ச்சரியான ஹொட்டா இருக்கப்பா!


இன்றைக்கு காலையில் வேலைக்கு வரும்போது தொடர்வண்டியில் கேட்டது:

ஒருவ: ஹா…ய்! எப்ப ஸ்ரீலங்காவிலயிருந்து வந்தனீங்கள்?

மற்றவ: லாஸ்ட் சற்றடே. இன்னும் டயேர்டா இருக்கப்பா.

ஓருவ: அது அப்பிடித்தான் இருக்கும், நேரமும் டிஃபரன்ட் தானே

மற்றவ: ஓம். அங்க போனா ஏளியா முழிக்கிறம். இங்க வந்ததுக்கு இன்டைக்குத்தான் லேட் பண்ணாம வந்திருக்கிறன்.

ஓருவ: ட்ரிப் எல்லாம் எப்பிடி?

மற்றவ: ஐயோ..சன்னுக்கும் டோட்டருக்கும் ச்சரியான ஹாட்(hard) ஆ இருந்தது.

ஓருவ: ஏன்? பிள்ளைகள் அங்கையெல்லோ பிறந்தவை?

மற்றவ:ரெண்டு பேரும் ஸ்ரீலங்கா போண் தான். ஆனாலும் இங்கே வந்து இப்ப 7 இயர்ஸ் ஆகீட்டுது த்தானே. அவை பாவம்.. மொஸ்கிட்டோஸ் தான் ச்சரியா கஷ்டப்படுத்தீட்டுது. பிறகு உள்ள க்றீமெல்லாம் பூசித்தான் நைட்ஸ்ல படுக்க விட்டது.

ஓருவ: சீ.. ஜஃப்னா போன்னீங்களோ?

மற்றவ: ஓமோம், தேவையில்ல என்டுதான் முதல் நினைச்சுக் கொண்டிருந்தனாங்க. ஸன் ச்சொல்லிப் போட்டார் கட்டாயம் போய் தன்ட பழைய ஸ்கூல் எல்லாம் பாக்க வேணுமென்டு. அவற்ற பெஸ்ற்றரிங் தாங்காம ஃபிளை பண்ணினாங்க. ச்சரியான ஹொட்(hot) அங்க. ஊத்தை சரௌண்டிங்ஸ். எங்கட பீப்பிள் எப்ப சேஞ்ச் பண்ணுவினமோ தெரியாது. நான் ச்சொல்லிப்போட்டன் த்றீ டேய்ஸ்தான் நிக்கிறதெண்டு. பிள்ளைகளுக்கு கொஞ்சம் டிஸப்பொயின்மன்ட் ஆக்கிட்டுது. ஜஃப்னா போன நாளிலயிருந்து என்ட ஹஸ்பண்ட் ஒரே ஆகியுமண்ற் – க்ளீன் இல்லை, ஏன் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போன்னீர் என்டு. அதுக்குள்ள சன்னும் சொல்லுக் கேட்ட பாடில்லை என்ன..போய் கௌ.. கோட்(goat) என்டு உள்ள அனிமல்ஸ் எல்லாத்தையும் அளைஞ்சு கொண்டு.

ஒருவ: இங்கே காணுறேலைத்தானே…அதுதான். ஹொலிடேஸ் என்டாப் பிள்ளைகளை எஞ்சோய் பண்ணவிட வேணும்.

மற்றவ: ஓம், அதுக்காண்டி உள்ள அனிமல்சைத் தொட்டுக் கொண்டோ..உள்ள கேம்போய் அது இதெண்டு எத்தினைய பக் பண்ணிக் கொண்டு போன்னான். அற்லீஸ்ட் புக்ஸை வாசிச்சிருக்கலாம். சன் தான் மோசம். டோட்டர் பாத்துக் கொண்டிருப்பா, கிட்டப் போறேல. என்னை மாதிரி.அவ மாட்டுச் சாணியைக் கண்டதிலயிருந்து அனிமல்சுக்குக் கிட்டப் போறேல்ல. சோ டேட்டி என்டு பேசாமல் இருந்திடுவா. நானும் அப்பிடியே விட்டிட்டன். அங்க என்னப்பா டிவியுமில்ல, கேபிளும் இல்லை..ச்சனத்துக்கு எப்பிடி டைம் போகுதோ. டோட்டருக்கு கட்டாயம் டிஸ்னி சனல் வேணும். அங்க அதுகள் இல்லையெண்டு கூட்டிக் கொண்டு போன என்னில அவக்கு கோவம். கொழும்பு மச் பெற்றர் தான் ஜஃப்னா. நல்ல காலம் போய் ஹொட்டேல்ல ஸ்டே பண்ணினது. இல்லாட்டி இன்னும் ஹார்ட்(hard) ஆ இருந்திருக்கும்.

ஓருவ: எவ்வளவு நாள் நின்டனீங்க?

மற்றவ: 2 வீக்ஸ். பிறகு இண்டியாக்குப் போய் வன் வீக் நின்டனாங்க. இனிமேல் போறதில்லயெண்டு டிசைட் பண்ணீட்டன். அந்த ஹீட், டஸ்ட் எல்லாம் ச்சரிவராது. நல்ல காலம் டோட்டரும் அதையே சொல்லீட்டா. ஐ ஆம் நெவ கோயிங் பக் டு தட் கன்ட்றி என்டு. சன் தான் கேட்டுக்கொண்டிருக்கிறார் திரும்ப ஒருக்கா போகப் போறன் என்டு.


இப்படியே தொடர்ந்த உரையாடலின் முடிவைக் கேட்க முன் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. இலங்கைக்கு மீண்டும் போக வேண்டும் எனக் கேட்கும் மகனுக்கு என்னென்ன அர்ச்சனைகளோ!

இப்படியும் இருக்கிறார்கள்! வெளிநாடு வந்து 7 வருடத்தில் சொந்த பீப்பிள் க்ளீன் இல்லாமலும், வளர்ந்த சூழல் டேட்டியாகிவிடுகிறதும் என்ன விந்தை!

17 படகுகள் :

முகமூடி July 01, 2005 11:31 am  

ஷ்ரேயா... இந்திய மக்களில் பலர் இப்படி சலித்துக்கொள்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஈழத்தமிழில் இப்பொழுதுதான் முதல் தடவை... எனக்கு ஒரு கேள்வி ரொம்ப நாட்களாகவே உண்டு.

ஈழப்பிரச்னை ஓய்ந்த பின் புலம் பெயர்ந்தவர்கள் என்ன விதமான முடிவு எடுப்பார்கள். அங்கேயே பிறந்து கொஞ்ச காலம் வாழ்ந்து புலம் பெயர்ந்தவர்கள் கண்டிப்பாக மீண்டும் போகத்தான் பிரியப்படுவார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை மாறியிருக்கும். பலர் தொழிலிலும் வாணிபத்திலும் சென்ற இடத்தில் எஸ்டாப்ளிஷ் ஆகியிருப்பார்கள். நினைவு தெரியா வயதில் புலம் பெயர்ந்த பிள்ளைகள் பழைய சூழலே மறந்து புதிய நாட்டின் சூழ்நிலையிலேயே வளர்ந்திருக்கும் அல்லது பல குழந்தைகள் புதிய நாட்டிலேயே பிறந்திருக்கும். மீண்டும் தம் தாய் மண்ணுக்கு போவதற்கு பலத்த யோசனை செய்ய வேண்டிய பலரின் சூழ்நிலை பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா? அது குறித்து உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்..

குறிப்பு: இப்பின்னூட்டத்தில் எந்த பின்னர்த்தமும் இல்லை... உண்மையான ஆர்வத்தில் கேட்டேன்.. யாருக்காவது ஆட்சேபணை என்றால் இப்பின்னூட்டத்தை நீக்குவது ஷ்ரேயாவின் சுதந்திரம்

வசந்தன்(Vasanthan) July 01, 2005 11:56 am  

நல்லாயிருக்குப் பதிவு.
நானும் இப்பிடிப்பட்ட சனத்தைக் கண்டாயிற்று.
நாடு திரும்பல் பற்றி, புஸ்பராசா தீராநதியில் சொன்னதுடன் நான் முழுவதும் உடன்படுகிறேன். இளந்தலைமுறை மட்டுமன்று, நடுத்தரத் தலைமுறையிலும் பெரும்பான்மை நாடு திரும்பாது. ஆனால் நாட்டோடு ஒரு தொடர்பைப் பேண எந்தச்சந்தர்ப்பத்திலும் அது தவறிவிடாது, பல தேவைகளுக்காக.
-வசந்தன்.-

`மழை` ஷ்ரேயா(Shreya) July 01, 2005 12:29 pm  

நல்ல கேள்வி கேட்டீர்கள் முகமூடி. எனது பதில் சரியானதாக அமையுமா என்று தெரியவில்லை.

அனேகமாக, குறிப்பிட்ட வயது வரை இலங்கையிலேயே பிறந்து வளர்ந்தவரென்றால் அங்கே மீண்டும் சென்று வாழ விரும்பக்கூடும். (எனக்கு அப்படித்தான் இருக்கிறது). சொந்த நாட்டுக்கு மீளுவது அவரவரிலேயே தங்கியிருக்கிறது. சிலர் மீள விரும்புகையில், 30 வருடம் இலங்கையிலேயே இருந்துவிட்டு வெளிநாடு சென்றிருக்கக்கூடிய இன்னும் சிலர் வர விரும்புவதில்லை. இப்பொழுதே செயற்படுத்திக் கொண்டிருப்போரும் உள்ளனர்.அதற்கேற்றவாறு தயார்ப்படுத்தினால் பிள்ளைகள் ஈடு கொடுப்பார்கள் என்பது என் கருத்து.

மீள்வதைப் பற்றிய எண்ணங்கள் இடம்மாறி இருப்பதையும் கண்டிருக்கிறேன். இங்கே பிறந்த அல்லது சிறுவயதிலேயே குடியேறிய (வளர்ந்த) பிள்ளைகள் மீண்டும் இலங்கைக்குச் சென்று வாழ விரும்புவதுண்டு. இதைப் பெற்றோரிடம் சொல்லி "இலங்கையில் போய்க் கஸ்டப்பட்டால்தான் தெரியும்" என்கிற ரீதியில் பெற்றொர்களின் நகைப்பிற்கோ/ஏச்சுகளுக்கோ ஆளாவதுண்டு. இப்படிப்பட்ட மனநிலையுடைய சிறார்களில் பெரும்பாலானோர் வீட்டில் அவர்களது பாட்டன்/பாட்டி இருப்பார்கள். அவர்களது "இரைமீட்டல்"களால் உந்தப்பட்டு திரும்பிப் போய் சொந்த நாட்டில் வாழ்வது பற்றிய ஒரு "romanticized" எண்ணம் தான் பலரிடம் இருக்கிறது. அப்படித் திரும்பிப் போய் வாழ்கையில் எதிர்நோக்கக் கூடிய சிக்கல்கள்கள் பற்றி உணர்ந்திருப்போரையும் அது குறித்து தெளிவான பார்வையுடையோரையும் விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்தப் பதிவுக்கு விளக்கம்: இது வெளிநாட்டில் இருந்து கொண்டு அங்கே இருக்கின்ற அதே மாதிரியானவற்றை இலங்கையிலும் எதிர்பார்த்து அவை இல்லையென்றதும் ஏதோ தான் அவைகளின்றி வாழாதது போன்று அங்கலாய்ப்பவரது பேச்சு. என்னைப் பொறுத்தவரை இதைப் பார்க்க இரண்டு கோணங்கள் உண்டு. ஒன்று: என்ன இப்படிக் கதைக்கிறாரே என்று கோபப்பட்டு அவருக்கு உணர்த்த விழையலாம் அல்லது அறியாமையினால் பேசுகிறார் என்று சிரித்து ஒதுங்கிப் போய் விடலாம். ஆனாலும் இப்படிப்பட்ட அபிப்பிராயங்கள்/எண்ணங்கள் கொண்டவர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடு. இவர்களைப் பார்த்து "அறியாமையினால் பேசுகிறார்கள்" என்று ஒதுங்கிப் போகாமல் தம் சந்ததிக்கு அடையாளத்தை மறுக்கிறார்கள்/ இருக்கும் அடையாளத்தை நினைத்து வெட்கப்படச் சொல்லிகொடுக்கிறார்கள் என்பதை விளங்கப்படுத்த வேண்டும்.

நீங்கள் கேட்ட மாதிரி திரும்பிப் போவதற்கு(பல்வேறு காரணங்கள்) தடைகள் இருக்கக் கூடியவர்களது சூழலோ என்ன முடிவெடுப்பார்கள் என்பதைப் பற்றியோ எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கட்டாயம் சொல்ல வேண்டும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 01, 2005 12:35 pm  

வசந்தன் - நடுத்தரத் தலைமுறையிலும் அவர்களுக்கடுத்ததாக எம்போன்றவர்கள் கொண்ட தலைமுறையிலும் தொடர்புகள் பேணப்படும். ஆனால் இங்கேயே பிறந்து வளரும் இளந்தலைமுறை எந்தளவிற்கு சொந்த மண்ணுடனான உறவைத் தொடரும் (சுற்றுலா, பெருமையடித்துக்கொள்ளும் தேவைகள் தவிர)என்பது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

முகமூடி கேட்டதற்கு நான் சரியான பதிலளிக்கவில்லை. பதிலளிக்கக் கூடியளவு தரவுகளோ அல்லது அதைப்பற்றி ஆழமாக யோசிக்கும் திறனோ எனக்கு இல்லை. அவரது கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

துளசி கோபால் July 01, 2005 1:26 pm  

பிள்ளைகள் ஊருலே போய் இருக்கக் கஷ்டப்படறாங்களொ இல்லையோ,
பெரிய ஆக்களுக்கு இது ஒரு சேலஞ்சுதான்! முதல்லே, வேலை. ஒரு குறிப்பிட்ட வயது போனபிறகு,
மறுபடி வேலைதேடி அலைய முடியுமா?

அப்படியே திரும்பிப் போயிட்டாலும், உற்றார், உறவினருக்கு, இங்கே நாம் என்னமோ 'நோட்' அடிச்சுட்டு இருக்கறதா
ஒரு எண்ணம். நம்மால் செய்யமுடிஞ்சதைச் செய்யலாமுன்னா, அவுங்க எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவுலே!

அதான் கஷ்டமோ, நஷ்டமோ, வந்த இடத்துலேயே வேர் பிடிச்சு இருந்துடறாங்க!!

அதுலேயும், புள்ளைங்கசின்ன வகுப்புலே இருக்கறப்ப போயிட்டா நல்லது. ஓரளவு வளர்ந்த பிள்ளைங்கன்னா
அவுங்க அங்கேபோய் ஒட்டரது ரொம்பக் கஷ்டம். இப்ப இருக்கற இடத்டுலேயே புள்ளைங்களுக்குக் கல்யாண
சம்பந்தம் ஏற்பட்டுப் போச்சுன்னா, ஊர்லே போய் இருக்கறது என்ற எண்ணம் 'அவ்வளவுதான்'!!!

இப்பத்தான் உலகம் ரொம்பச் சுருங்கிருச்சே! இப்படியே காலம் போகவேண்டியதுதான்!

துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 01, 2005 2:08 pm  

//அப்படியே திரும்பிப் போயிட்டாலும், உற்றார், உறவினருக்கு, இங்கே நாம் என்னமோ 'நோட்' அடிச்சுட்டு இருக்கறதா
ஒரு எண்ணம். நம்மால் செய்யமுடிஞ்சதைச் செய்யலாமுன்னா, அவுங்க எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவுலே//

கசந்தாலும் உண்மை. ஆனால் இந்த மாதிரி உற்வினர்களைப் பொருட்படுத்தாதவிடத்து சூழல் என்ன மாதிரியாக இருக்கும்? தங்கள் பாட்டைத் தாங்களே பார்த்துக் கொண்டு நிம்மதியா இருக்கலாம்தானே..

சம்பாத்தியத்துக்கு? ஒன்றில் வேலை தேட வேண்டும் அல்லது வணிகம் செய்ய வேண்டும். வேலை என்று தேர்ந்தெடுத்தால், மீண்டும் துளசி சொல்வது போல வேலை தேடி அலைவது எந்தளவிற்கு எத்தனை பேருக்குச் சாத்தியம்? அப்படியாயின் இதற்குத் தீர்வென்ன? ஓய்வு பெற்ற பின் சொந்த இடத்திற்குச் சென்று கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து வாழ்வதா? ஓய்வு பெற முன் போக விருப்பமுடையவர்கள்? :o(

Ganesh Gopalasubramanian July 01, 2005 2:42 pm  

// இப்படியும் இருக்கிறார்கள்! வெளிநாடு வந்து 7 வருடத்தில் சொந்த பீப்பிள் க்ளீன் இல்லாமலும், வளர்ந்த சூழல் டேட்டியாகிவிடுகிறதும் என்ன விந்தை! //

ஷ்ரேயா நீங்கள் சொல்வது மிகச்சரி. இதைப்போல சிலர் ஒருவித comfortnessஐத் தேடி அலைகிறார்கள். அது கிடைக்குமிடம் அவர்களுக்கு சொர்க்கமாகிப் போகிறது. இவர்களைப் போன்றவர்கள் மாட்டு சாணத்தைக் கறைத்து முற்றம் தெளித்த நமது மண்ணின் வாசனையை உணராதவர்கள். அவர்கள் வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதுவரை அவர்களுக்கு சந்தோஷம்.

ஆனால் தாய் தந்தைக்காகவும், தம்பி தங்கையருக்காகவும் புலம் பெயர்ந்த சில நல்லவர்கள் அன்றாடம் இந்த சின்ன சுகங்களை நினைத்து வேதனைப் படுகிறார்கள்.

முதலாமானவர்களுக்கு comfort முக்கியம். இரண்டாமானவர்களுக்கு பணத் தேவை.

Unknown July 01, 2005 3:25 pm  

ஒரு காலத்துல பாருங்க இலங்கையும்., இந்தியாவும் பெரிய வல்லரசுகளாகப் போகுது (யாரவது சிரிச்சிங்க., வகுந்து போடுவேன்!). அப்ப நம்மளையெல்லாம் உள்ள விடுவாங்களான்னுதான் நான் எப்பவும் யோசிக்கறது.

முகமூடி July 01, 2005 4:12 pm  

தங்கள் கருத்துக்கு நன்றி ஷ்ரேயா... இது மிகவும் சிக்கலான விஷயம்தான்.. நினைத்தால் வலியேற்படுத்தும் விஷயம்... நிறைய யோசனைகளும் நிறைய மனத்திட்பமும் அதை விட முக்கியம் பெயர்தலுக்கான சூழலும் வேண்டும்.... விரைவில் நல்லதொரு சூழல் அமைய வேண்டுவோம்

கலை July 01, 2005 7:41 pm  

சமூகப் பிரச்சனை ஒன்றை மிகவும் எளிய முறையில் சொல்லி இருக்கிறீர்கள். இது பற்றி நிறைய எழுத விருப்பம்தான். நேரம் கிடைக்கும்போது மீண்டும் இங்கே வந்து எழுத முயற்சிக்கிறேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) July 02, 2005 12:59 am  

திரும்பிப்போவதை தீர்மானிக்கும் காரணிகள் பல. அதற்குள்ளே முக்கியமானவையாக கருதப்படுபவை: போருக்குப் பின்னான அமைதியான/பாதுகாப்பான சூழ்நிலை மற்றும் வசதியாக வாழ (அல்லது கடின உழைப்பு, பற்றாக்குறைகள் இல்லாத வாழ்க்கைக்கு) தேவையானளவு நிதிவசதி. வெளிநாட்டுக்குப் போனோரில் மிகச்சிலர் தவிர்த்து ஏனையோர் போரின் தாக்கத்தால் வெளியேற்றப்பட்டவர்கள். சிலர் பணத்தேவைக்கு வெளிநாடு வந்தவர்கள். (இரண்டு குழுவினருக்கும் மற்றவரைப் பற்றிய தனிப்பட்ட பார்வைகளுண்டு.அதைப் பற்றி பேசப்போவதில்லை) முன்பு சொன்னது போல மீள்வது தனிப்பட்ட விருப்பம். சிலருக்கு, மீள்வது பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகி சாத்தியமற்றுப் போகுமாயின் அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்?

ஒருவர் தீர்மானித்தபடியே சொந்த இடத்திற்குத் திரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். திரும்பிய பின் குடும்பத்தை ஆதரிக்க வேலை தேட வேண்டி வரும். பிள்ளைகளுக்குக் கல்வியும், வீட்டுத் தேவைகளை நிறைவேற்றப் பணமும் தேவைப்படும். இது வரை செய்த வேலைக்குச் சமமாக சொந்த மண்ணில் கிடைக்காது போகலாம்; சமூகத்தில் தனியராக நேரிடலாம்; இவை போன்று இன்னும் பல பிரச்சனைகளை நாளாந்தம் நேர்கொள்ள வேண்டியிருக்கும். மீள்வதனால் ஏற்படக்கூடிய மன அமைதியையோ மகிழ்ச்சியையோ குலைப்பனவாக புதிதாகத் தலைதூக்கும் பிரச்சனைகள்(இப்படியானவை நிகழக்கூடும் என்று அவர் தன்னையும் குடும்பத்தினரையும் தயார்ப்படுத்தாதவிடத்து) ஏற்படுத்தக்கூடிய மன உளைச்சல்களும் அழுத்தங்களும் எதில் போய் முடியும்? பாரியதொரு பிரச்சனையாக இந்த "பிடுங்கி நடப்படல்"(காசி..மன்னிக்கவும்!) உருவெடுக்காதா?

முகமூடி July 02, 2005 3:26 am  

ஷ்ரேயா வசந்தனின் பதிவில் இட்ட பின்னூட்டம் இங்கும் பொருத்தமாயிருக்கும் என கருதியதால் ::

நன்றி வசந்தன்... இந்த கேள்வி எனக்கு வந்ததற்கு காரணம் தேர்ந்தெடுத்தலுக்கும் கட்டாயத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணரவே... பொருளீட்டவென வெளிநாடு செல்வோர் தாமாக சிந்தித்து விருப்பப்பட்டு செல்கின்றனர்... ஆனாலும் பல சமயம் தாய்மண்ணின் ஏக்கம் வருவதுண்டு. அது சமயம், சூழ்நிலை கருதி, வீடு திரும்ப வரும் எண்ணத்தை அடக்க பிரயத்தனப்படவேண்டியிருக்கும்... ஆனால் கட்டாயத்தினால் புலம் பெயர்ந்தோர், அந்த கட்டாயத்திற்காகவே புதியதொரு வாழ்க்கை சூழலை பழக்கப்ப்டுத்திக்கொண்டோர் சூழ்நிலை அமையும் போது - இப்பொழுது நிலையே வேறு, புதிய மேற்குலகம் அறிமுகப்படுத்திய "மேம்பட்ட" வாழ்க்கைக்கு பழகிய சூழலில் - என்ன நினைப்பர் என்பதுதான்...

// போராட்டம் நீடிப்பதும் ஆபத்தானது. இப்போது புலத்தில் உழைக்கும் தலைமுறை நேரடியாக யுத்தத்தினாற் பாதிக்கப்பட்டது. ஆனால் அது ஓய்வு பெறும் காலம் வரும்போது, போராட்டத்துக்கான பொருள் வழங்கலிற் பெரும் தொய்வு ஏற்படுமென்றே படுகிறது. முற்றாக நிறுத்தப்படாவிட்டாலும் பெரும் தொய்வொன்று வரும். // இதே கேள்வியை வேறொரு பதிவில் நான் கேட்பதாக இருந்தேன்... ஆனால் நான் கேட்டால் அது வேறு விதமாக பார்க்கப்டலாம் என்று நான் நினைத்ததால் கேட்கவில்லை... ஆரம்பித்த பொழுது இருந்த போராட்ட வீரியம் அடுத்த தலைமுறையினரிடம் அதே அளவு உள்ளதா? (களத்தில் இருப்பவரிடம்... வெளியிலிருந்து ஆதரவு தருபவர்களிடம் அல்ல) நீங்கள் கேட்ட இந்த கேள்விக்கு வரும் பதில்களை அறிந்து கொள்ள நானும் ஆவலாயுள்ளேன்.

இராதாகிருஷ்ணன் July 02, 2005 7:04 am  
This comment has been removed by a blog administrator.
இராதாகிருஷ்ணன் July 02, 2005 7:05 am  

ஏதோ ஈழத்தமிழர்கள்தான் கொஞ்சமாவது நல்ல தமிழில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அதுவும் போச்சு... :(

Aruna Srinivasan July 02, 2005 1:34 pm  

போராட்டம், போர் என்பதை விட்டுவிட்டு இலங்கைத் தமிழர்கள் என்று இல்லாமல் பொதுவாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்று படித்தால் நீங்கள் சொல்வது அத்தனையும் பல வகையான Diaspora வுக்குப் பொருந்தும். கிராமங்களிலிருந்து அடுத்த தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக சென்னைக்கும்,பின்னர் டில்லி, மும்பாய் என்று வட இந்தியாவிற்கு ( இப்போது உலகெங்கும்) என்று புலம் பெயர்ந்த பலருக்கும் நீங்கள் சொன்ன வரிகள் பொருந்தும். என் தாத்தாக்கள் திருச்சி அருகே இருக்கும் எங்கள் கிராமத்தைப் பற்றி நிறைய பேசுவார்கள். ஒரு தாத்தா அந்தக் காலத்தில் தான் ஓய்வு பெற்றபின் கிராமத்தில் போய் இருக்க வேண்டும் என்று இருந்தார். இன்றும் என் உறவினர்கள் பலர் கிராமத்துக்குப் போகலாமா என்று அவ்வப்போது யோசனை ( யோசனை மட்டும்தான் :-) ) செய்கிறார்கள். இன்று கிராமத்தில் குடும்பத்தின் எந்தத் தலைமுறையும் இல்லை. எல்லோரும் சென்னையில்/ வட இந்தியாவில் / வெளிநாடுகளில். சென்ற வருடம் கிராமத்துக் கோவிலைப் புதுப்பிக்க முடிவு செய்தபோது கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்த பலகுடும்பங்கள் ஆர்வமாக பங்கு கொண்டனர். "நம்ம ஊராச்சே" என்ற ஊர் விசுவாசம்.

அன்று கிராமம்; இன்று நாடு. அதுதான் வித்தியாசம். மற்றபடி புலன் பெயர்ந்தவர்கள் மனோபாவமும், சங்கடங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். - அதாவது புலன் பெயர்ந்த முதல் இரண்டு தலைமுறை வரையிலாவது. மூன்றாவது தலைமுறையில் மாற்று புலத்தில் வேர் நன்றாகவே பிடித்துக் கொண்டுவிடும்.

ஷ்ரேயா, வசந்த், சுவாரசியமான விஷயத்தை சுவாரசியமாக அலசியிருக்கிறீர்கள் இருவரும்.

சினேகிதி July 03, 2005 3:55 am  

வெளிநாடுகளில் இருந்து ஊருக்குப் போகிற பிள்ளைகளுக்கு ஊர் பிடிக்கிறது ஆனால் பெரியாக்களுக்குத்தான் அங்க குடிக்கிற தேத்தண்ணியில இருந்து நிறைய விடயங்கள் அருவருப்பாயிருக்குதாம் இதை நான் சொல்லவில்லை ஊர் போய் வந்த சில 'கனேடியரமிழர்கள்' சொன்னவை.
(இது நான் கறுப்பியின் வெளிச்சம் கதைக்குச் சொன்னது.)

`மழை` ஷ்ரேயா(Shreya) July 04, 2005 9:30 am  

போராட்டமோ இல்லையோ புலம் பெயர்ந்த தலைமுறைக்குத் தான் தாயக ஈர்ப்பு அதிகம் இருக்கும். இருதலைக் கொள்ளி எறும்பு போல நிலை. ஆனால் அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்தப் பிரச்சனை இராது, ஏனென்றால அவர்கள் பிறந்ததும் வளர்வதும் புலத்திலே. அவர்கள், அருணா சொல்வது போல வேர் ஊன்றிவிடுவர்.

கருத்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி.

பெட்டகம்