இரண்டாம் தரிப்பு II

ரெய்ன்(f)பால் நீர்வீழ்ச்சிக்குக் காலையில் போகவென்றிருந்த பயணம் பிற்பகல் இரண்டு/மூன்று மணி போலத்தான் சாத்தியமாயிற்று. ஷாவ்ஹௌசன் (சாருஹாசன் அல்ல) கன்ரோனில் ஜெர்மன் - சுவிஸ் எல்லைக்கருகில் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிதான் ஐரோப்பாவிலேயே பெரிதென்றார்கள். இரண்டு மூன்று வழிகளில் இவ்விடத்தை அடையலாம். இங்கே பாருங்கள்.


விரைவிலேயே பனிமூட்டம் சூழ்ந்துவிட்டதால் நிறைய நேரம் நிற்கவில்லை. நீர்வீழ்ச்சி ஆரம்பிக்குமிடத்திற்கும் ஏறவில்லை. கோடை காலத்திற்தான் செல்லலாம். மேலே ஒரு கோட்டையும் இருக்கிறதாம். படகுச் சவாரி போகலாம், அல்லது நடந்து மலையேறலாம். மலை ஏறுவதற்குமே வெவ்வேறு வழிகளுண்டாம். நாங்கள் அடிவாரத்திற்குப் போனோம். குட்டியொரு பாலமிருக்கிறது. கீழே பார்த்தால் தரை தெரியக்கூடியளவு தெளிந்த நீர். தரைதான் தெரியவில்லை... அவ்வளவிற்கு மீன்கள். சாப்பாட்டுப் புத்தி போகுமா.. எப்பிடிப் பிடிக்கலாம் என்றெல்லாம் ஆராயப்பட்டதுடன் பொரிச்சா சுவையாயிருக்குமென்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. கதையோடவே முடிஞ்சு போச்சு.. செயலிலே இறங்கவில்லை. அத்துடன் தப்பின மீன்கள். :O)

கடந்து அந்தப்பக்கம் கோட்டைக்குப் போனால் ஒரு ஞாபகச் சின்னக் கடையும் (பூட்டியிருந்தது) படகுத் துறையும், ஒரு உணவகமும் இருந்தன. தண்ணீரோ சில்ல்ல்!!. வீரம் காட்டவென்று தண்ணிருக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல் மேலே நின்று படமெடுத்தோம். குளிர்காலத்தில் போவதில் சனமில்லாமல் ஆறுதலாய் இடம் பார்க்கக் கிடைத்தாலும், கோடைகாலத்திலே செய்யக்கூடியதாயிருக்கிற படகுச் சவாரியோ, மலையேறலோ இல்லாமல் போனது வருத்தமே.

இதுவரை இப்படி அழகான இடத்தைப் பனிமூட்டத்திற்கூடாகப் பார்க்கும் சந்தர்ப்பம் படங்களிலும் (கதாநாயகி அறிமுகம்/பாடல்)(இதற்கு நக்கலாக 'அழகிய தீயே'ல் கடைசியில் ஒரு காட்சி வைக்கப்பட்டதல்லவா. இன்னும் சிரித்துக் கொள்வேன் அதை நினைத்து) விளம்பரப் பிரசுரங்களிலும் மட்டுமே கிடைத்தது. படத்தைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஷாவ்ஹௌசனில் படங்கள் வரையப்பட்ட பழங்காலத்து வீடுகளும் இருக்கின்றனவென்று அறியக்கிடைத்தது. செல்லவில்லை. விவரங்கள் கீழேயுள்ள சுட்டிகளிற் கிடைக்கும்.

1. http://www.about.ch/cantons/schaffhausen/rheinfall/index.html
2. http://www.virtualtourist.com/travel/Europe/Switzerland/Kanton_Schaffhausen/Schaffhausen-690385/TravelGuide-Schaffhausen.html


வின்ரத்தூரிலிருந்து சுவிஸ்ரயிலெடுத்து இரண்டு மணி நேரத்தில் தூன் நகரை வந்தடைந்தோம். போன இடங்களிலெல்லாம் எங்களைச் சாப்பிட வைத்தே அழகு பார்த்தார்கள். தூனில்தான் கொஞ்சமாவது அதிலிருந்து விடுதலை; அடுத்தநாள் நாட்டுக்கோழி இறைச்சியென்று - அதற்குள்ளிருந்த முட்டைகளோட சேர்த்து - பரிமாறும் வரை :O(. சுட்ட மீனும் சலட்டும் சாப்பிட்டுவிட்டு பத்து நிமிட நடையிலுள்ள நகர் மையத்தைப் பார்க்கப்போனோம். நத்தார்ச் சோடனைகள் ஆரம்பித்திருந்தன. அடுத்தநாள் சந்தையாம். கடைகளின் எலும்புக்கூடுகளாய் சில stalls முளைத்திருந்தன. 12ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கிற கோட்டை கண்ணில் பட்டது. அடுத்தநாள் அதைப் பார்க்கப் போகிறதாய் முடிவு. கண்ணிற் பட்ட ஒரு மணிக்கூட்டுக் கடைக்குள் நுழைந்தோம். ஒரு அடி உயரமிருக்கும் ஒரு கடிகாரத்தைக் காட்டி விலை கேட்டோம்.. 20,000 சுவிஸ் பிராங்குகளாம்!!!! அடேயப்பா! கையாலேயே செய்யப்படுவதால் அவ்வளவு விலை.

அடுத்தநாள் மப்பும் மந்தாரமுமாய் விடிந்தது. சுவிஸில் கடைசி நாளென்பதால் மனம் சோர்ந்தும், கோட்டை & இன்னொரு நாடு (அடுத்தநாளாயினும்) பார்க்கப் போகிற உற்சாகமும் கலந்து மனம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. சந்தை & கோட்டையைப் பார்க்கப் போனோம்.

வகை வகையாய் சீஸ். தோற் பொருட்கள், ஆடைகள், நத்தார் அலங்காரங்கள், பூக்கள், காதணி/மாலைகள்/மோதிரங்கள், பிரம்புப் பொருட்கள் என்று பலதும் விற்கும் கடைகள். பிரம்புக் கூடையொன்றை ஒரு சிறு இயந்திரத்தினுதவியுடன் சில நிமிஷங்களிலேயே பின்னுகிறார் கடைக்காரக் கிழவர். அவருக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுகடை. பொன்னிறமாய் சிற்றுருவங்கள். கண் பார்த்ததும் கால் இழுத்துச் சென்றது. தேன் மெழுகாலான மெழுகுதிரிகள். சந்தையிலே கொஞ்சம் சீஸ் வாங்கிச் சாப்பிட்டு கோட்டை நோக்கி நடந்தோம்.

கோட்டையில் கீழ்த்தளத்தில் ஒரு 'சத்திரம்'. கோட்டையின் கீழ்த்தளப்பகுதியில் கொஞ்சத்தை இப்போது கடைகளாக்கி விட்டார்கள். குதிரைகள் ஏறுவதற்கென்று வைத்தவை போலிருந்த படிகளில் ஏறி நடுத்தளம் அடைய ஒரு பீரங்கி வரவேற்றது. அதிலேயே ராசா ராணியாய் முகம் வைத்துப் படமெடுக்க ஒரு ஓவியம். ராசா ராணி (வீரன், காதலி?)யின் முகங்களைத் திறந்து அந்த ஓட்டையிலே எங்கள் திருமுகங்களை வைத்துப் படமெடுக்கலாம். ஒரு சின்ன அருங்காட்சியகமும் இருக்கிறது. நாங்கள் போன அன்றைக்குப் பூட்டு. இன்னும் கொஞ்சம் படியேறிப் போக ராசாவின் சாப்பாட்டறை. இப்பவெல்லாம் விழாக்கள்/விருந்துகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அன்றைக்கும் கதிரை-மேசைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேலை செய்பவர்களை ஒரு knight மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

மேலிருந்து படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு கீழிறங்கினோம். பழைய பாலத்தைப் பார்க்கப் போகிற வழியில் மதிலேறிச்(புத்தி போகாதே!!) சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.

பாலத்தடிக்கு நடந்தோம். தூனுக்கூடாக ஓடும் ஆறு வசந்த காலத்தில் பெருக்கெடுக்குமாம். குளிர்காலத்தில் கொட்டியுள்ள பனியெல்லாம் உருகியோட, ஆறு சந்தை வரை வரும். அதற்கேற்றபடி நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த மதகுகளை(சரியான பிரயோகம்தானா? அல்லது மடை என்று சொல்ல வேண்டுமா?) பொறி கொண்டு இயக்குகிறார்கள். அப்பொறிகள் கொண்டதொரு சிறிய மரப்பாலம் தான் பழைய பாலம். மேற்கூரையில் பாசி படர்ந்து போயிருந்தது. நீர் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. ஒரேயொரு மடைக்கதவைத் திறந்து வைத்திருந்தார்கள் அன்று. ஆற்றில் பாண்/உரொட்டித் துண்டுகளை வீசினால் அன்னங்கள்/நீர்ப்பறவைகள் விரைந்து வருகின்றன. பின்புலமாய்க் கோட்டையும் வேறு கட்டிடங்களும். நடை பயில நல்லதொரு இடம்.

தூனில் பார்க்க இன்னுமொன்றிருக்கிறது. வொக்கர் பனோராமா (Wocher Panorama) எனப்படுகிற சுற்றிவர வரைந்த ஒரு ஓவியம். பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்க்கை பற்றியது. இது குறித்த மேலதிகத் தகவலுக்கு: http://www.thunersee.ch/en/excursions/all-around-thun/wocher-panorama.html

இப்படியெல்லாம் சுற்றிவிட்டு வீட்டே வந்து அடுத்த நாள் பயணத்திற்கு ஆயத்தமானோம்.

ஜேர்மனி. கத்திகளுக்குப் பேர்போன சொலிங்கனில் கால் பதித்தோம். எனக்கே மழை அலுக்குமென்று நான் எதிர்பர்க்கவில்லை. ஜெர்மன் வாசிகளுக்கு hats off. காற்றும் மழையும் ஊசியாக் குத்தின குளிரும்.. அப்பப்பா!!! கொட்டின மழையில் இடம் பார்க்க எங்கே போவது? கடைசியில் ஷ்வேப பான்(schwebe bahn) தான் பராக்குக் காட்டிற்று. வழமையாக் கீழே இருக்கிற தண்டவாளம் இதற்கு மேலே. தொங்கிக் கொண்டு ஓடுகிறது இந்த ரயில். கொஞ்சத் தூரத்துக்கு மேலே ரயிலோட கீழே ஆறோடுகிறது.

(இரவிலெடுத்த படம் தெளிவில்லை என்பதால் விக்கியில் பாருங்கள்.

ஜேர்மனியில் நின்ற இரண்டு நாட்களும் கட்டாய் ஓய்வு போலத்தான். வெளியில் இறங்க முடியவில்லை. குளிர். இங்கிருந்து நோர்வே போகிற திட்டம். சிட்னியிலிருந்து விலை பார்த்த போது 30 யூரோ இருந்த விமானப் பயணச்சீட்டு 100 யூரோக்கும் மேலாலே எகிறியிருந்தது. ஒரு மாதம் முதல் பதிவு செய்வதற்குத்தானாம் அந்தக் குறைந்த விலை. அவசரப் பயணகாரருக்கு தண்டம்தான். சில நாட்கள் முன்னே பின்னே போகக்கூடும் என்று பதிவு செய்யாமல் விட்டதன் விளைவு ஆளுக்கு 100 யூரோக்கும் மேலாகக் கொடுத்து விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டதுதான். விமானச் சீட்டு எடுப்பதானால் 3 - 4 வாரத்திற்கு முன்னரே வாங்குவது உத்தமம்.

இலையுதிர்/வசந்த காலம், பின்னிரவு/அதிகாலைப் பயணம், செவ்வாய்-வியாழக் கிழமைப் பயணம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்தால் மலிவு விலை விமானச்சேவைகளின் பயணச்சீட்டுகளை இன்னும் மலிவாய்ப் பெறலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது முன்பதிவு செய்தல். குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாகவே.

நிறைய நாடுகள் போகிறீர்கள். ஒரே பயணச்சீட்டிலேயே எல்லாத் தரிப்பும் போட்டெடுத்தீர்களேயானால் இலகுவாக இருக்கலாம்; ஆனால் கட்டாயம் விலையாக இருக்கும். நடுக் கட்டங்களை தனிப்பயணங்களாய்க் கருதிப் பயணச் சீட்டு எடுப்பது பணப்பைக்குச் சேதம் விளைவிக்காது. உதாரணமாய் நான் சிட்னி-பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ்-சிட்னி பயணிக்கிறேனென வைத்துக் கொள்வோம். சிட்னி-பரிஸ் & பரிஸ்-சிட்னி மட்டுமே பிரதான சீட்டில் எடுத்துக் கொண்டு, பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ் பயணங்களை விமானம்/பேருந்து/ரயில் என்று விருப்பமான comboவில் போட்டெடுத்துக் கொண்டால் விலை குறைவாக இருக்கும்.

மலிவுவிலை விமானச் சேவை

11 படகுகள் :

கானா பிரபா February 19, 2007 2:27 pm  

//ராசா ராணி (வீரன், காதலி?)யின் முகங்களைத் திறந்து அந்த ஓட்டையிலே எங்கள் திருமுகங்களை வைத்துப் படமெடுக்கலாம். //

நீங்கள் எடுத்த படம் நல்லா வந்தாதோ? அதையும் போட்டிருக்கலாம். ;-)

பதிவுக்கு நன்றி, இதில் இணைத்த படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.

சினேகிதி February 19, 2007 2:29 pm  

\\சாப்பாட்டுப் புத்தி போகுமா.. எப்பிடிப் பிடிக்கலாம் என்றெல்லாம் ஆராயப்பட்டதுடன் பொரிச்சா சுவையாயிருக்குமென்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது\\

மீன்களுககு ஆயுசு கெட்டியா இருந்திருக்கு.நல்லாயிருக்கு விவரணங்கள் எல்லாம்.அங்கால் பக்கம் வந்தா இன்னொருதரம் வருவீங்கள்தானோ எங்களோட :-)

அழகிய தீயே என் பேவரிட் படமாக்கும்;:-) பூம் :-) சந்திரன் என்ன வடிவா கதை சொல்லுவாரு அந்தப்படத்தில.

`மழை` ஷ்ரேயா(Shreya) February 19, 2007 2:43 pm  

//நீங்கள் எடுத்த படம் நல்லா வந்தாதோ? அதையும் போட்டிருக்கலாம். ;-)//

அதிலையென்ன சந்தேகம் உமக்கு! என்ட திருமுகத்தைக் காட்டி ஏன் சினேகிதி மாதிரிச் சின்னங்களைப் பயப்பிடுத்துவான் என்டுதான் போடுறேல என்ட கொள்கை வைச்சிருக்கிறன். :O))
பதிவு பிரியோசனமாயிருந்ததா?

`மழை` ஷ்ரேயா(Shreya) February 19, 2007 2:46 pm  

//மீன்களுககு ஆயுசு கெட்டியா இருந்திருக்கு//
ஓமெண்டுறன்.:O)

//அங்கால் பக்கம் வந்தா இன்னொருதரம் வருவீங்கள்தானோ எங்களோட//
எங்கால வந்தா? இஞ்ச வந்தா சிட்னி காட்டுறன். ஐரோப்பாவுக்குக் கூட்டிக் கொண்டு போவன் என்டு நீர் ஒத்தைக் காலில நின்டா நானேன் வேண்டாமெண்டுறன்! ;O))

சயந்தன் February 19, 2007 11:37 pm  

படகில் அந்த நீர்வீழ்ச்சி விழும் வரை செல்ல முடியும். 4 வருடங்களுக்கு முதல் போயிருக்கிறேன். இந்த சமருக்கு பாப்பம்.
ஒஸ்ரேலியா மாதிரி பெருத்தேசத் தூரம் இல்லைத்தானே.. எங்கை போக வேணுமெண்டாலும் உதில பக்கத்தில தான்.
ஜேர்மனும் பிரான்சுமே உந்தா பக்கத்தில.. கூப்பிடு தூரம்..

`மழை` ஷ்ரேயா(Shreya) February 20, 2007 11:36 am  

//இந்த சமருக்கு பாப்பம். //
போய்ப் பார்த்து படமெடுத்துப் பதிவு போடும்.

மலைநாடான் February 20, 2007 9:02 pm  

சுவிஸுக்குப் போனனான் என்டு சொல்லிறமாதிரியா பயணமாத்தான் உங்களுக்கு அமைஞ்சிருக்கு. ஆனாலும் அதுக்குள்ள போன இடங்களில கொஞ்சம் புடுங்கியிருக்கிறமாதிரித்தான் கிடக்கு. ஆனா சின்ன நாடென்டாலும், அனுபவிச்சுப் பார்க்க இங்க நிறையவே இருக்கு. அடுத்த முறை ஐரோப்பிய வலைப்பதிவர் பேரவைத் தலைவரோடு தொடர்பு கொண்டிட்டு வந்தீங்கெண்டா, எல்லாம் நல்லாப் பாக்கலாம்:)

Anonymous February 20, 2007 11:58 pm  

சயந்தன்,
//ஒஸ்ரேலியா மாதிரி பெருத்தேசத் தூரம் இல்லைத்தானே.. எங்கை போக வேணுமெண்டாலும் உதில பக்கத்தில தான்.
ஜேர்மனும் பிரான்சுமே உந்தா பக்கத்தில.. கூப்பிடு தூரம்//

கவனம், அங்கையும் கொளுவீ(!)டப் போறீர்:)

`மழை` ஷ்ரேயா(Shreya) February 22, 2007 1:25 pm  

மலைநாடர் - நக்கலடிக்கிறீங்களோ இல்லாட்டி உண்மையாய்ச் சொல்லுறீங்களோ என்டு விளக்கமில்லாமல் இருக்கு. :O)
அடுத்தமுறை இன்ஷா அல்லா கட்டாயம் சந்திப்பம்.

அனானி - உமக்கென்ன ஐ.(த).வ.பே தலைவரோட கொழுவல்?

சயந்தன் - அனானிக்கு என்ன பதில் சொல்லுறீர்? (பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.. ஞாவகம் வந்தா நான் பொறுப்பில்ல):O))

சயந்தன் February 26, 2007 8:45 am  

சயந்தன் - அனானிக்கு என்ன பதில் சொல்லுறீர்?

அவர் தனது கருத்தைச் சொல்வதற்குரிய முழு உரிமையையும் கொண்டிருக்கிறார்.

துளசி கோபால் February 26, 2007 11:53 am  

குளிரும், மழையும் அடிக்கறப்பவே இந்தப்போடு போட்டா................
சம்மர்லே வந்தா அவ்வளவுதான்:-)

பெட்டகம்