பவள மல்லிகை

பாட்டி வீடு. பெயரைச் சொல்வதை விட, புளியடியார் என்றால் தான் இன்னும் வடிவா ஊருக்குள்ளே தெரியும். ஒரு சிவப்பு பெரிய 'கேற்'. ஓட்டிக் கொண்டு வரும் (ஒரு அளவான) வேகத்தில சைக்கிள அதில் மோதினா, கொளுக்கியும் போடாமலிருந்தா, தகரத்தில அடி வாங்கின சத்தத்துடன் திறக்கும். படலையிலிருந்து வீட்டுக்கு 25மீ இருக்கும். 2 பக்கத்திலும் பூமரங்கள். நடுவிலே கொஞ்சம் வெண்மலும் செம்மணலும் கலந்த
நிறத்தில் பாதை. என்னென்ன பூமரம் என்றெல்லாம் ஞாபகமில்லை. போய் 8 ஆண்டுகளாகினதினால் என்று சாட்டு சொல்ல மாட்டேன். அங்கே போனபோதெல்லாம் விளையாட்டும், கிடைக்கிற விதம் விதமான சாப்பாடுமே பிரதானமாக மனதில் முன்னிற்கும். மச்சி(மச்சாள் வயதுக்கு நிறையவே மூத்தவ என்பதால் இப்படித்தான் கூப்பிடுவது)சின்னப்பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்பு எடுப்பா. அப்ப அங்கே நானும் போயிருந்து சம வயதுப் பிள்ளைகளுடன் இருந்து படிப்பேன். எல்லா நாளும் சரியாக தமிழும் எழுதி, கணக்கும் செய்து வந்திருந்தேன்...எப்பயாவது தடுக்குப்படவேணும் என்கிற நியதிப்படி பால் + சோறு = பால்ச்சோறு என்று எழுதி பிழை விட்டது நல்ல ஞாபகம். இதே வகுப்பிலிருந்த பையன் நான் இந்தச் சம்பவம் நடந்து 3- 4 வருடங்களுக்குப் பிறகு (அந்த சில வருட இடைவெளியில் 10- 11 வயதுக்குரிய வளர்ச்சி வர ஆரம்பித்திருந்தது) விடுமுறைக்கு பாட்டி வீட்ட போன போது மச்சாளைக் கேட்டான் "முதல் ஒராள் வருவாவே..அவா இப்ப வாறேல்லையோ" என்று. மச்சாள் சொன்னா "அவதான் இவ" என்று. அந்தப் பையனின் கண் விரிந்தது. சில வினாடிகள் இமைக்காது பார்த்தவன் "வளந்து போனா..அதுதான் அடையாளம் தெரியேல்ல" என்று சொல்லிவிட்டு, தந்த கணக்கை செய்ய தொடங்கி விட்டான். ஏனடா தன்னில் இப்படி வளத்தி இல்லை என்று யோசித்திருப்பானோ என்னவோ!! ;o)

வீட்டுக்குப் போகிற வழியில் பூமரம் நிற்கும்..என்னென்ன என்று தெரியாது என்று சொன்னேன் தானே, ஆனால் நல்ல வடிவானதாக இருக்கும்.கனாஸ் வாழை இருந்ததாக ஞாபகம். மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்களுடையது. அப்படியே நேரே போனால் வாசல்.இடப்பக்கமா முற்றம் தொடரும். முற்றத்திற்கும் வீட்டிலிருந்து இன்னொரு வாசல். ஒரு கூடத்தில் 2ம் சந்தித்து வலப்பக்கமுள்ள கதவுக்குள்ளால் போனால்வீட்டின் ஹோல் வரும். நுழைந்தவுடன் வலப்பக்கம் கேற்றை பார்க்கும் சாளரம். நேர் முன்னல் சாமியறை. அதுக்குப் பக்கத்தில் பாட்டி/மச்சாள்/அத்தையின் அறை. அதைத்தாண்டிப் போனால் மாமி&மாமாவின் ஒரே சாய்மணைக் கதிரை.கதிரைக்கு இடப்பக்கத்தில் ஒரு 3 அடி தள்ளி சாப்பாட்டு மேசை. அதுக்கும் இடப்பக்கமாக ஒரு சின்ன ஓடை.இதன் கதவு முதல் சொன்ன முற்றத்துக்குள் திறக்கும். இது தான் அந்த வீட்டிலேயே பிடித்த இடம்...சைக்கிள் வைக்கும் இடம் & புத்தக அடுக்கு இருந்த இடம்.

சாய்மணைக்கதிரை தாண்டினால் ஒரு சின்ன கூடம்.இதற்கு இடப்பக்கத்தில் சமையலறை.வலப்பக்கத்தில் மாமா/மாமியின் அறை. இதை தாண்டினா கொல்லைப்புறத்துக்கு போகும் வாசல்.தரை ஒரு 5 அடிக்கு 15 அடி சாணியால் மெழுகியிருக்கும்.இதில் இடப்புறம்தான் 2 வாங்கு மேசை போட்டு மச்சாள் வகுப்பு நடத்துவது. வலப்புறம் ஒரு குகை மாதிரி.அதற்குள் இல்லாத சாமானே இருக்காது!!! கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள்!!). கிணற்றடி வேலியில் கொவ்வைக் கொடி படர்ந்திருக்கும்.

கிணற்றுப்பக்கம் போகாமல் பின்புற வாசலிலிருந்து நேரே பார்த்தால்..ஆகா!!அந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா?) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு! பின்னேரத்தில் அதன் வாசம்..ம்ம்ம்...நினைத்துப் பார்க்கும் போது அதன் வாசம் இன்னும் என் மூக்கில்.

மாமி/அத்தை இதில் பூவெடுத்து சாமிக்கு வைப்பார்களோ என்னவோ! விடுமுறைக்குப் போகையில் என்னென்ன முஸ்பாத்தி பண்ணலாம் என்பதே யோசனையாக இருக்கும். பெரியம்மா பெரியப்பா பாட்டி, மாமி மாமா அத்தை மச்சாள் இவர்களெல்லாம் விடுமுறையின் அங்கங்கள். அவர்களை அவர்களாகவே, தனி நபர்களாக பார்த்ததேயில்லை. என் மனதில் அவரவருக்கென்று ஒரு பிம்பம். அதற்கூடாகவே பார்த்திருக்கிறேன். இப்போ யோசிக்கும் போது தான் மனதில் உறைக்கிறது. இன்னொருமுறை இன்ஷா அல்லா போகக் கிடைத்தால் மாமி, அத்தை, பெரியம்மா என்று நிறக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவர்களாகவே பார்ப்பேன் என தோன்றுகிறது. இலங்கையிலிருந்து புறப்பட்டதிலிருந்து நிறைய கற்றிருக்கிறேன். பிறரைப் பார்ப்பதிலும் ஒரு கொஞ்சம் தெளிவும், முதிர்ச்சியும் வந்துள்ளது என்றும் நினைக்கிறேன். இப்போது போய் பார்க்க முடிந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய வாசம் வீசுகையில் அதை அப்படியே உணரக்கிடைக்கும்.

9 படகுகள் :

வசந்தன்(Vasanthan) February 18, 2005 3:37 pm  

நீங்கள் சொல்லிற பவளமல்லி எங்கட வீட்டு முத்தத்திலயும் நிண்டது. அது பூத்துத் தள்ளினா றோட்டால ஆக்கள் போகேலாது. போறவாற ஆக்கள் ஆரும் அதில பூப்பிடுங்காமப்பாக்கிறது தான் அப்புவின்ர வேல. மனுசன் இரவுகூட விறாந்தையிலதான் படுக்கும். அந்தாளால எங்கட பொம்பிளயள் தலையில பவளமல்லி வக்கிற பாக்கியம் இழந்திட்டினம். எண்டாலும் அதிண்ர வாசம் கொஞ்சம் இசகுபிசகானது. ஆபத்தான வாசம். அனுபவிச்சிருக்கிறியளோ? உங்கட கத என்னையும் இழுத்துக்கொண்டு போட்டுது.

Thangamani February 18, 2005 3:39 pm  

vaasamaana pathivu.

-/பெயரிலி. February 18, 2005 9:17 pm  

பாட்டி? அத்தை?

`மழை` ஷ்ரேயா(Shreya) February 19, 2005 3:30 pm  

உண்மைதான் வசந்தன் - மூக்கில நுழைஞ்சு மனசை நிறைக்கிற வாசம். தாவரவியல் பெயர் தெரிஞ்சா இங்கே தேடி வாங்கிறதை பற்றித் தீவிரமா யோசிக்கலாம்.

பெயரிலி - அத்தை என்பது அப்பாவின் இளைய சகோதரி. பாட்டி - அப்பாவின் அம்மா- அப்பம்மா

NONO October 28, 2006 3:45 am  

//(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா?)//
பவளமல்லி: இதன் தாவரவியல் பெயர் Nyctanthes arbor-tristis என நினைக்கிறேன். செரியா என பாக்கவும்.
http://toptropicals.com/pics/garden/05/5/5621.jpg

`மழை` ஷ்ரேயா(Shreya) October 30, 2006 9:04 am  

நன்றி NONO

odysseus February 13, 2007 6:25 pm  

பாட்டி வீடும், பவள மல்லி மரமும் :) - ஆஹா - குட்டீஸ் எல்லாம் காலையிலே - ஆளுக்கொரு கின்னத்தோட, மரத்தடியிலே போர்வையா உதிர்ந்து கிடக்குற பூக்களை போட்டி போட்டுட்டு பொறுக்கி கொண்டு - பூஜைக்கு பாட்டிகிட்ட கொடுத்ததெல்லாம் ஏதோ கனவு மாதிரி இருக்கு - 25 வருஷம் மேலே ஓடிப் போச்சு.

பாட்டியும் போயாச்சு, பாட்டிக்கு அப்புறம் வீடும், மரங்களும், தோட்டமும் போயே போச்சு!

குட்டிப் பயலா, பவள மல்லி மரத்துக்கிடட, பாட்டி திண்ணையிலே உக்கார்ந்துட்டு அரிசி புடைக்கிறப்ப, பாட்டி மடியிலெ படுத்துகிட்டு - "பாட்டி, நான் பெரியவனானதும் ஏரோப்ளேன்-ல போகப்போறேன் - உன்னையும் வெச்சு கூட்டீட்டுப் போறேன் - நீயும், நானும் மட்டும்"-ன்னு கனவு கண்டு கதை பேசி பாட்டி சந்தோஷமா வாய் விட்டு சிரிச்சதெல்லாம் படமா மனசுல ஓடுது.

கடவுள் அருளாலெ, பாதிக்கனவு நிறைவேறிப்போச்சு. ஆனா, நான் ஏரோப்ளேன்-ல உலகம் சுத்துறதை பாக்க அவளுக்கு கொடுத்து வைக்கலெ. அவளை ஏரோப்ளேன்-ல கூட்டிப் போகறத்துக்குள்ளே பறந்து போயிட்டா.

அந்த பவளமல்லி வாசம் - வாழ்க்கையிலே மறக்க முடியாத ஒன்னு.

PS: வாழ்த்துக்களுக்கு நன்றி. ஜூனியர் is doing great!

`மழை` ஷ்ரேயா(Shreya) February 14, 2007 1:44 pm  

அடடா.. உங்களுக்கும் பாட்டி வீட்டுப் பவழ மல்லிதானா?
//ஆனா, நான் ஏரோப்ளேன்-ல உலகம் சுத்துறதை பாக்க அவளுக்கு கொடுத்து வைக்கலெ. அவளை ஏரோப்ளேன்-ல கூட்டிப் போகறத்துக்குள்ளே பறந்து போயிட்டா.//
இப்படி எத்தனை பேரை இழக்கிறோம் :O(

//ஜூனியர் is doing great!//
மகிழ்ச்சி.

Anonymous August 12, 2010 3:18 am  

I would like to exchange links with your site mazhai.blogspot.com
Is this possible?

பெட்டகம்