2014ன் குறிப்புகள்


புத்தாண்டு பிறந்து விட்டது. ஒவ்வொருத்தரும் இந்த ஆண்டு புத்தகம் படிக்க, தவறாமல் உடற்பயிற்சி செய்ய, இனிப்பைக் குறைக்க,  பயணிக்க என்றெல்லாம் உறுதி பூண்டிருப்போம். போன வருடத்தில் செய்ததையே 2015இலும் தொடரலாம் என்றிருக்கிறேன் நான்.  அப்படிச் செய்தது அன்றன்றைய நாளில் என்னை மகிழ்வித்த, புன்னகைக்க வைத்த, ஓ!இதற்கு நன்றி என்று தோன்றிய ஒன்றோ சிலவோ பலதோ எதுவானாலும் குறித்து வைப்பது. கொஞ்சம் தினக்குறிப்பு மாதிரி.
எதையும் இலகுவாய் எடுத்துக் கொள்ளும் ஆள் நான். பலருக்கு மனதை வருத்தும் காரணங்களாக அமைபவற்றை என்னால் அலட்டிக் கொள்ளாமல் கடந்து போக முடியும். அப்படிப்பட்ட என்னை 2012 இன் இறுதிக் கால் (என் கவனமின்மையால்) கலைத்திருந்தது. என் இயல்பிலிருந்து மாறிப் போனேன். அது உறைத்ததும் அதிலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்பினேன். அதற்கு எப்போதும் மகிழ்ந்திருக்கும் கலையை மீளக கற்க வேண்டியிருந்தது. அன்றைய நாளை அதன் நிகழ்வுகளை எந்தளவுக்குக் கவனித்திருக்கிறேன்/அனுபவித்திருக்கிறேன் அல்லது எவை என்னைக் குழப்ப இடமளித்திருக்கிறேன் என்று பார்க்கவே  இந்தப்பயிற்சியைத் தேர்ந்தேன். ஆனால் பட்டியலில் இடம்பெறுபவை மேற்பந்தியில் சொன்ன வகைப்பாட்டுக்குள் வர வேண்டும். நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை விட்டுவிடல். அவ்வளவுதான். ஒரு நாளில் அன்பான, அழகான, மகிழ்ச்சியான, நன்றிக்குரியதான அல்லது அமைதி தருவதான பல நிகழ்வுகள் நடக்கும். அதே நாளில் நாம் சினந்து எரிச்சல் பட்டு மனம் வருந்தி அலைக்கழிந்துமிருப்போம். அன்றிரவு அல்லது அடுத்த நாள் (சில வேளைகளில் வார, மாத, ஏன் ஆண்டுக்கணக்கிலும்) முன்னவற்றை விடப் பின்னவைக்குத்தான் தான் மனதில் அதிகம் இடம் கொடுக்கும் மனப்போக்கு நம்மில் பலருக்கும் இருக்கிறது. கனம் மிக்கது அந்த மனப்போக்கு. ஆனால் ஒரு இறகைப் போலே எங்கள் தோள்களில் அமர்ந்துகொள்ளவும் எண்ணங்களுக்கு ஏதோ எங்கள் தெரிவு போலவே தன் வண்ணத்தைப் பூசுவதே தெரியாமல் பூசவும் அதால் முடியும். மெல்ல மெல்ல அழுத்திச் சேற்றில் தள்ளிவிடும். சரியானதை எடுத்துச் சொல்லும் அமைச்சர்களில்லாத அரசின் நிலைதான் பிறகு. உணராமல் நாமும் உழப்பிக் கிடப்போம். என்னைப் பொறுத்தளவில் பயிற்சி பயனளித்தது என்றே சொல்வேன். முழு ஆண்டிலும் மிகச்சில நாட்களே எழுதவில்லை. அன்றிரவே எழுதவில்லையென்றால் அப்படியே விட்டேன். இந்த முறை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் அந்த விதியை. அடுத்த நாள் வரை அனுமதிக்கிறேன் எனக்கு. 

நீஈஈஈல வானம், அனலடித்த பின் அள்ளிக் கொண்டு வீசும் குளிர்ந்த தென்காற்று, மழை, மரங்கள், காதல், குடும்பம், சுற்றம், புத்தகங்கள், அன்பு, பயணம், நட்பு, கொண்டாட்டம், நகைப்பு, நீச்சல், தேனீர், ஞாபகங்கள், இசை என 2014ஐ நிறைத்தவற்றுள் உறைய வைத்த வெட்டிய காய்கறிப் பொதிக்கான நன்றி நவிலலும் உண்டு. ஒரு சின்னச் சந்தோசமே போதுமாயிருக்கிறது. நிறைவளிக்கிறது. மிகவும் எளிமையான ஒரு சிந்தனையோட்டமோ என்று சந்தேகமும் வராமலில்லை. ஆனால் இப்படி இலகுவாய் சந்தோசப்பட்டுக் கொள்ளுவது பிடித்திருக்கிறது.

இதை எழுதின 2015ன் முதல் நாளினை இங்கே குறித்து வைக்கிறேன். சிட்னிக்குரித்தான வாணவேடிக்கைக் களியாட்டங்களுடன் அன்புக்குரியவர்களின் அருகாமையில் தொடங்கிய நாள். விடுமுறை நாளின் ஆறுதலான பகற்பொழுது. நட்பைக் கொண்டாடிய அருமையான மாலை. சாய அமர்ந்த போது தற்செயலாய் தொலையியக்கி மூலம் உயிர்பெற்ற தொலைக்காட்சியில் எங்களுக்கு மிகப்பிடித்த Edinburg Military Tattoo வின் 2014ம் ஆண்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து ஸூபின் மேத்தாவின் வழிநடத்தலில் Vienna Philharmonic Orchestra வின் நிகழ்ச்சியும் நிறைத்த அற்புத இரவுப்பொழுது. மனம் குறை கொண்டதும் நிகழ்ந்ததுதான் நேற்று. ஆனாலும் அதிக நேரமில்லை.. சொன்ன சந்தோஷங்களின் முன் அவை காணாமலே போய்விட்டன. 

உங்களுடைய புத்தாண்டு ஆரம்பம் எப்படி? 


-------
இப்படியெல்லாம் நேற்று செல்பேசியிலிருந்து எழுதிவிட்டு பிரசுரிக்கும் பொழுதில் தவறுதலாக அழித்துவிட்டேன். எரிச்சல் வந்தது உண்மை. ஆனாலும் இதைப் போன்றதொரு பதிவு எழுதப்பட்டு இல்லாமலானதும் முரண்நகைதான் இல்லையா? சிரித்துக் கொண்டே நாளைக்குத் திரும்ப எழுதுவோமென்று போய்ப் படுத்துக் கொண்டேன். இடுகையைத் திரும்ப இன்றைக்கு எழுதியிருக்கிறேன். கணினியிலிருந்து. எப்போதும் நிமிடங்களைச் சுவையாக்குவதற்கு ஏதாவது இருந்து கொண்டுதானிருக்கிறது. 

புத்தாண்டு வாழ்த்துக்கள் :O)


1 படகுகள் :

திண்டுக்கல் தனபாலன் January 02, 2015 11:56 pm  

தொடர்க...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

பெட்டகம்