பார்வை

சின்ன வயதில் அம்மா அப்பா, ஆசிரியர்கள் என்று தொடங்கி மனதுக்குப்
பிடித்தவர்களை நம்முள்ளத்திலே மிக உயர்ந்த ஒரு அரியாசனம் போட்டு அதில் அமர்த்தி விடுகிறோம்.

அவர்களுக்குத் தெரியாததோ, செய்ய முடியாததோ ஒன்றுமேயில்லை என்ற அளவில் இருக்கும் அவர்கள் மீதான நம் கண்மூடித்தனமான நம்பிக்கை. யாராவது இவர்களைப்பற்றி - இருக்கிற நம்பிக்கையை சிதைக்கிற மாதிரி -
எதிர்க்கருத்துச் சொன்னார்களோ தொலைந்தார்கள். வளர்ச்சிதான் எம்மிலும்,
சுற்றியிருப்பவர்கள் & சூழல் பற்றிய எம் பார்வையிலும் எத்துணை
மாற்றத்தைக் கொண்டு வருகிறது! வளர வளர "அவர்களுக்கு எல்லாம் தெரியும் / இயலும்" என்கிற அசைக்க முடியாத(தாகக் கருதப்பட்ட) நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கும். ஆனாலும் அது எப்போதும் முழுதாகச் சிதைவதில்லை.

நாம் போட்டுக் கொடுத்த அரியாசனத்தில் தான் இன்னும் வீற்றிருப்பார்கள்.ஆனால் எமது பார்வை முதிர்ச்சியடைய அடைய, அந்த
அரியாசனத்தின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து வருவது போலத் தோன்றும். அவர்களிலிருந்த அதே அன்பும் மதிப்பும் ஆரம்பகாலப் பிரமிப்பின்
& சிறுபிள்ளை நம்பிக்கையில் கொஞ்சத்தோடும் ஒரு ஓரத்தில் இன்னும்
இருக்கும். எட்டா உயரத்திலிருப்பவர் என்று அகலக்கண் விரித்துப்பார்க்கிற
அந்தப் பார்வை போய் எம்மைப்போலவே பார்க்கப்படும் காலம் வரும். அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடுகள் கொள்கைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் - இவற்றையெல்லாம் சீர்தூக்கி நாம் பார்க்கத் தொடங்குவோம்.

அப்படி நாம் பார்க்க வசதியாக அவர்களும் வாழ்ந்து வைத்திருப்பார்கள். ஏற்ற
இறக்கங்கள், எடுக்கப்பட்ட பலவிதமான முடிவுகளும், காரணங்களும்,
நம்பிக்கைகளும், பெற்றவையும் இழந்தவையும், ஏமாற்றங்கள்
எதிர்பார்ப்புகளுமென்று அங்கே ஒரு வாழ்க்கை, தொடர்ந்து கொண்டிருக்கும்
ஒரு இன்னிசைக்கச்சேரியைப்போல அரங்கேறிக் கொண்டிருக்கும்.

வாழ்க்கையை ஒரு விதமாகக் கணக்குப் போட நாம் கற்றிருப்போம்; அவர்கள் கற்றதும் செயல்படுத்தியதும் வித்தியாசமாக இருக்கும். அவர்களின் செயல்கள் காணும் போது மனம் சிலவேளைகளில் பெருமிதமும் மகிழ்ச்சியும், நன்றியுணர்வும், மற்றவேளைகளில் சலிப்பும் கசப்பும் ஆத்திரமும் என்று ஒவ்வொரு உணர்வாகக் கிளை தாவும்.

அவர்களும் மனிதர்கள்தான் என்று உணரக் காலம் தேவைப்படுகிறது. உணர்ந்தாலும் மனதில் ஏற்கெனவே அரியாசனத்தில் இருத்திய உருவத்துடன் ஒப்பிட்டு உண்மையை ஏற்க மனம் தயங்குகிறது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும், மனதில் சின்னதொரு ஏமாற்றம் தலைகாட்டுகிறது.

விம்பங்களின்றிப் பார்க்கும் கலையை நான் இன்னும் கற்கவில்லை!

இருவர் கேட்டவை.

கொஞ்ச நாளைக்கு முன் ஒரு பதிவு போட்டு, கேள்வி கேட்கச் சொல்லிக்
கேட்டிருந்தேன். எங்கள் வலைப்பதிவர்கள் 1) எல்லாம் விளங்கியவராய் இருக்க வேண்டும் அல்லது ஒன்றுமே தெரியாதவராய் இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த இரண்டு சந்தர்ப்பத்திலேயும் தான் கேள்விகள் எழுமாம் என்று எங்கட கணக்கு வாத்தி சொல்லியிருக்கிறார். வலைப்பதிவர்களை (நானாவே) முதலாம் வகைக்குள்ள வரிசைப்படுத்துவம் என்று நினைச்சுக் கொண்டிருக்க, 3 பேர் வந்தாங்கள், கேள்வி கேட்கப் போறமெண்டு. அதிலயும் ஒராள் நான் உதாரணத்துக்குக் கேட்டிருந்த கேள்விய, திரும்ப என்னட்டயே கேட்கிறார். அதுக்குப் பதில் சொல்லப் போவதில்லை, கேட்டிருக்கிற எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லப் போறதில்ல. ..ஏனா? அந்தப் பதிவில போட்ட நிபந்தனைகளை பாக்கல்லயா?

சரி முதலாவதா "எடுத்துக்" கொள்ளும் கேள்விகள் இரண்டும் பொடிச்சி கேட்டது.

ஷ்ரேயா என்டது சொந்தப்பெயரா? நான் மட்டக்களப்பு இருதயபுரத்தைச்
சேர்ந்தனானா என்டு கேட்கிறா. இல்லை பொடிச்சி. ஷ்ரேயா என்டுறது
சொந்தப்பெயரில்லை. நான் மட்டக்களப்புத்தான் (அதோட சேர்த்து
யாழ்ப்பாணமுந்தான்) ஆனால் இருதயபுரமில்லை

அடுத்த கேள்விகளெல்லாம் கேட்டது சுதர்சன் கோபால். இவர் கனக்கக்
கேட்டிருக்கிறார். மொத்தமே 7 கேள்வி (அதில ஒன்று "செல்லாது". மிச்சம் ஆறில 4 இவர் கேட்டா..இப்பிடித்தானே சொல்ல வேணும்?)

என்ன கேட்டவரா? முதல் கேட்டார் ஏன் எனக்கு மழை பிடிக்குமென்டு. சிலது ஏன் பிடிக்குமென்று சொல்ல ஏலாதுதானே.. அதுமாதிரிதான். ஆனா மழையில ரசிக்கிறதே கம்பி கம்பியா எங்கேயிருந்து தொடங்குது என்டு தெரியாம பெய்யிறதைத்தான்

அடுத்த கேள்வி கேட்டார், ஏன் மழையில நனைஞ்சதும் சிலருக்குத் தடிமன்
பிடிக்குதெண்டு. அது பாருங்க சுதர்சன், மழை பெய்யுது என்றால் நம்மில்
அநேகமானாக்கள் என்ன செய்வாங்க? மழையில் நனையாம ஒதுங்கப்பாப்பாங்க, நிறையப்பேர் ஒரே இடத்திலேயே ஒதுங்க நேரிடும் தானே..அப்ப ஏற்கெனவே தடிமன்/இன்ன பிற சுவாசத்தினால ஏற்படுற தொற்றுகள் மற்றவர்களுக்கு பரவுற வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மழையில் கொஞ்சம் நனைந்திருக்கவும் கூடும்..2 நாளையால பக்கத்துல எங்களோட கூடவே மழைக்கு ஒதுங்கினவர் புண்ணியத்தில தடிமன் வந்தால்..மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் கொள்கிறோமாம் என்று அம்மா சொல்லிருக்கிறா.

அடுத்த கேள்வி..செயற்கை மழை எப்பிடி உருவாக்கப்படுது? இந்தக்
கேள்விக்குப் பதில்: செயற்கையாத்தான்!என்னது.. கேட்ட கடைசிக் கேள்விக்கு பதிலைக் காணோமா? முதலாம் பந்தி..கடைசி வரியை நீங்க வாசிப்பீங்களாம்..நான் அப்பிடியே ஓடிருவேனாம்... ;O)

பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I I

பெரியம்மா வீட்டில் எனக்குத் தெரிந்து எப்போதும் ஆடு, மாடு, நாய், பூனை, மைனா, கிளி, கோழி என்று ஒரு விலங்குப் படையே வீட்டில நிற்கும். பெரியப்பா காலமை எழும்பி தேத்தண்ணி குடிச்சிட்டு பலாவிலை குத்தப் போவார். அவரோட நடந்து நடந்து ஆட்டுக்கு கிளிசரியாக் குழை பிடுங்கி, கோழிக்கு தீன் போட்டு வாறது எவ்வளவு சுகம் தெரியுமா!

இப்ப போனால், பெரியம்மா-பெரியப்பா இல்லாத வீட்டில், மாடும் ஒற்றை மைனாவும் ஐந்தாறு கோழிகளும் இரண்டு நாய்களும் இரண்டோ மூன்று ஆடுகளுமே! பலாவிலைகளும் கம்பியில் கோர்க்க ஆளின்றி சும்மா விழுந்து கிடக்கின்றன. :O(

வாசற்படித் தூணில் அல்லது வீட்டின் பின்புறத்திலே கட்டிப் போடப்பட்டிருக்கும் நாய்கள். ஆண்டுக்கு ஒன்றிரண்டு தரம் மட்டுமே எங்களைக் கண்டாலும், ஞாபகம் வைத்திருந்துக்கும். உடம்பில் ஒரு துண்டு சதையையும் கேட்பதில்லை. நல்ல நாய்கள். தேவையான அளவு சாப்பாடு போட்ட பெரியம்மாக்கு ஒரு "ஓ".

அவவின் வீடு வடிவானது. "ட" வடிவில். முன் கூடத்தைத் தாண்டிப் போனால் கூட்டுக்குள்ளிருந்து "ராணி...ராணி" என்று பெரியம்மாவைக் கூப்பிடும் கிளிகள். வேறு சில சொற்களும் அவற்றுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத்தான் மறந்து போய்விட்டது. மைனாக்கள் பேசி அங்கே தான் நான் பார்த்தது. என்ன பேசின என்று கேட்கிறீங்களா? அதை யார் கேட்டது..நான் தான் வீட்டுக்குள்ளே போய் பயணப்பையை வைத்த கையோடு, பெரியம்மாக்கு முத்தம் கொடுத்து வீட்டு ஆட்டுக் குட்டிகளைப் பார்க்க ஒரே ஒட்டமாக ஓடி விடுவேனே! முகம் கழுவு / குளிச்சிட்டு வா - இதெல்லாம் என் காதுக்கு வந்து சேர முதல் காற்றில கரைந்து விடும். அப்படியே விழுந்தாலும் அதை யார் கேட்டது!

அங்கேயிருந்த ஒரு ஆட்டுக்கு என்னைப் பிடிப்பதில்லை. முட்ட வரும். முட்ட வரும் என்று சொல்லத்தான் இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது.

அப்ப எனக்கு 2 - 3 வயது இருக்குமாம். (அதென்னா இருக்கு"மாம்"? நடந்தது எனக்கு ஞாபகமில்லை..வீட்டில எம்மியும் அம்மாவும் சொல்லக் கேட்டது.) ஒரு நாள் வீட்டில சீனி முடிஞ்சிட்டுதாம்/அல்லது முடியிற தறுவாயில இருந்துதாம். வீட்டில எம்மியும் பெரியண்ணாவும் நானும் தானாம் அந்த நேரம் இருந்ததனாங்க. வேற வேலைகளும் வீட்டில இருந்த படியா எம்மி போய் பெரியண்ணாட்ட கேட்டிருக்கிறா கடைக்குப் போய் சீனி வாங்கி
வரச் சொல்லி. அவரும் ஒம் என்று சொன்னாராம். கொஞ்ச நேரத்தால பாத்தா ஆள் இன்னும் வீட்டிலயே புத்தகம் வாசிச்சுக் கொண்டிருந்தாராம்.

எம்மி (எம்மி யாரென்று தெரியாதவர்கள் இங்கே
பார்க்கவும்) சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் "தங்கச்சியப் பாத்துக் கொள்ளு" என்டிட்டு கடைக்கு வெளிக்கிட்டிருக்கிறா. எங்கட ஆள் என்ன செய்தார்...புத்தகம் வாசிக்கிறார். தங்கச்சிக்காரி விளையாடிக் கொண்டிருக்கிறா. புத்தக மன்னன் அதை வாசிச்சு முடிச்சிட்டு நிமிர்ந்தா... "ஞானம்..தங்கச்சிய காணம்!".

வீடெல்லாம் தேடி ..தெருவெல்லாம் தேடிக் களைச்சு பயத்தில வேர்த்து விறுவிறுத்துப் போய் இருக்கிறாராம் எம்மி வரேக்குள்ள. இங்கே இப்பிடிக் களேபரம் ஆகுமென்று தெரியாம திறந்திருந்த படலையால வெளியில போன குட்டி ஷ்ரேயா தத்தக்க பித்தக்க என்று நடந்து போயிருக்கிறா. ஒரு மாடு முட்ட ஆயத்தமா வந்துதாம். தெருவில நின்ற ஒரு ஆள் உடன தூக்கி எடுத்திட்டாராம். ஆரடா பிள்ளை .. தனிய "வீரமா" நடந்து வருது என்று பார்த்ததில அதில நின்ற ஒருவருக்குத் தெரிந்து விட்டது. இது வைத்தியரம்மாட பிள்ளை என்று கண்டு கொண்டதில் வீட்டிலே கொண்டு வந்து விட்டார்களாம். (இல்லாட்டி இன்றைக்கு நட்சத்திரமாக இருந்து இப்படியெல்லாம் எழுதி உங்களை இம்சைப் படுத்தக் கிடைச்சிருக்குமா!) அன்றைக்கு அண்ணாப்பிள்ளையர் நல்லா வாங்கியிருப்பார்! இப்படிக் கூத்துக் காட்டியும், இவரின் "கொதி" வேலையை அப்பாவிடம் போட்டுக் கொடுத்தும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும், அவர் செல்லம்தான்.

சரி..சரி பெரியம்மாவின் ஆடு முட்ட வரும்...ஓடி வந்து விடுவேன். பிறகென்ன.. கோழிகளைத் துரத்துவதும்..தப்பியோட முயற்சிக்கும் பூனையை வலுக்கட்டாயமா தூக்கிக் கொண்டு திரிவதும் என்று மிச்சப் பொழுதுகள் போகும். மிருகங்களோடு கதைப்பது ஒரு அலாதி இன்பம். திருப்பிக் கதைக்க மாட்டா. சில வேளைகளில் ஆசிரியை - மாணவர் விளையாடும் போது "கணக்கு சரியாச் செய்யாத மொக்கு ஆட்டுக் குட்டிக்கு" மெல்லிய குட்டும் விழும். கொஞ்ஞ்ஞ்ஞ்சம் பொறுங்க!!! நான் குட்டினதைப் போய் அம்மாடச் சொல்லியிருக்குமோ ஆட்டுக் குட்டி? அம்மா ஆடு "குட்டினால் முட்டுவேன்" என்று நினைச்சுக் கொண்டுதான் எனக்குக் கிட்ட வந்திருக்க வேணும். :O|


ஆனாலும் எதிர்பார்ப்புகளின்றி அன்பு செலுத்துறதில ஆடு, மாடு, நாய், பூனைகளுக்கு இணையில்லை...என்ன சொல்றீங்க!

அம்மாவுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள அம்மா,

நாம் நலம். அதுபோல் நீங்களும் இருக்கக் கடவுளை வேண்டுகிறேன்.

என்னடா நேற்றுத்தானே தொலைபேசியில் கதைத்தாள்.. இன்றைக்குக் கடிதம் போடுகிறாளே என்று நீங்கள் நினைக்கலாம். கடிதம் போல் வராதுதானே அம்மா. கதைப்பவை மறந்து போகும், எழுத்திலிருப்பவை என்றும் இருக்கும்.

நான் வலைப்பதிகிறேனென உங்களுக்குச் சொல்லியிருக்கக்கூடும். இல்லாவிட்டால் இப்பொது தெரிய வந்திருக்கும். ஒன்றும் பெரிதாய் எழுதிக் கிழிப்பதில்லை. கைக்கு வந்ததைக் கிறுக்குவதுதான். என்னைப்போலவே நிறையப்பேர் வலைப்பதிகிறார்கள். ஒவ்வொரு விதமான எழுத்துகளும் கருத்துகளும் வெளிப்படுகின்றன. அப்படி ஒருவர் இன்றைக்கு அவரது அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அது இங்கே. மனதைக் கனக்கச் செய்த பதிவு. தனது அப்பாவைப் பற்றித் தெரிந்ததாக நினைத்ததெல்லாம் தெரியாததாகவே இருந்திருக்கிறது என்கிறார் அம்மா.

என் நிலைமையும் அப்படித்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் உங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பினேன் தானே..உங்களுக்குப் பிடித்ததாயிருக்க வேண்டுமேயென யோசித்து அவற்றைத் தேடியெடுக்க எனக்குப் பல நாட்கள் சென்றன. அம்மா என்கிற பாத்திரம் தவிர ஒரு பெண்ணாய் சுய விருப்பு வெறுப்புடைய மனிதராய் உங்களைப் பார்த்ததில்லையே நான். அதுதான் பெரிதாய் ஒன்றும் உங்களைப் பற்றிப் தெரியவில்லை.

உங்களை உடனே பார்க்க வேண்டும் போல இருக்கும். ஆனால் முடியாதே... அடுத்த ஆண்டு போகும் போது போய்ப் பார்ப்போம் என்று நினைத்திருந்த பெரியம்மா இறந்த பிறகு, உங்களைப் பார்க்க வேண்டும் என்கிற நினைப்புத் தீவிரமாகியிருக்கிறது. எனக்கும் உங்களுக்கும் வயது போகிறது. உடல்நிலையிலும் நினைவுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட முன்பு இயலுமான அளவு நேரத்தை உங்களுடன் கழிக்க வேண்டும். சின்ன வயதில்
கிடைத்த நேரங்களின் அருமை தெரியவில்லை. எத்தனையோ முறைகள் உங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன். பிழைகளை இப்பத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மன்னித்துவிடுங்கள். அப்பா இல்லாமல் போன பிறகு தனியாய் எங்கள் மூவரையும் வளர்த்தது எவ்வள்வு பெரிய விதயம் என்று இப்ப விளங்குகிறது.

எம்மியினதும் ரீச்சரினதும் இழப்புக்குப் பின் நீங்கள் இன்னும் அமைதியாகி விட்டது போலத் தோன்றுகிறது. உண்மையா? இவர்களிருவரும் தவிர, மாமியைத் தவிர்த்து - நீங்கள் யாருடனும் மனந்திறந்து பேசியதை நான் கண்டதில்லை. சகோதரிகளைப் போன்ற நண்பிகளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. நினைத்த நேரம் மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் இலங்கையிலுள்ள என் தோழிகளையே நான் மிஸ் பண்ணுகிறேன். பொங்கி வரும் உணர்வுகளை, எண்ணங்களை உடனே பகிர்ந்து கொள்ள முடியாமற் போகிற போது மிகவும் தவித்துப் போகிறேன். பகிர விரும்புபவற்றை கொஞ்ச நேரத்திற்கென்றாலும் மனதில் பூட்டி வைத்திருப்பது கடினமான செயலாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் அம்மா?

இங்கே சிட்னிக்கு உங்களைக் கூப்பிட்டுக் கொள்ளலாமே என்று நிறையப் பேர் கேட்டு விட்டார்கள். நானும் உங்களைக் கூப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் எப்போதுமே முழுமனத்தோடல்ல. அங்கே இருக்கும் சுதந்திரம் இங்கே வராதம்மா. நினைத்த நேரம் பேருந்தில் ஏறிப்போய் தியான நிலையத்தில் இருந்து விட்டு வரலாம்..வேலைக்குப் போகலாம், போய் வருகிற வழியில் மரக்கறிக் கடையில் தேவையானதை வாங்கி விட்டு கைப்பையையோ, குடையையோ மறந்து விட்டுவிட்டு வரலாம்!

பிறர் கை எதிர் பாராது தனியே செயற்பட உங்களால் அங்கே முடியும். ஆனால் இங்கே வந்து அப்படியல்ல. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைக்கும் பல பெற்றாரைப் பார்த்திருக்கிறேன். அப்படி நீங்கள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை என்று தோன்றியதாலேயே உங்களைக் கூப்பிடவில்லை. நான் கூப்பிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோருக்குக் கிட்ட இருப்பது பெற்றாரை அம்மா - அப்பா என்கிற பாத்திரத்திலே மட்டுமல்லாமல், தனி மனிதராயும் பார்க்கக் கற்றுக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். என்ன நினைக்கிறீங்க?

முதலெல்லாம் அடிக்கடி "எப்ப வாறாய்" என்று கேட்பீர்கள்" இப்போது கேட்பதில்லையே? ஏன்? கேட்காததும் நல்லதுக்குதானோ...எனக்கும் குற்ற உணர்ச்சி வராது. "இப்ப டிரெக்ட் லைனில கதைக்கிறன்..பிறகு கார்டில எடுக்கிறன்" என்றதுடன் சேர்த்துச் சொல்லும் அவசர 5 - 10 சொற்களும், கடிதங்கள் இல்லாமல் வரும் வாழ்த்து மடல்களுமன்றி அடுத்த முறை இன்னும் நிறைய நேரம் கதைக்க வேண்டும் என நினைப்பதும் வாழ்த்து மடலுடன் 10 வரிக் கடிதமும் இரண்டு படங்களுமாவது அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வாழ்வதும் வேறெதைத்தருமெனக்கு?

வழக்கம் போல அல்லாமல் கடிதம் கொஞ்சம் கனத்துப் போய் விட்டது. உண்மை பேசினதினாலேயோ என்னவோ.. மனப்பளுவை ஏந்தாத ஒரு அன்பான கடிதத்தில் மீண்டும் சந்திப்போம். பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு
அன்பு மகள்

பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் ஒரு நாய், ஒரு பூனை. இவ்வளவும் தான் வளர்கையில் செல்லப்பிராணிகள். அவற்றுக்கும் எனக்குமான தொடர்பை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை எழுதச் சொல்லும் "எனது செல்லப்பிராணி" கட்டுரையின் 5 வசனங்களில் அடக்கி விடலாம். அவ்வளவு நெருக்கம். அதற்காக நாய்/பூனை பிடிக்காதென்றில்லை. பிடிக்கும் என்றுமில்லை. கிட்டே வந்தால்..கடிக்க முயற்சிக்காவிட்டால் தடவிக் கொடுப்பேன்.

எங்கள் பூனை (பெயர் ஞாபகமில்லை..அதனால் இப்போதைக்கு 'பூனை' என்றே வைத்துக் கொள்வோம்.) வீட்டிற்கு வந்தது எப்படி என்று சொல்கிறேன். நாங்கள் இருந்தது அரச உத்தியோகத்தவருக்கென்று ஒதுக்கப்பட்ட மனையொன்றில்.(குவார்ட்டர்ஸ்) பக்கத்தில் ஓரளவு பெரிய காணி. அதற்குள் ஒரு கிணறு(இல்லை..பூனை இதற்குள் இருந்து எடுக்கப்படவில்லை!!) ஏனோ தெரியவில்லை, ஒரு சிறிய (2 அடி X 4 அடி) செவ்வகத் துவாரம் தவிர்த்து கிணற்றின் மேல் புறம் மூடப்பட்டிருக்கும். வழக்கம் போல கிணற்றுவாசிகள்: தவளைகள் & ஒன்றிரண்டு மீன்கள்.கிணற்றிற்கு10 - 15 மீற்றர் தள்ளி ஊர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு. அதற்குப் பக்கத்தில் ஒரு பனை மரம். அப்பாலே 4 அடி எடுத்தால் தெரு. தெருவிலிருந்து வீட்டிற்கு வரும் ஒரு வழி இந்த வெளிநோயளர் பிரிவைத் தாண்டி வருவது. ஒரு நாள் எங்கள் வீட்டுக் கருணைக்கந்தன், பிராணிகளின் உயிர்காப்போன் , போனதொரு பிறவியில் சிபிமன்னனாயிருந்திருக்கக்கூடிய எனது சின்னண்ணா (இதை வாசிச்சா எனக்கு இருக்கு!;O) ) அவ்வழியால் நடந்து வந்துகொண்டிருக்கையில் வழக்கமா எல்லாப் பூனையும் கத்துற மாதிரியே 'மியாவ்..மியாவ்' என்று சத்தம் கேட்டிருக்கிறது. சத்தம் வருகிறது...உருவத்தைக் காணவில்லை. தேடியதில் கண்டு பிடித்தது எங்கே தெரியுமா? பனைமரத்தில்!! அம்மரம் மற்றப் பனைகளோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் குட்டையானது. யாரையோ பிடித்து மரத்திலிருந்து பூனையை இறக்கினார்களாம். வீட்டில் வைத்துப் பராமரித்தார் அண்ணா. அவருக்கு பூனைகள் என்றால் நல்ல விருப்பம் என நினைக்கிறேன். (ஆனால் தவளையைக் கண்டால் வேறே வினையே வேண்டாம்!! கரப்பானைக் கண்டால் (வீராவேசம்(!?) வரும் வரை) நான் செய்வது போல கதிரையிலிருந்து இறங்க மாட்டார்!!) :OD அதுதான் பூனை வந்த கதை.

நாய் இருந்தது என்று சொன்னேன் தானே..நாய் எப்படி வீட்டே வந்தது..யாரேனும் காப்பாற்றினார்களா என்றெல்லாம் தெரியாது. சூரன் என்று பெயர் வைத்திருந்தார்கள் அண்ணாமார். நல்ல முசுப்பாத்தி. ஒருநாள், ஆளுயர நிலைக்கண்ணாடி, இரண்டு இழுப்பறைகள் கொண்ட ஒரு சின்ன தளபாடம்(Dressing table) இருக்கிற அறைக்குள்ளே போய்விட்டது. வெளியே எவ்வளவு கூப்பிட்டும் வரவில்லை. கண்ணாடிக்கு முன்னுக்குப் போய் நின்றது தான் தாமதம் குரைக்க ஆரம்பித்தது. நிறுத்தவே முடியவில்லை. கண்ணாடியை நகங்களால் கீறி வைத்தது. (கண்ணாடியின் வீரத்தழும்புகளை இன்றக்கும் காணலாம்!!).

இவனுக்கு மட்டும் மிருக வைத்தியர் வந்து போவா. பூனையை ஏனென்றும் இல்லை(அதை நாங்க துளசி மாதிரி அக்கறையா ஒன்றும் பார்த்துக்கொள்ளுறதுமில்ல. அது தன்பாட்டுக்குச் சுத்திவிட்டு வந்து போடுறதைச் சாப்பிடும். அடுப்புக்குக் கிட்ட படுத்துக் கிடக்கும்..பிறகு திரும்ப ஊர்சுத்தப் போகும்.) அந்த வைத்தியருக்கு ஒரு கால் போலியோவோ ஏதோ வந்து, கொஞ்சம் சூம்பினது போலிருக்கும். இழுத்து இழுத்துதான் நடப்பா. வடிவான நீட்டுப் பாவாடை(காலை மறைப்பதற்காக?) தான் அணிவா. ஒன்றின் டிசைன் இன்னும் ஞாபகமிருக்கிறது. கடும்நீல நிறப் பின்னணியில் சின்னச்சின்னதாக மயிலிறகு வரைந்திருந்தது. அவவுக்கு வடிவாக இருக்கும்.

சூரன் ஒருநாள் எழும்பக் கஷ்டப்பட்டு அதன் கூட்டுக்குள்ளேயே படுத்துக் கிடந்தது. கண்ணைப் பார்த்தால் கருவிழியில் வெண்படலம் தெரிந்தது. ஆளனுப்பி மிருக வைத்தியரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அவ பார்த்து விட்டுச் சொன்னா இரவு பாம்பு கடித்திருக்கிறதென்று. அன்றைக்கே சூரன் செத்துப் போனான்.

அதற்குப் பிறகு வடிவான மஞ்சள், சாம்பல் நிறங்களில், கோழிக்குஞ்சுகள் 10 வாங்கி வளர்த்தேன். அம்மாவின் "மருந்தக'த்துக்கு வெளியே ஒரு கூடடித்து கம்பி வலை போட்டு பத்துக் குஞ்சையும் குடி வைத்தோம். காலையில் திறந்து விடுவதும், பிறகு பள்ளிக்கூடத்தால் வந்து கொஞ்ச நேரம் விளையாடிக் கூட்டில் அடைப்பதும் (அடைக்க முயற்சிப்பதும்) தான் என் வேலை. நடுவில் தீனி போட்டு, பருந்து கொத்திக் கொண்டு போகாமல், யாரும் களவெடுக்காமல் பார்த்துக் கொள்வது இவ!
ஒருநாள் இரவு யாரோ பத்தையும் களவெடுத்துப் போய் விட்டார்கள். :O( ஒரே அழுகை.

அதுக்குப் பிறகு வீட்டில மிருகங்கள் வளர்க்கவில்லை. ஆனா மிருகங்களோடு விளையாட்டுக்குக் குறைவிருக்கவில்லை.

(தொடரும்)

குறுக்கால போற எழுத்துப் போட்டி



வலைப்பதிவர்களை வைத்து சும்மா ஒரு சின்ன விளையாட்டு. இதை உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை என்று இன்றைக்குத்தான் விளங்கிச்சு. அலுவலகத்தில வேலை செய்யிறதை விட்டிட்டு இதைத்தான் முக்கியமாகச் செய்தனான். விடை காண உதவிக் குறிப்புகள் கீழே:


சரியாக விடை சொல்வோருக்கு ஒரு சிறப்புச் சுட்டி பரிசு! (நெத்திச் சுட்டியெல்லாம் இல்லைங்கோ..இது உங்களை ஒரு வலைப்பதிவுக்கு அழைத்துச் செல்லும்). அப்பிடியென்ன சிறப்பு என்று கேட்கிறீங்களா? (தமிழ்) வலைப்பதிவருக்கு வயது 6.



இடமிருந்து வலமாக:

1அண்டங்காக்கா கொண்டைக்காரி..(ரண்டக்க x 3)...16 பதிவுக்கு சொந்தக்காரி (ரண்டக்க x 3) :o)

4 சினேகிதியின் போட்டிகளின் பரிசு "இவரது" சமையல்

5 செல்ல(செல்வங்கள்)ங்கள் உடையவர்

7 முகத்தை மறைக்கப் போடுவது(திரும்பியுள்ளது)

11 பசு+அலை. குழம்பியுள்ளது.

13 பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராகக் (முதலில்) குரல் கொடுத்தவர்.

14 போனவார நட் - சத்திரம்(<--இது அவரே சொன்னது!) ;O)

16 அலுவலக க்ராபிக்ஸ் டிசைனர் பொய் சொல்கிறார் என்று முறையிடுபவர்.

18 படிக்கப் போறேன் என்று வலைப்பதிவுக்கு கைகாட்டி விட்டா. கொஞ்ச நாள் கவிதைப் போட்டிகள் நடத்தினவ.

19 வலைப்பதியும் ஒரு "தமிழ"னின் அடைமொழி

20 கோடு என்றும் அறியப்படும்

21 "தவம்" செய்து கவிதையெழுதி "சந்தைப்படுத்து"வார்.

22 "நறை"யில் ஒரு துளியில் நடப்புகள் சொல்லிப் போவார்

25 "குமிழி"களுக்கும் "சிதறல்"களுக்கும் சொந்தக்காரர்.

26 வலையில் "தமிழ்மணம்" வீசக் காரணமாயிருப்பவர்.

28 தோழன்(குழம்பியுள்ளார்)

30 இவரது வலைப்பதிவின் தலைப்பின் பொருள் "கடல் அலை"



மேலிருந்து கீழாக:


1 வசந்தனும் இவரும் ஒருவரே என்று மயக்கம் வருவதுண்டு

2 துளசி, இவரது மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னா

3.சக்தி என்னும் மதுவை உண்போமடா என்று கொஞ்ச நாளைக்கு முன் வரை சொல்லிக் கொண்டிருந்தார்

5 கடலுக்குள் தேடியெடுப்பது.(கீழிருந்து மேலாக)

6 பவித்ரா - இப்படியும் அறியப்படுவார்

8 வல்லமை தாராயோ என்கிறார், சீனத்தைப் பற்றி எழுதுகிறார்.

9 நுனிப்புல் வெட்டுகிறார், "விடியல்" என்பது வடமொழியில் இவர் பெயருக்கு அர்த்தம்.

10 "கீர்த்திக்கு" இவரது பெயர் rhyme பண்ணும்

12 பன்மொழி அறிவார். மகர நெடுங்குழைகாதனின் பக்தர்

14 திருவாளர் அநாமதேயம். இவர் எழுதுவது பலசமயங்களில் இலகுவில் புரிவதில்லை.

15 வள்ளல் ஒருவர்

17 மண்டபத்திலே சிவனைக் கண்டு கதைத்தவர்.

18 பத்தி எழுத்தாளினி, கீழிருந்து மேலாக

20 தமிழில்: அறிவு, நிலவு; மலையாளத்தில்: போதும்; சிங்களத்தில்:போதாது

23 நிலவோடு கதைத்த பைத்தியம் (என்று கதை எழுதினார்) ;O)

24 யாழிசைக்கும் வலைப்பதிவர்

27 Mykirukkals என்று கவிதை எழுதுகிறார்

29 விவசாயி.

நட்சத்திரம் பார்க்கலையோ..நட்சத்திரம்!

எழுதுகிறவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது பதிவுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் கவனிப்பு அளிக்கப்படவுமாக என்று "மண்டைக்குள் & பதிவில் சரக்கு உள்ளவர்கள்" வாராவாரம் தமிழ்மண நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெருந்தலைகளெல்லாம் வந்து போகிற இடத்தில, என்னை நட்சத்திரமாக்கி வேடிக்கை பாக்க நினைச்சிருக்கிறாங்க! ம்ம்..வாற சந்தர்ப்பத்தை ஏன் விட? மதி எனக்கு முதலில் அஞ்சல் அனுப்பிக் கேட்ட போது உண்மையான பெயரைச் சொல்ல வேண்டும் என்கிற காரணத்தினாலும் (ஏதோ சாட்சி பாதுகாப்பு திட்டத்துல இருக்கிறவ மாதிரிக் கதைக்கிறா!:O) ) என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாத காரணத்தினாலும் முடியாது என்று சொல்லிவிட்டேன். இந்த முறை, இனிமேல் அடுத்த வாய்ப்பு வருமோ இல்லையோ என்று தெரியாததால் ஓமென்று தலையாட்டிவிட்டேன். இப்பவும் என்ன எழுதப் போகிறேன் என்று தெரியவில்லை.

( "ஐயோ..ஷ்ரேயாவா இ.வா.ந!! யாராரை நட்சத்திரமாக்கிறதெண்டு யோசிக்கிறதில்லையா" என்பவர்கள் மதியை தொடர்பு கொள்ளலாம்!! நீங்க அப்பிடி நினைக்கிறீங்களோ இல்லையோ..எங்கட கணினிக்கே நான் நட்சத்திரமாகிறது பிடிக்கல்ல. படுத்து விட்டது! அப்பாடா! என்றெல்லாம் அவ்வளவு கெதீல மூச்சு விடாதீங்க. இருக்கவே இருக்கு..அலுவலகக் கணினி!!! ) யாரங்கே!!..ஓட முயற்சிக்கிறவங்களையெல்லாம் பிடித்துக் கட்டி வையுங்கள்! ஓட முயற்சிக்காதவர்களுக்கு "க்ருபா" செலவில் கரும்புச்சாறு! ;O)


வலைப்பதியத் தொடங்கின புதிதில் என்னென எழுதலாம் என்று யோசித்த போது, மனதுக்கு வந்தது, நடந்த/கேள்விப்பட்ட சில நகைச்சுவைச் சம்பவங்களை எழுதலாமென்று. ஆனாலும் அதை முசிப்பாத்தியாக எழுதும் கலை இன்னும் எனக்குக் கைவரவில்லை என்றே தோன்றுகிறது. தொடர்ந்து எழுத எழுத, என்ன எழுதலாம் என்பது தன்னாலேயே பிடிபட்டு விடும் என்றார்கள் முன்னோடிகள். நானும் ஒன்றரை வருடமாக எழுத முயற்சிக்கிறேன். ஓரளவுக்கு என் பதிவுகளில் இடுபவை பற்றிய தெளிவு இருந்தாலும் இன்னும் "என்ன எழுதலாம்" என்கிற அந்த ஆரம்ப கால மயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே ..நீங்கள் எதிர்பார்த்தது போல எனது பதிவுகள் அமையாதிருந்தால் குறை கொள்ள வேண்டாம்..இப்போது எழுதுவதை/எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து, வாசித்து அதை எப்படி இன்னும் சிறப்புறச் செய்யலாம், என்று சொல்லுங்கள். என் எழுத்தையும் என்னையும் சீர்ப்படுத்திக் கொள்ள உங்கள் கருத்துக்கள் உளிகளாய் உதவும்.

பின்னூட்டத்தில் சந்திப்போம்.

அங்கே போல இங்கேயும்!!

லண்டனில் குண்டு வெடித்தாலும் வெடித்தது, எல்லா இடத்திலும் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறார்கள். அங்கே தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்ததற்கு மறுநாளும்,தொடர்ந்து ஒன்றிரண்டு நாட்களுக்கும் இங்கே தொடர்வண்டி நிலையங்களில் காவல் அதிகாரிகள் நின்றிருந்தார்கள். பிறகு காணவில்லை.

இங்கே எடுத்துள்ள ஒரு ஆய்வின் படி அவுஸ்திரேலியர்களுக்கு, தாங்கள் பயங்கரவாதிகளின் இலக்காக இருப்பதாகத் தோன்றவில்லையாம். ஆனாலும் பிரதமர் அண்ணாச்சி அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதை விடவில்லை. பெரியண்ணா செய்கிறார்..நானும் செய்யப்போறேன் மனப்பாங்குதான். லண்டனில் போலே, அமெரிக்காவில் போலே ஒரு தாக்குதல் இங்கேயும் இடம் பெறுமானால் அதற்கு: அரசு அமெரிக்காவுக்குத் துணை போவதும், சிறு செய்தியையும் ஊதிப் பெரிசாக்கும் ஊடகங்களுமே இரு பிரதான காரணிகளாக இருக்கும்.

தேசிய அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும் என்பதும் இவ்வரசின் நிலைப்பாட்டில் ஒன்று. ஆனாலும் அதற்கு பெருமளவு ஆதரவு கிட்டியிருக்கவில்லை. லண்டன் குண்டு வெடிப்பின் பின்னர் தேசிய அடையாள அட்டை இருக்க வேண்டியது கட்டாயம் என்னும் எண்ணம் சற்றே வலுப்பெற்றுள்ளது. இனிமேல் பேருந்து, நீருந்து(ferry), தொடர்வண்டிப் பயணிகளின் பைகள் எழுமாற்றுச் சோதனைக்கு(random checks) உட்படுத்தப்படுமாம். அதற்கு, பாதுகாப்பிற்கு ஓரளவு உத்தரவாதம் என்பதால் ஆதரவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் என்ற காரணத்தினால் எதிர்ப்பும் சம அளவில் மக்களிடையே காணப்படுகிறது. இன்றைக்கு காலையில் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டுச் சரிபார்க்கும் பொறியின் அருகில் நின்று கொண்டு காவலர்கள் எழுமாறாக ஒருவரைத் தம்மருகில் அழைத்து பையைக் காட்டச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆளை அடையாளம் காண வாக ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தையும் வாங்கிப் பார்க்கிறார்கள். தேசிய அடையாள அட்டை வரும் காலம் மிகத் தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது!

கேளுங்கள் - (ஒருவேளை) தரப்படும்!

சில கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் என்று யோசித்தேன். இலகுவாய் அலுவலகத்திலிருந்து பதிவு போட வேற ஒன்றும் ஞாபகம் வருதில்லையே! கேள்விகளை நானே கேட்டு பதிலையும் நானே போட்டா நல்லாயிருக்காது. அதனாலே...

டும்டும்டும் (வேற ஒன்றுமில்ல..முரசொலி)

"மீரா ஜஸ்மின் - சதா" ஒப்பிடுக என்று (அறிவுபூர்வமாக!!) கேட்காமல் சும்மா கேள்விகளைக் கேளுங்க. இங்க பின்னூட்டத்தில கேட்டாலும் சரி..தனிமடலிலே கேட்டாலும் சரி.

இங்கே முக்கியம்: கேட்டல் மட்டுமே^ (^ என்றால் நிபந்தனைகளுக்குட்பட்டது என்றும், அவை கீழே நுண்ணிய எழுத்தில் தரப்பட்டுள்ளன என்றும் அர்த்தம்)(நிபந்தனைகள் சின்ன எழுத்திலதான் இருக்கணும் என்பது நிபந்தனைகளின் சொல்லப்படாத நிபந்தனை. அதற்கேற்ப சின்ன எழுத்தில் தரப்பட்டுள்ளது!)


^கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இந்த வாரக்கடைசியில் அல்லது அடுத்த வாரம் இங்கே பதிக்கப்படும். கேட்கப்படும் எல்லாக் கேள்விகளும் பதில் பெறும் என்றில்லை. (தலைப்பை ஒருமுறை பார்க்கவும்!)

அதாவது: கடமையைச் செய்..பலனை எதிர்பாராதே! ;o)

உதவி

என் கணவருக்கு சின்னதொரு இன்ப அதிர்ச்சி கொடுக்க, அவருக்கு பிடித்த/முக்கியமான பெண்மணியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இலங்கையில் வடபகுதி காரைநகரில் யூனியன் கல்லூரியில் படிப்பிக்கிறாவாம். திலகம்/திலகவதி என்ற பெயர். இவவைத் தெரிந்தால், தொலைபேசி இலக்கம் பெற்றுத் தரமுடியுமா? மேலும் விபரத்திற்கு தனிமடல் அனுப்புங்க. நன்றி.

இன்று!


முக்கியமான சிலருக்கு இன்றைக்குப் பிறந்த நாளாம் என்று கேள்விப்பட்டதில் உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைத்தேன். எங்களூர் பிரதமருக்கு இன்றைக்கு 66 வயதாகிறது. இவருடன் பிரபல எழுத்தாளர் பேர்னார்ட் ஷா, உளவியலாளர் கார்ல் ஜங், இசைக்கலைஞர் மிக் ஜாகர், நடிகர் கெவின் ஸ்பேசி, நடிகை சான்ட்ரா புல்லொக், கிரிக்கெட் வீரர் ஜொன்டி றோட்ஸுக்கும் இன்றைக்குப் பிறந்த நாளாம்.

இவர்களுடன்.. என்னுடைய ஒரு தோழியின் அப்பாவும், தன் பிறந்த நாளை என் அப்பாவுடன் கொண்டாடும் இன்னொரு தோழியின் அப்பாவும் நானும் இன்றைக்கு எங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். :o)

மெய்ப்பட வேண்டாம்

சினேகிதிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானேன். தூக்கியில்(lift) கீழே வந்து இறங்குமுக விரைவுப்படிக்கட்டில் காலை வைத்த படியே பக்கத்தில் வரும் நண்பருடன் அன்றைய நாளைப்பற்றிக் கதைக்கிறேன். இதென்ன...படி 45 பாகை சரிவிலிருந்து 80 பாகை சரிவாகிறதே! பக்கத்தில் வரும் நண்பரிடம் சொல்ல எத்தனிக்கிறேன்..குரல் எழும்புவதாகக் காணோம். அவரோ ஒரு வித சலனமும் இல்லாமல் தனது புதிய செல்லிடப்பேசியின் செயற்பாடுகள் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார். படிகள் ஆடுகின்றன, அதை உணர்ந்து நிமிர்ந்து அவர் பார்ப்பதற்குள் படிகள் மேலிருந்து இறப்பர் போர்வையைப் பிரித்துக் கொண்டு விழ ஆரம்பிக்கின்றன. இருவரும் பக்கத்திலே செயற்படும் ஏறுமுகப்படிக்கட்டிற்குப் பாய்கிறோம். கால் தடுமாறியதில் அவர் விழுந்து விட்டார். உதவுவதற்காய் கைகளை நீட்டுகிறேன். அவரால் கைகளைப் பிடிக்க முடியவில்லை. படிகள் என்னை மேலே மேலே கொண்டு போகின்றன.

வெளியில் ஒரே இருட்டாக இருக்கிறது.நின்று சுற்றுமுற்றும் எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. காலில் ஏதோ நெருடுகிறது. என்னவென்று தெரியாமல் பயத்தில் உதறுகிறேன். சரேலென விடுபட்டாலும் மீண்டும் மீண்டும் காலில் வந்து பூனையொன்று உடம்பைத் தேய்க்குமாற் போல் உரசுகிறது. அழுத்தம் அதிகரிக்க ஓட ஆரம்பிக்கிறேன். நாலைந்து அடிகளுக்கு மேல் எடுத்து வைக்கமுடியாமல் பாரமாக ஏதோ இழுத்துப் பிடிக்கிறது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்கிறேன். அழுக்குப் பச்சை நிற மெல்லிய கிளைகள். நிற்கும் ஒவ்வொரு கணத்திலும் அவை என்னைச் சுற்றிப்படர்கின்றன. அறுத்தெறிந்து விட்டு தலைதெறிக்க ஓடுகிறேன். என் குளிர்கால coat பாரமாக இருக்கிறது. களைத்தாலும் - முதல் முறை நின்றபோது காலைச்சுற்றிய அக்கிளைகள் என்னைத் துரத்தியபடி ஜுமாஞ்ஜி படத்தில் போல இடையில் இருப்பவற்றையெல்லாம் விழுங்கித் தம் பிடிக்குள் எடுத்துக்கொள்வது போலத் தோன்றுவதால் - நிற்கும் துணிவில்லை. அவற்றிடமிருந்து தப்ப தொடர்வண்டி நிலையத்துக்குள் நுழைகிறேன்.

தொடர்வண்டி நிலையம் பழையதொரு கோட்டை போலக் காட்சி தருகிறது. பயணச்சீட்டு வழங்கும் இயந்திரமும், பூக்கடையும், வாசலிலே நிற்கும் சில இசைக் கலைஞர்களும் வழமையான இடமன்றி வேறிடங்களில். ஒரு கதவு - இதற்கு முதல் கண்டிராதது. திறந்து திறந்து மூடுகிறது. பலரும் சாரி சாரியாக உள்ளே போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். நானும் எனது பயணச் சீட்டைக் காட்டி உள்ளே ஓடுகிறேன். தொடர்வண்டி வரும் என்று எதிர்பார்த்தால்..அப்படி ஒன்றும் இல்லை. ஒரு சின்ன அறைக்குள்தான் போயிருக்கிறேன். என்னுடன் சேர்த்து அந்த வரவேற்பறைக்குள் ஒரு இருபது, இருபத்தைந்து பேர் இருக்கிறார்கள். ஒரு மூதாட்டி வருகிறா. முகமெல்லாம் சுருக்கங்கள். வயதை சொல்ல முடியவில்லை. 80 - 85 அல்லது 100 - 105..அல்லது அதற்கும் கூட இருக்குமோ தெரியவில்லை. வயதைச் சொல்ல முடியவில்லை. இதற்கு முன் அவவை நான் கண்டதில்லை. ஆனாலும் உடனேயே அவவைப் பிடித்து விட்டது எனக்கு. எல்லாரையும் ஒரு பெரிய கூடத்துக்குள் அழைத்துப் போகிறா. மேசைகளில் விதம் விதமான சாப்பாடுகள். கணத்துக்குக்கணம் அவை முன் இருப்பவர்களின் எண்ணத்துக்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு பொருள் எனக்காக நிறைய நாளாகக் காத்திருப்பதாக அந்த மூதாட்டி சொல்கிறா. ஒரு படிக்கட்டைக் காட்டி அதன் வழியே போய் அப்பொருளை எடுக்கட்டாம். நானும் படியில் ஏறுகிறேன்.

படிக்கட்டுச் சுழன்றுபோய், தலைகீழாக இருக்கும் இன்னொரு படிக்கட்டுடன் சேர்ந்து கொள்கிறது. அதன் வழியேயும் ஏறுகிறேன். வழியெல்லாம் விதம் விதமான சிற்பங்கள். சில, தாம் உருவாக்கப்பட்டது பற்றிய ஆவணப்படங்களை சலனப்படங்களாகக் காட்டுகின்றன. சிலவேளைகளில் படிகள் திடீரென முடிந்துவிடும்.பக்கத்திலிருக்கும் சுவரைத் தாண்டிக்குதித்து பயணம் தொடர வேண்டியிருந்தது. நடுநடுவில் இது வரை சந்தித்திராத பலரும், நிறைய நாட்களுக்கு முன் சந்தித்து பெயரும் முகமும் மறந்து போனவர்களும் வழியில் வந்து கதைத்துப் போகிறார்கள். சின்ன வயது ஞாபகங்களில் இருந்து உயிர் பெற்ற இடங்களும் இடையில் வருகின்றன. ஆனால் அங்கே போக முடியவில்லை. காவலர்கள் நின்று தடுக்கிறார்கள். ஞாபங்களில் மட்டுந்தான் இனிமேல் அங்கே போக அனுமதியாம். என்னைப்போலவே பல இடங்களூக்கு முன்னால் காவலர்களுடன் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பலரைக் காண்கிறேன். என்னையும் அவர்களையும் யோசித்துப் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. கடைசியில் தூரத்தில் பல இழுப்பறைகள் கொண்ட ஒரு மரச்சுவர் தெரிகிறது. ஓடிப்போய் என் பெயர் சொல்லும் இழுப்பறையைத் திறக்கிறேன். அதற்குள் இதுவரை நான் காணாத ஒரு பூ. வேறொன்றுமில்லை..அந்தப் பூ மட்டும்தான். பூவைக் கையில் எடுத்து மூதாட்டியிடம் கேட்கிறேன் "இதை வைத்து நான் என்ன செய்வது?"

"கடற்கரையில் கொண்டு போய் நடு" என்று அவ சொன்னதைச் செய்ய கடற்கரைக்குப் போகிறேன். டார்லிங் ஹாபரோ மான்லியோ ஏன் வெள்ளவத்தைக் கடற்கரையோ அல்ல...மாறாக ஒரு நிழல் போலே ஞாபகமிருக்கும் பாசிக்குடாக் கடற்கரைக்கு. பூவுக்கு வளர்வதற்குத் தண்ணீர் வேண்டுமே என நினைத்து அலை படும் இடத்தில் நடுகிறேன். அலை பெருக்கெடுத்து வருகிறது. மூழ்கிவிடுவேனோ என்கிற பயத்தில் ஓடிப்போய் பக்கத்தில் உள்ள குகைக்குள் நுழைகிறேன். விளக்குடன் நிற்கும் அம்மா "வெள்ளம் வரமுன் வா" என்று சொல்லி ஆயத்தமாய் வைத்திருக்கும் கயிறொன்றையும் என்னிடம் வீசுகிறா. கயிறு காற்றில் பறந்து போகிறது. அம்மாவையும் காணவில்லை.தனித்து நிற்கிறேன். வெள்ளம் முழங்காலளவு வந்து விட்டது. தப்புவதற்காக உயரே உயரே கால் நோக நோக ஏறுகிறேன்.

குகைக் கூரையில் ஒருவனை நாலைந்து குள்ள மனிதர்கள் இழுத்துக் கொண்டு போகிறார்கள். இறந்து விட்டானாம்.அவன் யாரெனத் தெரிகிறது... படியில் தவறி விழுந்த என் நண்பன். இதோ எட்டிவிடும் என்றபடியே கொஞ்சம் கொஞ்சமாக கைகளை நீட்டி நுனிக்காலில் நின்றுகொண்டு "விளையாட்டுப்போதும்" என்று அவனைத் தட்டியெழுப்ப முயல்கிறேன். . இதென்ன .. அவனைபோலவே எனக்கும் கால் தடுமாறி, மீண்டு வரமுடியாத ஒரு இருண்ட பள்ளத்துக்குள்ளே...

திடுக்கிட்டுக் கண்விழிக்கிறேன்..அப்பாடா..கனவு மட்டுமே!

காதல் தோல்வியா

சனிக்கிழமை படமொன்று பார்த்தேன். பலருக்கும் பல நினைவுகளைக் கிளறிவிட்ட "ஆட்டோகிராஃப்". நல்ல படம்தான். ஆனாலும் ஒரு சின்ன மனவருத்தம். என்னவா? லத்திகாவைக் காதலித்து அது தோல்வி(!?)அடைந்ததினால் சேரன் புகைபிடித்து மது அருந்துவதாகக் காட்டியிருந்தார்கள் தானே. இந்தப்படம் மட்டுமல்ல நிறைய தமிழ்ப்படங்களில் இப்படித்தான் காட்டுகிறார்கள். கொஞ்சம் நெருடலாகக் கூட இருந்தது. காதல் தோல்வியா "பிடி சிகரெட்டை..குடி சாராயத்தை" என்று default ஆக்கப்பட்டிருக்கிறது தமிழ்த் திரைப்படங்களில். அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. கேட்டால் உணமையைத்தானே சொல்கிறோம்..காட்டுகிறோம் என்பார்கள். கொஞ்சம் வித்தியாசமாக யோசியுங்களேன்!! வேறே உதாரணம் காட்டுங்களேன்!!

மது குடித்து/புகைபிடிப்பதால் மனதில் ஏற்பட்ட காயம் ஆறிவிடுமா? சரி..காதல் தோல்வியடைகிறான் கதாநாயகன் என்று வைத்துக் கொள்வோம் - அவன் ஏன் அந்தக் கவலையை மறக்க ஏதாவது உழைப்பைத் தேடிக்கொள்வதாக/செய்வதாகக் காட்டக் கூடாது? அநேகமான கதாநாயப் பாத்திரங்கள் கல்லூரி மாணவர்கள். பகுதி நேர வேலை செய்வது போலக் காட்டலாம் தானே? உடலை வருத்தி வேலை செய்து அதிலே ஒன்றிப் போகின்ற வேளைகளில் மன ஆறுதல் பெறுவதாகக் காட்டலாம் தானே????? இதைப் பார்த்தாவது கொஞ்சம் முயற்சி செய்ய வேணும் என்கிற உந்துதல் இளைஞர்களுக்கு வராமலா போய்விடும்?

நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஆண்களின் புத்தகம்

கைக்குக் கிடைக்கும்.. கிடைக்கும் என்று நூலகத்திலுள்ள பிரதியை எதிர்பார்த்து அலுத்துப் போய் தள்ளுபடியில் $12.95க்குப் போட்டிருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். என்ன புத்தகம்? ஆண்டு தொடங்கியது முதல் (ஒரு வேளை அதற்கும் முன்னரே??) தொடர்வண்டியில் 60% பேர் வாசித்த புத்தகம்.

டா வின்சி கோட் தான். பிரபலமான புத்தகம். புத்தகமே வாசிக்காத என் சக பணியாளருக்கே இப்புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருந்தது. "ஒரு நாளும் நான் வாசிக்க மாட்டேன் : இது ப்ளாஸ்ஃபெமி (blasphemy)" என்று சொன்னா!!

வார இறுதியில் வாசிப்போமென்றால்..எங்கே? நேரம் கிடைத்தால் தானே! வெள்ளிக்கிழமை வாங்கியதை திங்கட் கிழமை தான் வாசிக்க ஆரம்பித்தேன். தொடர்வண்டியில் காலைநேரக் கோழித்தூக்கம் போடும் நேரம் (லிட்கமிற்கும் பேர்வூடுக்கும் இடையிலான 10 - 15 நிமிடம்! ) தவிர மீதி நேரமெல்லாம் இந்தப் புத்தகம் தான். நேற்றுப் பின்னேரம் வண்டியில் வாசித்துக் கொண்டிருந்தேனா..யாரோ தட்டுகிறார்கள் என் தோளில். நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு நண்பி. கதைத்துக் கொண்டே பயணம் தொடர்ந்தது.

"என்ன புத்தகம் வாசிக்கிறீங்க"

"டா வின்சி கோட்"

"ஆ??? அப்பிடியெண்டா?"

இந்தப்புத்தகம் பற்றித் தெரியாமல் கூட யாராவது இருக்கிறார்களா! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் "கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதை மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்" என்றேன்.

புத்தகத்தை வாங்கி, பின்புறம் திருப்பி பின்னட்டையில் இருந்த கதைச்சுருக்கத்தை வாசித்தா.

"ஆணகளின் புத்தகம் வாசிக்கிறீர்களே"

இப்போது நான் "ஙே!". "ஆண்களுக்குரிய புத்தகமா? அப்படியென்றால்??" விளங்காமல் கேட்கிறேன்...புத்தகங்களிலும் ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று இருக்கிறதா என்ன!

கேட்டதற்குப் பதிலாக அவ சொன்னது: "இந்த மாதிரிக் கதைகள் ஆண்கள் வாசிப்பதற்குத்தான் உகந்தது. அவர்கள் தான் இதை அதிகம் விரும்புவார்கள். பெண்கள் வாசிக்க எத்தனையோ "நைஸ் சப்ஜெக்ட்ஸ்" புத்தகங்கள் இருக்கின்றனவே".

அந்த " நைஸ் சப்ஜெக்ற்ஸ்" என்னென்ன என்று நான் கேட்கப்போகவில்லை. இந்த மாதிரி ("ஆண்கள்") புத்தகம் எனக்கும் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டுப் பேசாமலிருந்து விட்டேன்.

படைப்பில்(புத்தகமோ, சலனப்படமோ, ஓவியமோ எதுவென்றாலும்)ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று வேறுபாடு எங்கிருந்து முளைத்தது?

அலுமினியப்புழு


கொழும்பிலோடும் ஒற்றை டபிள்டெக்கர் போல் - இதுவும்
இரு தட்டில், பலதும் காவும் மனிதர்களைக் காவும்
நல்லவற்றைக் கண்டால் திறந்து கொள்ளும் மனது போல
ஒவ்வொரு நிறுத்தத்திலும் கதவு திறக்கும்,
புதிதாய் உள்வாங்கியும்,
முதல் வாங்கியதில் சிலதைத் துப்பியும் ஆன பிறகு
காது கிழிக்கும் சீழ்க்கை ஒலி தரும் அனுமதியுடன் கதவு பூட்டி
அலுமினியப்புழுப்போல ஊர்ந்து போகும்.

ஈழம்+தமிழர்+போராட்டம்

இலங்கையில் 'தமிழர்' எனப்படுவோர் தென்னிந்தியப் படையெடுப்புகளின் போது இலங்கை வந்து அங்கேயே தங்கிவிட்ட தமிழ்நாட்டவர்கள் என்பது என்னுடன் பணிபுரியும் (முன்னாள் இந்திய ராணுவ) நண்பரின் கருத்து.

அந்நண்பர் இன்றைக்கு என்னிடம் கேட்டார் "உனது பாட்டன் பாட்டி எங்கே.. இலங்கையிலா?"

நான்: "இப்போது அவர்கள் உயிருடனில்லை..என்னுடைய உறவினர்களில் சிலர்தான் அங்கே இருக்கிறார்கள்"
அவர்: "இந்தியாவிலுள்ள உறவினர்களோடு தொடர்பற்றுப் போயிருக்கும் என நினைக்கிறேன்"

எனக்கு முதலில் விளங்கவில்லை & இலங்கைத்தமிழர் பற்றிய அவரது கருத்தையும் மறந்து போயிருந்தேன்.

"எனக்குத் தெரிந்து இந்தியாவில் எங்கள் குடும்பத்தினர் யாரும் மணமுடிக்கவில்லை, அதனால் உறவினர்களும் இல்லை" என்று சொல்லவே, அவர் என்னை ஆமோதித்து "உறவினர்கள் இருந்தாலும் உங்களுக்குத் தெரிந்திருக்காது, சில நூற்றாண்டுகளுகளாயிற்றே இலங்கையில் குடியேறியும்! அதனால் தொடர்புகள் அற்றுப் போயிருக்கும்"என்றார்.

நான் மீண்டும் விளங்கப்படுத்த வேண்டியதாயிற்று - விசயன் வந்து குடியேற முதலே இலங்கையில் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களது வழித்தோன்றல்கள்தான் நாங்கள் என்று. அவருக்கோ தாளாத ஆச்சரியம்; "உண்மையா" என்று பலதடவை கேட்டுக் கொண்டார்.

பிறகு சொன்னாரே ஒன்று! "அப்படியானால்(அதாவது விசயன் வரமுதல் இலங்கையில் (வடபாகத்திலெல்லாம்) மனிதர்கள் இருந்தபடியால்) பிரபாகரன் செய்வது சரி. புலிகள் சொந்தமல்லாத இடத்தைக் கேட்பதாக நான் நினைத்திருந்தேன்".


இந்த இடத்தில் முகமூடி, எனது ச்சரியான ஹொட்டா இருக்கப்பா! பதிவில் கேட்ட கேள்வி ஞாபகம் வருகிறது. அவர் கேட்டது:

//... ஆரம்பித்த பொழுது இருந்த போராட்ட வீரியம் அடுத்த தலைமுறையினரிடம் அதே அளவு உள்ளதா? (களத்தில் இருப்பவரிடம்... வெளியிலிருந்து ஆதரவு தருபவர்களிடம் அல்ல) //


(எந்தப் போரிலென்றாலும்) களத்திற்குச் சென்றிருப்பவரைப் பற்றிக் கதைக்க எனக்குத் தகுதியில்லை. அதற்குத் தேவையான மனத்திடமும் துணிச்சலும் நினைத்தும் பார்க்க முடியாதவை.

முகமூடியின் கேள்விக்கு எனது அறிவுக்கு எட்டியவரை பதில்:
முதல் தலைமுறை பாராட்டத்தில் குதித்ததற்கான காரணம் எல்லாருக்கும் தெரியும். இளைய தலைமுறைப் போராளிகள் முதல் தலைமுறையினரின் அதே காரணங்களுக்காகவும் அத்துடன் அக்காரணங்களுக்கான போராட்டம் தம்மில்/தம் (குடும்ப /கல்வி /பொருளாதார/இன்னபிற) சூழலில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்களால் உந்தப்பட்டும் களத்தில் குதித்தவர்கள். இரு தலைமுறையினருக்கும் போராட்டத்தின் காரணங்கள் சற்றே வேறுபட்டாலும் போராட்ட வீரியம் சமமானதே. இன்னும் சொல்லப்போனால் இளைய தலைமுறைப் போராளிகளுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

கவிதை...கவிதை!!

எல்லாரும் கவிதை எழுதிறாங்க, நானும் எழுதுவம் என்டு முயற்சி செய்து பாக்கிறன் ..ஒன்டும் வருதில்ல.(முயற்சி இல்லாம வாறதுதான் கவிதை என்டு எனக்கும் தெரியும்..என்டாலும் மேதாவிலாசம் காட்டிற ஆசை யாரை விட்டது!!) இப்ப போன வாரக்கடைசியில் 2 - 3 பெட்டி தேவையில்லாத புத்தகம், சில/பல தாளுகள் என்டு கொஞ்சம் குப்பை (குப்பைதான்) ஒதுக்கியெடுத்து, எறிய முதல் ஆராய்ஞ்சதில ( பெரிய ஹரப்பா அகழ்வாராய்ச்சி என்டு நினைப்பு..உங்களுக்குத் தெரியுமோ, நான் அஸ்கொ பர்போலாக்கு மின்னஞ்சல் அனுப்ப, அவர் பதிலும் போட்டவரெண்டு கொஞ்ச நாள் ஆனந்தக் கூத்தாடி கொண்டிக் கொண்டு திரிஞ்சன். சரி சரி..பெருமைய விட்டிட்டு கதைக்கு..இல்லல்ல கவிதைக்கு வாறன்) என்ன சொன்னனான்..பெட்டிய ஆராய்ஞ்சன் தானே. அதிலே ஒரு சின்ன குறிப்புப் புத்தகத்தில இருந்தது .. ஒஸ்ரேலியாக்கு வந்த புதிசில மனம்/புத்தி பேதலிச்சுப் போய்(இப்பவும் கொஞ்சம் லூஸ்தான்!) எழுதின "கவிதை". ஒரு பகிடி தெரியுமா...எழுதினது 2001ம் ஆண்டு யூலை மாதம் 3ம் திகதி!! சரியா 4 வருசம்.


உணராமல் வழிந்தோடும் மழைநீரைப்போல,

என்னையறியாமல் கால் இயங்கும்

மனம் நிரம்பித் தளும்பி ஞாபங்களால் கலங்கலடைந்து

கடந்து போவோரில் அறிந்த முகம் தேடும்

நிறுத்து போதும்! என்று கடிவாளம் நிகழ்காலம் போட

மனம் இன்னும் இன்னும் எனக் கேட்டு

அடங்காக் குழந்தை போல் அலை மோதும்.


'எழுதின' கவிதாயினி எனக்கே தெரியாது...அதால ஒருத்தரும் என்னெ அர்த்தமெண்டெல்லாம் கேட்கக்கூடாது. ஒன்டு மட்டும் நல்லாத் தெரியுது, அன்டைக்கு நான் பனியில நனைஞ்சிருக்கிறன்!!

ச்சரியான ஹொட்டா இருக்கப்பா!


இன்றைக்கு காலையில் வேலைக்கு வரும்போது தொடர்வண்டியில் கேட்டது:

ஒருவ: ஹா…ய்! எப்ப ஸ்ரீலங்காவிலயிருந்து வந்தனீங்கள்?

மற்றவ: லாஸ்ட் சற்றடே. இன்னும் டயேர்டா இருக்கப்பா.

ஓருவ: அது அப்பிடித்தான் இருக்கும், நேரமும் டிஃபரன்ட் தானே

மற்றவ: ஓம். அங்க போனா ஏளியா முழிக்கிறம். இங்க வந்ததுக்கு இன்டைக்குத்தான் லேட் பண்ணாம வந்திருக்கிறன்.

ஓருவ: ட்ரிப் எல்லாம் எப்பிடி?

மற்றவ: ஐயோ..சன்னுக்கும் டோட்டருக்கும் ச்சரியான ஹாட்(hard) ஆ இருந்தது.

ஓருவ: ஏன்? பிள்ளைகள் அங்கையெல்லோ பிறந்தவை?

மற்றவ:ரெண்டு பேரும் ஸ்ரீலங்கா போண் தான். ஆனாலும் இங்கே வந்து இப்ப 7 இயர்ஸ் ஆகீட்டுது த்தானே. அவை பாவம்.. மொஸ்கிட்டோஸ் தான் ச்சரியா கஷ்டப்படுத்தீட்டுது. பிறகு உள்ள க்றீமெல்லாம் பூசித்தான் நைட்ஸ்ல படுக்க விட்டது.

ஓருவ: சீ.. ஜஃப்னா போன்னீங்களோ?

மற்றவ: ஓமோம், தேவையில்ல என்டுதான் முதல் நினைச்சுக் கொண்டிருந்தனாங்க. ஸன் ச்சொல்லிப் போட்டார் கட்டாயம் போய் தன்ட பழைய ஸ்கூல் எல்லாம் பாக்க வேணுமென்டு. அவற்ற பெஸ்ற்றரிங் தாங்காம ஃபிளை பண்ணினாங்க. ச்சரியான ஹொட்(hot) அங்க. ஊத்தை சரௌண்டிங்ஸ். எங்கட பீப்பிள் எப்ப சேஞ்ச் பண்ணுவினமோ தெரியாது. நான் ச்சொல்லிப்போட்டன் த்றீ டேய்ஸ்தான் நிக்கிறதெண்டு. பிள்ளைகளுக்கு கொஞ்சம் டிஸப்பொயின்மன்ட் ஆக்கிட்டுது. ஜஃப்னா போன நாளிலயிருந்து என்ட ஹஸ்பண்ட் ஒரே ஆகியுமண்ற் – க்ளீன் இல்லை, ஏன் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போன்னீர் என்டு. அதுக்குள்ள சன்னும் சொல்லுக் கேட்ட பாடில்லை என்ன..போய் கௌ.. கோட்(goat) என்டு உள்ள அனிமல்ஸ் எல்லாத்தையும் அளைஞ்சு கொண்டு.

ஒருவ: இங்கே காணுறேலைத்தானே…அதுதான். ஹொலிடேஸ் என்டாப் பிள்ளைகளை எஞ்சோய் பண்ணவிட வேணும்.

மற்றவ: ஓம், அதுக்காண்டி உள்ள அனிமல்சைத் தொட்டுக் கொண்டோ..உள்ள கேம்போய் அது இதெண்டு எத்தினைய பக் பண்ணிக் கொண்டு போன்னான். அற்லீஸ்ட் புக்ஸை வாசிச்சிருக்கலாம். சன் தான் மோசம். டோட்டர் பாத்துக் கொண்டிருப்பா, கிட்டப் போறேல. என்னை மாதிரி.அவ மாட்டுச் சாணியைக் கண்டதிலயிருந்து அனிமல்சுக்குக் கிட்டப் போறேல்ல. சோ டேட்டி என்டு பேசாமல் இருந்திடுவா. நானும் அப்பிடியே விட்டிட்டன். அங்க என்னப்பா டிவியுமில்ல, கேபிளும் இல்லை..ச்சனத்துக்கு எப்பிடி டைம் போகுதோ. டோட்டருக்கு கட்டாயம் டிஸ்னி சனல் வேணும். அங்க அதுகள் இல்லையெண்டு கூட்டிக் கொண்டு போன என்னில அவக்கு கோவம். கொழும்பு மச் பெற்றர் தான் ஜஃப்னா. நல்ல காலம் போய் ஹொட்டேல்ல ஸ்டே பண்ணினது. இல்லாட்டி இன்னும் ஹார்ட்(hard) ஆ இருந்திருக்கும்.

ஓருவ: எவ்வளவு நாள் நின்டனீங்க?

மற்றவ: 2 வீக்ஸ். பிறகு இண்டியாக்குப் போய் வன் வீக் நின்டனாங்க. இனிமேல் போறதில்லயெண்டு டிசைட் பண்ணீட்டன். அந்த ஹீட், டஸ்ட் எல்லாம் ச்சரிவராது. நல்ல காலம் டோட்டரும் அதையே சொல்லீட்டா. ஐ ஆம் நெவ கோயிங் பக் டு தட் கன்ட்றி என்டு. சன் தான் கேட்டுக்கொண்டிருக்கிறார் திரும்ப ஒருக்கா போகப் போறன் என்டு.


இப்படியே தொடர்ந்த உரையாடலின் முடிவைக் கேட்க முன் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. இலங்கைக்கு மீண்டும் போக வேண்டும் எனக் கேட்கும் மகனுக்கு என்னென்ன அர்ச்சனைகளோ!

இப்படியும் இருக்கிறார்கள்! வெளிநாடு வந்து 7 வருடத்தில் சொந்த பீப்பிள் க்ளீன் இல்லாமலும், வளர்ந்த சூழல் டேட்டியாகிவிடுகிறதும் என்ன விந்தை!

நேர்முக விளையாட்டு

புத்தக விளையாட்டு மாதிரி இதையும் ஆக்கலாம். வாறீங்களா? என்னிடம் அக்னிபாரதி கேட்டிருக்கிற கேள்விகளும் என் பதிலும் இதோ.

1. சிங்களத்துச் சின்னக் குயிலாய் இருக்கிரீர்கள்...எனவே இந்தக் கேள்வி, கன்னத்தில் முத்தமிட்டால் ஷ்யாமா (நந்திதா தாஸ்...படம் பார்த்து இருப்பீர்கள் என்று நம்பிக்கை) போல் தீவிரவாதி ஆனால் என்ன செய்வீர்கள்?
என்னது குயிலா? ரத்தம் சதையாய் ஒரு பெண்! பறவையாக்குகிறீர்களே... :o) அதிலும் ஒரு நன்மைதான், பறவை என்றால் பயணச்சீட்டு எடுக்காமலே, அடுப்பை நூத்தோமா..வீட்டுக் கதவு பூட்டினோமா என்றெல்லாம் யோசிக்காமலே பயணம் போகலாம்.

தீவிரவாதி ஆனால் என்ன செய்வேன்? தீவிரவாதம்தான்! ;o)


2. மழை என்றால் எது நினைவுக்கு வரும்? மின்னலா, மேகமா, மண் வாசனையா?
நனைந்த பொழுதுகள் சில ஞாபகம் வரும்.


3. பகல் கனவா, ராக் கனவா? எது பிடிக்கும்? எது வரும்?
பகல்கனவு பிடிக்கும் ஆனா அடிக்கடி வருவது ராக்கனவு. என் கனவிலே வரும் சம்பவெல்லாம் வைத்து நான் ஒரு த்ரிலர் கதையே எழுதலாம். ஒருமுறை யாரோ என்னை துரத்திக் கொண்டு வர நானும் ஓட, என்னைச் சுட்டு விட்டார்கள். கழுத்தில் தோட்டா பாய்ந்திருக்கிறது. புண்ணில் ஒரே எரிவு...முழித்தால் snug as a bug ஆக என் கம்பளிக்குள்ளே. சந்தேகத்தில் கழுத்திலே கையும் வைத்துப் பார்த்த ஞாபகம்... என் கனவுகள் சொல்லி முடிவதில்லை.

அடிக்கடி எங்கேயாவது மலை உச்சி போன்ற இடங்களில் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் மிதிவண்டி சகிதம் காற்றில் மிதப்பது போலக் கீழே விழுவேன். காயம் வராது. என்ன அர்த்தம்?


4. கடவுள் உங்களிடம் தோன்றி, 'உன்னிடம் உள்ள எதாவது ஒன்றை எனக்குக் கொடு' என்றால் எதைத் தருவீர்கள்?
என் மறதியை தூக்கிக் கொடுத்துவிடுவேன்.


5. ஒருக்கால், நீங்கள் என்னை interview செய்ய நேர்ந்தால், முதல் கேள்வி என்னவாக இருந்திருக்கும்?
கடைசித் தேர்தலில் வாக்களித்தீர்களா? சரியாகவா அல்லது செல்லாத வாக்கா?


என் பங்குக்கு வசந்தன், துளசி, சாகரன், ஈழநாதன், மதி இவர்களைக் கேட்கிறேன்:

1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?


2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?

4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால், எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?

எங்கே..பிள்ளைகள் ஐந்து பேரும் ஓடிப்போய் உங்கட வலைப்பதிவில வடிவா எழுதுங்கோ பாப்பம். நான் வந்து பாப்பன்..வடிவா எழுதியிருக்கிற ஆ(க்க)ளுக்கு ஒரு பின்னூட்டந் தருவன். :o)

இலக்கக்குறுவட்டில் படம் பார்க்கிறேன்

இதுவரை சில/பல காரணங்களுக்காக இப்போதைக்கு வேண்டாமென்று யோசித்திருந்த டிவீடி ப்ளேயரை போன கிழமை வாங்கியாச்சு. கடைக்குப் போன நேரம் கண்ணில் பட்ட இலக்கக்குறுவட்டையெல்லாம் ஆராய்ந்ததில் கிடைத்த ஒன்று "சிந்துபைரவி & மனதில் உறுதி வேண்டும்" இரண்டும் கொண்ட ஒரு வட்டு. முதலாவதாக ம.உ.வே. யைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

"50 - 50", "நான் ப்ராக்டிகலாப் பேசறவன்", "கெட்ட வார்த்தையால திட்டணும் போல இருக்கு" என்ற வசனங்கள் :o)

வைத்தியசாலை ஊழியராக வரும் அந்த நகைச்சுவை நடிகரின் பெயரென்ன? இள வயது (நோஞ்சான்) விவேக்குடன் (இதுதானாமே அறிமுகப்படம்?) கூடவே "எங்கேயோ பார்த்த" முகங்கள் - எஸ்பிபி, ரமேஷ் அர்விந்.

சுஹாசினி அழுத்தமாக "மிஸ். நந்தினி" என்று சொல்லிவிட்டுப் போக, பத்திரிகையாளர்/எழுத்தாளர் "Thankyou for the good news" என்பாரே..அப்போது சுஹாசினியின் முழியே முழி! அதோட நிற்பாட்டியிருக்கிறோம், இன்றைக்குப் போய் மிச்சம் பார்க்க வேணும்.

அரைகுறையாய்ப் பார்த்த தைரியத்தில் கேட்கிறேன், இந்தப் படத்தில் மீதிக்கதை என்கிற சாயத்திலா பிரகாஷ்ராஜ், சுஹாசினி, வினீத் நடித்து "நந்தினி" படம் வெளிவந்தது? கதாநாயகியின் பெயர் ஒரே பெயராக இருக்கிறதே..! அது சரி, அப்படியென்றால் வெளிவந்த படமெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா?..ராதா/ப்ரியா & ராஜா என்று நாயக நாயகிக்குப் பெயர் இருப்பதால்!

கட்டாயம் பார்க்க வேண்டிய, வித்தியாசமான படைப்புகளின் (என்ன மொழியென்றாலும்) பெயர்களை அறியத்தரமுடியுமா?

பதிலைப் பெயர்த்தல்

நன்றிகள் நான்கு உங்கள் பொறுமை. ஒரு பூச்சி முகவரியாக்கப்படுகிறது ஆல் அபிவிருத்திக்குழு தீர்க்க இதழ்/வெளியீடு நீங்கள் எதிர்கொள்ளும். விருப்பம் தேனி ....

இல்லை..வேண்டாம், ஏற்கெனவே என் விளையாட்டு வினையாகி ஒரு சிலரைக் கிட்டத்தட்ட பாயை விறாண்டும் நிலைமைக்குக் கொண்டு வந்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு விசப்பரீட்சைகள் வேண்டாம்! :o) (அதற்காக எதிர்காலத்தில் விஷப்பரீட்சைத் திட்டங்கள் கைவிடப்படும் என்பது பொருளல்ல!)

மேலே நான் பெயர்த்தது Blogger இன் தொழினுட்ப உதவியணி எனக்கு அனுப்பிய பதிலைத்தான். எதற்குப் பதில் போட்டார்கள்? கொஞ்ச நாளாவே எங்களைக் (கேட்காமலே) கேள்விக்குறியாக்குவது பற்றி அவர்களிடம் கேட்டிருந்தேன். அதற்குத்தான் பதில். பொதுமக்கள் பார்வைக்காக இங்கு வலையேற்றப்பட்டுள்ளது!

//Thanks for your patience. A bug is being addressed by the development team to resolve the issue you're having. Please be assured that the bug will be fixed soon. I apologize for any inconvenience it may have caused.//

என்ன அழகாக "உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இடையூறுகளுக்கு வருந்துகிறோம்" என்று சொல்கிறார்கள். இதைத்தான் "டிப்ளமசி" என்பதா? (அது எப்படி "dip"ல மசி? என்று கேட்க மாட்டேன்!!கேட்டா புதிசா பாய் வாங்க வேண்டி வந்திரும்!) ;o)

மன்னிப்பும் வேறு சிலவும்

விளையாட்டு சரியான கஷ்டமாகி விட்டது போல இருக்கு. ஏற்கெனவே என் விளையாட்டு வினையாகினதில வழக்குப்போடாத குறையா துளசி முறைப்பாடு! இன்னும் வேற யாருக்கும் சித்தம்/பித்தம் கலங்கியிருந்தா என்னை மன்னியுங்க! (உண்மையிலேயே அவ்வ்வ்வளவு கஷ்டமா இருக்கா?)வாசிக்கிற ஆக்களுக்கு விளையாட்டா இருக்கட்டும் என்று உலக அதிசயங்களை முக்கியமானவையா வைச்சுக் கொண்டு அவற்றைக் கண்டுபிடிக்கிறதுக்கு வழியாக இன்னும் கொஞ்சக் கேள்விகளையும் சேர்த்து வைச்சன். இப்ப விடைகளுக்கு வழி சொல்றேன். அந்தப்பதிவில போய் right click பண்ணி "Select All" என்று தேர்ந்தெடுங்கோ..விடை தெரியும்! ஆனா அதுக்கு முதல் எனக்குப் பதில் சொல்லீற்றுப் போங்க...

என்ட பெயர், புனை பெயர் என்டு தெரிஞ்சிருக்கும்(இல்லாட்டி இப்ப தெரிஞ்சு கொள்ளுங்க). ஏன் என்ட சொந்தப் பெயரில எழுதிறதில்லை?

வலைப்பதியத் தொடங்கிய போது, நான் என்னத்தையென்றாலும் உளறி வைக்கலாம்... சொந்தப்பெயரில இல்லாத வரைக்கும் என்றொரு நினைப்பு இருந்தது. ஆனா உண்மையான காரணம் அதுவல்ல என்று எனக்கே நல்லாத் தெரியும். என்ட பெயர் இல்லாத இடமில்லை. ஆங்கிலத்தில் சொல்லுவாங்களே "wornout" (தமிழ்ல என்ன?) என்று, அதுதான் என்னுடைய பெயரின் கதி. ஆனா, அம்மாக்கு கொஞ்ச நாள் எண்சாத்திரத்தில நம்பிக்கை வந்த படியால், என் பெயரின் ஆங்கில ஸ்பெலிங்கை மாத்தி கொஞ்சம் வித்தியாசம் ஆக்கப்பட்டது. அதாலதான் கொஞ்ச வித்தியாசமாவது தெரியும். சொன்னா நம்புவீங்களோ தெரியாது.. எனக்குத் தெரிஞ்சு, எப்போதும் என் வகுப்பில் என் பெயர் கொண்ட இன்னொருத்தி இருப்பா. என் பெயருடையவர்கள் 1..2..3 (பொறுங்க..எண்ணிப்பாத்திட்டு வாறன்)...கிட்டத்தட்ட 20 பேரைத் தெரியும். அப்படியொரு wornout பெயர் தான் என்னுடையது! அதனாலே தான் எங்கேயோ எப்பவோ ஷ்ரேயா என்று ஒரு முகமூடியைத் தூக்கி மாட்டினேன்.

இப்ப எதுக்கு இவ்வளவும் என்று கேட்கிறீங்களா...சொல்றன்..

இதுவரை இந்த ஷ்ரேயா என்கிற பெயர் எழுத்தில தான் என்னை குறிக்கக் கண்டிருக்கிறன். அதாவது யாராவது அஞ்சல் போட்டா "ஹாய் ஷ்ரேயா" அல்லது பின்னுட்டத்தில "சித்தம் கலங்கிடிச்சி ஷ்ரேயா". நேற்று, ஒருவர் தொலைபேசியில் அழைத்து "ஷ்ரேயா(வா)?" என்றார். எனக்கு ஒருகணம் "யாரைக் கேட்கிறார்" என்றுதான் தோன்றியது. பிறகுதான் 'அடே..நான்தான் ஷ்ரேயா!' என்று உறைத்தது. எனக்கு ஒரு சந்தேகம் (ஐயோ..ஓடாதீங்க), இவ்வளவு நாளாக (கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக) பாவிக்கிற ஒரு பெயர், என்னுடையதுதான் என்று ஏன் மனதில் பதியவில்லை?

இன்னொன்றும் சொல்ல வேண்டும், இதுக்கும், மேலே சொன்னதுக்கும் சம்பந்தமில்லை. யாருடனாவது உரையாடும் போது (பேச்சு & எழுத்து) என்னையறியாமலே (95%) அல்லது உணர்ந்தே(5%) அவர்களைப்போல எனது கதை பேச்சு அமைந்து விடுகிறது. உதாரணத்துக்கு ஒரு ஒஸியுடன் கதைத்தால், அவுஸ்திரேலிய accentஉடன் ஆங்கிலம் வருகிறது. மலேசிய நண்பியொடு அவளைப் போன்று (முழுக்க இல்லாது விடினும் 50%) accentம் வருது. யாழ்ப்பாணத்தவர் என்றால் முழுக்க அந்தத் தமிழும், மட்டக்களப்பென்றால் அந்தத் தமிழும், இந்தியரென்றால் அவர் தமிழும் என் வாயிலிருந்து(இப்ப 'விளங்குதா' க்ருபா?) வருகிறது. (இப்போது எழுத்திலும்). இது ஏன்? சில பல வேளைகளில் உரையாடலின் முடிவிலேயே அல்லது அதைப்பற்றி மீள நினைத்துப் பார்க்கையிலேயே இப்படிச் செய்கிறேன் என உறைக்கும்.

ஏன் இப்படிச் செய்கிறேன்? நான் நானாக இருக்க விருப்பப்படவில்லையா?? யாராவது சொல்லுங்களேன்.

ஏ ஆராரோ...நீ யாரோ!

வாங்க வாங்க என்று அழைப்பிதழ் அனுப்பிக் கூப்பிட்டேன்..வந்திருக்கிறீங்க. நன்றி. ஏற்கெனவே கதிரையிலே இருப்பீங்க என்பதால உங்களை இருங்கோ என்று சொல்லப் போறதில்லை. சரி பதிவுக்கு வருவோம்..அதான் வந்திட்டோமே என்றெல்லாம் சொல்லாம..நான் சொல்றதைக் கேளுங்க.

இந்தப்பதிவு ஒரு சின்ன விளையாட்டா இருக்கப் போகுது. நீங்களெல்லாரும் கெட்டிக்காரர்தானே..இது ஒரு சுலபமான விளையாட்டு. இந்த விளையாட்டை "தொகுக்க" உதவிய ப்ரவீணாக்கும் (சு)நாமிக்கும் ;o) எனது நன்றிகள்.

சரி அடிப்படை இதுதான்: கட்டங்களுக்குள்ளே தரப்பட்டிருக்கும் தடயங்களை உபயோகித்து விடைகளைக் கண்டு பிடிக்கணும். பிறகு கட்டங்களுக்குக் கீழே நீங்க கண்டுபிடிச்சதை வச்சு என்ன செய்ய வேணும் என்று சொல்லியிருக்கிறேன். உதாரணம் தந்தா விளையாட்டின் சுவாரசியம் கெட்டுவிடும்(அதுக்காக குளிர்சாதனத்தில எல்லாம் சுவாரசியத்தைத் தூக்கி வைக்க முடியாது)(அடேயப்பா எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறன், ஏன் ஒருத்தரும் சிரிக்க மாட்டனென்டுறீங்க!)





அ) நபிகள் நாயகம் சொன்ன ஒரு பிரபல பொன்மொழி? சீனா சென்றாயினும் சீர்கல்வி தேடுக
ஆ) எதற்கும் அடித்தளம்/ஆதாரம் என்றதொன்று இருக்க வேண்டும் எனச் சொல்லும் பழமொழி? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்


அ)விற்கும் ஆ)விற்கும் விடையைக் கண்டு பிடியுங்கள். இரண்டு விடைகளையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் என்ன கிடைக்கிறது?சீனா+சுவர் = சீனப்பெருஞ்சுவர்
ஷ்ரேயாவுக்கு உதை என்பது சரியான பதில் அல்ல! :o)

ஒரு பிரபல பயணி இருந்தார். அவர் தன்னுடைய பயணங்களைப் பற்றி விரிவான குறிப்புகள் எழுதியிருந்தாலும், (அ + ஆ)வின் விடை பற்றி அக்குறிப்புகளில் மூச்சுக் கூட விடவில்லை. இந்தப்பயணி யார் எனக் கண்டு பிடிக்க வேண்டும். மார்க்கோ போலோ


இ) அந்தப் பயணியின் நாடு எது? இத்தாலி

ஈ)அரசன்/பசு + (அரசியர் உறைவிடம் - அந்தப்) = ??? கோ + (அந்தப்புரம் - புரம்)= கோபுரம்

இ) & ஈ) யின் விடைகளையும் (முன்னரைப் போலவே) சேர்த்துப் பார்த்தால், கிடைக்கும் விடை என்ன? இத்தாலி+கோபுரம் >> பீசா கோபுரம்
இப்ப நாங்க இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும். அதற்கு கண்டு பிடிக்க வேண்டியது:


உ) பாலைவன/வறள் பிரதேசங்களும் அவற்றின் பெருகும் தன்மைக்குமான சர்வதேச ஆண்டு (உதவி:- இதைப் பிரகடனப் படுத்திய குழுவில் ஒருவர் 'குளம்பி' தமையன்) 2006

ஊ) "ச" வருடங்களுக்கு ஒருமுறை வரும் கோலாகலம் ச=4, ஒலிம்பிக் போட்டி


உ)வும் ஊ)வும் கொள்ளையடித்தால் 'எங்கே'யென்று அர்த்தம்?? 2006 ஒலிம்பிக் -> டூரின்
கிரேக்கத்துக்கு வெளியே அதிக கிரேக்கர்களைக் கொண்டது அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்பேர்ண் நகரம். அதே போல நாம் அடுத்ததாகப் போக வேண்டிய தேசத்திலுள்ளதற்கு அடுத்தபடியாக அதன் முக்கிய அருங்கலைப் பொருட்கள் கொண்ட பிரபல அருங்காட்சியகம் (உ+ஊ)வின் விடையில் இருக்கிறது. அந்த நாடு எது?எகிப்து


எ)இந்த நாட்டின் பெயரைச் சொன்னதும் எல்லாருக்கும் நினைவு வருவதும் ஒன்றாகத்தான் இருக்கும். நினைவு வருவதில் "ஐந்து, முக்கால் உடன் தகரத்தில் மெய்யும் உகரமும் அத்துடனே வசந்தன் சின்ன வயதில் குடித்த பானமும் சேர்த்தால் வரும்" சொல் சிலவும் இருக்கின்றன. அதற்கு ஆங்கிலப் பெயர் என்ன? 5-எ, 3/4 = ழு, த், து, கள் >> ஹைரோக்ளிஃப்

ஏ)அவை சொல்வதைப் புரிந்து கொள்ள உதவிய முக்கிய பொருள் என்ன?(உதவி:இப்போது அது லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது) ரொசெட்டா கல்

ஐ)தான் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன், 1822 இல் (ஏ)யின் விடையாக வரும் பொருளில் இருந்ததை ஆராய்ந்து "பொழிப்புரை/விளக்கம்" வெளியிட்டவரின் பெயரென்ன? Jean Francois Champollion


அவருடைய நாட்டுக்குத் தான் போக வேண்டும்.


ஒ) ட்ரோய் போருக்கு காரணம் என்ன? பரிஸ், ஹெலனைக் கவர்ந்து சென்றமை

ஓ)அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையின் சட்ட வடிவமைப்பைச் செய்தவர்களுள் ஒருவர் கஸ்டாவ் ஈஃபிள்


ஒ)வும் ஓ)வும் போட்டா என்ன வருது?பரிஸ் நகரத்தில் ஈபிள் கோபுரம்

அதுக்கு முன்னாலே நின்று நடனமாடி காதல் பாட்டுப் பாடினவங்க இங்கேயும் போனாங்க...எங்கே??அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும்!


ஒள)காடு, மலை, நதிகள் எல்லாம் காதலின் சின்னமாம், அதனால குறிப்பா "இதை" தேவை இல்லை என்று அசித்து (அதான் "தல") பாடியிருக்கிறார். எதை தேவையில்லை என்று சொல்கிறார்? தாஜ்மகால்

ஃ)கேள்வி (ஒள)க்கு விடையாகக் கண்டுபிடிச்சதுக்குக் கிட்ட சலசலக்கும் ஆற்றைப் பற்றி ஒரு பாடல்,மிகப்பிரபலமான நடிகர் நடித்த,மணிரத்னத்தின் ஆஸ்தான (மாதவனுக்கு முதல்) நடிகரின் அறிமுகப்படத்தில் இடம்பெற்றது. ஆஸ்தான நடிகரின் பெயர்? பாடல்: யமுனையாற்றிலே... படம்: தளபதி நடிகர்:அரவிந்த்சுவாமி

(குறிப்பா ஏன் இவர் என்று விளங்கியிருக்கோணுமே ...ஹி..ஹி) ;o)

க்)அவரை கதாநாயகனாக பதவி உயர்த்திய திரைப்படம் எதுங்கோ? ரோஜா

ச்)அதே படத்திலேயே தமிழ்த் திரையுலகுக்கு முக்கியமான 2 பேர் அறிமுகமானாங்க. அவங்க யார் யார்? ஏ ஆர் ரஹ்மான், ஹரிஹரன்


கண்டுபிடிச்சிட்டீங்களா...அவங்கதான்..அவங்களேதான்..இவங்களுக்காக, இவங்க கூப்பிட்டு இங்கே வாறாங்களே!!..! (பார்க்கிறதுக்கு நானும் போறேனே!)

இதைச் சொல்லத்தான் உங்கள் எல்லாருக்கும் அழைப்பிதழ் வச்சு விளையாடக் கூப்பிட்டனான்!! :o). வர்ட்டா!

அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ் இல்லை. (அது அனுப்பிய போது, வலைப்பதிவென்றாலே என்னென்றே தெரியவே தெரியாது!)இது வேற!

அன்புடையீர்,

நடக்கும் ஆங்கில 2005ம் ஆண்டு, தமிழுக்கு ஆனி மாதம், ஆங்கில 23ம் திகதி இணையத் தொடர்பு, விசைப்பலகையில் சுரதாவின் செயலி கொண்டு தட்டச்சும் கைகள் ஆகிய லக்கினங்கள் கூடும் சுபநேர சுப வேளையில் பதிவொன்றை வலையேற்ற ஷ்ரேயாவினாலும், அவருக்கு உதவும் ப்ளொகரினாலும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தருணம் தாங்களையும் தங்கள் கண்கள் மற்றும் இணையத்தொடர்பு சமேதராக இவ்வலைப்பதிவுக்கு வருகை தந்து, பதிவினைப் பார்வையிடவும், பின்னர் நடக்கவிருக்கும் பின்னூட்ட உப(தை)சாரத்திலும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம்,

ஷ்ரேயா & Blogger

(இருவீட்டார் அழைப்பு)


சத்தியமா இது வரைக்கும் எழுதிய பதிவெல்லாத்தையும் குடந்தைச் சோதிடரிடம் போகாமல் நானாகவே எக்ஸெல் ஓலையில் சோழிகளைக் குலுக்கிப் போட்டு ஆராய்ந்ததில் தெரிய வந்ததாவது...

இதுவரை(79 பதிவுகளில்) பதிவுகள் அதிகமாக எழுதப்பட்டுள்ள

    திகதி: 4, 6, 10, 15, 16, 23

    நாள்: வியாழன் & வெள்ளி

    மாதம்: ஆனி


ஆனி மாதத்திற்குரிய 4, 6, 10, 15, 16ம் திகதிகள் ஏற்கெனவே கடந்து விட்டதால், அடுத்து இவை பொருந்தும் எனக் கணிக்கப்பட்ட நாளே அடுத்த பதிவிற்காகச் சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே..அழைப்பிதழை கொஞ்சம் வாசிச்சிட்டு..அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியாவையும் தந்திட்டு இப்ப போய்ட்டு, மறக்காம திரும்பி வாங்க!:o)

மி.மு.பி.கு: திகதிகள் ஆங்கிலத்தில் இருப்பதற்காகவோ அல்லது அழைப்பு விடுக்கும் ஒரு பகுதியினரின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதற்காகவோ என்னை யா..ஆ..ஆ..ரும் கண்டிக்கவோ, இப் பதிவைப் புறக்கணிக்கவோ முடியாது என தடைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது!! அன்றைக்கு ஹர்த்தால்/பந்த் எனக் கூறி வலைப்பதிவை இழுத்து மூடுபவர்கள் மேல் இப்போதே கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

?????

பள்ளிக்கூடத்தில் ஆட்டோகிராஃப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதிலே சிலவேளைகளில் இப்படி எழுதி வைப்போம்:

"நீ மட்டுந்தான் ????? என்று நினைக்காதே. நானும் ?????தான். நீ தனித்துப் போய் விடக்கூடாதே என்று!"

அதுதான் ஞாபகம் வந்தது - பின்னூட்டமிட்டுப் பார்த்தால், "சொன்னவர் ?????" என்று வந்திருக்கிறதைப் பார்க்க. நான் பெயர் மாத்தவில்லையே என்று வேறு கொஞ்ச நேரம் யோசித்தும் வைத்தேன். பொதுவான பிரச்சனையாக் கிடக்கு. Bloggerக்கு எழுதிப் போடுறதுதான் வழி போல!

இன்னொரு பிரச்சனை..இது எனக்கு மட்டுந்தான். (எனக்கு மட்டுமான பிரச்சனைகள் நிறைய இருக்கு!அதெல்லாம் சொல்லி உங்களை எதுக்கு பயப்பிடுத்துவான் :o)

இந்தச் சுட்டிக்கு போகேலாமக் கிடக்கு: http://www.balaji_ammu.blogspot.com. கனக்க கொம்பினேசனில எல்லாம் சுட்டிய மாத்திப் பாத்திட்டன்...வலையுலாவிக்குப் பிடிக்கேல்ல. எப்பிடி மாத்தி எழுதினாலும் உன்னை இந்த முகவரிக்குக் கூட்டிக் கொண்டு போகேலாது என்று முடிவாய்ச் சொல்லிவிட்டுது! தமிழ்மணத்தில முறையிட்டன்...பதில் சொன்ன 'செல்வா'க்கும் இந்தப் பிரச்சனை இருந்ததாம், ஆனால் சரியாகிட்டுதாம். பிரச்சனை ஏனென்று யாருக்காவது தெரியுமா? எப்பிடி நான் பாலாஜிட வலைப்பதிவை வாசிக்கிறது? வழி சொல்லுங்கோ!

மோப்ப சக்தி

மிருகங்களுக்கு ஆபத்தை அறியும் சக்தி உண்டென்பது தெரிந்த விசயம். ஆனாலும் இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவம், ஆராய்ச்சியாளர்களின் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு பிரச்சனையை வேறு கோணத்திலிருந்து அணுக வைத்துள்ளது.

ஒரு பெண்மணிக்கு காலில் ஒரு மச்சம்(mole) புதிதாக தோன்றியிருக்கிறது. அவவோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவவின் செல்ல நாய்க்கு அதைக்கண்டு இருப்புக் கொள்ளவில்லை. கொஞ்சம் விட்டால் அவவின் செல்ல நாய் அந்த mole ஐ விறாண்டி பிய்த்துப் பிடுங்கி விடும் நிலைக்கு வந்துவிட்டதில் பெரிய தொல்லையாகி விட்டது அவவுக்கு. வைத்தியரிடம் போயிருக்கிறா. காலில் இருக்கிறதைக் கண்டால் அந்த நாய் படும் பாட்டைச் சொல்லியிருக்கிறார். வைத்தியர் அவவைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அப்பெண்ணுக்கு ஆரம்பநிலை தோற்புற்றுநோய் இருந்தமை தெரியவந்தது. (நீங்கள் பையில் வைத்திருக்கும் உணவுப்பண்டத்துக்காக ஏதாவது நாய் உங்களைத் தொடர்ந்து முகர்ந்தபடியே வந்தால் நான் பொறுப்பில்லை! :o) )

இது தெரிந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது. ஒருவேளை புற்றுநோய்க் கலங்கள் ஒரு வித மணத்தை வெளியிடப் போய் அதைக் கொண்டு தான் அவவின் நாய்க்கு நிலைகொள்ளவில்லையோ என்று. விடுவார்களா...தொடங்கினார்கள் பரிசோதனையை. புற்றுநோய் உடைய ஒருவரிடமிருந்தும் நோயற்ற கொஞ்சப் பேரிடமிருந்தும் பெறப்பட்ட சிறுநீர் samplesஐ மோப்பம் பிடிக்க விட்டார்கள். நாய் 41% சரியாக புற்று நோயுடையவரின் சிறுநீர் sampleஐ முகர்ந்து பிடித்ததாம். இப்படி, நோயாளிகளின் சிறுநீரைக் கொண்டு புற்று நோய் இருக்கா இல்லையா என்று கண்டுபிடிக்க நாய்களை பயிற்றுவிக்கிறார்கள் இப்போது.

அவர்கள் வியந்த இன்னொரு விடயம்: பரிசோதனையின் போது குறித்த ஒரு (நோயற்ற ஒருவரது) sampleஐ நாய் முகர்ந்து காட்டி, அவர்கள் கவனத்தை ஈர்த்ததாம். ஒரு சந்தேகத்தில் அச்சிறுநீர் sample கொடுத்தவரைப் பரிசோதித்ததில் அவருக்குப் புற்றுநோய் இருந்தது அறியப்பட்டுள்ளது.

non-invasive புற்றுநோய் பரிசோதனை என்கிறார்கள்.

இது வரையில் நாய்கள் செல்ல/காவல் பிராணிகளாகவோ அல்லது மோப்பம் பிடிக்க காவல்/எல்லைப்பாதுகாப்பு/சுங்கப்பிரிவினராலோதான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இனிமேல் வைத்தியர்களாலும்!

என் புத்தக வாசம்!

புத்தகம் என்று எனக்கு 'முதல்' ஞாபகமிருப்பது ஒரு பெரிய எழுத்தில இருந்த நீதிக்கதைப்புத்தகம் தான். அதில் படங்களும் இருந்தது. இன்னுமொரு புத்தகம் - கதையோ பெயரோ ஞாபகமில்லாதது - ஒரு சேவலும் அதைப்பிடிக்கிறதுக்கு முயற்சிக்கிற நரியும் பற்றினது. குறிப்பாக ஒரு புத்தகத்தை ஞாபகப் படுத்த் முயற்சிக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கே உரித்தான நக்கலுடன் பலனில்லாமல் ஞாபகப்படுத்தல் தொடர்கிறது. புத்தகத்திட பெயர் ஞாபகம் வராததுக்கு கதை மறந்து போனது முக்கிய காரணியாக இருக்கலாம். ஒரு மலையின் மேடான உச்சியில் ஒரு சிவப்புப் பழம் இருந்ததும் ஒரு மாடு சம்பந்தப்பட்டிருந்ததும் படத்தில் பர்த்த ஞாபகம். :o) (யாருக்காவது ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே??)

வாசிப்புப் பழக்கம் இத்தனையாம் வயதில்தான் தொடங்கியது என்றெல்லாம் குறிப்பாய்ச் சொல்லத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து நான் வாசிக்காமல் இருந்ததில்லை. அம்மாவும் பெரியண்ணாவும் சாப்பிடும் போது இடக்கையால் புத்தகம் புரட்டுவார்கள். புத்தகம் இல்லாட்டி இருவருக்குமே சாப்பாடு இறங்காது. எனக்கும் முதலில் அப்படி ஒரு வியாதி இருந்தது. பிறகு கொஞ்ச நாள் விடுதியில் தங்கிப்படித்ததால் அப்பழக்கம் விட்டுப்போயிற்று. கையிலே புத்தகம் இருந்தால் வாய்க்குள்ளே என்ன போகுதென்றே தெரியாது. மற்ற வேளைகளிலும் புத்தகம் வாசிக்க உட்கார்ந்தால் வெளிச்சத்தம் ஒன்றும் கேட்காது(அம்மா கூப்பிடுவது உட்பட!பிறகு தடாரென்று ஒரு 'தட்டு' விழத்தான் அம்மா கூப்பிட்டிருக்கிறா என்று 'உறைக்கும்') :oD

விடுமுறைக்கு யாழ்ப்பாணம் போகும் போது நிறைய புத்தகம் வாங்கக்கிடைக்கும். பேருந்துத் தரிப்பிடத்தில் இறங்கி ஒரு நிமிட நடை தூரத்தில் பூபாலசிங்கம் புத்தகக்கடையில் கோகுலம், ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, நீதிக்கதைகள் கொஞ்சம், ஈசாப் கதைகள், முல்லா/பீர்பால்/தெனாலிராமன் கதைகள் என்றெல்லாம் நான் பொறுக்கிக் கொண்டிருக்க அம்மா பக்கத்திலுள்ள பழக்கடையில் வீட்டாருக்குத் திராட்சைப்பழம் வாங்குவா. கிட்டத்தட்ட 10 - 15 புத்தகம் தேறும். பொறுமை இருந்தால் விடுமுறை முழுக்க வாசிக்கலாம். என்னைப் போல 'கடுகதி' தரைவழிகளுக்கெல்லாம் இது யானை வாய்க்குச் சோளப்பொரி போல! எவ்வளவுதான் இழுத்து, மெதுவாக வாசித்தாலும் 2 நாளைக்குத் தான் அவ்வளவு புத்தகமும் வரும். இதெல்லாம் முடிய பாட்டி வீட்டில போய் நோண்டிறது. அங்கே நல்ல நல்ல புத்தகங்கள் இருந்தன. ஆனால் அப்ப சின்னனில் வாசித்தால் விளங்காது. பின்பு வளர்ந்த பிறகு போகிற போது புத்தக வேட்டைக்கு அவ்வளவாக நேரம் ஒதுக்க முடியவில்லை.

வீட்டிலே பஞ்ச தந்திரக் கதைகளுடன், மகாபாரதமும் இராமாயணமும் இருந்தன. நல்ல தடிப்பமான புத்தகங்கள். நிறையக் கிளைக்கதைகளோடு.பஞ்சதந்திரக்கதைகளில் "inherited" கதைகள் வாசித்துக் கொண்டு போகும் போது மூலக்கதை சிலவேளைக்களில் மறந்து விடும்..திரும்ப ஆரம்பிப்பதுமுண்டு! இராமாயணம் வாசித்து முடித்ததும் லவகுசரைப்பற்றி ஆர்வம் வந்து அம்மாவை நச்சரித்தேன். நிறைய நாள் லவகுசர் பற்றி புத்தகம் தேடி அலைந்தது ஞாபகமிருக்கிறது. கிடைக்கவில்லை. பிறகு பதினொரு வயதில் குடும்ப ஒன்றுகூடலுக்கு இந்தியா போன போதுதான் கிடைத்தனர் லவகுசர். பெரியண்ணாக்கு என்னை நன்றாகத் தெரியும் - புத்தகத்துக்கு என்னவும் செய்வேன் என்று. இந்தியாவில் தான் நிறையப் புத்தகங்கள் கிடைக்குமே..ஆ.வி/குமுதம், கோகுலம்(தமிழ்+ஆங்கிலம்), ரத்னபாலா, இன்னபிற சிறுவர் இதழ்கள்/புத்தகங்கள், மு.வரதராசனார் சரிதை, சிவகாமி சபதம் பொன்னியின் செல்வன், சாண்டில்யன் கதைகள் என்று நிறைய (லஞ்சமாக) வாங்கித் தந்து பல வேலைகள் (தேத்தண்ணி போட்டுக் கொடுப்பது, அவருடை உடுப்பு மடிப்பது etc..) செய்வித்துக் கொண்டார். :o) முன்வீட்டுப்பிள்ளைகளுடன் விளையாடவும் போகாமல் 2 நாட்கள் தொடர்ந்து சிவகாமி சபதத்தை வாசித்து முடித்தேன். (மற்ற எல்லாப் பெரிய புத்தகமும் கிட்டத்தட்ட அதே வேகத்தில் வாசித்தேன்...அவற்றை அண்ணா தன்னோடு கொண்டு போய் விடுவாரே!!).

திருக்குறள், நளதமயந்தி, சிலப்பதிகாரம், சீராளன் கதை, சீவகசிந்தாமணி, வரலாற்றுப் புத்தகங்கள், மட்டக்களப்புப் பேய்க்கதைகள் எல்லாம் 12 வயதிற்குள்ளாக வாசித்தேன். பதின்ம வயதும் வந்தது. கொழும்பு வாழ்க்கையும் வந்தது. விடுதியிலும் தங்கிப்படித்தேன். பள்ளிக்கூடத்தில் ஆங்கிலப்புத்தகங்கள் தாராளமாகக் கிடைக்கும். அப்படிக் கிடைத்தவற்றில் Nancy Drew, Hardy Boys அத்தனையும் வாசித்தேன். அதுவே பெரும்பான்மை வாசிப்பானதில் ஒரு கட்டத்தில் சலித்தும் போனது. ஆங்கில இலக்கியப் பாடத்துக்குக்கு பண்பியல் புத்தகங்கள்தான் முக்கியமாக இருந்தது. ஆங்கில ஆசிரியையிடம் கேட்டு எங்கள் வயதிற்குரிய பதிப்புக்களை பெற்று வாசித்தேன்..Mill on the Floss, Pride and Prejudice, Macbeth, இன்னும் பல. பள்ளிக்கூட மாணவர் விடுதியில் நூலகம் ஆரம்பித்தோம். அதில் Anne of Green Gables தொடரை வாசித்தேன். இப்படி இருக்கையில் ஒருநாள் ஒரு அரைவாசி கிழிந்த புத்தகம் அகப்பட்டது. தொடக்கமுமில்லை..முடிவுமில்லை. நடுவில் காடையர்/குண்டர்களின் அராஜகங்கள் விபரிக்கப்பட்டிருந்தன. என்ன முயன்றும் புத்தகப் பெயரை அறிய முடியவில்லை. புத்தகத்தையும் என்னால் மறக்க முடியவில்லை. (1997/1998 இல் 'பெண்களுக்கான ஆராய்ச்சி மைய'த்தில் (CENWOR)வேலை செய்கையில் தான் முழுப்புத்தகமும் வாசிக்கக் கிடைத்தது - "முறிந்த பனை").

அருந்ததி ராயின் "God of Small things" தொடக்கத்தில் கொஞ்சம் இழுபட்டாலும், நன்றாக இருந்தது.பிறகு ரமணி சந்திரனின் கதைகள் வாசித்தேன். ஆங்கில காதல் கதைப் புத்தகமான Mills & Boon இன் தமிழாக்கமாக இருந்ததாலும், பெரிதாக அதிலிருந்து 'பெற' ஒன்றுமிருக்காததாலும் அவற்றை வாசிப்பதை நிறுத்தி, லஷ்மிக்குத் தாவினேன். அவவின் கதைகளின் முடிவுகள் ஊகிக்கக் கூடியதாக இருந்தமை பிடிக்கவில்லை. அவவையும் விட்டு, சிவசங்கரி, அனுராதா ரமணன் வாசித்தேன். என்னென்ன வாசித்தேன்..பிடித்ததா என்று ஒன்றும் ஞாபகமில்லை. வந்தா இந்துமதி. அதுவரை வாசித்தவற்றிலிருந்து அவவின் படைப்புகள் வித்தியாசப்பட்டிருந்தமை கவர்ந்தது. ஒன்றிரண்டு தவிர, கிடைத்தவை அனைத்தையும் முழுவீச்சில் வாசித்து முடித்தேன். இவற்றுடன் கைக்குக் கிடைக்கும் எல்லாச் சஞ்சிகைகளும் என் வாசிப்புக்கு இரையாகும். கொஞ்சம் வித்தியாசமான வாசிப்பைத் தந்தது என் மச்சான் வீட்டிலிருந்த புத்தகங்கள்தான். பெண்ணியம், நவீனத்துவம் என்று பல புதுச் சொற்களும் அவை சார்ந்த படைப்புகளும் அறியப்பெற்றேன். மல்லிகை இதழும் அங்கே தான் அறிமுகமானது. வாசிக்க கஷ்டமாக இருக்கிறதென நானாகவே தீர்மானித்து வாசிக்காமல் விட்டு "அட! விட்டுட்டமே" என இப்ப வருந்தும் படைப்பு "தாய்". தினமுரசு வாரப்பத்திரிகையில் மொழிபெயர்ப்பாக வெளிவந்தது. மொழிபெயர்ப்புகள் எளிமையான நடையில் இருப்பதில்லை என்பது எனது கருத்து. இங்கே இப்போது "விலங்குப்பண்ணை" ஒரு இலவச தமிழ்ப்பத்திரிகையில் வெளிவருகிறது. எத்தனை பேர் வாசிக்கிறார்களோ தெரியவில்லை!

இங்கேயுள்ள வாசிகசாலையில் நிறைய ஆங்கிலப்புத்தகங்கள் (7 daughters of Eve, The Alchemist, The Last Ride,The Dead Sea Scrolls, Mistress of Spices, தொல்பொருளியல் சம்பந்தமான புத்தகங்கள், Dean Koontz & Stephen King படைப்புகள்) எடுத்து வாசிப்பதுண்டு. அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் ஒருவரைச் சந்திக்கக் கிடைத்தது. 2004ல் இணையத்தில் வாசிக்கும் வரை அவரைப்பற்றியோ அல்லது அவர் படைப்புகளைப் பற்றியோ தெரியாது. "வாசிக்கிற பழக்கம் இருக்கோ" என அவர் கேட்டதற்கு ஆமென்றேன். "நல்லது. அப்பத்தான் பலதையும் அறியலாம்" என்றார். தொடர்ந்த 2/3 சந்திப்புக்களிலும் அவருடன் கதைத்திருக்கிறேன். அவர் எஸ்.பொ. நல்ல படைப்புகள் தாங்கி 'கலப்பை' என்றொரு காலாண்டு சஞ்சிகை வெளிவருகிறது. இலங்கையில் போன்று தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லை இங்கே. யார் வீட்டிலாவது போய் "தமிழ்ப்புத்தகம் என்ன இருக்கு?" என்றால் ஆ.வி/குமுதத்தைத் தான் நீட்டுகிறார்கள். " இவையல்ல..புத்தகம்?" என்று அழுத்திக் கேட்டால் வினோதமான பிராணியைப்போல பார்க்கிறார்கள்! :o(

இப்போது வாசித்துக்கொண்டிருப்பவை:
- பெரிய புராணம் ஒரு ஆய்வு
- Memoirs of a Geisha.

என் அடுத்த வாசிப்புகள்:
- கோயில் நூலகத்திலிருந்து எடுத்து வர இருக்கும் ஈழத்துப்பூராடனாரின் 'தமிழழகி'

- Da Vinci Code (இன்னும் வாசிக்கவில்லையா என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு: நான் நூலகத்தில் இதற்கு முன்பதிவு செய்து 7 மாதமாகிறது!!)

பெருமூச்சு!

வெந்த புண்ணில் வேலைப் பாச்சுற மாதிரி துளசி ஒரு வேலை செய்து போட்டா! ஹ்ம்ம்..!! அவ சொல்லுறதை சொல்லிட்டுப் போய்ட்டா...என்ட மனம் படுற பாடு எனக்குத் தானே தெரியும்.


அப்பிடி என்னதான் செய்தா/சொன்னா என்று சுட்டில போய் பாத்துட்டு வந்திருப்பீங்க. பாக்காதவர்களுக்கு: வலைப்பதிவர்கள் இப்ப விளையாடிக் கொண்டிருக்கிற விளையாட்டாம் (நான் இதை தட்டச்சி முடிக்க முதல் அவங்க விளையாடியே முடிஞ்சு போம்!) என்று என்னையும் இழுத்து விட்டா இந்த துளசி(க்கா/ம்மா). அவங்கவங்கட புத்தக அலுமாரில என்னென்ன இருக்கு, இப்ப என்ன வாசிச்சுக் கொண்டிருக்கிறாங்க என்று எழுத வேணுமாம். எல்லாருக்கும் புத்தக அலுமாரி என்டா எனக்கு அது புத்தக 'அழு'மாரி! வேறென்ன பின்ன..இருக்கிற ரெண்டிலயும் நிறைஞ்சு வழியிறது கணவரது முகாமத்துவம், கணக்கியல் மற்றது என்னுடைய கணினி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தான். இதெல்லாத்தையும் விட்டிட்டுப் பாத்தா கொஞ்ச கணினி, பொருளாதார, ஆ.வி/குமுதம் , ரீடர்ஸ் டைஜஸ்ட், 3 குறுக்குத் தையல் டிசைன் இதழ்களும் இரண்டு பேருடைய பாடக்குறிப்புகளும் ஆங்கில அகராதியும் என்சைக்ளோபீடியாவும் மிச்ச இடத்தில் முக்கால்வாசியை ஆக்கிரமிச்சுக் கொண்டிருக்கும்.

அதெல்லா.. ஆ..ஆ..த்துக்கும் பிறகு ஒரு 3 - 7% வீதம் மிச்சம். இதுக்குள்ளதான் 'புத்தகங்கள்'.
கவனமா நோண்டிப்பாத்ததில:

சிவகாமி இன்னும் அவட சபதத்தோட மாமல்லரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறா.(இவவோட சேர்த்து புத்தகக்டையில இருந்தது காணும் என்டு கூட்டிகொண்டு வந்த வந்தியத்தேவன், குந்தவை, வானதி, அருண்மொழி எல்லாரும் இலங்கையிலே நிண்டிட்டாங்கள்.)

பாரதியாரும் கவிதை பாடிக்கொண்டிருக்கிறார்.

சத்தியமா இந்த பாரதியார் கவிதையும் சிவகாமி சபதமும் ஆ.வி/குமுதமும்தவிர வேற ஒரு தமிழ்ப்புத்தகமும் வீட்டில இல்லை! (அண்ணியிட மாமாட நினைவுப் புத்தகம் தான் 4வது) வந்து..இந்த எண்கணிதச் சாத்திரப் புத்தகத்தையும் இதுக்குள்ளே சேர்க்கலாமோ?

ஒரு இந்து சமயப் புத்தகம் "Dance of Siva"
மாண்டூக்கிய உபநிஷதம்
மைக்கல் ஜக்சன்ட Moon Walking
ஸ்டீபன் கிங்கின் IT
In the footsteps of Eve
2 - 3 ISKON புத்தகங்கள்.
The Twentieth Train to Auchswitz


இவ்வளவுந்தான் என்ட 'அழு'மாரியில.

எல்லாரும் எல்லாரையும் கூப்பிட்டிட்டாங்க. நான் என்ட பங்குக்கு இந்த விளையாட்டில பங்கு கொள்ள இன்னும் அழைபடாதவர்களையும் வசந்தனையும் க்ருபாவையும்(இவங்களை யாரும் எனக்கு முன்னமே கூப்பிட்டிருந்தா நான் பொறுப்பில்ல.) கூப்பிடுறன்.

சரி அழைப்பிதழ் அனுப்பியாச்சு!

அங்க இலங்கையில வீட்டில இருந்த புத்தகங்கள்...ஹ்ம்ம்...பெருமூச்சுத்தான் விடேலும். அடுத்த முறை போககிடைச்சா எல்லாப்புத்தகங்களையும் சுருட்டிக் கொண்டு வாற திட்டத்தில இருக்கிறன். அம்மாட்ட சொல்லிடாதீங்க...உஷ்ஷ்!! அடுத்த பதிவில எப்பிடி வாசிப்புப் பழக்கம் தொடங்கினது..வளந்தது என்டு இந்தப் பதிவுக்கு ஒரு prequelம் இப்ப என்ன வாசிச்சுக் கொண்டிருக்கிறன் என்று ஒரு sequel உம் 2 in 1ஆகத் தாறன்.

நாயே..!

எனக்கு நண்பன் ஒருவன் இருக்கிறான். இருவருக்கிடையிலும் வாயில் நாய் மாடு பண்டி குரங்கு என்று சகல மிருகங்களும் தாராளமாக வந்து போகும்.

ஒரு நாள் அவன் சொன்ன/செய்த எதற்கோ பதிலாக நான் கொஞ்சம் இரைந்து கதைத்து விட்டேன். அவன் என்னை கேட்டான் "ஏன் இப்பிடி நாய் மாதிரிக் குலைக்கிறாய்?"

அவன் அப்படி கேட்டதற்கு நான் சொன்னேன்: நீ என்னை நாய் என்று திட்டுவதால் தான் நான் குலைக்கிறேன்"

அதற்கு அவன்: "உன்னை எப்பவாவது அப்பிடி ஏசியிருக்கிறனா நாயே!"


அதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. நான் சிரிக்கத் தொடங்கியதும் கோபம் வந்து விட்டது அவனுக்கு. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தான் அவனுக்கே தான் சொன்னது உறைத்தது. பிறகென்ன..ஒரே சிரிப்புத்தான்!

உன்னை 1 கேட்பேன்..

இதெல்லாம் தேசத்துக்கு மிகவும் முக்கியமான கேள்விகளா என்றெல்லாம் ஆராயாமல்..பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. முகில்களின் நிறை அளக்கப்படுவதுண்டா? எப்படி அளக்கிறார்கள்?

2. கவலையாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.நண்பர் வந்து தேற்றுகிறார்.."இதுக்கெல்லாம் போய் கவலைப்படாதே...எத்தனை பேர் உன்னை விட கஷ்டமான நிலமையில் இருக்கிறாங்க என்று யோசி". பேச்சுக்கு உங்களை விட கஷ்டத்தில் "க" என்பவர் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவருக்கும் ஒரு நண்பர் வந்து (உங்களூக்கு உங்கள் நண்பர் சொன்னது போலவே) தேறுதல் சொல்லலாம் தானே...அப்போ உங்களுக்கு "க" போல "க" வுக்கு "ப" என்று ஒரு ஆள் வரக்கூடும். "ப" வுக்கு ஒரு "ச" இருப்பார்.(என்னை "நீ போய் 'சா' " என்று சொல்லக்கூடாது ஆமா!!)இப்படியே போனா யார்தான் அந்த மகா..ஆ..ஆ துர்பாக்கியசாலி?தேற்றுவதற்கு நண்பர் இல்லாதவரா?

3. "அ" ஒரு விதவை. "அ" வை திரு."எ" திருமணம் செய்தால், "எ" விதவைக்கு வாழ்வளித்தவர் எனப்படுவார். ஆனால் அதே "எ" ஒரு தபுதாரனாயிருந்து "அ" அவரைத் திருமணம் செய்து கொண்டால் "அ" 2ம்(2/3/4 எது வேணா போட்டுக்கொள்ளலாம்) தாரம். அது எப்படி? ஏன் "அ" "எ"க்கு வாழ்வளித்தவராகக் கூறப்படுவதில்லை?

இனிமேலும் கேட்கப்படும்...(ஏன் ஓடுறீங்க??) ;o)

ஆசை ஆசை இப்பொழுது!

முதலில், என்னைப் போலவே ஆசைகளையுடைய கறுப்பிக்கு அவ எழுதின "கனவு" பதிவுக்காக பெரீய்ய்ய்யதொரு நன்றி. இந்த மாதிரி ஆசைகள் எனக்கு மட்டும் தான் இருக்கும் என இவ்வளவு நாளும் naive ஆக நினைத்துக் கொண்டிருந்த என்னை 'அப்படியல்ல' என்று உணர வைத்ததற்கு!

கறுப்பியைப்போலே எனக்கும் ஆசை..இலங்கையையும் இந்தியாவையும் அலுக்கும் வரை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று. இதைப்போலவே இன்னும் ஆசைகள் இருக்கு. நனவாக்குவது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை. அம்மா ஆட்டுக்குட்டி என்று பிள்ளைகள் வாலைப்பிடிக்க முன்னம் இவற்றைச் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகுதான்!(பிள்ளைகள் கட்டாயம் பிறக்கும்..வாலைப்பிடிக்கும் என்று நினைப்பது நான் வளர்ந்த பின்னணியின் default எண்ணங்களில் ஒன்றா??)

தொல்பொருள் ஆராய்ச்சியிலும், பழங்கால அரண்மனை/கோயில்/குகை/சிற்பம்/கல்வெட்டு இதெல்லாம் பார்ப்பதிலும் ஈடுபாடு அதிகம். சரித்திரக் கதைகள் வாசித்தது இந்த ஆசைகளை அதிகரித்து விட்டது. பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தொ.கா.பெட்டியில் இது சம்பந்தமாய் டொக்யுமென்ட்ரி போட்டார்களோ..அந்தப் பொழுதில் அதைப் பார்ப்பதைத் தவிர வேற வேலை ஒன்றும் நடவாது. நிறைவேற்றக் கடினம் அல்லது இன்னும் கொஞ்சம் காலம் தேவை என நான் கருதும் என் ஆசைகளை (இப்போதைய நிலவரப்படி) பட்டியலிட்டால்:

1. நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும்
2. இலங்கையில் சைக்கிளில் திரிய வேண்டும் + இடங்கள் பார்க்க வேண்டும்
3. இந்தியாவில் காலவரையறையன்றி சுற்றிப்பார்க்க வேண்டும்
4. தொல்பொருளாராய்ச்சி நடக்கும் இடத்தில் தங்கி, ஆராய்ச்சிக்குழுவில் இடம் பெற வேண்டும் (புதிதாய் எதாவது கண்டுபிடித்தல் மிகவும் விரும்பப்படும் :o)

மிக மிக முக்கியமாக: இவையெல்லாவற்றுக்கும் போதுமானளவு $$ வேண்டும்!! ;o)

எனக்குள் ஒரு கேள்வி. அதைக்கேட்க முன்:
எனக்கு - ஒரு வீட்டிலோ, யுனிற்/அப்பார்ட்மென்டிலோ - தனியே /என் நண்பிகளுடன் தங்கி வாழ வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது(இப்பவும் சில வேளை தலை தூக்கும்!). ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திருமணம் முடித்து வெளிநாடு வந்துமாயிற்று. ஆசை எட்டிப்பார்க்கும். என் ஆசையை வாழும் , இங்கைத்தேய நண்ப நண்பிகளை பொறாமையுடன் பார்க்க வைக்கும். எனக்கும் அப்பிடி அவர்களைப்போல இருக்க ஒரு சந்தர்ப்பம் வந்தது. கணவர் கனடா போக வேண்டிய தேவை ஏற்பட்டது. 20 நாட்கள். ஆசை நிறைவேறிற்று. எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்தேனோ அப்படியே இருந்தது. சந்தோசமாக உணர்ந்தேன். அதற்காக திருமணவாழ்க்கை பிடிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. குடும்பத்தினரோடு கழிக்கும் நேரம்/ வாழ்க்கை தந்ததை விட நான் தனியே இருந்து சுதந்திரமாகச் செயற்பட்டது எனக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தந்தது. முக்கியமாக, நான் குறிப்பிட்ட எதையும் செய்யும் போது இன்னொருவரைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அவருக்கு வசதிப்படுமா..விருப்பமான activity ஆக இருக்குமா என்றெல்லாம் யோசிக்காமல், carefree யாக இருக்க, எனக்கு விருப்பமானதெல்லாம், விரும்பியபோதெல்லாம் செய்யவும் முடிந்தது.( அடிப்படையில் சொல்லப்போனால் பொறுப்புகளற்றிருப்பது!)

சரி கேள்விக்கு வருகிறேன்: எந்த இடமாகவோ பயணமாகவோ இருந்தாலும், தனித்து அதைப் பார்க்க/பயணிப்பதற்கும் கூடவே இன்னும் ஆட்களுடன் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். அனுபவம் கட்டாயம் வேறுபடும். நினைத்த மாத்திரத்தில் பயணம் கிளம்புவது சாத்தியமாவதில்லை. திருமணமானோர் பாடு கேட்கவே வேண்டாம்..பயணி தன்னை மட்டுமல்லாது குடும்பத்தவரையும் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை (மிகச் சிலரைத்தவிர) இருக்கிறது. தனி அனுபவம் பெற விரும்பும் ஒருவருக்கு (கறுப்பி / என்னைப் போல!) தனித்திருப்பதுதான் இதற்கு தீர்வாக முடியுமா? அல்லது ஆசைகளின் நிறைவை, கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் பெறலாமா?

உயிர் காத்தல்

இந்தப்புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பது பற்றி கடந்த ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். வாசித்து முடித்துவிட்டேன். என்ன புத்தகம் என்று கேட்கிறீர்களா? முதலில் புத்தகத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு பிறகு பெயரைச் சொல்கிறேன். கொஞ்ஞ்ஞ்சம் பொறுத்தருள்க :o)

ஹொலொகாஸ்ட் பற்றி கட்டாயம் அறிந்திருப்பீர்கள். எத்தனை லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எல்லாம் ஹிட்லருக்கு அவ்வினத்தின் மேல் இருந்த வெறுப்புத் தான் காரணம். சிறுவர், முதியோர் என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஜேர்மனி, ஆக்கிரமித்த நாடுகளிலெல்லாம் யூத வெறுப்பு பிரச்சாரம் நடத்தியது. ஆனாலும் பெல்ஜியத்தில் மிக மிக மிகக் குறைந்த அளவிலேயே ஜேர்மனியின் யூத எதிர்ப்பிற்கு ஆதரவு கிடைத்தது. ஆனாலும் இது ஜேர்மனிக்குப் பிரச்சனையாக இருக்கவில்லை. பெல்ஜியத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான யூதர்கள் சித்திரவதை முகாம்களிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீண்டு வந்தவர் எண்ணிக்கை மிகக்குறைவே. கைது செய்யப்படும் அல்லது தாமாகவே (உண்மை சொன்னால் விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில்) நாம் யூதர் என்று ஒத்துக் கொண்டவர்களும் முதலில் 'மெக்கலன்' என்கிற இடத்திலிருந்த ஒரு முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். ஒரு ரயில் பயணத்திற்குரியளவு ஆட்கள் சேர்ந்ததும் ரயில்களில், கால்நடைகளை அடைத்துச் செல்வது போல் மனிதர்களையும் அடைத்தே அவர்களின் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டர்கள். இந்த ரயில் பயணங்களில் ஒன்று நடுவழியில் வழிமறிக்கப்பட்டதிலும், ஓடும் ரயிலில் இருந்து குதித்தவர்களூமாக அந்த இரயிலில் பயணித்த யூதர்களில் கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு பேர் தப்பினர்.

ஆயுதக்குழுவினரால் 'அபாயகரமானது' என நினைக்கப்பட்ட செயலைச் செய்தோர் மூன்றே மூன்று பேர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள்: ஒரே ஒரு கைத்துப்பாக்கியும், சில pliersம் தான். கூடவே, இரயிலை நிற்பாட்ட உதவியாக சிவப்புக்கடதாசியால் சுற்றப்பட்டு நிறுத்தச் சைகை விளக்குப் போல உருமாற்றப்பட்ட ஒரு அரிக்கன் விளக்கு. விளக்கின் உதவியுடன் ரயிலை நிறுத்தி, ஆட்களை தப்பிச்செல்லுமாறு சொன்னார்கள்.அத்துடன் தப்பிச்சென்றவர்களுக்கு, கைச்செலவுக்கென 50 பிராங் பணத்தையும் கையளித்தார்கள். இதில் ஈடுபாட்ட மூவர்: யூரா லிவ்ஷிட்ஸ், ஜீன் ஃப்ராங்கள்மொன், ரொபேர்ட் மைஸ்ற்ரியௌ ஆகியோர்.

புத்தகத்தின் பெயர்: The Silent Rebels (ISBN: 1903809894) அல்லது The 20th Train to Auschwitz (ISBN: 1843540444)

இந்தப்புத்தகத்தை வாசிக்கும் வரையில் நான் இந்நிகழ்வைப் பற்றிக் கேள்விப்படவேயில்லை. கொடூரச் சாவிலிருந்து ஷிண்ட்லரைப் போலவே மக்களை மீட்ட இவர்கள் பரவலாக அறியப்படாதிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.

ஒரு கடிதம்!

17 மே 2010



அன்புள்ள ஷ்ரேயா

எப்படி சுகம்,இன்றைக்கு இதை எழுதும் போது நான் நலமாக இருக்கிறேன். நீர் இதை வாசிக்கும் போதும் & எப்போதும் எல்லாரும் நலமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன். எல்லாக் கடிதங்களிலும் நலம் பற்றிக் கேட்கிறோமே..கேட்கப்படுகின்ற நலம் வெறும் உடல் நல விசாரிப்பாக மட்டுமே இருக்கிறது. யாருக்குக் கடிதம் எழுதப்படுகிறதோ அவரது மனமும் நலம் விசாரிக்கப்படவேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் அதை எப்படிக் கேட்பது? "மனத்தளவில் நலமாக இருக்கிறீர்களா?" என்றா? "எனக்கு மனநலக் குறைவா" என்று கேட்டு அடிக்க வந்து விட மாட்டார்களா? :o)

நீர் 2005 இல் சொல்வது போல் நான் இப்போது சொல்கிறேன்: "இங்கே வரமுதல் என் வாழ்வில் நான் கற்றவை/உணர்ந்தவை மிகக் குறைவு. அதைப்பற்றிய மனவருத்தங்கள் நிறைய உண்டு எனக்கு. இங்கே வந்ததிலிருந்து நான் நிறையக் கற்று/உணர்ந்து கொண்டுள்ளேன். என்னை வளர்த்துக் கொண்டுள்ளேன். இன்னும் முன்னேற எவ்வளவோ உண்டு". மிகவும் உண்மையான வார்த்தைகள். அதைப் போலத் தான் நான் இப்போது உணர்கிறேன். நீர் என்னதான் சொல்லும்... இந்தச் சோம்பேறித்தனம் தான் என்னை விட்டால் தான் ஏதிலியாகிவிடுமாம் என்று கூடவே ஒட்டிக் கொண்டு திரிகிறது. என்னைச் சூழ்ந்திருக்கும் அருமையான குடும்பத்தையும், நண்பர்களையும் குறித்து நான் சந்தோசப்படுகிறேன். மிகவும் கொடுத்துவைத்தவள் நான். கடைசியாய் நான் உமக்குக் கடிதம் எழுதிய காலத்தில் இருந்தது போன்று வெடுக்கென நினைத்ததைச் சொல்லிவிடுவதில்லை இப்போது. ஓரளவுக்கு யோசித்துக் கதைக்கிறேன்.

இப்பவும் வெளிநாட்டிலா இருக்கிறீர்? உலகம் சுற்றிப் பார்க்க விருப்பமாயிருந்தீரே..அந்தக் கனவு நிறைவேறியதா? எந்தெந்த நாடுகளுக்குப் போனீர்? எத்தனையாம் ஆண்டு? தற்போது எங்கே, என்ன வேலை செய்கிறீர்? உம்முடைய பட்டப்படிப்பு என்னவாயிற்று? ராம் அண்ணாவின் நெறியாள்கையில் நடந்த நாடகத்துக்குப் பிறகு வேறேதாவது நாடகத்தில் நடித்தீரா?தன்னையறிதல்" கலந்துரையாடல்கள் எப்படிப் போகின்றன? கடைசியாக நான் போன வகுப்பில் நிலையானவை, நிலையல்லாதவை பற்றியும் , நிலையானவை போலத் தோன்றும் நிலையல்லாதவை பற்றியும் கதைத்தோம். உணர்ச்சிகள், ஒருவரின் தனித்தன்மை (individuality), நமது மனதிலுள்ள எண்ணங்கள்/ஆசைகள்/பயங்கள்/கனவுகள் - இவற்றின் தோற்றம்..இந்த தலைப்பிலே அமைந்த உரையாடல்கள்தான் எங்கட எல்லா உரையாடல்களுக்குள்ளும் நிறையக் கற்றுத் தந்தவையும், எனக்கு மிகவும் பிடித்தவையும். அடிக்கடி இந்தச் சந்திப்புகளுக்கு இப்போ போகாததையிட்டு கொஞ்சம் மனவருத்தம்.

வலைப்பதிவர்களில் யாரையாவது சந்தித்திருக்கிறீரா? யார் இந்த வார நட்சத்திரம்? இந்தக்கடிதம் பற்றி வலைப்பதிவில் எழுதுவீரா? இந்தக்கடிதம் உமக்குக் கிடைத்தவுடன் "கடிதம் கிடைத்தது" என மறக்காமல் ஒரு வரியாவது எழுதவும்.குடும்பத்தில் அனைவரையும் அன்புடன் கேட்டதாகச் சொல்லவும். குறிப்பாக அம்மாவை. உமது மற்றைய நண்பிகள் என்ன செய்கிறார்கள்?அவர்களும் தத்தம் குடும்பம், வேலைகள் என்று பிஸியா?அவர்களையும் நலம் விசாரித்ததாகச் சொல்லவும்.

கடிதம் நீண்டு விட்டது. இதை ஒருங்குறியில் எழுதியிருக்கிறேன். தற்போது இணையத்தில் அதுதான் பாவிக்கிறார்கள். ஒருவேளை உமது கணினியில் வாசிக்க முடியாமல் போகலாம். அதனால் கீழே இதனை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். எங்கே போய் தமிழுக்கு மாற்றி வாசிக்க வேண்டுமென உமக்குத் தெரியுந்தானே!

என்றும் அன்புடனும், அமைதியுடனும், மனநிறைவு+திடத்துடனும், தேகசுகத்துடனும் வாழ்க்கையை வாழ்க!

இப்படிக்கு,
அன்புடன்,
ஷ்ரேயா

கடிதத்தில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் திகதியன்று எனக்கு (இன்ஷா அல்லாஹ்!) வரும்..எனக்கு நானே எழுதிக்கொண்ட கடிதம். ஏன் என்று கேட்கிறீர்களா? சுத்தமா தெரியாது ;o)

உங்களுக்கும் எதிர்காலத்தில் உங்களிடமிருந்து ஒரு கடிதம் வர ஆசையா? இவர்கள்தான் அஞ்சல்காரர்கள் : www.futureme.org

வந்தேறுகுடிகளா?

இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும்(இவர்களது வழித்தோன்றல்கள்தான் வேடர்களா?) இருந்தார்கள். பிறகு நாடு கடத்தப்பட்ட விஜயன் வந்திறங்கியதிலிருந்து புதிதாக ஒரு இனத்தவர். புதியவர்களே சிங்களவர்கள். இப்படித்தான் எங்கள் வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம். ஏற்கெனவே தீவின் வடபாலிருந்த நாகர்களைத் தமிழரென சிங்கள வரலாற்றறிஞர்கள் பலர் ஏற்றுக் கொள்வதில்லை.

இப்போதும் பல சிங்களவரைக் கேட்டால் தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றுதான் சொல்வார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை - வரலாற்றுப் புத்தகத்தில் இருப்பதுதானே அவர்களுக்குத் தெரியும். அப்போ வடக்கில் இருந்த நாகர்கள் யார் எனக் கேட்டால் முழிப்பார்கள். வரலாற்றுப் புத்தகங்களில், (எந்த நூற்றாண்டுகளென மறந்து விட்டேன்) இன்னின்ன நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தென்னிந்தியப் படையெடுப்பின் போது (உதாரணம் ராஜ ராஜ சோழன்) வந்த படைகளில் இருந்தவர்களிற் பலர் - இலங்கையரை மணம் செய்து - இலங்கையிலேயே குடியேறியமை என்று குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் தான் முதலில் இலங்கைக்குத் தமிழர் வந்தனராம். அதற்குப் பிறகு பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் தேயிலை / கோப்பித் தோட்டங்களில் வேலைக்காக அமர்த்தப்பட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தமிழர்கள் வந்தமை.

இவ்விரண்டு காரணிகளாலுமே இலங்கையில் தமிழ்க்குடியேற்றம் உண்டாயிற்று என்பதே வரலாற்றுப் பாடங்களினது அசைக்க முடியாத கூற்று. இந்த எண்ணம்/நிலைப்பாடு அரசியல்வாதிகளினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் மட்டுமல்லாது, ஆவணங்கள், இணையத்திலும் இலங்கை வரலாறு எனத் தேடினால் மேற்கூறிய விதத்திலேயே இலங்கை (தமிழரது) வரலாறு விபரிக்கப்படும். இதனை படித்தவர்களும் நம்புவதுதான் வேடிக்கை. இலங்கையிலே விஜயனின் வரவுக்கு முன்னமிருந்தே வாழ்ந்து வந்த நாகர்களின் வழி வந்தவரே தமிழர் என்பது எனது நம்பிக்கை. இது சரியா பிழையா?

இங்கே எனது அலுவலகத்தில் இரண்டு தென்னிந்தியர் உளர். அதில் ஒருவர் கொஞ்ச நாளைக்கு முதல் "தென்னிந்தியாவில் உங்களது மூதாதையரின் இடம் என்ன?" என்று கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தெரியாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். (இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து கடலால் இலங்கை பிரிக்கப்பட்டு எத்த்த்தனை ஆயிரம் ஆண்டுகள். இதிலே அம்மம்மாட அம்மம்மாட (x 250)......அம்மம்மாட ஊர் எதுவென்று கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்!!) பிறகு தான் விளங்கிற்று, அவர் பிரிட்டிஷாரால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்களின் வழித்தோன்றல்களில் ஒருவராக என்னை நினைத்திருக்கிறார். போய்ச் சொன்னேன், "அப்படியல்ல. நான் இலங்கைத் தமிழ்". அவருக்கோ குழப்பம்.."பிரிட்டிஷாரால் கொண்டு போகப்பட்டவர்கள் தானே இலங்கையில் தமிழர் " என்று கேட்டார். இலங்கை வரலாறு சொல்ல வேண்டியதாயிற்று (என் version :o) ). ஆனாலும் அவர் முழுக்க convince ஆகின மாதிரித் தெரியவில்லை.

மற்றத் தென்னிந்தியருடன் கதைக்கும் போது, அதிலும் இலங்கை வரலாறு மூக்கை நுழைத்தது. தமிழர் குடியேற்றம் தென்னிந்தியப் படையெடுப்பின் (மீண்டும், ராஜ ராஜ சோழன்) போது, தமிழ்ப்போர்வீரர்கள் இலங்கையில் குடியேறின போது தான் ஆரம்பித்தது என்றே இவர் சொல்கிறார். (இவர்தான் இராணுவத்தில் இருந்தவர்..அதனால் இப்படி யோசித்திருக்கக் கூடும்)

எது சரி? நான் நினைப்பதுவா? முதலில் குறிப்பிட்ட இந்திய நண்பரது எண்ணமா? இரண்டாவது இந்திய (இராணுவ) நண்பரின் கூற்றா? அல்லது இவர்கள் இருவரும் சொல்வதைச் சேர்த்துச் சொல்லும் இலங்கை வரலாற்றுப் புத்தகமா?

காலைப்பொழுது

அவர்களை நான் கண்டது ட்ரெயினைப் பிடிக்க அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது தான். அன்றைக்கு எழும்புவதற்குக் கொஞ்சம் பிந்தி விட்டது. தொடராக அப்படியே எல்லாச் செயல்களும் பிந்தி விட்டன. தொடர்வண்டியையாவது பிந்திப்போகாமல் பிடித்து விட வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தேன்.

அப்பா முன்னுக்கு நடக்க, அக்காவும் தங்கையும் தம் பைகளை முதுகில் கொழுவிக் கொண்டு நடந்து வந்தார்கள். அப்பாவிடம் என்னவோ கேட்டா அக்கா. அப்பாவும் ஆமென்று சொன்னாரென நினைக்கிறேன். விரையும் என்னைப்பார்த்து புன்னகைத்தார். எங்களுடைய ஊரில் இந்தியத் துணைக்கண்டத்தவர் அதிகம். எங்கள் நிறத்தில் யாரைக் கண்டாலும் ஒரு புன்னகை. சிலர் பதிலுக்குச் சிரிக்காமலும் போவதுண்டு. இவர்களும் துணைக்கண்டத்தவர்தான். அவர் பார்த்துச் சிரித்ததற்கு பதிலாக ஒரு அவசரப் புன்னகையை நானும் உதிர்த்து விட்டு அவ்ர்களைக் கடக்கையில் காதில் "good morning" ஒருமித்த குரலில் கேட்டது.

அவர்கள் சொல்வார்கள் என்று எதிபார்க்கவில்லை. good morning இனித்தது. அவசரமாகத் திரும்பி அவர்களுக்கும் பதிலுக்கும் சொன்னேன். என் வியப்பு அப்பட்டமாக குரலில் தெரிந்தது. அதே வாரம் திரும்பவும் சில முறை கண்டேன். அப்பவும் ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்புடன் காலை வணக்கம் சொன்னார்கள். பதிலுக்குச் சொல்லிப் போனேன்.

இன்றைக்குக் காலையில் அப்பா, அக்கா கேட்ட எதற்கோ கடுமையாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார். என்ன சொன்னாரெனத் தெரியவில்லை. அவவுக்கு முகமெல்லாம் கறுத்து அழுகை வரும்போல இருந்தது. இந்த நிலையில் காலை வணக்கம் சொன்னால் திரும்பிச் சொல்வார்களோ என்று எனக்குத் தயக்கம். ஒன்றுமே பேசாமல் தொங்கிய தலையோடு போகும் அந்த வாடிய பிஞ்சு முகத்தைப் பார்த்தபடி - கடுஞ்சொல் சொன்ன அப்பாவைத் மனதினுள் திட்டிக் கொண்டு - நான் மௌனமாக அவர்களைக் கடக்க..

"ஹலோ"...

மாயாவும் மணற்புயலும்

இங்கே SBS என்று ஒரு தொ.கா.நிலையமொன்றுண்டு. அதிலே பல உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்படுவது வழக்கம். இந்தியப் படங்களாக நான் அதில் பார்த்தவை: டெரரிஸ்ட், தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே<--இதை the braveheart takes away the girl என்பது போல மொழி பெயர்த்திருந்தார்கள்.), Sandstorm, மற்றது மாயா. சாண்ட்ஸ்டோர்மும் மாயாவும் எனக்குள்
ஏற்படுத்திய உணர்வுகளை மற்ற இரண்டும் ஏற்படுத்தவில்லை. டெரரிஸ்ட் படம், சில விடயங்களைக் காட்டிய விதம்(portray பண்ணிய விதம்) ஒரு விளங்கிக் கொள்ளாத / புரிந்து கொள்ளாத தன்மையைக் காட்டியது என்றே நான் நினைத்தேன்.

மணற்புயல் - வெள்ளி இரவு 12 - 1 மணியளவில் திரையிட்டார்கள் (அந்த நேரம் எதுக்கு முழிச்சிருந்து தொ.கா பார்த்தேன் என்றெல்லாம் கேட்கக் கூடாது) நடித்தவர்களில் நந்திதா தாஸை மட்டுமே அடையாளம் கண்டு கொண்டேன். படத்தில் அவவினது கதாபாத்திரத்துக்குப் பெயர் சன்வரி தேவி. கதையின் பின்புலம் ராஜஸ்தான். மட்பாண்டங்கள் செய்து விற்று பிழைப்பை நடத்தும் கீழ்ச் சாதிப் பெண்ணாக நந்திதா தாஸ். பிழை செய்தால் தட்டிக் கேட்கும் பெண். இவளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அரசாங்கத்தால் நடத்தப்படும் " ஸதின்" அமைப்பில் சேர அழைக்கிறார் ஒரு பெண்மணி. முதலில் இல்லையென்றாலும் பிறகு (ஷ்ரேயா நித்திரை கொண்டுவிட்டபடியால் ஏன் என்று தெரியவில்லை) போய் அதில் சேருகிறாள். இவ்வமைப்பு பெண்களுக்கானது. சிறு வயதுத் திருமணங்களை எதிர்ப்பது. ஊரில் ஒரு "உயர்"சாதியினரது சின்ன மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. வைபவத்தின் போது போலீசார் வந்து அத்திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர். ஆனாலும் கையூட்டு வாங்கிக் கொண்டு திருமணம் நடத்தும் பெரியவர்களைக் கைது செய்யாமல் விடும் போலிஸ் அதிகாரி, தனக்குத் தகவல் வந்தது ஊருக்குள்ளிருந்து தான் என்று கிடைத்த கையூட்டுக்கு நன்றிக்கடன் செலுத்துகிறார். ஆரம்பிக்கிறது கஷ்டகாலம் சன்வரி தேவிக்கு. தொல்லை மேல் தொல்லை கொடுத்தும் அசையாமல் நிற்கும் அவளைப் பார்த்து ஊர்ப்பெரியவர்களுக்கு ஆத்திரம். சரியான பாடம் புகட்ட வேண்டும், அப்பத்தான் இவளது கொட்டம் அடங்கும் என்று சொல்லி, ஊர்த்தலைவர் உட்பட 5 பேர் சேர்ந்து அவளது கணவனுக்கு முன்னாலேயே அவளுடன் வன்புணர்கிறார்கள். இவர்கள் மீது வழக்குத் தொடர்கிறாள் ச.தேவி. அவளைக் காக்க இயலாமற் போனதை எண்ணிக் குமுறும் கணவனது நடிப்பு தத்ரூபம். படம் பார்க்கையில் ஆத்திரமும், கையாலகாத்தனமும் நம்மையும் தாக்குகின்றன. முறைப்பாடு செய்யக் காவல் நிலையத்திற்குச் செல்லும் சன்வரி தேவி தம்பதியை , கையூட்டுப் பெற்ற அதே அதிகாரி, மருத்துவச் சான்றிதழ் பெற்று வரும்படி சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றான்.ஸதின் அமைப்பில் சேர்ந்ததாலேயே சன்வரி தேவிக்கு இத்தனை பிரச்சனைகளும் என்று உணர்ந்த அவ்வமைப்பின் அதிகாரி (ச.தேவியை சேர அழைத்த அதே பெண்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவுகிறா. இவர்களது வழக்கு, தத்தம் அரசியல் ஆதாயத்துக்காகப் பலரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது & வழக்கு எவ்வாறு சாட்சியங்களும், அதிகாரிகளும் விலைக்கு வாங்கப்படுவதால் அலைக்கழிக்கப்படுகிறது என்பதே மீதிக் கதை.

சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைப் பார்க்கப் பார்க்க இரத்தம் கொதிக்கிறது. ஆனாலும் என்ன நடந்தாலும் அயராது போராடும் சன்வரி தேவியும் உறுதுணையாக நிற்கும் கணவனும் மனதில் நிற்கிறார்கள்.


(இயக்குநனர் திக்விஜய் சிங்கின் முதல் படம்) மாயாவின் கதைக்களமோ வேறு. ஒரு சின்னப்பெண். தாய் தந்தையரை விட்டு, உறவினர் வீட்டில் வளர்கிறாள். அவ்வுறவினரின் மகனும் இவளும் நல்ல நண்பர்கள். அந்த உறவினரது வீடு முழுக்க பல்லிகள். பல்லியை இந்தப்படத்தில் ஏதோ ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். என் மரமண்டைக்கு எது என்னவென்று எட்டவில்லை :o(

ஒரு நாள் இவள் பெரிய பெண்' ஆகி விடுகிறாள். மாயாவை அவளது ஊருக்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செகிறார்கள். இவ்வளவு நாளும் சுதந்திரமாக விட்டவர்கள் கொஞ்சம் கட்டுப்பாடுகள் போடுகிறார்கள் என்று மாயாவுக்கும் உறவினச் சிறுவன் சஞ்சய்க்கும் பிடிக்கவில்லை. முன்பு மாதிரி விளையாடப் போக முடியாதே!! தாய் தந்தையரிடம் அழைத்துச் செல்லப்படும் மாயாவுக்கு அவளது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்குவார் யாருமில்லை. மாறாக அவள் தன் வயதுக்குரிய விடயங்களில் ஈடுபடும்போது, இடைநிறுத்தப்பட்டு 'நீ இப்போது ஒரு பெரிய/வளர்ந்த பெண்' என மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறாள். ஊரிலுள்ளவர்களுக்குச் சொல்லி ஒரு பெரிய விருந்தும் விழாவும் என வீட்டவர் அவளைத் தயார்ப்படுத்துகின்றனர். என்ன விருந்து என்ன விழாவென்று எம்மையும் எதிர்பார்க்க வைக்கிறது. விருந்து நாளும் வருகிறது. அழகாக அலங்கரித்த மாயாவை கோயிலுக்கு அழைதுச் செல்கிறார்கள். பூசையோ, ஏதோ நடைபெற்ற பின் அவளை கதவுகள் கொண்டதொரு மண்டபத்துக்குள் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறதென்று அறியாது விட்டாலும், தான் போகவில்லையென மறுக்கும் மாயா வலுக்கட்டாயமாக அவ்வறைக்குள் அனுப்பப்படுகிறாள். சஞ்சய் அது பிடிக்காமல் அவளை மீட்கும் நோக்கில் கதவை நோக்கி ஓடுகையில், அவனது பெற்றோரால் இழுத்து நிற்பாட்டப்படுகிறான். அங்கே அந்தப் பூட்டிய மண்டபத்துள் அழும் மாயாவும், அவளைக் காக்க இயலாமல் நாமும். அறை/மண்டபத்தின் நடுவே ஒரு மேடை. பலிபீடம் என்பது பொருத்தமாயிருக்கும். அப்பீடத்தின் விளிம்பிலிருந்து 10 வயத்துக்குரிய முழங்கால் கீழே தொங்க, மாயா அணிந்திருந்த சேலையைக் காணோம். அந்தக் கால்களுக்கு நடுவே தலைமைப் பூசாரி. அவளது கால் துடிப்பதுவும், பூசாரியின் புணர்வுச் செயற்பாட்டின் காலசைவும் காட்டப்படுகிறது. மாயாவின் அலறலில் திடுக்கிடும் சஞ்சய். ஏதோ கெட்டது தான் நடக்கிறது என அவன் உணர்கிறான். வரிசையாய் எல்லாப் பூசாரிகளும் மாயாவை 'ஆசீர்வதித்த' பின்பு, துவண்டுபோய் நடக்கமுடியாம்ல் வெளியே வரும் மாயா. இந்த விருந்தும் பூசையும் இதற்குத்தானாம். சஞ்சய்யின் சினேகிதன், அவனது சகோதரிக்கும் பூசாரி கெடுதல் செய்து விட்டதால் அவர் மேல் கோபமுடையவனாக இருக்கிறான். அவனும் சஞ்சயும் சேர்ந்து பூசாரி வீட்டிற்குள் இறைச்சியை எறிகிறார்கள்.அவர்களுடன் கூடவே எனக்கும் ஒரு அற்ப சந்தோசம்.

பருவமெய்தும் பெண்களை பூசாரிகள் புணர்வதால் அப்பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என நம்பும் ஒரு சமுதாயம். இத்தனைக்கும் படத்திலே மாயாவின் பெற்றோர் படிப்பறிவற்றவர்கள் அல்லர். இதுவும் சன்வரிதேவியினதைப் போன்றே ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவியது. இந்த வழக்கம் இந்திய அரசினால் தடை செய்யப்பட்டாலும், இன்னும், வருடத்திற்கு கிட்டத்தட்ட 5000 சிறுமிகள் இக்கொடுமைக்கு (அவர்களது பெற்றோராலேயே) உட்படுத்தப்படுகிறார்கள் என்று ஒரு அதிர்ச்சியான புள்ளிவிவரத்தையும் இயக்குனர் தருகிறார். எனக்கு விளங்கவில்லை, ஒரு தாயானவள் தான் இப்படியான ஒரு கொடுமைக்குட்படுத்தப்பட்டதை, தனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்ததென்பதை மற்ந்து விடுவாளா? மகளுக்கு அந்தக்கஷ்டம் வேண்டாமே என்று நினைக்க மாட்டாளா? அறிவில்லையா இவர்களுக்கு? இவ்வழக்கம் இன்னும் தொடர்கின்றமைக்கு யார் காரணம்?

படம் பார்க்கும் போது எவ்வளவு ஆத்திரமாகவிருந்ததோ, அதை விட இன்னும் பல மடங்கு எழுதுகையில்.

போகுமிடம் ஒளி வீச...

கொஞ்ச நாளா தொ(ல்)லைக் காட்சியில் ஒரு விளம்பரம் போடுறாங்க. ஒராள் இரவில கட்டிலால எழும்பி, பிய்ச்சுப் போட்ட கடதாசி துண்டுகளை சாளரத்துக்குள்ளால வெளியில எறியிறார். அதை எறிஞ்ச சாளரம் வழியாவே தானும் குதிச்சு (எலும்புகள் ஒன்றுமே உடையாம!!) ஓடுகிறார். காட்டுக்குள்ளாலயெல்லாம் ஓடுறார்..கரடியொண்டு துரத்துது, அவர்ட கால் படுற இடமெல்லாம் வெளிச்சம் வருது. (நல்ல காலம்..ஊரில இந்தாள் இல்ல..இல்லாட்டி, சாமீ! என்டு பகல்ல சனமும் ..களவெடுக்க வசதியா இருக்கும் என்று இரவில கூட்டிப் போக கள்ளனும் க்யூவில நிப்பாங்க!!) சரி..இப்பிடியே விளம்பரம் தொடர்ந்து போகுது.

இவ்வளவு நாளும் சப்பாத்து உற்பத்தியாளர்கள், "எங்க சப்பாத்தில சொகுசு அதிகம்", "காற்றோட்டம் உள்ளது" என்று தானே யோசிச்சு உருவாக்கிட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறாங்க. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில மனிசனைக் கடிச்ச கதை மாதிரி தான் இப்ப ஆகிப் போச்சு(அது என்ன கதை??யாராவது சொல்லுங்க!) ஏன் அப்பிடிச் சொல்றேன் என்றால், இப்பவெல்லாம் கடிகாரத்தில இருந்து ஏவுகணை வரைக்கும் எல்லாத்திலயும் micro processors இருக்குது தானே.( புதுசா ஏதாவது சொல்லு என்கிறீர்களா..சொல்றன், சொல்றன்)

அதே micro processorsல ஒன்றைத் தூக்கி சப்பாத்துக்குள்ள வைச்சிருக்கிறாங்க, அடிடாஸ். அந்த processor, நீங்க கால் பதிக்கிற விதம், பாதத்தில் எந்த இடத்தில் கூடுதலாக cushioning வேணும் & இன்னும் கொஞ்சம் வேற விஷயங்களையும் எல்லாம் கணக்குப் போட்டு நீங்க நிலத்தில கால் வைக்கும் விதத்துக்கு ஏத்த மாதிரி வளைஞ்சு குடுக்குதாம். விலைதான் மயக்கம் போட்டு விழ வைக்கிற அளவில இருக்கும் என்று நினைக்கிறன்..ஒரு வேளை பர்ஸின் கனமறிந்து அதுக்கும் வளைஞ்சு குடுக்குமோ??. :o)

சிட்னிக்கு இப்பத்தான் வருகுது இந்தச் சப்பாத்து..ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடாவில முதலே வந்திருக்குமென்டு நினைக்கிறன்.

இந்தப்பதிவை தட்டச்ச ஒரு ஞாபகம் வருது.. எனக்கு அப்ப ஒரு 10- 12 வயசிருக்கும்.அப்ப புதுசா ஒரு சப்பாத்து வந்தது. நடக்கும் போது சப்பாத்தின் அடியில் உள்ள லைட் எரியும். அதை வாங்கித் தரச் சொல்லி அம்மாக்கு ஒரே நச்சரிப்பு. எவ்வளவு அரியண்டப் படுத்தியும் அது கிடைக்கல்ல!! (ஹ்ம்ம் <-- ஏக்கப் பெருமூச்சு!..வேற ஒன்றுமில்ல!!) :o(

போர்களும் போர்வீரர்களும்

துளசியின் ANZAC நாள் பற்றிய பதிவை வாசித்த பின் உடனே எழுத வேணுமென நினைத்திருந்தேன்..இப்பத்தான் எழுதுகிறேன்.

சமூகக் கல்வி, இலங்கையில் படித்தவர்களுக்கு அறுவையான பாடம். இத்துடன் பல பேரால் தரித்திரம் என ஏசப்படும் சரித்திரமும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஏசி ஏசித்தான் அதை படிப்பதே!

நான் இப்போ சொல்ல வருவது நான் எப்படியெல்லாம் ஏசினேன் என்பதை அல்ல. சமூகல்வியிலா அல்லது வரலாற்றிலா என்று ஞாபகமில்லை..உலக வரலாறு பற்றிய ஒரு பகுதி இருந்தது. அதில், நடந்த உலகப் போர்களைப் பற்றியும் ஐ.நா சபை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இருக்கும். என் ஞாபகத்திற்கு எட்டியவரை (எட்டாட்டி கொக்குத்தடிதான்! :o) ) அதிலே போர்களேற்பட என்ன காரணி தூண்டுதலாக இருந்தது என்றும் என்னென்ன நாடுகள் எந்தப் பக்கம்(போரில்!!) கட்சி சேர்ந்தன என்பதைப் பற்றியும் தான் இருக்கும். ஜப்பானுக்குக் குண்டு போட்டதும் படித்தோம். ஆனால் இவை அனைத்துமே மேலோட்டமாக ஏதோ ஒரு சம்பந்தமில்லாத ஒன்றைச் சொல்வது போலவே கையாளப்பட்டிருந்தன. எனக்குத் தெரிந்து, ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்பதைத் தவிர, அவன் அரங்கேற்றிய இனப்படுகொலை பாடத்திட்டத்தில் இருக்கவில்லை (அல்லது, படித்து, நான் தான் மறந்து போய் விட்டேனோ தெரியாது! தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).

{ஆஷ்விட்ஸிற்கு இரயில் மூலம் அனுப்பபட்ட கணக்கற்ற யூதர்களைப் பற்றியும் அவர்களின் கொடுமையான இறுதிநாட்களைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். இந்த ரயில் பயணங்களில் ஒன்றிலிருந்து பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிச் சொல்லும் The Twentieth Train" (எழுதியவர்: Marion Schreiber, இது Silent Rebels:The true story of the raid on the twentieth train to Auschwitz என்ற பெயரில் முன்னர் வெளியிடப்பட்டது) புத்தகத்தைத் தான் இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்து முடிந்தவுடன் அதைப்பற்றிய ஒரு தனிப்பதிவை இடுகிறேன்.}

இலங்கையில் இருந்தவரை உலகப்போர்களைப் பற்றிய எனது அறிவு மிக மிக மிகக்குறைவு. இங்கே சிட்னிக்கு வந்த பின்னரே நான் பல டொக்யுமென்ட்ரிகளைப் பார்த்தும், புத்தகங்கள் & அச்சிதழ்களை வாசித்தும் இப்போர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவிலிருந்து எண்ணிலடங்காதோர் போருக்குச் சென்றமையால் இந்நாடு போர்களின் ஞாபகார்த்தத்திற்கு பெரும் மதிப்பளிக்கிறது.

என் சந்தேகம் இது தான்...உலகப்போர்கள் இரண்டும் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையும் (அவுஸ்திரேலியா போன்றே) பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்தது. இலங்கையிலிருந்து இப்போர்களுக்குச் சென்ற (போயிருக்கிறார்களெனக் கேள்விப்பட்டிருக்கிறேன்) வீரர்கள் நினைவு கூரப்படுவதுண்டா?இல்லையெனின் ஏன்? இந்தியாவில் எப்படி?

பெட்டகம்