினைத்துப் பார்க்கும் போது அதன் வாசம் இன்னும் என் மூக்கில்.

மாமி/அத்தை இதில் பூவெடுத்து சாமிக்கு வைப்பார்களோ என்னவோ! விடுமுறைக்குப் போகையில் என்னென்ன முஸ்பாத்தி பண்ணலாம் என்பதே யோசனையாக இருக்கும். பெரியம்மா பெரியப்பா பாட்டி, மாமி மாமா அத்தை மச்சாள் இவர்களெல்லாம் விடுமுறையின் அங்கங்கள். அவர்களை அவர்களாகவே, தனி நபர்களாக பார்த்ததேயில்லை. என் மனதில் அவரவருக்கென்று ஒரு பிம்பம். அதற்கூடாகவே பார்த்திருக்கிறேன். இப்போ யோசிக்கும் போது தான் மனதில் உறைக்கிறது. இன்னொருமுறை இன்ஷா அல்லா போகக் கிடைத்தால் மாமி, அத்தை, பெரியம்மா என்று நிறக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவர்களாகவே பார்ப்பேன் என தோன்றுகிறது. இலங்கையிலிருந்து புறப்பட்டதிலிருந்து நிறைய கற்றிருக்கிறேன். பிறரைப் பார்ப்பதிலும் ஒரு கொஞ்சம் தெளிவும், முதிர்ச்சியும் வந்துள்ளது என்றும் நினைக்கிறேன். இப்போது போய் பார்க்க முடிந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய வாசம் வீசுகையில் அதை அப்படியே உணரக்கிடைக்கும்.

சமையல்.. சிறு குரைப்பு!

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு உறவினரோடு கதைத்தோம்.(தொலைபேசி இணைப்பை மீட்டுக்கொண்டுள்ளோம்!) பேச்சு வாக்கில் நான் மீண்டும் வேலைக்குப் போவது பற்றியும் அதனால் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் மற்றங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது என் கணவர் அவவிடம் சொன்னார் :”இவ சும்மாவே சமைக்கப் பஞ்சி, இப்ப வேலைக்கும் போய் வருவதில் சமையல் எல்லாம் அவசரச் சமையலாகவே இருக்குது” என்று. ஒலிபெருக்கியுள்ள தொலை பேசியாதலின் ஒரெ நேரத்தில் கதைக்க முடியும். ஓருவர் பேசி முடித்து நம்மிடம் தரும் வரை காத்திருக்கத் தேவயில்லை. கணவர் சொன்னதற்கு பதிலாக “சும்மாவே சமையல் என்றால் எட்டி நிற்கிற ஆள் நான், மற்றது வேலையால வந்தவுடனே சமைக்கவும் ஏலாதுதானே, களைப்பா இருக்கும். இவரைக் கேட்டா சிலநேரம் செய்து தருவார்” என்று நான் சொன்னேன். அதற்கு அந்த பெரியம்மா என்ன சொன்னா தெரியுமா..”பொம்பிளப் பிள்ளைகள் சமையல் விருப்பமில்லை, ஏலாது என்றெல்லாம் சொல்லப்படாது! ஆம்பிளப்பிள்ளையை, அதுவும் புருசனிட்ட சமைக்கச் சொல்லுறதா..என்ன பழக்கம்! விட்டா வீட்டையும் ஒழுங்குபடுத்தச் சொல்லி கேப்பீர் போல கிடக்கு” What the!!

ஏன் பெண்களுக்கு பிடிக்காததை மறுக்கும் அல்லது செய்யாமல் விடும் உரிமை இல்லையா? ஆண் சமைப்பதில், வீட்டு வேலைகளில் பங்கேற்பதை இன்னும் தரக்குறைவான செயலாகத்தானா கருதுகிறோம்?இந்த பெரியம்மா இப்படிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன காரணம் இருக்கக் கூடும்? ஒரு வேளை பெரியப்பா, தான் எப்போதாவது சமைக்க வேண்டி வந்து விடும் என்று நினைத்து இப்படி சொல்லிக் கொடுத்தாரா– கல்யாணமான் புதிதில்? :o)

அல்லது சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட, மனதில் ஊறவைக்கப்பட்ட ஒரு விடயமா?இந்த மனநிலை முதன் முதலில் யாரால் புகுத்தப்பட்டிருக்கும் என்று யோசிக்கிறேன். காலக்கிரமத்தில் வாழ்வில் ஒரு அங்கமாக ஆண் வெளி வேலைக்கும் பெண் வீட்டு வேலைகள் & குடும்பதிற்கும் என்று மனதில் ஊறி விட்டது. இந்தக் கட்டை உடைத்து வெளிவர முயற்சிக்கிற வேளையில், அதற்கு தடைக்கல்லாக நாமே இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் சில பழக்கங்கள், நடைமுறைகள் மாற்றப்பட வேண்டியவை தான் என உணரப்பட்டாலும் பெரும்பான்மையினர் அம்மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈட்டுபாடு காட்டுவதும் இல்லை, காட்டுவோரை முன்னெடுத்துச் செல்ல விடுவதுமில்லை. சமையல், வீட்டுவேலை, குழந்தை வளர்ப்பு என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு ஆணின் பங்களிப்பு தற்போது காணப்படுகிறது. ஆனாலும் இந்த பகிர்வு மனப்பான்மை புலம் பெயர்ந்தவர்களிடமோ அல்லது நகர் வாழ் இளைஞர்களிடமோ தான் அதிகளவில் காணப்படுகிறது என்றே நினைக்கிறேன். சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்துள்ள ஒரு சராசரி ஆணின் குடும்ப வாழ்வில் அவனுடைய பங்களிப்பானது வருமானம் சார்ந்ததாக மதிக்கப்படுகிற சூழ்நிலையில் அவனுக்கு வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு/ வளர்ப்பு என்பனவற்றை மனைவியுடன் பகிர்ந்து செய்யலாமே என்கிற மனப்பாங்கு வருமா?

இப்படி ஆண், பெண் இருவரும் பால் சார்ந்த தங்கள் கடமைகளுக்கு அப்பால், ஒரு குடும்பமாக ஒன்றிணைத்து பார்க்கப்படுவது எப்போது? அவர்களது பால் சார்ந்த கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் அல்லது நிறைவேற்றாத முறைகளாலன்றி, அவர்களை அவர்களாகவே - சக மனிதர்களாக – பார்ப்பது எப்போ?

என்னதான் சொன்னாலும் “எப்பிடி செய்யிறதென்று மறந்து போச்சு” என்று சொல்லிக் கொண்டே கணவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையே தனி என்பது பாவம்! பெரியம்மா அறியாத ஒன்றாகவே இருக்கப் போகிறது!! ;o)

பிறந்த நாட்கள்


சந்திர வதனாவின் அதிசயம் பார்த்ததும் இது ஞாபகத்திற்கு வந்தது.

என்னுடன் படித்த தோழியின் பிறந்த நாளும் என் அப்பாவின் பிறந்த நாளும் ஒரே நாள்.
என்னுடைய பிறந்த நாளும் அவளது தந்தையின் பிறந்த நாளும் ஒரே நாள்.

இருக்கிறதே 365 (366) நாள்தான்..இதில்தானே எல்லாருடைய பிறந்த நாட்களும் வரவேண்டும், ஆனாலும் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே ஏற்படுகின்ற சில எழுமாறான இப்படிப்பட்ட ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன.

ஒன்றும் பலதும்

ஒருசொல் பல பொருள் தெரியும்…(உதாரணமாக 'அணை' = தடுப்பு(அணைக்கட்டு), அணைத்தல் (மேல்kind இதை செய்ய முடியாம தான் புலம்புறாங்க ;o) ) , நூர்த்தல்(விளக்கை அணைத்தல்) இப்படி..

ஒரு வசனத்திற்கு 3 பொருள் கண்டு பிடித்தார் எங்கள் கணித ஆசிரியர். (சொல்லாததுக்கே அர்த்தம் கண்டுபிடிக்கிற இந்த நாளில் இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கிறீர்களா..அதுவும் சரிதான். சரி சரி கதைக்குப் போவம் வாங்க). வீட்டுப்பாடம் செய்து வரச் சொல்லியிருந்தார். அன்றைக்கு வகுப்பில் மாணவர் வரவும் சற்று குறைந்திருந்தது. ஓரு மாணவனை எழுப்பி “வீட்டுப்பாடம் செய்தாயா?” என்று கேட்க அவனும் அரிச்சந்திர மூர்த்தியாகி “நான் வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரயில்ல சேர்” என்று சொன்னான். அதற்கு ஆசிரியர் “எனக்கு விளங்கவில்லை ..நீ சொன்ன வசனத்துக்கு 2 பொருள் வருது.. நீ எதை சொல்லுகிறாய் என நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று சொல்லி, அந்த 2 விளக்கங்களையும் சொன்னார்

1. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (அதாவது..செய்யவேயில்லை)
2. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (செய்த பாடத்தை கொண்டு வர மறந்தாச்சு)

வகுப்பு சிரிக்க ஆரம்பிக்க, ஆசிரியர் தொடர்ந்து..”நீ வகுப்புக்கு வந்திருக்கிறாய் அதனால இந்த கடைசி விளக்கம் உனக்குப் பொருந்தாது! என்று சொல்லி இதையும் சொன்னார்
வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை!!

கணக்கு ஆசிரியர் எத்தனை கொம்பினேஷன் ஏலும் என்று பார்த்திருக்கிறார் போல!


பி.கு: அவர் 4 பொருள் சொன்ன மாதிரி ஒரு ஞாபகம்….ஆனாலும் 3 தான் இப்ப நினைவிற்கு வந்தது. 4 வதை கண்டுபிடிச்சா சொல்லுங்க..திருத்தி விடுகிறேன்.

மனவருத்தம்

சென்ற கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் வீட்டுக் கணினியில் வலை மேய ஆயத்தமாகும் போது ( நான் இன்னும் dial-upதான்) திடேரென்று பார்த்தால் ஒரு பிக்கினி அணிந்த பெண்ணின் படம் கணினித் திரையின் வலது மூலையில் வந்திருந்தது. என்னடா இது இவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தும் எரிதமாக குறிப்பிட்ட தளத்திற்கான சுழற்றி(dialer) தரவிறக்கியிருக்கிறதே என நொந்து கொண்டே அதை கணினியிலிருந்து நீக்கியிருந்தேன். அப்போது ஒன்றும் பிரச்சனையாக மனதில் தோன்றவில்லை. பிறகு 2- 3 நாடகளில் கணவர் வந்து தான் கணினியில் ஏதொ வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் மேலே குறிய படியே சுழற்றி தெரிந்ததாயும் தான் அதை நீக்கியதாயும் குறிப்பிட்டார். இப்படியான பாலியல் தளங்களுக்குச் செல்லும் பழக்கமோ தேவையோ எங்களிருவருக்கும் இல்லை.அப்பத்தான் கணவர் சொன்னார் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியுள்ள உறவினரின் விளையாட்டாக இருக்குமென்று. நான் நம்பவில்லை..எரிதம் பற்றி,வலையுலாவி அபகரிக்கப்படுவது பற்றி அறிந்திருப்பதால் அப்படியான ஒரு நிகழ்வாக இருக்கலாம் என கணவரிடம் கூறியிருந்தேன்.

தனக்கும் அவை பற்றித் தெரியுமெனவும், தான் உறவினருக்குக்கென்று கொடுத்திருந்த பயனர் பெயருக்குரிய குக்கீஸ் ஐ பார்த்ததாகவும் சொன்னார். அதில் முழுக்கவும் பாலியல் தளங்களே இருந்ததாம். இந்த அண்ணாவின்(இந்த வார்த்தைக்கு தகுதியானவரே இல்லை அவர்!) அறையில் தான் கணினி இருந்தது..ஆகவே நல்ல வசதியாக போய் விட்டது அவருக்கு. எங்கள் சீப்பு,பவுடர்,கிறீம் எல்லாமும் அதே அறைக்குள். ஆகவே இரவில் படுக்க முன்பு கிறீம் போட எடுக்கச் செல்லும் பாசாங்கில் அவரது அறைக் கதவை தட்டி உள் நுழைந்தால் கணினித் திரையில் கடைசிச் சாளரம் குறுகிச் செல்வது தெரியும். நான் அறையிலிருந்து வெளியேறும் வரை வேறு ஒன்றுமே வலை மேய்வதில்லை அவர்.ஏன் வலை தொடர்பை ஏற்படுத்தி வோல்பேப்பரையே பார்க்கிறார் என நானும் கேட்டதில்லை!!

இதற்குப் பிறகு கணவர் அவரிடம் பேசி சில நாட்கள் இல்லாமலிருந்தது. பிறகு இப்போ மீண்டும் தொடங்கியுள்ளது.உறவினரது சொந்த அண்ணனே "இவன் பொறுப்பில்லாதவன்..சரியான சோகுசுப் பேர்வழி" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். சரியான படிப்புமில்லை.7ம் வகுப்புடன் நிறுத்தியவர். நியூசிலாந்தில் கடந்த 5- 6 ஆண்டுகளாக இருந்தவர். 36 வயதாகிறது. எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்தீர்கள் ..எனக்கும் செய்து வையுங்கள் என தொல்லை கொடுக்க, அதை தாங்க மாட்டாமல் பெற்றோரும் இந்தியாவில் BCom பட்டதாரியான, 12 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவ்வளவிலும் நல்ல விஷயம் சீதனம் வாங்காதது. இப்போ இங்கே வந்துள்ளார்.. மனைவி இன்னும் இந்தியாவில்.

சரியான படிப்பில்லாததால் வேலை கிடைக்கவில்லை. ஏதாவது தொழில்சார் கல்வி கற்றுக்கொள் என்ற கணவருக்கு தொண்டை காய்ந்தது தான் மிச்சம். இப்போ இன்னொரு உறவினது கடையில் சில நாட்களும் ஹொட்டேல் ஒன்றில் மிச்ச நாட்களுமாய் வேலை செய்கிறார். மனைவி வந்தால் தேவைப்படும் என சேமிப்பு பழக்கமெல்லாம் கிடையாது. உடற்பயிற்சிக்கு ஜிம்மிற்கு செல்வதும், கடனட்டையில் ப்ரான்ட் பொருட்கள் வாங்குவதுமே பொழுது போக்கு. தொலை பேசி அட்டை இருக்கையில் அதிலும் கதைத்து..இன்னும்.. நேரடி தொடர்பிலும் கதைத்து, வந்த பில் கட்டப்படவில்லை. அப்படி ஒரு தொகையை தொலைபேசிக்கு யாரும் ஒரே மாதத்தில் கட்டி நான் கேள்விப்பட்டதில்லை. கட்டணம கட்டாததால் எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்கள். அன்றைக்கு ஒரு நாள் காலை 10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு வீடு வந்தால் எங்கோ தண்ணிர் சத்தம்..குளியலறையில் கேட்பாரற்று சுடுநீர் ஓடுகிறது..பிற்பாடு விசாரித்ததில் அவர் 1 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டதாய் சொன்னார். ஏன் டென்சன் ஆகுறீங்க?என்று கேட்கிறார்.தொலைபேசிக்கட்டணத்தை எப்படி பெறுவது என்று தெரியவில்லை!!! ஒவ்வொரு நாளும் இரவில் நான் சுத்தம் செய்யும் சமையலறை எப்படி வேலை முடிந்து வீட்டிற்குப் போனால் குப்பையாகிறது என்பது, தெரிந்த ஆனாலும் புரியாத, மாயம்.

அந்தப்பெண் வருவதற்குரிய குடிவரவு வேலைகளை போன மாதம் தான் செய்தார். இவர் வந்ததோ ஒக்டோபரில்.கல்யாணம் எவ்வளவு பொறுப்பான விஷயம் என்பது இவருக்கு விளங்கவில்லை. உடல் தேவைக்காகத் தான் அவசரப்பட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது. சேமிப்பொ, முறையான நடத்தையோ, பழக்கவழக்கங்களோ இல்லாத பொறுப்பில்லா மகனென அறிந்தும் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரை..அறிந்தே ஒரு பெண் வாழ்வில் கை வைத்துள்ள இவர்களை என்ன செய்வது?சரியாக விசாரித்தறியாமல் சீதனம் இல்லாததற்காய் தலையை நீட்டிய அப்பெண்ணின் குடும்பத்தை என்ன சொல்வது??

எழுதி விளையாடு பாப்பா 2



நடுக்கட்டத்தில் உள்ள எழுத்து கண்டுபிடிக்கப்படும் அனைத்து சொற்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை நேற்று சொல்ல மறந்து விட்டேன்...மன்னிக்கவும்..

நேற்றைய புதிருக்கு விடை: உளி,இளை,இடை,ஆளி,ஆடி,ஆவி,இடு,இவை, ஆட்டி,விளை,விடு,இட்டு,விட்டு,விடை,இயை,விளையாடு,வாடி, வாளி,வாட்டி,விடாய்,விளையாட்டு

இன்றைய புதிர்

ல்ற்
ம்
ய்ச்


எழுதி விளையாடு பாப்பா

இங்கே ஆங்கில நாளிதழொன்றில் வரும் இந்தப்புதிர் விளையாட்டு தமிழில் எந்தளவிற்குச் சாத்தியமென்று தெரியவில்லை. அவர்களுக்கோ 26 எழுத்துக்களுடன் சுலபமாக முடிந்து விடும், தமிழிலோ 247 அழகிய எழுத்துக்கள். அது மட்டுமன்றி உயிர், மெய், உயிர்மெய் என மூன்று வகை எழுத்துக்கள்.இங்கே அவ்வாறு மூன்றாகப் பிரிக்காமல் உயிர், மெய் என இரண்டாக மட்டுமே தந்திருக்கிறேன்.9 கட்டங்களிலுமுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் ஒருமுறை மட்டுமே பாவித்து 9 எழுத்துக்களாலான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கும் ஏனைய சொற்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். தந்த சுட்டியில் போய்ப் பார்த்தால் விளையாட்டினை சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.

நான் கண்டு பிடித்துள்ள சொற்கள்: மழை, அது, அதை, அமைதி,அமை,அமைத்து,அழை,அழி, அமிழ்,அளி,அழுத்தி,அமிழ்த்து,அளித்து,தளி,அழைத்தும்,அளை,மழைத்துளி(ம்+அ+ழ்+ஐ+த்+த்+உ+ள்+இ= 9 எழுத்துக்கள்)

ம்ள்த்
த்ழ்


உதாரண்ம் விளங்கியிருக்குமென நினைக்கிறேன். விளையாட்டிற்குப் போவமா?கீழுள்ளதில் சொற்களைக் கண்டுபிடியுங்கள்.
ட்
ள்
ய் ட்வ்


உங்களுக்கும் ஏதாவது 9 எழுத்துள்ள சொல் இப்புதிரில் இடம்பெற விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

விக்கிரமாதித்தன்

முதலில் விக்கிரமாதித்தன் கதைகள் அறிமுகமானது அம்புலி மாமாவின் மூலம்.(2ம் தரம் அறிமுகமாகாது...ஏற்கெனவே தெரியும் என்பதால்..ஹி..ஹி)அப்போதெல்லாம் "அடே எவ்வளவு வீரன், புத்திசாலியாக இந்த வேதாளத்திற்கு பதில் சொல்கிறானே" என்ற வியப்பும் அதோடு கூடவே "இந்த வேதாளம் எப்போதடா இவன் கையிலிருந்து பறக்காதுவிடும்"என்ற நினைப்பும் கதை வாசிக்கும் போது கூடவே வரும். சமீபத்தில் விக்கிரமாதித்தன் கதை என்கிற முழுக்கதைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. இதை வாசித்த பிறகு மேல்வீட்டிலிருந்தவன்(!) தெருவுக்கு வந்து விட்டான்.

வேறென்ன பின்னே!!...எங்கே போனாலும் அவனுக்கு கிடைக்கும் வெற்றியில் மகிழ்ந்து குறிப்பிட்ட கதையில் வரும் மாந்தர் தத்தம் மக(ள்க)ளையோ சகோதரி(களை)யோ இவனுக்கு கொடுப்பார்களாம்..இவனும் அவர்களுடன் "உல்லாசமாக" காலம் கழிப்பானாம்(சரியான "அலைச்சல்" ஆளாக இருந்திருப்பான் போலிருக்கிறது!!). இவனது முந்தைய மனைவிகளும் இவன் கூட்டிக் கொண்டு வருகிறவர்களை (அதாவது புதுமனைவிகளை)அன்புடன் வரவேற்பார்களாம். எந்தப் பெண்ணுக்கு இதற்கு மனம் வரும்?இந்த அழகில், பெண்ணுக்கு வகுத்திருக்கும் நியதி என்று வேறு 1008 வெறுப்பேற்றும் விஷயங்கள்!! (இவதான் இதுகளைப் பற்றி வடிவா நறுக்கென்று எழுத சரியான ஆள்!!)

காளி பக்தனாம்..இப்படிப் பட்டவனுக்கு நினைத்த மாத்திரத்திலேயே அவவும் காட்சி கொடுப்பாவாம்!!அட அட அட!!! இன்னும் எழுதலாம் புத்தகத்திலிருந்த மேதா விலாசங்களை..சும்மா ஏன் நற நறத்து இரத்த அழுத்தத்தை கூட்டிக்கொள்ள?

வாழ்வியல் அல்லது உங்கள் நடத்தை!

நீங்கள் செய்யும் செயல்களை எடுத்துக் கொள்ளுங்கள்...ஏதாவது ஒன்று..ம்ம்?

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...நான் செய்ய போகும் / செய்து கொண்டிருக்கும்/செய்து விட்ட இந்தச் செயலை ஒரு ஒளிவு மறைவுமின்றி என் பெற்றோரிடம் என்னால் சொல்ல முடியுமா?இதையே "ஒரு சிறு மாற்றமும் இன்றி பின்பற்று" என என் பிள்ளைகளிடம் சொல்ல முடியுமா என்னால்??

இரண்டு கேள்விக்குமே உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் நடத்தையில் பிரச்சனை இல்லை. இதுதான் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய Code of conduct. ஒரு நாளும் பிழை செய்ய மாட்டீர்கள்.

இதுதான் இந்துமதம் சொல்லும்..தர்மா!

இன்று TRAC இல் uncleஜெகா சொன்னது!

சிறுவர்களும் சிறுவர் பாடல்களும்


தோழி வீட்டில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் TRAC இற்கு கோலம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களது வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களில் ஒரு 3 வயதுப் பிள்ளையும் இருந்தா. ஒரு பாட்டுப் பாடிக் காட்டுங்கோ என்று தோழியின் தந்தை கேட்க ஆங்கில சிறுவர் பாடலான Twinkle Twinkle Little Star என்பதை பாடிக் காட்டியது பிள்ளை. அதற்கு அவர் "அப்பிடி இல்லை..இப்பிடி பாட வேணும்" என சொல்லி கர்நாடக இசை பாணியில் ஆலாபனையெல்லாம் செய்து பாடிக் காட்டினார். குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. "கிளுகிளு" என்று என்ன ஆனந்தமான சிரிப்பு! என்னதான் இருந்தாலும் சின்னப் பிள்ளைகளின் சிரிப்பின் வசீகரமே தனி!!

இதற்குப் பின் பேச்சு இலங்கையில் கற்றுத் தரப்படும் ஆங்கில சிறுவர் பாட்டுகளைப் பற்றித் திரும்பியது. தனது ஆசிரிய நண்பர் சொன்னதாக தோழியின் தந்தை சொன்னார்..மேற் சொன்ன அதே Twinkle Twinkle Little Star பாட்டை கற்பித்துவிட்டு அதன் அர்த்தமும் சொல்லிக் கொடுத்திருக்கிறார் முதல் நாள். அடுத்த நாள் வகுப்பில் பாடிய போது ஒரு பிள்ளை பாடிற்றாம் " Twinkle Twinkle Little Star.....like a diamond in the 'கை' " என்று. இன்னும் சிரிப்பு என்னவென்றால் அது நகைக்கடை உரிமையாளரின் பிள்ளையாம்! சொன்னது சரிதானே!!

தோழியின் தந்தையே தொடர்ந்தார்..ஒருநாள் வேலை நிமித்தம் வெளியிற் சென்ற போது ஒரு சிறுவன் பாலர் பாடசாலை முடிந்து வீட்டிற்குச் செல்கையில் படித்த பாட்டை பாடிக் கொண்டு போயிருக்கிறான். என்ன பாடுகிறான் என்று அறியும் ஆவலில் அவனுக்கு சற்று நெருக்கமாக பின்னாலேயே நடந்து சென்றாராம். அவன் பாடுகிறான் "கூப்பிட்ட பின் little toffee தின்..." இவருக்கோ பாட்டின் ராகம் ஞாபகம் வந்தாலும் இவன் என்ன பாடுகிறான் எனப் புரியவில்லை. பிறகு தான் விளங்கியதாம் "Ding dong bell..pussy's in the well, who put her in, little Tommy thin..." என்று.

பிறமொழி சொற்களை தெளிவாகவும் அர்த்தத்துடனும் கற்பிக்காவிட்டால் இப்படித்தான் போலிருக்கிறது!

அலையே..நீ அலையாதிருக்கக் கடவது!


ஏற்கனவே அலை பாய்ந்த நிலையில் இருக்கின்ற எம்மேல் ஏன் இந்த அலை பாய்ந்தது?

இயலுமான உதவியை இங்கிருந்தே செய்து விட்டு, அது போய் சேரவும், இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கும், ஏனையோருக்கு இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்திக்குமாக என்று வேண்டுதல்கள் நிறைந்த கனத்த மனதுடன் வலம் வருகிறோம்.

இலங்கை-இந்தியாவுக்குச் சென்று மீட்பு / நிவாரண பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? மருத்துவச் சேவை போன்று அத்தியாவசிய துறைகளில் பயிற்சியுள்ளவர்கள் மட்டுமா இங்கிருந்து செல்லலாம்? தயவு செய்து அறியத் தரவும்.

அதிகாலை என்ன வேளை?

தமிழ் மருத்துவ நிதியத்தினர் நடாத்திய முத்தமிழ் மாலை 04 இல் இடம்பெற்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. "ஆரொடு நோகேன்" என்ற பெயரில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைக்களுக்கு யாரை நோவது என்பதே கருப்பொருள். நகைச்சுவையாக நல்லாக இருந்தது. அதிலே கூடவே நடித்த ஒருவரின் கடி சொல்லி மாளாது. நடிக நடிகையர்(சரி சரி...நீங்க "நினைப்புத்தான்" என்று சொல்வது கேட்கிறது!!) நிகழ்ச்சிக்குப் அடுத்த கிழமை உணவகமொன்றில் ஒன்று கூடினோம். அங்கே வைத்து ஒருவர் கடித்த கடி இருக்கிறதே...

ஒருவர்: அண்ணா, ரிமோட் கொண்டுவந்தனிங்களா?கடியர்: அவவை வீட்ட விட்டிட்டு வந்திட்டனே!!

நாடகத்தின் ஒளிப்பிரதியைப் பார்க்கையில், அதிலே நாடக இயக்குனர் சொன்னார் "இந்த நாடகத்தை உங்கள் முன் அரங்கேற்றுவது என் பாக்கியம்"அதற்கு 'கடி'யர் "அது யாரது பாக்கியம்?".."எங்களுக்குத் தெரியாம எப்பிடி நாடகத்தை மேடையேத்தினவ?"

பாட்டுக் கச்சேரி வைத்தோம்...கடி மன்னன் பாடுகிறார்..."றாவும் கள்ளும் கைகளில் ஏந்தி..."(பாலும் பழமும் கைகளில் ஏந்தி..)"உளுந்து வடையை சட்னியில் தொட்டு சாப்பிட்டு பாரு ஊ .., என் பேரு வடையப்பா,சூடான வடையப்பா...சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாய்ப் போயிற்று.

கடைசியாய் பாடினார் இன்னுமொரு மாற்றிய பாட்டு... இதற்கு சிரிப்பு வரவில்லை..எல்லார் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது வலி.

'80களில் வந்த பாடலாம்.."அதிகாலை..சுப வேளை..உன் ஓலை வந்தது..."
மாற்றிய பிறகு: "அதிகாலை..கெட்ட வேளை..பொம்பர்(bomber) வந்தது.."

கதவுகளை பூட்டுங்கள்


நீண்ட நாட்களுக்கும் மகவுப்பிரச்சனைகளுக்கும் பிறகு பிறந்த அரிய மகளாய், செல்லத் தங்கையாய் வளைய வந்த 6 1/2 வயது அழகான குட்டிப் பெண் இன்று இல்லை. தன் தகப்பன் மறைவையொட்டி தாயார் மகனுடன் இலங்கை சென்றிருந்த வேளையில் செல்லப்பெண் சிறகடித்துப் பறந்துவிட்டாள். அப்பாவும் மகளுமாய் நண்பர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். நண்பர் வீட்டில் நீச்சல்குளத்திற்கு போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு வேலியின் காந்தப்பூட்டு சரியாக அடித்துச் சாத்தாததால் திறந்தேயிருந்திருக்கிறது. பிள்ளையை காணவில்லையெனத் தேடும் போது நீச்சல் குளத்தில் உயிரற்றவளாகத் தான் கண்டிருக்கிறார்கள். cleft pallete குறைபாடு இருந்ததால் நீச்சல் கடினம்.

நேற்று viewing. தாய் விறைத்துப் போய் உட்கார்ந்திருக்க, தந்தையோ தூங்கும் மகளின் கன்னந் தடவி தலை வருடுகிறார். மனம் தாங்கவில்லை. என்னையறியாமலே கன்னத்தில் நீர்க்கோடுகள்.

தயவு செய்து உங்கள் கதவுகளையும் பூட்டுகளையும் சரியாகப் பூட்டுங்கள்.

சிக்குபுக்கு ரயில்

நகருக்குள்ளே எத்தனை விதமான இடங்கள்..அத்தனையும் நடந்தே பார்த்து விடும் தூரம் தான் ...என்றாலும் சிட்னி சிற்றிக்குள்ளேயே 8 - 10 நிமிட நடை தூரத்தில் ரயில் நிலையங்கள். நான் இன்னும் போய் பார்க்காத லண்டனின் நிலக்கீழ் இரயில் போல் இங்கு நகருக்குள்ளே மட்டுந்தான். புறநகர் பகுதிகளில் ஊரிலிருப்பது போல் நிலத்தின்மேல். மேலும் கீழுமாக இரண்டு "மாடிகள்" கொண்ட பெட்டிகள்.

சிற்றிரெயில் என அழைக்கப்படும் ரயில் வலைப்பின்னல். ஒருநாளும் நேரத்திற்கு வருவதில்லை. திடீரென்று சில சேவைகள் இரத்துச் செய்யப்பட்டு "இதனால் ஏற்படும் சங்கடங்களுக்கு சிற்றிரெயில் மனம் வருந்துகிறது" என்று சொல்வார்கள். பிந்தி வருவதால் எற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட நிலையத்தில் ரயில் நிற்காமலும் போவதுண்டாம். இவற்றையடுத்து பயணிகளிடம் எழுந்த அதிருப்தி சொல்லில் அடங்காது. தொலைக் காட்சியில் ஒரு பயணி current affairs நிகழ்ச்சியில் சொன்னார் இந்த ரயில் சேவைக்கு பணங் கொடுத்து கடவுச்சீட்டு வாங்கி பயணிப்பது அபத்தமான செயல் என்று. நியு சௌத் வேல்ஸின் முதல்வர் கடந்த திங்கட் கிழமையை இலவச பயண நாளாக அறிவித்தார். இது பயணிகளை அமைதிப்படுத்தும் என நினைத்தாரோ என்னவோ..அவர் நினைப்பில் மண். (இதைப் போலவே முன்னரும் சில ^இதே முதல்வரின் கீழ்^ இலவச பயண நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன). இதற்குப் பிறகாவது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா பார்க்கலாம்!

சிற்றிரெயிலுக்கு செல்லப்பெயர்கள்: சிற்றிஃபெயில், சிலிரெயில்

மருத்துவமனைகளின் நிலை இன்னும் மோசமானது. அவசர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 6 மணித்தியாலத்திற்கும் மேலான காத்திருப்பு, இடமின்மையால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் நிலை என்று பல பிரச்சனைகள். அது பற்றி இன்னொருநாள்.

கண்ணோடு கண்

ஒருவருடன் கதைக்கும் போது அவரது கண்களைப் பார்த்து கதைப்பது எவ்வளவு நேரத்திற்கு சாத்தியம்? அவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை/ நீங்கள் பிழை செய்யவில்லை என்றாலும் சில வினாடிகளுக்கு மேல் கண்ணைப் பார்த்துக் கதைக்க முடிவதில்லையே..ஏன்?முகத்தைப் பார்த்து உரையாடுகிறோமே தவிர கண்ணைப் பார்த்து அல்ல. எங்களுடைய விஞ்ஞான ஆசிரியை நேரே கண் பார்த்துத் தான் கதைப்பா. நல்ல அழகான கறுப்புவண்டு போல கண்கள்...மிஞ்சிப் போனால் அவரின் கண்ணை 10 செக்கனுக்கு மிஞ்சி நேரே பார்க்க முடியாது. அவ்வளவு தீவிரம். ஏதோ உள்ளுக்குள் உள்ளதெல்லாம் அவருக்குத் தெரிந்து விடுமோ என்று தோன்றும். x-ray என்று அழைப்போம்.

சரி மீண்டும் கேட்கிறேன்...தொடர்ந்து ஒருவரது கண் பார்த்துக் கொண்டு அவருடன் உரையாடுவது என்பது வலுக்கட்டாயமான தொடர் பயிற்சியின் மூலம் செய்யக் கூடியதாகுமா? விஞ்ஞான ஆசிரியை போன்ற ஒரு சிலர் தவிர ஏனையோர், உரையாடலின் போது மற்றவர் கண்ணைப் பார்த்து கதைப்பதை ஏன் தவிர்க்கிறோம்?? நேர்கொண்ட பார்வையுடன் கூடிய உரையாடல் ஏன் சிறுவயதிலிருந்தே பழக்கத்தில் இல்லை? சிறுவர்களுக்கு அறிவுறுத்தி, பழக்கத்தில் இயல்பான ஒன்றாய் கொண்டுவர முடியாதா?

எட்டிப் பார்த்தேன்

காணாமல் போனவர்கள் என்று ஒரு பட்டியலில் என் பெயரையும் சேர்த்து விட்டுடாதீங்க. ஏதோ கிடைக்கிற சொற்ப நேரத்தில் வலை மேய்கிறேன்..பின்னூட்டம் அளிக்க முயல்கிறேன்..பல வேளைகளில் மின்னஞ்சல் பார்க்க மட்டுமே நேரம் வாய்க்கிறது. விருந்தோம்பல்+அதற்கான நேரம் பற்றி இப்போது தான் முழுமையாக உணர்கிறேன். எப்படியும் இன்னும் 2/3/4 கிழமைகளில் வழமைக்குத் திரும்பிவிடக்கூடும். அது வரை சில தளங்கள் உங்களுக்காக:

  • அலுவலகத்தில் பொழுது போகவில்லையா(!?) இங்கே போங்க.
  • மூளைக்கு வேலை வேண்டுமா..அதற்கு ஓரிடம்.
  • போதைக்கு அடிமையாவதைப் போல கல்லூரியில் கிட்டத்தட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்கு என்னை தன் அடிமையாக்கியது இது (இப்பிடி நிறைய இங்கே)
  • இணையத்தின் தொல்லை தாங்கவில்லை..ஒருவழி பண்ணனும் என்று நினைத்தால்..வழி இதோ!

அரக்கர்கள்

இங்கே அவுஸ்திரேலியாவில் ஏறத்தாழ 400 அரக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலத்தில் ஏதடா அரக்கர்கள் என்று பார்க்கிறீர்களா? இந்தப் பாதகர்களை வேறெந்தப் பெயர் கொண்டு விளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து, அந்தக் கொடுமையை படம் பிடித்து இணையத்தில் தளம் அமைத்து காட்டுகிறார்களாம். இந்த மாதிரியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்களை கைவசம் வைத்திருந்தனர் என்கிற காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆசிரியர்கள், வைத்தியர், சட்டத்தணிகள், கணினி இயக்குநர், காவற்துறையினர், மற்றும் பிள்ளை பராமரிப்பாளர்களும் அடங்குவராம்! (இவர்களில் ஐந்தாறு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்). பாடசாலை கழிப்பிடங்கள்/குளியலறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கொடுமையிலும் கொடுமை 0 - 3 வயதான பாலகரும் குழந்தைக் காப்பகங்களில் அவர்களது nappy, உடைகள் மாற்றும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களது காமவெறிக்கு அளவில்லையா? தத்தம் குடும்பத்தில் குழந்தைகளுடன் இவர்கள் வாழவில்லையா? தம் குழந்தைகளை வேறொருவர் இப்படிச் செய்தால் பொறுப்பார்களா? எங்கே போகிறது சமுதாயம்?

கண்ணீர்

மரணம் மனித வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அங்கம் தான் என எனக்கு மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தப் பட்டிருக்கிறது. அம்மாவைப் போலவே அன்பாயும் ஒரு தோழியைப் போலே நேசமாயும் ஒரு ஆசிரியைக்குரிய ஆதுரத்துடனும் பலர் வாழ்வில் அறியப்பட்ட teacher இன்று இல்லை.

மனது கனக்கிறது.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..

குடும்பம் என்பது முதலில் துணையுடன் தான் ஆரம்பிக்கிறது. பிறகு குழந்தைகள் என்று வந்து விட்ட பிறகு குழந்தைகளும் அவர்களது தேவைகளுமே பிரதானமாகி முன்னிலைப்படுத்தப் படுவது இயல்பே. குழந்தைகள் + அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது முக்கியமானதுதான். ஆனாலும் துணையும் முக்கியமல்லவா? தம்பதியரிடையே பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் உருவாவதற்கு வீட்டு வேலைகளை பங்கிடுவதிலிருந்து பிள்ளை வளர்ப்பு வரை காரணிகள் நிறையவே உண்டு. வாழ்க்கையானது வேலை, குழந்தைகள், தேவைகளை(வீடு வாங்க/கட்ட, சாதனங்கள் வாங்க) நிறைவேற்றுதல் என்பவற்றில் கழிகிறது. இந்தப் பயணத்திலே கூடவே வரும் துணைக்கென மட்டும் தனியே எவ்வளவு நேரத்தை ஒதுக்க முடிகிறது? கல்யாணம் கட்டி xx வருஷமாச்சு /பிள்ளை பெத்தாச்சு, இதுக்கு மேலே என்ன தனிமை என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். இருவரின் தனிமை உடற் சுகத்துக்காகத்தான் என்றில்லை. அதற்கும், அதையும் மீறியதாக மன சுகத்திற்கும், கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்தலை வளர்ப்பதற்குமான ஒரு நேரமே அது.

வீட்டுக்குள்ளே தான் என்பதில்லை. கடற்கரையில், பூங்காவில் ஓர் நடை, ஒரு திரைப்படம், உணவகத்தில், அல்லது இருவருக்கும் பிடித்தமான ஒரு பொழுது போக்கு..படகோட்டலாம், கண்காட்சிகளுக்குப் போகலாம். ஒரு 2 மணித்தியாலத்திற்கு அல்லது ஒரு காலை/மாலை வேளைக்கு நண்பர்களிடம் / உறவினர்களிடம் babysittingக்கு கேட்கலாம். (அவர்களதுதிருமண ஆண்டு நிறைவு நாளன்று அவர்களது குழந்தைகளை பார்த்துக் கொள்ள offer பண்ணுங்கள்.. நீங்கள் babysitting க்கு கேட்ட மாத்திரத்திலேயே சரியென்பார்கள்!!)

கணவன் - மனைவி உறவு விசேஷமானது. எல்லா விஷயங்களைப் போலவும் இந்த உறவை வளர்க்கவும் வளப்படுத்தவும் முயற்சி தேவை. அதற்கு செய்யக் கூடிய சில சின்ன விஷயங்கள்:

  • மற்றவர் முன்னிலையில் துணையை சிறுமைப்படுத்தாதீர்கள் மாறாக.. பாராட்டுங்கள் (என் கணவர் எனக்குப் பிடிக்குமென்று --- கற்றுக் கொள்கிறார் / --- செய்தார் ; என் மனைவி ஓவியம் வரைவதில் கில்லாடி etc)
  • இப்படித்தான் இருக்க வேண்டும் / செய்ய வேண்டும் என்று ஒன்றிலும் கட்டாயப்படுத்தாதீர்கள். இருவருமே தனி மனிதர்கள். சேர்ந்து செய்ய என்ன வழி என்று பாருங்கள்
  • சின்னதாய் ஆச்சரியப்படுத்துங்கள் - வெகு நாளாய் நச்சரிக்கப்படும் விஷயத்தை செய்து முடியுங்கள். மனைவி ஒரு shelf போட்டுத்தரச் சொல்லிக் கொண்டே இருக்கிறாரா...அவர் சந்தைக்கு போய் வர முன்னம் செய்து வையுங்கள்)
  • குழந்தைகளுக்குப் போலவே துணைக்கும் செல்லங் கொடுங்கள்.
  • பிடித்த விஷயங்கள், கனவுகள், பயங்கள், மற்றும் என்னென்னவோ அதையெல்லாம் பற்றி கதையுங்கள். (துணை கதைக்க வரும் போது நீங்கள் பிஸியாக இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்: "கொஞ்சம் வேலையாக இருகிறேன். இதை முடித்ததும் முதல் வேலை நீ என்ன சொல்கிறாய் என்பதை கேட்பது தான்". சொன்னது போல தேடிப் போய் என்ன விஷயம் என்று கேட்க மறக்கக் கூடாது!!)
  • துணையின் கருத்து கேட்கவோ, உற்சாகப்படுத்தவோ, நன்றி சொல்லவோ, மன்னிப்புக் கேட்கவோ தயக்கம் வேண்டாம்.

இதெல்லாம் நானாக சொல்லவில்லை. பெரியவர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். மேலே குறிப்பிட்டது மட்டுமன்றி இன்னும் பல முக்கியமான சின்ன விஷயங்கள் இருக்கின்றன.. நீங்களும் சொல்லுங்களேன்.சின்னச் சின்ன விஷயங்கள் தான்...ஆனாலும் நிறையவே தாக்கத்தை உண்டு பண்ணும். பிறகென்ன , துணை பாத்ரூமில் + எப்போதும் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" என்று பாடிக் கொண்டிருப்பார்!! (வீட்ல இனி காதல் சாம்ராஜ்யம் தான்!!)

பி.கு:- என் உபயமாக:

  • கருத்து வேறுபாடா?தலையே போனாலும் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டை பிடிக்காதீர்கள்!!
  • காதல் கடிதம் அல்லது ஒரு மடல் அனுப்புங்கள்
  • துணைக்கு கண்ணடித்துப் பாருங்கள்!! இதைப் போல ரொமான்டிக் ஆன விஷயம் வேற ஒன்றுமே இல்ல. (அடடா!!)

பார்த்தேன்..ரசித்தேன்

Jacquis Perrinன் நெறியாள்கையிலும் Bruno Coulaisன் இசையிலும் வெளிவந்துள்ள ஒரு நேபாள(most likely திபெத்திய) மொழிப்படம் 'ஹிமாலயா'. மனதை வருடும் மெல்லிய இசையும், அழகான காட்சியமைப்பும் கொண்ட இந்தப் படம் டின்லே தாத்தா தானியக் கதிர்களுக்கூடாக நடந்து வருவதுடன் ஆரம்பிக்கிறது. உப்பு வாங்கி வந்து அதை வேறோரிடத்திற்கு கொண்டு சென்று விற்று தானியம் வாங்கும் வாழ்க்கை. உப்பு பெற்று வரும் வழியில் டின்லேயின் மகன் இறந்து விடுகிறான். அவனது தோழனான 'கர்மா'வின் மேல் டின்லே சந்தேகப்படுகிறான். குரோதம் மனதில் கொழுந்து விட்டெரிகிறது. பரம்பரையாக அக்குடியினரின் தலைவர் பதவி டின்லேயின் குடும்பச் சொத்தாகவே இருந்து வருகிறது. டின்லேயின் பேரனோ பாலகன். தலைமைப் பதவிக்காகவே கர்மா தன் மகனை கொன்றான் என் நம்பும் டின்லே இந்த முறை caravanகளுக்கு நானே தலைமேயேற்கிறேன் என்று சொல்லி ஆயத்தப்படுத்துகிறான். சோதிடம் பார்த்து, நல்ல நாளில் புறப்படும் இவர்களது வழக்கத்தையும் மீறி கர்மா தனது இளவட்டத் தோழர்களுடன் முதலே புறப்படுகிறான். டின்லே, பிக்குவாக இருக்கும் தனது 2ம் மகனிடம் சென்று தன்னுடன் வருமாறு உதவி கோருகிறான். மகன் தயங்கவே அவனுக்கு ஏசிவிட்டு ஊருக்கு வந்து ஆயத்தங்களைச் செய்கிறான். மகன் 2 நாட்களில் வந்து சேர்கிறான். சோதிடர்கள் குறித்த நன்னாளில் டின்லேயினதும் அவனது சம வயதான 'கிழ' வட்டங்களினதும் பயணம் தொடங்குகிறது.

கர்மாவின் கூட்டத்தினரை எட்டிப் பிடித்தனரா, அவனுடன் சமாதானம் ஏற்பட்டதா என்பதும், வழியில் அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்களும், டின்லே, பிக்குவான இளைய மகன் , கர்மா, டின்லேயின் மருமகள் பேமா, பேரன் பசாங், . இவர்களது தனிப்பட்ட பயணங்களுமே கதை. சின்னச் சின்ன மனதைத் தொடும் காட்சிகள். மரம் என்றால் என்ன எனக் கேட்கும் பசாங், கர்மாவின் வில்வித்தை மீது அபார பிரமிப்புக் கொண்டவனாக இருக்கிறான். கர்மாவின் சிறுவயது தோழியாக டின்லேயின் மருமகள் பேமா. தான் குற்றமற்றவன் என்பதை டின்லேக்கு எடுத்து சொல்ல முயலுகின்ற,இளமைத் துடுக்கு நிறைந்த வீரனாக கர்மா....

நடித்தவர்கள் பாத்திரமாகவே ஒன்றிப் போயிருக்கிறார்கள். நீண்ட நாட்களின் பின் நிச்சயமாக கண்ணுக்கும் காதுக்கும் மனத்திற்கும் ஒரு விருந்து. கிடைத்தால் எடுத்துப் பாருங்கள்.

பி.கு: படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி இங்கே...

அழகிய தீயே

மேற்கூறிய படம் பார்த்தேன். கடைசியில் கதாநாயகிக்கு வந்த மிகவும் சினிமாத்தனமான "பூம்" தவிர படம் நல்லாத்தான் இருந்தது. எல்லாரையும் விட "டைசன்" தான் (கதாநாயகி வேற ஊர் போகிறா என்கிற போது) மிகவும் இயல்பாக முகபாவனை(!?) காட்டியிருந்தது!!. நவ்யா நாயரைப் பார்த்தால் கொஞ்சம் சுஹாசினி, கொஞ்சம் மீனா, மீதி தீபா வெங்கட்(தீபா வெங்கட் பகுதி ஒரு வேளை அவங்க பின்னணிக் குரல் கொடுத்ததால் ஏற்பட்ட மாயையாக கூட இருக்கலாம்!!) போல ( எனக்கு) இருந்தது. (யாரப் பார்த்தாலும் "முதல் எங்கியோ கண்ட மாதிரி இருக்கே" என்கிற என் வியாதி பற்றி இன்னொரு நாளைக்கு விரிவா சொல்றேன்! ;o) )

படத்தில் எனக்குப் பிடித்த காட்சி: நுளம்பு மருந்தின் புகை மூட்டத்திற்கூடாக வெள்ளைத் தேவதையாக நவ்யா நடந்து வருவது. வாய்விட்டு சிரித்தேன். நினைக்க நினைக்க சிரிப்பு வருது!

பி.கு 1: அழகான நெருப்பு என்று ஏன் பெயர் வைத்தார்கள்?
பி.கு 2: கதாநாயகி, அப்பா வீட்டில் வளர்த்த சீச்சுக்கு என்ன ஆச்சு?
பி.கு 3: "பாலா" கதாபாத்திரத்தை பார்த்தவுடன் ஏன் இவர் ஞாபகம் வந்தது???


ஒலிம்பிக் தேசம் 4 ஒ.தே 3

பாரசீக போர் :
பரந்து கொண்டிருந்த பாரசீக பேரரசின் அரசனாக முதலாம் டரியுஸ் கிமு 519ல் முடி சூடினான். பாரசீக மன்னன் சைரசினால் வெற்றி கொள்ளப்பட்டு பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனியர்கள் அதிருப்தியடைந்திருந்தனர். கிமு 419ல் மிலெட்டூசைச் சேர்ந்த அரிஸ்டகோரஸ் என்பவன் கரையோரக் குறுநிலங்களை இணைத்து ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தினான். 5 வருடத்தில் டரியுஸ் இதனை அடக்கி விட்டாலும், இந்தப் பிரதேசத்திற்குள் இல்லாதிருந்தும் கொந்தளிப்பிற்கு உதவிய அதென்ஸ் மீது சீற்றம் கொண்டான். "என்னையா சீண்டுகிறாய்..உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று வில்லன் வசனம் பேசி பழிக்குப் பழி வாங்க நினைத்த டரியுஸ் ஸ்பார்ட்டாவிடம் உதவி கோரினான். கிரேக்கத்தையே வெற்றி கொள்ளும் மாஸ்டர் ப்ளான் அவனிடம் இருந்ததை ஸ்பார்ட்டா புரிந்து கொண்டு உதவ மறுத்ததால் டரியுஸ் தன் முயற்சியை கிடப்பில் போட வேண்டியதாயிற்று. ஆனாலும் முற்று முழுதாக தன் திட்டத்தை கை விடவில்லை; கிமு 490ல் பாரசீக இராணுவம் மரதன் என்னும் இடத்தில் வந்து குவிந்தது. 10,000 பேரை மட்டுமே கொண்டிருந்தாலும் கிரேக்கர்கள் பாரசீகத்தை தோற்கடித்தனர். "எங்களூரில் இந்திரவிழா நடக்கிறது" என்று ஸ்பார்ட்டா இந்தப் போரில் பங்கேற்கவில்லை.

இன்னொரு போர் தொடுக்க திட்டம் தீட்டிய டரியுஸ் அது நிறைவேறும் முன்னமே மண்டையைப் போட; தந்தையின் கனவை நனவாக்கும் பொறுப்பு ஸெர்க்ஸீசின் தலையில் சுமத்தப் பட்டது. பரந்து விரிந்த தனது சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போர்வீரர்களை (மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்ல மவுசாக இருந்திருக்குமோ...) அழைத்துக் கொண்ட ஸெர்க்ஸீஸ் தரை + கடல் வழிப் போருக்கு ஆயத்தம் செய்தான். பாரசீகர்கள் (தற்போதைய) இயரிசோசிற்கு அருகில், தங்கள் கடற்படை பயணிக்கத் தக்கதாக ஒரு கால்வாயைத் தோண்டினார்கள். இதன் மூலம் அதொஸ் மலையடிவாரத்தில் ஆர்ப்பரிக்கின்ற கொந்தளிப்பான கடலில் பிரயாணம் செய்வதை அவர்களால் தவிர்க்க முடிந்தது. கிரேக்கத்தின் மத்திய மற்றும் தென் குறுநிலங்கள் கொரிந்தில் சந்தித்துக் கொண்டன. பாரசீகர்களை தோற்கடிக்கும் வழிமுறை பற்றிய மந்திராலோசனை நடந்தது. ஸ்பார்ட்டாவின் தலைமையின் கீழ் தரைப்படை+கடற்படையும், இப்படைகளுக்கான தந்திரோபாயங்கள் மற்றும் வியூகங்கள் அமைக்கும் பணிக்கு அதென்ஸின் தலைவனான தெமிஸ்டோக்கிள்சும் என தீர்மானிக்கப்பட்டது. ஸ்பார்ட்டா அரசன் லியோனிடஸ், தெர்மோபைலி எனும் இடத்திலுள்ள கணவாயை காக்கும் பொருட்டு தன் படையினரை அங்கு இட்டுச் சென்றான். குறுகலான இக்கணவாயே கிரேக்கத்தின் வடக்கிலிருந்து மத்திய பிரதேசத்திற்குச் செல்வதற்கான பிரதான வழி. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கணவாயைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர். எட்டப்பர்களும் காக்கைவன்னியர்களும் அங்கேயும் இருந்தார்கள். எந்தப் பாதையால் மலையைக் கடந்து போவது என்பதை எதிரிக்கு கிரேக்க எட்டப்பன் சொல்லிவிட்டான். கிரேக்க வீரர்கள் பின்வாங்க நேரிட்டது. லியொனிடஸ் தீரத்துடன் சாகும் வரை போராடினான்.

ஸ்பார்ட்டாவும் அதன் ஆதரவாளர்களும் தமது 2ம் நிலை பாதுகாப்புக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்த அதே நேரம் பாரசீகர்கள் அதென்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். நகரை விட்டு வெளியேறி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தன் குடிகளுக்கு தெமிஸ்டோக்கிள்ஸ் கட்டளையிட்டான். பாரசீக இராணுவம் அற்றிகாவை தரைமட்டமாக்கி அதென்ஸிற்கு தீ மூட்டி எரித்தழித்தது. ஆனாலும், கிரேக்க கடற்படை திறமையான வியூக அமைப்பினால், ஒடுங்கலான சலாமிஸ் கடலில் பாரிய பாரசீக போர்க்கப்பல்களை பொறி வைத்து அழித்தது. கரையிலிருந்து தன் படையினரின் தோல்வியைக் கண்ணுற்ற ஸெர்க்ஸீஸ் இராணுவப் பொறுப்புகளை தனது தளபதி மாடோனியசிடம் கையளித்து விட்டு வெறுப்புடன் தாயகம் திரும்பினான்.

ஒருவருடம் கழித்து ஸ்பார்ட்ட தளபதி போசோனியஸின் (ஒரு வேளை "Pause button" ஐ கண்டு பிடித்தவரோ...) தலைமையில் கிரேக்கம் வெற்றிவாகை சூடியது, அதெனிய கடற்படை மைக்கெலி என்னும் இடத்திற்குச் சென்று அங்கு மீதமிருந்த பாரசீகக் கடற்படையை துவம்சம் செய்ததுடன், பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனிய குறுநிலங்களையும் விடுதலை செய்தது.

தொடரும்

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?

கடந்த ஞாயிறன்று(தந்தையர் தினம்) சிட்னி தந்தையருக்கு வானத்திலிருந்து கிடைத்த பரிசு புகைப்படங்களாக. ..(படங்கள் தரவிறக்கப் பட அதிக நேரம் எடுக்கிறது. இன்னொரு வலைமேயும் சாளரத்தைத் திறந்து, வேறு பக்கத்திற்கு ஒரு விசிட்டடித்து வரவும், தரவிறக்கவும் முடியவும் சரியாக இருக்கும். அசௌகரியத்திற்கு மன்னிக்க!)

தடதடவென வந்து விழுந்த சிறு பனிக்கட்டிகள், வெப்பநிலை திடீரென்று தாழ்ந்தமையால் மறுநாள் காலை வரை நிலத்தோடு ரகசியம் பேசின.
கனேடிய, ஐரோப்பிய நகரங்களில் காணக்கிடைக்காததா என்று நீங்கள் நினைக்கக் கூடும். சிட்னிக்கு இது ஒரு "freak storm". இப்படியான நிகழ்வு மிக அபூர்வம். :o)

கேள்விகளுக்குரிய பதில்கள்

சில நாட்களாய் சில கேள்விகள் குடைகின்றன. (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தியை வாசித்ததன் விளைவு!!) தன்னை அறிதல் என்கிற வகைக்குள் அடங்கும் என்றே நினைக்கிறேன். மிகப் பழைய கேள்விகள் தான்...என்றாலும் புதிதாய் ஒவ்வொருவருக்குள்ளும்.....

1. நீங்கள் யார்?
இந்த உடலா?இத்தனை கேள்விகள் கேட்கும் மனமா?அதற்கும் மீறிய ஒன்றா?

2. நீங்கள், நீங்களே தான் என்பதை எப்படி அறிகிறீர்கள்? (How do you know "you are you'?)
இரவு படுக்கப் போகிறீர்கள். காலையில் எழுந்ததும், "இரவு படுக்கைக்குப் போன அதே ஆள்தான் நான்" என்பதை எப்படி, எதன் மூலம் உணர்கிறீர்கள்?ஞாபகங்கள் மூலமா?இரவு நித்திரையிலே மறதி வந்து விட்டதென்று வையுங்கள்..அப்போது உங்கள் நிலை என்ன? மறதி வந்தவர் தன்னை எப்படி உணர்கிறார்?

3.மகிழ்ச்சி என்பது எந்த நிலையில் ஏற்படும் உணர்வு?போதும் என்கிற மனப்பான்மையில் எழுவதா?பரீட்சையில் சித்தியெய்திய திளைப்பா? சலனமற்ற ஒரு பொழுதில் உணரப்படுவதா? திருப்தி, elation,அமைதி என வெவ்வேறு வார்த்தைகளால் குறிப்பிடப்படும் ஒன்றுதானா மகிழ்ச்சி என்பது? சரி - அப்படியே வைத்துக் கொள்வோம்; இத்தனை வார்த்தகளிருக்க மேலும் ஒரு சொல் ஏன், அதே நிலையை குறிக்க? திருப்தி, திளைப்பு, அமைதி என்பன வெவ்வேறான நிலைகள்/ உணர்ச்சிகள். அவை எப்படி மகிழ்ச்சியாக முடியும்? மேலும் மகிழ்ச்சி என்பது புறக்காரணிகளில் தங்கியிருக்கும் ஒன்றாக(எனக்குத்) தெரியவில்லை. அனேகமான பொழுதுகளில் "சந்தோசமாயிருக்கிறாயா ஷ்ரேயா" என்று என்னையே நான் வினவிக் கொள்ளும் போது, எனக்குள்ளிருந்து ஆமென்ற பதிலே வருகிறது. அந்தக் கணத்தில் நான் எப்படி உணர்கிறேன்?ஆமென்ற பதில் என் மனநிலையை சார்ந்து வருகிறதா அல்லது மகிழ்ச்சியே என் இயல்பு நிலையா?

இவற்றுக்கு பதில் கிடைக்க உள்நோக்கிய பயணம் ஒன்றே வழி என்பது தெரிகின்றது. ஆனாலும் பதில்கள் எனக்குள்ளேயிருக்குமா அல்லது பிரபஞ்சத்தின் ஒரு தகவல்தளத்திலா??

பயணங்கள் முடிவதில்லை

எழுதுற பைத்தியம் விட்டுவிட்டது நாம் தப்பினோம் என்று நினைத்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். கொஞ்சம் இடைவெளி விட்டா இப்பிடியெல்லாம் மனக்கோட்டை கட்டக் கூடாதுங்கோ! ;o)

ஜூலையில் போகவிருந்து (Country linkக்கு $240 தானமளித்து)தடைப்பட்ட மெல்பேர்ண் பயணம், சாமத்தியப்பட்ட மருமகளின் புண்ணியத்தில் நிறைவேறிற்று. கணவருக்கு வெள்ளி இரவு விரிவுரைஇருந்தபடியால் விழா நடக்கும் நாளன்றே(சனிக்கிழமை) காலைபுறப்பட்டு அன்றிரவே திரும்புவதாக திட்டமிட்டு விமான பயணஒழுங்கெல்லாம் செய்தோம். காலை 11 இலிருந்து மதியம் 2 வரை விழா. விமானம் புறப்படும் நேரம் காலை 6 மணி. போய்ச்சேர 1 1/2மணித்தியாலம் எடுக்கும். வீட்டிலிருந்து 40 நிமிட ட்ரைவ்+புறப்பட 45 நிமிடத்திற்கு முன்னர் வி. நிலையத்தில் நிற்க வேண்டியது என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு காலை 3 மணிக்கு அடியேன் எழுந்திருக்கவேண்டி ஏற்பட்டது. முதல் நாளே கொண்டு போக வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து விட்டதால் பிரச்சனை இருக்கவில்லை. குளித்துவெளிக்கிட்டு கணவரை எழுப்பி வெளிக்கிட வைத்து வழமையான் தேநீர் ஊற்றுதல்+சாமான் எல்லாம் வைத்தாயிற்றா என்ற சரி பார்த்தல்களுடன் நேரம் கழிந்தது.

வீட்டிலிருந்து புறப்பட்டு விமான நிலைய நீண்ட கால தரிப்பிடத்தில் கார் நிறுத்தி 15 நிமிடத்திற்கொரு முறை வரும் Shuttle பேருந்துக்குக் காத்து நின்றோம். ஒரு குடும்பம் வந்தது. 3பையன்களும் அம்மா அப்பாவும். "Come here darling" - சின்னவனைத் (2 - 3வயது)தூக்கி மடியில் இருத்திக் கொண்டா அம்மா. அவன் நழுவி விடுபட்டுஅப்பாவிடம் ஓடிச் சென்றான். அம்மாவுக்கு யாரையாவது தூக்கிவைத்திருக்க வேண்டும் போல..2ம் மகனைக் கூப்பிட்டு "You can't be warm in that" என்று சரியாக இருந்த ஜக்கெற்றைச் சரி செய்து மடியில்இருத்தி கொண்டா. சற்றே வெட்கத்தில் நெளிந்தாலும் தாயின்மடியிலேயே இருந்து கொண்டான். பேருந்து வந்தது. விமான நிலையத்தில் வழமையான பாதுகாப்பு பரிசோதனை. ஒரு மெட்டல் டிடெக்டருக்கூடாக போகவேண்டுமல்லவா..நானும் போனேன்....யப்பா..கீக் கீக் என்று ஒருஅலறல்.பாதுகாப்பு அதிகாரி பயந்து போனார். ஏதாவது உலோகசாமான் அணிந்திருக்கிறாயா என்று கேட்டார்..தாலிக்கொடியையும் தாலிகோர்த்திருந்த சங்கிலியையும் கழற்றி அவர் கையில் கொடுத்து விட்டுமறுபக்கம் வந்து வாங்கிக்கொண்டேன். "நீர் தாலி கோர்த்திருந்த சங்கிலியை கழற்றியிருக்கத் தேவையில்லை. எங்கட கல்ச்சர் படி நான் கழற்றக்கூடாது என்று சொன்னால் அவை உம்மள force பண்ண ஏலாது" என்றுஎன் பாதி மொழிந்தார். (எனக்கு இதிலெல்லாம் பெரிய "இப்பிடித்தான்செய்ய வேணும், இது செய்யக் கூடாது" கள் இல்லை) பாதுகாப்பு அதிகாரிதனது கடமையை செய்ய நான் ஒத்துழைத்தேன்..அவ்வளவுதான்.(உங்கள் கருத்து என்ன?கழற்றலாமா..கூடாதா??)

பயணம் இனிதாக இருந்தது.கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பின்னான விமானப் பயணம். வி.பயணம் ஒரு தனி சுகம்தான்.. இல்லையா??

விமானம் தரையிறங்கி நாங்கள் வெளியில் கால் பதித்தோம் ஒரு மணம் மூக்கைத் தாக்கியது. என்னடா மணக்குது என்றால்..பச்சைப் புல்!! மெல்பேர்ணின் பிரதான வி.நிலையமன்றி இது இன்னுமொரு சிறிய வி.நிலையம். கட்டடத்துக்குள்ளே வந்து முன்பதிவு செய்த வாகனத்தின் சாவியை பெற்றுக்கொண்டோம். (இணையம் எவ்வளவு வசதிகளை அளிக்கிறது!!). வாகனம் தேடி கதவு திறந்து சில்ல்ல்லென்ற காலைக்குளிருக்கு இதமாய் சூடு பரவ பயணமானோம். டன்டினொங் வந்ததும் அவளுக்கு என்ன கொடுப்பது என்ற பிரச்சனை மீண்டும் தலை தூக்கிற்று. காசு குடுப்பம், விருப்பமானது அவள் வாங்கட்டும், சின்னப்பிள்ளை தானே- இது நான். கணவரோ " நீங்க அத்தை. நகை கொடுக்கிறது தான்பெட்டர்..மற்றது நகையெண்டா வச்சும் பாவிக்கலாம் தானே". இங்கே ஒன்று சொல்ல வேண்டும்..எனக்கும் தங்க நகைக்கும் எட்டாத தொலைவு. ஏனோ வெள்ளி, தகர(இமிட்டேஷனை அம்மா அப்படித்தான் சொல்வா) நகைகளிலிருக்கும் ஆர்வத்தில் துளிதானும் தங்கத்தில் இல்லை. சரி..ஒருமாதிரியாக காசே கொடுப்பதென்று தீர்மானித்து அண்ணா வீடு நோக்கிச் சென்றோம். அழகாய் கோலம் அணிந்து வாசல் வரவேற்றது. அன்பளிப்பைக் கொடுத்து கொஞ்சி விட்டு வெளிக்கிடப் போனேன். ஏற்கெனவே பிளீற்றுகள் எடுத்து மடித்ததால் ..யுரேக்கா!! பிளீற் பிரச்சனை -இல்லவே இல்லை. புறப்பட்டோம் மண்டபத்துக்கு. விழா பற்றி அண்ணா சொன்னதிலிருந்து 2 ஆச்சரியங்கள் எனக்கு.
(1) நிவேக்குட்டி(இந்தமருமகள்)இந்த வெளிக்கிடுதல்கள், மண்டபத்தில்விழாவைத்தல்களுக்கு விரும்பி ஒத்துக் கொண்டது (2) சாமத்தியச் சடங்கு மண்டபம் எடுத்து கொண்டாடும் அளவில்இருப்பது. (ஏன் பழங்காலத்தில் பெரிதாய் விழாவெடுத்துக்கொண்டாடினார்கள்..அந்தக் காலத்தில் அதற்கான தேவை என்பவற்றையெல்லாம் எம்மக்கள் வசதியாக மறந்து விட்டார்கள் போல)
சரி.. விழாவில் அத்தையையும் பெரிய மனுஷியாக மதித்து ஆராத்தி எடுக்கச் சொன்னார்கள். அத்தைக்கும் சந்தோசம்..வடிவாய் எடுத்தா. நன்றாக நடந்தது விழா. என் கணவரும் அண்ணாவும் ஏதோ தேவைக்காக வெளியில் சென்றிருந்தார்கள். தூரத்து உறவினரான ஒரு அண்ணாவிடம் கதைத்துக் கொண்டிருந்தேன். அவரது தங்கைகளும் நானும் நல்ல தோழிகள்.இவரும் நல்ல முஸ்பாத்தியாக கதைப்பார். திருமணம் நிச்சயமாகினது பற்றி, கிட்டடியில் ஊர் போய் வந்தது பற்றி மற்றும்பல விஷயங்களும் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் இருவரும் மறந்து விட்டோம் தமிழனுக்கு குறுக்குப் புத்தியுண்டு என்று!விழா முடிந்து எல்லாம் ஒதுக்கி வைத்து ஆறி அமர்கையில்அதிலிருந்த மாமிகள் இன்னொருவரது சேலையைப்பற்றியும் தத்தமதைப்பற்றியும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.பக்கத்திலிருந்த அக்கா/மாமிஅந்த அண்ணாவைக் காட்டிக் கேட்டா "அவர் உங்களுக்குஎன்னமுறை?அண்ணையோ?". சிரிப்பு வந்தது. இல்லை..தெரிந்தவர் என்றுசொல்லி இன்னும் குழப்பிவிட குறுக்குப்புத்தி யோசித்தது. வாய் "ம்ம்..அண்ணாமுறைதான்" என்றது. மாமி சொன்னா "அப்ப சரி".

அட இதை மறந்து விட்டேனே..மத்தியான சாப்பாட்டு நேரத்தில் கணவருடன் மேல் குறிப்பிட்ட அண்ணா, சந்திரன் அண்ணா,அவரது துணைவி & இன்னும் 3 -4 பேருடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அண்ணாவையும் கணவன் - மனைவி என தவறாகப் புரிந்துகொண்டாவாம் என்று ஒரு மாமி சொல்ல அவவின் தோழி என் கணவரைப் பார்த்து"அப்ப உங்களுக்கு நல்லம் என்ன..வேற பெட்டைகளைப் பார்க்கலாம்" என்றா.என்னவருக்கு "ஏறி" விட்டது. ஆனாலும் அடக்கிக் கொண்டு சீ..எனக்கு என்ரமனிசி போதும்" என்றார்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்ததும் நான் தூ.உ.அண்ணாவிடம் அந்த மாமி, இவர் என்ன முறை எனக் கேட்டதைச் சொன்னேன். சிரிசிரியென்றுசிரித்தார். பிறகு அவ ஏன் அப்படிக் கேட்டா என்பதன் காரணத்தைச் சொன்னார். அவ அந்த அண்ணாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் உறவினராம். "தன் உறவினப் பெண்ணைக் கட்டப் போகிறவன் என்ன இன்னோருத்தியோடு சிரித்துக் கதைக்கிறானே" என்ற அக்கறையாம்!! இப்பிடியான கூத்துகளுடன் நன்றாகக் கழிந்தது நாள். கணவரது நண்பர் கனடாவிலிருந்து குடி பெயர்ந்துள்ளார். அவரையும் எங்களின்மெல்பேர்ண் விசிற்றில் அடக்கத் திட்டமிட்டு அங்கே சென்றோம். இரவுச்சாப்பாட்டிற்கு நிற்கவில்லை, அவர்களுடன் செலவழித்த நேரம் காணாது என்று ஒரே முறைப்பாடு. அங்கிருந்து விமான நிலையத்திற்குச் சென்றால் செக்-இன் முடிந்து 12 நிமிடங்கள் ஆகி விட்டது. பயணச்சீட்டில்குறிப்பிட்டிருந்தார்கள் 30 நிமி.க்கு முன்னமே வந்துவிடும்படி. அதையார் பார்த்தது! கணவரோ காரை ஒப்படைக்க பக்கத்துக் கட்டடத்துக்குப் போய் விட்டார். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பணிப்பெண் மசியவில்லை. அவளது நிலையும் எனக்கு விளங்கியதால் சரியென்று விட்டுவிட்டு அருகிலிருந்த கதிரையில் அமர, கணவரும் வந்து என்னிடம்விஷயமறியவும் சரியாக இருந்தது. அவளிடம் ஏற்கெனவே நான் முன்னெச்சரிக்கையாக சொல்லி வைத்ததால் என்னவரின் சாம பேத தண்ட உபாயங்களையெல்லாம் இயல்பாகக் கையாண்டாள் அப்பெண். பிறகென்ன..உபரியாக $164 கட்டி மறுநாட் காலை பயணத்திற்குப் பதிவு செய்து, மீண்டும் கார் எடுத்து நண்பர் வீடு நோக்கிப் பயணித்தோம். காலையில் தவறவிட்ட ஓர் விளம்பரம் கண்ணில் பட்டது.(அதை சொல்ல முதல் 3 விஷயம். நாங்கள் போன வி.நிலையத்தின் பெயர் Avalon. நகரிலிருந்து 30 நிமிடம் தள்ளி உள்ளது.இங்கே அவுஸ்திரேலியாவில் Have *** (அட.. wild card!) என்பதை ஸ்லாங் ஆக "avva*** என்பார்கள். உதாரணத்துக்கு: have a good day என்பது 'avva good day" ஆக மாறும்.)

இதுதான் விளம்பரம்: "Avalong flight ahead?next time fly Virgin Blue"

தலைக்கு மேலே ரொம்ப ப்ரைட்டாக பல்ப் ஒளிர்ந்திருக்கு!!

நண்பர் வீடு வந்து, பலகதை பேசி இரவல் இரவாடையில் படுக்கப் போகையில் 12 மணி. 5 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமையிலும் சாமம் வழியே எழும்ப வேண்டி இருக்கு!!) எழும்பி குளித்து வெளிக்கிட்டு, சரியான நேரத்துக்கு வி.நிலையம் வந்து, உலோகப் பறவையில் ஏறி, சிட்னியில் தரையிறங்கினோம். சிட்னி விமான நிலையத்திலேயே காலையுணவை முடித்துக் கொண்டு ஷட்டில் பஸ் எடுத்து நீ.கா.த.இலிருந்து காரெடுத்து அவனுக்கு $30 அழுது, வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் அத்தானோ கல்லுப்போல உறுதியாய் இருக்க மெல்லியலாள் (என்ன சிரிப்பு?ம்ம்??) நான் பாழும் Flu க்கு விருந்தோம்பினேன். நேற்றுத்தான் கொஞ்சமாய் மீண்டு வந்து வேலைக்குத் திரும்பியுள்ளேன்.

பி.கு: பவித்ரா போல எனக்கும் தொடர் எழுத (90% மொழிபெயர்ப்புத்தான் என்றாலும்) வார்த்தை முட்டுது. நேரமும் வார்த்தையோடு சேர்ந்து கொண்டு இரட்டை முட்டு!! என்றாலும்..ஒலிம்பிக் தேசம் வரும்....வரும்..வரும்..வரும்..வரும்.வரும் வரும் வரும்வரும்வரும்.....


டும் டும் டும்

அப்பாடா.. ஒருமாதிரி திரும்பவும் வலைபதிய வந்துட்டன். வேலை பரவாயில்ல. போய் வாறதுக்குத்தான் eachway கிட்டத்தட்ட 80 நிமிசம் எடுக்குது. வீட்ட வந்து சமைச்சு சாப்பிட்டு படுக்கத்தான் நேரம் சரியா கிடக்கு. 2 கிழமை பயிற்சியெல்லாம் இந்த XPSP2 வெளியீட்டுக்குத் தான். ஒவ்வொருநாளும் 6- 7 handouts. வாசிச்சிட்டு போகோணும். இதுக்கு நடுவில சிட்னியில எனக்குக் கிடைச்ச முதல் நண்பிக்கு கலியாணம். வைச்சாளே கலியாணத்தை..காலம 8 மணிக்கு. விடியப்புறம் 5.15க்கு கிணிகிணியெண்டு சத்தம் போட்ட கடிகாரத்திட(உண்மையாவே "கடி"காரம் தான்) தலையில ஒண்டு போட்டுட்டு திரும்பிப் படுத்தன். 7.30 மணடபத்தில நிக்கச் சொன்னது ஞாபகம் வந்து துலைக்க...2.30 மணிக்கு படுத்து 5.30க்கு எழும்பின 3 மணித்தியால நித்திரை காணாது என்டு சொன்ன உடம்பும் மனமும் வலுக்கட்டாயமா ("V" குடிச்ச மாதிரி ;o) )உசார்ப்படுத்தப்பட்டன.பிறகென்ன...வழமையா நடக்கிற சீலைப்போராட்டம். நேரங்காலம் தெரியாம தலைப்பு பிளீட் வரமாட்டனெண்டு...ஆ!"இந்த சீலையை கண்டு பிடிச்சவன் மட்டும் என்ட கையில கிடைச்சா..."என்று வழமையான வீர வசனம். சரி "அன்புள்ள அத்தானை" எழுப்பி குளிக்க அனுப்பி நேரத்தைப் பாத்தா..ஐயய்யோ 6.30.!! தேத்தண்ணிக்கு தண்ணி வைச்சு, இரவு 2க்கு (பின்னேரம் மண்டபம் சோடிக்கப் போய் வேலைகள் செய்து நல்லா கூத்தடிச்சு,அங்கருந்து பொம்பிளையப் போய் பாத்திற்று வீட்ட வர 10.30- 11மணி, சீலைய அயர்ன் பண்ணி வச்சு{அம்மாவின் அருமை இப்பத்தானே தெரியுது!} வடிவா வெட்டி ஒட்டி கீறி வச்சிருந்ததையெல்லாம் சேர்த்தெடுத்து)செய்து முடிச்ச வாழ்த்து மடலை (scan பண்ண யோசிச்சனான்...பிறகு நித்திரக்களையில மறந்திட்டன்.)அதுக்கெண்டு தனிய விசேசமா செய்த பைக்குள்ள வைச்சு செலொடேப்பால ஒரு ஒட்டு. (அட...என்ன இது இன்னும் இந்த பிளீட் சரி வருதில்லயே..grr!)தென்னாபிரிக்காக்கு குடும்பம் நடத்தப் போறவக்கு வித்தியாசமா என்ட கையாலயே ஒரு மடல் செய்து குடுத்திருக்கிறம்.

மண்டபத்துக்கு வந்து அதில நிண்ட ஒரு அன்ரிய பிடிச்சி ஒருமாதிரி பிளீற்ற வழிக்கு கொண்டு வந்தன். பிறகு வழமையான சின்னச் சின்ன வேலைகள் செய்திட்டு கலியாணம் பாக்க வசதியா நண்பிகள் கூட்டம் முன்னுக்கு போய் இருந்து கொண்டம். இதுக்குள்ள என்னையும் சேர்த்து 4 பேர் தலை மயிர நேராக்கியிருந்தை கண்டு ஆச்சிரியப்பட்டிட்டன்.( தலைமயிரில ஒரு பரிசோதனை முயற்சியும் செய்யப் போறல்ல நான். 3 மாசத்துக்கு ஒருதரம் அடில வெட்டுறதோட சரி. தலை மயிர் நேராக்க வேணுமென்டு கன நாள் ஆசயா கிடந்த.ஒரு மாதிரி நிறைவேத்திட்டன்!) வழமையா எல்லாத்தயும் கதைச்சு கொள்ளுறனாங்க...இந்த முறை ஒத்தரும் தலைமயிர் அலங்காரத்த பத்தி மூச்சும் விடல்ல. சும்மா சொல்லப்படா... எல்லாற்ற ஒசிலும் நல்லாத்தான் இருந்தது. கல்யாணம் நல்லபடியா நடந்துது.

ஒரு சின்ன விசயம்..கூறைத் தட்ட வாங்க முன்னம் மாப்பிள்ளைட காலில கலியாணப்பொம்பிள விழுந்து கும்பிட்டவ. இத நான் ஒரிடத்திலயும் இதுக்கு முதல் காணல்ல. முருகன் கோயில் ரவி ஐயா தான் கலியாணம் நடத்தினவர். ஒரு வேளை இந்திய முறையா இருக்கலாம் என்டு நினைக்கிறன். ஏன் விழுந்து கும்பிடுற? என்னப் பொறுத்த வரையில கொஞ்சம் பிற்போக்காப் பட்டுது. இன்னொண்டு என்னண்டா அருந்ததி காட்டினவங்க. இளஞர் தின விழா இதழ்ல ஒராள், தான் எழுதியிருந்த கட்டுரையில மண்டபத்துக்குள்ள(பகல்ல) நடக்கிற கலியாணத்தில கூரைக்குள்ளால பாக்க முடியாத நட்சத்திரத்தை காட்டுறதப் பற்றி சொல்லிருந்தவர். பொம்பிள இந்த கட்டுரைய வாசிச்சிருக்கிறா போல..சிரித்து விட்டு மாப்பிள்ளையிடம் என்னவோ சொல்ல அவரும் சிரித்தார்.ஐயாவும் சிரித்தார். எங்களுக்கும் கட்டுரை ஞாபகம் வர நாங்களும் சிரிச்சு வச்சம். நல்ல சாப்பாடு. சந்தோசமாக, நல்ல படியா முடிஞ்ச கலியாணம். பொம்பிள-மாப்பிள மனம் நிறைஞ்சு வாழோணும் என்டு வாழ்த்திறன்.

விரைவில் வருவேன்

புதிதாய் வேலை தொடங்கி, பயிற்றுவிக்கப்படுகிறேன். சிலநாளாய் மழையைக் காணவில்லையென்று வானம் பார்க்கிறவர்கள் அடுத்த கிழமை அண்ணாந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒ.தே விரைவில் தொடரும்.

ஒலிம்பிக் தேசம் 3 ஒ.தே 2

கிமு 1200- 800
டோரியர்கள் கிரேக்கப்பெருநிலத்தில் பரந்த போது குறுநிலங்களைத் தரைமட்டமாக்கி அதன் குடிகளையும் தமக்கு அடிமகளாக்கினர். பின்னர் கிரீட்டையும் ஆசியாமைனரின் தென்மேற்குக் கரையோரப்பகுதியையும் கைப்பற்றினர். தெசலியர் என அறியப்பட்ட ஒரு இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் தெசலியில் வந்து குடியேறினர். கிரேக்கத்தில் முன்பிருந்தே வசித்து வந்த பழங்குடிகளில் எயோலியர் ஆசியாமைனரின் வடமேற்குக் கரைக்கும்; அயனியர் மத்தியகரைக்கும், லெஸ்போஸ், சமோஸ்(சமோசா அல்ல!!),கியோஸ்(பவித்ராவின் பூனைக்குட்டி அல்ல!!) ஆகிய தீவுகளுக்கும் இடம்பெயர்ந்த போதிலும் இவர்களிற் சிறு பகுதியினர் அவ்வாறு குடிபெயராது அற்றிக்காவிலும் நன்கு பலப்படுத்தப்பட்ட அதென்ஸிலும் தங்கியிருந்தனர். டோரியர்களின் ஆக்கிரமுப்புடன் ஆரம்பிக்கும் அடுத்த 400 வருட காலம் கிரேக்க வரலாற்றின் இருண்ட காலமாக வர்ணிக்கப்பட்டாலும் டோரியர்களை அவ்வளவு எளிதில் உதாசீனம் செய்து விட முடியாது. இவர்கள் தான் இரும்பை கிரேக்கத்திற்குக் கொண்டு வந்தனர். மட்பாண்டங்களை அலங்கரிப்பதில் புதுவிதமான முறையை கொண்டிருந்தன்ர். ஜியொமெட்ரிக் (தமிழில்??) உருவங்களை வரைந்தனர்.இவர்களாக இந்த அலங்கார உருவங்களைக் கண்டுபிடித்தனரா அல்லது அற்றிக்காவின் அயனியர்களிடம் ஏற்கெனவே பழக்கத்திலிருந்த அலங்காரக்கலையை மெருகேற்றினரா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. ஆண் கடவுளரை வணங்கிய டோரியர்கள் பிற்பாடு மைசீனிய கடவுளரில் பொசெய்டொன், ஸீஸ், அப்பொலோவையும் சேர்த்து வணங்கினர். முடியாட்சி முறை கிமு800ம் ஆண்டளவில் முடிவிற்கு வந்து, மைசீனிய நாகரிகத்தில் போன்று நகர் சார்-குறுநில ஆட்சி ஏற்பட்டது. இக்குறுநிலங்களில் ஆட்சியதிகாரம் செல்வந்தரான நிலவுடமைப் பிரபுக்கள் கையில் இருந்தது.

கிமு 800- 480குறுநில ஆட்சி மீளவும் ஆரம்பித்த காலகட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பனவற்றின் உற்பத்தி மிகுந்திருந்தமை கிரேக்கர்களை கடல் வணிகம் நோக்கிச் செலுத்தியது. பினீஷியர்களின் வீழ்ழ்ச்சியாலேற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு புதிய கிரேக்க குடியேற்றங்கள் வட ஆபிரிக்கா, சிசிலி,இத்தாலி, தென் பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டன.பினீஷிய மூலாதாரங்களைக் கொண்ட எழுத்துக்களும் கிரேக்கர்கள் சேர்த்த உயிரெழுத்துக்களும் கொண்டதாக உருவான கிரேக்க எழுத்து வடிவம் குறுநிலங்களை ஒன்றிணைத்தது. எல்லாக் குறுநிலங்களுக்கும் பொதுவான மைசீனிய வரலாற்றைக் கூறும் ஹோமரின் படைப்புக்கள், எல்லாக் குறுநிலங்களிலுமிருந்து வீரர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி, கருத்துப்பரிமாற்றத்திற்கு டெல்ஃபி என்பன கிரேக்கர்களுக்கு ஒரு தேசிய உணர்வை அளித்தன. இக்காலகட்டம் இடைக்காலம் என அறியப்படுகிறது.

குறுநிலங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அமைப்பில் கட்டப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அக்ரொபொலிஸ்(அக்ரொ-உயர்ந்த, பொலிஸ்- நகரம்)அந்த நிலத்தின் உயரமான இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த அக்ரொபொலிசில் தான் நாட்டின் திறைசேரி, கோயில்கள் என்பன அமைந்திருந்தன. இதுவே முற்றுக்கைகளின் பொது மக்கள் தஞ்சம் புகுமிடமாகவும் விளங்கியது. அக்ரொபொலிசிற்கு வெளியே ஒரு சந்தையும் அதற்கும் அப்பால் குடியிருப்புகளும் அமைந்திருந்தன. சுயாட்சியின் கீழிருந்ததால் தத்தம் தேவைக்கேற்ப சட்டமியற்றி ஆட்சி நடத்திய குறுநிலங்கள் தம்மிடையே சண்டைகளையும் போர்களையும் ஏற்படுத்திக் கொண்டன.பரம்பரையாக அதிகாரத்தைப் பெற்றதனால் பிரபுக்கள் சாதாரண மக்களால் வெறுக்கப்பட்டனர். சில குறுநிலங்கள் புரட்சிக்காரர்களின் ஆட்சிக்குட்பட்டன.இதனை ஆரம்பித்து வைத்தவர் (கிமு 650)கொரிந்தைச் சேர்ந்த கைப்செலோஸ். பதவிகளைப் பரம்பரையாகப் பெறாது பலவந்தமாகக் கைப்பற்றிய இவர்கள் சாமானிய குடிமக்களின் நன்மையைத் தம் கருத்தில் கொண்டவர்களாக நோக்கப்பட்டார்கள்.

அதென்ஸ்:
புரட்சிக்கார்களின் ஆட்சிக்கு சில குறுநிலங்கள் உட்பட்டாலும் அதென்ஸ் இன்னமும் பிரபுத்துவ அதிகாரத்தின் கீழேயே இருந்தது. ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கப்பட்டு அம்முயற்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில் ட்ராகோ எனப் பெயர் கொண்ட சட்டவியலாளர் கிமு620 இல் மிகக் கடுமையான சட்டங்களை இயற்றினார். உதாரணம்: காய்கறி திருடினால் மரணதண்டனை. :O( கிமு 594ல் சோலோன் என்பவர் தலைமை சட்டவியலாளராக நியமிக்கப்பட்டார். குடிமக்களின் எல்லாக் கடன்களையும் இரத்துச் செய்ததுடன் கடன் காரணமாக அடிமைப்பட்டிருந்தவர்களையும் விடுதலை செய்தார். எல்லா அதென்ஸ்வாசிகளும் சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படவேண்டும் என அறிவித்து பரம்பரையாக அதிகாரங்களை சுவீகரிக்கும் வழக்கத்தையும் இல்லாதொழித்தார்.சட்டமியற்றுபவர்களையும் அதை நிலைநிறுத்துபவர்களையும் மக்களே வாக்கு செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கும்படி செய்தார். இவரது சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தின் வருகைக்கு கட்டியம் கூறுபவையாக அமைகின்றன.ஜனாதிபதிகளுக்கு முன்னோடியாக சோலோன் திகழ்கிறார்.

ஸ்பார்ட்டா:
ஐந்து கிராமங்களைக் கொண்டதான ஒரு குறுநிலம் பெலொபொனீஸ் குடாநாட்டில் ஸ்பார்ட்டா என்னும் பெயரோடு விளங்கிற்று. இங்கே முடியாட்சி நிலவியது. டோரியர்களின் வழித்தோன்றல்களான ஸ்பார்ட்டாவாசிகள் லக்கோனியாவின்(பெலொபொனீஸ்) ஒரிஜினல் குடிகளான ஹெலொட்ஸை தம் அடிமைகளாகக் கொண்டிருந்தனர். சமூக ஒழுங்கானது கட்டுப்பாடுகள் நிறைந்த இராணுவ அடிப்படையில் அமைந்திருந்தது.பச்சிளங் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டு, குறையுடையவர்களாகக் காணப்பட்டால் (இறக்கும் வரை) மலையுச்சியொன்றில் விடப்பட்டார்கள்( பெற்றோர் நிலை..நினைக்கவே மனதைப் பிசைகிறது!). 7 வயதினை அடைந்ததும் சிறுவர் தத்தம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு கட்டாயமான, கடுமையான இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிறந்த போர்வீரரை 'உற்பத்தி' செய்வதற்கு இம்முறை பின்பற்றப்பட்டது. சிறுமியர் இந்தப் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படவில்லையாயினும், பின்னாளில் அவர்கள் சுகதேகிகளாகி, பலசாலிகளான ஆண் மகவுகளைப் பெற்றெடுக்கும் முகமாக சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. விமர்சனம் எதுவும் யாராலும் முன்வைக்க முடியாதபடி நடந்த ஸ்பார்ட்டா ஆட்சியில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாது போனமையால், மற்ற குறுநிலங்கள் கனவு கண்ட ஒரு ஸ்திரத்தன்மை காணப்பட்டது. அதென்ஸ் வர்த்தக ரீதியாகப் பலம் பெற, ஸ்பார்ட்டா திறம்பட இயங்கும் இராணுவ இயந்திரமாக விளங்கியது. இவ்விரண்டு நகரங்களும் ஏனைய குறுநிலங்களை விட மேலோங்கி நின்றன.

ஒலிம்பிக் தேசம் 2 (ஒ.தே 1)

சைக்ளேட்ஸ் நாகரிகம்

இந்நாகரிகத்தின் வரலாறு (தமிழ்ச்சங்கத்தைப் போன்று) 3 காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதல்(கிமு 3000 - 2000), இடை(கிமு 2000 - 1500), கடை(கிமு 1500 - 1100).இந்நாகரிகத்தினர் உலகிற்கு விட்டுச் சென்ற சொத்துகளில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிப்பன பரிஸ் மார்பிளிலான சைக்ளேட் சிற்றுருவங்கள். இச்சிற்றுருவங்கள் மட்டுமல்லாது வெண்கலம், எரிமலைக் குழம்பிலிருந்து பெறப்படும் ஒருவகைக் கல்- இவற்றாலான ஆயுதங்கள், தங்கநகைகள், கல் & களிச் சாடிகள் சட்டிகள் போன்றவற்றையும் இக்காலத்திற்குரிய எச்சங்களிலிருந்து நாம் காணலாம். தேர்ச்சி பெற்ற மாலுமிகளான சைக்ளேட்ஸ் நாகரிகத்தினர் மைலோஸ், தேரா(தீரா)(தற்போதைய சன்டோரினி) நகரங்களை மையமாகக் கொண்ட மிகவும் செழிப்பானதோர் கடல்சார் வாணிபத்தை நடத்தினர். அவர்கள் தமது ஏற்றுமதிப் பொருட்களை ஆசியாமைனர், ஐரோப்பா, வட ஆபிரிக்கா,கிரீட், மற்றும் கிரேக்கப் பெருநிலம் ஆகியவற்றிற்கு அனுப்பினர். இவர்கள் ஏஜியன், அயனியன் கடற் துறைமுகங்களை தம் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களாக கொண்டிருந்தனர். மேலும் இத்தாலி, ஸ்பெயின் போன்ற மேற்கு சந்தைகளுக்குரிய கடல்வழிப்பாதையை பினீஷியர்கள், மினோஅர்களுக்கு முன்னரே பயன்படுத்தினர். மினொஅன், மைசீனியன் நாகரிகங்களின் பாதிப்பு இந்நாகரிகத்தில் காணப்பட்டது. தேராவில் எற்பட்ட எரிமலை வெடிப்பினால் இந்நாகரிகம் அழிவுற்றது என வரலாற்றாசிரியர்கள் நினைக்கின்றனர். இந்த எரிமலை வெடிப்பு என்றுமில்லாத அளவுக்கு பேரழிவை உண்டாக்கியதொன்றாகக் கருதப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட தேரா, காணாமல் போனதாகக் கருதப்படும் "அட்லான்டிஸ்" இன் தலைநகரமாக நம்பப்படுகிறது.

மினோஅன்
கிரீட்டின் மினோஅன் நாகரிகம் கிழக்கிலிருந்த எகிப்திய, மொசப்பொத்தேமிய(ஈராக்) நாகரிகங்களின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. இதுவரை ஐரோப்பாவிற் காணப்பட்ட எந்த ஒரு நாகரிகத்தையும் விட சிறந்ததாக விளங்கியது. சைக்ளேட்ஸ் நாகரிகத்தைப் போன்றே இத்ன் வரலாற்றையும் தொல்பொருளாராய்ச்சியாளர் 3 காலப்பகுதிகளாகப் பிரிக்கின்றனர். முதல் (கிமு 3000- 2100), இடை(கிமு 2100- 1500), கடை(கிமு 1500- 1100). முதல்(கிமு 3000- 2100) காலகட்டத்தில் நியோலித்திக் வாழ்க்கை முறையின் பல அம்சங்கள் இன்னும் புழக்கத்தில் இருந்தன. படிப்படியாக கிட்டத்தட்ட கிமு 2500ம் ஆண்டளவில் மக்கள், நோசோஸ்சை ஆண்ட மினோஸ் என்ப்படும் புராண அரசனின் பெயரால் அறியப்பட்ட தனித்தன்மை வாய்ந்ததொரு நாகரிகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இடைக்காலத்தை(கிமு 2500 - 1500) மினோஅன் பொற்காலம் எனலாம். அப்போது அவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடைய மட்பாண்டங்கள், உலோகவேலைகள், என்பனவற்றை தமது தொழிற்திறமை, கற்பனை என்பனவற்றை மூலமாகக் கொண்டு தயாரித்தனர். தனது இறுதிக்காலத்தில் வர்த்தகரீதியாகவும் இராணுவரீதியாகவும் வீழ்ச்சியுற்றது. இதற்குக் காரணமாயிருந்தது கிரேக்கப்பெருநிலத்தைச் சேர்ந்த மைசீனிய நாகரிகத்தின் வளர்ச்சியாகும். டோரியன் ஆக்கிரமிப்பாளர்களும், இயற்கை அனர்த்தங்களும் கிரீட் தீவைச் சூறையாடி அதன் திடீர் அழிவுக்குக் காரணமாயின. சைக்ளேட்ஸ் நாகரிகத்தினரைப் போலவேஇவர்களும் சிறந்த கடல் வல்லரசாக விளங்கினர். பினீஷியர்கள், கிரேக்கர்களுக்கு இவர்களே கடல்துறை முன்னோடிகள். இவர்களது பொருட்களும் மத்தியதரைக்கடற் பிரதேசத்தை தமது சந்தையாக கொண்டிருந்தன. எகிப்தியர்களால் மிகவும் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட polychrome கமரெஸ் பாண்டங்களின் உற்பத்தி இடைக்காலத்தில் செழித்தது. கிமு 1700ம் ஆண்டளவில் நொசொஸ், ஃபீஸ்டொஸ், மாலியா, சேக்ரோஸ் எனும் இடங்களீல் பெரும் பூமியத்திர்ச்சி ஏற்பட்டது. இதனால் அழிந்த அரண்மனைகளை மீளக்கட்டும் போது அவற்றை ஒரு சிக்கலான கட்டமைப்பில் பல இரகசியப்பாதைகள், அடுக்குமாடிகள் உடையதாயும், அரச புரங்கள், ஊழியர் தங்குமிடம், வரவேற்புக்கூடங்கள், களஞ்சிய அறைகள், பட்டறைகள் என்பனவற்றுடன் உயர்தரமான, முன்னேற்றமடைந்த கழிவுநீர் அகற்றுவதற்கான கால்வாய் கட்டுமானமும் கட்டப்பட்டது. மினோஅன் ஈரச்சுதை(fresco) ஓவியங்கள் இவ்வரண்மனைகளின் உட்புறங்களை அலங்கரித்தன(இவற்றை தற்போது இராக்லியொன் தொல்பொருளாராய்ச்சி அருங்காட்சியகத்தில் காணலாம்). ஈரச்சுதை ஓவியங்கள் சாதாரணர் வீட்டிலும் காணப்பட்டன. இவ் ஓவியங்களில் சமய ஊர்வலங்கள், விளையாட்டுகள், எருதுச்சண்டை, தாவரங்கள், கடல் என்பன இடம்பெற்றன. இந்நாகரிகத்தினர் வாழ்வில், இயற்கையில் கொண்டிருந்த விருப்பை, ஈடுபாட்டைவெளிப்படுத்துவதிலும் மகிழ்ச்சியான, அமைதியான மக்கள் என்பதைக் காட்டுவதிலும் இந்த ஓவியங்கள் முக்கிய பங்கு வக்கின்றன. மினொஅன் நாகரிகத்தினர் கல்வியறிவுடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களுடைய ஆரம்ப எழுத்து வடிவம் எகிப்திய 'ஹைரோகிளிஃப்' ஐ ஒத்திருந்தது. பின்னர் கோட்டு வடிவ எழுத்திற்கு முன்னேறினர். இதனை தொல்பொருளாய்வாளர் Linear A என அழைக்கின்றனர். இவ் எழுத்து வடிவம் இன்னும் decipher பண்ணப்படவில்லை. இந்த எழுத்து வியாபார ஒப்பந்தங்கள், கொடுக்கல்வாங்கல்கள், அரச களஞ்சியத்திலிருந்த பொருட்களின் பட்டியல் என்பனவற்றை குறித்து வைக்க மட்டுமே பயன்பட்டது எனவும் தனிமனித கருத்துக்கள் இவ்வெழுத்துருவில் பதியப்படவில்லை எனவும் கருதப்படுகிறது. இந்நாகரிகத்தின் கிமு1500க்குப் பின்னான அழிவு மைசீனிய ஆக்கிரமிப்பாளரால் மட்டுமன்றி சைக்ளேட்ஸ் தீவுகளில் ஒன்றான தேராவில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் தூண்டப்பட்டு ஏற்பட்ட பூமியதிர்ச்சி தன்பங்கிற்கு உருவாக்கிய பேரலைகளால் ஏற்பட்டதும் என வரலாற்றாசியர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

மைசீனியர்
மினோஅன் நாகரிகத்தின் வீழ்ச்சியும் மைசீனிய நாகரிகத்தின் அசுர வளர்ச்சியும் சமகாலத்தில் நடந்துள்ளன. கிமு 1900- 1100 வரை ஆயுளை கொண்டிருந்த மைசீனிய நாகரிகத்தின் உச்சகட்டமாக பொற்காலமாக கிமு1500- 1200 வரையான காலத்தைச் சொல்லலாம். இந்நாகரிகத்தின் பெயர்க் காரணம் மைசினீ எனப்படும் புராதன நகரம். ஒரு பொது ஆட்சியாளரின் கீழ் அமைதியாக இருந்ததை குறிப்பதாக நகரங்களை சுற்றி மதில்களோ சுவர்களோ அற்ற மினொஅர்களின் அரசாங்கத்தைப் போலன்றி மைசீனிய நாகரிகத்தில் பல சுதந்திர குறு நில ஆட்சிகள் காணப்பட்டன. கொரிந்த், பைலோஸ், திரைன்ஸ் இவற்றுடன் பலம்மிக்க மைசினீயும் இச்சுதந்திர குறுநிலங்களுக்குள் சில. இலகுவில் தற்காத்துக் கொள்ளக்கூடியதான மலையுச்சிகளிலே மதிலாற் சூழப்பட்ட அரண்மனைகள் காணப்பட்டன. மைசீனியர்களின் முதுசொம் தங்கநகைகள், அழகுக்கலைப் பொருட்கள் என்பன. இவற்றை தற்போது அதென்ஸிலுள்ள தொல்பொருளாராய்ச்சி அருங்காட்சியத்தில் காணலாம். இவர்களுடைய எழுத்து Linear B என அறியப்படுகிறது. இதனை decipher பண்ணிய மொழி ஆய்வாளர்களால் கிரேக்க மொழியின் ஆரம்ப வடிவம் என இது அறியப்பட்டுள்ளது. கிரேக்கக் கடவுளரின் முன்னோடிகளை இம்மக்கள் வணங்கியுள்ளனர். போர்வீரராய் விளங்கிய இந்நாகரிகத்தினர் மறுபிறப்பில் நம்பிக்கை உடையவராய் இருந்தனர். கிமு 1500ம் ஆண்டளவில் மினொஅன் இடங்கள் அழிக்கப்படுகையில் மைசீனியர்களும் ஒரு சில இடங்களைத் தாக்கியுள்ளனர். மைசீனிய குறுநிலங்கள் சேர்ந்து ட்ரோயை எதிர்த்துப் போர் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது. மைசீனிய நாகரிகத்தின் தாக்கம் கிரீட்டையும் தாண்டி எகிப்து, மொசப்பொதேமியா, இத்தாலி வரை சென்றிருந்தது என்பதற்கு அவ்விடங்களில் தொல்பொருளாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சான்று பகர்கின்றன. இந்த மைசீனிய நாகரிகம் இத்தாலி, லிபியா, அருகேயிருந்த கிழக்குப் பிரதேசங்கள் என்பனவற்றிற்குப் பரவியது. உள்நாட்டுப் பூசல்களாலும் டோரியர்களின் கிமு1100ம் ஆண்டளவிலான படையெடுப்பினாலும் இந்நாகரிகம் அழிவுற்றது. இதன் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏஜியன் தீவுகள், சைப்ரஸ் மற்றும் லிபியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

ஒலிம்பிக் தேசம் 1

கிரேக்க வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.பரந்த கிரேக்கத்தின் பல பகுதிகளிலும் 1.5 - 2 மில்லியன் வருடத்திற்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை தொல்பொருளாராய்ச்சி மூலம் அறியக் கிடைக்கின்றது. பெட்ரலோனா சல்கிடிகியில் (நாக்கு சுளுக்குதா?) கண்டெடுக்கப் பட்டதைப் போன்று fossilized மண்டையோடுகள், வீட்டுப்பாவனைப் பொருட்களின் மிச்சங்கள், நகைகள், பல்வேறு உலோகங்களினாலான கலைப் பொருட்கள் என்பன தொல்பொருள் ஆராய்ச்சியாளரினால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை கற்காலத்திலிருந்து கிரேக்கம் அடைந்த பண்பாட்டு வளர்ச்சிக்கான சாட்சிகளாகக் கருதப்படுகின்றன. நியோலித்திக் காலப் பகுதியில் (கி.மு 6800 - 3200) நிரந்தரக் குடியேற்றங்கள் கிரேக்கத்தில் அமையப்பெற்றன. இவை கால்நடை வளர்ப்பு, விவசாயம், பண்டமாற்று போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட சிறந்த பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனவாம். கலையும் முக்கிய இடம் பெற்றிருந்தது. தொல்பொருளாராய்ச்சியின் போது அறியப்பட்ட/பெறப்பட்ட கட்டடக்கலையின் சிறந்த படைப்புகளின் இடிபாடுகள், கல்லறைகள், மனித்/மிருக உருவச்சிலைகள், நகைகள், நாணயங்கள், முத்திரைகள் மற்றும் அக்காலத்தில் மக்கள் பாவித்த கருவிகள் போன்றன நியோலித்திக் காலத்து நாகரிகத்திற்குரிய அடையாளங்களாகும். இக்குடியேற்றங்கள் அமைந்திருந்த இடங்களில் தற்போது அடையாளம் கணப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவற்றிலே காலத்தால் முந்தியதாகக் கருதப்படுவது கி.மு 6000 ஐச் சேர்ந்ததாகும். இவற்றுள் பிரபலமானவை தெசெலியாவில் உள்ள செஸ்க்ளோ & டிமினி, கிரீட்டிலுள்ள வெர்னா, அர்கொலிடா, நொசோஸ் என்பன.

கிட்டத்தட்ட கி.மு 3000 அளவில் அண்மையிலிருக்கும் (துருக்கியில்) ஆசியா மைனரிலிருந்து குடி பெயர்ந்த இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் கிரேக்கப் பெருநிலத்தில் கால் பதித்து அங்கிருந்த பழைய நியோலித்திக் மக்களை படிப்படியாக வெற்றி கொண்டனர். இந்தோ-ஐரோப்பியரிடம் காணப்பட்ட வெண்கலம் பற்றிய அறிவு தான் கிரேக்கத்தின் வெண்கல யுகத்திற்கு தோற்றுவாயாக அடையாளம் காணப்படுகிறது. வெண்கலத்தின் அறிமுகம் , ஏனைய உலோகங்கள் பற்றிய அறிவு தொழிநுட்பம் என்பன தேசத்தின் அன்றாட வாழ்க்கை, சமூக ஒழுங்கமைப்பு என்பவற்றில் மாற்றத்திற்கும், மற்றும் வர்த்தகத் தொடர்புகளுக்கும் வித்திட்டன. வெண்கலம் ஆயுதத் தயாரிப்பில் முக்கியமானதாகக் கருதப் பட்டதால் கருங்கடலிலிருந்து தெற்கு ஏஜியன் வரை வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட்டன. இவ்வர்த்தக வலைக்கட்டமைப்பு உலோக வியாபரத்திற்கே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டது. ஏஜியன் கடற்பிரதேசத்தில் மீன்பிடியும் வணிகமுமே பிரதானமாக இருந்தன. இவையிரண்டிற்கும் ஏதுவாக இருந்ததால் கிரேக்க பெருநிலத்தை விட கரையோரப் பிரதேசங்களும் தீவுகளுமே அதிகளவு மக்கள் குடியேற்றத்தைக் கண்டன. இவ்விடங்களே இதன் மூலம் முதலாவது ஐரோப்பிய நாகரிகத்திற்கு வழி கோலின. வெண்கல யுகம் 3 பிரதான நாகரிகங்களுக்கு கருவறையாகியது. அவை: சைக்ளெடிக், மினோஅன், மைசீனியன் என்பன.

வெண்கல யுகத்தில் உலோக வேலைகள், உலோகச் சேர்க்கைகள் பற்றிய அறிவு வளர்ந்து அபிவிருத்தியடைந்து பல துறைகளிலும், முக்கியமாக விவசாயத்துக்குரிய கருவிகள், கலை வடிவங்கள் என்பவற்றில் எழுச்சிமிகு மாற்றங்கள் கொண்டுவந்தது. மேலும் இந்த காலகட்டத்தில் கால்நடை வளர்ப்பு, வர்த்தகம், விவசாயம், உற்பத்திகள் என்பன ஒரு ஒழுங்கிற்குள் வரையறுக்கப்பட்டு கட்டுக்கோப்புடன் வளர்ச்சியடைந்தன. தொழினுட்பத் திறமை, நகர அபிவிருத்தி,வேலைப்பகிர்வு, சமூக அமைப்பு, கலைவளர்ச்சி இவற்றுடன் (ஆரம்பநிலை) நிர்வாக அறிவும் திறமையும் கிரேக்கப் பெருநிலத்தை ஒரு சிறந்த நாகரிகம் உருவாவதற்கான விளைநிலமாக, அந்நாகரிகம் வளர்வதற்கு ஒரு தொட்டிலாக அடையாளப்படுத்தியது. முன்னே குறிப்பிட்டது போல வெண்கல யுகத்தில் 3 பிரதான நாகரிங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் தனித்தனி வழியே சென்று பல்வேறு கட்டங்களைத் தாண்டி வளர்ந்தன.

ஏஜியன் பிரதேசத்தில் செழித்ததும், ட்ரோயிலிருந்த துரோஜன் நாகரிகம், வடகீழ் ஏஜியன் தீவுகள் மற்றும் சைக்ளேட்ஸ் தீவுகளைச் சார்ந்த சைக்ளேட்ஸ் நாகரிகம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டதும், முதலாவதான நாகரிகமாகும். இரண்டாவது கிரீட்டன்/மினோஅன் நாகரிகம். மத்தியகிழக்கு நாடுகளுக்கான கடல்வழிப் பாதையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிரீட் தீவில் நிலை கொண்டிருந்தது.இதன் முக்கிய நகரங்கள் நோசோஸ், ஃபீஸ்டோஸ், ஸேக்ரோஸ் மற்றும் மாலியா என்பன. ( கி.மு 1500ல் மைசீனியரின் கையில் வரும் வரை மத்தியதரைக்கடற் பிரதேசத்தில் கிரீட் கலாச்சாரமும், வாணிபமுமே ஆதிக்கம் செலுத்தின.) மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட மைசீனியன் நாகரிகம் ஹெலனிக் அல்லது ஹெலடிக் எனவும் அறியப்படுகிறது. இந்நாகரிகம் கிரேக்கத்துப் பெருநிலத்திலும், குறிப்பாக பெலோபொனீஸ் குடாநாட்டிலும் செழித்தது. இதனுடைய முக்கிய நகரங்கள் மைசீனி,திரைன்ஸ், பைலோஸ்.


என் பார்வையில் கலை ஒலி மாலை 2004

ATBC எனப்படும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 2ம் ஆண்டு நிறைவு விழாவிற்குச் சென்றிருந்தோம். பதின்வயதினரின் கவியரங்கு (யார் எழுதி கொடுத்தார்களோ..நல்லதொரு முயற்சி. அதற்குப் பிறகு வைத்தார்கள் பாருங்கள் ஒரு நடனம்..Fusion Dance என்ற பெயரில் பழைய பாட்டுகளுக்கு (கிட்டத்தட்ட 30) சிறுவர்களைக் கொண்டு நவீன நடனம். முதலாம்/இரண்டாம் பாட்டு..சரி.. பார்க்க இந்த மாதிரி நடனம் வித்தியாசமாகவும் சின்னப்பிள்ளைகள் செய்தது cute ஆகவும் இருந்தது. பிறகு அடுத்தடுத்து 8/9 பாட்டுகள். ஒன்றிரண்டு புதிய பாடல்களுக்கு ஆடினாலும் அதிக நேரம் தொடர்ந்ததால் சலிப்படைய வைத்தது. நல்லதொரு புதுமையான பாணிதான்..அமைக்கும் நடன அசைவுகளை கவனித்து அமைக்க வேண்டும். தமிழ் படங்களில் வரும் suggestive அங்க அசைவுகளும் குலுக்கல்களும் இந்த சிறார்கள் ஆடிய நடனங்களிலும் இடம் பெற்றது வருத்தத்திற்குரிய விடயம்.

ஒரு கடி (ரத்தம் வருமளவுக்கு) நாடகம் இடம் பெற்றது. அதிலே சொன்ன கருத்து எல்லாருடைய மண்டையிலும் ஏறியிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நாடக நீதி : வம்பு பேச/வளர்க்க வேண்டாம்.

இடையிலே பேச இவ்வானொலி அமைப்பின் நிறைவேற்று அங்கத்தவர்(executive member) ஒருவர் வந்தார்; "I am going to speak in English, please bear with me..my Tamil is not good!!" சரி விடுவோம். அவர் படித்தது ஆங்கிலத்திலாக இருக்கலாம்.

இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர்கள் சஹானா தொலைக்காட்சித் தொடரில் வரும் அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்னும் பாடகியை இதற்காகவே இந்தியாவிலிருந்து அழைப்பித்தார்களாம். அவர் பாவம் மெல்பேண், கன்பராவில் இவர்களது நிகழ்ச்சியில் பாடி களைத்து சிட்னிக்கு வந்திருந்தார். கச்சேரியை வாதாபி கணபதிம்மில் தொடங்கி பாரதியாரின் வந்தே மாதரம், காணக் கிடைக்குமோ, கீர்த்தனைகளும் மற்றும் சஹானா தொடரில் வரும் சில பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். நல்லாக காது குளிர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போது விளம்பர இடைவேளையில் உயிரற்ற மின்கலமுடைய ரிமோட் போல் (எத்தனை நாளைக்குத்தான் சிவ பூசையில் கரடியாய் ..) தொகுப்பாளர் வந்து "குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்"(அதெல்லாம் எதுக்கு..நாங்க வேண்டாமென்றாலும் எப்பிடியோ அறுக்கத்தான் போறீங்க..)"கலைஞர்களை கௌரவிப்பதற்கு --- அவர்களை அழைக்கிறோம்". வந்தார்கள்.பொன்னாடை போர்த்தினார்கள். அத்தோடு விட்டிருக்கலாம். "விழா ஒருங்கிணைப்பாளர் XXX அவர்களை சில வார்த்தைகள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்". வந்தார் திருவாளர்XXX. "இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்து, வருகை தந்திருக்கும் திருமதி அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கு எமது நன்றிகள்" என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லி பிறகு ஒரு முத்தொன்றை உதிர்த்தார்! (அவருக்கு அன்றைக்கு constipation of the mind and diohorrea of the mouth என நினைக்கிறேன்.) "இந்த ப்ரொக்ரம் க்கு இவவை கூப்பிட்டதில் $1000 டெலிபோன் பில் துண்டு". பார்வையாளரில் சிலர் சிரித்தனர். அத்தோடு (foot in the mouth என்று உணர்ந்து) வாயை மூடி கொள்வோம் என்றில்லை...பார்வையாளர் சிரித்தது இன்னும் தூண்டி விட்டதோ என்னவோ..அடுத்த முத்தை உதிர்த்தார் " நாங்க தொலைபேசில ப்ரொக்ராம் விஷயங்கள் மட்டுந்தான் கதைச்சனாங்க"..இப்போது சனம் கொல்லென்று சிரித்து வைத்தது. பாடகிக்கோ முகத்தில் கண நேர மாற்றம். சுதாரித்துக் கொண்டவர் ஒப்புக்கு சிரித்து வைத்தார். இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுக்கள் தேவையேயில்லை. பேச முதல் யோசிப்பது அவசியம். இனிமேல் இவர்கள் இந்தியாவுக்கே போய் அழைத்தாலும் அனுராதா வரமாட்டார்.

தொகுப்பாளர் வந்து "தமிழ் பாட்டுக்கள் குறைவாக இருப்பதையிட்டு ATBC தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது" என்றார். என்ன என்று பார்த்தால் பாடகியிடம் சிலர் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட சில பாடல்களுக்கான வேண்டுகோள் (request) விடுத்தபடியால் தமிழ்ப்பாட்டுக்கள் குறைந்து விட்டதாம் என்று கவலைப்பட்டுக் கொண்டார். இவர்களது குறுக்கீடு முடிந்ததும் பாடகி ஒரு பாடல் பாடி விட்டு " உங்க எல்லாருக்கும் நாளைக்கு working day னு தெரியும் அதனால கச்சேரி இன்னும் 8 நிமிஷத்துல நிறைவடையும்" என்று சொல்லி மங்களம் பாடி முடித்து விட்டார். அனுராதா கிருஷ்ணமூர்த்தி வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவரது சினம் புரிந்தது. கடைசியாய் தொகுப்பாளர் வந்து சொன்னார் "தமிழை வளர்க்க தமிழருடன் தமிழில் பேசுவோம்"

ஒரே ஒரு கேள்வி ..தொகுப்பாளரை கேட்கணும்..உங்கள் நிறைவேற்று அங்கத்தவர் தமிழருடன் தமிழில் பேசவில்லையே?

காவல்

ஒருமுறை உறவினர் வீட்டுக்குச் செல்ல புறப்பட்டு, பேருந்திலிருந்து இறங்கும் போது இருட்டிவிட்டது. தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதியால் 3/4 நிமிடம் நடந்தால் அவர்கள் தெரு வரும். இறங்கி நடக்க முற்படுகையில் தான் அதைக் கவனித்தேன் - கறுப்புமில்லாத பழுப்புமில்லாத ஒரு நிறத்தில், வீதி மூலையில் நின்றது. நான் நடக்க ஆரம்பித்ததும் என் பின்னே ஓடிவந்து, கூடவே நடக்க ஆரம்பித்தது. இந்த உயிரினம் என்றால் நான் எப்போதும் கொஞ்சம் எட்டியே இருப்பேன்.(ஹி..ஹி! சின்ன வயது அனுபவம்தான் காரணம்) வலப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தது ஒரு வினாடி நின்று, பிறகு இடப்பக்கம் வந்து நடக்கத்தொடங்கியது. நடக்க நடக்க பத்தடிக்கொரு தரம் ஒரு கணம் நிற்பதும், நடக்கும் பக்கத்தை மாற்றி நடப்பதுமாக...அதன் 'நட'வடிக்கை. ஏன் என்னுடன் கூடவே வருகிறது என்று விளங்காமல் அதனுடன் "எனக்கு நாய்களெண்டா பெரிய விருப்பம் எண்டு இல்ல..அதோட கொஞ்சம் பயமும் இருக்கு. நீ ஏன் என்னோடையே வாறாய்?" என்றும் வேறு பலதும் கதைத்துக் கொண்டே நடந்தேன்.(அன்றைக்கு யாராவது பார்த்திருந்தால் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள்!)

என் பேச்சை(!?) அது கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..தன் பாட்டுக்கு நிற்பதும் பக்கம் மாறுவதுமாய் தொடர்ந்தது. இந்த தெருவிலிருந்து பிரியும் ஒரு ஒழுங்கையிலுள்ள 4 வீடுகளில் ஒன்று தான் உறவினர் வீடு. அவ் ஒழுங்கை பிரியும் இடத்திற்கு வந்ததும் நாய் நின்று விட்டது. இனி பத்திரமாய் போய் விடுவாள், துணை தேவையில்லை என்று நினைத்ததோ என்னவோ.. மேற்கொண்டு என்னுடன் வரவில்லை. நான் வீட்டுப் படலையடியில் நின்று திரும்பிப் பார்த்த போது நாய் அங்கிருக்கவில்லை. அங்காலே எங்காவது போயிருக்கலாம்.

என் சந்தேகங்கள்:-

  1. ஏன் வலது-இடது-வலது என்று பக்கம் மாறி மாறி நடந்தது?
  2. ஏன் ஒழுங்கைக்குள் நாய் வரவில்லை? (ஒருவேளை அவ் ஒழுங்கையில் இருப்பவர்கள் யாராவது அதற்கு கல்லெறிந்திருப்பார்களோ?)
  3. ஒருவருக்கு இப்படி நடப்பதற்கான சாத்தியத்தின் நிகழ்தகவு என்ன?( எல்லாம் நான் 1/1000, 1/100000 என்றெல்லாம் சொல்லி பீத்திக் கொள்ளத்தான்..ஹி..ஹி..ஹி!!!!!)
 
பி.கு: இதை நான் மலேசியாவுக்கு படிக்கப் போயிருந்த என் நண்பிக்கு எழுதினேன். அவளிடமிருந்து வந்த பதில் மடலில் (என் கடிதம் கிடைத்து சில நாட்களில்) தனக்கும் ஒரு நாய் துணை வந்ததாகக் கூறியிருந்தாள்.(weird!)

வாங்க..நாட்டுக்கே முன்னுதாரணம் ஆகலாம்

சொந்தக்கார அண்ணனொருவர் சத்தமில்லாமல் 3ம் முறையாக மக்கள் தொகையை உயர்த்திவிட்டிருக்கிறார். அதுக்கென்ன இப்ப என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அவருக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள்தான், 3 தனித்தனிப் பிரசவங்களில் 3 பிள்ளைகள். மனைவியின் உடல்நலம் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது "3ம் குட்டி போட்டாச்சு, அடுத்ததுக்கு plan பண்ணனும்" என்று சாதனையாய்(!?) பேசுகிறார். இந்த அண்ணா வீட்டில் 8 பேர். தன் தாய்தந்தையின் record ஐ உடைப்பது தான் இவரது குறிக்கோள்! கல்யாணமாகிய புதிதில் நாங்களுமிருக்கும் போது மனைவியிடம் இதை சொன்னார்..அந்த அப்பாவிப் பெண் சும்மா புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தா.  சாதனை முறியடிக்கிறாராம்...சாதிப்பதற்கு வேறு ஒன்றுமே இல்லையா? இவரை நினைத்தால் ஒருபக்கம் கோபமாகவும் மறுபக்கம் (அட மடையா! என்று) மனவருத்தமாகவும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பது போல் பிரசவத்தின் போது கணவனும் கூடவே இருக்க வேண்டும் என்பதை எம்மூர்களிலும் செயலுக்குக் கொண்டு வந்தால் தான் இப்படிப் பட்டவர்களுக்கு பிரசவத்தின் extreme விளங்கும்.

குறைந்த பட்சம் தனியார் வைத்தியசாலைகளிலாவது இதை செயல்படுத்த முனையலாம். உங்கள் குழந்தையை இந்த உலகுக்கு வரவேற்கும் முதலாவது ஆளாய் இருங்கள் என்ற range ல் ஏதாவது catchy யாகச் சொல்லி ஒரு கணவனுக்கு ஆசையைத் தூண்டி விட்டால், அவனுக்கு மனைவியின் அருகேயிருந்து தன் குழந்தையின் பிறப்பைப் பார்க்க ஆசை வரும், பிரசவத்தின் போது மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையை பெற்றுக் கொள்வான். கொஞ்சமாக தன் நண்பர்களிடையே "என் குழந்தை பிறந்த போது நான் தான் முதலில் தூக்கினேன்..பார்த்தேன்" என்றெல்லாம் சொல்லிக்கொள்கையில் நண்பர்களும் அவன் முன்னுதாரணத்தைப் பின்பற்ற சந்தர்ப்பம் உள்ளது. இது அப்படியே பரவி fashion ஆக மாறிவிட்டால் (கனவு காண்பது பிழையா சொல்லுங்க?) "எங்கம்மா 8 பேரை பெத்தா..நீ எனக்கு 10 பெற்றுக் கொடு" என்கிற மடமைகள் இல்லாமல் போகும்.

பி.கு: இதை வாசிக்கும் ஆண்களில் யார் (இலங்கையில், இந்தியாவில் மற்றும் எங்கு பிரசவத்தின் போது கணவன் கூடவே இருக்கும் வழக்கம் இல்லையோ அந்த நாடுகளில்) பிள்ளையைப் பெறும் போது,  மனைவியுடன் கூடவேயிருந்து உங்கள் குழந்தையை வரவேற்கப் போகிறீர்கள் என்பதை(வைத்தியர் கேட்க முதல் நீங்களாகவே) வைத்தியரிடம் சொல்லி, செயலிலும் காட்டி (நாட்டுக்கே) முன்னுதாரணமாகப் போகிறீர்கள்? 
 

எனக்கு மட்டுமா இப்படி?

பாலர் பாடசாலையில் படிக்கும் போது நானும் தோழியும் சரியான குழப்படி.எப்போதும் ஒன்றாகத் தான் திரிவோம். ஒரு நாள் கையைக் கோர்த்துக் கொண்டு ஓடும் போது சாணியில் கால் வைத்து, சறுக்கி விழுந்து உடுப்பெல்லாம் அழுக்காகி விட்டது.
மேல் கூறினதை நான் எத்தனையோ முறை பலருக்குச் சொல்லியிருக்கிறேன்.எப்போது சொன்னாலும் உருவாக்கிச் சொல்லுகிற(ஏன் அப்பிடி இட்டுக்கட்டி/கற்பனை செய்து சொல்லுகிறேன் என்று தெரியாமலே!!) மாதிரி ஒரு உணர்வு. இந்தத் தோழி கொழும்பு வந்த போது எங்கள் வீட்டிற் தான் தங்கியிருந்தா. ஒருநாள்  என் "கதை"யை யாருக்கோ நான் அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தேன். தோழி ஆச்சரியம் மேலிட "உமக்கு அது இன்னும் ஞாபகமிருக்காடா" என்று கேட்டாள். அப்போது தான் உண்மையாகவே நடந்ததைத் தான் நான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன்..கற்பனையில் உருவாகினது அல்ல என்று எனக்கு மண்டையில் உறைத்தது. ஆனாலும் எனக்கு சம்பவம் நடந்த ஞாபகம் இல்லை.ஆழ் மனத்தில் சேகரிக்கப்பட்டுள்ள கணக்கற்ற ஞாபகங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கிறதா? கதையாக வெளிவரத் தூண்டிய காரணி என்ன? யாராவது உளவியல் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்த முடியுமா? யாருக்காவது இதைப்போன்ற அனுபவம் உண்டா?(அல்லது வழமையாய் என் நண்பர் குழாம்  சொல்வது போல "அது உனக்கு மட்டும் தான் இப்பிடியெல்லாம் நடக்கும்" ஆ? )  :O/


பெட்டகம்