தலைப்பில்லாத கதை

ஒரு உண்மைச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு (கதையெழுதும் முயற்சியில்) ஆங்கிலத்தில் எழுதியது. அதிலிருந்து தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். கதைக்குத் தலைப்பு(இதுவரை) இல்லை.

----------------------------------------------------
பைத்தியம் பைத்தியம் என்று வீட்டைக் கடந்து போகும் சிறுவர்களெல்லாம் கூச்சலிட்டுக் கொண்டு ஓடுவார்கள். ஆனந்திக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும். வில்வனுக்குப் பைத்தியமில்லை, மனவளர்ச்சி பிரச்சனை என்று எத்தனையோ தரம் எல்லாருக்கும் சொல்லியாயிற்று. சின்னதொரு ஊரில் மனஞ்சார் பிரச்சனை எல்லாமே பைத்தியம்தானே. யாருடனும் பேசமாட்டான். அவனுடன் பேசினால் அல்லது அவனது கவனத்தைப் பெற முயன்றால் எப்போதாவது இருந்துவிட்டு முகம் பார்ப்பான். அக்கா கவிதாவின் கணக்குப் புத்தகத்துடன் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பான். பதினொரு வயதாகிறது இன்னும் சின்னக் குழந்தைக்குப் போல எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். பிறந்து சிலமாதங்களில் நல்லாயிருந்து பிறகு படிப்படியாக செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்தவனைக் காட்டிய போது கூட வைத்தியர் கேட்டார், உன்னால் இப்போதைக்குப் பார்க்கலாம், ஆனால் வளரவளர என்ன செய்வாயென்று. காப்பகத்திலே சேர்த்துவிடுகிறேன் என்று சொன்னவரிடமும் அதற்கு தயங்கித் தயங்கி ஒத்துக்கொண்ட சீலனிடமும் வீராப்பாய்ச் சண்டை போட்டு வீட்டுக்கே எடுத்து வந்தவள்தான். சில வேளைகளில் ஓய்ந்து போய்விடுவாள்; எவ்வளவென்று தான் வேலைபார்ப்பது. வில்வனும் வளர்ந்துவிட்டான். திமிறுவதும் முரண்டு பிடிப்பதும் அத்துடனே தாயையே எல்லாவற்றிற்கும் சார்ந்திருப்பதும் கூடியிருக்கிறது. ஒருநாள் வைத்தியரின் பேச்சைக் கேட்டிருக்கலாமோ என்றும் இவன் எல்லாவிட்டால் வாழ்க்கை எவ்வளவு இலகுவாக இருக்குமென்றும் ஓய்ந்து போயிருந்த ஒரு கணத்தில் தோன்றிற்று. எங்கிருந்த வந்து அந்த எண்ணம் என்றறியாமல் அழுதபடி தன்னைக் கடிந்து கொண்டாள்.

போரில் சம்பூர் அரச படையால் கைப்பற்றப்பட்டதும் கடைக்குப் போன சீலனும் மகள் கவிதாவும் திரும்பி வரும் வரை காத்திருந்து கையில் கிடைத்ததை வாரியெடுத்துக் கொண்டு ஊரோடு சேர்ந்து ஓடின இரண்டாம் நாளே காட்டுக்குள்ளாலே நடந்த மக்களுக்குள் ஆளுக்கொரு பிள்ளையுடன் தொலைந்து போனார்கள் சீலனும் ஆனந்தியும். வீட்டிலிருந்த விதத்துக்கும் காட்டு வாழ்க்கைக்கும் எவ்வளவோ வித்தியாசம். வில்வனுக்கு இவையொன்றும் புரியவில்லை. ஒரு நாள் இரவில் சீலன் திறக்க மாட்டாமல் கண்களை மூடின சில நிமிடங்களில் பக்கத்தில் எங்கேயோ நகர்ந்து நகர்ந்து போய் காஞ்சோன்றிச் செடி பட்டு அரிப்புத் தாங்காமல் அவன் அழுது காட்டையே கலங்கடித்தான். அழுகையை நிற்பாட்ட வாயில் துணியடைய வேண்டி வந்தது.

தூரத்தே கேட்ட வெடிச்சத்தம் ஆனந்தியை எழுப்பிற்று. இன்னும் விடியவில்லை. விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது. சுற்றியிருந்த மரங்களின் வடிவம் கறுப்பாய்த் தெரிந்தது. சில்வண்டுகளும் விட்டு விட்டுக் கச்சேரியைத் தொடர்ந்து கொண்டிருந்தன. எப்போது தூங்கிப் போனோம் என்று நினைத்தவளாய் பக்கத்தில் படுத்திருந்த கவிதாவையும் தங்களைப் போலவே மரங்களுக்குக் கீழே படுத்திருக்கும் மற்றவர்களைப் பார்த்தாள். நாலைந்து நாட்களாக காட்டுக்குள்ளால் நகர்கிற கூட்டம். விடிகாலையில்தான் கொஞ்சமேனும் உறங்கும். நித்திரை எவ்வளவு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. நேற்றைக்கு பாம்புக் கடியில் தன் மகனைத் தொலைத்த தாய் கூட இப்போதைக்கு மகன் இல்லை என்கிற நினைப்பிலிருந்து எவ்வளவு தூரமாய் உறங்குகிறாள். விடியல் சூரியனையும் அவளிடமிருந்து புது அழுகையையும் கொண்டு வரும். நித்திரைதான் திறமான வலிநிவாரணி - அது உடல்சார்ந்ததோ அல்லது மனம் சார்ந்ததோ. பகலில் அத்தனை வேலை வைக்கும் வில்வன் கூட இரவில் அமைதியாக உறங்குவானே என்று தன் மகனைப் பற்றி நினைத்ததும் ஆனந்திக்கு நித்திரை வரவில்லை. சீலன் தன்னைப்போல் பொறுமையாகப் பார்க்க மாட்டானே என்ற எண்ணம் எழுந்து அலைக்கழித்தது.

சீலனுக்கு ஆனந்தியில்லாமல் வில்வனைச் சமாளிப்பது முடியவில்லை. நடந்து களைத்தால் நின்று ஓய்வெடுக்கிற சூழ்நிலையில்லை. வில்வன் திமிறி அழ அழ மற்றவர்களுடன் ஈடு கொடுத்து வில்வனைச் சமாளித்தபடியே வலுக்கட்டாயமாக நடந்தான். இரவுகளில் கொஞ்சம் பரவாயில்லை. நடந்த களையில் படுத்துவிடுவான். ஆனாலும் இடையிடையே எழுந்து பார்த்துக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் ஆத்திரமாய் வரும். வடிகாலுக்கு எங்கே போக? ஆனந்தி இதுவரை எப்படிச் சமாளித்தாள் என்று அதிசயமாக இருந்தது.

விடிந்து பார்த்தால் வில்வனைக் காணவில்லை. வந்தவழியே சுற்றுமுற்றும் ஒருநாள் முழுவதும் தேடினதுதான் மிச்சம். ஆனால் பிரிந்த குடும்பம் 'சீலன், உன்ட மனிசி இந்தா எங்களோடதான் இருக்கு" என்று அவர்கள் ஊர்க் கிழவி ஒருவர் சீலனை அடையாளங் கண்டு கொண்ட தயவால் சேர்ந்தது. மகனைத் தொலைத்த குற்றத்துடன் ஆனந்தியிடம் போய் நின்றான். அவன் விவரஞ் சொன்ன போது வந்த பதற்றமும் அவர்களிருவருமாய் இன்னொரு பகல் முழுதும் தேடி சூடுபட்ட வில்வனின் உடலைக் கண்டெடுத்த நேரம் ஏற்பட்ட வேதனையும் மனவுளைச்சலை அதிகரித்தன. தான் மகனை வெறுத்து "அவன் இல்லாமல் போனால்.." என்று நினைக்கவில்லையே.. அன்றைக்கு ஏதோ அலுப்பில் எண்ணியது உண்மையாகி விட்டதே என்று நினைத்து நினைத்து மறுகினாள் அந்தத் தாய். தான் நிலைகுலைந்தால் ஆனந்திக்கு ஆறுதல் சொல்வது யார் என்று சீலனும், வில்வனில்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க விரும்பாத ஆனந்தியும் அழுகையை மறுதலித்து நின்றனர்.

ஆனாலும் தாய்க்கும் தந்தைக்கும் மகனைக் கவனிக்கிற பளு இல்லாமல் போனது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தபோதிலும் பிள்ளை இறந்ததில் இப்படியெல்லாம் நிம்மதிப்படுகிறோமே என்று குற்றவுணர்வும் அதன் கூடவே வந்தது. ஆனந்திக்கு இருந்ததைப்போலவே சீலனுக்கும் அதே குற்றவுணர்வைத் தந்து திருப்திப்பட்ட அந்த நிம்மதி அவர்கள் அதை வன்மையாக எதிர்த்தொதுக்கியபோதும் மனதில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டது. இரவு வந்து, கவிதா 'இனி தம்பி இல்ல என்னம்மா' என்று அவனுக்காகவே தூக்கிக் கொண்டு வந்த கணிதப் புத்தகத்தைத் தடவியபடி சொன்ன மட்டில் வில்வனுக்காகவா அல்லது தங்களுக்காகவா என்று தெரியாமல் அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்.

12 படகுகள் :

Anonymous March 08, 2007 4:23 pm  

நல்ல டச்சிங்கான ஸ்டோரி. தமிழ்ப்படுத்தியிருந்த விதம் அருமை..

சகோதரிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்...!!!

`மழை` ஷ்ரேயா(Shreya) March 08, 2007 9:35 pm  

நன்றி செந்தழல் ரவி.

கானா பிரபா March 09, 2007 2:10 pm  

கற்பனையை வாசிக்கும் போதே கனக்கும் விஷயம் இது, உண்மைக் கதை என்று தெரிந்து வாசிக்கும் போது மனம் கனமாகியது :-(
நம் தாயகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு வீடும் கதை சொல்லும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 09, 2007 10:35 pm  

உண்மைதான் பிரபா. கற்பனையில் எங்களூரையும் போரையும் கொண்டு வந்திருந்தாலும் நான் அறியவந்தது எங்களூர்ச் சம்பவமல்ல. எங்கேயென்றால் என்ன பெற்றார் பெற்றார்தானே..

செல்லி March 09, 2007 11:01 pm  

வாசித்து முடிந்ததும் மனம் கனத்தது; பழைய துக்க நினைவுகளை அசை போட்டது.ம்..பெருமூச்சுத் தான் மிஞ்சுகிறது!
நல்லா எழுதியிருக்கிறீங்க.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 09, 2007 11:09 pm  

நன்றி செல்லி

butterfly Surya March 10, 2007 7:52 pm  

நல்லாயிருக்கு..

சூர்யா
துபாய்
butterflysurya@gmail.com

வி. ஜெ. சந்திரன் March 12, 2007 10:58 am  

மனத்தை வருத்தும் கதை.... உண்மையான சம்பவங்கள், பல.
கானா பிரபா சொன்னது போல் ஒவ்வொரு வீடும் ஒரு கதையை வைத்திருக்கும்/ சொல்லும்...

துளசி கோபால் March 13, 2007 8:02 am  

கதையா? எதோ நடந்த சம்பவமுன்னு நினைச்சேன்.

நல்லா வந்துருக்கு ஷ்ரேயா.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 13, 2007 1:37 pm  

நன்றி சூர்யா, துளசி.

துளசி - இதைக் கதையா இல்லையான்னு சொல்லத் தெரியல்ல.. மகன் இறந்ததும், துக்கத்துக்கும் மேலாலே இனிமே கஷ்டப்படவேணாம் என்று ஒரு நிம்மதி வந்ததாக ஒரு சம்பவம் அறிந்தேன். அதை வைச்சு எங்க பின்னணியிலே எழுதினேன்.

கலை March 14, 2007 1:12 am  

வாசிக்கையில் மனம் கனத்தது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 15, 2007 12:50 pm  

நன்றி கலை.

பெட்டகம்