வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் (எடுக்கிற வழியைப் பொறுத்து) 17-19கிமீ தூரம்தான். ஆனால் போக எடுக்கிற நேரமோ 25-60 நிமிசம் வரை வரும் - புறப்படும் நேரத்தைப் பொறுத்தது (கூடவே சமிக்ஞை விளக்குகளையும்) . காலையிலே 7.20க்கு முன்னரே வெளிக்கிட்டால் நேரத்தையும் எரிபொருளையும் வீணாக்காமல் அரை மணித்தியாலத்துக்குள் வேலைக்குப் போய் விடலாம். இதில் வாகனம் பறக்கும் வகையைச் சாரும். 7.20-7.45 என்றால் 40 நிமிடம். நடப்பன. அதுக்குப் பிறகென்றால் ஊர்வன தான். அதுவும் நத்தை வென்றுவிடும். எப்பிடியென்றாலும் ஏபிசி செவ்வியல் பண்பலை (நன்றி பிரபா) தான் கூட வருவது. அலட்டலில்லாது விளம்பரங்களில்லாது இசை மட்டுமே. எமா எயர்ஸ் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். பின்னேரம் வீடு வரும் போது ஜுலியா லெஸ்டர் வானலை வழியே கூட வருவா.
இப்படி இசை பொழிய, காட்சிகள் கண் நிறைக்க வாகனத்தோட சேர்ந்து மனதில் சில எண்ணங்களும் ஓடிக் கொண்டிருக்கும். அப்பிடி இன்றைக்கு உறைச்சதுதான் பதிவுக்குக் காரணம்.
மற்ற மதங்களில் திருமணச் சடங்குகள் பற்றித் தெரியவில்லை. இந்து முறைப்படி திருமணம் நடக்கையில் ஒருவேளை பெற்றோரில் ஒருவரே மணமக்களுக்கு (பிரிந்தோ இறந்தோ திருமணத்திற்குச் சமுகமளிக்க முடியா நிலையிலோ) இருக்கும் பட்சத்தில் ஏன் வேறொரு தம்பதியரை 'கன்னிகாதானம்' செய்யவோ 'தானத்தை'ப் பெறவோ ஒழுங்கு செய்ய வேண்டி வருகிறது? பிள்ளையை வளர்த்த அம்மா/அப்பா தனியாளாய் இந்தச் சடங்கினைச் செய்தால் என்ன? ஏன் செய்வதில்லை அல்லது செய்ய அனுமதிக்கப்படுவதில்லை?
அப்பா இல்லாத காரணத்தால் எனது திருமணத்தில் அண்ணா/அண்ணி செய்தனர். அவர்கள் செய்ததில் ஒரு குறையுமேயில்லை. நான் அவரிடம் நேரடியாகவோ அல்லது அம்மாவிடமோ (சரியாக யாரிடமென நினைவில்லை) அண்ணா செய்வது விருப்பம் என்று சொன்ன ஞாபகம். நான் அம்மாவைக் கேட்கவே இல்லை. கேட்கத் தோன்றவே இல்லை. அதுதான் குறுகுறுக்கிறது. பெரியவர்களும் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. விதவை, அதனால் திருமணச் சடங்கில் பங்கு பெறுவதற்கில்லை என்று நடைமுறை வாழ்க்கையில் நூற்றாண்டுக் காலமாய் கற்பிக்கப்பட்டு விட்டது. அதுவே இயல்பாகத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே நான் கேட்கவில்லை. அம்மாவைச் செய்யச் சொல்லி (குறைந்த பட்சம் கேட்டாவது) இருந்திருக்கலாமே என்று இப்ப தோன்றுகிறது. அப்ப சிந்திக்கவே இல்லை. அம்மா சடங்குகளில் கலந்து கொண்டதாய் நினைத்துப் பார்க்க, ஏன் அம்மாவும் எம்மியும் சேர்ந்து திருமணச் சடங்குகளைச் செய்திருந்தால் என்று நினைக்க நல்லாய்த் தான் இருக்கிறது.
கேட்டிருந்தாலும் அம்மா ஒத்துக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே எனத் தோன்றுகிறது. ஆனாலும் அம்மாவின் மறுப்பு காலங்காலமாக விதவைகளின் மீது சுமத்தப்பட்ட புறக்கணிப்பில் வேரூன்றியதாய் ஊரையும் அதன் பேச்சையும் குறித்துத் தேவையேயற்ற யோசனையில் முளைவிட்டதாய்த்தான் இருந்திருக்கும். அப்படி இல்லாமல், எங்கேயாவது யாராவது ஒரு அம்மாவோ ஒரு அப்பாவோ தனியாளாய் இருந்தாலும் பிள்ளையின் திருமணச் சடங்குகளினை நிறைவேற்றினால் எத்தனை பொருத்தமாய் அழகானதாய் இருக்கும். நடந்திருக்கிறது/நடக்கிறது/நடக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.
நேர அட்டவணையைக் காலம் போட, அதற்கேற்ப வாழ்க்கை பாடத்தை நடத்துகிறது.
0 படகுகள் :
Post a Comment