சந்திரவதனாவின் பதிவில் இதை வாசித்ததும் ஒரு வாரமாக என் மனதில் நாளொரு மேனியும்(இது எப்படி சாத்தியம்..கூடு விட்டு கூடு பாய்கிறதா?) பொழுதொரு வண்ணமுமாக ( டியுலக்ஸ் பூச்சு உபயத்தில்) வளர்ந்து வந்த ஒரு எண்ணம் வலுப்பெற்றுள்ளது. சிறுவயதிலிருந்தே தமிழை படித்திருப்பதால் எங்களுக்கு இங்கே எண்ணங்களை எழுத்தில் பரிமாறிக் கொள்வது இலகுவாக இருக்கிறது. புலத்தில் வளரும் எங்கள் அடுத்த தலைமுறையினரின் தமிழறிவு எந்தளவில் இருக்கிறது? வகுப்புக்குப் போய் இருந்து 1 - 2 மணித்தியாலம் செலவழித்து, தான் உபயோகிக்காத மொழியைப் படிப்பதால் என்ன பயன் என்று தான் பல சிறார்கள் நினைக்கிறார்கள். இணைய மேய்தல் ஒரு பொழுது போக்காக இருக்கின்ற இவர்களுக்கும், தமிழ் படிக்க விரும்பும், தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்பும் எவருக்கும் உதவியாக, கற்றலின் ஆரம்பமாக ஒரு தமிழ் கற்பிக்கும் பதிவினை உருவாக்குவோமா?
பாலர் பாடசாலைகளில், முதலாம் வகுப்புகளில் போன்று “ஆனா”, “ஆவன்னா” சொல்லி ஏடு தொடக்கி, கொஞ்சங் கொஞ்சமாய் சொற்களை அறிமுகப்படுத்தி, இலக்கணத்தையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் முறையில் எழுத்தறிவிக்கலாம்.(இப்பிடியாவது, நேர் நேர், நேர் நிரை எல்லாம் எனக்கும் தெரியவரட்டுமே!!). இந்தப்பதிவில் சின்ன வகுப்புகளில் மாதிரி இடையிடையே சிறுவர் பாட்டுக்களையும் ( உ+ம் க.தோ. வெருளி, ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி..) சேர்த்துக் கொள்ளலாம்.
விளக்கங்களை ஆங்கிலத்தில் இடலாம். பிறகு தேவையேற்படின் பிரெஞ்சு, ஜேர்மன், மற்றும் வேறு மொழிகளிலும் விளக்கங்களைத் தரலாம். வலைவசம் (“கைவசம்” இப்படி உருமாறிவிட்டது!) மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன் இருக்கிறார், அவரிடம் கேட்கலாம். (உங்களிடம் அனுமதி கேட்காமலே, உங்களிடம் உதவி கேட்கலாம் என்று எழுதி விட்டேன் டோண்டு ராகவன், மன்னிக்க வேண்டும்.) (நீங்க இனிமேல் தப்ப முடியாது :o) )
என்ன சொல்றீங்க? யாரைத் தமிழ் வாத்தியாராகப் போடலாம்?
1 படகுகள் :
"(உங்களிடம் அனுமதி கேட்காமலே, உங்களிடம் உதவி கேட்கலாம் என்று எழுதி விட்டேன் டோண்டு ராகவன், மன்னிக்க வேண்டும்.) (நீங்க இனிமேல் தப்ப முடியாது :o) )"
தாராளமாக உதவி செய்யலாம். பிரச்சினை இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment