இது ஒரு வெயில்காலம்

வேர்க்கிறதே என்று இலங்கையில் சலித்துக் கொள்வதுண்டு - காற்றின் ஈரப்பதனின் அருமை தெரியாமல். இங்கே சிட்னியின் கோடை சுட்டெரிக்கும். சராசரிக் கோடைகால வெப்பநிலை 35 - 37°C எனினும் குறைந்தது ஒரு பத்து நாட்களாவது 40°C யைத் தாண்டும். காற்றில் ஈரப்பதன் 10 - 20% இற்குள்தான் இருக்கும். உலர்ந்த காற்று வீசினால் பற்றியெரிகிற பெருநெருப்புக்குக் கிட்டே நிற்பது போலவும், காற்று வீசாமலிருந்தால் ஆளை வெதுக்கிவிடக்கூடிய வெக்கையுமாய் ஒன்றும் செய்யத் தோன்றாமல்/இயலாமல் எரிச்சல் தரும். வேர்த்தால் அதிசயம். அப்பிடியொரு வெயில்தான் முதலாந்திகதி சிட்னிக்கு வாய்த்தது. விடுமுறைக்கென்று நீண்டதூரம் சென்றிருப்பின் வழியில் ரேடியேட்டர்கள் செயலிழந்து போய் தவித்துப்போய் நின்ற பல வாகனங்களையும் மனிதரையும் கண்டிருக்கலாம். ஏதோ 2ம் திகதி முதல் இன்று வரை ஒரே மழை மூட்டமாய் இருக்கிறது. அதுசரி, முதலாந்திகதி ஆவியாகினதெல்லாம் (எந்த நீர்நிலையில இருந்து என்டெல்லாம் கேட்கக் கூடாது!) திரும்பிக் கீழே வரத்தானே வேணும்!

இந்த வெயிலில் காய்ந்துபோய் நிற்கிற விக்ஸ்(யூகலிப்ரஸ்) மரமும் புற்களும் பற்றைகளும் பற்றியெரியத் தொடங்குவதும் இந்தக் கோடைகாலத்தில்தான். காட்டுத்தீ பின்வரும் முக்கியமான 3 காரணங்களால் ஆரம்பிக்கிறது:

- வேண்டாத வேலையாய் நெருப்பு வைப்பவர்கள்(firebugs)
- Campfire / Barbeque போட்டுக் கவனமின்மையால பறந்த நெருப்புப் பொறி
- மின்னல்

இந்த நெருப்பைக் கட்டுப்படுத்தவென்று குளிர்காலத்திலேயே சில பகுதிகளில் நெருப்பைக் கட்டுப்பாடாக எரித்து(backburning) முன்னெச்சரிக்கையாகச் செயற்படுவார்கள். காவற்றுறையினரும் (வசந்தன், கவனிச்சீங்களா?) firebugs இன் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிப்பர்.
அவுஸ்திரேலிய வெயில் பொல்லாதது. சூரியக்குளியல் செய்பவர்களுக்கெல்லாம் Slip Slop Slap என்று மேலாடை, களிம்பு பூசி, தொப்பியுமணியுமாறு நிதமும் அறிவுறுத்தப்படுகிறது. இல்லையோ.. பிறகு தோற்புற்றுநோய் வந்துவிடும். இப்போது புதிதாக (நியுஸீயில் போன்றே) கண்ணுக்குக் குளிர்கண்ணாடியும் அணியச் சொல்கிறார்கள். பார்வையைத் தொலைக்கும் வாய்ப்பும் அதிகமாகிறதாம் இந்த வெயிலால். எல்லாத்துக்கும் இந்த ஒஸோன் படலத்தின் பெரியதொரு ஓட்டைதான் காரணம்.

நான் அனுபவித்த மிகக்கூடிய & குறைந்த வெப்பநிலை(கள்?) - 12°C , 48.8°C. நீங்கள் அனுபவித்த அதிகூடிய & மிகக்குறைந்த வெப்பநிலை பற்றிச் சொல்லுங்களேன்?

6 படகுகள் :

வசந்தன்(Vasanthan) January 06, 2006 2:38 pm  

ம். கவனிச்சனான்.

நானும் ஏன் இஞ்ச வேர்க்குதில்லை எண்டு ஆச்சரிப்பட்டனான். அதுவும் இலங்கையைவிட அதிகளவான வெப்பத்துக்குள்ளயும் ஒருசொட்டு வேர்வைகூட வராது. உடம்புக்குள்ள தகதகவெண்டு எரிஞ்சுகொண்டிருக்கும்.

டி ராஜ்/ DRaj January 06, 2006 2:43 pm  

டில்லியிலும் கோடையில் இது போன்ற ஈரபதமற்ற கடும் வெயில் சுட்டெரிக்கும். 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கமுடியாமல் தவித்திருக்கிறோம், மின்சாரமும் இல்லாமல் (May 1996). இருந்தாலும் ஒன்னும் பிரயோசனம் இருந்திருக்காது, வெப்ப காற்றை தான் fan-கள் வீசியிருக்கும்.

குறைந்தபட்சம் சரியாக தெரியவில்லை ஆனால் (டிசம்பர் 1992) சிம்லாவில் பனிபொழிவின் இடையே ஒரு நாள். ஒரு பாடாதி தங்கும் விடுதியில் தங்கியது தனி கதை :)

Kanags January 07, 2006 9:24 am  

நல்ல பதிவு. வெயில்காலமா, வெயிற்காலமா, எது சரி வசந்தன்?
நான் அநுபவித்த குறைந்த காலநிலை -45C (மொஸ்கோவில்). அதுவும் ஒரு புது வருட தினத்திற்தான் (80களின் ஆரம்பத்தில்). கூடியது +46C இங்கு சிட்னியில்(இந்த புது வருட தினத்தில்).

வசந்தன்(Vasanthan) January 07, 2006 10:11 pm  

வெயில்காலம், வெயிற்காலம்.
இவை கட்டாயம் புணர்த்தியெழுத வேண்டியவையாக நான் கருதவில்லை. 'வெயிற்காலம்' என்றே நான் எழுதுவேன்.
ஆனால் சேர்த்தெழுதும்போது வெயில்காலம் என்று எழுதுவது சரியாகப்படவில்லை. ஒரு பெயர்ச்சொல்லாகக் கருதினால் வெயிற்காலம் என்பதே சரி.

இதை என்னட்டக் கேக்காமல் பொதுவாக் கேட்டா நல்லம். நான்கூட அரைகுறைதான்.

`மழை` ஷ்ரேயா(Shreya) January 09, 2006 1:52 pm  

நன்றி. கனடாக்காரர் அல்லது நோர்வே, ஸ்வீடன், டென்மார்க்காரரிடமிருந்தும் குளிர் பற்றி அறிய ஆவல்.

//பனிபொழிவின் இடையே ஒரு நாள். ஒரு பாடாதி தங்கும் விடுதியில் தங்கியது தனி கதை//

ராஜ் - எடுத்து விடலாமே கதையை?

Kanags - சிட்னியிலா இன்னும்? ஒரு மாநாடு போடலாமா?

வசந்தன் - பிடியும் பட்டத்தை: "வலைப்பதிவுலகத் தமிழ்வாத்தி வசந்தன்" ;O)

சினேகிதி March 10, 2006 3:38 pm  

kulir patri ariya aaval enda oru nadai vanthidu ponga Canada ku :-) nane indaiku konjam sooriyana partha santhosathila irukiran...kulira koopidathinga ippa.

பெட்டகம்