என் வீட்டை நிரப்பி மிதக்கிறது துயர். எப்போது அது தோள்மீதேறி அழுங்குப்பிடியாக மனதை பற்றிக் கொள்ளும் என்பதை அறிந்து கொள்ள முடிவதில்லை என்பதுதான் எரிச்சலாக இருக்கிறது. சிலநாட்களில் பாவம் பார்த்து அது உலாத்தப் போய்விடுகிறது. அப்படி அது இல்லாதிருக்கும் சில நேரங்களில் முப்பதுக்கும் இருபதுக்கும் இடையிலான ஆண்டுகளுக்கு முற்பட்டதொரு உலகத்தின் காட்சிகளும் ஓசைகளும் என்னை உயிர்ப்பிக்கின்றன.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து இரண்டாயிரத்தின் ஆரம்ப ஆண்டுகள் வரை சில அன்றாடமும், விழா நாட்களும், விடுமுறைக்கு வந்திருக்கும் உறவுகளும், திருமணங்களும், திவசமும், சின்னஞ் சிறு குழந்தைகளும் வளர்ந்த இரண்டாம் முறைக் குழந்தைகளும், நண்பர்களும், உறவினர்களும், இசைத்தலும், ஆடலும், பல்லுக்கொழுக்கட்டைகளும், செல்லங்களும், முறைப்புகளும், மாலை விளையாட்டுகளும் பதிவு செய்யப்பட்ட அற்புதமான ஒரு காணொளித் தொகுப்பு என்னைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறது.
என் மனதை இப்போது நிரப்பும் சந்தேகங்கள், பயங்கள், அந்தரிப்புகள் இல்லாத என்னை நான் அவ்வுலகத்தில் காண்கிறேன். என்ன அழகு! சுயநம்பிக்கை இருந்தது. என்மீது எவ்வளவு அன்பிருந்தது (என்னுள்ளிருந்தும், மற்றவர்களிடமிருந்தும்). என்ன செய்தாலும் அந்த அன்பு இருக்கும் என்பது மனதின் அடியாழத்தில் பதிந்திருந்தது. நானாக இருந்தேன். ஒருவித வார்ப்புருக்குள்ளும் என்னைப் புகுத்திக் கொள்ளாமல் கவலையற்று நானாய் இருந்ததைக் காண்கிறேன். அந்த என்னைப் பார்க்கையில் ஆசையாக இருக்கிறது. தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்தும், தானாய் இருக்கச் சுதந்திரம் உடைய, அசைக்க முடியாத் தன்னம்பிக்கை கொண்ட ஒருத்தி.
இப்போதைய என்னைப் பார்த்தால் அவளுக்கு என்ன தோன்றும்? ஏன் இப்படி இருக்கிறேன் என்ற வினா பல கோணங்களிலிருந்தும் தலை தூக்குமாயிருக்கும். அவளை ஞாபகப்படுத்திக் கொள்ள முயல்கிறேன். அவளாய் இன்னுமிருப்பின் நான் என்ன செய்ய/சொல்லக்கூடும் என்று எண்ணிக்கொள்ளத் தோன்றுகிறது.
அவள் துணிவின் வெளிச்சத்தில் இப்போதுள்ள அறிவையும் அனுவபத்தையும் கொண்டு.