எல்லாருக்குமானதொரு மரம்

அந்த மரம் ஏன் அப்படிச் சொன்னது? இரவு முழுக்க யோசித்துக் கொண்டிருந்தேன்.

வழமையில் அதைக் கடந்து போகிற ஒவ்வொரு காலையிலும் மரத்தைத் தடவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தாலும் பார்வையால் மட்டும் தடவி மனதுக்குள்ளேயே அதனுடன் கதைத்துப் போகிற என்னைப் பார்த்து அது எதுவும் சொன்னதில்லை. கண்டுகொண்டதாயும் தெரியவில்லை. அது தன்னை வெளிப்படுத்தியதென்று நான் கண்டது காற்று வீசினால் தன்னைக் கொஞ்சம் சிலுப்பிக் கொள்ளுவதை மட்டுமே. அதன் கீழ் நின்று குறைந்தது இரண்டு பேராவது நின்று புகைத்துக் கொண்டிருப்பார்கள் அந்தக் காலைப் பொழுதிலேயே. எரிச்சலாய், கோவமாய் வரும். தங்கள் உடல்நலத்தைக் கெடுப்பது மட்டுமில்லாமல் மரத்துக்கும் கஸ்டத்தைக் கொடுக்கிறார்களே என்று. ஆனாலும் சத்தமின்றிப் பூட்டிக் கொள்ளும் என் வாயைச் சுமந்தபடி மரத்தைக் கடந்து போகப் பழகியிருந்தன என் கால்கள். மரமோ எதையுமே பொருட்படுத்தியதாகத் தோன்றவில்லை. தன்னில் படுகிற வெயிலைக் குடித்து, நாட்களை இலைகளாக்கியபடி அங்கேயே நின்று கொண்டிருந்தது.

கொஞ்சம் வெள்ளனப் புறப்பட்டிருந்தேன். மரத்தைக் கடந்த போது வழமை போல ஏனோவென்று நின்று கொண்டிருந்தது. அதைத் தடவிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை வெகுவாக அலைக்கழித்தது. வழமை போல நான் கேட்க மாட்டேனோ என்று நினைத்து அந்த எண்ணமே என்னை இழுத்துக் கொண்டு போய் மரத்தடியில் விட்டது. இப்போதும் கூட என்னைக் கண்டு கொள்ளாத மரத்தைத் தடவியபடியே நின்றுகொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு கிளையொன்றைத் தாழ்த்தி வாளாவிருந்த என் மற்றக் கையுடன் கோர்த்துக் கொண்டது மரம். மிருதுவான ஆனால் உறுதியான கிளை. எப்போது கேட்டாலும் வசீகரிக்கிற பாட்டினை இலைகள் பாடிக் கிடந்தன. மென்மையாய்ச் சிரித்துக் கொண்டது மரம். அதன் சிரிப்பும் இலைகளின் பாட்டினைப் போலவே வசீகரமுடையதாயிருந்தது.

"மழை பெய்ததே, உனக்குத் தெரியுமா?" என்றது. நனைந்திருந்த அதன் இலைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்த போது கீச்சத்தினால் நெளிந்து என் மேல் நீர்த்துளி தெளிக்க கெக்கட்டம் விட்டுச் சிரித்தது. "அழுக்குப் போகத் தேய்த்துக் கொண்டேன்" என்றது. நான் கவனித்திருக்கவேயில்லை. வழமையில் கடந்து போகும் போது "பாவம்! சிகரட் புகையும் வாகனப் புகையும் வேறு தூசி புழுதியும் பட்டு அழுக்கேறிக் கிடக்கிறதே" என்று தவறாமல் யோசிக்கிற நான் அது சுத்தமாயிருந்ததை ஏன் கவனிக்காமல் விட்டேன்? துக்கமாயிருந்தது. வெண்ணிறத்தாளில் ஒரு பெரிய கரும்புள்ளி வைத்து "என்ன தெரிகிறது?" என்று ஆசிரியர் கேட்ட போது "கரும்புள்ளீ" என்று வகுப்பில் எல்லாருமாய்ச் சொன்ன ஞாபகம் வந்து பிடித்துக் கொண்டது. சுற்றியுள்ள உலகம் இயங்கத் தொடங்கியது. புகை பிடிக்க ஆயத்தமாய் ஒருவன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் மரத்துடன் கோர்த்திருந்த கையை இறுக்கிக் கொண்டேன். இலைகள் பாட்டை நிறுத்தி அசையாதிருந்தன. நான் என்னை விடுவித்துக் கொண்டு விடை பெற்றுக் கொண்ட போதுதான் மரம் அதைச் சொன்னது. "எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை".

ஒன்றும் பேசாமல் வாய் இருக்க கால்கள் தங்கள் வேலையைச் செய்யத் தொடங்கியிருந்தன. அடுத்த நாள் மரத்துடன் கைகளைக் கோர்த்தபடி நானா அதைச் சொன்னேன்? "விரும்பின இடத்துக்குப் போவன் அப்ப".

அன்றிரவு மரத்துடனிருந்தேன். வேளை வந்தது போல, தன் இடத்திலிருந்து அசைய முற்பட்டது. முடியவில்லை. அதன் வேர்களைக் கொங்கிறீற் பிடித்துக் கொண்டிருந்தது. பெரும் பிரயத்தனப்பட்டு வேர்களை மீட்டுக் கொண்டது மரம். அதன் பிறகு மிக லாகவமாக ஏதோ நீரில் நீந்துவது போல மண்ணினூடாயும் தெருவினூடாயும் நீந்தி நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூடவே நானும் நடந்து கொண்டிருந்தேன். கடற்கரையில் வேறு சில மரங்களினருகில் அதன் பயணம் முடிவிற்கு வந்தது. வேர்களை மண்ணிற்குள் ஆழமாய் நுழைத்துத் தன்னை நிறுத்திக் கொண்டது.

விடியத் தொடங்கியிருந்தது. சூரியன் மேலெழ மரத்தில் பூக்களைக் கண்டேன். அவை உடனேயே கனிகளாயின. கனிகள் புத்தகங்களாய் இருந்தன. ஒன்றை என் மடியில் தந்தது மரம். அலைகள் கால் தொட இலைகளின் பாட்டினைக் கேட்டபடி வாசிக்க ஆரம்பித்தேன், அதில் "ஒவ்வொரு நாளும் கடந்து போகிற இவள் ஏன் வந்து வருடவோ, கை கோர்த்துக் கொள்வதோ இல்லை?" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தது முதலாம் அத்தியாயம்.

மரத்தைக் காணவில்லையென அதன் பழைய இடத்தில் யாரும் தேடிய சுவடே இருக்கவில்லை. ஒற்றைப் பறவையொன்று மட்டும் மண்ணைக் கிளறியபடி நின்று கொண்டிருந்தது. ஒரு வேளை அதற்கான தண்ணீர் மரத்தின் இலைகளிலிருந்து சொட்டியிருந்திருக்கக் கூடும்.

8 படகுகள் :

மணிமேகலா February 20, 2010 12:27 pm  

ஆஹா! மழைப் பெண்ணே!மழை தீட்டிய வண்னக் கவிதையா இது!!

அபூர்வமானதும் ஆச்சரியமானதுமான தொரு அழகு!!

'சொல் தீட்டிய ஓவியம்!'

settaikkaran February 21, 2010 12:19 am  

உங்க பெயரைப் பார்த்து ஓடோடி வந்தேன். இப்படிக்கு அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்தலைவர்

`மழை` ஷ்ரேயா(Shreya) February 21, 2010 2:23 pm  

வாங்க சேட்டைக்காரன். மழை படத்துலே நடிச்ச ஷ்ரேயாவை நினைச்சு இந்தப் வலைப்பதிவோ நானோ பெயரைத் தேர்ந்தெடுக்கவில்லை... பதிவும் பெயரும் 2003-2004ம் ஆண்டிலிருந்தே இருக்கின்றன. :O))

உங்க ஷ்ரேயா பிறகுதான் வந்தார், அவரது படம் மழை என்று அமைந்தது coincidence.

சந்தனமுல்லை February 22, 2010 2:06 am  

ரொம்ப நல்லாருக்கு ஷ்ரேயா - உங்களுக்கும் மரத்துக்குமான உரையாடல்கள் - பரிமாறல்கள். எப்படியாயினும் திரும்ப முளைக்கும் - ஏனெனில் அது எல்லோருக்குமான மரம்!

`மழை` ஷ்ரேயா(Shreya) February 23, 2010 10:06 pm  

ஒவ்வொருநாளும் காணுற ஒரு மரம்தான் ஆச்சி தூண்டுதல் இதுக்கு. ஆனா, அது கடற்கரைக்குப் போகாம அங்கேயே நிற்குது..

`மழை` ஷ்ரேயா(Shreya) February 23, 2010 10:06 pm  

நன்றி மணிமேகலை

மாதேவி February 23, 2010 10:47 pm  

மரம் மனிதன் மழை மண். மனத்தை ஈர்க்கிறது.

Anonymous March 30, 2010 3:58 pm  

இந்த மனநிலை மிக அரிய ஒரு வரம் !
மரங்களைச் சேரும் பிரியம் .
எழுத்தில் கவித்துவம் கூடிகொண்டே வருகிறது :)

பெட்டகம்